அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்.
பளிங்கு மாளிகை போல் அத்தனை கவர்ச்சியாக இருந்தது அந்த ஹால். மின்விளக்குகளில் ஜொலிப்பால் அவ்வளவு ரம்மியமாக இருந்தது சூழல். ஒருபுறம் மேற்கத்திய இசையும், மறுபுறம் ஒட்டுத்துணியில் நடனம் புரியும் நடன மங்கையருமாக பார்ட்டி அல்லல்லோலங்கப்பட்டு கொண்டிருக்க.. சிறுசு பெருசு என எந்த வேறுபாடும் இன்றி மொத்த பேரும் ஆடுகிறார்களா? அல்லது உயர் ரக மதுவால் தள்ளாடுகிறார்களா? என்று சந்தேகிக்கும் நிலையில் இருந்தது அந்த நவ நாகரீக மனிதர்களின் ஆட்டம்.
இது இங்கு மாதத்தில் ஒரு நாள் நடக்கும் கூத்து தான். இங்கு வருபவர்கள் எல்லாம் லட்சம் கோடியில் பிசினஸ் செய்யும் பிசினஸ்மேன்கள். மாதத்தில் அத்தனை நாளும் பணத்தின் பின்னால் ஓடிவிட்டு ஒரு நாள் ரிலாக்ஸ் தேடி வருவதாக சொல்லிக் கொண்டு தான் வருவார்கள். நிதானத்தை இழந்து இருப்பது தான் ரிலாக்ஸ்டேஷன் என நினைத்தும் கொள்வார்கள்.
அப்படி ரிலாக்ஸ்டேஷன் தேடி வந்த கூட்டத்திற்குள் ஆட்டம் பாட்டம் உச்சத்தை எட்டிய போது, அந்த ஹாலுக்குள் ராஜநடையில் உள்ளே வந்தார் ராஜசேகரன். 12 கம்பெனியை உலகம் முழுவதும் பரப்பி வைத்துக் கொண்டு லட்சம் கோடியில் டேன் ஓவர் செய்யும் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பிசினஸ்மேன்களில் அவரும் ஒருவர். பணத்திலும் பேரிலும் புகழிலும் கொடிகட்டி பறப்பவர்.
கம்பீரமாய் அவர் உள்ளே நுழைந்ததுமே கூட்டத்திற்குள் சிறு சலசலப்பு உண்டாக, கண்ணாடி கோப்பையோடு இவரை பற்றிய வாக்குவாதமும் எழத் தொடங்கியது. எல்லாரும் ஷேர் மார்க்கெட்டில் டவுணை சந்தித்திருக்கும் இந்நேரம் இவர் பங்கு மட்டும் அசுர வளர்ச்சி கண்டிருப்பது தான் இவர்கள் அத்தனை பேரின் முணுமுணுப்புக்கு காரணம்.
இவர்கள் எவரையும் சட்டை செய்யாமல் மிக கம்பீரமாய் வந்து விஐபி ரோவில் அமர்ந்தார் ராஜசேகர். அவரின் உடலின் கம்பீரமும் நிமிர்ந்த தோள்பட்டையும் திண்ணமான ஸ்டைலும் அங்கே நின்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது உண்மை.
தன் அருகில் வந்து கண்களில் போதையோடும் உதட்டில் விசமம் கலந்த புன்னகையோடும் நெருங்கி நின்ற நடனமங்கையை நாசூக்காக விலக்கியவர் பணியாளர்கள் நீட்டிய கோப்பையை கையில் எடுத்துக் கொண்ட நேரம்.
“ஹலோ… மிஸ்டர் ராஜசேகர்…”
என்றவாறு புன்சிரிப்பு மாறாமல் அவர் அருகில் வந்து கை கொடுத்து நின்றார் ரத்தினவேல். எதிர்பார்க்கா நேரம் எதிர்பாராத இடத்தில் நண்பனை சந்தித்த ராஜசேகரன் சட்டென எழுந்து கைகுலுக்கி அவரை அணைத்துக் கொள்ள…
“என்னப்பா…அதிசயமா இந்த பக்கம்.”
“எல்லாம் பிசினஸ் கொடுத்த சூடு தான் ரத்தினவேல். தாங்க முடியல. அதான் கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு போலாம்னு வந்தேன்.”
“இந்தியாவுல விரல் விட்டு எண்ணக்கூடிய பிசினஸ்மேன்ல நீங்களும் ஒருத்தர். அப்படிப்பட்ட உங்களுக்கு பிசினஸ்ல அப்படி என்ன சூடு.”
“அதை ஏன் கேட்கிறா ரத்தினம். எல்லாம் ஆடிட்டரோட மிஸ்டேக்ல வந்தது தான். ஆரம்பத்துல ஒருத்தர் இருந்தார் சேஷாத்திரிணு பெயர். அருமையான ஆளு. கணக்குகளை பக்காவா மெயின்டன் பண்ணுவாரு. நாம அதுக்காக மெனகெட வேண்டாம். அப்படி ஒரு தெளிவு இருந்துச்சு. இப்ப எல்லாம் படிச்சுக்கிட்டு வாரானுங்களா? இல்லை படிக்காமலே ஓடி வந்திடுறானுங்களானு தெரியல. ஒருத்தர் கூட திருப்தியா அமையல.”
“ஆக…நல்ல ஆடிட்டர் இல்லாம வந்த டென்ஷனா இது?.”
“ஆமா ரத்தினம். கணக்கு வழக்கு சரி இல்லனா நிம்மதியா நாம பிசினஸ் பண்ண முடியுமா? சொல்லு. வெளியில் 1008 டென்ஷன்னா இவனுங்க டென்ஷன் வேற மண்டைய குடையுது.”
“எதுக்கு அந்த டென்ஷனை எல்லாம் நாம தூக்கி
சுமந்துட்டு. இப்பதான் புதுசா ஒரு ஆடிட்டர் கொடி கட்டி பறக்கிறாரே. உங்களுக்கு தெரியாதா? பெரிய பெரிய ஆடிட்டர் உடைய அனுபவத்தையே தூக்கி சாப்பிடற அளவு பெர்பெக்டா பண்ணறதா கேள்வி. அதனால்தான் போன மாதத்தில் இருந்து நம்ம கம்பெனி கணக்கையும் அவர் கையில் ஒப்படைச்சிட்டேன்.”
“………”
“இப்ப எந்த டென்ஷனும் இல்லாம என் வேலையை பார்க்கிறேன். பையன் சின்ன பையன் தான் ஆனால் பல வருட எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆடிட்டர் போல அத்தனை துல்லியமா கணக்கை வச்சிருக்கான். ரொம்ப பெரிய ஆள் போல கர்வம் இல்லை. அலட்டல் இல்லை. நமக்கு அடங்கி போற பிள்ளையா இருக்கான். மொத்தத்துல நமக்கு துளி டென்ஷன் கொடுக்காம நம்ம வேலை அவனே முடிச்சு கொடுத்துறது தான் அவனோட சிறப்பு.”
“அது யாருப்பா. அப்படி ஒரு புள்ள…”
‘’பெயர் முரளிதரன். நம்ம திருச்சிகாரன் தான். ஜாகை முழுசும் மெட்ராஸ் தான். கோயம்பேடு மார்க்கெட் பக்கத்துல தான் வீடு.”
“நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். பல பேர் பல இடங்களில் அவரைப் பற்றி பேசி கேட்டிருக்கேன். நீ வேற சொல்லுறா? அப்படினா பிரில்லியண்டான ஆளா தான் இருக்கும்.”
“நம்பி பொறுப்பை கொடுத்துட்டா நாம சிவனேனு இருக்கலாம் ராஜசேகரா . நமக்கு இதைவிட என்ன வேணும் சொல்லு. அதிகாரிகளுக்கு கணக்கு ஒப்படைக்கிறதுல இருந்து நம்ம கம்பெனி கணக்குகளை நமக்கு சொல்லுறது வரை பக்காவா மெயின்டன் பண்ணுவது தான் முரளியோட ஸ்டைல். சின்ன பையன் தான் தொழிலுக்கு வந்து இரண்டு வருஷம் தான் ஆகுதாம்.”
“ஆனா அவனோட தொழில் பக்தியை பார்த்து நானே விழுந்துட்டேன் சேகரா ? முதல்ல அவனுட்ட எனக்கு பிடிச்சதே நேரம் தவறாமை தான். அடுத்து … என்று எது கொடுக்கணுமோ?அன்று அதை சரியான நேரத்தில் ஒப்படைத்து விடுவான். மறந்திட்டேணு தலையை சொறிஞ்சிட்டு நிற்கிறதும் இல்லை. நம்மளை கடைசி நொடியில் டென்ஷனாக்கிறதும் இல்ல.”
“அதனால தான் பெரிய பெரிய பிரபலம் எல்லாம் தங்களுடைய கணக்கு வழக்குகளை இவரிடம் கொடுத்திடுறாங்க.”
“மும்பை ராதாகிருஷ்ணன் சொல்லி தான் எனக்கு அறிமுகம் ஆனாரு. அவரோட வருகைக்கு பிறகு எனக்கு இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததில்லனா பாத்துக்க. ஆள் நம்ம தமிழ்நாட்டுக்காரன். ஆனாலும் டீலிங் நிறைய நார்த் சைட்ல தான் வச்சிருக்கார் போல…”
“அடிக்கடி வட இந்தியாவில் இருந்து நிறைய போன் கால் வரும். ஹிந்தியை கூட சரளமாய் பேசுறாரு. வேணும்னா சொல்லு. சந்திக்க ஏற்பாடு பண்ணுறேன். பேசி பாரு. புடிச்சிருந்தா உன் கணக்கையும் அவர் தலையில் இறக்கி வச்சுக்கிட்டு டென்ஷன் இல்லாம உன் வேலையை பாரு.”
“ ம்… சரி… ரத்தினம். நாளை 10:00 மணி வரை தான் நான் மெட்ராஸ்ல இருப்பேன். அதுக்குள்ள ஒரு டைம் அப்பாயின்மென்ட் கொடு. பேசி பார்க்கிறேன்.”
“கண்டிப்பா நாளைக்கு சார்ப்பா 9 ஓ கிளாக் மீட் பண்ண சொல்லுறேன். உனக்கு பிடிச்சிருந்தா டீலிங்கை வச்சுக்க இல்லன்னா விட்டுடு. “
“ஓ.கே… தேங்க்ஸ்டா பெரிய ஒரு தலைவலி என்னை விட்டுப் போயிடுச்சி.”
“அப்போ எழும்பு மேன். வருகிறதே ரிலாக்ஸ்க்கு இங்கே வந்து சோபாவில் உட்கார்ந்திருந்தா எப்படி?”
சொல்லியவாறு ரத்தினம் ராஜசேகரை பிடித்து இழுக்க…
அந்த கூட்டத்திற்குள் இருவரும் ஐக்கியமாகி போயினர்.
கோட் சூட் அணிந்து கொண்டு டையால் கழுத்தை இறுக்கியவாறு காதுக்கு கொடுத்திருந்த செல்போனில் யாருடனோ மும்முரமாக இருந்த முரளிதரன் பணிக்கு செல்லும் அவசரத்தில் அடுத்து கையில் எடுத்தது தலை வார என சீப்பை தான். ஒரு கையால் செல்லை பிடித்துக் கொண்டே பேசியவன் மறு கையால் தலை வார தொடங்கினான்.
அதே நேரம் உள்ளே வந்த சந்திரா,
“தம்பி…காப்பி.”
என்றதும் திரும்பி பார்க்காமலே…
“வச்சிட்டு போங்கக்கா.”
என்றவனை வினோதமாக பார்த்தாள் சந்திரா. சந்திரா இந்த வீட்டு வேலைக்காரி தான். என்று CA முடித்து வேலை கிடைத்து இங்கு வந்து முரளிதரன் செட்டில் ஆனானோ… அன்றிலிருந்து அவனுக்கு சமைத்து போடுவதிலிருந்து அவன் வீட்டு பணி அத்தனையும் செய்து வருபவள் சந்திரா தான்.
முரளிதரனுக்கு குடும்பம் முழுவதும் கிராமத்தில் இருக்கிறார்கள். ஆனால் பல வருடமாக அவர்களிடம் பெரிய தொடர்பில்லாதவன். இப்போது கொஞ்சம் நாளாய் அதுவும் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நான் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டான்.
காரணம் பிளஸ் 2 முடிந்த கையோடு CA ஆவது ஒன்றே தன் வாழ்வில் லட்சியமாக கொண்டு ஊரை விட்டு உறவை விட்டு மெட்ராஸ் வந்து குடியேறியவன். அதன்பின் மருந்துக்கு கூட ஊர் பக்கம் தலை வைத்துப் படுக்கவே இல்லை.
தன் லட்சியம் நோக்கிய பயணத்தில் அவன்பட்ட அவமானங்கள், அசிங்கங்கள் ஏராளம்…ஆனாலும் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் முன்னேறி, இன்று பல வி.ஐ.பி களுக்கும், வி.வி.ஐ.பி களுக்கும் ஆடிட்டராக உயர்ந்து நிற்கிறான். அவனுடைய ஒரே லட்சியத்தில் வெற்றி கனியை எட்டிய பின் தான் பிரிந்து வந்த உறவையே நினைக்க ஆரம்பித்தான். அதனால் ஒரு முறை ஊருக்கு சென்று வந்தான். அங்கு சென்ற பின் தான் எந்த நிலையில் விட்டு வந்தானோ குடும்பம் அந்த நிலையிலே நிற்க கண்டான்.
அதன் பின் தான் தன் உறவுகளை புதுப்பித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான். ஆனாலும் அந்த 18 வயதிலிருந்து இன்று வரை 10 ஆண்டுகளாக தனித்து தான் வாழ்ந்தான் முரளி,
அப்பப்ப…ஏதாவது ஒரு தோழன் இருந்தது உண்டு. ஆனாலும் அவர்கள் யாரும் வருட கணக்கில் அவனுடன் நட்பு பாராட்டியது இல்லை. அவனும் ரொம்ப நெருங்கி போனதில்லை. காரணம் தாழ்வு மனப்பான்மை. என்ன இருந்தாலும் இவன் பாதையில் வந்த அனைவரும் வசதியான வீட்டுப் பிள்ளைகள். அவர்களின் வசதியே இவனை அவர்களிடம் நெருங்க விடவில்லை.
அப்படி நெருங்கினாலும் அவர்கள் ஆடம்பரத்திற்கும் அலட்டலுக்கும் இவன் தோதானவனாய் இல்லையே. அதனாலே வாழ்வின் பல நாட்களை தனிமையில்தான் கழித்தான். இப்போ இரண்டு வருடமாக தான் வாழ்க்கை சிலசில உறவுகளை அவனுக்கு கொடுத்திருந்தது.
அதில் முதலாமவள். அவன் வீட்டில் வேலை செய்யும் சந்திரா அக்கா தான். ஆரம்பத்தில் வேலைக்காரியாக உள்ளே நுழைந்தாலும் போகப்போக அவன் உறவுகாரி ஆகி விட்டாள். கணவனை இழந்த சந்திராவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் வயிற்றுப்பசியை போக்கவே வேலைக்கு வந்து, அவளுக்கு முரளி உறவாக மாறி, குழந்தைகளை படிக்க வைக்கும் அளவு சம்பளத்தை உயர்த்தியும் கொடுத்தான்.
இது வேலைக்கான சம்பளம் இல்லை என்பது அவளுக்கும் தெரியும். அதனால் தான் ஒரு வேலைக்காரி என வேலையை மட்டும் பார்க்காமல் அவன் உறவுக்காரியாகவே மாறிப் போனாள். இரவு இங்கு தங்குவது இல்லை என்றாலும் அதிகாலை நான்கு மணிக்கே வந்து விடுவாள்.
வீட்டு சாவிகள் ஒன்று எப்பவும் அவள் கையில் இருப்பதால் முரளிதரனை எந்த டிஸ்டப்பும் செய்யாமல் காலை சமையலை துவங்கியும் விடுவாள்.
முரளியின் அதிகாலை வாழ்க்கை ஐந்து மணிக்கு தொடங்கிவிடும். கடிகார அலாரத்தில் கண் விழித்தாலும் சுறுசுறுப்பு என்னவோ காலையில் சந்திரா கொடுக்கும் இஞ்சி டீயில் தான் அவனுக்கு கிடைக்கும்.
அலாரம் சத்தம் கேட்டவுடனே டீயோடு உள்ளே நுழைந்து விடுவாள் சந்திரா.
முகத்தை கழுவி முதலில் அவள் டீயை உறிஞ்சி விட்டு தான் குளிக்கவே செல்வான். அப்படி குளித்து முடித்து டிரஸ் மாற்றி ஏழு மணிக்கு வெளியேறும் போது இரண்டாவது பாலில் Bru போட்டு எடுத்து வந்து நீட்டி விடுவாள்.
அவளின் கரிசனையால் தான் காலை முதல் இரவு வரை சுறுசுறுப்போடு இருப்பான் முரளி. அப்படியே தான் இன்று அவள் நீட்டிய இரண்டாவது காப்பியை வாங்கி உறிஞ்சியவன்.
“வினோத் வந்துட்டானாக்கா? ”
என்று கேட்க…
“அவர் வந்து அரை மணி நேரம் ஆச்சு தம்பி. உங்களுக்காக ஹால்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ணுறாரு.”
“ஓ.கே.பைன். 10 நிமிசத்துல வந்துடுறேன். அதுக்குள்ள டிபனை எடுத்து வச்சிடுங்கக்கா. இன்று உடனே கிளம்பணும். ஒரு பெரிய பிஸ்னஸ்மேனோடு காலையிலேயே ஒரு மீட்டிங் இருக்குது. அதை முடிச்சிட்டு தான் ஆபிஸ் கிளம்பணும். “
“எல்லாம் ரெடியா தான் தம்பி இருக்கு. இதோ இப்ப உடனே எடுத்து வைக்கிறேன். நீங்க வந்தா சாப்பிட்டு கிளம்புங்க. “
என்றதும்,
“ ஓ.கே… தேங்க்ஸ் அக்கா” என்றவன் செல்லில் தொடர்பில் இருந்தவரிடம் …
“உங்களுக்கு எல்லாமே ரெடி பண்ணி வச்சிட்டேன் சார். ஆபீஸ்க்கு போனீங்கன்னா கொடுத்திடுவாங்க. மற்ற டீல் எல்லாம் நேரே பேசிக்கலாம். அப்போ வச்சிடவா? “
என்றவன் எதிர்முனையில் அனுமதி கிடைத்ததும் தன் காதுமடலில் இதுவரை அடைந்திருந்த ஐபோனுக்கு ஓய்வு கொடுத்து மேஜை மீது வைத்தவன்… சாக்ஸை எடுத்து அதில் தன் காலை நுழைத்தான்.
முரளியின் காலை அவசரம் தெரிந்ததால் சந்திரா அவன் வரும் முன்பே எல்லாவற்றையும் எடுத்து டைனிங் டேபிளில் பரத்தி விட்டாள். கப்பில் நீர் ஊற்றும்போது அவசரமாக ஹாலுக்குள்… சட்டையின் கை பட்டனை பூட்டியவாறு நுழைந்தான் முரளி.
முன்னால் சோபாவில் இருந்த வினோத்தை பார்த்து புன்முறுவல் பூத்தவன்.
“என்னடா… சார்ப்பா வந்திட்ட போல,”
“நீங்க தானே பாஸ் சொன்னீங்க. கிடைச்சிருக்கிற கிளைண்ட் மிக பெரிய இடம்ணு. அதான்… எதுக்கும் அரை மணி நேரத்துக்கு முன்னாலே போயிடலாம்ணு வந்துட்டேன். “
“குட். ஆனா இது போல அப்பாயின்மென்ட் கொடுத்து போகிற இடம் எல்லாம் நாம நேரமே போய் காத்திருந்தாலும் வேஸ்ட் தான். சொன்ன நேரத்துல தான் நம்மளை சந்திப்பாங்க. நேரமே போனாலும் அந்த குறிப்பிட்ட நேரம் வரை நாம காத்திருந்து தான் ஆகணும். அதுக்கு எதுக்கு முன்பே போய் நேரத்தை வேஸ்ட் ஆக்கணும்.”
“அதான் நம்ம வரதராஜனோட டீலிங்கை முடிச்சிட்டிருந்தேன். ஆல்மோஸ்ட் முடிச்சிட்டேன். நீ ஒரு முறை சரி பார்த்துட்டியணா அப்படியே ஸ்டெல்லாவுக்கு அனுப்பிடலாம். என் லேப்டாப்புல தான் இருக்கு. நீ ஒரு முறை பாரு. நான் அதுக்குள்ள சாப்பிட்டு வந்திடுறேன். “ என்றவன் டைனிங் டேபிளுக்கு வர,
உணவு ரெடி ஆகி இருந்தது,
“நீங்க சாப்பிட்டீங்களாக்கா…”
“சாப்பிடுறேன் தம்பி. நீங்க சாப்பிடுங்க…”
“ம்.ம்… நம்ம வளர்மதிக்கு நாளை லீவு தானே. ஆபீஸ் வர சொல்லுங்க. ஸ்டெல்லாவுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்.”
“சொல்லுறேன் தம்பி…”
“ சட்னி சூப்பர் அக்கா.”
சொன்னவன் முன்னால் இருந்த இட்லியை சாம்பாரிலும் சட்னியிலும் தோய்த்து சாப்பிட தொடங்க,
சந்திரா டீயை ஆற்றியவாறே,
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. “
என அவன் முன் மூன்றாவது டீயை வைத்தாள். முரளிக்கு டீ என்பது டானிக் போல, ஒரு நாள் ஒரு பத்து டீயாவது உள்ளே சென்றுவிடும். அவன் எங்கும் டீ அருந்துவது இல்லை. சந்திரா தான் பிளாஸ்கில் புதினா டீ, கொத்தமல்லி டீ, இஞ்சி டீ என அவன் உடல்நிலை கெடாத அளவு கொடுத்தே தான் அனுப்புவாள். அதனால் தான் சந்திரா இந்த வீட்டு வேலைக்காரி அல்ல… உறவுக்காரி என நான் முதலிலேயே சொன்னது.
“தம்பி மதியானத்துக்கு தேவையான சாப்பாடு, டீ எல்லாம் கார்ல்ல எடுத்து வச்சிட்டேன். “
“ தேங்க்ஸ் அக்கா.”
என்றவாறு எழுந்து கை கழுவ செல்ல… சந்திரா முரளி சாப்பிட்ட பாத்திரங்களோடு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள். காரணம் இதை கழுவி வைத்து விட்டு அவள் சென்றுவிடலாம். இதன் பின் அவள் நைட் வந்து நைட் சமையலை செய்தால் போதும்.
அதுவரை முரளியின் மூச்சுக்காற்று கூட வீட்டு பக்கம் வருவதில்லை. அவ்வளவு வேலை அவனுக்கு இருக்கும். பகல் முழுவதும் பம்பரமாக சுழன்று விட்டு இரவு எட்டு மணிக்கு வந்து சோர்ந்து போய் விழுபவனையும் சுறுசுறுப்பாக்கி நிம்மதியாக தூங்க அனுப்பிவிட்டு தான் மறுபடியும் வீட்டிற்கு செல்வாள். அப்படியே இன்றும் காலை பணியை முடித்துவிட்டு அவள் கிளம்ப எத்தனித்த நேரம், முரளி…வினோத்தோடு லேப்டாப்பில் எதையோ மும்முரமாக ஆராய்ந்தவன்.
“சரிடா… அனுப்பிட்டு கிளம்பு. இப்ப போனா சரியா இருக்கும்.”
மேஜையை திறந்து கார் கீயை எடுத்து கொண்டு அறையில் இருந்த செல்போனையும் எடுத்துக்கொண்டு அவன் வெளிவரும் போது வினோத்தும் பணியை முடித்துவிட்டு எழுந்திருந்தான்.
வெளியே வந்த முரளி காரை கிளம்பி கொண்டு வர, ஸ்டெல்லாவுக்கு போனில் விபரம் சொல்லி கொண்டிருந்தவன் அந்த ஃபோனில் பேசியவாறே வண்டியில் வந்து ஏற… முரளி வண்டியை ஓட விட்டான்.
நேரே வண்டி அரை மணி நேரம் பயணப்பட்டு ராஜசேகரன் வீட்டின் முன் வந்து நின்றது.
ஆளுயர கேட்டின் வழியாக உள்ளே நுழைந்தது அவனின் கார்.
வண்டி வந்து நின்றதும் கார் கதவை திறக்க ஓடி வந்த பணியாளன் பவ்யமாக சல்யூட் அடித்து கொண்டு பின் கதவை திறக்க…
இறங்கி வீட்டை பார்த்தவன் வாய் பிளந்தான். அரண்மனை மாதிரி இருந்தது வீடு. சுற்றி இருந்த செடிகளின் அழகில் உள்ளம் கொள்ளை போய்விட வினோத் அதிலே நின்று விட்டான். எறும்புகள் கூட்டம் போல ஆள் ஆளுக்கு பணி செய்து கொண்டிருக்க ஒருவன் வந்து இருவரையும் உள் அழைத்துச் சென்றான்.
இது என்ன ஹாலா ? பளிங்கு மாளிகையா ? என வியக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது அந்த ஹால். கண்ணை கவரும் மரவேலைபாடுகளும் இன்டீரியல் ஒர்க்கும் அட்டகாசமாக இருந்தது. எந்த அளவு பணத்தில் வாழ்பவர் ராஜசேகர் என அதுவே காட்ட பிரமிப்பு மாறாமல் அப்படியே பார்த்து கொண்டிருந்தான் முரளீதரன். வாழ்வில் இப்படியான வீடுகளை பார்த்திராவிட்டாலும் கழிந்த இரண்டு வருடமாய் அவன் போகும் இடமெல்லாம் இப்படியான வசதியான வீடுகள் தான் காட்சி தருகின்றது. என்றாலும் இந்த அளவு கலைநயமான வீட்டை அவன் பார்த்ததே இல்லை.
அதனால் பிரமிப்பு மாறாமல் கண்களை சுழல விட்டு கொண்டிருந்தவரை நோக்கி, ராஜநடையில் கம்பீரம் சிறிது கூட குறையாமல் வந்து கொண்டிருந்தார் ராஜசேகரன்.
அவரை பார்த்ததுமே தான் தேடி வந்த நபர் இவர் என்பதை ஒரே நொடியில் புரிந்து கொண்டவன் மரியாதை நிமிர்த்தம் எழுந்து கொள்ள,
ஓடி வந்து புன் சிரிப்போடு கைகுலுக்கி அமர வைத்தவர்.
நேரே அழைத்த விபரத்தை பேசத் தொடங்க, முரளியும் அவர் பேச்சை செவிமடுத்து கேட்டு கொண்டிருந்த அதே நேரம்…
மேல் மாடியில் தன் அறையில் இருந்து ஏதேச்சையாக வெளிப்பட்ட மேனகாவின் கண்களில் விழுந்தான் முரளிதரன்.
மேனகா ராஜசேகரின் ஒரே மகள். அவரின் பல கோடி சொத்திற்கும் 12 கம்பெனிக்கும் சொந்தக்காரி. அழகும் இளமையும் கொட்டி கிடக்கும் ஒரு அழகான இளம் பெண். தன் தந்தையின் கம்பெனி மொத்தத்தையும் இப்போது நிர்வகித்து வரும் ஒரு அபூர்வ திறமை கொண்ட பெண். எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் உட்கார்ந்து சாப்பிடும் ரகமல்ல அவள். தன் திறமையை தந்தையின் முன்பே நிரூபித்து காட்டியவள்.
இன்று உலகமே பிரமித்து அவர்கள் கம்பெனியை பார்க்கவும், அனைத்து கம்பெனி பங்குகளும் டவுனில் கிடக்க, இவர்கள் பங்கு அசுர வளர்ச்சியை கண்டிருப்பதற்கும் முழு காரணம் மேனகா தான். பங்குச்சந்தை பற்றிய அறிவில் அவள் முழுமை பெற்றிருந்ததும் இவ்வளர்ச்சிக்கு ஒரு காரணம்.
தந்தையை போல் பம்பரமாக உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருப்பவள்… தந்தையை ஒரு முறை பார்க்கும் ஆசையில் தான் நேற்று இரவு மலேசியாவில் இருந்து வந்திருந்தாள். இன்று கிளம்பியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவளின் மனதை மாற்றி இங்கேயே தங்க வைத்த பெருமை நம் ராஜசேகரனுக்கே உரியது. காரணம் ஆடிட்டரில் ஏற்பட்ட குளறுபடியை சரி செய்து விட்டு கிளம்பி செல் என தந்தை பணித்ததால் தான் இன்று இங்கு தங்கியிருந்தாள்.
ஆனால் விதி தங்க வைத்தது முரளிதரனை பார்த்த தானோ…
ஏதேச்சையாக அறையில் இருந்து வெளிப்பட்ட மேனகாவின் கண்ணில் கனகச்சிதமாக விழுந்தான் முரளிதரன். ஒரு முறை நின்று கீழ் ஹாலைப் பார்த்தவள். இமைக்க மறந்து முரளிதரனிலே அவள் பார்வை நிலை குத்தி நின்று விட்டது.
அருகில் அவனை கடந்து சென்ற மேனேஜரை நிறுத்தி,
“வீரா… அது யாரு? புதுசாயிருக்கு.”
என்றாள் கண்களை திருப்பாமலே…
மேனகாவின் கண் இருந்த இடத்தை பார்த்தவன்.
“அவர் பெயர் முரளிதரன் மேடம். நம்ம கம்பெனியோட புது ஆடிட்டர். இவரை சந்திக்க தான் சார் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தாரு. “
“என்ன ஆடிட்டரா?… இவரா?… இவரை பற்றியா அப்பா அவ்வளவு புகழ்ந்து பேசியது.”
“உருவத்தை பார்த்து மதிப்பிடாதுங்க மேடம். சார் சிம்பிள் தான். ஆனா வேலை பார்க்கவா இருக்கும். சின்ன வயசுனாலும் தொழில் தெரிஞ்சவர் மேடம் உங்களை போல…”
உங்களைப் போல என்றதும் முரளிதரன் மேல் இருந்த தன் கண்ணை திருப்பி சட்டென அவனை பார்த்தாள்.
“என்னை போலனா…”
என்றாள் வியப்பு மேலிட,
“இந்த சின்ன வயசுல எவ்வளவு துடிப்பா அப்பா கம்பெனியை பாக்குறீங்க. பெரிய பெரிய அனுபவசாலியிடமே இல்லாத பக்குவமும், தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய அறிவும், இருக்கிற திறமையான ஸ்பெஷல் பொண்ணா இருக்கீங்க. உங்கள் அறிவையும் திறமையும் பார்த்து புகழாத பிசினஸ்மேனே இல்ல. அது போல தான் முரளீதரன் சார்ட்ட இருக்கிற மூளையும் ஸ்பெஷல் ஆனது மேடம்.”
“…………..”
“பல வருஷ எக்ஸ்பிரியன்ஸ் இருக்கிற ஆடிட்டர்ட்ட இருக்கிற அத்தனை தகுதியும் அவர்கிட்ட இருக்கு. பெரிய பெரிய ஆடிட்டருக்கு ஈக்குவலா பேசப்படுகிற… மதிக்கப்படுகிற… ஒரு ஆள் தான் அவர்.”
“ ஒ… பெயர் என்ன சொன்னீங்க….”
“முரளிதரன் மேடம்.”
“சரி. நீங்க போகலாம்…”
என்றதும் மேனேஜர் கிளம்பிய அடுத்த நொடி, மறுபடியும் மேனகாவின் கண்கள் அவனை அளந்தன. அவள் தந்தையிடம் எதையோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தவன் கவனமோ கலையவேயில்லை. அவரிடமே இருந்தது.
இப்படி ஒரு பெண் தன்னை அங்குலம் அங்குலமாக ரசிக்கிறாள் என்று கூட அவன் உணரவில்லை. ஆனால் மேனகாவின் கண்கள் அவனை இஞ்ச் பை இஞ்சாக ரசித்தது.
ஆறடிக்கும் குறையாத வளர்த்தி, அளவான மீசை, அடர்த்தியான தாடி, உதடு மலராமலே முகம் சிரித்து நின்ற பொழிவு, அவன் ஆண்மையின் மிடுக்கு, மீடியமான உடல் எடை, நச்சென இருந்தான். அச்சு அசல் அதர்வா சாயல். நிமிர்ந்த தோள்பட்டை. வசீகரிக்கும் பேச்சு.
சும்மா சொல்லக்கூடாது. முரளி உடலமைப்பு மேகனாவினுள் எதையோ எழுப்பி விட்டிருந்தது. அதிலும் அவன் முகத்தில் எப்போதுமே ஒட்டி கொள்ளும் அந்த புன்னகை அவளுக்குள் என்னவோ செய்ய ஆரம்பிக்க அவன் அருகாமை காண துடித்த மனதை அடக்க முடியாமல் மாடியில் இருந்து படிகளின் வழியே இறங்கினாள் மேனகா.
அவள்,
நளின நடையில்… அலங்காரத்தின் உச்சத்தில்… பெண்களே பொறாமைப்படும் அழகில் நடந்து வந்தாலும், முன்னால் இருந்தவன் பார்வை திரும்பாதது அவளுக்குள் எரிச்சலை கிளப்பியது. ஆனாலும் எரிச்சலை உள்ளே அடக்கி கொண்டு அருகில் நெருங்கிய போது கூட தந்தை தான் அவளை கவனித்து.
“என்ன குட்டியம்மா. ரெடியாகிட்டீங்களா? “
என்ற பின் தான் அவனே இவள் பக்கம் திரும்பினான். திரும்பியவன் மரியாதை நிமிர்த்தம் பவ்யமாக நின்றானே தவிர, அவன் உரு அவளை சலனபடுத்தியது போல அவள் உரு அவனை சலனப்படுத்தியது போல துளியும் தெரியவில்லை.
ஏக்கத்தோடு அவனையே பார்த்தவள்
“ஆமாப்பா…”
என்றாள்.
“இதுதான் நான் சொன்ன ஆடிட்டர் குட்டியம்மா பெயர். முரளிதரன்.”
“நீங்க சொன்ன அளவு பெரிய ஆளா தெரியலியேப்பா…”
குறும்பாக தான் சொன்னாலும், வார்த்தையில் ஒரு வன்மத்தோடு சொன்னது போல தெரிய,
அவசரமாக ஏந்தி கொண்ட ராஜசேகர்,
“இல்லம்மா பத்து நிமிஷம் தான் பேசி இருப்பேன். ஆனா நானே அசந்து போகிற போல தான் சாரோட பதில் இருந்துச்சு. இவர் தான் நம்ம கம்பெனிக்கு சரியான ஆள்ணு தோணுது. நீ வேற சிங்கப்பூர் கம்பெனியில் உன் தேவை அதிகமா இருக்குன்னு புலம்பிட்டிருந்தா?”
“………..”
“ஒரு வாரம். நம்ம கம்பெனி பற்றிய கணக்கை சொன்னா போதும்மா.எல்லா தப்பையும் சரி பண்ணிடுவாரு. அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு.”
“ம்… பார்ப்போம். உங்க நம்பிக்கையை எப்படி காப்பாத்துறாருணு.”
மர்ம புன்னகையோடு அவள் சொல்ல…
“மிஸ்டர் முரளி. இதுதான் என் ஒரே பொண்ணு .பெயர் மேனகா. என் அத்தனை சொத்துக்கும் எல்லா கம்பெனிக்கும் ஒரே வாரிசு. படிப்பு முடிச்சு என் கம்பெனியில ஜாயின் பண்ணி ஒன் இயர் தான் ஆகுது. ஆனா கம்பெனி விஷயம் மொத்தமும் அத்துபடி. நீங்க எதுனாலும் என் பொண்ணை கேட்டா போதும்.”
“நான் உடனே சவுதிக்கு கிளம்பியாகணும். இதுக்க மேல உங்க கூட பேச நேரமில்லை. அக்ரிமெண்ட்ல சைன் பண்ணுறதுல இருந்து பொறுப்பை ஏத்துகிறது வரை எல்லாமே நீங்க இவங்களுக்கிட்ட தான் செய்து ஆகணும். நான் இப்ப உடனே கிளம்பி ஆகணும்.”
என்றவர் மகள் புறம் திரும்பி…
“சீ யூடா செல்லம்…” என்று அணைத்து நெற்றியில் முத்தமிட்டவாறு கிளம்ப,
இப்போது அவளின் நேரடி பார்வையில் விழுந்தான் முரளி. நிமிர்ந்து அவளை பார்த்தவன் சிறு சலனம் கூடயின்றி,
“அப்போ நாங்களும் கிளம்புகிறோம் மேடம். ஆபீஸ்ல வந்து மீட் பண்ணுறோம். அங்க வச்சே அக்ரிமெண்ட்டுல சைன் பண்ணுறேன். அப்பா சொன்னது போல் இன்றே உங்க வேலையை தொடங்குகிறேன். அப்பாட்ட வாக்கு கொடுத்தது போல ஒரே வாரத்தில் கணக்கை சரி பண்ணி சமர்ப்பிச்சிடுறேன்.”
அவன் வேலை பற்றியே பேசிக் கொண்டிருக்க… அவன் பேச்சில் செல்லாத அவள் மனது அவன் உதடு அசைவிலும்… உடல் மொழியிலுமே கலந்து கிடைக்க… அதை உணராதவன் தன் பணி பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.
“ சரி… அப்ப கிளம்புறேன்.”
என அவன் திரும்பிய போது தான் சுய நினைவடைந்தவள் போல….
சிலிர்த்து விட்டு குதி ஆட்டம் போட்ட தன் மனதை அடக்கி கொண்டு அவன் போகும் திசையை பார்த்துக் கொண்டு உதட்டில் மர்ம புன்னகை ஒன்றை மலரவிட்டவாறு நின்று கொண்டிருந்தாள்.
வெளியே வந்த முரளி தன் செல்போனை எடுத்து தன் ஆபீஸ்சுக்கு அடித்தவன். சில விஷயங்களை ஸ்டெல்லாவிடம் சொல்லிவிட்டு செல்லை அணைத்த போது முரளி கண்ணில் அது விழுந்தது.
“ஆம் அவளே தான்”.
“அந்த வீட்டை தாண்டி சாலையில் நிற்பது அவளே தான்.”
உள்ளம் ஒரு முறை கூறிக் கொண்டதும். மறுபடியும் 2 அடி எடுத்து வைத்து முன்னால் சென்று, மறுபடியும் கூர்ந்து பார்த்தான்.
“நாம பல இடங்களில் பார்த்த அதே பெண் தான். யார் இவள். உண்மையிலேயே இவள் என்னை பாலோ பண்ணுகிறாளா? அல்லது இவள் முளைக்கும் இடத்தில் எல்லாம் நாம் இருந்து தொலைகின்றோமா?”
எண்ணியவன்.
“நாம போகும் இடம் எல்லாமே இவளுக்கும் வேலை இருக்குமா? அது எப்படி இருக்க முடியும்? அவளின் பார்வையும் சிரிப்பும் என்னை நோக்கியே இருப்பது போல தானே தெரிகிறது?… உண்மையில் என்னைத்தான் பார்க்கிறாளா? இல்லை என்னுடைய பிரமையா இது.”
தலையை சிலிர்த்து கொண்டான். என்னை பார்க்க தான் என் பாதையில் முளைக்கிறாளா? அல்லது என் கவனத்தை கலைக்க தான் சிரிக்கிறாளா? முதன்முதலாக முரளியின் மனதில் ஏதோ ஒரு எண்ணம் உற்பத்தியாகியிருக்க,
அதே நேரம் இங்கு வெறித்துக் கொண்டு நின்ற தன்னுடைய பாஸை பார்த்ததும் அருகில் வந்த வினோத்
“என்ன பாஸ்? அப்படியே சிலையாக நின்னுட்டீங்களா? வினோத் உலுக்க,
ஒரு கணத்தில் தன்னை நிலைப்படுத்தியவன்,
“ஓ…ஒண்ணுமில்ல.”
தடுமாறியவாறு வந்து வண்டியில் ஏறினான். வினோத் வண்டியை கிளப்பி சாலையில் ஓட விட்டு கார் அந்த வளைவை தாண்டியதும் இதுவரை இவனையே பார்த்து நின்ற அந்த பெண்ணும் தன் வேலை முடிந்தது போல தன் வண்டியில் ஏறிக்கொண்டாள். முரளி சென்ற எதிர் திசையில் அந்த காரும் அந்த காருக்குள் இருந்த மர்ம பெண்ணும் பயணமானார்கள்.
அத்தியாயம் தொடரும்…
