வணக்கம் வாசகர்களே!
உணர்ச்சி பொங்க பேசும் காதலியிடம் முருகன் உண்மையை சொன்னானா? திற்பரப்பு அருவியில் நடந்தது என்ன?
திற்பரப்பு அருவியில் நடந்தது என்ன?
“முருகா… நீங்க ரெண்டு பேரும் இந்த சீட்டுல இருங்க.”
திற்பரப்பு செல்லும் டவுன் பஸ்ஸில் தாங்கள் உட்கார்ந்திருந்த சீட்டின் முன்னால் இருந்த சீட்டை காட்டி முருகனையும் செல்லம்மாவையும் உட்கார செய்தான் குள்ளன்.
ஜன்னல் பக்கம் செல்லம்மா உட்கார்ந்து விட அவள் அருகில் அமர்ந்தான் முருகன்.
பின் சீட்டில் இருந்தாலும் குள்ளனும், பறட்டையும் அடிக்கடி பேசி இவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்கள் சைடு சீட்டில் அமர்ந்து கொண்டு தங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த சின்ன குழந்தையை பார்த்து நையாண்டி செய்து கொண்டே வந்து கொண்டிருந்தனர்.
அவன் பறட்டை தலையையும் பெரிய வாயையும் சின்ன கண்களையும் கிலோ கணக்கில் தொங்கிய கன்னத்தின் சதையைப் பார்த்ததும் குழந்தை குரல் எடுத்து அழ ஆரம்பிக்க,
குள்ளன் சிரித்தவாறு,
“உன் முகத்தை காட்டி சிரிச்சிட்டிருந்த பிள்ளையை அழ வச்சிட்டியா. போடா அங்க…”
குழந்தையின் முன் வைத்து அவனை அடித்து வேறு சீட்டிற்கு தள்ள, குள்ளனின் குள்ளத்தனத்தையும் அவன் சீட்டில் துள்ளி அமர உடலை அசைத்த அழகையும் பார்த்து குழந்தை சிரிக்க ஆரம்பித்தது.
குழந்தை சிரிக்க சிரிக்க குள்ளன் போக்கு காட்ட ஆரம்பித்தான். தன் மூக்கை ஒரு விரலால் தூக்கி தலை அசைத்து நாக்கை துருத்தி வெளிகாட்டி சிரிக்க குழந்தை கை கொட்டி சிரித்தது.
இந்தா பாரும்மா… நான் கூட அழகா டேன்ஸ் ஆடுவேன். பாக்குறியா? என பறட்டை தன் உடலை அசைக்க முடியாமல் ஆட்ட, குழந்தை கொல்லென சிரித்து விட்டது.
செல்லம்மாள் அவர்களின் நைய்யாண்டியை பார்த்து ரசித்து கொண்டிருக்க, முருகன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னை ஏன் இப்படி பாக்குறா ?”
செல்லம்மா காதில் கிசுகிசுக்க…
“ம் கூம்…சும்மா தான்.”
“இல்லயே…வந்ததுலயிருந்தே பாக்குறேன். நீ ஓர கண்ணால சைட் அடிச்சிட்டேயிருக்குறா?”
“என்னால இப்ப கூட நம்ப முடியல புள்ள… இது எல்லாம் நிஜமா? கனவாணு?”
“எதை நம்ப முடியல…”
“நான் உன் வீட்டுக்கு வந்தது. உன் குடும்பம் கல்யாணத்துக்கு சம்மதிச்சது. உன் மாமாவை நான் எதிர்த்திட்டு நின்னது. இப்போ என் கூட இவ்வளவு நெருக்கமா நீ இருக்கிறது. எதையும் நம்ப முடியல.”
“முழுசா உன் பக்கத்துல உன் தோளோடு தோள் சேர்ந்து இருக்கேன். இப்போ போய் நிஜமா கனவாணு கேட்கிறா?”
“நீ என்னை நம்பி தனியாக திற்பரப்புக்கு வருகிறதெல்லாம்…”
“உனக்காக வந்தேணா நினைச்சா.”
“அப்புறம் …”
“பறட்டைக்காக தான்.”
“பறட்டைக்காவா?”
“ஆமா… எனட்டயே எத்தனை முறை சொல்லியிருக்கான். திற்பரப்பு பார்க்க ஆசையா இருக்குணு. அப்படிணா உங்களுட்ட எத்தனை முறை சொல்லியிருப்பான். ஒரு முறையாவது அவனை கூட்டிட்டு போகணம்ணு உங்களுக்கு தோணியிருக்கா.”
“அப்படிணா அவனுக்காக தான் வந்தா.எனக்காக இல்ல.”
“அப்படியும் சொல்லிட முடியாது…”
செல்லம்மா வார்த்தையை சவ்வு போல் இழுத்து அவனை ஆசையாக பார்க்க,
பிணைந்து போன அவள் கையை பிடித்து வலது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்.
“உன்னை நான் நல்லா பாத்துப்பேன் புள்ள.”
“அப்புறம் பார்க்காம…”
“உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராத அளவு உன் உள்ளங்கையில வச்சி தாங்கிக்குவேன்.”
“எப்படி இப்போ என் கையை உன் உள்ளங்கைக்குள்ளால வச்சிருக்கிறியே அப்படியா?”
செல்லம்மா காதலோடு கேட்க,
“விளையாடாத புள்ள… எனக்கு நீ கிடைக்க மாட்டியோணு ரொம்ப பயந்துட்டேன். கடைசி வரை அனாதையாவே வாழ்ந்து சாக வேண்டியது தாணு நினைச்சேன். ஆனா ஒரே நாளுல எல்லாமே மாறிப்போச்சு. என் கைக்குள்ள நீ இப்போ. என் மனசு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அப்படியே உன்னை தூக்கி சுத்திடுவோமாணு தோணுது. ஒரு முறை கட்டி அணைச்சிடுவோமானு தோணுது.”
“தோணும்…தோணும். இதுக்க மேல ஒரு இஞ்ச் நீங்கி வந்தா…”
“ வந்தா…”
“வந்திடாதனு சொன்னேன்ப்பா…”
“அது….
என செல்லம்மா வாபஸ் வாங்க, முருகன் லேசாக சிரித்துக்கொண்டான்.
“மாமாட்ட சீக்கிரமா முகூர்த்தத்துக்கு நாள் பாக்க சொல்லு. இல்லணா…”
“இல்லணா …”
“ஐயோ என்ன பண்ணுவேணு எனக்கே தெரியாது.”
“தெரியாதா?… எனக்கு தெரியுமே.”
“என்ன தெரியும்?”
அன்று போல முருகன் ஹீரோ அவதாரம் எடுத்து செல்லம்மாவை தூக்கிட்டு போயிடுவாரு.”
என நாணங் கொண்டு அவள் சிரிக்க,
“அதை மட்டும் சொல்லாத புள்ள… எப்படி நடந்துச்சுணு என்னால இன்னும் கூட நம்ப முடியல.”
“அது என்ன முருகன் அவதாரமோ…”
என்றாள் நக்கலாக…
“ரொம்ப சந்தோஷமா இருக்கு முருகா. உனட்ட அப்படி ஒரு ரியாக்ஷனை நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்பாட்ட சரியா பேசிட மாட்டா. நாம தான் எதையாவது பேசி சம்மதிக்க வைக்க வேண்டி வரும்னு நினைச்சேன். ஆனா என்னை ஒத்த வார்த்தை பேச விடல. அவ்வளவு தெளிவா பேசினா. உன்னை பார்த்து நானே அசந்து போயிட்டேன். அம்மா உன் பேச்சிலேயே விழுந்துட்டாங்க. நீ மயக்கிட்டா. அப்பா… மாமாவை நீ அடக்குனதும் மொத்தமா விழுந்துட்டாரு.”
“இப்ப கூட இது எப்படி நடந்துணு என்னால நினைச்சி கூட பார்க்க முடியல.”
அதே நேரம் டிரைவர் உள் வந்து வண்டியை எடுக்க, வண்டிச்சாலையில் பயணிக்க தொடங்கியது. நான்கு பேரும் மிகுந்த சந்தோஷத்தோடு திற்பரப்பு அருவியை காண ஆசையில் பயணித்தனர். இரண்டு மணி நேரப் பயணம் அவர்களை மலை நீர் பொங்கி பொங்கி பிராவாகம் எடுக்கும் திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு அழைத்து வந்து சேர்த்தது. நீரின் மாயாஜாலத்தை கண்டதுமே மேல் பனியனை கழற்றி விட்டு ஓடி அந்த மலை நீரில் ஐக்கியமாகி விட்டான் பறட்டை. அவனை தொடர்ந்து குள்ளனும் ஒவென்ற இரைச்சல் சத்தத்தை தாண்டிய குரல் ஒலியோடு ஓடினான். முருகன் மட்டும் அவளுடன் நின்றான்.
நீ போகலியாடா?
நீ வருகிறதுனா. போலாம். இல்லனா வேணாம்.
எனக்காக எல்லாம் வேணாம். உனக்கு புடிக்கும்ணா போ. அவனுங்களோட குளிச்சி கும்மாளம் அடிச்சிட்டு வா. நான் இதுல உட்கார்ந்துக்கிறேன்.
இல்ல. நான் போகல. உன் கூடவே இருக்கேன்.
உனக்கும் மலை நீர்ல குளிக்க பிடிக்காதா?
பிடிக்காதுணு இல்ல. ரொம்ப பிடிக்கும். ஆனா நீ இல்லாம வேணாம்.
பிடிக்கும்ணா போடா. நான் சாரி உடுத்தியிருக்கிறதால டிரஸ் செயிஞ் பண்ண ரொம்ப கஷ்டம். ஈரத்தோட நிற்கவும் முடியாது அதான். போகல. நீ போ.
இல்ல. நானும் உன் கூடவே நிக்குறேன்.
ஏய்… கிறுக்கா? அப்புறம் இப்படி ஒரு வாய்ப்பு எப்போ கிடைக்குதோ. கிடைக்கிற வாய்ப்பை ஏன் மிஸ் பண்ணுறா?
நீ வருகிறதுனா போலாம். இல்லனா வேணாம்.
அடம்பிடிச்சா மாத்த மாட்டியே. வா. போலாம்.
என செல்லம்மா அவனுக்காக அந்த அருவி நீரில் நனைய அன்றைய மாலை பொழுது நான்கு பேருக்கும் மிக மிக இனிமையாக கழிந்தது.
திற்பரப்பிற்கு சென்று விட்டு வந்த நான்காம் நாள் காலை முருகனும் செல்லம்மாவும் மலை கோயிலுக்கு சென்று விட்டு வர தீர்மானித்திருக்க முருகன் காலையிலே குளித்து புறப்பட ஆயத்தமாகி கண்ணாடி முன் வந்து நின்ற நேரம்.
சரியாக வெளியிலிருந்து ஒரு பத்து பதினைந்து தடியர்கள் கம்போடும் தடியோடும் திடு திடும்மென உள்ளே வந்தனர்.
சட்டென யாரென தெரியாத பலர் தன் வீட்டினுள் அத்துமீறி நுழைய பயத்தோடு அவர்களை பார்த்த முருகன்.
“நீ… நீங்க எல்லாம் யாரு. எதுக்காக என் வீட்டுக்கு வந்திருக்கீங்க.”
என்றான் நடுங்கும் குரலோடு…
“இவன் தாண்ணா… இவனே தான்…
என வந்திருந்ததில் ஒருவன் முருகன் புறம் கை காட்ட…
வந்தவர்கள் திகைத்தனர்.
“இவனாடா நல்லா பாரு.”
“ இவன் தான்ணே. இவனே தான். உடம்பை பார்த்து தப்பா முடிவு பண்ணிடாதுங்க. அவன் அடி இரும்பு மாதிரி இருக்கும். முகத்தை இப்படி பச்ச புள்ள மாதிரி வச்சிருக்காணு நம்பிடாதுங்க.”
“இந்தா என் கையை பாருங்க. அன்று அவன் அடிச்ச ஒரே அடியில என் கையில உள்ள மொத்த எலும்பும் கட்டாகிடுச்சி.”
வந்தவன் கையை தூக்கி காட்ட,
வந்தவர்களை விட முருகன் தான் திகைத்துப் போனான்.
“நானா?… நானாண்ணே உங்களை அடிச்சேன். பொய் சொல்லாதுங்கண்ணே. ஒரு எலியை கூட அடிச்சிட மாட்டேன். நான் போய் உங்க கையை உடைச்சேனு அபாண்டாமா பொய் சொல்றீங்க. நீங்க யாரு? எங்க உள்ளவங்கணு கூட எனக்கு தெரியாது.”
“தெரியாது.”
“சத்தியமாண்ணே தெரியாது. நான் இதுக்க முன்னால உங்களை பாத்ததே இல்லை.”
“போன வாரம் நீ திருமங்கலம் வரல…”
“நான் எதுக்கு திருமங்கலம் வரணும். எனக்கு அங்க யாரையும் தெரியாது, ஒரு முறை கூட நான் அந்த ஊர் பக்கம் வந்ததில்ல.”
“பொய் சொல்றாண்ணே. உங்களை ஏமாத்த பாக்குறான்.”

“என்னடா சொல்லுறா? நல்லா பாத்து சொல்லு. இந்த பொடி பயலா நம்ம ஊர் வந்து, நம்ம ஆள் அத்தனையும் சுருட்டி எடுத்து மண்ணுல புரள வைச்சது. அவன் அவன் எழும்ப முடியாமல் மாவு கட்டோட ஆஸ்பத்திரியில கிடக்கிறானுவ நீ என்னடாணா ஒரு பொடி பையல காட்டுறா ?”
“இவன் பொடி பையனா? ஒரு அடி வாங்கி பாருங்க. அப்போ தெரியும். கன்னத்துல ஒண்ணு வச்சான் பாருங்க. என் தலை கிறங்கி அதுலயே விழுந்துட்டேன். நல்ல வேளை இவன் அங்க இருந்து கிளம்பும் போது எனக்கு நினைவுத் திரும்பிச்சி. இவன் யாருணு தெரிஞ்சிக்க வேண்டியே கை வலியோட இவன் பின்னாலயே வந்தேன். வந்து தெரிஞ்சதால தான், அண்ணன் ஊர்ல இருந்து வந்ததும் என்னால உண்மையை சொல்ல முடிஞ்சுது. அண்ணன் வருகிறதுக்குள்ள இவனை முடிச்சிடுங்க. இல்ல அண்ணட்ட இருந்து சரியா வாங்கி கட்டிக்குவீங்க.”
வந்தவன் உசுப்பேற்ற, தயங்கிய முரடர்கள் இவன் பேச்சைக் கேட்டதும் முருகனை தாக்க தொடங்கினர். ஒவ்வொரு அடியும் அவன் மேல் விழ விழ தாங்க முடியாமல் அலறினான் முருகன். ஒருவர் மாற்றி ஒருவர் பந்தாட, முருகனின் உதடும் கன்னங்களும் பிய்ந்து இரத்தம் சொட்ட சொட்ட வடிந்தது.
வலி பொறுக்க முடியாமல் வந்திருந்த அனைவர் காலிலும் வந்து விழுந்தான் முருகன்.
“இல்லண்ணா… நீங்க நினைக்கிற ஆள் நான் இல்லண்ணே. அவர் யாரையோ நினைச்சிட்டு தப்பா என்னை கை காட்டுறான்ணே. தாங்க முடியலண்ணே. என்ன விட்டுடுங்க அண்ணே… ப்ளீஸ் அண்ணே… வலி பொறுக்க முடியல அண்ணே.”
“டே… ரமணா… இவனாட பாத்து சொல்லு.”
“நடிக்கிறாண்ணே… நல்ல நடிக்கிறான். நம்பாதுங்க. உங்கள கண்டு பயந்து இப்படி அப்பாவியா நடிக்கிறான்.”
என்றதும் வந்ததில் ஒருத்தன் ஓங்கி அவன் கன்னத்தில் அடிக்க, பொறி கலங்கி கீழே சுருண்டான் முருகன். அவன் வாயின் ஓரத்திலிருந்து பற்கள் உடைய ரத்தம் வெள்ளமாக பாய்ந்தோடி அவன் சட்டையை நனைக்க, மொத்த நம்பிக்கையும் வடிய முழங்கால் படியிட்டு அமர்ந்து கதறினான்.
“நான் பண்ணல என்ன விட்டுடுங்க. என்னை விட்டுடுங்க.” என அந்த நிலையிலும் சொல்ல கூட திராணியின்றி அவன் முனங்க,
அதே நேரம்,
காத்து நின்று பார்த்து விட்டு முருகன் வராததால் அவன் வீட்டிற்கு அவனை தேடி வந்தாள் செல்லம்மா. முற்றத்தில் வரும் போதே உள்ளிருந்து பலரின் குரல் முரட்டுத்தனமாய் கேட்க, தீனமாய் ஒரு குரல் கெஞ்சுவது போல் தெரியவும் கையில் இருந்த பர்ஸை கூட கீழே போட்டு விட்டு உள்ளே ஓடினாள். உள் சென்றதும் அங்கிருந்த சூழலை பார்த்தவள் செய்தறியாது திகைத்து நின்றாள்.
ஒரு வேளை மாமன் அடியாள்களை அனுப்பி விட்டானோ என பதறிக்கொண்டு உள்ளே வந்தவள். உள் நின்ற தடியர்களை பார்த்ததும் இது மாமானின் ஆட்கள் இல்லை என்பதை ஒரே நொடியில் புரிந்து கொண்டாள்.
கீழே ரத்தம் சொட்ட சொட்ட ஒவ்வொருவரின் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்த முருகனைப் பார்த்ததும் அவள் கண்கள் கலங்கிவிட்டன. ஓடி சென்றவள் அவனை காப்பாற்றும் முயற்சியில்,
“என்னடா இது… யார்ட்ட இவங்க எல்லாம்…”
பதட்டமாக கேட்க,
“தெரியல புள்ள… யாருணோ நினைச்சிட்டு என்னை வந்து அடிக்கிறாங்க.”
சின்ன புள்ள போல முருகன் அழ…
வந்தவர்கள் கூட ஒரு நொடி தயங்க தான் செய்தனர்.
ஆனால் அடி வாங்கி வந்தவன் ஓடி சென்று அவன் நெஞ்சை மிதித்து தள்ள,
வலியில் குரல் எடுத்து அலறினான் முருகன். அவன் அலறல் சத்தம் கேட்டதும் செல்லம்மா…
“ப்ளீஸ்…நீங்க நினைக்கிற ஆள் இவன் இல்ல. அவனைப் பாத்தா தெரியலியா? அண்ணா அவன் ஒரு புள்ள பூச்சி. ஒரு நாயை அடிணு சொன்னா கூட அடிச்சிட மாட்டான். எப்படி உங்க ஊர்ல்ல வந்து அதுவும் இந்த மாதிரி ஆளுங்களை அடிச்சிருக்க முடியும். நல்லா யோசிச்சு பாருங்க. நீங்க ஆள் மாறி தான் வந்து அடிச்சிட்டிருக்கீங்க.”
செல்லம்மாவும் பயந்து ஒவ்வொருவரிடம் கெஞ்ச, வந்தவர்கள் என்ன செய்ய என தெரியாமல் தடுமாறி நின்ற நேரம் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் வேதா.
பார்த்ததுமே தெரிந்து விட்டது. இவர்களின் தலைவனாக தான் இருக்க வேண்டும்.
அவனை பார்த்ததும் பயந்த முருகன் ஓடி சென்று அவன் காலில் விழுந்தான்.
“இங்க என்னடா நடக்குது. முடிச்சிட்டு பத்து நிமிஷத்துல வந்துருவீங்கணு வெயிட் பண்ணுனா வந்து பாத்துட்டு நிக்குறீங்க.”
“இல்ல நான் பண்ணலண்ணே. என்னை விட்டுடுங்கண்ணே.”
அவன் கெஞ்சுவதும் கதறுவதுமாக அவன் காலை பிடித்து கதற,
வந்த வேதாவின் கண்கள் செல்லம்மாவின் மேல் விழுந்தது. அவளை விழுங்கி விடுபவன் போல் பார்த்தவன்.
“நீங்க என்ன சர்ச் பாதராடா . அவனுக்கு பாவ மன்னிப்பு கொடுக்க. போட்டு தள்ளிட்டு அவளை இழுத்துட்டு வாங்கடா…”
என ஓர கண்ணால செல்லம்மாவை பார்க்க, அவனின் ஒற்றை பார்வையிலே செல்லம்மா பயந்து நடுங்கி போய் சுவரோடு ஒடுங்கி கொண்டாள். முருகன் விடாமல் திரும்ப திரும்ப வந்தவன் காலை கட்டி கொண்டு கெஞ்ச,
கோபத்தோடு வேதா காலில் கட்டிக்கொண்ட அவனை அடித்து துவைத்து தூக்கி சுவற்றில் அடித்தான். முருகனின் தலை சுவற்றில் ஓங்கி அடிக்க சட்டென கீழே விழுந்தவன் கையில். சுவற்றில் இருந்து இழுத்து விழுந்த வேகத்தில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வார்ச் அவன் கையில் விழுந்து தானே அவன் கையில் கட்டிக் கொண்டது.
ஒரே நொடி, அங்கிருந்த சூழலே மாறிப்போனது. விழுந்த வேகத்தில் எழுந்த முருகன் குத்து கால் போட்டு ஒரு தினுசாய் குனிந்தேயிருந்தான். அவன் கையை கட்டிக் கொண்டு இருந்த தோரணையும், அவனிடம் இதுவரை இல்லாத ஒரு அமைதியும் முன்னால் நின்றவர்களை ஒரு நொடி பதுங்க தான் வைத்தது. கூடவே திடீர் அறைக்குள் அடித்த பேய் காற்றின் சுழற்சியும் அழகாக எரிந்து கொண்டிருந்த பல்புகள் மின்னி மின்னி எரிந்த விதமும் வந்திருந்தவர்களை திகிலுற செய்ய…
ஒரு நொடி எல்லாரும் திகைப்பில் உறைந்து போய் தான் நின்றனர். ஆனாலும் வராத தைரியத்தை வரவழைத்து கொண்டு மீசையை தடவியவாறு வீரனாக முன்னால் வந்த வேதா
செல்லம்மாவின் கரம் பிடித்து இழுக்க வர, பயந்து நடுங்கிய செல்லம்மாவோ பதட்டத்தோடு பேய் முழி முழித்தவாறு முருகனின் முதுகு பகுதியில் ஒதுங்கி கொள்ள, அவளின் மருண்ட விழியையும், கவிழ்ந்தே இருந்த முருகனையும் ஒருமுறை பார்த்தவாறு,
நக்கல் சிரிப்போடு ஒரு வித துள்ளலோடு முருகன் முன் வந்தவன்.
“இவன் காப்பாத்துவானா அவன் பின்னால பதுங்குறா? இனி உன்னை அந்த ஆண்டவன் வந்தாலும் காப்பாற்ற முடியாது. என் பார்வையில விழுந்த எந்த பாவையும் இதுவரை எனக்கு சுகம் தராம போனதா சரித்திரம் கிடையாது. வாடி இங்க…”
என வலுகட்டாயமாய் அவள் கரம் பற்றி இழுக்க சென்ற நொடி, முருகன் புயல் வேகத்தில் எழுந்து வேதாவின் காலை கட்டியாக பிடித்து சுழற்சியடித்தான். அவன் சுழற்றிய வேகத்தில் வேதா மேஜை மீது போய் பொத்தென விழுந்து புரண்டான்.
முருகனின் திடீர் அவதாரம் கண்டதும் வந்தவர்கள் ஒரு நொடி திகைக்க முருகனிடம் ஆட்டம் அங்கு ஆரம்பம் ஆனது. ஒவ்வொருவரையும் தாக்க தொடங்கினான். காட்டி கொடுத்தவனை முடியை பிடித்து இழுத்து சுவற்றில் மோதினான்.செல்லம்மாவின் கரத்தை இழுக்க வந்தவனையோ கையை ஓடித்து அலற வைத்து விட்டான். அவன் அலறலை கேட்டு செல்லம்மாவே கண்ணை இறுக மூடிக்கொண்டு செவிபறையை இரு கையாலும் பொத்தி கொண்டு பயத்தில் நடுங்கியவளாய் ஒரு மூலையில் போய் பதுங்கி கொண்டாள். அவளை அரை கண்ணால் பார்த்த முருகனோ? நொடி பொழுதில் தன் பார்வையை மாற்றி வேதாவின் முன் கொக்கரிக்கும் குரலில்,
“இந்த கைய வச்சிட்டு தானே பொண்ணுங்க மேல கைய வைக்கிறா?”
வெறியோடு சொன்னவன் நம்ப முடியா அதிர்ச்சியில் நின்ற செல்லம்மாவின் அருகில் வந்து,
“இனி தொடுடா பாப்போம். தொடுடா.”
என கர்ச்சித்த அவன் குரலை கேட்டு செல்லம்மாவே அதிர்ந்து நடுங்கி போனாள். பயத்தில் உறைந்து நின்றவள் ருத்ரதாண்டவன் ஆடிய முருகன் நம்ப முடியாமல் தான் பார்த்தாள்.
“இது வரை ஒவ்வொருவரின் காலில் விழுந்து கெஞ்சியவன் இவனா ?”
என யோசிக்க வைத்தது.
“தர்ம அடி வாங்கிக் கொண்டு அடி வாங்கவே பிறந்தவன் போல கதறியவன் இவனா?”
என நினைக்கத் தோன்றியது. இவனுக்குள் எப்படி இப்படி ஒரு எனர்ஜி வந்தது. என குழப்பமாக இருந்தது. திகிலோடு அவனைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றாள்.
ஒருத்தனை கூட மிச்சம் வைக்காமல் புரட்டி எடுத்து அனைவரும் கீழே விழுந்து சுருண்ட போது வாசல் படியில் வந்து நின்று ராட்சசன் போல குரல் கொடுத்தான். அந்த குரல் சுவரில் பட்டு எதிரொலிக்க செல்லம்மாவே நடுநடுங்கிப் போனாள்.
திகில் தொடரும்…
Tamil Thriller Novel



