வணக்கம் வாசகர்களே!
முதல் முதல் முகுந்தில் எதுவோ பூக்கிறது. அதை அறிந்து கொள்கிறார் பாட்டி. ஆனால் பூத்த உணர்வு காதல் தான் என்று முகுந்த் உணர்ந்து கொண்டானா?
முதல் முதல் முகுந்தில் எதுவோ பூக்கிறது.
பால்கனியில் நின்று தன் மென்மையான உணர்வுகளை மீட்டிக் கொண்டிருந்தவன் அருகில் நெருங்கி வந்தாள் அவன் பாட்டி காந்தாரி.
மென்மையாக பேரனின் கழுத்தில் தொட்ட போது தான் உணர்வு பெற்றவன் போல,
“பாட்டி நீங்களா?”
என அதிர்ந்து கேட்க,
“என்னடா பேராண்டி. ஒரு நாளும் இல்லாம இன்று ஒரு மணி நேரம் என்ன ஒரே இடத்துல நிக்குறா? அப்படி என்னடா யோசனை.”
“ஒண்ணுமில்ல பாட்டி. மனசு என்னவோ போல இருந்துச்சு. அதான் பூ செடியை பார்த்துட்டு இருந்தேன்.”
என்றதும் பேரனை பிடித்து இழுத்து திண்ணை பக்கம் கொண்டு வந்தவள் அவனை பக்கத்தில் இருத்தி,
“நான் சொல்லட்டுமா? உன் மனசு எப்படி இருக்குணு.”
பாட்டி கண்ணடித்து கேட்க,
“என்ன ஜோஸியமா?”
என சொன்னவனை பார்த்து சிரித்த பாட்டி,
“ அப்படியே வச்சிக்க…”
என்றாள் கூலாக…
“என் மனசை அப்படியே சொல்லுவீங்க.”
நம்ப முடியாமல் மறுபடியும் கேட்டான்.
“ஆமாடா பேராண்டி.”
என்ற பாட்டி சற்றும் தயங்காமல் சொல்ல ரெடியாக,
“ம்…சரி சொல்லுங்க பார்ப்போம்.”
என இவனும் ஆர்வமாக ரெடியாகினான். அவன் முகத்தை புன்சிரிப்போடு பார்த்த பாட்டி,
“நான் சரியா சொல்லிட்டா. பாட்டி என்ன செய்ய சொன்னாலும் மறுக்காம செய்யணும்.”
என்றாள் கறாராக…
“அதை அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல என் மனசை சொல்லுங்க.”
நழுவும் மீனாக பேசிய பேரனை பார்த்து சிரித்த பாட்டி,
“அது எல்லாம் இல்ல. நான் சரியா சொன்னா, பாட்டி எது சொன்னாலும் மறுக்காம செய்வேணு சொல்லு. பாட்டி சொல்றேன்.”
என்றாள் மறுபடியும் கறாராக…
“ம்…சரி செய்றேன். நீ சொல்லு.”
என்றான் மனதில் இருந்த ஆர்வத்தை வெளிகாட்டாமல், பேரனின் கண்ணில் இருந்த ஆர்வத்தை பார்த்தவாறே,
“ம்… சொல்றேன்.”
என்றவள் ஜோஸியம் சொல்வது போல் அவள் கையை எடுத்து அதன் விரல் நுனியை பிடித்து அதில் எதையோ தேடிப் பார்த்தவாறு,
“பையன் எதுலயோ ரொம்பவே மாட்டிட்டான் போல தெரியுதே.”
என்றாள் சந்தேகப்படும் தோரணையில், பாட்டி சந்தேகப்படுகிறாள் என உணர்ந்தவன் என்ன சொல்ல என தெரியாமல் திருதிருவென விழிக்க ஆரம்பிக்க,
பாட்டி அவனை ஒர கண்ணால் பார்த்தார்.
பாட்டியின் பார்வையை பார்த்தவன் அவசரமாக,
“விளையாடாத பாட்டி. நான் எங்க மாட்டுனேன். நான் எதுலயும் மாட்டல.”
என்றதும் தலையில் அடித்தவள், புரியாமல் பேசும் பேரனை நினைத்து நொந்தவளாக…
“மாட்டலணா சொல்லுறா?”
என்றாள் நம்பிக்கை இல்லாதவள் போல…
“ஆமா நான் எங்கேயும் மாட்டல.”
என்றான் மறுபடியும் உறுதியோடு,
“ அப்படினா நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு.”
“சரி. கேளுங்க.”
அவனும் ரெடியாக,
“ம்… எப்பவும் எதையோ பறி கொடுத்தது போல இருக்குமே…” என நிறுத்த,
சட்டென நிமிர்ந்து பாட்டியை அதிர்வோடு பார்த்தான். அவனை பார்த்து “சரிதானே” என்பது போல கண்ணடிக்க, தடுமாறி போனவனாய் உறைந்து போய் விழி விரிய அமர்ந்திருந்த பேரனை பார்த்து அர்த்தத்தோடு சிரித்தவள்,
“யாரையோ மனசு தேடுறது போல மனசு பரபரக்குமே… ரொம்ப பிடிச்சதே பக்கத்துல இருந்தாலும் கண்ணு வேற எதையோ பார்க்க விரும்புறது போல அலை பாயுமே.”
பாட்டி முகுந்தின் மனதுக்குள் போய் படம் பிடித்து விட்டு வந்தது போல் ஒவ்வொன்றையும் சொல்ல தொடங்க, முகுந்தனால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. இதற்கு மேல் இருப்பதும் சரியாகாது என உணர்ந்தான். ஆனால் பாட்டி சொல்லி கொண்டே போனாள்.
“ பாட்டி என்ன அப்படியே சொல்லுது என்று நினைக்க மட்டும் தான் தோன்றியது. இதற்கு மேல் இருந்தால் பாட்டி கேள்வி கேட்டே பாடாய்படுத்தி விடும் என தோன்ற சட்டென எழுந்தாள், அவன் கையை பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்தியவள், அவன் காதுமடல் அருகில் குனிந்து,
“படுத்ததும் தூக்கம் வராம படாபடுத்துமே.”
என கேட்க, திருதிருவென விழித்தான் அவன்.
“ பசி எடுத்தாலும் சாப்பிட முடியாது. பார்க்கிற இடம் எல்லாம் வெறுமையா தோன்றும். இப்படி சொல்லிட்டே போகலாம். நான் சொன்ன அனைத்தும் உண்மை தானே பேராண்டி.”
என நிறுத்த, அவளை வியப்போடு பார்த்தவன்,
“எப்படி பாட்டி. அப்படியே புட்டு புட்டு வைக்குறா?”
என்றான் மொத்தமாய் வியந்தவனாய்…
“தெரியும்டா. பிஸ்னஸ் பிஸ்னஸ்ணு நீ ஒடும் போதே தெரியும். இப்படி ஒரு நாள் வந்து வானையும் பூமியையும் பார்த்துட்டு நிப்பாணு.”
“என்ன பாட்டி சொல்லுறா? நீ அப்பவே நினைச்சியா?”
நம்ப முடியாமல் கேட்ட பேரனை குறும்போடு எதிர்கொண்ட பாட்டி,
“ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னாலயே எதிர்பார்த்தேன். நீ கொஞ்சம் லேட் தான். உன் அப்பன் இருபத்து ஏழு வயசுலயே இப்படி வந்து நின்னுட்டான். அப்புறம் உன் அம்மாவை கட்டி வச்ச பிறகு தான் எல்லாம் தெளிஞ்சி நார்மல் ஆனான்.”
என்றதும் திகைத்தவன், சற்று கோபத்தோடு,
“அப்படினா மேரேஜ் பண்ணிக்க தான் இப்படி இருக்குணு சொல்லுறியா?”
என வெறுத்து போய் கேட்க,
“மேரேஜ் பண்ணிக்கிறியோ இல்லையோ… உன் மனசு துணையை தேட ஆரம்பிச்சிடுச்சி. அது மட்டும் நிஜம்.”
“நீங்க என்ன சொல்லுறீங்க. எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்ல. சும்மா தெரிஞ்சது போல பேசாதுங்க.”
என படபடப்போடு அவசரமாக எழ,
“இல்லாமலா? ஒரு மணி நேரம் ரோஜா செடியையே முறைச்சிட்டு இருந்தா. உனக்கும் அந்த நோய் வந்திடுச்சி பேராண்டி. வந்திடுச்சி. ஆனா ஏதோ ஒரு வெறுப்பு உன்னை அதை உணராமல் இருக்க வச்சிருக்கு. அம்புட்டு தான்.”
“ஆமா வெறுப்பு தான். மேரேஜ் என்றாலே வெறுப்பு தான்.”
“ஏண்டா உனக்கு மேரேஜ் மேல அம்புட்டு வெறுப்பு. யாரையாவது விரும்புனியா? அவா விட்டுட்டு போயிட்டாளா? அதான் அந்த வாழ்க்கை மேல வெறுப்பா இருக்கிறியா?”
என்று கேட்ட பாட்டியை முறைத்தவன்,
“என்ன பாட்டி நீ இப்படி எல்லாம் பேசிட்டு. எனக்கு இதுவரை அந்த மாதிரி எண்ணங்களே வந்தது இல்லை. பொண்ணுங்களை பார்த்தாலே வெறுப்பா இருக்கு இதுல காதலிச்சிட்டாலும்.”
“ஏண்டா இவ்வளவு கோபம்.”
“நான் பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் ரிலேஷன்ஷிப்ல உண்மையா இல்ல பாட்டி. இன்று ஒருத்தன் நாளை ஒருத்தன்னு போயிட்டே இருக்காங்க. சின்ன சண்டைக்கே பெரிசா ரியாக்ட் பண்ணிட்டு பிரிஞ்சி போறாங்க. இதை பார்த்து பார்த்து அந்த வாழ்க்கைக்குள்ள போகவே மனசு வரமாட்டேங்குது பாட்டி.”
“எல்லா பொண்ணுங்களும் அப்படி இருக்க மாட்டாங்க பேராண்டி. நிறைய நல்ல பொண்ணுங்களும் இருப்பாங்க.”
“எங்க இருக்காங்க. இந்த சங்கீதா பொண்ணு கூட இதோட ஆறு பேரை மாத்தியாச்சு. சும்மா இரு பாட்டி. இப்போ இங்கே யாருமே உண்மையா இல்லை.”
“பொண்ணுங்களை மட்டும் சொல்லாதடா பசங்களும் அப்படி தான் இருக்காங்க.”
“நான் இல்லணு சொல்லல பாட்டி, ஆனா நான் அப்படி இல்ல. அதனால தான் மனசு அது பக்கம் போக மாட்டேங்குது.”
வெறுத்து போனது போல உடைந்து சொன்ன பேரனை அழுத்தமாக பார்த்தவள்,
“உண்மையை சொல்லு. ஒரு பொண்ணு கூட உன் மனசுக்கு பிடிச்ச படி இல்லையா?”
என அவன் விழியை ஊடுருவ , பாட்டியை நிமிர்ந்து பார்த்தவாறே அவர் கண்களை கூர்மையாக நோக்கியவன் மனதுள் சட்டென வந்து போனாள் ஓவியா.
அவள் மனதில் வந்து போனதுமே முகுந்தன் விழிகள் திருதிருவென முழிக்க ஆரம்பிக்க, அவனை அப்படியே கூர்ந்து பார்த்தவள் மறுபடியும்,
“நல்லா யோசிச்சு சொல்லு. இந்நாள் வரை உன் மனசு தேடுனது போல ஒரு பொண்ணை நீ பார்க்கலயா?”
பாட்டி திரும்பவும் அதே கேள்வியை கேட்க,
மறுபடியும் ஒரு முறை அவன் மனதிலும் சிந்தனையிலும் வந்து போனாள் ஓவியா.
ஓவியாவின் உருவம் அவனுள் நிழலாடியதுமே சட்டென பாட்டியிடமிருந்து எழுந்து அறையை நோக்கி ஓடினான். இப்போதும் பாட்டியின் குரல் பின்னால் ஒலித்துக் கொண்டே இருந்தது. திரும்பி பார்க்காமல் படபடப்போடு உள் நுழைந்தவன்,
சட்டென கதவை பூட்டிவிட்டு அதில் சாய்ந்து நின்றவாறு கண்மூடி கொண்டான். இப்போது அவன் இரு கரங்களுமே அதிவேகமாக துடித்து கொண்டிருந்த இதய பகுதி மேல் அழுத்தி கொண்டது. நொடி பொழுதில் உற்பத்தியாகி மலர்ந்த வியர்வை பூக்களை துடைக்க மனமில்லாமல் அப்படியே சிலையாக நின்றான்.
மறுபடியும் அவன் கண்கள் சட்டென மூடி கொள்ள, மெல்ல தலைசாய்த்தான். அடுத்த நொடி,
நச்சென மின்னல் வெட்டுவது போல வந்து போனது மறுபடியும் அவள் முகம்.

“அப்படினா பாட்டி சொல்லுறது போல நம்ம மனசும் ஓவியா பக்கம் தான் போகுதா? அவளை நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேனா? இல்லை. இல்லை. அவள் எனக்கு நல்ல ஒரு பிரண்ட் அவ்வளவு தான்.” அன்று முழுதும் அப்படி சொல்லியே அவனை தேற்றினான். ஆனால் மறுநாள் அலுவலகம் வந்ததும் அவன் கண்கள் அவளையே தேடுவதை உணர்ந்து நொந்து போனான்.
“இது என்ன முட்டாள்தனம். தன் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண் மேல் தனக்கு காதலா? அது எப்படி வர முடியும். இதை போய் அவளிடம் சொன்னால் சிரிப்பாள். என்னை எள்ளி நகையாடுவாள். பாட்டி சொல்லுதுணு தப்பு தப்பா யோசிச்சு எதையாவது செய்திட கூடாது.”
என தனக்கு தானே உறுதியேற்று கொண்டு தன் அறைக்கு வந்தான். ஆனால் அந்த ரோலிங் செயரில் அமர முடியவில்லை. இதுவரை பஞ்சு மெத்தை போல் இருந்த அந்த இருக்கை இன்று முள்படுக்கை போல் இருந்தது. மனமோ அவளிடம் போ போ என்றது. கண்களோ அவள் உருவை காண தவமிருந்தது. சட்டென எழுந்து அங்குமிங்கும் நடந்தான்.
அதே நேரம் இவனின் மாற்றம் தெரியாமல் சில பைல்ஸ்ஸோடு உள்ளே வந்தாள் ஓவியா. அவளை கண்டதும் என்றும் இல்லாத ஒரு பதட்டம் நிலவ, அது அவளுக்கு தெரிந்து விட கூடாதே என்று ஓடி போய் செயரில் அமர்ந்து கொண்டான்.
என்றாலும் அவனில் மாற்றம் சட்டென தெரிய, நெளிந்து கொண்டு அமர்ந்திருந்தவனை வினோதமாக தான் பார்த்தாள் பெண்ணவள்.
“என்ன?… என்ன சார். ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. உடம்புக்கு எதுவும் முடியலியா?”
என சட்டென நெருங்கி வர, கை சைகையால் அவளை தடுத்தவன்.
“இல்ல. நெருங்கி வர வேணாம். எனக்கு எதுவுமில்ல… நான்… நல்லா தான் இருக்கேன்.”
என ஒரு தினுஷாய் ரியாக்ட் பண்ண குழப்பத்தோடு தான் அவனை பார்த்தாள். ஆனால் அதற்கு மேல் கேட்க முடியாமல் பைல்ஸை அவன் மேஜை மீது வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
“என்ன இது அவா நெருங்குனாலே மனசு ஏன் இந்த அளவு தந்தியடிக்குது. அந்த இடிபாடுக்கு நடுவுல அவளோட நெருங்கி இருந்த போதும் ஹார்ட் இப்படி தான் துடிச்சிது படு வேகமா.”
நெஞ்சு பகுதியில் கை வைத்து வருடியவன்,
“சம்திங் ராங். எனக்கு என்னமோ ஆகுது. பாட்டி சொன்னது போல நானும் காதலிக்க ஆரம்பிச்சிட்டேனா? அதுவும் என் கம்பெனியில வேலை பாக்குற பொண்ணை. நளன் கூட திலகாவுக்காக இப்படி தானே துடித்தான். அப்படினா நான்… நான்… ஓவியாவை காதலிக்கிறேனா?”
உண்மையை முகுந்தன் உணர்ந்த நேரம்,
குழப்பத்தின் உச்சத்தில் போய் தன்னுடைய செயரில் அமர்ந்தாள் ஓவியா. மனசு தந்தியடித்தது.
“பைத்தியகாரி. பைத்தியகாரி. அவருக்கு முடியலனா ஒடி பக்கத்துல போயிடுவியா? அவர் மேல அனல் அடிக்குதானு பார்க்க தானே போனா? உனக்கு அவரை தொட என்ன உரிமை இருக்கு. அவர் என்ன நினைச்சிருப்பார். கொஞ்சம் இடம் கொடுத்தா இப்படி எல்லாம் செய்ய ரெடியாகிடுவியானு என்னை தப்பா தானே நினைச்சிருப்பாரு. ஐயோ…”
ஓவியா புலம்பி கொண்டிருந்த அதே நேரம்,
பிரபலமான டாக்டர் சந்திரசேகரன் முன் அமர்ந்திருந்தான் நளன். இன்று அவன் வேலைக்கு வரவில்லை. இந்த டாக்டரை பார்க்க காலை 6 மணிக்கே வந்து காவல் இருக்கிறான். எல்லாம் திலகாவுக்காக தான். அவள் கால் காயங்கள் முழுமையாக ஆறி விட்டாலும் செக்கப் செய்வது அவசியம் என உணர்ந்தே அவரை பார்க்க வந்தான். வந்தவன் அவளுக்கு இதற்கு மேல் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கேட்டு தெரிந்து கொண்டே தான் கிளம்பி போனான். ஏனோ மனசு நன்றாக இல்லை. அதனால் அதன் பிறகும் அலுவலகம் செல்லாமல் வீட்டை நோக்கியே நடந்தான்.
ஆனால் அலுவலகம் நுழைந்த நொடியில் இருந்து இந்த நொடி வரை திலகாவின் கண்கள் அவனை தான் தேடின. நேற்று அவனை காயப்படுத்தி அனுப்பிய பின் இந்த நொடி வரை அவள் முன் வராதது அவஸ்தையாக இருந்தது. என்ன தான் அவனை ஒட ஒட விரட்டினாலும் அவனை பார்க்க மனசு ஏங்குவதை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவனை பார்க்க வேண்டும். ஒரு முறையாவது பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது அவன் சிரிக்க வேண்டும் அவ்வளவு தான். நேற்று அவன் கிளம்பி போன அடுத்த நொடியில் இருந்து இதற்காக தான் காத்திருக்கிறாள். ஆனால் மறுநாள் மதியம் தாண்டியும் அந்த தரிசனம் கிடைக்காமல் கலங்கி விட்டாள். ஒரு வேலையும் ஓடவில்லை. காலையில் இரண்டு முறை உள் வந்து வேலையாகாமல் ஓவியா திரும்பியாகி விட்டது.
இனி வந்தால் பிடித்து கொள்வாள் என்று தெரியும். ஆனாலும் மனது வேலை பால் செல்லவில்லையே. அவனை நோக்கி நாடுதே. அவளும் என்ன செய்வாள். பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் விம்மி அழுத நேரம் சரியாக அந்த அறைக்குள் நுழைந்தாள் ஓவியா.
தோழியின் கண்கள் நிறைய கண்ணீரை கண்டதும் துடித்து போனவள் ஒடி வந்து அவள் தலையை மார்போடு தழுவி கொள்ள, அந்த அணைப்பு நிறுத்த முடியாமல் மறுபடியும் வலியை கூட்ட, திலகாவின் அழுகை அதிகமானது.
“என்னடியாச்சு. எதுக்குடி அழுறா?”
புரிந்து கொள்ள முடியாமல் துடித்தவளை பார்த்து இன்னுமே அழுகை வந்தது. நிறுத்த முடியாமல் குலுங்கி குலுங்கி அழுகிறவளை பார்க்க சகிக்காமல்,
“யாராவது மனசு நோகப் பேசிட்டாங்களா? சொல்லுடி. யார்?… யார்? யார் உன்னை திட்டுனது. அந்த முகுந்தனா? அவனா உன்னை திட்டுனது.”
தோழி கோபத்தின் உச்சத்தில் கொதித்து போய் கேட்க, அழுகையினூடே சொல்ல முடியாமல் அவளும் தடுமாற்றமாய் அவள் இடையை மறுபடியும் இறுக்கி நார்மலாக்க போராடி தோற்றவள் தாங்க முடியாமல் விம்ம,
இப்போது ஓவியாவுக்கு கோபமோ விண்ணை தாண்டியது. “இவள் இவ்வளவு அழுகிறாள் என்றால் எல்லாம் அந்த பிஸ்னஸ்மேன் முகுந்தனால தான் இருக்கும். அவனை தவிர வேறு யாரும் என் திலகாவை திட்ட மாட்டார்கள்.”
என அவளாகவே எண்ணி கொண்டு,
“இருடி. இப்ப வரேன்.”
என இடுப்பை சுற்றி வளைத்திருந்த அவள் கையை எடுத்து விட்டு விட்டு அவள் அழைக்க அழைக்க பதில் பேசாமல் அந்த அறையில் இருந்து வெளியேறினாள். அவள் போன வேகமே இவள் அடுத்து முகுந்தன் அறைக்கு தான் செல்லுவாள் என உணர்த்த பதறி போனாள் திலகா.
“இல்லடி. அவர் எதுவும் சொல்லல…”
திலகாவின் குரல் காற்றில் தான் கரைந்தது. ஓவியா அதன் முன் முகுந்தனின் அறையை அடைந்திருந்தாள். அடிகுரலில் உறுமலோடு அனுமதி கேட்டவள் உள்நுழைந்த வேகத்தில் மளமளவென பேசி விட, முன்னால் இருந்த அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
“ நீ… நீ… என்ன சொல்லுறா? நான் திலகாவை திட்டுனேனா? நான் எதுக்கு திட்டணும். பிஸ்னஸ் பற்றி கேட்டேன். டீற்றியல் கொடுத்தாங்க. அதை செக் பண்ணிட்டு கரெக்ஷனை சொன்னேன். அவங்களும் புரிஞ்சிகிட்டாங்க. மற்றபடி நான் எதுவும் பேசல.”
அப்பாவி போல் தான் பேசினான்.
. “நடிக்காதுங்க சார். நீங்க யாரு. தப்பு போட்டா எப்படி பேசுவீங்கணு எனக்கு நல்லா தெரியும். இந்த ஆறு மாசத்துல நானும் பாத்துட்டு தானே இருக்கேன். என்னை கூட எத்தனை முறை திட்டியிருக்கீங்க. அது கூட பரவாயில்ல. எனக்கு தான் திட்டு வாங்கி வாங்கி மரத்து போச்சு. ஆனா அவளுக்கு அப்படி இல்ல. அவளை யாரும் இதுவரை திட்டுனது இல்ல. திட்டுறது போல அவா நடக்கிறது இல்லை. அவளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு. உங்க திமிர்தனத்தை எனட்ட காட்டுங்க. என் குடும்ப சூழ்நிலையால நான் பொறுத்துக்கிறேன். தயவு செய்து அவளுட்ட காட்டாதுங்க. அவா ரொம்ப நொறுங்கி போய் இருக்கா. அவளை தேற்றி வெளிவுலகத்துக்கு கொண்டு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டேனு உங்களுக்கு தெரியாது. புரிந்து கொள்ள உங்களால முடியாது. காரணம் நீங்க வளர்ந்த சூழல். ஆனா நாங்க அப்படியில்ல ஒவ்வொரு இடத்துலயும் விழுந்து விழுந்து எழும்பி வந்தவங்க. அந்த இடத்துல எல்லாம் யாரும் திட்டிட கூடாது என்று பார்த்து பார்த்து வாழ்ந்தவங்க.”
“அதுலயும் திலகா தன்மானம் உள்ள பொண்ணு. அவளை மதிப்பில்லாம பேசுற இடத்துல அவா இருக்கிறதும் இல்ல. அதன் பிறகு அந்த பக்கம் போகிறதும் இல்ல. அது உங்களுக்கு தெரியுமா? பிளீஸ்… பிளீஸ்… இதற்கு மேல அவா இப்படி அழுறது போல பேசிடாதுங்க. எது திட்டுறதா இருந்தாலும் என்னை கூப்பிட்டு திட்டுங்க. நான் வாங்கிக்கிறேன். அவளுட்ட பதமா எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன். அவளை மறுபடியும் ஒரே அறைக்குள்ள முடக்கிடாதுங்க…”
சொல்லி விட்டு அதிவேகமாக அவள் கிளம்பி இருக்க, சூறாவளி ஒன்று சுழற்றி அடித்து சென்றது போல வெளிறி போய் இருந்தான் முகுந்தன். அவனுக்கு எதுவும் புரியவில்லை. எதற்கு வந்தாள்? ஏன் திட்டினாள்? என்றும் விளங்கவில்லை. திலகா அழ அப்படி நான் எதுவும் பேசவில்லையே. இந்த டீற்றியல் தப்பா இருக்குங்க. அதை மட்டும் கொஞ்சம் சரி பாருங்கணு தானே சொன்னேன். இதுல அழுற அளவு அப்படி என்ன இருக்கு?
“சரி அவங்க அழுதாங்க ஓ.கே. அதுக்காக இவா என்னை இப்படி எல்லாம் பேசுவாளா?”
முகுந்தனால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஒரு முறை அவள் பேசியதை மனதில் ஓடவிட்டவாறு கண்மூடி பின்பக்கமாக சாய்ந்தவாறு அமர்த்திருந்தான்.
“தைரியம் தான். இந்த தைரியம் எப்படி? வந்தது. இதுவரை. இதுவரை யாரும் தன் முன் இப்படி வந்து பேசியதே இல்லை. இவளுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது.”
நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. எவ்வளவு நேரம் அந்த இறுக்கத்தோடே கண் மூடி இருந்தானோ தெரியவில்லை. மறுபடியும் வெளியில் ஓவியாவின் குரல் கேட்டது.
“எக்ஸ்கூஸ்மி சார்…”
என்றதும்,
“மறுபடியுமா?”
என சட்டென கண் திறந்தவன் கண்களில் முகத்தை அப்பாவிதனமாக வைத்து கொண்டு நின்ற ஓவியாவின் முகம் விழுந்தது.
மெல்ல தன்னை நார்மலாக்கி நிமிர்ந்து அமர்ந்தவன்.
“இன்னும் முடியலியா? சரி வந்து உட்கார்ந்தே திட்டுங்க.”
என முன்னால் இருந்த செயரை காட்ட,
“சாரி சார்…”
என சொல்லியவாறே தயக்கத்தோடு வந்து இருந்தாள்.
“சாரியா? சாரி கேட்கிறீங்க. தப்பு பண்ணுனது நான்ம்மா. நீங்க எதுக்கு சாரி கேட்குறீங்க. உங்க தோழியை திட்டி அழ வச்சிருக்கேன். அவங்களே இப்போ தான் வெளிவுலகம் வந்திருக்காங்க. மறுபடியும் அவங்களை நான் கூண்டுல கொண்டு போய் அடைக்க போறேன். அப்போ ஒரு வில்லன்ட்ட நீங்க ஏம்மா சாரி கேட்கிறீங்க. நான் வேணா வந்து உங்க தோழிட்ட சாரி கேட்கவா?”
“போதும் சார். தெரியாம பேசிட்டேன். அவளோட கண்ணுல கண்ணீரை கண்டதும் தப்பா முடிவெடுத்துட்டேன். இந்த ஆபீஸ்ல என்னை தாண்டி அவளை திட்டணும்னா நீங்க மட்டும்தாணு தோணுச்சு. அதான் கொஞ்சம் ஆத்திரப்பட்டுட்டேன்.”
“கொஞ்சம் இல்லமா? நிறைய…”
“ம்… கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டேன். சாரி… அழுகையை பார்த்ததும் மதி மயங்கிடுச்சி. நீங்க மட்டும் தான் அவளை அழ வைக்க முடியும்னு நினைச்சேன். ஆனா வேற ஒருத்தரும் இந்த ஆபீஸ்ல இருக்காருணு இப்போ தான் தெரிஞ்சிட்டேன். சாரி. சாரி. என்னை மன்னிச்சிடுங்க.”
மூக்கை சுருக்கி கண்ணை உருட்டி அவள் கேட்ட சாரியில் நிஜமாக உருகி தான் போனான். இதுவரை மனதுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபம் எங்கு போனது என்று கூட தெரியவில்லை. மயில் இறகு கொண்டு மனதை தடவுவது போன்ற அவள் மெல்லிய உரையாடலில் தன்னை தொலைத்தவனாக அவளையே பார்த்தான்.
தான் இதுவரை இப்படி இருந்ததே இல்லையே.
எண்ணும் போதே மனசு விரிந்து சிரிப்பு வந்தது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



