வணக்கம் வாசகர்களே!
மலைகோவில் தன் காதலியை தேடி அலையும் முருகன்? ஆனால் அவளை காணாமல் தவிக்கிறான். இவனை வர சொல்லி விட்டு அவள் காதலி எங்கே போனாள்?
காதலியை தேடி அலையும் முருகன்
முருகன் கண் திறந்த போது அவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். எழ முடியாமல் உடம்பு புண்ணாக வலித்தது. ஏன் தனக்கு இவ்வளவு வேதனையாக இருக்கிறது. உடம்பை ஆட்ட கூட முடியவில்லை. எண்ணியவாறு லேசாக சரிந்து மெதுவாக எழும்பியவன் தன்னை ஒரு முறை பார்த்தான்.
“இது யாரோட துணி எதுக்கு நான் போட்டு இருக்கேன். ஆமா புது துணி போட்டுட்டு நாம ஏன் தூங்குறோம். இந்த துணி ஏன் இவ்வளவு கசங்கி போய் இருக்கு. அழுக்காக கூட இருக்கு.”
எண்ணியவாறு மெதுவாக எழுந்தவன் வெளியில் பார்த்தான் பகல் பொழுது வெளிச்சம் உள்வரை சுள் என அடித்தது.
“ இந்தப் பகல் நேரம் நாம ஏன் தூங்கறோம்…”
எண்ணங்கள் எங்கெங்கோ சென்ற படி மனது ஒரு நிலையில் இல்லாமல் தவிக்க, கையில் இருந்த வாட்ச்சை கழற்றி ஆணியில் போட்டவன் துணியை கழற்றியவாறு பின்புறம் வந்தான்.
“எனக்கு என்ன ஆச்சு. புது துணி எதுக்காக போட்டோம். ஐயோ! செல்லம்மா… செல்லம்மாவ பாக்க போகத்தானே நாம புது துணி போட்டோம். போட்டுட்டு எப்படி தூங்கி போனோம். ஏன் நம்முடைய துணி இவ்வளவு கசங்கி போய் இருக்கு. உடம்பு ஏன் இந்த அளவு வலிக்குது. என்ன ஆச்சு எனக்கு.”
யோசனையோடு வெளிவந்தவன் குளித்து முடித்து பிரஷ் ஆகி பின் பழைய துணி ஒன்றை எடுத்து போட்டுக் கொண்டு புலம்பிய மனதை ஓரம் கட்டி வைத்துவிட்டு செல்லம்மா நம்மை தேடிக் கொண்டு மலை கோயிலில் நமக்காக காத்திருப்பா. இப்பவே நேரம் பிந்தியிருக்கும். என மனதிடமே கூறிக் கொண்டவன் அவசரமாக மலைக் கோயிலை நோக்கி விரைந்தான். மலை ஏற ஏற …
“ என் செல்லமா போயிருக்கக் கூடாது…”
என மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.
“கைகூடி வரக்கூடிய நேரம் இப்படி சொதப்பி விட்டதே. நான் இப்படி சொதப்ப கூடாதுன்னு பறட்டை வேலை முடிக்க துணை நின்னு அனுப்பிய பிறகு கூட நாம சொதப்பி கொண்டு இருக்கிறோமே. எவ்வளவு ஆசையாக புது துணி எடுத்து தந்தான் குள்ளன். அதை போய் தரையில் புரண்டு நாசம் பண்ணிட்டோமே…”
“முதல் நாளே பிந்தி போறோம். அவள் எப்படி எடுத்துக் கொள்வாள். நான் ஒரு மடையன். கைக்கு எட்டும் நேரம் இப்படியா தூங்குறது. எத்தனை நாள் ஆசையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்த நாள். ஆனா வாழ்க்கையில கிடைச்ச போது கோட்டை விட்டுக் கொண்டு இருக்கிறேனே.”
என யோசித்தவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டு மலை கோயிலை நோக்கி விரைந்தான்.
“நல்ல வேளை இப்போதாவது விழிப்பு வந்ததே. அந்த முருகனை தான் சொல்லணும். இல்ல… சூரிய தேவதை தான் சொல்லணும். அது மட்டும் வீட்டுக்குள்ளால வந்து எழுப்பவில்லை என்றால் இப்போதும் கும்பகர்ண போல தூங்கிக் கொண்டுதான் இருந்திருப்பேன்.”
முருகன் தன்னை தானே நொந்து கொண்ட நேரம், சரியாக மலைக்கோவிலை அடைந்திருந்தான். பூஜைக்கான வேளை இல்லாததால் கோயிலில் ஒன்றிரண்டு ஆட்கள் தவிர வேறு யாரும் இல்லை. குருக்களும் பூஜை முடித்து சென்றிருந்ததால் அவனுக்கு செல்லமாவை தேடுவதில் சிரமம் இல்லை. சுற்றி சுற்றி அவளை தேட ஆரம்பித்தான். சாமியின் சன்னிதானத்திற்கு வந்தால். வயதான ஒரு பாட்டியைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. வெளியில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் பக்கம் வந்தால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பயந்து அங்கு ஒருவரும் இல்லை. கற்களால் கூரை வேந்த கற்கோயிலுக்கு நுழைந்தால் 40 வயது இளம் வட்டங்கள் கூடி பேசிக் கொண்டிருந்தனர். கோயிலின் உள் , வெளி என எல்லா இடங்களுக்கு சென்று பார்த்த பின்பும் செல்லம்மாவை அங்கு காணவில்லை.
எங்கு போய் இருப்பாள். ஒருவேளை கோயிலுக்கு பின்புறம் ஒரு வேப்பமரம் உண்டே. நிழலுக்கு எல்லாரும் அங்குதானே ஒதுங்குவார்கள். ஒருவேளை அங்கு போயிருப்பாளோ?
எண்ணியவாறு அந்த பெரிய பாறையை சுற்றிக்கொண்டு கீழ் இறங்கியவன் அந்த வேப்ப மரத்தின் பக்கத்திலும் அவள் இல்லாததை கண்டதும் எரிச்சல் உற்றான்.

“எங்க இவா.அதுக்குள்ள கிளம்பி போயிட்டாளா? என்னை வர சொல்லிட்டு இவ எங்க போனா ? ஒரு அரை மணி நேரம் எனக்காக காத்திருக்க முடியாதா? அவளுக்கு வேலை முடிகிற மூணு மணி நேரத்தை அவள் சரியா தேர்ந்தெடுத்து வரச் சொன்னா என் வேலை முடிய வேண்டாமா? அரை மணி நேரம் எல்லாம் பெரிய நேரமா ? மலையடி வாரத்துல இருந்து மேல ஏறி வரவேண்டும் என்றாலே கால் மணி நேர ஆகுமே, அப்படின்னா அந்த நேரம் அளவு கூட அவர் நமக்காக காத்திருக்கலையா? ஹோட்டல்ல தானே வேலை பாக்குறா. ஒரு அரை மணி நேரம் பிந்தி போனா பலரோட வாழ்க்கையா பறிபோயிடும்.”
தான் பிந்தி வந்தது கூட உணராமல் செல்லம்மாவை திட்டிக்கொண்டே ஒரு பாறை மீது அமர்ந்தான். ஆசைகள் அத்தனையும் நிராசையான வலி அவனிடமிருந்தது. சிறிது நேரம் அதிலேயே அமர்ந்தவன், பின் சோர்ந்து போய் மலைக் கோயிலை விட்டு கீழே இறங்கினான். போகும் போது அவன் நடையில் இருந்த ஸ்பீடு, மனதில் இருந்த உற்சாகம், கண்ணில் இருந்த ஆர்வம். உடலில் இருந்த பரபரப்பு மொத்தமும் அடங்கியவனாய் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு மிக சோர்வாக கீழே இறங்கி வந்தான்.
மலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்த நொடி அவன் மனது அவனிடம்,
“நேரா அவ வேல பாக்குற ஹோட்டலுக்கு போயிட்டா என்ன? வேலை இல்லாம நான் சும்மா தண்டமாவா இருக்கிறேன். என்ன நினைச்சா என்னை . மலைக்கோயில் வரை அலைய வச்சுட்டு மகாராணிக்கு இங்க அப்படி என்ன வேலைன்னு கேட்டு விடுவோமா?”
என்று கூட தோன்றியது. என்றாலும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு,
ஒருவேளை நாம் அசந்து தூங்கி விட்டது போல அவளுக்கும் தவறுதலாக ஏதாவது நேர்ந்திருக்குமோ திடீர் வேலையோ அல்லது உடல்நிலை சரி இல்லாமலோ ஆகி வர முடியாமல் போயிருக்குமோ?
இருக்கலாம். ஒருமுறை அவளைப் போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம்.
என தீர்மானித்தவன் நேராக செல்லம்மாள் வேலை பார்த்த ஹோட்டலுக்குள் நுழைந்தான். அது ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல். உள்ளே நுழைந்ததுமே யூனிபார்ம் போட்ட பணிப்பெண் வரவேற்று உள்ளே அனுப்ப உள்ளே சென்ற முருகன் பணியாளர் சொன்ன டேபிளில் அமர்ந்து கொண்டு சுற்றி பார்த்தான். செல்லம்மாவை காணவில்லை. பேருக்கு ஏதாவது சாப்பிட்டு விடுவோம். என முன்னால் வந்து நின்ற பணியாளரிடம் ஏதேதோ சொல்லிவிட்டு மறுபடியும் நாலாபுறமும் கண்களை சுழல விட்டான்.செல்லம்மாவை அப்போதும் காணவில்லை.
இங்கும் இல்லை என்றால் அவளுக்கு என்னவாகிவிட்டது.
ஒருமுறை கலவரம் நெஞ்சில் மூண்டது. காபியோடு அவன் இருந்த மேஜைக்கு வந்த பணி பெண்ணிடம் செல்லம்மாவை பற்றி விசாரித்தான். இதுவரை சிரித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் முகம் கருமை எற,
“ தப்பா நினைக்க வேண்டாம். ரொம்ப தெரிஞ்ச பொண்ணு . என்னை கோயிலுக்கு வர சொன்னா. ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு. நான் போக பிந்திடுச்சு. அதான் என்னன்னு கேட்டுட்டு போகலாம்ணு .”
அவன் தயக்கத்தோடு நிறுத்த,
“உங்க சண்டித்தனத்தை எல்லாம் வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் வெச்சுக்கோங்க. முதலாளி மட்டும் கேட்டாரு அவளை வேலையை விட்டு தூக்கிட்டுவாரு.”
“அந்த அளவு நீங்க பயப்படற மாதிரி இல்லமா. நான்… உண்மையா… ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் சொல்லுச்சு. அதான்… பதட்டத்தோட தேடி வந்தேன். ஒருமுறை ஒரே ஒரு முறை அவளை இந்த மேஜை பக்கம் வர சொன்னீங்கனா ஒரு ரெண்டு வார்த்தை பேசிட்டு போய்டுறேன். பிளீஸ்…”
என ஒரு நூறு ரூபாய் எடுத்து நீட்ட, அவள் வாயெல்லாம் பல்லாக உள்ளே சென்ற இரண்டாவது நிமிடம் அதே யூனிபார்மோடு வெளியே வந்தாள் செல்லம்மாள். அவனை நோக்கி வரும்போது முறைத்துக் கொண்டுதான் வந்தாள். அவனை நெருங்கி வந்தவள் அவனுக்கு எதுவோ கொண்டு வந்து கொடுத்தவள் போல,
“என்னடா? வம்பு பண்ண வந்திருக்கிறாயா? வர சொல்ற இடத்துக்கு வராம இப்ப பெரிய இவன் ஆட்டம் இங்க எதுக்கு வந்தா?”
அவள் சீற…
“கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. அதுக்கெல்லாம் கோபப்படுவியா? எனக்கும் வேலை இருக்கும் இல்லையா? கொஞ்சம் நேரம் கூட காத்திருக்காமல் இப்படியா கிளம்பி வருவா? உனக்காக ரெண்டு வருஷம் எத்தனை மணி நேரம் பஸ் ஸ்டாப்ல நான் காவல் இருந்தேன். உன்னால எனக்காக ஒரு அரை மணி நேரம் காத்திருக்க முடியாதா?”
அவன் செல்லமாகச் சிணுங்க,
“என்ன? அரை மணி நேரமா … அரைச்சேன்னா உன்னை. மூணு மணி நேரம் காத்திருந்து … காத்திருந்து நேரம் தான் போனதே தவிர நீ வரல. கோபத்தோட இங்க வந்து முதலாளி கிட்ட செமத்தியா வாங்கி கட்டிட்டு தான் மிச்சம்.”
“பொய் சொல்லாத புள்ள. நான் ஒரு அரை மணி நேரத்துல வந்துட்டேன். சுற்றி சுற்றி தேடுனதுல கொஞ்ச நேரம் ஆயிடுச்சு. அதுல வேற நீ இல்லணு தெரிஞ்சதும் கோபம் வந்துச்சு. அதான் அப்படியே பாறையில் இருந்துட்டேன். அதனால தான் ஒரு இரண்டு மணி நேரம் ஆகிடுச்சி. அப்புறம் கோபத்தோடு அப்படியே மலையில் இருந்து இறங்கி நேரா உன்னை பாக்க இங்க தான் வரேன்.”
“என்ன ? என்ன?… என்ன சொன்னா?…. நேரா இங்க வறியா ?”
“ஆமா கடைக்கு கூட போகாம மலையிலிருந்து இறங்கி நேரா உன்னை பாக்க தான் வரேன்.”
“முட்டாளா நீ…”
“ஏன் புள்ள அப்படி சொல்ற?”
“நேற்று மூணு மணிக்கு வரச் சொன்னா… இன்று மூணு மணிக்கு போய் அங்க யாருக்காக காத்திருந்தா?”
“என்ன? நேற்று மூன்று மணிக்கா!…”
“……….”
“விளையாடாத புள்ள. நேற்று ஆறு மணிக்கு தானே என்கிட்டயே சொன்னா. நாளைக்கு மூன்று மணிக்கு மலை கோயிலில் சந்திக்கலாம்னு.”
“என்னது நேத்து சொன்னேனா? நான் சொன்னது செவ்வாய்க்கிழமை 6 மணிக்கு. நாம சந்திக்கலாம் என்று சொன்னது புதன்கிழமை மூன்று மணிக்கு. நீ… நீ இப்போ என்கிட்ட வந்து கழுத்தறுக்கிறது வியாழக்கிழமை அஞ்சு மணிக்கு.”
“என்ன இன்று வியாழக்கிழமையா?”
“ என்ன விளையாடுறியா? உனக்கு மறக்குற வியாதி ஒண்ணும் இல்லையே. முழுசா 24 மணி நேரத்தை மறந்துட்டு வந்து நிக்குறா . இல்ல… நான் சொன்னதை மறந்துட்டு அதை மறக்க இப்படி நாடகம் போடுறியா?”
“ என்ன புள்ள நீ. நான் எதுக்கு நாடகம் போடணும். எப்ப பேச மாட்டானு நான் காத்திருந்தது உனக்கு தெரியாதா?… ஒருமுறை பேசிட மாட்டியான்னு உன் பின்னால சுத்தி சுத்தி வந்தது உனக்கு புரியாதா?…. அப்படிப்பட்டவன் வராம இருப்பேனா?”
“எல்லாம் பேச்சு மட்டும் தான். விரட்ட விரட்ட நம்ம பின்னாலயே சுத்துறானே பாவம் பொழைச்சு போகட்டும்னு வர சொன்னா. பெரிய இவன் ஆட்டம் வராமல் இருந்துட்டு இப்ப காரணமா சொல்றா? பேசாம போயிடு. நான் வேலை பார்க்கிற இடம். இங்க ஏதாவது பண்ணி என் வேலைக்கு வேட்டு வச்சுடாத.”
என்றவாறு செல்லம்மா அவசரமாக உள்நோக்கிச் செல்ல முருகன் முழு குழப்பத்தோடு வெளியே வந்தான்.
“எப்படி ஒரு முழுநாள் முழுவதுமாக தூங்கினோம். இது எப்படி நடந்தது. மதியம் ஒரு மணிக்கு குள்ளன் வாங்கி கொடுத்த புது டிரெஸ்ஸை வாங்கிக்கொண்டு நேரா வீட்டுக்கு போனோம். குளிச்சு டிரஸ் மாற்றி தலைவாரி பவுடர் போட்டோம். அப்புறம் ஹாலுக்கு வந்தோம். வாட்ச் எடுத்து கைல கட்டிட்டு ஹிப்டையும் கையில் எடுத்தோம். அப்புறம் என்ன நடந்தது. ஹிப்ட்டை எடுத்தது வரை தான் ஞாபகம் இருந்தது.”
அதன்பின் என்ன நடந்துச்சு. நாம எப்படி தூங்கினோம். அதுவும் ஒரு நாள் முழுசா எப்படி தூங்க முடியும். ரொம்ப சந்தோஷத்தோட ஹேப்பியோடும் தானே இருந்தோம். உடல்ல சோர்வோ , கண்ணுல தூக்கமோ அப்ப வரலையே. அப்படி இருக்க… இப்படி அடிச்சு போட்டது போல எப்படி தூங்கி போனோம். இப்படி ஒரு நாள் கூட நடந்ததில்லையே.
யோசிக்க யோசிக்க முருகனுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. யோசனையோடு ஹோட்டலை விட்டு கீழே இறங்கியவன் ஆக்கர் கடையை நோக்கி நடந்தான்.

மனதில் குழப்பங்கள் மண்டி கிடந்ததால் அவனால் அவசரமாக நடக்க முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. மறுபடியும் மறுபடியும் அன்றைய நிகழ்ச்சியை மணக்கண்ணில் ஓட்டிப் பார்த்தான். எத்தனை முறை ஓட்டிப் பார்த்தாலும் புறப்பட்டுக்கொண்டு கிப்ட் பாக்ஸை எடுத்தது வரை தான் மனக்கண்ணில் இருந்தது. அதன்பின் அவன் வாழ்வில் வந்த அந்த ஒரு நாள் ஞாபகம் அவன் மூளையில் பதியவே இல்லை. அதன்பின் இன்று அவன் கண் விழித்த இரண்டு மணி நேரம் ஞாபகம் இருந்தது.
விழித்தவுடன் அவன் உடலில் தெரிந்த மாற்றம், டிரஸ்ஸில் தெரிந்த மாற்றம் எல்லாம் வித்தியாசமாக இருக்க குழப்பத்தோடு ஆக்கர் கடைக்குள் நுழைந்தான்.
என்றும் விசில் அடித்துக் கொண்டு உற்சாகமாக உள்ளே நுழையும் முருகன் இன்று சர்வமும் அடங்கியவன் போல யோசனையோடு வர அவனை கேள்விக்குறியோடு நோக்கினார்கள் பறட்டையும் குள்ளனும். பக்கத்தில் இருக்கும் இருவரையும் கவனியாதவன் போலச் அவன் உள் செல்ல … அவனை இடைமறித்து,
“எங்கடா போனா ? உன்னை எங்க எல்லாம் தேடணும். அப்படி எங்கடா போனா.”
என பறட்டை ஓடிவந்து ஆர்வமாக கேட்க,
“ நான் வீட்ல தான் இருந்தேன் …”
“பொய் சொல்லாதடா. நேற்று ஆறு மணி வரை நீ கடைக்கு வராததால உன்னை தேடி உன் வீட்டுக்கு வந்தேன் நீ இல்ல ஆனா வாசல் திறந்துதான் கிடந்துச்சு. உள்ளார வந்து சுத்தி சுத்தி கூப்பிட்டேன். நீ சத்தம் தரவேயில்லை. அப்புறம் தான் புரிஞ்சுது நீ வாசல திறந்தே போட்டுட்டு போயிட்டான்னு.”
செல்லமாவ பாக்குற சந்தோஷத்துல கனவுல அப்படி செஞ்சி இருப்பான்னு நான் தான் கதவை சாத்தி வச்சிட்டு வந்தேன். ரெண்டு பேரும் சந்தோசமா பேசிட்டு இருப்பீங்கன்னு தொந்தரவு தர வேணாம்னு உன்னை தேடுறத விட்டுட்டு கடைக்கு போயிட்டேன்.
பறட்டை இப்படி சொன்னதும் முருகனின் குழப்பம் மீண்டும் அதிகரித்தது. எப்படி நான் வீட்டில் இல்லாமல் இருக்க முடியும். மலைக் கோயிலுக்கும் போகவில்லை. கடைக்கும் வரவில்லை. அப்படி என்றால் வீட்டில் தானே இருக்க வேண்டும்.
இன்று காலைல நீ வேலைக்கு வராத உடனே மறுபடியும் சந்தேகத்தில் உன்னை பார்க்க வீட்டுக்கு வந்தேன். அப்போ வீடு பூட்டி கிடந்துச்சு. வெளியிலிருந்து நிறைய சத்தம் கூப்பிட்டேன். நீ சத்தம் தரவே இல்லை கதவை காலால கூட உதைத்து பார்த்தேன். நீ வந்து திறக்கவே இல்லை.
“ரெண்டு நாளா நைட்டு நீ தூங்கலையா அதான் அசதியா தூங்குறான்னு நினைச்சுட்டு திரும்ப வந்தேன். முதலாளி கூட கேட்டாரு.” நான் உண்மைய சொன்னதும்,
“அவனை அப்படியே விடுங்கடா. போன வாரத்துல இருந்து அவனுக்கு செமர்த்தியா வேலை. கும்பகோணம் போயிட்டு நைட் எல்லாம் வண்டி ஓட்டிட்டு தூங்காம வந்தான். வந்த பிறகும் மொத்த சரக்கும் வெளியில் கிடக்குது. பிரிச்சிட்டா உள்ளால அடிக்கிடலாம்னு சொல்லிட்டு சொல்லச் சொல்ல கேட்காம ஒரு நாள் ரெஸ்ட் எடுக்காம வேலை செஞ்சான். போடா… போய் தூங்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுன்னு சொன்னாலும் கேக்குறது இல்ல. இப்பவாவது நல்லா தூங்கட்டும். தூங்கி எழுந்து பிரஷ்ஷாக வரட்டும். அதுவரை நீங்க யாரும் போய் அவனை எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டாரு.”
ஆமால்ல. ஒரு வாரம் அசதிதான். ஒரு நாள் முழுசும் எழும்ப விடாமல் நம்ம தூங்க வச்சிருக்குமோ…
“வாடா நீ வந்ததும் முதலாளி பேச சொன்னாரு.”
என பறட்டை அழைக்க…
“அப்படித்தான் இருக்கும். ஓவர் வேலை தந்த அழுத்தம்… இரவு பணியால தூக்கத்தை தொலைச்ச இரவுகளை சுமந்ததால வந்த உறக்கமும் சேரத்தான் முழுசா தூங்கி இருக்க வேண்டும்.”
தன்னைத் தானே முருகன் சமாதானப்படுத்த முயன்றாலும்,
இன்னொரு மனது…
“அப்படின்னா பறட்டை நம்மளை தேடி மாலை 6:00 மணிக்கு வரும்போது நாம எங்க போனோம்.”
திரும்பவும் பழைய கேள்வியே திருப்பி அவனைக் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றான் முருகன்.
அத்தியாயம் தொடரும்…
Tamil Thriller Novel



