வணக்கம் வாசகர்களே!
முருகன் அந்த காட்டு பாதையில் யாரை தேடி அலைகிறான். ஏன் அத்தனை தடியர்களையும் போட்டு அடிக்கிறான்
யாரை தேடி அலைகிறான் முருகன்
வெறி கொண்ட மிருகம் போல ஆவேசமாக நடந்த முருகன் மெயின் ரோட்டை தாண்டி கீழே இறங்கிய அந்த ஒற்றையடி பாதையில் மிக ஆக்ரோஷமாய் ஓடினான். சுத்தி வீடுகளே இல்லாத இடத்தில் அவன் யாரையோ தேடினான். சில மரங்களில் பக்கத்தில் போய் நின்று கூர்ந்து கூர்ந்து கவனித்தான்.
கடைசியில் அது இல்லை என மனது தீர்மானித்தவுடன் சுற்றி சுற்றி பார்த்தான். மனது இது இல்லை என கூறிக் கொண்டதோ என்னவோ திரும்பி திரும்பி ஒவ்வொரு மரமாக பார்த்தான். முடிவில் அங்கிருந்து அதே ஆவேசத்தோடு முன்னோக்கி மறுபடியும் ஓடினான். சிறிது தூரத்திலேயே மூன்று வழி பாதை தெரிய மூன்று வழி பாதையும் மூன்று திசையில் பயணிக்க அதன் பக்கத்தில் வந்ததும் எதையோ கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் ஒரு பேய் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். வானை நோக்கி தலையை உயர்த்தி அவன் சிரித்த சிரிப்பில் மரத்தினை வாழிடமாக்கி இருந்த பறவை கூட்டம் கூட பயத்தில் ஓட்டம் பிடித்தன.

அந்தப் பாதைக்கு வந்ததும் அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தாண்டவம் ஆட, தன் இரு தொடையையும் இரு கையால் அடித்து தலையை இருபுறமும் திருப்பிக் கொண்டு அவன் கோரமாய் சிரித்தான். அதன் பின் அப்பாதையை கூர்ந்து கவனித்தவன் ஒரு பாதை வழியே தலைதெறிக்க ஓடினான். சிறிது தூரம் சென்றதும் ஒரு ஓடை குறுக்கிட ஓடையின் பக்கத்தில் வந்ததும் என்ன நினைத்தானோ,
ஓவென குரல் எடுத்து அழுதான்.தன் தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதான். அவன் அழுகை தாங்க முடியாத மனவலியில் இருக்கும் ஒருவரின் அழுகையை ஒத்திருந்தது. இழக்கக்கூடாத எதையோ இழந்து கிடைக்கும் ஒரு மனதின் வலியை அது காட்டியது. உயிரான உறவை இழந்து தவிக்கும் ஒரு வருத்தமான அழுகையை அது காட்டியது.
சொல்லத் தெரியாமல் யாரிடமும் சொல்ல முடியாத சொல்லில் அடங்காத உணர்ச்சி ஒன்று அவன் முகத்தில் அந்தநொடி வந்து அமர்ந்தது. ஒரு முறை பொங்கி அழுதும் மறுபுறம் கொக்கரித்து சிரிப்பதுமாக இருந்தான்.
ஓடையின் நடுவில் இருந்த பாறையைப் பார்த்ததும் ஓடி சென்று அதன் மேல் ஏறியவன்.
“பிடி… என்ன பிடி. நீ என்னை பிடிச்சிடவே மாட்டா. நான் உன் கையில சிக்கவே மாட்டேன். உன்னால இந்த தண்ணியை தாண்டி என் பக்கம் வரவே முடியாது.”
என கை கொட்டி சிரித்தான். அப்படி அவன் யாரிடம் பேசுகிறான் என்று கூட தெரியவில்லை. பக்கத்தில் மிக நெருக்கத்தில் யாரோ அவனோடு இருப்பது போல நினைத்து கொஞ்ச நேரம் பேசுவதும், சிரிப்பதும், அதோட விளையாடுவதுமாக போக்கு காட்டியவர் திடீரென ஒரு பக்கம் திரும்பி, மொத்தமாய் மாற்றம் பெற்றவன் போல… பயந்த விழியையும், படபடத்த உதட்டோடும்,
“பக்கத்துல வந்தீங்க கொன்னுடுவேன்.”
என கண்களை கோரமாக முறைத்தும், பற்களை நரநரவென கடித்தும், கையையும் காலையும் தூக்கி யாரையோ பக்கத்தில் நெருங்க விடாமல் காப்பாற்ற போராடுவது போலவும் அவன் செயல் இருந்தது.
அடிக்கடி துடித்து அழுவதும், சில நேரம் ஆவேசமாக யாரையோ துரத்துவது போல ஓடவும், சில நேரம் தன்னை தானே தண்டிப்பது போல தன்னையே தன் இரு கையாலும் அறைந்து கொள்வதுமாக மாறி மாறி எதையெதையோ செய்தான்.
கடைசியில் ஆற்றின் உள்குதித்து யாரையோ தேடினான். ஒரு துணி மிதந்து கொண்டு இருக்க ஓடி சென்றவன் அதை எடுத்துப் பார்த்தான். அது ஒரு மஞ்சள் கலர் துப்பட்டா. ஒரு முள் செடியில் தொற்றிக் கொண்டு நின்றது. அதை எடுத்தவன் தன் இரு கையாலும் தாங்கிக் கொண்டு அதை தன் முகத்தில் அருகில் கொண்டு சென்று முகம் புதைத்து விம்மினான். பத்து நிமிடம் அதே இடத்தில் அப்படியே நின்றவன்,
சிறிது நேரத்தில் முகம் மாறி கோரமாய் காட்சியளிக்க, அந்தத் துப்பட்டாவை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு பொறுக்க முடியாமல் வானோக்கி தலையை உயர்த்தி ஆக்ரோஷமாக காட்டியவன், பின் அதே வலியோடு துப்பட்டாவை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு ஆவேசமாக மேல் நோக்கி நடக்கத் தொடங்கினான்.
சுற்றி வீடுகளே இல்லாத காட்டுப்பகுதி போன்ற அந்த இடத்தில், ஆட்கள் நடமாட்டமே சுத்தமாக இல்லாத அந்த இடத்தில் இவன் யாரை தேடினான். சுத்தி சுத்தி ஓடி யாரையோ அவன் தேடுவது போல் தான் இருந்தது. பல பல இடங்களில் சென்று கூர்ந்து பார்த்தான். சில மரங்களை தொட்டுப் பார்த்தான். அதன் பின் மறுபடியும் அங்கிருந்து ஓடினான். கொஞ்ச தூரம் சென்றதும் எதையோ கண்டுவிட்ட உணர்வில் ஓடி சென்று ஒரு மரத்தை கட்டிக்கொண்டு குரல் எடுத்து அழுதான்.
அவன் அழுகை பொறுக்க முடியாத வலியை சுமந்தவன் அந்த வலியை மறக்க முடியாமல் பொங்கிப் பொங்கி அழுவதை போல் தான் இருந்தது. கீழே ஒரு கயிறு கிடந்தது. அதை கையில் எடுத்தவன் கண்களில் புருவத்தை ஏற்றி அதை பார்த்து கோபமாக அதை எடுத்து இடுப்பில் சுத்தி கட்டிக்கொண்டான்.
அதன்பின் மேற்கு திசையை நோக்கி ஓடினான். ஒரு தென்னந்தோப்பு முதல் முறையாக கண்ணில் பட்டது அதன் அடுத்த நிறைய வயல் வரப்புகள் இருந்தன. பக்கத்தில் ஏதோ ஒரு ஊர் இருக்கும் போல மனசு சொல்கிறது. ஒருவேளை இவன் அந்த ஊரில் யாரையாவது பார்க்க செல்கிறாரோ என நினைக்கையில் அதை பொய்யாக்கி கொண்டு ஒரு கல்லின் மேல் குத்துக்கால் போட்டு அமர்ந்தான்.
சிறிது நேரம் அப்படியே இருந்தவன் அந்த தோப்புக்குள்ளே ஓடினான். சிறிது தூரம் சென்றதும் அந்த பெரிய தோப்பில் எல்லையில் ஒரு குட்டி வீடு தெரிந்தது.
“இந்த இடத்தில் எவன் வீடு கட்டி தங்கி உள்ளான்.”
என நினைப்பதற்குள்ளே முருகன் ஆவேசமாக அவ்வீட்டை நோக்கி ஓடினான். முன்னால் சென்றவன் ஒற்றை நொடி யோசித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்துக்குள் புயலாக வீட்டினுள் நுழைந்தான்.
அதுவும்,
“டேய்…”
என்று குரல் கொடுத்துக் கொண்டு,
அவனின் அர்ச்சனை காட்டேரி ஒன்று உரு பெற்று வருவது போல் தான் இருந்தது.
உள்ளே சரக்கோடு மல்லுக்கட்டி கொண்டு குடியும் கும்மாளமாக இருந்தது ஒரு கும்பல். அத்தனை உருவமும் 200, 300 கிலோ சதையை சுமந்து நின்றது. ஒவ்வொரு தடியனும் மிகவும் மோசமானவர்கள் என்பதை அவர்கள் இருந்த இடமும் அவர்களின் நடவடிக்கைகளுமே சொன்னது. அதிலும் நடுநாயகமாக இருந்தவன் கொஞ்சம் சின்ன சைஸில் தான் இருந்தான். ஆனால் முறுக்கேறிய உடம்போடு வீரத்தடியன் போல இருந்தான். அவன் கரிய உடலும், சிவந்த கண்ணும் பார்ப்பதற்கே பயப்படும் நிலையில் தான் இருந்தான்.
அவர்கள் முன் போய் சீறிக்கொண்டு நின்ற முருகனைப் பார்த்ததும் உள்ளிருந்தவன் எல்லாம் கை கொட்டி சிரித்தனர்.
“ யாருடா நீ வலிய வந்து பாம்பு புத்துல கையை விட்றா?”
ஒருவன் நக்கலாக சிரிக்க,
“வேற யாரு . நம்மால பாதிக்கப்பட்டவனா இருக்கும். அவன் நிற்கிற நிலைய பார்த்தா தெரியல.”
என்றான் வேறொருவன்.
“தப்பு தம்பி. தப்பு. என்னால பாதிக்கப்பட்டவன் எல்லாம் இப்படி வந்தா நான் எப்படி வாழ்றது. ஒன்னு நடந்தா நடந்து போச்சுன்னு விட்டுட்டு போவியா? அதுக்காக இப்படி காட்டுப்பகுதிக்கெல்லாம் தனியாவா வருகிறது. இப்ப பாரு. உன் உசுரும் போக போகுதே அநியாயமா?”
என முருகனின் அருகில் வந்தான் வாட்டசாட்டமான ஒருவன் கையில் சுருட்டு பீடியோடு.
“ஆமா நீ யாரு. நான் உன்னை இதுவரை பார்த்ததே இல்லையே. டேய்… உங்களுல யாருக்காவது இவனை ஞாபகம் இருக்குதா?”
“இல்லையே…”
என எல்லாரும் நக்கலாக சிரிக்க,
“சொல்லுங்கடா எந்தப் பாவத்தோட சம்பளம்ணு தெரியாம கொன்னு புதைச்சா எப்படி?… முதல்ல இவன் யாருன்னு விசாரிங்கடா.”
என்றான் அதட்டலாக தலைவனாக இருந்தவன்.
“புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்தால் இப்படித்தான். பச்ச புள்ள போல இருக்கிற நீ ஏன்டா இங்க வந்து மாட்டிக்கிறா . சொல்லு… சொல்லு. நீ எவன் பெத்த புள்ள. இல்ல… எவளோட அண்ணன். இல்ல நீ எங்களுட்ட தொலைச்சதை லவ் பண்ணுவனா ? எந்த பொண்ணோட உறவுன்னு சொல்லுடா.”
என சிறு பிள்ளை என நினைத்து நக்கலோடு அவன் தோள் மேல் கை போட்டுக்கொண்டு அவன் மேலே வாயை தூக்கிக் கொண்டு கேட்க,
முதலாமவனோ…
“டேய் சீக்கிரம் முடிச்சிட்டு வாடா. சீட்டு ஆடுற மூடே போச்சு.”
என மற்றவர்களோடு சீட்டாட்டத்தில் அமர, அவர்கள் அனைவரும் குடித்துக்கொண்டே சீட்டைப் போட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த கூட்டத்தில் நடுவில் வந்து பொத்தென விழுந்தான் முருகனின் அருகில் போய் வம்பு இழுத்த தடியன். ஒரே அடியில் அவன் முகம் சிதைந்து பார்க்கக் கோரமாய் … அதுவும் விழுந்தயிடத்திலிருந்து எழும்ப முடியாமல், அவன் துடித்த துடிப்பை பார்த்ததும் கூட்டம் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தது. உருவத்தை பார்த்து தப்பு கணக்கு போட்டு விட்டது புரிய,
அதே நேரம் முருகனோ இரு கையையும் முன்னே தூக்கிக்கொண்டு வீரஆவேசமாக …
“வாங்கடா வாங்க . உங்களை பொலி போடாம நான் போகமாட்டேன். வாங்கடா வாங்க .”
அவன் கர்ச்சனையும் ஆவேசத்தையும் பார்த்த கூட்டம் பயந்து நடுங்கினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்…
“என்னடா இவன் அடங்க மாட்டான் போல இருக்கு. எடுங்கடா அந்த அரிவாளை…”
என ஒருவன் வெகுண்டெழ அனைவரும் கத்தியோடும் கம்போடும் அவன் அருகில் வந்தனர்.
“பச்ச புள்ள. பாவம். எல்லாரும் சேர்ந்து தர்ம அடி அடிக்க வேணாம்னு பார்த்தா ரொம்ப தான் சிலித்துட்டிருக்கிறா…’
என முன்னால்அரிவாளோடு போனவனின் கையைப் பிடித்து திருகி அதை உடைத்து கழுத்து பகுதியில் ஓங்கி ஒரு குத்து விட அவன் நிலை தடுமாறி அவ்விடத்திலேயே விழ .
அதைப் பார்த்த மொத்த கூட்டமும் ஒருமுறை பின்வாங்கியது. முருகன் கொலை வெறி கொண்ட மிருகம் போல அங்கிருந்த அனைவரையும் பந்தாடத் தொடங்கினான்.
ஒவ்வொரு அடியும் இடி போல இறங்க, குண்டர்கள் கூட எழும்ப முடியாமல் தரையில் விழுந்து புரண்டனர். ஒவ்வொருவரின் கையும் காலும் ஒடிந்து ஆட்டம் காண ஒருத்தனாலும் முருகனை அசைக்க முடியாதது தான் ஆச்சரியம்.
எல்லாரையும் அடித்து போட்ட முருகன் ஒவ்வொருவரின் அருகில் வந்து பார்த்தான். இன்னும் இரண்டு மாதத்திற்கு இதில் ஒருவனாலும் எழுந்து நடக்க முடியாது என முடிவு செய்த முருகன் அவ்விடம் விட்டு நீங்கி உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடினான். ஆனால் அவன் தேடி வந்தது அங்கு இல்லை.
நெல் மூட்டையாக அடுக்கி வைத்திருந்த இடத்தின் அருகில் வந்து ஒவ்வொன்றாக நீக்கி நீக்கி பார்த்தான். சிறு இடம் இருந்தாலும் விலக்கிக் கொண்டு போய் பார்த்தான். ஆனால் அவன் தேடியது கிடைக்கவில்லை போலும். மறு அறைக்குள் நுழைந்தால் கூட்டமாக தேங்காய் இருந்தாலும் பார்த்த உடனே தெரிந்து போனது நிச்சயம் இந்த அறையில் தான் தேடி வந்தது இல்லை என்று.
இப்படி ஒவ்வொரு அறையாக சென்று பைத்தியம் பிடித்தவன் போல தேடினான். பொருட்களை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தான். வீட்டை சுற்றி ஓடினான். தோட்டத்தில் ஓடிப் பார்த்தான். ஓலையால் கட்டப்பட்டிருந்த குடிசைக்குள் சென்று பார்த்தான். கற்களை குவித்து வைத்திருந்த குவியலுக்கு அருகில் சென்று பார்த்தான். மொத்தத்தில் அங்கு அவன் பார்க்காத இடமே இல்லை என சொல்லும் அளவு சல்லடை போட்டு தேடிவிட்டான். தேடிவந்தது கிடைக்காமல் போகவே முருகன் குரல் எடுத்து அலறத் தொடங்கினான். அவன் அழுகை ஆயிரம் யானைகளின் கர்ச்சனையை போல் அவ்வளவு கொடூரமாய் இருந்தது.
அவனின் குரலும் அலறலும் கேட்டு உள்ளே வலியில் புரண்டிருந்த கூட்டம் நடுநடுங்கிப் போனது. தேடி வந்தது கிடைக்காத ஆவேசம் அவன் கண்ணில் தெரிய, வெறிகொண்ட புலி போல பாய்ந்து உள்ளே வந்தான். கர்ச்சிக்கும் குரலோடும்,நெருப்பு கண்களோடும், கன்னத்தில் சதைகள் எல்லாம் துடிதுடிக்க ஆவேசம் கொண்டு,
“என் மைனா எங்கடா…”
என அந்த வீடு அதிரும் அளவு சத்தமிட்டவன்.
“சொல்லுங்க. இல்ல கொன்னு புதைத்து விடுவேன். என் மைனா எங்கடா…”
என்றான் அடிக்குரலே வெளிவரும் அளவு சீறிக்கொண்டு,
அவன் வாயிலிருந்து அப்பெயரைக் கேட்டதும் அதுவும் இவ்வளவு வெறியோடு கேட்டதும், பேய் அறைந்தவர்கள் போல் பயத்தோடு அவனைப் பார்த்தனர் அக்கண்ணில் தெரிந்த அதிர்ச்சி, அந்த நொடி முகம் சுமந்து நின்ற பய உணர்வு, அத்தனையும் அவன் ஈரக்குலையே நடுங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக காட்டியது. பீதியோடு அவனைப் பார்த்தனர். ஓடி சென்ற முருகன் ஆவேசமாக அதில் கிடந்த ஒருவரின் நெஞ்சு பகுதியை மிதித்துக்கொண்டு அதே கர்ச்சிக்கும் குரலில்…
மறுபடியும்
“சொல்லுங்கடா என் மைனா எங்க …”
என்ன கேட்க, சர்வமும் ஒடுங்கிப் போய் அனைவரும் அவனை பார்த்தனர்.
அவன் சொல்லிய பெயரைக் கேட்டதும் அனைவரும் உள்ளமும் பயத்தில் நடுநடுங்க ஆரம்பித்தது. அன்றைய நாள் முதலாளியோடு அந்த கானகத்தில் அவர்கள் செய்த பெரும் பாவம் மன கண்ணில் எல்லாருக்குமே வந்தது. குடிபோதையிலும், மோக பார்வையிலும் திமிர் தனத்தின் உச்சமாக நின்று ஆடியது அங்கிருந்த அனைவரின் மனதிலும் பயத்தோடு விரிந்தது.
அத்தியாயம் தொடரும்…
Tamil Thriller Novel



