வணக்கம் வாசகர்களே!
திருமணம் நிச்சயமான காதலி கதறி விட்டு போகிறாள்? இனி முருகன் என்ன செய்ய போகிறான். பிடிக்காத திருமணத்தை நிறுத்தி அவளை காப்பாற்ற போகிறானா? அல்லது என்றும் போல் காணாமல் போகிறானா?
திருமணம் நிச்சயமான காதலி கதறி விட்டு போகிறாள்?
பெரிய கும்பிடு போட்டு விட்டு முன்னோக்கி நடந்த செல்லம்மாவை தயக்கத்தோடு பார்த்து நின்றான் குள்ளன். செல்லம்மா மேல் சிறிது கூட கோபம் வரவில்லை. அவளிடத்தில் யார் இருந்தாலும் இது மட்டுமல்ல இதை விட மோசமாக கூட பேசி விடுவார்கள். ஆபத்தில் உதவாத உறவு எதற்கு? அவளுக்கு தேவைப்பட்ட நேரம் இவன் இல்லை. இவனை நம்பி எப்படி வாழ்க்கையை ஒப்படைப்பாள். அதிலும் குடும்பம், குலம், கோத்திரம் எதுவும் இல்லாத அனாதை. அப்படி இருந்தும் நேசித்தாள். கடைசியில் இவன் நம்பிக்கையை அல்லவா இழந்து நிற்கிறான். இவள் இந்த அளவு பேசி விட்டு தானே செல்கிறாள்.
என பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவாறு அங்கிருந்து சென்றான்.
இது நடந்த ஒரு வார முடிந்த பின் ஒரு மாலை நேரம் செல்லம்மாள் முருகனைத் தேடி ஆக்கர் கடைக்கு வந்தாள்.
முருகனை பார்த்ததும் சுற்றி இருந்தவர்களை கூட கவனியாதவள் போல ஓடி சென்று அவன் மார்பில் குத்திக்கொண்டு விம்மினாள்.
“ஏண்டா… அப்படி செஞ்சா.”
இதை தவிர வேறு ஒரு வார்த்தையும் வரவில்லை. ஆனால் கண்கள் தான் மழை பொழிந்து கொண்டே இருந்தது. அவளின் அழுகையும் மார்பில் குத்திய குத்தலுமே அவன் மேல் அவள் கொண்ட காதலை மறக்கா முடியாமல் சொல்லி விட,
பறட்டை உட்பட அங்கு வேலை செய்யும் அனைவரும் அவ்விடம் விட்டு நீங்கி சென்றனர்.
அழுகையும் ஆத்திரமும் முடிந்தவுடன் நெஞ்சில் புதைந்து விம்மினாள்.
“ஏண்டா அப்படி பண்ணுனா? என்னால தாங்க முடியலடா. நான் எத்தனை முறை சொல்லிட்டு போனேன். என்ன தாண்டா உனக்கு ஆச்சு. உண்மைய சொல்லுடா. நான் வேணாமா?வேணாம்ணு தான் ஒதுங்கிட்டியா? சொல்லுடா. ஆனா என்னால தான் முடியல. வீம்பா இதுக்க மேல கூட என்னால இருக்க முடியலடா. அதான் வெட்கம் கெட்டு வந்து உனட்ட புலம்புறேன். என்ன செய்யணு கூட தெரியல எனக்கு.”
“…………..”
“அப்பாட்டயும்,அம்மாட்டயும் எவ்வளவோ பேசி பாத்தேன். அவங்க கேட்கவே இல்ல. என்னால நீ இல்லாம வாழ முடியாது. இப்ப நான் என்ன பண்ணட்டும் சொல்லுடா. செத்திடவா… சொல்லுடா, ஒரேயடியா போய் சேரட்டுமா? உன்னை மனசுல ஏத்துகிட்ட பாவத்துக்கு நான் என்ன பண்ணட்டும். அதையும் நீயே சொல்லிடு.
என செல்லம்மா கதற, முருகன் என்ன செய்ய என தெரியாமல் குழம்பி நின்றான். அவள் கண்ணீரை துடைக்க முடியாமல் ஆறுதல்படுத்தவும் தெரியாமல் விக்கித்து நின்றான்.
கொண்டு வந்த வேதனை அத்தனையும் கொட்டி விட்டு மனதை சமாதானப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் செல்லம்மா.

அவள் இறக்கி வைத்த மொத்த பாரத்தையும் சுமக்க முடியாமல் வலியிலும், வேதனையிலும் துவண்ட முருகன் எந்த வேலையையும் செய்ய மனமின்றி குள்ளனிடம் சொல்லி.விட்டு வீட்டை நோக்கி விரைந்தான்.
போகும் வழி எல்லாம் செல்லம்மாவுக்காக அவள் பின்னால் நடந்த நாட்களே நினைவலையில் தவழ்ந்தது. ஒரு முறை திரும்பி பார்த்து விட மாட்டாளா? ஒருமுறை பேசி விட மாட்டாளா? என தவமிருந்த நாட்கள் தான் நினைவலையில் தவழ்ந்தது
அன்று ஆக்கர் கொண்டு வரும் போது செல்லம்மாவை இடித்ததால் ஏற்பட்ட முதல் சந்திப்புக்கு பின் அவளை காணும் ஆசையில் அவளின் முழு விபரத்தையும் பறட்டையிடம் சேகரிக்க சொல்ல மூன்றே நாளில் அவள் விபரம் எனக்கு கிடைத்தது. அதிலும் பக்கத்தில் உள்ள ஹோட்டலில் அன்று சமையலுக்கு தேவையான சரக்குகளை எடுத்துக் கொடுப்பது ஸ்டாக் வைத்திருப்பது போன்ற பணிகளை செய்து வருகிறாள் என்பது தெரிய மனது ரொம்பவே சந்தோஷப்பட்டது.
தொடக்கத்தில் என்னை காணும் போதெல்லாம் எரிந்து எரிந்து விழுந்தவள். ஒரு கட்டத்தில் என்னை காதலோடு பார்க்க தொடங்கினாள். பேசாவிட்டாலும் ஒரு வருடம் அவள் பார்வைகள் என்னிடம் பேசிக் கொண்டு தான் இருந்தது. வண்டியை விட்டு அவள் இறங்கியதும் முதல் பார்வையை டீக்கடை பெஞ்சில் நான் இருக்கிறேனா என பார்ப்பதில் தான் இருக்கும். அவள் விழிக்குள் அவன் உரு விழுந்த பின் தான் அவ்விடம் விட்டு நகர்வாள். அதிலும் என்னை திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் போவாள். இடை இடையில் நான் பின்னால் வருகிறேனா என திரும்பி பார்க்கவும் தயங்குவதில்லை.
ஒருவேளை என்னை ஸ்டாப்பில் காணவில்லை என்றால் யாரையோ தேடி நிற்பது போல நான் போவது வரை காத்திருப்பவள். நான் போனதும் பொங்கும் சிரிப்பை உதட்டுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கலங்கும் விழியால் என்னை கலங்கடித்து விட்டு தான் செல்வாள்.
கூட வரும் பெண்ணிடம் சட்டை கலர் சூப்பர் என்பாள்… என்னடி… தலையில உன் ஸ்டைலே காணல. இது என்ன சப்பி ஒரு வலிப்பு என்பாள். நேற்று ஏண்டி பிந்தி வந்தா என்பாள். நாளை எனக்கு லீவு காத்திருக்க வேணாம்டி என்பாள். முடியலணு சொன்னாங்க இப்ப எப்படி இருக்குது என்பாள். ஒருவேளை வெளியூர் போய் விட்டு ஒரு வாரம் கழித்து வந்தால்… குடும்பமா? குட்டியா? எதுக்கு வெளியூருக்கு அலையணும். என் ஒருத்திக்கும் இங்க வேலை பார்த்த போதாதா என்பாள்.
இப்படி எத்தனையோ நாள் தோழியிடம் பேசியது போல் பேசியிருக்கிறாள். ஆனால் இப்போது தான் முதன் முறையாக நேரில் வந்து பேச தொடங்கினாள். ஆனால் விதியை பார் எத்தனையோ நாள் காத்திருந்தேன். இப்படி வந்து பேசிவிட மாட்டாளா என்று. ஆனால் இன்று கனிந்துருகும் காதலோடு நிற்கும் அவளை நான் என்ன செய்கிறேன். ஏன் தன் வாழ்வில் இப்படி எல்லாம் நடக்கிறது. எனக்கு என்ன ஆகிறது. ஏன் செல்லம்மாவின் விசயம் என்றால் என்னையே மறந்து போகிறேன். உள்ளம் ஆயிரம் கேள்விகளை கேட்டு ஓய்ந்த நேரம் முருகன் வீட்டை அடைந்திருந்தான்.
உள்ளே வந்தவளின் மன திரையில் செல்லம்மா வந்து அவன் மார்பில் புதைந்து விம்மியதே ஓடிக்கொண்டிருந்தது. அதில் அவன் நிலையை நினைத்தவன் பொறுக்க முடியாமல்,
“அவளை நான் எந்த அளவு நேசிக்கிறேன் இறைவா ? நான் அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன். நீ அனாதையாய் பூமியில் அலைய விட்ட பிறகும் கூட எந்த தப்பும், பாவமும் செய்யாமல் நேர்மையாக தானே வாழ்ந்தேன்.”
நான் உன்னிடம் என்ன கேட்டேன். அவள் ஒருத்தியையும் தானே கேட்டேன். அனாதையாய் போன எனக்காக ஒருத்தி வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா? நானும் நாலு பேர் போல குடும்பமாய் வாழ ஆசைப்படக் கூடாதா? அனாதையாய் பிறந்தால் அவர்களுக்கு ஆசை என்பதே இருக்கக் கூடாதா? எனக்காகவே வாழும் அவளை அடைய கூட நான் நினைக்க கூடாதா?. எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? ஏன் இந்த வலி ? தினமும் நார்மலாக இருக்கும் நான் ஏன் அவளை நோக்கி செல்லும் போது மட்டும் மாறி போகிறேன். மற்ற நாள் எனக்கு எதுவும் இல்லை. செல்லம்மாளுக்கு நான் தேவைப்படும் போது மட்டும் என்னில் அப்படி என்ன நிகழ்கிறது.”
யோசிக்க யோசிக்க எதுவுமே அவனுக்கு புரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல எல்லாம் இருட்டாக தான் இருந்தது. எவ்வளவு யோசித்தும் தனக்கு ஏன் அப்படி நடந்தது என்று கூட தோன்றவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தோன்றியது. தான் இல்லை என ஆனால் செல்லம்மாள் எதுவும் செய்வாள். ஒருவேளை உயிரை விட தீர்மானித்துக் கொண்டால், காதலித்தவன் கல்லு மாதிரி இருக்கிறான். இன்னொருவனுடன் தன்னால் வாழவே முடியாது என தவறாக எதுவும் செய்து கொண்டால் ,
இந்த எண்ணம் நிழலாடிய பொழுதிலிருந்து முருகனால் ஒரு நிலையில் நிற்கக்கூட முடியவில்லை. என்ன செய்யலாம் மனது யோசிக்க தொடங்கியது. தனக்கு ஆகும் விசித்திரத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு செல்லம்மாவுக்காக யோசிக்க ஆரம்பித்தான். தன்னை நேசித்த பாவத்திற்கு அவள் ஏன் உயிரை விட வேண்டும்.
“இது என்னோட கடைசி முயற்சி. நான் அவள் அப்பாவை தேடி இந்த நிமிடமே இந்த நொடியை செல்ல போகிறேன். உங்கள் பெண்ணை எனக்கு கொடுத்து விடுங்கள் என அவர் காலில் விழப் போகிறேன். இன்று மட்டும் நான் புறப்பட்டு அங்கு போகாமல் இருந்தேன். நாளை என் உயிரே நானே மாய்த்துக் கொள்வேன். என்னை விரும்பிய பாவத்துக்கு அவள் உயிரை விடுவதை விட தப்பாய் நிற்கும் நானே முந்திக் கொள்வேன்.
என உரக்க கூறியவன் வெறியோடு செல்லம்மா வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானான். இந்த முறை அவன் யாரையும் கலந்தாலோசிக்கவும் இல்லை. யாரையும் அழைக்கவும் இல்லை. நல்ல நேரம் பார்க்கவும் இல்லை. பூ, பழம் வாங்கவும் இல்லை. ஒற்றையாய்… தனியாளாய் செல்லம்மாவுக்காக செல்கிறான்.
மனதில் இருந்த சஞ்சலத்தை முழுவதும் அழித்துக் கொண்டு செல்லம்மா வீட்டுக்கு கிளம்ப புறப்பட தொடங்கினான் முருகன்.
“என்னக்கா…ஏன் இப்படி இருக்கா?”
செல்லம்மாவின் பக்கத்தில் வந்த வடிவு கேட்க,
“ம்கூம்…ஒண்ணுமில்ல…”
“இல்லயே…நீ கொஞ்ச நாளாவே சரியா இல்ல.”
“என்ன சரியா இல்ல.”
“சரியா பேசுறதில்ல. வேலைக்கு போயிட்டு வந்தா அறையிலேயே முடங்கிடுறா.”
“சொன்னா தீர்த்து வச்சிடுவியா?”
கோவமாக வெடிக்க,
“ஏங்க்கா. உனக்கு மாமாவ புடிக்கலியா?”
“அந்த முழு குடிகாரனை யாருக்கு பிடிக்கும். மாமாவாம்…மாமா.”
என்றாள் சலிப்பாக,
“அப்படிணா சுமதி சொன்னது உண்மையாக்கா.”
“சுமதியா என்ன சொன்னா?
கட்டிலில் கிடந்த செல்லம்மாள் படபடப்போடு எழுந்து தங்கையை பார்க்க,
“நீ… நீ … யாரையோ…”
“யாரையோ…”
தெரிந்து விட்டதோ என்ற பதை பதைப்போடு அவள் விழியை பார்க்க,
“.விரும்புறதா சொன்னாங்க்கா. நான் அப்போ நம்பல. ஆனா உன் நிலையை பார்த்தா எனக்கு சந்தேகமா தான் இருக்குது.”
“என்ன என்ன…சந்தேகம்.”
“மாமா குடிகாரர் தான். இல்லணு சொல்லல. ஆனா நம்ம பக்கம் எந்த ஆம்பளை குடிக்காம இருக்காங்க. பதினெட்டு வயசு ஆகுறதுக்குள்ளே பாட்டிலோட தானே அலையுதுங்க. ஏன் நம்ம அப்பா கூட நைட் ஆனா முழு போதையில் தான் வீட்டுக்கு வருவாங்க. இதுல மாமாவை மட்டும் குறை சொல்ல என்ன இருக்கு.”
“அது…”
“உனக்கு பிரச்சனை மாமா இல்ல. உன் மனசு…”
“சொல்லு உண்மைய சொல்லு. அது யாரு?”
“ பெயரு முருகன். என் ஹோட்டலுக்கு பக்கத்துல உள்ள ஆக்கர் கடையில தான் வேலை பார்க்கிறான். ரொம்ப நல்லவன்.”
“அப்படினா முதல்லயே பேசி பெண் கேட்டு வரச் சொல்ல வேண்டியது தானே. இத்தனை நாள் எதுக்காக அமைதியா இருந்தா.”
“நான் சொல்லாமல் இருந்திருப்பேணா நினைக்கிறா”
“அப்புறம்…”
செல்லம்மாள் நடந்தவற்றை மறைக்காமல் தங்கையிடம் சொல்லி குலுங்கி குலுங்கி அழுதாள்.
ஆதரவாக அவளை அணைத்தவள்.
“அம்மாவுக்கு ஏதோ சந்தேகம். என்னை கூப்பிட்டு கேட்டாங்க. நான் தெரியாதுணு தான் சொன்னேன். ஆனா உன் மேல அம்மாவுக்கு எதுவோ சந்தேகம் வந்திருக்கு.”
“நான் யாருட்டயும் பேசாம அமைதியா இருக்கேன்ல அதை பற்றி நினைச்சி கேட்டிருப்பாங்க.”
“இல்லக்கா. அம்மாவுக்கு உன்னை மாமாவுக்கு கொடுக்க துளி கூட விருப்பமில்லை. அப்பா தான் பஞ்சாயத்து முடிவு அதை மாற்றக்கூடாதுணு ஒத்த கால்ல நிக்குறாரு. நீ வேணா அம்மாட்ட மெதுவா பேசி பாரேன்.”
“முதல்ல பேசும் போதே பெரியம்மா என்னை கொன்னுடுற மாதிரி பார்த்தாங்க. என் தம்பிக்கு என்ன குறைணு வேற தூக்கிப் பிடிச்சிட்டு வந்தாங்க. இப்ப பரிஸமும் போட்டாச்சு. இதுக்க பிறகு என்ன பேச முடியும். அதுலயும் அவனை நினைச்சாலே பயமா இருக்கு. அவனை என்னால புரிஞ்சுக்க முடியல. விட்டு தள்ளவும் முடியல.”
“உள்ளத்துக்குள்ள இருந்து முள்ளா குத்துறான். ஆனா அவனை நம்பி எதுவும் செய்யவும் முடியல. நேர்ல போனா அவன் மடியிலயே விழுந்து கிடக்கணம்ணு தோணுது. ஆனா அவன் பண்ணுற செயலை பார்த்தா எதிர்காலத்தை நினைச்சி பயமா இருக்கு. மாமா பரிசம் போட்ட அன்று நிச்சயமாக வருவான். என்ன ஆனாலும் பேசி அப்பாவை அம்மாவை சம்மதிக்க வைக்கணும்ணு தான் இருந்தேன். ஆனா அவன் வரலியே வடிவு.”
“…………..”
“மாமா பரிஸம் போட்டு ஒரு வாரம் ஆகுது. இப்பவும் அவனிடம் எந்த ரியாக்ஷனும் இல்லையே வடிவு. அவனை நம்பி எப்படி போறது சொல்லு. இன்று கூட போய் அழுதிட்டு வந்தேன். அவன் அப்படியே கல்லு போல தான் இருக்கான். அதை நினைச்சா தான் மனசு தாங்கல.”
“நான் வேணா அம்மாட்ட பேசவா?”
“என்ன பேச போறா? நாம பேசி என்னவாக போகுது. அவனை நம்ப முடியலியே. அம்மா பார்க்கணும் வர சொல்லுணு சொன்னா கூட வருவானா? மாட்டானானு பயமா தான் இருக்குது. அது மட்டுமல்ல பரிஸம் போடுறதுக்கு முன்னால கூட ஓ.கே தான். அம்மாவை எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம். ஆனா இப்போ அம்மா நினைச்சா கூட இதுலயிருந்து என்னை காப்பாத்த முடியாது. மாமா பஞ்சாயத்தாரோட வந்து நாரடிச்சிடுவாரு.”
செல்லம்மா குலுங்க தமக்கையை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் பாவமாக பார்த்தாள் வடிவு.
அதே நேரம்,
மனதில் தீர்க்கமான முடிவு எட்டியவுடன் முருகன் ஹாலில் நின்று தன் தீர்மானத்தை உரக்க கூறி கொண்டு, கதறி அழுத்திவிட்டு, எழுந்து பின்புறம் சென்று கையையும், காலையும், முகத்தையும் கழுவி விட்டு, கயிற்றில் தொங்கிய டவ்வலை எடுத்து அழுத்த முகத்தை துடைத்தான். வெறி ஒன்று நெஞ்சில் தீயாகப் பரவ செல்லம்மாவையே நெஞ்சில் தாங்கியவாறு புறப்பட்டான். ஹாலுக்கு வந்தவன் துணி மாற்றி கண்ணாடி முன் நின்று ஒரு முறை பார்த்தான். கண்கள் தீயாக தகிக்க தலை வாரி கொண்டு வாட்சை எடுத்து கட்டிக் கொண்டு புயல் வேகத்தில் வீட்டிலிருந்து கிளம்பினான்.
திகில் தொடரும்…
Tamil Thriller Novel



