நள்ளிரவில் கதவைத் தட்டிய அந்த மர்மப் பெண் யார்?
அன்று பகல் முழுவதும் ஒயாத வேலை உடல் அலுப்பு தீர ஒரு குளியலை போட்ட பின் நன்றாக தூங்கி எழும்பினால்
சரியாகி விடும் என சாப்பிடாமலே வந்து கட்டிலில் விழுந்தேன்.
மெட்ராஸ் வாழ்க்கை எவ்வளவோ சௌகரியத்தை தந்தாலும் இயந்திரதனமான வாழ்க்கை முறை மனிதனை ரொம்பவே சோர்வடைய வைத்து விடுகிறது.
சாப்பிட கூட தோன்றாமல் குப்புற மெத்தை மேல் விழுந்த எனக்கு அடுத்த பத்தாவது நிமிடமே கண்கள் சொக்கின.
மெல்ல மெல்ல என் கண் உறக்கத்திற்கு அடியெடுத்து வைத்த நேரம் வெளியே யாரோ குரல் கொடுக்கும் ஓசை கேட்டது.
சலிப்பாக இருந்தது. புரண்டு படுத்தும் ஏனோ கண்களை திறக்க மட்டும் தோன்றவே இல்லை.
ஆனாலும் விடாமல் குரல் ஒலித்து கொண்டே இருந்தது.
யாரா இருக்கும்.. இந்த நேரம் ஏன் வந்து படுத்துறாங்க.
முனங்கலோடே கண் திறந்தேன். நேரே என் பார்வை அடுத்து சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் மேல்
தான் சென்றது. மணி இரவு பதினொன்று. இந்த நேரம் யாராயிருக்கும்.
யோசனையோடு தான் வெளி வந்தேன். ஒரு நாற்பது வயது மதிக்கதக்க ஒரு பெண்மணி. முடியெல்லாம் கலைந்து
சிறு தூறலில் நனைந்து பார்க்கவே பரிதாபமாக துணி பை ஒன்றை நெஞ்சில் அணைத்தவாறு முகம் நிறைய கலவரத்தோடு நின்றிருந்தாள். எனக்கு அவள் யார் என்றே தெரியவில்லை.
ஆனாலும் தெரியவில்லை போ என்று விரட்ட மனதில்லை. அவளின் நிலை என்னை இரக்கம் கொள்ள வைத்தது.
யாரம்மா நீ? . இந்த நேரம் என் வீட்டுல வந்து எதுக்கு நிக்குறா? குழப்பமாக தான் கேட்டேன்.
இங்க… கனியழகன்னு…
என இழுத்தாள் அந்த பெண்.
நான் தான். நீங்க..
என்றேன். அது யார் என அறிந்து கொள்ளும் நோக்கோடு…
நான் தாமரை. திருநெல்வேலி பக்கத்துல ஒரு சின்ன கிராமம். உங்க அப்பா தான் உங்களை வந்து பார்க்க சொன்னாங்க. வழி தெரியாம பகல் முழுசும் அலைஞ்சுட்டேன். கடைசியா ஒரு ஆட்டோகாரர் தான் என் மேல இரக்கப்பட்டு யார் யாருட்ட எல்லாமோ
கேட்டு உங்க வீட்டுல இறக்கி விட்டுட்டு போனாரு. அதான் இந்த …இந்த ராத்திரி நேரத்துல…
அந்த பெண் பகல் முழுதும் அட்ரஸ் தெரியாமல் அலைந்து திரிந்திருப்பதை அவள் வாடி முகமே காட்டி விட, குழப்பத்தோடு…
அவள் நீட்டிய காகிதத்தை வாங்கி கொண்டு திரும்பி வெளிச்சத்தில் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.
அன்புள்ள கனிக்கு, ஆயிரம் ஆசீர்வாதங்களோடு அப்பா எழுதி கொள்வது. இந்த காகிதம் கொண்டு
வரும் பெண். எனக்கு ரொம்ப தெரிந்த குடும்பத்துப்பெண். அவள் கெட்ட நேரம் குடும்பத்துக்கு ஆதாரமாய் இருந்த இரண்டு ஆண்களையும் அடுத்தடுத்து பறிக்கொடுத்துட்டா.

போன மாதம் மெட்ராஸ் வந்தப்ப தான் அவளோட ஒரே மகன் ஆக்ஸிடென்ட்ல இறந்தான். இப்போ அவளோட கணவர், உடல்நலகுறைவால போன வாரம் தான் மரணம் அடைந்தார். வீட்டுல அடுத்தடுத்த மரணம் அந்த பொண்ணை ரொம்பவே பாதிச்சிடுச்சி. நான் அவங்க வீட்டுல போய் பார்க்கும் போது ரொம்ப உடைஞ்சி போய் தான்
படுத்திருந்துச்சி. நான் தான் தேற்றி எழும்பி உட்காரவே வச்சேன். அடுத்து பத்து வயசுல ஒரு பெண் குழந்தை
கூட இருக்கு. இரண்டு பேருக்குமான எதிர்காலம் தெரியாம அழுதுட்டிருந்த பொண்ணை ரொம்ப கஷ்டப்பட்டு தேற்றி தான் அங்க அனுப்பி வச்சிருக்கேன்.
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம். அதுக்கு ஏதாவது உதவி செய்யலாம்ணு விசாரிச்சப் போது
தான். ஆக்ஸிடென்ட் நடந்ததால ஒரு சின்ன தொகை இவங்களுக்கு கிடைக்க கூடிய வழியை கண்டுபிடிச்சேன். என் மகனோட சாவுல கிடைச்ச பணம் வேணாம்ணு தான் அழுதுச்சி. நான் தான் இன்னும் ஒரு பொண்ணு உனக்கு
இருக்குணு வற்புறுத்தி அனுப்பி வச்சேன்.Tamil Mystery Story
அந்த பொண்ணுக்கு மெட்ராஸ் புதுசுப்பா. அதுக்கு அங்க ஒருத்தரையும் தெரியாது. அதான் உன்னை நம்பி அனுப்பி வச்சிருக்கேன். தயவு செய்து நீ
நாளைக்கு ஒரு நாளும் லீவு போட்டுட்டு அந்த பொண்ணோட போய் அந்த பணம் கிடைக்கிறது வரை கூட இருந்து எல்லா உதவியும் பண்ணு. அதற்கான டாக்குமென்ட் அட்ரஸ் எல்லாம் அந்த பொண்ணோட கையில இருக்கு. எப்படியாவது அவளுக்கு தேவையான எல்லா உதவியும் செஞ்சி அனுப்பி வச்சிடுப்பா.
இப்படிக்கு,
உன் அப்பா வரதராசன்.
என்று இருந்தது. என் கையில் இருந்த கடிதத்தையும் அந்த பெண்ணையும் மாறி மாறி பார்த்தேன். இரவு வெகு நேரமாகி விட்டது. அப்பா சொல்லுவது உண்மை தான்.
இந்த பெண் உடைந்து போய் தான் இருக்கிறாள். ஒரு நொடி தான் யோசித்தேன்.
நீ உள்ளால வாம்மா. வந்து முதல்ல குளிச்சி டிரஸ் மாற்று.
என வழியை விட்டு அகல, அந்த பெண் மிக மிக தயங்கியவாறு தான் உள்ளே வந்தாள். ரொம்ப தயக்கத்தோடு தான் நான் சுட்டிகாட்டிய குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். சிறிது நேரத்தில் வெளி வந்தவள் முன் சூடாக இரண்டு தோசையை நீட்டினேன்.
இல்ல… அதெல்லாம் வேணாம். வரும் போது சாப்பிட்டு தான் வந்தேன். எனக்கு நீங்க இந்த பணத்தை போய் வாங்க மட்டும் உதவிப் பண்ணுனா போதும்.
அவளின் தயக்கத்தை உணர்ந்த நான்.
அது விடிஞ்சா தான் செய்ய முடியும். மெட்ராஸ்ல்ல யாரும் இந்த அத்த ராத்திரியில ஆபீஸை திறந்து வைக்கிறது இல்லை. முதல்ல நீங்க சாப்பிடுங்க. அப்புறமா இந்த கட்டில்ல படுத்து தூங்குங்க. காலையில என்ன பண்ணலாம்ணுயோசிப்போம்.
என்றதும் ரொம்பவே தயங்கி தயங்கி தான் அந்த தட்டை வாங்கினாள். ஆனால் கொடுத்த இரண்டு தோசையையும் முழுதாய் உண்டு முடித்தாள். நான் அடுத்த தோசையை நீட்டியதும் மறுத்தாள். ஆனால் கண்ணில் எனக்கு இன்னும் பசி தெரிய வற்புறுத்தி கொடுத்து சாப்பிட வைத்தேன். அவளும் சாப்பிட்டு முடித்தாள்.
சரி. நீங்க கட்டில்ல படுத்திடுங்க. நான் தரையில படுத்துக்கிறேன்.
ஐயய்யோ வேணாம். நீங்க கட்டில்ல படுங்க.நான் தரையில படுக்கிறேன். என்றாள்.
நான் ஒரு பெட்ஷீட்டை தரையில் விரிக்க போக அந்த பெண் என்னை பாவமாக பார்த்தாள்.
புது இடம். நீங்க எதையும் யோசிக்காம மேல படுங்க. எனக்கு இது பழக்கம் தான். நான் கீழேயே படுத்துக்கிறேன்.
என படுத்தும் கொண்டேன். பெல்லாத தூக்கம் இருந்த அசதிக்கு உடனே வந்து விட தூங்கியும் போனேன். மறுநாள் காலை பால்காரன் மணியனின் சைக்கிள் சத்தம் கேட்டு தான் விழிப்பு வந்தது. எழுந்து கட்டிலை பார்த்தேன். அப்பெண்மணியை காணவில்லை. சட்டென ஒரு எண்ணம். ஒருவேளை நேற்று வந்த பெண்மணி என் கனவில் வந்த பிம்பமோ…
எண்ணும் போதே…
இருக்காது. அப்படி இருந்திருந்தா நாம எப்படி தரையில படுப்போம். தன் மனதில் தோன்றிய கேள்விக்கு நானே பதில் கொடுத்து விட்டு எழுந்து கிச்சனுக்கு போனேன். அங்கு யாருமில்லை. அப்படியே பின் பக்கம் வந்து முன்பக்கம் நுழைந்த போது முன்னால் இருந்த சுவரில் சாய்ந்து கொண்டு யாரோடோ பேசி கொண்டிருந்தாள்.
நான் வரதன் அண்ணன் புள்ளையை பாத்துட்டேன். தம்பி எல்லா உதவியும் செய்றதா சொல்லியிருக்கு. நான் காலையிலகிளம்பி போய் பணத்தை வாங்கிட்டு சாயந்தரமே கிளம்பி வந்திடுறேன். நீ பத்திரமா இரு.
என சொல்லியதிலிருந்து அந்த பெண் அவள் மகளிடம் தான் பேசுகிறாள் என்பதை தெரிந்து கொண்டேன். மெல்ல உள்ளே வந்து காலை கடன்களை
முடித்து விட்டு அந்த பெண் கொண்டு வந்த காகிதத்தை மறுபடியும் எடுத்து ஒரு முறை கூட படித்தேன். கடைசியாக
அடியில் எழுதப்பட்டிருந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினேன். சில விபரங்களை தெரிந்து கொண்டு மறுபடியும் அந்த பெண்மணியிடம் வந்தேன்.
பத்து மணிக்கு கிளம்பணும். நான் சாப்பிட தோசை போட்டு தரேன். சாப்பிட்டுட்டு ரெடியாகியிருங்க.. நான் என் ஆபீஸ்க்கு போய் லீவு எழுதி கொடுத்துட்டு வந்திடுறேன்.
என்றதும் என்னை கனிவோடு பார்த்தாள்.
அந்த நொடி அவள் கண்கள் எனக்கு ஆயிரம் நன்றி சொல்வது போல் இருந்தது. நான் சிரித்து கொண்டேன். நான் சொன்னது போல அவர்களுக்கு காப்பியும் தோசையும் கொடுத்து சாப்பிட வைத்து விட்டே கிளம்பி போனேன்.
சொன்னது போல வெளியில் நான் போன வேலைகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தேன். அந்த பெண்மணி
பதட்டத்தோடே வாசலிலே எனக்காக காத்திருந்தார்கள். நான் அவர்களை அழைத்து கொண்டு அவர்கள் போக வேண்டிய அலுவலகத்திற்கு சென்றேன். அவர்கள் வந்த காரியம் சிறப்பாய் முடிவதற்கு மாலை ஆறுமணி ஆகியிருந்தது.
மதியம் சாப்பாட்டை அந்த அலுவலகத்தில் உள்ள கேன்டீனில்
முடித்தோம். மாலையில் டீயையும் பன்னையும் வாங்கி கொடுத்தே பஸ்ஸ்டேன்ட்டிற்கு அழைத்து சென்றேன்.
அந்த பெண் கைகூப்பி என்னை கும்பிட்டாள்.
என்னம்மா இது… இது ஒரு சின்ன உதவி இதுக்கு போய் கையெடுத்து கும்பிடுறீங்க. நீங்க பஸ்ல இருங்க.
நான் தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வாரேன்.
என கிளம்பி ரோட்டோர கடைக்கு சென்றேன்.
தண்ணீர் பாட்டிலையும் சில சினேக்ஸையும் வாங்கிய
பின் அந்த பெண்மணி ஏறி அமர்ந்திருந்த அந்த பஸ்ஸின் பின் டோர் வழியாக உள்ளே வந்தேன். உள்ளே வந்த எனக்கு அந்த பெண் மறுபடியும் போனில் தன் மகளுடன் பேசுவது தெளிவாக கேட்டது.
வரதன் அண்ணன் புள்ள ரொம்ப தங்கமான புள்ள அம்மா. நானும் ரொம்ப பயந்து தான் வந்தேன். ஆனா அந்த புள்ள எனக்கு எந்த கஷ்டமும் தராம கூடவே நின்னு எல்லா ஆபீஸரையும் போய் பார்த்து கடைசியா செக்கையும் வாங்கிகொடுத்திடுச்சி. அது மட்டுமா நேற்றுல இருந்து என்னை பெத்த தாயா பாத்துடுச்சி. சமைச்சி போட்டு சாப்பிட வைக்கிறதுல இருந்து இன்று இப்போ காப்பி வாங்கி கொடுக்கிறது வரை அம்புட்டையும் மகனா நின்னு செய்துச்சு. ஆனா ஒத்த காசு எனட்ட வாங்கல.இந்த காலத்துல இப்படி ஒரு பிள்ளையானு தோணுச்சு. எங்க இந்த காலத்து புள்ளைங்க அப்பன் பேச்சை கேட்கிது. நாம போனா எப்படி நடத்துமோனு
நினைச்சேன். ஆனா வரத அண்ணன் சுத்த தங்கத்தை தான் வளர்த்திருக்காரு. இப்ப கூட நான் குடிக்க தண்ணி பாட்டில்
வாங்க போயிருக்கு. இன்னும் மூணு மணி நேரத்துல வந்திடுவேணு நினைக்கிறேன். பத்திரமா இரு கண்ணு.
என்றவாறு போனை வைக்க, சிரித்து கொண்டே அவங்க முன்னால போய் நின்னேன். என் கைகள் ரெண்டையும்
கட்டியா புடிச்சிட்டு கண்கலங்கிட்டாங்க. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு.
எப்படி வாழ போறேனு கலங்கி போய் இருந்தேன். உன் அப்பாவும் நீயும்
நல்ல வழியை காட்டிட்டீங்க. உங்க ரெண்டு பேரையும் காலத்துலயும்
மறக்க மாட்டேன்.
என உணர்ச்சி பெருக்கோடு அந்த பெண்மணி பேசிக்கொண்டிருக்கும் போது மறுபடியும் அந்த பெண்மணியின் செல் அலறியது. எடுத்து காதுக்கு கொடுத்த அந்த பெண்மணியின் முகம் இருளடைந்து பின் என்னை கண்ணீர் மல்க பார்த்தது. எனக்கு புரிந்தது.
இந்த பெண்மணிக்கு உண்மையை யாரோ சொல்லி விட்டார்கள் என்று,
அந்த பெண்மணி என்னை ஆர்வத்தோடு பார்த்தார்.
நைட் பதினொரு மணியை தாண்டி வந்து நீங்க என் வீட்டு வாசல்ல நின்னீங்க. உங்க கோலமும் நீங்க கொண்டு வந்த,காகிதமும் உங்களோட நிலையை எனக்கு தெளிவா சொல்லுச்சு.
நீங்க தேடி வந்த கனி நான் இல்லனு சொல்லி என்னால உங்களை திருப்பி அனுப்ப முடியல. நைட் தங்கிட்டு காலையில உண்மையை சொல்லி உங்களை நீங்க தேடி வந்த வீட்டுக்கு அனுப்பிடலாம்னு தான் பாத்தேன். காலையில எழுந்து நீங்க கொண்டு வந்த தொலைபேசி நம்பருக்கு தொடர்புக்
கொண்டு பேசினேன். நீங்க தேடி வந்த வரதராஜனோட பிள்ளை ஊர்ல்ல இல்லணு தெரிஞ்சிகிட்டேன்.
அவரோட மனைவியும் உங்களுக்கு உதவ தயாரா இல்லை. அதான் நான் என் ஆபீஸ்க்கு லீவு போட்டுட்டு உங்களுக்கு எல்லாம் செய்து கொடுத்து அனுப்ப தீர்மானிச்சி இது எல்லாம் செய்தேன். வாழ்க்கையில் எல்லாம் இழந்து ஒரு பிடிப்பு தேடி வந்த உங்களை திருப்பி அனுப்ப மனசில்ல. அதனால தான் இது எல்லாம் செய்தேன்.
சந்தோஷமா கிளம்பி போங்க. இதுக்க மேல உங்க வாழ்க்கையில எல்லாம் நல்லதே நடக்கும்.
என்ற என்னை ஒரு பார்வை பார்த்தார்கள் பாருங்கள். அந்த ஒற்றை பார்வைக்கே ஒராயிரம் உதவிகள் செய்யலாம் என்று தோன்றியது.
அன்று தான் நாம் செய்யும் சிறு உதவி மற்றவர் வாழ்வில் எவ்வளவு பெரிய நிம்மதியையும் சந்தோஷத்தையும்
கொடுக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
வாழ்வு ஒரு முறை தான் கலங்கிய கண்களுக்கு ஆறுதலாய் இருந்து விட்டு போவோமே.
முற்றும்
Tamil Mystery Novel


