அத்தியாயம் – 1

         சுவரில் பதித்து வைத்திருந்த அந்த சின்ன கண்ணாடியில் குனிந்து தன் அழகு முகத்தை பார்த்தான் முருகன். அரும்பு மீசை அடர்த்தியாக வளர துடிக்க அதை நீவி விட்டு இருபுறமும் தன் விரலால் முறுக்கிக் கொண்டு மறுபடியும் கண்ணாடியில் குனிந்து பார்த்தான்.

        கன்னத்தில் ஆழமாக பதிந்து போன வடுவை மெதுவாக தடவிக் கொடுத்தான். அந்த தழும்பு ஏற்படுத்திய நாளை நினைத்துப் பார்த்தான். அது அவன் சிறு வயதில் ஒரு கபோதி கம்பியால் கிழித்தது. வருஷம் போயும் வலியும் போயும் அந்நிகழ்ச்சியை சுமந்து கொண்டு அது அவன் கன்னத்தில் தழும்பாகிப் போனது. என்று கண்ணாடி பார்த்தாலும் அந்த நாள் நினைவு அவனுக்கு வரத் தவறுவதில்லை அதை தடவிக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு கிழிந்து போன லுங்கியை கிழிசல் வெளியே தெரியாதவாறு தூக்கிக் கட்டிக் கொண்டு, சீவி விட்ட தலையை இருக் கையாலும் கலைத்துவிட்டு ஸ்டைலாக மறுபடியும் விரலால் கோரி விட்டுக்கொண்டு விசில் அடித்தவாறு வெளியே வந்தான் முருகன்.

         “என்ன முருகா ஆக்கர் கடைக்கு கிளம்பியாச்சா.”

வீட்டின் முன் இருந்த ரோட்டு கடை முனியாண்டி கேட்க,

         “ஆமாண்ணே…”

என்றவன் ஒருமுறை கூட முடியை கலைத்துவிட்டு தன் விரலால் மறுபடியும் கோரிக் கொண்டான்.

        “எப்பவும் போல டீ தானேப்பா…”

வாடிக்கையாளரின் டேஸ்ட் தெரிந்து மணிக் கேட்க

         “சீனி…தூக்கலா…நுரையோட…”

என்றும் போல இன்றும் அதே டயலாக்கை அவருக்கு கொடுத்துவிட்டு பேப்பரை விரித்து படம் பார்க்க ஆரம்பித்தான். ஒரே நிமிடத்தில் டீயை ரெடி பண்ணி முனி நீட்ட…

        முன்னால் இருந்த பருப்பு வடையில் ஒன்றை எடுத்து கடித்தவாறு டீயை ருசித்து குடித்தான். குடித்து முடித்து கண்ணாடி கப்பை முருகன் நீட்ட வாங்கிக் கொண்ட முனி,

         “மதியம் மூன்று சாப்பாடு தானே. என்றும் போல் கொடுத்து  விடவா?”

          “இல்லண்ணே எனக்கு மதியம் வெளில போக வேண்டி இருக்கு. நீங்க குள்ளனுக்கும் பறட்டைக்கும் மட்டும் சாப்பாடு கொடுத்து அனுப்புங்க.”

         என்றதும் லேசாக சிரித்துக்கொண்டு

         “என்ன முருகா பெண் பச்சைக்கொடி காட்டடிச்சு போல. முக எல்லாம் சிவந்து போய் கிடக்குது.”

         என்றதும் வெட்கத்தில் நெளிந்தவன்.

         “ஆமாண்ணே ரெண்டு வருஷம் அலைய வச்சுட்டு இன்றுதான் மலைக்கோயில் சந்திக்க வர சொல்லி இருக்கா. அங்க தான் மதியம் போறேன்.”

          “அப்படின்னா இன்று ரெண்டு பேருக்கும் பெரிய ஹோட்டல் சாப்பாடோ…”

          “அப்படி எதுவும் முடிவு பண்ணலனே… போன பிறகு…”

          “ஓகே ஓகே ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் எனக்கு புரியுது.”

           என முனியாண்டி சிரிக்க

          “அப்படின்னா எனக்கு ட்ரீட் எப்ப ?”

என முனியின் மகன் முருகனின் காது மடல் பக்கத்தில் வந்து சொல்ல,

          “கொடுத்துட்டா போச்சு…”

என்றவன் சிரித்துக்கொண்டே வெளியேறி சாலையில் ஆக்கர் கடையை நோக்கி நடந்தான்.

           கடைக்குள் நுழைந்ததுமே தனக்கான பணியை தொடங்கி விட்டவன், அரை மணி நேரத்தில் முதலாளி வந்து விட்டதை அறிந்து அவர் முன்னால் போய் நின்றான்.

           சாமி கும்பிடவர் பயபக்தியோடு சாம்பிராணி திரியையும் தீப்பெட்டியையும் கையில் எடுத்தவாறு லீவு கேட்டுக்கொண்டு முன்னால் வந்து நின்ற முருகனைப் பார்த்து,

           “எங்கடா போற…”

            “உங்களுக்கு விஷயமே தெரியாது அண்ணே. அந்த பொண்ணு பச்சைக்கொடி காட்டிடுச்சாம்.”

            “நெஜமா ?… சொல்லவே இல்ல.”

என்றதும் முருகன் முதலாளி முன் நெளிய…

            “இந்த அதிசயம் எப்படி நடந்துச்சு? ரெண்டு வருஷமா துரத்தி துரத்தி விரட்டினவா இப்ப எப்படி உன் பக்கம் வந்தா. “

          “அதுதான் ஆச்சரியம். நேற்று பையன் போய் அப்படி என்ன சொக்குப்பொடி போட்டானோ தெரியல.”

           “ஹோட்டல்ல வேலை முடிஞ்சு நேரா வெளில வந்ததும் ஒரு நாளும் இல்லா திருநாளா  நம்ம கடைய நோக்கி ஒரு தினுசா சிரிச்சுக்கிட்டே வந்து நம்ம முருகனிட்ட உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வரியான்னு கூப்பிட்டு.பேய் அறைஞ்சது போல தங்க சிலை போல நின்ற பையனோட கைய புடிச்சு இழுத்துட்டு போச்சு. வரும்போது பார்த்தா பையன் மந்திரித்து விட்ட கோழி மாதிரி வந்தான். என்னடா என்று விவரம் கேட்டா நாணி கோணி அவன் சொன்ன அழகை பாக்கணுமே…”

         பறட்டை அநியாயத்துக்குச் சீண்ட,

         “போங்கடா…”

என முருகன் அவனை அடிக்க கை ஓங்க , சிரித்துக்கொண்ட முதலாளி,

         “உன் காதலில் என் டெலிவரியை மறந்துடாத அப்பு. அப்புறம் மாதவரம் சேட்டுட்ட நான் மாட்டிகிட்டு தான் முழிக்கணும்.”

         “உங்களை அப்படி விட்டு விடுவேனா முதலாளி. மத்தியானத்துக்கு முன்னால எல்லா வேலையும் முடிச்சுகிட்டு தான் கிளம்புவேன். மூணு மணிக்கு மலை கோயிலில் சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கா.”

          “ஏன்டா காதலை எல்லாம் கீழே இருந்து சொல்ல மாட்டீங்களா?அது என்ன மலைக்கு மேலே உயரமான இடத்துல போனா தான் பேச வருமோ?”

          குள்ளன் கிண்டலோடு சொல்ல,

          “அப்ப தானேடா  யாரும் இல்லாத இடமா மீட் பண்ணலாம். செல்லமா சரியான இடத்தை தான் தேர்ந்தெடுத்து இருக்கா. “

          என்றவனை முறைத்த முருகன்,

          “உதைப்பேன் உன்னை…”

என்ன பாய ஆரம்பிக்க,

          “நேரத்தை பாத்தீங்களா முதலாளி. மூணு மணி. காலை பூஜை முடிஞ்சு, மாலை பூஜை தொடங்குவதற்கு முன்னால. அப்பதானே எந்த ஆளோட டிஸ்டர்பன்ஸ்சும் இல்லாம தனியா… தனியா… ஆங்… ஆங்…”

         பறட்டை ஒரு தினசரி சிரித்துக்கொண்டே சொல்ல,

         “சீ…உன் புத்தி ஏண்டா  அப்படி போகுது…”

         “பார்த்து முருகா வேணா வேணான்னு ஒதுங்கி போன பொண்ணு. நீ வேற விடாம துரத்திட்டே இருந்தா. பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்து மலைக் கோயிலுக்கு அதுவும் ஆளில்லாத நேரம் பார்த்து வரச் சொல்லி இருக்கா. எதுக்கும் கொஞ்சம் கவனமா போ.”

           என்ற முதலாளியை பார்த்து நாணத்தோடு சிரித்தவன்,

          “நீங்களுமா முதலாளி ?”

 எனச் சொல்ல,

          “இல்லடா நீயும் ரெண்டு வருஷம் அந்த பொண்ணு பின்னாடி சுத்துனா. அந்த பொண்ணு கண்டுக்கவே இல்லன்னு டெய்லி வந்து பொலம்பவும் செய்தா? அப்படியிருக்க திடீர்னு ரூட் மாறினால் பயமால இருக்கு.”

         “அப்படி இல்ல முதலாளி. இப்ப எல்லாம் அடிக்கடி என்னை திரும்பி திரும்பி பார்க்கிறா. நான் பிந்தி போன தேடுறா. நேற்று நானே எதிர்பார்க்காத நேரம் உள்ளால வந்து என் கைய புடிச்சு இழுத்துட்டு போய் ஆசையா என் முகம் பார்த்து சொன்னதை வச்சு பார்த்தா நீங்க சொல்றது போல தெரியல முதலாளி. அவள் மனசுலயும்… நான்…நான்.”

         “முதலாளி… முதலாளி… பாருங்க!  நம்ம முருகன் கூட வெட்கப்படறான். அப்படி இவன் வெட்கப்படற அளவு அவனை தனியா கூட்டிட்டு போய் அப்படி என்ன கொடுத்திருப்பா ?????”

         குள்ளன் சொல்லிக்கொண்டே அவனைத் திரும்பிப் பார்க்க அவன் முறைத்த முறைப்பில் பயந்தவனாக அவனை விட்டு ஓட தொடங்கினான்.

          “குள்ளா?… ஓடாத … உன்னை… இப்ப நான் கொல்ல போறேன்.”

         என அவனை விரட்டிக் கொண்டு முருகன் உள்ளே ஓட முதலாளி சிரித்துக்கொண்டே திரியை பற்ற வைத்து கடவுளுக்கு தீபாரணை செய்து மனம் உருகி கும்பிட்டு தன் பணியை தொடங்கினார்.

         நேரம் மதியம் 12 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. முதலாளி யாரையோ பார்க்க வேண்டும் என்று வெளியில் கிளம்பி இருந்தார். உடன் பணியில் இருந்த இரு சிறுவர்களையும் அழைத்துச் சென்றிருந்தார். முருகன் தன் பணியை மிக வேகமாக செய்ய தொடங்கியிருந்தான். முதல் சந்திப்பு எந்த தடங்கலும் வந்து விடக்கூடாது என்ற துடிப்பு அவனிடமிருந்தது கூடவே மனதுள் இனம்புரியாத கிளர்ச்சி இருந்தது. அதனால் அவனோட வேலையை மிக அவசரமாக முடித்துக் கொண்டு இருந்தான்.

         பிளாஸ்டிக் அத்தனையும் ஒருபுறம் கூட்டியவன் அதனை தரம் பிரிக்க தொடங்கினான். தண்ணீர் பாட்டில்களை ஒருபுறமும், கலர் பிளாஸ்டிக்குகளை மறுபுறமும் திக்கான பிளாஸ்டிக்களை இன்னொரு புறமுமாக தரம் பிரிக்க ஆரம்பித்தான்.

          இங்கே பறட்டையும் குள்ளனும் இடிந்து போன மாடி வீட்டிலிருந்து வந்திருந்த கான்கிரீட் கம்பிகளை பிரித்து எடுத்துக் கொண்டிருந்தனர். பல வருடங்கள் ஆனாலும் அக்கம்பி கொஞ்சம் கூட துருப்பிடிக்காமல் அப்படியே இருந்தது. மிக சிரமப்பட்டு இருவரும் அக்கம்பியை பிரித்தெடுத்து சுருக்கி பார்சல் போடும் அளவுக்கு குறுக்கிக் கொண்டிருந்தனர்.

          “பறட்டை நீ போய் நம்ம முருகனுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. நான் இதை பார்த்துக்கிறேன்.”

           “நிறைய இருக்கே குள்ளா?  தனியா எப்படி பண்ணுவா?”

           “நான் பாத்துகிறேண்டா.அவனுக்கு வெளியில கிளம்பும் நேரம் ஆகுதுல. எப்படியும் முதலாளி சொன்ன வேலையை செய்யாமல் அவன் போக மாட்டான். ஒருவேளை வேலை முடிச்சுட்டு பிந்தி போய் அந்த பொண்ணு கோவிச்சிக்கிட்டு போயிடுச்சுன்னா தாங்க மாட்டான். ரொம்ப உடைஞ்சு போயிடுவான்.”

         “நேற்றிலிருந்து பார்த்தியா.அவன் முகத்துல அப்படி ஒரு சந்தோசம் தெரியுது. செல்லம்மா கூட்டிட்டு போய் அவன் திரும்பி வந்ததிலிருந்து பையன் காலு கீழேயே இல்லை. வானத்தில் தான் பறக்குறான். மூணு பேரும் என்ன பாவம் பண்ணினோமோ தெரியல. வாழ்க்கையில பெத்தவங்க கூட நிராகரிச்சி அனாதையா போனோம்.”

           “நமக்கு தான் நம்முடைய லட்சணத்தை பார்த்துட்டு எல்லா பொண்ணும் ஓடிடும். அவனாவது வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போகட்டுமே. நமக்குள்ள ஒருத்தராவது சந்தோசமா வாழட்டுமே.”

            சொல்லிக் கொண்டு குள்ளன் கண்கலங்க,

பறட்டையும் அவன் மனது புரிய கையில் இருந்த இரும்பு கம்பியை கீழே போட்டு விட்டு முருகன் காப்பர் கம்பியை பிரித்துக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தான்.

         “என்னடா உன் வேலை முடிஞ்சிடுச்சா…”

          “இல்ல உனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமேன்னு…”

          “என்ன திடீர் அக்கறை…”

          “உன்னோட ரோதனை தாங்க முடியல. எங்களால தான் உன்னை அடக்கி வைக்க முடியல அண்ணியாவது சீக்கிரம் வந்து உன் குடுமி பிடியை வெட்டி உன்னை ஒரே இடத்துல உட்கார வைக்கட்டும் என்று ஒரு நல்ல எண்ணம் தான்.”

         “படவா உனக்கு வாய் கொழப்பு கூடி போச்சு…”

         “நீ போய் புறப்படுடா. இதை நான் பார்த்துக்கிறேன்.”

         “எதுக்கு அத்தனையும் தப்பு தப்பா பண்ணி வச்சிட்டு முதலாளி கிட்ட நான் வாங்கி கட்டிக்கவா?”

         “என்னடா நீ. உனக்கு உதவலாம்னு வந்தா என்னையே கலாய்க்கிறா?”

         “அப்புறம் ஒரு நாள் விட்டுட்டு போய் வம்புல என்னை மாட்டி விட்டதை நான் மறக்க முடியுமா?”

         “ஒருமுறை தப்பா ஆயிடுச்சு. எடை போட்டு கணக்கு பண்றதுல கிலோ கணக்குல விட்டுட்டேன் அதுக்கு எப்பவும் தப்பாவா பண்ணுவாங்க.”

         “ஒரு கிலோ இல்லடா 10 கிலோ …”

         “ஆமா 10 கிலோ ஒன்னுக்கு கூட ஒரு சைபர் தானே…”

         “ஆமாடா அத மட்டும் விட்டா உன்னால முதலாளிக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?”

          “எவ்வளவு?”

          “ஒரு கிலோ காப்பர் கம்பி 340 360 வரை விலை போகுது. ஒரே நாள்ல இம்புட்டு தொகையை முழுங்கினியனா முதலாளி மூணே மாசத்துல கடையை காலி பண்ணிட்டு ஊரப்பாத்து போக வேண்டியதுதான்.”

          “ஒருமுறை ஏதோ தப்பு நடந்து போச்சு அதுக்காக எப்பவும் அப்படியா பண்ணுவேன்.”

          “உன்னோட பெரிய மனசுக்கு ரொம்ப நன்றி, நீ போய் உன் வேலையை பாரு.”

          “ரொம்ப பிகு பண்ணாதடா. அப்புறம் நீ இதை முடிச்சுட்டு போகறதுக்குள்ள செல்லம்மா டாட்டா காட்டிட்டு போயிடுவா பாத்துக்க.”

           பறட்டை அப்படி சொன்னதும் சட்டென திரும்பி அவனைப் பார்த்தான். அவன் சொல்வதும் சரி என தோன்ற,

            “அப்படின்னா இதை மட்டும் இழக்கி கொடு. நான் மொத்தமா எடை போட்டு பேக் பண்ணிடுறேன்.”

            என்றதும் பறட்டை அவன் சொன்ன வேலையை செய்து கொடுத்தான். கூடவே இருந்து எடை போட்டு பேக் பண்ண உதவினான்.

           ஒரு வழியாக ஒரு மணிக்கு வேலை முடிய அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனிக்க,

            “என்னடா முருகா இப்படியேவா போக போறா?”

            “ஆமா ஏன்?”

             “இவன் யாருடா கிறுக்கனா இருக்கான். முதல் முதலில் உனட்ட பேச கூப்பிட்டு இருக்கா. இப்படி கிளிஞ்சல் டிரஸோடவும், அழுக்குகான உடம்போடவுமா போவா ?”

           “அப்புறம்?”

           “வீட்டுக்கு போய் நல்லா குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுட்டு அப்படி ஜம்முன்னு ஹீரோ போல போ. நீ என்ன போறது. பொண்ணே உன் பக்கம் வரும்.”

           “என்னிடம் ஏதுடா புது டிரஸ் ?”

           “ரூம்ல எடுத்து வச்சிருக்கேன் எடுத்துட்டு போ.”

           “குள்ளா?”

நெகிழ்ச்சியோடு முருகன் அவனைப் பார்க்க…

           “ போடா போ. போயிட்டு வந்து நல்ல விஷயமா சொல்லு.”

            முருகன் கண்கலங்கி அவனைக் கட்டிக் கொள்ள முதுகை ஆதரவாக தடவியவன்,

           “ என்னடா இது சின்ன புள்ள மாதிரி. உனக்கு வேற யார் இருக்கா. எதுனாலும் நாங்கதானே செய்யணும். போ… போய் எடுத்துட்டு கிளம்பு. வீட்டுக்கு போய் நீற்றா புறப்பட்டு போ…”

          என்றது முருகன் அந்த டெக்ஸ்டைல்ஸ் கவரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். உள்ளே சந்தோஷம் பூத்துக்குலுங்கியது. கண்கள் மின்ன விசில் அடித்துக் கொண்டு தலையை கலைத்து பின் தன் விரலாலேயே சீவிக்கொண்டு மிக உற்சாகமாக வந்தான்.

          வரும் வழி எல்லாம் செல்லம்மாவின் ஞாபகம் தான் அவனை சிலிர்ப்படைய செய்திருந்தது. செல்லம்மா… அவளை முதன்முதலாக அந்த மாமா சர்ச்சின் முன்னால் தான் பார்த்தான். ஆக்கர் சாதனத்தை தலைச் சுமடாக எடுத்து வந்து கொண்டிருந்தபோது, பின்னால் திரும்பித் திரும்பி  பார்த்து வந்தவன் முன்னால் வந்த செல்லம்மாவை பார்க்கத் தவற அவள் மேல் மோதி விட்டான்,

          முரட்டு ஆண்மகனின் இடி பூ போன்ற மென்மையான செல்லம்மாவின் தோள்பட்டையில் வலியை இறங்க, திடுக்கிட்ட அவள் அவனை வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாட தொடங்கினாள்.நம் ஆனால் அவளைப் பார்த்த கண்ணை எடுக்க முடியாமல் அவள் திட்டத்திட்ட பல்லை இழுத்துக் கொண்டு அவள் முன் மரமாக நின்றிருந்தான்.

          திட்டத்திட்ட இழுத்துக் கொண்டு மரமாக நிற்பவனை என்ன செய்ய என தெரியாமல்,

          “சீ…போடா.”

எனக் கூறிவிட்டுப் போனவதான். ஆனால் நம்ம ஆள் அன்று விழுந்தவன் தான். அதன் பிறகு எழும்பவே இல்லை. அடுத்த நாளிலிருந்து அவள் யாரு . எங்கிருந்து வருகிறாள், எங்க போறா?  என்ற கணக்கெடுப்பை பறட்டை சரியாக செய்து விட,

         வேலை போக மீதி நேரம் எல்லாம் அவள் பின்னே சுத்தி தன் காதலை தெரியப்படுத்த தொடங்கினான் முருகன்.

          ஆனால் செல்லம்மா இந்த ரெண்டு வருடமாக இவன் புறமே திரும்பாமல். போக்கு காட்டியவள் நேற்று தான் முதல் முதலாக அவன் பக்கத்தில் வந்து அவன் கரம் பிடித்து இழுத்துச் சென்று ஒரு கோவிலின் முன் அவனை நிப்பாட்டி ஒரு மார்க்கமான சிரிப்போடு,

        “மலைக்கோயில நாளை உனக்காக காத்திருப்பேன் வந்துடு.”

         என சொன்னது.

         அவள் சொன்ன நொடியில் இருந்து இந்த நொடி வரை அவனுள் வந்து சென்ற உணர்ச்சிகளை வார்த்தையால் விளக்க முடியாது. இரவு கூட படுத்தவுடன் தூங்கி விடும் அவன் பல மணி நேரம் அவள் நினைவிலேயே புரண்டு இருந்தான். அவள் அருகில் நின்ற நொடி அவனுள் உணர்வு ஒன்று பிரவாகம் எடுத்து, நெஞ்சுக்குழிக்குள் தாக்கியதை முதன்முதலாக உணர்ந்தான். வழிநெடுக்கிலும் அவளையே நினைத்துக் கொண்டு நடந்தாலும் பத்து நிமிடத்தில் வீடு வந்துவிட,

          உள்ளே சென்றவன் குள்ளன் சொன்னது போல குளித்து புது துணி அணிந்து கண்ணாடி பார்த்து தலைவாரி பவுடர் பூசிக்கொண்டு மறுபடியும் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க…

         ஏதோ சரி இல்லாதது போல உணர்ந்தவன் தலைமுடியை இரு கையாலும் கலைத்துவிட்டு அவன் ஸ்டைலில் விரலால் கோதிக் கொண்டான்.

          உள்ளத்துக்குள் இருந்த சந்தோசம் முகத்தில் மகிழ்ச்சியை விதைத்திருக்க,சிரித்துக் கொண்டே முதன்முதலாக சந்திக்கப் போகும் தன் காதலிக்காக வாங்கி வைத்திருந்த கிப்ட்டை எடுத்துக்கொண்டு நடு கூடத்துக்குள் வரும்போது,

        சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அந்த வாட்ச் அவன் கண்ணில் பட்டது.

        புது டிரஸ் போட்டு இருக்கோம். புது ஸ்டைல் பண்ணி இருக்கோம். இப்போ இதோட வாட்ச் கட்டிட்டு போனா ஹீரோ போல இருப்பேன்.

          என எண்ணிய முருகன் சுவரில் ஒற்றையாய் ஆணியில் மாட்டி நின்ற வாட்ச்சை எடுத்து அணிந்து கொண்டான்.

          அதன்பின் மிகுந்த சந்தோஷத்தோடும் ஆர்வத்தோடும் வெளிவந்தவன் சாலையில் வேகமாக நடக்கத் தொடங்கினான். சிறிது தூரம் சென்ற பின் கிழக்குப் பக்கமாக திரும்பி மலைக் கோயிலுக்குச் செல்ல வேண்டியவன் அதற்கு நேர் எதிர் சைடில் ஆவேசமாக முன்னேறினான்.

          அப்போது அவனில்…

          இதுவரை காதல் உணர்வில் ஜொலித்துக் கொண்டிருந்த  முகம் கர்ணக் கொடூரமாய் மாறி இருந்தது. இதுவரை நளினமாக நடந்த அவன் கால்கள் ஆக்ரோஷமாக நடக்கத் தொடங்கியது. இதுவரை சாந்தமாய் இருந்த அவன் கண்கள் கோவை பழம் போல சிவந்து கொடூரமாய் காட்சி தந்தன. இதுவரை காதல் பாடல்களை விசிலடித்த உதடுகள் ஆக்ரோஷமாக விரியத் தொடங்கின. அவன் பற்கள் கூட நர நரவென கடித்துக்கொண்டு அதன் கோரத்தை இன்னும் அதிகமாக காட்டியது. முருகன் முற்றிலுமாக மாறி வேறு பாதையில் ஆக்ரோஷமாய் வெறி பிடித்தவன் போல ஓடத் தொடங்கினான்.

                                              அத்தியாயம் தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!