ஒரு விதவையின் வாழ்க்கை போராட்டத்தை விளக்கும் அழகான கதை
கண்ணில் நீர் கோர்க்க நடுங்கும் விரலால் உணவை வாரி எடுத்தாள் கல்பனா. முன்னால் தன் மூன்றே வயதான மகளும் நான்கு வயதான மகனும் தன் மழலை முகத்தை காட்டி வசீகரித்து கொண்டிருந்தனர்.
அதன் பிஞ்சு முகத்தை பார்க்க பார்க்க அழுகை அடங்காமல் பொத்து கொண்டு வந்தது, வெடித்து அழுது விடுவோமோ என்ற பயத்தில் கீழ் உதட்டை பற்களால் கவ்வி கொண்டாள்.
இரு கண்ணிலும் நீர் பொங்கி நின்றது. அந்த நீர் துளிகளுக்கு நடுவில் அவள் குழந்தைகளின் பிம்பம்.
தாங்க முடியவில்லை. கழுத்து பகுதி வரை வந்த ஏதோ ஒரு பந்து போன்ற உணர்வை அடக்க கண்களை இறுக மூடி கொண்டாள். மெல்ல மெல்ல உணர்வை அவள் அடக்கிய நேரம்.
புருஷன் போயிட்டானு நினைக்காத. எது வேணும்னாலும் எனட்ட கேளு.
என எதுவில் இருத்தி சொல்லி பல்லை இளித்து காட்டிய பக்கத்து வீட்டு பரிமளத்தின் புருஷன் சட்டென வந்து போக, இறுகிய மனசு மறுபடியும் தளர்ந்தது.
இதுக்க மேல உனக்கு யாரும் இல்லனு நினைக்க வேணாம். உன்னையும் குழந்தையையும் நான் பாத்துக்கிறேன்.
என இது நாள் வரை கண்ணை பார்த்து பேசிய இவள் தந்தை வயதை ஒத்த மாமன் முறை மனிதர் அவள் உடல் எல்லாம் பார்வையால் மேய்ந்தவாறு சொன்ன போது அவள் தேகம் கூனி குறுகி விட்டது. கணவர் தான் ஒரு பொண்ணுக்கு வேலி என்பதை அவன் இறந்து இரண்டே வாரத்தில் இந்த சமுதாயம் கற்று கொடுத்து விட, இதற்கு மேல் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று தான். உணவில் விசத்தை கலந்து விட்டாள்.
என்ன தான் வேதனையின் உச்சத்தில் கலந்தாலும் அதை பத்து மாதம் சுமந்து பெற்ற தன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் கை நடுங்க தானே செய்யும்.
அந்த நடுக்கம் தான்.
ஆனாலும் மதிப்பும் மரியாதையுமாய் வாழ்ந்த இந்த ஊரில் பலரின் கழுகு பார்வைக்கு தான் விழுந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் மறுபடியும் இளகிய மனதை இறுக்கி கொண்டு,
விசம் கலந்த உணவை எடுத்து மகனின் வாய் அருகே கொண்டு சென்றாள்.
ஏம்மா. இதை சாப்பிட்டா நாம அப்பாட்ட போயிடலாமாம்மா…
மகன் மழலை குரலில் கேட்க,
துடித்து போனாள். இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டு வர பெண்ணவளால் அதை தடுக்க முடியவில்லை.
ஏன்ம்மா அழுறா? அப்பாட்ட போக தானே இந்த சாப்பாட்டை கொடுக்கிறா . கொடும்மா. சாப்பிட்டு நாம மூணு பேரும் அப்பாட்டயே போயிடலாம். நீ தான் அப்பா படத்துக்கு முன்னால சொன்னியே. நான் கேட்டேன்.

என்றதும் தான் தாமதம். மகனை கட்டிப்பிடித்து கதறி விட்டாள் பெண்ணவள். இது என்ன மாதிரியொரு உணர்வு என்பதை அவளாலே அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆனால் ஏதோதோ உணர்வுகள் வந்து அந்த நொடி கொடுமையாய் வலித்தது. குழந்தைகள் இருவரையும் பிடித்து நெஞ்சோடு அணைத்தவள். ஆத்திரம் ஆவேசம் வேதனை வலி எல்லாம் ஒரு சேர வர,
முன்னால் இருந்த விசம் கலந்த உணவை தட்டி எறிந்தாள். அது நாலாபுறமும் சிதறி தரையில் ஓவியமாக விரிந்தது. தாங்க முடியவில்லை. மகன் வாயிலிருந்து இந்த வார்த்தையை கேட்டப்பின் நெஞ்சம் தாங்கவில்லை. வீடே இடிந்து விழும் அளவு குரல் எடுத்து அழுதாள். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. மதியம் போய் மாலை மங்கிய நேரம் எதுவோ உந்தி தள்ளியது போல் எழுந்தாள். குழந்தைகள் இருவரையும் அறையில் விளையாட்டு பொருட்களின் நடுவில் உட்கார வைத்தாள்.
அம்மா வருகிறது வரை இங்கேயே இருக்கணும் எங்கேயும் போக கூடாது. அம்மா வரும் போது சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவேன்.
சொன்னவள் கணவரின் புகைபடத்திற்கு முன்னால் வந்து நின்றாள். இப்போது அவள் கண்களில் கண்ணீர் இல்லை. முகத்தில் ஒரு புது ஒளி தெரிந்தது. படத்தின் கீழே தொங்கி கொண்டிருந்த கணவரின் காக்கி சட்டையை எடுத்து அணிந்து கொண்டாள். மேஜையின் மீது இருந்த ஆட்டோ சாவியை எடுத்தாள்.
அதிவேகமாக வீட்டை விட்டு வெளியேறி இதுவரை அவள் குடும்பத்தை தாங்கி பிடித்து கணவரின் மறைவுக்கு பின் மெளனமாய் நிற்கும் ஆட்டோவை வெளியில் எடுத்தாள்.
அவள் காம்பவுண்ட் தாண்டி வெளிவந்ததுமே ஒரு குடும்பம் கை நீட்டி நிறுத்தியது.
தாம்பரம் போலாமாம்மா…
போலாங்க. ஏறுங்க…
என்றதும் அக்குடும்பம் ஏறி கொள்ள கால்மணி நேரத்தில் கொண்டு போய் தாம்பரத்தில் விட்டாள்.
இந்தாம்மா.
என இருநூறு ரூபாயை நீட்ட,
இப்போதும் அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து போனது. இப்போது அவள் கண்கலங்க பயம் காரணம் இல்லை. இது மனதில் தோன்றிய புத்துணர்வால் வந்தது.
ஆட்டோவை திருப்பினாள். அடுத்த சவாரி கிடைத்தது. அதையும் உரிய இடத்தில் விட்டு விட்டு குழந்தைகளுக்கு இட்லியோடும் மளிகை பொருட்களோடும் வீடு வந்து சேர்ந்தாள்.
இப்போது அவள் நடையில் ஒரு கம்பீரம் தெரிந்தது. முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.
கணவரின் புகைப்படத்திற்கு அருகில் வந்தாள்.
நீங்க இல்லாம நான் ஒரு முறை வாழ்ந்துட்டே வரேன் கதிர். என்னை தப்பா பார்த்த தப்பா பேசிய ஈன பிறவிகளே கூச்சம் இல்லாம இந்த பூமியில இருக்கும் போது நான் ஏன் சாகணும். சாக மாட்டேன். எனக்கு யார் வேண்டும். யாரும் வேணாம். யாரோட உதவியும் வேணாம். உன் தொழில் மட்டும் போதும் கதிர். இந்த சாக்கடையான சமுதாயத்தில் கூட நறுமணம் வீசும் மலராய் என்னால் மலர முடியும்.
என்றவள் கணவரின் புகைபடத்திற்கு ஆழமான முத்தம் வைத்து விட்டு நம்பிக்கை சுடராய் தன் குழந்தைகள் அருகில் வந்தாள்.
இனி அவளை யாரும் வார்த்தையால் வளைக்க முடியாது. பார்வையால் உடைக்க முடியாது. வீறு கொண்ட புலி போல நிச்சயம் இம்மண்ணில் பிரகாசிப்பாள்.
முற்றும்..
Tamil Story


