வணக்கம் வாசகர்களே!
ஹாஸ்பிட்டலை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடும் முகுந்த். பதறி துடிக்கும் ஒவியா? அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா? வாங்க 5-வது அத்தியாயத்துக்குள்ள போலாம்.
அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா?
தன் முன் விசிட்டிங் கார்டை நீட்டி கொண்டு நின்ற சரசு அக்காவை கண்டதும் பதட்டத்தோடு எழுந்து நின்றாள் ஒவியா. .
அவளின் படபடக்கும் மான் விழியையும், காரணமில்லாமல் துடிக்கும் உதட்டையும் ஒரு நொடி புன்னகையோடு பார்த்தவள் முகத்தில் மர்மத்தை விதைத்தவாறு,
“இந்தா பிடி…”
என அவள் கைபிடித்து அந்த கார்ட்டை வைக்க,
புரியாமல் அந்த கார்டையும் அவளையும் மாறி மாறி பார்த்தாள் ஓவியா. அவளின் குழப்பமான பார்வையை பார்த்த சரசு, தன் கண்ணால் கார்ட்டின் மேல் சைகை செய்ய இப்போது ஒவியாவின் விழி கார்டில் பதிந்திருந்தது.
“முகுந்த்.”
என்ற பெயரை கண்டதும் குழப்பமாக ஏறிட்டாள். ஒரு முறை அந்த பெயரை அவள் உதடு உச்சரித்த போதே,
“ உன்னோட மலையில இருந்து ஒரு தம்பியை காப்பாத்தி கூட்டிட்டு வந்தாங்களே, அந்த தம்பியோட B.A கொடுத்தாரு. உங்களுட்ட கொடுக்க சொன்னாரு. நேற்று அவங்க கிளம்பி போகிறதுக்கு முன்னால தான் கொடுத்தாரு. ஆனா நான் மறந்துட்டேன். வேலை முடிஞ்சி இன்று காலையில வீட்டுக்கு போன பிறகு தான் நியாபகம் வந்துச்சு. அதான் டியூட்டிக்கு உள்ளால நுழைஞ்சதும் முதல் வேலையா உனட்ட கொண்டு சேர்த்துட்டு தான் வேற வேலையே பார்க்கணும்னு உள்ளால வந்துட்டேன். இப்போ கொடுத்துட்டேன். நான் கிளம்புறேன்.”
அவள் கிளம்பி போய் ஒரு மணி நேரம் கழிந்த பிறகும் ஓவியாவின் பார்வை கார்டின் மேல் பொறிக்கப்பட்டிருந்த முகுந்த் என்ற பெயரை விட்டு அகலவில்லை. முகுந்த். இதுதான் அவரோட பெயரா? என்று எண்ணுகையிலே உள்ளம் சில்லிட்டது. ஆழ்ந்து பார்த்தாள். உதடு பூட்டி கிடந்தாலும் அதன் பிறகு உள்ளம் ஏனோ இந்த நொடி வரை அந்த பெயரை ஜெபித்து கொண்டு தான் இருந்தது. ஆனாலும் மனதின் அடி ஆழத்தில் ஒரு சந்தேகம். ஒரு கலக்கம். காரணம் தெரியாத ஒரு குழப்பம். அந்த குழப்பத்தோடே மறுபடியும் ஒரு முறை அந்த கார்டை பார்த்தாள்.
“எதற்கு இந்த கார்டை எனக்கு கொடுக்க சொல்லணும்.”
இந்த கேள்வி தான் அவள் உள் திரும்ப திரும்ப முழைத்தது. மறுபடியும் ஒரு முறை பார்த்தாள். முகுந்தன் M.B.A சக்கரவர்த்தி எண்டர்பிரைஸ்ஸஸ், சென்னை Phone No.9932645800 என இருந்தது.
“அவர் அட்ரஸையும் போன் நம்பரையும் எதற்காக கொடுத்தார். நான் அவர் இடத்திற்கு தேடி போவேன் என்றா? அல்லது போன் செய்து பேசுவேன் என்றா? அப்படி என்றால் என்னில் பூத்த அந்த பூ அவரிலும் பூத்ததா? பூத்ததால் தான் அவரை தொடர்பு கொள்ள கொடுத்து சென்றாரா?”
ஒரு நொடி மனது துள்ளி விட்டது. காரணமில்லாமல் கன்னம் சிவந்து நாணத்தையும் வெட்கத்தையும் முகத்தில் சிந்தியது. அடுத்த நொடி அப்படி ஒரு எண்ணம் அவரில் இருந்தால் நேரடியாக என்னை வந்து பார்த்து பேசியிருக்க மாட்டாரா? எதுக்கு வேலைகாரியிடம் கொடுத்து அனுப்ப வேண்டும். இல்லை. அவர் கொடுக்க வேறு ஏதோ காரணம் இருக்கிறது. என்னவாக இருக்கும்.
அன்று முழுதும் அவளுக்கு அந்த எண்ணமே இருந்தாலும் மறுநாள் மதியம் தோழியிடம் கொண்டு சேர்த்த பிறகு தான் குழப்பம் முழுமையாக தீர்ந்தது.
உதடு துடிக்க ஆர்வத்தோடு தன் முன் நின்ற தோழியின் உள்ள கிடக்கையை ஒரு நொடியில் உணர்ந்தவள்.
“எதுக்கா இருக்கும். அதான் உள்ளங்கையில வச்சி அந்த இடிபாடுக்க நடுவுல பாத்திருக்கிறியே. அந்த நன்றி கடனுக்கு எவ்வளவு வேணும்னு கேட்கவா இருக்கும். அதுல தான் போன் நம்பர் இருக்குதுல. வேணும் மட்டும் கேளு. கொடுக்க பெரிய மனுஷங்க காத்திட்டிருப்பாங்க.”
என்றதும் முகம் சுருங்கி தோழியை பார்த்தவள்,
“என்னடி சொல்லுறா? பணமா? நான் அவரை பாத்துகிட்டதுக்கு பணம் கேட்பேணு நினைச்சிட்டா இந்த கார்டை சரசு அக்காளுட்ட கொடுத்துட்டு போனாரு.”
“கொடுத்துட்டு போக நிச்சயம் அதுதான் காரணமா இருக்கும். ஆனா ஒரு திருத்தம். கொடுத்தது. அந்த நெடுமரமா இருக்காது. அவன் கூட ஒண்டிட்டு திரிஞ்சானே அந்த வெளவாலு அவனா தான் இருக்கும். அவன் தான் கூடை நிறைய பணத்தை எடுத்துட்டு வந்து அந்த நெடுமரத்தை காப்பாற்ற உதவி பண்ணுன எல்லாருக்கும் தூக்கி தூக்கி கொடுத்துச்சி.”
“யாரு. அவரோட சுத்தி சுத்தி நிப்பானே அந்த சோடாபுட்டியா?”
“ம்..சரசு அக்காளுக்கும் பணம் கொடுத்து அவன் தான் செட்டில் பண்ணினான். ஒருவேளை உனக்கும் தேவைனா கேட்கட்டும்னு கொடுத்துட்டு போயிருப்பான்.”
என்றதுமே சப்பென்று ஆனது ஓவியாவுக்கு. ஆனாலும் முகத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல், அப்படியே அமைதியாக,
“உன் அம்மாட்ட வந்தும் ஒரு கட்டை நீட்டுனான். அந்த இடிபாடு நடுவுல இருந்து அவனோட முதலாளி உயிரோட வர நீ தான் காரணம்ணு சொல்லி வற்புறுத்தி கொடுக்க பார்த்தான். ஆனா அம்மா வேணாம்ணு மறுத்துட்டாங்க. அது மட்டுமா? கடைசியில எனட்ட வந்து வாங்கி கட்டிட்டு தான் திரும்பிச்சி.”
“உனகிட்டயுமா?”
“ம்… உங்களை கண்டுபிடிக்க வழி சொல்லி கொடுத்தேன்ல. அந்த நன்றி கடனுக்கு எனட்டயும் பணத்தை கொண்டு வந்து நீட்டுனாங்க. நான் என் தோழியை உயிரோடு மீட்டு கொடுத்ததே போதும்னு திரும்ப அனுப்பிட்டேன். பணம் படைச்சவங்களுக்கு அன்போட ஆழம் அவ்வளவு தான் ஓவியா. எல்லாத்தையும் காசு கொடுத்து சரி கட்டிடலாம்னு நினைக்கிறாங்க. நீ செய்த உதவிக்கு அவங்களும் எதுவும் செய்யணும்ணு நினைச்சிருப்பாங்க. நீயும் தேவைனா கேட்கலாம். கண்டிப்பா கொடுப்பாங்க.”
என இளக்காரமாய் சிரித்தவள்,
“சார் அந்த வீட்டோட ஒரே வாரிசு போல. கரை காணா சொத்துக்கு அதிபதியாம். இந்தியாவுலயே டாப் சிட்டில எல்லாம் அவங்களோட கம்பெனி இருக்குதாம். அப்புறம் என்ன? காசை வாரி இறைக்காம இருப்பாங்களா. மூணு நாள் ஹாஸ்பிட்டலே வி.ஐ.பி களோட நெருக்கம் தான். எல்லாம் அவங்களோட ஆளுங்க தான். ஆனா பாரு நம்ம ஹோட்டல்ல வந்து தங்கும் போது நான் அவனை இவ்வளவு பெரிய குடும்பத்து நெடுமரம்ணு நினைக்கல.சடு சடுணு நின்னதும் எதுவும் சறுக்கி விழுந்த குடும்பத்துல இருந்து தான் வந்திருப்பாணு நினைச்சேன். ஆனா அவன் குடும்பம் கொடுத்த அலப்பறையை இப்ப கூட மறக்க முடியல.”
திலகா சொல்லி சிரிக்க, ஓவியா சிரிக்க முடியாமல் தலை குனிந்தாள்.
“என்னடி எவ்வளவு கேட்கலாம்ணு தானே யோசிக்கிறா? கேட்கிறதே கேட்கிறா? லம்பா கேளு. கடைசி வரை காசுக்காக கஷ்டபடாம ஜாலியா வாழுறது போல கேளு.”
“என்னடி என்ன பார்த்தா காசுக்காக அவருக்கு இது எல்லாம் செய்தது போலவா தோணுது.”
என்றவளின் அனல் கக்கும் பார்வையை பார்த்தவள்.

“என்னை உன் சுட்டெறிக்கும் பார்வையால எரிச்சிடாதம்மா. உன்னை அப்படி நினைச்சது நான் இல்ல. அந்த நெடுமரம் தான். இந்த கோபத்தை நீ அவனுட்ட தான் காட்டணும். அதான் அவனோட அட்ரஸையும் போன் நம்பரையும் கொடுத்துட்டு போயிருக்கானே. போன் செய்து நாக்கை புடுங்குறது போல கேளு. அவங்களுக்கு தெரியாது ஏழைங்களுக்கு தன்மானம் ஜாஸ்திணு. அவங்க அன்பை எல்லாம் பணம் கொண்டு கழிக்க முடியாதுணு . நீ புரிய வை.”
திலகா மனகுமுறலை கொட்டி கொண்டே போனாள். ஆனால் ஒவியாவினுள் அது அனைத்தும் மிக ஆழமாக இறங்கி சென்றிருக்க வேண்டும். அதனால் தான் அந்த கார்டை அவள் அறைக்குள் நுழைந்ததுமே குப்பை தொட்டியில் வீசி இருந்தாள். அந்த நொடியில் இருந்து அடுத்து வந்த ஒரு வாரமும் அவள் நடைபிணம் போல் தான் இருந்தாள். எதிலும் பிடிப்பில்லை
ஹாஸ்பிட்டல் விட்டு வீடு வந்தும் அவளில் மாற்றம் இல்லை. ஆனால் இப்போதெல்லாம் கனவு வந்தாலும் அதை உணர்வு வரை அவள் கொண்டு போவது இல்லை. அது கலைக்கப்பட்ட ஓவியம் என தெரிந்தாலும் பழைய படி பூத்து குலுங்கும் பூவாய் அவளால் வளைய வர முடியவில்லை.
எப்போதும் மனது தனிமையையே நாடியது. அந்த தனிமையிலும் வெறுமையாகவே நொடிகள் கழிந்தது. அவள் கட்டுப்பாட்டை மீறி அவன் உரு அவளுள் வரும் போதெல்லாம் திலகா சொன்னதை மன அலையில் ஒட விட்டே அன்றைய இருளில் அவனும் அவளுமான நொடிகளை மறக்க போராடினாள். ஆனாலும் முகுந்தோடு அவள் வாழ்ந்த அந்த மூன்று நாளும் அவ்வளவு எளிதில் அவளை விட்டு போகவில்லை. நெருஞ்சி முள் போல அவளிலிருந்து குத்தி கொண்டே இருந்தது.
மகளின் இந்த சோகமே உரித்தான மாற்றம் எழிலரசிக்கு குழப்பத்தையே விதைத்தது. அவளும் இரு வாரமாய் பார்க்க தானே செய்கிறாள். ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது இருந்த அளவு கூட இப்போது அவள் முகத்தில் தெளிவு இல்லை என்பது அவளுக்கும் தெரியாமல் இல்லை. என்ன ஆயிற்று தன் மகளுக்கு என குழம்பியவள் மனதோ கடைசியா?
“ புள்ளை ரொம்ப பயந்துட்டா போல. நாம ஒருமுறை முனீஸ்வரன் கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தா எல்லாம் சரியாகிடும்.”
என தான் எண்ணியது. அந்த எண்ணமே அன்றே கணவரிடம் சொல்லி அவருடன் மகளையும் அழைத்து கொண்டு முனீஸ்வரன் கோவிலுக்கு வந்து சேரவும் வைத்தது.
கோவிலை சுற்றி வந்து சாமி கும்பிட்ட பின் பூசாரி வேப்பலையில் நீர் தெளித்து அவளுக்கு சிறு சடங்குகள் செய்து அனுப்ப, ஒரு மணி நேரம் குடும்பமாக அந்த கோவில்லயே இருந்தனர். இளையவர்கள் இரண்டும் மரத்தடியில் விளையாட சென்று விட, கணவன் மனைவி இருவரும் கதை பேச ஆரம்பித்து விட்டனர். ஒவியா பழையபடியே எதையோ வெறித்து பார்த்தவாறே இருந்தாள்.
அதே நேரம் கோவிலுக்குள் நுழைந்த கோபாலை கண்டதும்,
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
என்ற அவனின் வாக்கு சட்டென நினைவுக்கு வர, கூடவே அதை தொடர்ந்து அன்று அவள் வாழ்வில் நடந்த எல்லாம் நொடி பொழுதில் நியாபகம் வர, அவளை மீறி கொல்லென சிரித்து விட்டாள். மகளின் சிரிப்பை பார்த்து கணவரிடம் கண் ஜாடை காட்டிய எழில்,
“பாத்தீங்களா? புள்ளையை மந்திரிச்ச பிறகு தான் அவளோட முகத்துல சிரிப்பே வந்திருக்கு. இனி எல்லாம் சரியாகிடும்.”
என நிறைவோடு வந்தவளுக்கு மறுநாளும் மகள் அப்படி இருக்க கண்டதும் குழப்பமாகி, தந்தை வெளியில் சென்றதும் அவள் அருகில் வந்து அமர்ந்து விபரம் கேட்டாள். அப்போது தான் தன் உள்ளம் படும் வேதனை அப்பட்டமாய் வெளியில் தெரிகிறது என்பதை உணர்ந்தவள் அதன் பின் நடிக்க தொடங்கினாள். தாய்க்காகவும் தந்தைக்காகவும் இரு வேஷதாரியானாள். இவர்களோடு சிரித்தாலும் தனிமையில் துவண்டு போய் கிடந்தாள். துவளும் போதெல்லாம் அதிகமாக அழுதாள். அவன் இப்படி செய்து விட்டு போயிருக்க கூடாது. இவனிடம் நான் காட்டிய அன்பிற்கு விலை பேசி சென்றிருக்க கூடாது. இந்த எண்ணமே அவளுள் புழு போல நெளிந்து கொண்டிருந்தது.
என்றாலும் அவன் அவ்வளவு எளிதாக அந்த நாளை மறந்து சென்றது போல் அவளால் மறக்க முடியவில்லை. நொடி பொழுது மாறாமல் அவனை நெருங்கி நின்ற நொடிகளே திரும்ப திரும்ப முழைத்து வந்தன. ஆனாலும் மறந்து தான் ஆக வேண்டும் என்பது மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்தது. இனி அவனை பற்றி நினைப்பதில் அர்த்தமே இல்லை என்பது புரிந்தது. இனி தன் வாழ்வில் அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் வரப் போவதே இல்லை என்பது மட்டும் ஊர்ஜிதமானது.
“மறக்க வேண்டும். அவனை பற்றிய எண்ணத்தை மறக்க வேண்டும். தன் வாழ்வில் வந்த அந்த ஒற்றை நாள் இரவை மறக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.”
இப்படியே இருந்தால் அது சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்தவள்.
“நாம ஏதாவது வேலைக்கு கிளம்புனா தான் இது சரியாகும். இப்படியே இருந்தா அவன் எண்ணமே கொன்று புதைச்சிடும். பேசாம எங்காவது வேலை கிடைக்குமாணு பார்ப்போம். என தேடுதல் வேட்டையை ஆரம்பித்தாள். அவள் தேடுதல் வேட்டையில் சில இடங்களில் வேலை கிடைக்காவிட்டாலும் சில இடங்களில் வேலை கிடைத்தது. ஆனால் சம்பளம் ரொம்ப குறைவாக இருந்தது.
அது நிச்சயம் தன் குடும்பத்திற்கு போதாது என்பது அவளுக்கு தெரியும். ஹோட்டல் மேனேஜ்மென்ட். இந்த கோஸை அவள் எடுத்ததே படிக்கும் போதே சம்பளம் என்பதால் தான். அந்த நிலையில் தான் அவள் குடும்பம் இருந்தது. பத்து வரை பள்ளி படிப்பு அவளுக்கு எந்த தடங்கலும் இல்லாமல் தான் சென்றது. அதற்கு காரணம் அவள் அப்பா. அரிசந்திரன் கட்டிட தொழிலாளி என்றாலும் உழைக்கும் பணத்தை மொத்தமாக மனைவியிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவார். அதனால் அந்த குடும்பம் எந்த கஷ்டமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் இரண்டு வருடத்திற்கு முன் ஒரு நாள் தந்தை வேலை செய்த இடத்திலே மயங்கி விழுந்து அவரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்ற போது தான் கழுத்து பகுதியில் கேன்சர் இருப்பது தெரிந்தது. முத்திய நிலை இல்லை என்றாலும் இதுவரை சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் வீட்டையும் இழந்து தான் அவரை உயிரோடு கொண்டு வந்தனர். ஆனாலும் அதன் பிறகு அந்த தந்தையால் அந்த வீட்டிற்கு பலன் கொடுக்க முடியவில்லை. அப்போது ஓவியா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.
படிப்பு முடிந்து CA ஜாயின் பண்ண வேணும் என்பது தான் அவள் ஆசை. ஆனால் படிக்க வைக்கவே முடியாத சூழல் ஏற்பட்டதும் படிக்கும் போதே சம்பளம் என்ற கல்லூரியின் விளம்பரம் பார்த்து இந்த தொழிலை தேர்ந்தெடுத்து படித்தாள். இவளின் உதவி தொகையையும் தாயின் சிறு வருமானத்தையும் வைத்து தான் அந்த இரண்டு வருடத்தையும் கடத்தினர்.
அப்போது எல்லாம் அந்த குடும்பம்பட்ட கஷ்டத்தை சொல்ல முடியாது. பல நாள் இருவேளை தான் உணவு. வருடம் ஒரு புது துணி கூட எடுக்க முடிந்தது இல்லை. வாடகை வீட்டை கூட குறைந்த விலை வாடகை வீடாக தேர்ந்து கொண்டார்கள். ஐந்து பேர் தங்க அது வசதியான வீடு இல்லா விட்டாலும் அந்த சின்ன கூட்டில் அடைந்து கொண்டார்கள். அப்படி வறுமையின் விழிம்பில் வாழ்ந்தவர்களுக்கு ஓவியாவுக்கு கிடைத்த இந்த அருமையான ஹோட்டல் வேலைக்கு பிறகே வாழ்க்கை மாற தொடங்கியது. அனைவர் மனதிலும் சிறு நிம்மதி கிடைத்தது. வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
அஷ்மோரா ஹோட்டல். அது சுற்றுலாதலத்தின் பக்கத்தில் அமைந்திருந்ததால் அங்கு பயணிகளின் கூட்டம் எப்போதும் அலைமோதி கொண்டே இருக்கும். பல நாள் அறை கேட்டு வருபவர்களுக்கு அறையை ஒதுக்கி கொடுக்க கூட முடியாத அளவு கூட்ட நெரிசல் இருக்கும். அப்படியான நேரங்களில் தங்கி கொள்ள என ஒரு பில்டிங்கை அவர்கள் ஹோட்டலுக்கு பக்கத்தில் புதிதாக கட்ட தொடங்கியிருந்தார்கள். அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சமைக்க என்று தான் முதலில் வேலைக்கு எடுத்தார்கள் ஓவியாவை. மாத சம்பளம் இருபதாயிரம் என்பது தான் பேச்சு. அப்புறம் அந்த பில்டிங் வேலை முடிந்து அங்கு பணிபுரிய ஆள் தேர்வு செய்த போது ஓவியாவுக்கும் வேலை கிடைத்தது. அந்த வேலையில் அவளுக்கு கிடைத்த சம்பளம் நாற்பதாயிரம்.
இந்த நாற்பதாயிரம் தான் ஒரு வருடமாக அந்த வீட்டை நார்மலாக வாழ வைத்திருந்தது. ஆனால் இயற்கை சீற்றம் அந்த வேலையையும் அழித்து விட்டது. இனி நிலமை சரியாகி அங்கு ஹோட்டல் அமைவது எல்லாம் லேசில் அமைந்து விட கூடியது இல்லை. அப்படி அமைந்தாலும் அதுவரை காத்திருக்க முடியாது. உடனே சம்பாதித்தாக வேண்டும் என்று தான் ஓவியா வேலை தேடவே ஆரம்பித்தாள். ஆனால் அவள் வாங்கிய சம்பளத்தில் நாலில் ஒரு பங்கை கூட தர இங்கு யாரும் முன்வராத போது சோர்ந்து போனாள்.
அப்படி சோர்ந்து தளர்ந்து போய் திண்ணையில் அமர்ந்திருந்த போது தான் அவள் வீட்டின் முன் வந்து நின்றான் தபால்காரன்.
தன் வீட்டின் முன் வந்து காகித கட்டுகளை பிரித்து தேடி கொண்டிருந்தவனை வினோதமாக தான் பார்த்தாள் ஓவியா. ஏதாவது அட்ரஸ் கேட்கவா இருக்கும் என்று தான் நினைத்தாள். ஆனால் அவன் வாயில் இருந்து தன் அட்ரஸ் சொல்ல கேட்டதும் திண்ணையில் இருந்து துள்ளி எழுந்து ஒடி அவர் அருகில் வந்தாள்.
முகத்தில் ஆர்வம்.
அவர் நீட்டிய காகிதத்தை சட்டென வாங்கி பார்த்தாள். முன்பக்க முகவரியை நோட்டமிட்டவள்,
“சரி தான். நமக்கு தான் வந்திருக்கு. “
என வியந்தவள்,
“அனுப்புனது யாரு?”
என திருப்பி பார்த்தவள் விழி வியப்பில் மொத்தமாக விரிந்தது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



