முன்னாள் காதலி

     பாட்டிலில் இருந்த பீரை ஒன்றோடு வாயில் மடமடவென ஊற்றினான் பிரகாஷ். ஆனாலும் அவன் மனதை அந்த மது ஆற்றவில்லை போலும். வெறி கொண்டவன் போல அந்த குப்பியை விசிறியடித்தான். அது சில்லு சில்லாக உடைந்து சிதறியது. கண்களை இறுக மூடி கையை உதைத்து தன் ஆத்திரத்தை தீர்க்க பார்த்தான். ஆனால் அவன் மனவலி போவதற்கு பதில் அவன் கை விரல் மேஜை மீது பட்டு அது வேறு கொடுமையான ஒரு வலியை கொடுத்தது. கையை உதறியவாறு ஜன்னல் அருகில் வந்தவன் முகத்தில் இளம் தென்றல் மோத தலை முடியை தன் இரு கையாலும் ஒதுக்கி விட்டு முகத்தை நிமிர்த்தி அந்த சில்லென்ற காற்றை சுவாசித்தவன் மனம் ஒரு நொடி அமைதியடைய கண்களை இறுக மூடினான்.
    இறுக மூடிய கண்ணுக்குள் நொடி பொழுது தன் கணவன் குழந்தைகளோடு சிரித்து பேசி குதூகலமாய் போன வளர்மதி தான் தெரிந்தாள். அவளின் முக மலர்ச்சியும், அந்த மலர்வால் உண்டான பொலிவும் ஒரு நொடி நெஞ்சில் வந்து போக அவனால் தாங்க முடியவில்லை. 
    இவள் எப்படி இவ்வளவு சந்தோஷமா ? அதுவும் கணவர் குழந்தையுடன். நொடி பொழுது மணமேடையில் மணபெண் கோலத்தில அவளை உட்கார வைத்து விட்டு தந்தையின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அவள் கழுத்தில் தாலி கட்டாமல் வெளியேறி வந்தது நினைவுக்கு வந்தது. 
     எப்படி எப்படி? தான் நிராகரித்த பெண் இவ்வளவு சந்தோஷமாய் அதுவும் கணவர் குழந்தைகளோடு. மனசு எரிந்தது. அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
     பணக்கார மனைவியை கட்டி விட்டு வந்து தினமும் சண்டை சச்சரவோடு வாழும் தன் நிலையை நினைத்து பார்த்தான். கண்களை உருட்டி அவள் தினமும் பேயாட்டம் ஆடும் காட்சி கண்ணில் தெரிய...
      அவனை அறியாமல் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. மன வலியில் பொசுங்கியவனுக்கு கூடவே ஆத்திரம் வந்தது. ஆத்திரத்திலும் அவன் மனதுக்குள் வந்து போனது முதல் முதல் வளர்மதியை அவன் சந்தித்த நொடிகள் தான்.
      கண்கள் மின்ன புது பொலிவோடு பட்டு சாரியில் காப்பி கோப்பையோடு வெட்கத்தையும் நாணத்தையும் பூசி கொண்டு தன் முன் நின்ற நொடி தான். அந்த நொடி அவளை பார்த்த அந்த நொடி அவனுள் நடந்த வேதியல் மாற்றம் இன்றைக்கும் அவனுக்கு நினைவு இருக்கிறது. எப்படி மறக்க முடியும் பசுமையும் சாந்தமுமாய் வாழ்வில் வந்த நாட்களை எப்படி மறக்க முடியும்.
      வளர்மதியை இவன் காதலித்து திருமணம் செய்யவில்லை. இவன் தந்தை பார்த்து முடித்த பெண் தான் அவள். ஆனால் நிச்சயம் ஆன நொடியில் இருந்து இருவருமே பேசி பழக ஆரம்பித்தனர். இரவு மணி கணக்காய் போன் பேசுவது. வீட்டிற்கு தெரியாமலே தனிமையில் சந்திப்பது என திருமணத்துக்கு முன் இரண்டு மாதம் அவர்கள் வாழ்ந்த நாட்கள் ரொம்ப அழகான நாட்கள் தான்.
     அதிலும் வளர்மதி அந்த குறுகிய நாளில் அவனை நெஞ்சம் எல்லாம் நிரப்பி கொண்டாள். அதிலும் அவன் தன்னவன் தனக்கானவன் என்ற உரிமை வேறு. கேட்கவும் வேண்டுமா பெண்ணவள் ரொம்பவே நேசிக்க ஆரம்பித்து விட்டாள். அவனுக்காக தன்னையே மாற்றியும் கொண்டாள். பிரகாஷ் மட்டும் என்ன? அவளோடு வாழ போகும் நாட்களை அப்பவே கற்பனையில் வாழ்ந்து கொண்டு தான் இருந்தான். 
       திருமண நாள் அன்று வரை இருவரும் பிரிந்து விடுவோம் என கனவில் கூட நினைக்கவில்லை. அதற்கு வளர்மதியின் தந்தை சொன்ன ஒரு பொய் தான் காரணம். ஆனால் அவர் வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் நேரம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவரும் இவர்களை ஏமாற்ற நினைக்கவில்லை. ஒரு நகை கடை முதலாளியால் வஞ்சிக்கப்பட்டு தான் மகளுக்கு போடுவதாக சொன்னதில் பத்து பவுன் நகை போட முடியாமல் போய் விட்டது. 
   மாதம் மாதம் தன் வருவாயில் குருவி சேர்ப்பது போல சேர்த்து நகை சீட்டு போட்டு அதை வாங்கி மகளுக்கு கொடுக்க நினைத்த அவருக்கு திருமணத்துக்கு முதல் நாள் காலையில் தான் அந்த கடையே திவாலாகி முதலாளி தலைமறைவாகி விட்ட விசயம் தெரிந்தது. நிறைய பேரை வைத்து எப்படியாவது தனக்கான நகையை வாங்கி விடலாம் என்று எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.
     எப்படியாவது வாங்கி விடலாம் என இருந்தவருக்கு நம்பிக்கை சுத்தமாய் போனதே முதல் நாள் இரவு தான். அதன் பிறகும் அவர் பலரிடம் முயற்சி செய்தார். ஆனால் எந்த முயற்சியும் கடைசி கட்டத்தில் பலன் தரவில்லை. பல மணி நேரம் யோசித்தார். கடைசியில்  உண்மையை சொல்லி மகள் திருமணத்துக்கு தடையாக இருப்பதற்கு பதில் திருமணம் முடிந்து பதமாக சொல்லி கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டார். விளைவு அந்த பக்க ஆட்களால் போட்டிருப்பது கவரிங் நகை என கண்டு பிடித்து விடப்பட்டு விசயம் மாப்பிள்ளையின் அப்பா காதுக்கு வந்த போது கொதித்து போனார்.
      அவர் கொந்தளிப்பின் உச்சம்.

இப்ப நீ வர போறியா இல்லையா?
என்று தான். பிரகாஷ் பக்கத்தில் பூமாலை சகிதம் வந்து அமர்ந்திருந்த வளர்மதியையும் தந்தையையும் பார்த்தான். அவன் தயக்கத்தை பார்த்த தந்தை.
இவா தான் வேணும்ணா இங்க இருந்து தாலி கட்டு. நாங்க கிளம்புறோம். ஆனா பத்து பைசா தேறாத இந்த குடும்பத்துல காலம் முழுக்க கஷ்டப்பட தான் போறா. என் பக்கம் இருந்து உனக்கு எந்த உதவியும் கிடைக்காது. என்னை பற்றி தெரியும்ல. நான் வேணாம்னு முடிவெடுத்துட்டா அப்புறம் காலத்துக்கும் அவங்க பக்கம் போக மாட்டேனு உனக்கு நல்லா தெரியும்.
என்றதும்,
தடுமாறிய சந்தோஷ். தந்தையின் கரை காணா சொத்தையும் ஆபீஸையும் இழந்து விட கூடாது என அவர்களோடு இறங்கி வந்து விட்டான். கண் நிறைய விழிநீரோடு ஏக்கமாய் அவள் பார்த்த அந்த பரிதாப பார்வை தான் அவன் கடைசியாக பார்த்தது.. அதன் பிறகு பத்து வருடமாக இவன் கவனம் அவள் பக்கம் செல்லவில்லை. ஆனால் எவனோ அவசர மாப்பிள்ளையாகி அவள் கழுத்தில் அன்றே தாலி கட்டி விட்டான் என்பதை தோழன் மூலம் அறிந்தான்.
எவனோ ஒரு இளிச்சவாயன் மாட்டிகிட்டான். என்று தான் அப்போது நினைத்தான். அதன் பிறகு அவளை நினைக்கும் அளவு அவன் சூழல் இல்லை. மகன் தன் பேச்சை கேட்டு மணமேடையில் இருந்து இறங்கி வந்து விட்டான் என்ற கெளரவத்தில் அவன் தந்தை அந்த மாதமே அவனுக்கு ஒரு வசதியான வீட்டில் இருந்து மணமகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்.
ஆரம்பத்தில் கோடீஸ்வர வீட்டு மாப்பிள்ளை ஆனதில் பிரகாஷ்க்கு பெருமை தான். அந்த பெருமையே மனைவியின் எல்லா செயலுக்கும் அவனை வளைந்து கொடுக்க வைத்தது. விளைவு அப்படி வளைந்து வளைந்து அவன் கூன் தள்ளியது தான் மிஞ்சம். இப்போது எல்லாம் அவள் ராஜாங்கம் அதிகமாகி அவன் வாழ நினைத்த வாழ்க்கையே கிடைக்காமல் அவளுக்கு அடிமையாக கிடக்கிறான்.
பணம், பேர், புகழ், வசதி எல்லாமே அவன் நினைத்து பார்க்க முடியாத அளவு இருந்தது. ஆனால் நிம்மதி துளி கூட இல்லை. காதல் சுத்தமாக இல்லை. தாம்பத்தியம் பல வேளைகளில் அவள் அழகை காட்டி நிராகரிக்கப்பட்டது. வாரிசு வேணுமே என்ற ஒற்றை காரணத்திற்காகவே ஒரு மகளை பெற்று கொண்டாள். ஆனால் அவளையும் அவள் போல் வளர்த்து கொடுமை செய்தாள். இப்போது எல்லாம் பிரகாஷ்க்கு வீட்டிற்கு போகவே விருப்பம் இருப்பது இல்லை. சதா தண்ணியோடு வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறான்.
இந்த சூழலில் தான் நிராகரிக்கப்பட்ட பெண் சந்தோஷமாய் அதுவும் இவன் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது நெஞ்சு எரிய தானே செய்யும். அப்படி தான் இன்று வளர்மதியை கோவிலில் கணவன் குழந்தையோடு பார்த்த போது நெஞ்சு எரிந்தது.
அவளை தொடர்ந்து சென்றான். ஒவ்வொரு இடத்திலும் அவள் இவன் எதிர்பார்ப்பது போல தன் கணவரிடம் நடந்து கொள்ள அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் தூரமாய் நின்று அவளின் இனிமையான நொடிகளை பார்த்து பார்த்து வயிற்றெரிச்சல் கொண்டான்.
தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் தன் குழந்தையோடு காரில் ஏறி கிளம்பிய பின் தான் தன் வீட்டிற்கு வந்தான். அவளின் சிரித்த முகமே அவனை சித்திரவதை செய்தது. தாங்க முடியவில்லை. மண்டையை பிய்த்து ஏறிந்து விடலாம் என்று தோன்றியது மறுபடியும் போய் பிரிட்ஜில் இருந்த பீர்பாட்டிலை எடுத்து வந்து மடமடவென குடித்தான். கண்கள் போதையில் எரிந்தது. கூடவே சிவந்தது. நிதானம் இழந்தான். ஆனாலும் அவன் அந்த நிலையிலும் இயலாமையோடு வீட்டை கண்களால் அளந்தான்.
அவன் ஆசை கொண்டது போல ஜொலித்து நின்றது ஹால். ஆனால் அதை இந்த நொடி அவனால் ரசிக்க முடியவில்லை. அவன் பார்த்து பார்த்து வடிவமைத்த வீடு. இது வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆடம்பரம் வேண்டும் என்பதற்காக தான் அவளையே விட்டு வந்தான். ஆனால் இன்று எல்லாம் கிடைத்தும் எதுவும் இல்லாதது போல வெறுமை அவனுள். கலங்கும் கண்ணால் மாளிகையை பார்த்தான்.
தங்கம் வேண்டும் என்பதற்காக தங்கத்தை இழந்திருக்கிறேன் என்று அந்த நொடி அவனுக்கு தோன்றியது. வாய் விட்டு கதறி அழுதான். ஆனாலும் எதுவும் மாற போவது இல்லை என்பது அவனுக்கு தெரிந்தது. வாழ்க்கைக்கு தேவை ஆடம்பரம் இல்லை. அன்பான ஒரு அரவணைப்பு என அந்த நொடி உணர்ந்து கொண்டான்.
ஆனால் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு?

    முற்றும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!