வணக்கம் வாசகர்களே!
முருகனின் அதிரடி ஆட்டம் புரியாமல் செல்லம்மா? வீரத்துக்கே பிறந்தவன் போல அடித்து ஆடும் முருகன். அடுத்து நடந்தது என்ன?
முருகனின் அதிரடி ஆட்டம் புரியாமல் செல்லம்மா?
மனதில் செல்லம்மாவை தாங்கிக் கொண்டு நெஞ்சில் அவளுடனான காதல் தருணங்களை நினைத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தான்.
“என்ன ஆச்சரியம். இன்று அவன் கால்கள் பாதை மாறி செல்லவில்லை. அவன் முகம் கோரமாய் மாறவில்லை. அவன் கண்கள் சிகப்பேறவில்லை. எந்த வெறியோடு வீட்டிலிருந்து கிளம்பினானோ, அதே வெறியோடு செல்லம்மா வீட்டை நோக்கி நடந்தான். ஆனால் அவன் நடையிலும் வீறு கொண்ட பார்வையிலும் மட்டும் மிடுக்கு கூடி இருந்தது.
தூரத்தில் அவன் வரும் போது செல்லம்மாள் அவனைப் பார்த்து விட. ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் மறுபக்கம் சந்தோசமாகவும்… நடுங்கும் விழியோடு வெளியில் வந்தாள்.
அவன் வந்த தோரணையும், ஸ்டைலும் ரொம்ப மிடுக்காக அவனைக் காட்ட, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். அவன் நடை, உடை, பாவனை அத்தனையும் இன்று ரொம்பவே மாறிப் போயிருப்பது போல அவளுக்கு தெரிந்தது.
உள்ளே வந்தவன் தன் தந்தையிடம் பேசிய பேச்சும் நடந்து கொண்ட முறையும் ரொம்ப வித்தியாசமாக தெரிந்தது. பெரிய மேல் வர்க்க மக்கள் பந்தாவாக அமர்ந்து நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசுவது போல தமிழை அழகான மொழி என சொல்லும் அளவு நிதானமாக பேசியதும் ஒருமுறை முருகனைச் செல்லம்மாள் ஆச்சிரியத்தோடு பார்த்தாள்.
இவ்வளவு தெளிவும், அறிவும், பேச்சும், திறமையும் பெற்றவனா என் முருகன். எப்படி?…. மனதை குழைந்து அவன் காலடியில் விழுந்து விட தோன்றும் அளவு பேசுகிறவன் உண்மையில் நம் முருகனா என யோசிக்கும் அளவு. அவ்வளவு தெளிவாக நிதானமாக பேசினான். அவள் தந்தையால் அடுத்தொரு வார்த்தை கூட பேச முடியா அளவு வார்த்தையை முட்டு சந்தில் நிறுத்த.
ஆச்சரியத்தில் எல்லார் கண்களும் அவனை மோய்க்க, அதில் செல்லம்மாவின் கண்ணும் இருக்க. சட்டென அவள் புறம் திரும்பியவன்,
“என்ன செல்லம்மா நான் மட்டும் பேசிட்டு இருக்கேன். நீ எதுவும் பேச மாட்டேங்குறா. நீயும் என்ன விரும்புறா தானே… அப்பாட்ட சொன்னா தானே அவருக்கும் தெரியும். நானே பேசிட்டு இருந்தா உனக்கு விருப்பம் இல்லாம நான் வந்து பேசுறதா நினைச்சுக்க மாட்டாங்களா?
என ரொம்ப காணஸ்டா முருகன் பேச ஒரு நொடியில் திகைப்பை மாற்றியவள்.
தன் தந்தையின் காலில் விழுந்தாள். “அப்பா எனக்கு முருகனை ரொம்ப பிடிக்கும்ப்பா… மாமா ரொம்ப குடிகாரர்ப்பா. அவருக்கு கட்டி கொடுத்து என் வாழ்க்கையை கெடுத்திடாதுங்கப்பா. முருகன் ரொம்ப நல்லவர்ப்பா. எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்ப்பா. எங்களை சேர்த்து வைங்கப்பா.”
என செல்லம்மா தகப்பனின் காலில் விழுந்து கதறவும் தன் மகளின் செயல் கொஞ்ச நாளாக வித்தியாசப்பட்டிருப்பதை மனைவி சொல்லியிருந்தாலும் தன் மகளுக்கு இவ்வளவு நேர்த்தியான எந்த கெட்ட பழக்கமும் இல்லாத மாப்பிள்ளை கிடைத்த மகிழ்ச்சியில் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார் செல்லம்மாவின் அப்பா.
வீட்டிற்கு வந்த மாப்பிள்ளைக்கு விருந்து வைத்து தான் அனுப்ப வேண்டும் என கட்டளையிட்டவாறு சிக்கன் கடையை நோக்கி ஓடினார்.
செல்லம்மாவின் பார்வை முருகனையே துளைத்து நின்றது. அவள் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. எல்லாம் கனவு போல் இருந்தது. நேற்று வரை முருகன் இப்படி மிடுக்காக வந்து தன் குடும்பத்தையே திணறடிப்பான் என்றோ, தகப்பன் மனதை ஜெயிப்பான் என்றோ,இவ்வளவு ஈசியாக தன் ஆசை நிறைவேறும் என்றோ, துளியும் நினைக்காத செல்லம்மா முருகனை ஆசையோடு பார்த்து நின்றாள். ஆனால் முருகன் அவள் புறம் திரும்பவே இல்லை. வந்த நொடியில் இருந்து ஒரே ஒரு முறை அதுவும் அவள் அப்பாவிடம் அவளை பேச சொல்லி சொன்ன அந்த ஒரு நேரம் மட்டும் தான் அவளைப் பார்த்தான்.
அப்பார்வையின் வீரியமே இந்த நொடி வரை உள்ளே ஊடுருவி தான் நின்றது. அப்போதிலிருந்து சினேகமான அவன் பார்வையை காண ஆவலோடு அவளே திரும்பி திரும்பி பார்த்தாள். அவனோ தனக்காக ஒருத்தி இருப்பதையே மறந்தவன் போல அவளின் அம்மாவிடமும் தங்கைகளிடமும், பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடமும் கதை பேசிக் கொண்டிருந்தான்.
ஆனால் மொத்தமாய் மாறி உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வை பொங்க செய்து விட்டு எதுவும் நடக்காதது போல் அமர்ந்திருக்கும் அவனை கண்களில் சந்தோஷம் மின்ன பார்த்தாள் செல்லம்மா. உள்ளுக்குள் இருந்த குறுகுறுப்பை மறைக்க முடியாமல்,

“ பாருடா. ஒரு முறை திரும்பி என்னை பாரு. சைலண்டா வந்து அத்தனையும் பொடி பொடியாக்கிட்டு, ஒரு வார வலியையும் மொத்தமா துடைச்சி எறிஞ்சிட்டு எப்படி அசால்டா இருக்கிறா. ஓடி வந்து கட்டி புடிக்கணும் போல தோணுது. நீ என்னடா… எல்லாம் பண்ணிட்டு கண்டுக்கவே மாட்டேங்குறா.”
மனதில் திட்டியவாறு இருக்க, அப்போதும் முருகன் இவள் பக்கம் திரும்பாமலே சுவாரஸ்யமாக அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான். அமைதியின் மறு உருவமாய் இருப்பவனா இவ்வளவு ஜாலியாக பேசி சிரிப்பது? என தோன்றியது அவளுக்கு. அவளால் முருகனின் இந்த மாற்றத்தை நம்பவே முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவள் முன்னால் தானே இருக்கிறான். அப்புறம் எப்படி நம்பாமல் இருப்பது. ஆனாலும் மனதின் அடி ஆழத்தில் ஒரு குழப்பம்.
நேற்று அவன் மார்பில் சாய்ந்து புதைந்து விம்மும் போது கூட அவனின் செயல் இந்த அளவு அவனை மெருகேற்றும், தன் வீட்டிற்கு வந்து, அதுவும் இவ்வளவு தைரியமாக பேச வைக்கும் என அவள் நினைக்கவே இல்லை. தனக்காக அதுவும் தனியாக தன்னந்தனியாக வந்து இவ்வளவு தைரியமா அதுவும் தெளிவோடு பேசும் தைரியம் முருகனிடம் இருந்ததை பார்த்ததும் செல்லம்மா ரொம்ப நெகிழ்ந்து போனாள்.
மாப்பிள்ளைக்கு அன்றைய நாள் செல்லம்மா வீட்டில் விருந்து அமர்க்களப்பட குடும்பமே குதுகலமாய் இருந்த நேரத்தில், வீறிட்டு உள்ளே நுழைந்தார் அவள் மாமா. தனக்கு நிச்சயம் செய்தவளை எப்படி இன்னொருவனுக்கு கொடுக்க முடியும் எனக்கூறி அடியாள்களோடு அடி.தடியில் இறங்க செல்லம்மா பயந்தே போனாள்.
எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் மாமன் கேட்பதாக இல்லை. அதிலும் குடித்துக் கொண்டு வந்த அவனை கட்டுக்குள் நிறுத்த முடியவில்லை. அதை விட அடியாட்கள் கம்போடும், தடியோடும் உள்ளே வர வீடு போர்க்களமானது.
வீட்டில் அனைவரும் பயந்து ஒதுங்க வீட்டினுள் வந்து மாமன் செல்லம்மாவின் கரம் பற்றி இழுக்க,
அப்படி ஒரு ஆவேசம் முருகனுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அவள் அவனிடமிருந்து இப்படி ஒரு முரட்டு அடியை எதிர்பார்க்கவில்லை. முருகன் முற்றிலுமாக மாறி புதிய ஒரு ரூபத்தில் நின்றான். அவள் மாமன் இப்படி ஒரு முரட்டு அடியை தன் வாழ்விலே வாங்கி இருக்க மாட்டான் என்று தான் நினைக்க தோன்றியது. முருகனின் ஒரு அடியிலே அவள் மாமன் சுருண்டு விழ, அடியாட்கள் அத்தனை பேரும் முருகனை சூழ்ந்து கொள்ள, செல்லம்மாவின் மனது தான் பயத்தில் வெளிறிப் போனது.
“தன் கையைப் பிடித்து விட்ட ஆவேசத்தில் அடித்து விட்டான். இப்போது திடுதிடுவென அவனை சுற்றி வளைத்து நிற்கும் பத்து பேரை எப்படி சமாளிக்க போகிறான். ஐயோ அனைவரும் சேர்ந்து முருகனை எதுவும் செய்து விடக்கூடாது என ஓடி அவன் முன் போய் நின்று அடியாட்களை பார்த்து கைகூப்பி நின்று அவள் கெஞ்ச,
அவள் கரம் பற்றி அவன் பின்னே பிடித்து நிறுத்திய முருகன் முன்னால் நின்றவர்களை கடும் கோபத்தோடு பார்த்தான். அடுத்த நொடி பம்பரமாக சுழன்றவன் பத்தே நிமிடத்தில் சட்டையில் இருந்த தூசியை தட்டுவது போல அனைவரையும் துவசம் பண்ண, செல்லம்மா தான் அவனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது என்னோட முருகனா!!!”
இந்த ஆச்சரியத்தில் இமைக்க மறந்து அப்படியே சிலையாக நின்றாள். முருகனின் முரட்டு அடியில் சுருண்ட அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என ஓட்டம் புடிக்க,
மாப்பிள்ளையின் வீரத்தையும், விவேகத்தையும் பார்த்த செல்லம்மாவின் குடும்பம் அவனை தூக்கி வைத்துக் கொண்டாட தொடங்கியது. செல்லம்மாவின் உள்ளமோ குளிர்ந்து போனது. அதிலும் தங்கைகளின் சீண்டலும், முருகனின் வித்தியாசமான அணுகுமுறையும் அவளை வேறு ஒரு உலகில் சஞ்சரிக்க செய்திருந்தது.
அவள் தாய் முனியம்மா விதம் விதமாய் ஆக்கிப்போட்டு மாப்பிள்ளையை உபசரிக்க தொடங்கினாள். பக்கத்து வீட்டு , எதிர் வீட்டு பொண்ணுங்க செல்லம்மாவுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையா? என கண்ணில் பொறாமையோடு பார்த்து நிற்க. செல்லம்மா மட்டும் இது நம்ம முருகனா? என வாய் பிளந்து விழி மூடாமல் அவனையே பார்த்தவாறே உறைந்து போய் நின்றிருந்தாள்.
அவளின் சந்தோஷத்தை யாரிடமாவது கொட்ட வேண்டும் என உள்ளம் துடிக்க,
முருகன் விடை பெற்று சென்ற அரை மணி நேரத்திலேயே கோவிலுக்கு போய் விட்டு வருகிறேன் என அவன் ஆக்கர் கடையை நோக்கி விரைந்தான்.
அவ்வளவு சந்தோசத்தோடு உள்ளே வந்த செல்லம்மாவை கண்டதும் பறட்டை தான் வழி மறித்தான்.
“என்ன செல்லு… ரொம்ப ஹேப்பியா காலையிலேயே வந்திருக்கா… ஏதாவது நல்ல விசயமா?”
“நல்ல விசயமாணா கேட்கிறா? அப்படிணா உங்களுக்கு விசயமே தெரியாதா?”
“என்ன விசயம்.”
குள்ளனும் ஆர்வமாக அருகில் வர,
“முருகன் இன்று என் வீட்டுக்கு வந்தது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?.”
“என்னது!!!?…நம்ம முருகனா?”
இருவரும் சேர்ந்துதான் கேட்டனர்.
செல்லம்மா விழி விரிய பூரிப்போடு நடந்த அனைத்தையும் சொல்ல,
இருவரும் திகைத்து விட்டனர்.
“நம்ம முருகனா உன்னை தேடி உன் வீடு வரை வந்தது.”
“பறட்ட நீ பார்க்கணுமே. சினிமால கூட நீ இப்படி ஒரு சண்டைக் காட்சி பாத்திருக்க மாட்டா. அப்படி ஒரு பேய் அடி. அடிக்கிறான் அடிக்கிறான் விடாம அடிக்கிறான். ஒருத்தன் இல்ல… சும்மா பொறக்கி போட்டு தூள் கிளப்பிட்டான். இவன் அடியை தாங்காம என் மாமன் காலுல விழுந்துட்டானா பாத்துக்க.”
“என்ன செல்லு…அவன் வீடு வரை வந்து பொண்ணு கேட்டு உன் அப்பாவ சம்மதிக்க வச்சிட்டாணு இப்படி பொய் எல்லாம் புழுக வேணாம். நம்ம ஆளுக்கு எந்த அளவு அடிக்க வரும்னு எங்களுக்கு நல்லா தெரியும். செத்துப் போன எலியை அடிணு சொன்னாலே பத்து மீட்டர் தூரமாய் ஓடுவான். ஒரு காலி பையன் அவன் கன்னத்துல கம்பியால கிழிச்சப்பா கூட நாங்க தான் போய் மல்லுக்கட்டி நின்னோம். அவன் எங்களை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்தான். அவனாவது உன் வீட்டுக்கு வந்து உன் மாமனையும், அடியாளையும் அடிக்கிறதாவது”
“அப்படிணா நீ நம்பலியா?… உண்மையடா. குள்ளா நீ நம்புறியா?”
“உன் காதலன் வீர சூரன் தான். ஆனா எந்த அளவுணு எங்களுக்கும் தெரியும்.”
குள்ளன் நக்கலாக சிரிக்க,
“அப்படிணா நீங்க நம்பலியா?”
“நம்புற மாதிரி சொல்லணும். பல்லு இல்லாத பாம்புக்கு விஷம் அதிகம்னு சொன்னா எப்படி நம்புறது.”
அதே நேரம் முருகன் உள்ளே வர,
“ என்ன மாநாடு இன்னும் முடியலியா?”
“அவா அவ வருங்கால புருஷனோட வீர தீர செயலை புகழ்ந்து தள்ளிட்டிருக்கிறா? எல்லாம் எங்க நேரம். என்ன சொன்னாலும் கேட்கணும்னு இருக்கு. எங்களையும் கூட கூட்டிட்டு போயிருந்தியணா இவா இப்படி வந்து பேசுறத கேட்க வேண்டி வருமா?”
“ அப்படிணா நீங்க நம்பல. நான் சொல்லுறதுல உங்களுக்கு நம்பிக்கை வரல அப்படித்தானே? நேர்ல்ல பார்த்த என்னாலயே நம்ப முடியல. நீங்க நம்புனா தான் ஆச்சரியம். ஆனா அவன் செயலை பார்த்து பிரமிச்சு போய் என் தங்கச்சி அப்பாவோட செல்போன்ல சண்டையை பதிவு பண்ணி வச்சிருக்கா வீட்டுக்கு வரும் போது காட்டுறேன்.”
“பார்ப்போம்… பார்ப்போம்.”
“ டே… நீ சொல்லுடா. பாரு. நான் சொல்ல சொல்ல நக்கலா சிரிக்கிறானுங்க. கொஞ்சம் கூட இவனுங்க நம்பல பாரு.”
செல்லம்மா சிணுங்க…
“அவனுங்க கிடக்கிறாங்க. நீ கிளம்பு. இல்ல ஹோட்டல்ல உனக்கு தான் திட்டு விழும்.”
“நான் இன்று ஹோட்டல் போகல முருகா.”
“ என்ன நீ இப்படி அடிக்கடி லீவு போட்டா வேலையை ஒரேயடியா விடலாம்னு திட்டமா?”
பறட்டை இழுக்க,
“ஏன்? இனி நான் எதுக்கு வேலைக்கு போகணும். என் முருகன் என்னை பார்த்துக்க மாட்டானா?”
“அது எல்லாம் முடியாது. செல்லு எங்க முருகன் பாவம். எப்படியும் மேரேஜ் முடிஞ்சதுக்கு அப்புறம் நீ வேலைக்கு போய் தான் ஆகணும்.”
“ஆங்… ஆசை தோசை. இனி நான் எங்கேயும் வேலைக்கு போக மாட்டேன்.”
செல்லம்மா சொல்ல,
“பாவம் டா நீ…”
முருகனைப் பறட்டை பார்க்க,
“ உன் ஒருத்தன் வருமானத்தை வைத்து தான் நீ உன் குடும்பத்தையே பார்த்தாகணும்.”
என பறட்டை பாவமாக முருகனைப் பார்த்து நக்கலாக சிரிக்க,
“எதுக்கு ஒரு வருமானத்தை வச்சிட்டு குடும்பத்தை நடத்தணும். அது தான் என் கைக்கு மூணு வருமானம் வரப்போகுதே, அதை வச்சி நான் அழகா குடும்பம் நடத்துவேன்.”
“மூணு வருமானமா?”
முருகன் தான் கேட்க,
“அப்புறம். இவனுங்களை அப்படியே விட முடியுமா?நான் வந்திட்டு உங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணுறேணு பாருங்க.”
செல்லம்மா சொல்ல முருகன் வாய் விட்டு சிரித்தான்.
“பறட்டை மாட்டுனியா… அப்போ நீ என்ன சொன்னா? என்னை அடக்க அண்ணியை தயார் பண்ணுறியா. உன்னை அடக்க சரியான ஆளை நான் தயார் பண்ணிட்டேன்.”
முருகன் சொல்லி சிரிக்க,
குள்ளன் நெகிழ்ச்சியோடு அவளைப் பார்த்தான்.
“எப்பவும் எங்களுக்கு யாருமில்ல. எந்த உறவும் இல்ல. நாங்கள் அனாதைணு சொல்லுவாலியா குள்ளா. நாமளே உறவாகிட வேண்டியது தான். நான் வந்த பிறகு நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்திடுங்க. எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்.”
செல்லம்மா இப்படி சொன்னதும் பறட்டையும் குள்ளனும் நெகிழ்ந்து போயினர்.
“சரிப்பா நான் கிளம்புறேன். கோவிலுக்கு போயிட்டு வரேணு சொல்லிட்டு வந்தேன். அம்மா வேற ஜாதகம் கேட்க போகணும்னு சொல்லிட்டு இருந்துச்சு. நான் வரேன்.” செல்லம்மா கிளம்ப,
முருகன் முகம் லேசாக மாறியது. இது வரை சிரிப்பது போல பாசாங்கு காட்டிக் கொண்டிருந்தவன், குள்ளனின் பக்கத்திலிருந்து நீங்கி போய் தனிமையான ஒரு இடத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தான். மனது ஏனோ வேலையில் ஒட்டவில்லை. தலையை வான் நோக்கி உயர்த்தி தலை சாய்த்திருக்க. அவன் கண்கள் மட்டும் மூடியே இருந்தது. அக்கண்ணுக்குள் தெரிந்த குழப்பமும், சோர்வும் அவனை கலங்கடித்து கொண்டிருக்க,
“என்ன இவன்? நேற்று ஒரு மாதிரி இருந்தான். செல்லம்மா கிடைக்க மாட்டாளோனு வருத்தத்துல இருக்காணு நினைச்சேன். காலையில சோர்வா இருக்கும் போது கூட செல்லம்மா வந்து அழுதுட்டு போனதுனால அப்படி இருக்காணு நினைச்சேன். ஆனா இப்ப தான் எல்லாம் சந்தோஷமா முடிஞ்சு தனியா போய் துணிச்சலா பேசி செல்லம்மாவை கட்டிக்க அவள் குடும்பத்தில் போய் சம்மதம் வாங்கிட்டு வந்துட்டானே. செல்லம்மா ரொம்ப மிகைப்படுத்தி சொன்னாலும் இவன் போனதும் பேசினதும், அவங்க வீட்டுல சம்மதித்ததும் உண்மையாக தானே இருக்கும். அப்படி இருக்க கூத்தும் கும்மாளமாய் இருக்க வேண்டிய இந்நேரம் ஏன் இவன் இப்படி சோகமா இருக்கான்.”
“செல்லம்மா அவ்வளவு சந்தோசமா பேசும் போது கூட இவன் முகம் எதுவோ போலவும், இடையில் கஷ்டப்பட்டு சிரிப்பது போலவும் தான் இருந்தான். என்ன ஆச்சு இவனுக்கு. இவ்வளவு நல்ல விசயம் நடந்த பிறகும் இவன் ஏன் குழப்பமா தெரிகிறான்.”
யோசனையோடு செய்து கொண்டிருந்த வேலையை இடையில் நிறுத்திக் கொண்டு முருகன் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்தான்.
“ஏண்டா முருகா இங்க வந்து தனியா உக்காந்துட்டா. எவ்வளவு சந்தோஷமான விசயம் நடந்திருக்கு. எங்களை எல்லாம் கூட்டிட்டு போகக் கூடாதுணு எங்க யார்கிட்ட சொல்லாம போயிட்டு சக்சஸோட திரும்பி வந்திருக்கா. ஆக்கர் கடையையே சந்தோஷத்துல உண்டு இல்லணு பண்ணுவானு பாத்தா, எல்லாத்தையும் பறி கொடுத்தது போல ஒரு மூஞ்சிய வச்சிட்டு இங்க வந்து குந்திகிட்டா.”
“அது… வந்து குள்ளா…”
முருகன் எப்படி சொல்ல என தெரியாமல் குழம்ப,
“ நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்குறேன். நீ சரியே இல்ல. எப்பவும் எதையோ போட்டு மனச குழப்பிட்டு இருக்கிற மாதிரி தான் தெரியுது. உம்மூனு ஒரு மூஞ்சியை வச்சுக்கிட்டு துக்க வீட்டில் இருக்கிறது போல தான் எப்பவும் இருக்கிறா? ஏண்டா அப்படி இருக்கிறா? சில விசயம் நமக்கு சரியில்லாமல் நடந்து போச்சு தான். அதையே நினைச்சிட்டிருந்தா எப்படி? பழையதை விடு. நடந்த எதையும் நம்மளால மாத்த முடியாது. இப்ப தான் எல்லாம் சரியாயிடுச்சே. நாம நினைச்சி பாக்காத ஒரு நல்ல விசயம் உன் வாழ்க்கையில் நடந்திருக்கு. அதை அனுபவிச்சிட்டு சந்தோசமா இருக்கிறத விட்டுட்டு எதையோ இழந்தது போல ஏண்டா இருக்கிறா?”
“செல்லம்மாவோட முகத்தை பாத்தியா? அந்த முகத்துல தெரிந்த சந்தோஷத்த பாத்தியா? நீ இப்படி ஒரு சூப்பர் எண்ட்டிரிய கொடுப்பாணு. அவா துளி கூட எதிர்பார்த்திருக்க மாட்டா. அடித்தூள் பண்ணிட்டானு நீ வருகிறதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால ஒரு கச்சேரியை நடத்தி முடிச்சிட்டாணா பாத்துக்க. நீ அப்படி பேசுனா ? இப்படி பேசுனா ? அவன் கன்னத்தில் இப்படி குத்துனா ? அப்படி குத்துனா ? அப்படினு செய்தே காட்டிட்டா. நீ நடந்த ஸ்டைல், உட்கார்ந்து பேசுன அழகு எல்லாம் வாய் மூடாம சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டா ? ஆனால் நீ ஏண்டா இப்படி இருக்குறா?”
“காதல் சக்ஸஸ் ஆன சந்தோஷம் அவள் முகத்துல அப்பட்டமா தெரியுது. ஆனா உன் முகத்துல அந்த சந்தோஷம் துளி கூட இல்லையே ஏண்டா?”
“………..”
இவ்வளவு பேசியும், முருகன் கவிழ்ந்தே இருக்க,
“எதுவாயிருந்தாலும் சொல்லி தொலைடா.”
குள்ளன் அவனை உசுப்ப ,
“குள்ளா… குள்ளா…”
முருகனின் கண்கள் ஒரு முறை குள்ளனின் கண்களை சந்திக்க, பயத்தின் ரேகைகள் முருகனின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. வினோதமாய் அவனையே உற்று நோக்கிய குள்ளனின் விழியை பார்க்க திராணியின்றி தலை குனிந்தவனாய்…
“குள்ளா…நான்…நான்… செல்லம்மா வீட்டுக்கு போனது போல…எனக்கு நியாபகமே இல்லடா ?”
என்றதும் பெரிய குண்டு வந்து தலையில் விழுந்தது போல திடுக்கிட்டு திரும்பினான் குள்ளன்.
திகில் தொடரும்…
Tamil Thriller Novel



