வணக்கம் வாசகர்களே!
தன் காதலியின் பிறந்த நாளுக்கு போக முடியாத முருகன் அவளிடம் என்ன சொல்ல போகிறான்? இவனின் சமாதானத்தை செல்லம்மா ஏற்று கொள்வாளா?
இவனின் சமாதானத்தை செல்லம்மா ஏற்று கொள்வாளா?
முருகன் கண்விழித்த போது அவன் தன் வீட்டில் வெறும் தரையில் படுத்திருந்தான். வீட்டின் மேல் கூரையையே பார்த்து படுத்திருந்தவன் திரும்பிப் பார்த்தான். உடலை திருப்பக் கூட அவனால் முடியவில்லை. அவ்வளவு வலி அந்த உடம்பில் இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு எழும்பி உட்கார்ந்து, நெற்றியை ஒரு முறை அழுத்தி விட்டான்..
“என்ன இது? எதனால நம்மளோட தலை இவ்ளோ வலிக்குது.”
ஒரு நொடி யோசித்தவன். பின் தன் சட்டையையை திருப்பி திருப்பி பார்த்தவனாய்,
“இந்த கறை எப்படி என் சட்டைல வந்துச்சு?”
பயத்தில் அவசரமாக சட்டையை படபடவென கழற்றி தூக்கி எறிந்தான். கண்களை பரபரப்போடு அங்கும் இங்கும் மோத விட்டவன் மனதோ பதட்டத்தில் வெளியே வந்து விடும் அளவு துடித்தது. பரப்பரப்போடு அங்கும் இங்கும் ஓடியவன் கடைசியாக ரொம்ப பயப்பட்டவன் போல ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டான்.
“எப்படி இது நடந்தது. ஆமா??? எப்படி தூங்கினேன்.” எண்ணங்கள் மனதுக்குள் வரும்போது செல்லம்மாவின் ஞாபகம் மன அலையில் தவழ்ந்தது. செல்லம்மாவின் பிறந்தநாளுக்கு செல்ல ஆசையாக புறப்பட்டது நினைவில் வர,
“அப்படி என்றால் இன்றும் நான் போகவில்லையா? அன்று போல் இன்றும் படுத்து தூங்கி விட்டேனா?”
“இன்று தான் அவள் பிறந்தநாளா? இல்லை. முடிந்து மறுநாளும் வந்து விட்டதா? எனக்கு என்ன ஆச்சு. நான் ஏன் இப்படி மாறிப் போகிறேன். என்னில் ஏன் இந்த மாற்றம் நடக்கிறது? செல்லம்மாவை தேடிப் போகும்போது மட்டும் ஏன் இப்படி ஆகிறது? அவளை பார்க்கச் செல்ல ஆசையாக புறப்பட்டால் மட்டும் நான் ஏன் தூங்கி போகிறேன்.”
எத்தனை யோசித்தும் பதில் தான் அவனுக்கு தெரியவே இல்லை.
“உண்மையில் நான் தூங்கித் தான்ப் போகிறேனா? அல்லது நான் வேறு எங்கும் செல்கிறேனா? தூங்குகிறேன் என்றால் என் சட்டையில் ரத்தக்கரை எப்படி வந்தது. எனக்கு என்ன ஆகிறது? இப்படி சில நேரம் மட்டும் ஏன் வித்தியாசமாக நடக்கிறேன்?”
ஒரு மணி நேரமாக வீட்டுக்குள்ளே இருந்து குமைந்தவன் அவசரமாக சட்டையை அலசி காயவைத்தான். அப்படியும் ரத்தக்கரை சுத்தமாக போகவில்லை. மிகவும் பயந்து போன முருகன் அச்சட்டையை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு குளித்து வேறு துணி மாற்றி ஹாலுக்குள் வந்தான். கையில் வாட்ச் மட்டும் தொலைந்து போய் இருப்பது தெரிந்தது. சுற்றி சுற்றி தேடினான். எங்கும் காணவில்லை.
யோசனையோடு ஹாலில் கிடந்த சேரில் அமர்ந்தான். செல்லம்மா ஞாபகம் வந்தது. அதிலும் அவள் ஆசையோடு வந்து பேசியதும், ஒரு நாள் முழுவதும் உன்னோடவே இருக்க வேண்டும் என்று கண்ணில் ஏக்கத்தோடு சொன்னதும் நினைவலையில் வந்து கண்ணை கலங்க செய்தது.
இனி அவள் தனக்கு இல்லை என்று தோன்றியது. எவ்வளவு ஆசையாக எதிர்பார்ப்போடு எனக்காக காத்திருந்திருப்பாள். ஆனால் நான் போகாததால் எவ்வளவு நொந்து போயிருப்பாள்.
“இது என் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத பிறந்த நாளாக இருக்க வேண்டும் என்றாளே… உண்மையில் அவள் என்னை முழுதாய் மறக்கக் கூடிய பிறந்த நாள் ஆகி போய்விட்டதே.”
“ இனி எப்படி அவள் முகத்தில் முழிப்பேன். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் போய் பார்ப்பேன். அது எங்கே போனது அந்த மேஜை மேலே தானே வைத்திருந்தேன். அது எங்கே போனது. நேற்று இரண்டு மணி நேரத்தை செலவு செய்து வாங்கிய பரிசு பொருளாயிற்றே. அதை கொண்டு எங்கே தொலைத்தேன்.”
எண்ணங்கள் அவனை சுற்றி சுற்றி வர,
சட்டென எழுந்தான். எல்லா அறையிலும் தேடினான். அது போன இடம் அவனுக்கு தெரியவில்லை. பரிசு பொருளை நேற்று வாங்கி கொண்டு வைத்த நினைவுகளை மண்டைக்குள் ஒரு முறை ஓட்டிப் பார்த்தான். மனது நெருடலை சந்தித்தது. உட்சபட்ச குழப்பத்தில் தன் இரு கையாலும் தலையை பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான்.
காலையில் இவ்வளவு நேரமாகியும் முருகன் கடைக்கு வராததால் குள்ளனும், பறட்டையும் அவனைத் தேடி வீட்டிற்கு வந்தனர். வெளியிலிருந்து இருவரும் குரல் கொடுக்க, சிறிது நேரத்தில் வந்து கதவை திறந்தான் முருகன்.
“என்னடா நேரம் 10 மணி ஆன பிறகும் வீட்டை விட்டு வெளி வர தோணவில்லையா? அந்த அளவு நேற்று செம என்ஜாய்மென்டோ…”
பறட்டை உள்ளே வந்து செயரில் அமர்ந்து கொண்டே கேட்க…
“பையன் நேத்து உள்ள சந்தோசத்துல சாப்பிட்டு இருக்க மாட்டான். உள்ளால போய் மூணு பிளைட் எடுத்துட்டு வா.”
எனக் குள்ளன் சொன்னதும், பறட்டை எழுந்து உள்ளே சென்றான். ஆனால் முருகன் நேற்றைய குழப்பம் மாறாமல் அப்படியே நின்று இருந்தான்.
“என்னடா?… நாங்க வந்தது கூட தெரியாதது போல பேய்முழி முழிச்சிட்டு நிக்குறா. இதுல உட்காரு. சாப்பிடுவோம்.”
என அவர் கைபிடித்து உட்கார வைத்து மூன்று பிளைட்டிலும் பரிமாறி விட்டு, அவனும் எடுத்து சாப்பிட்டான். முருகனுக்கு நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாததால் பசி வயிற்றைப் பிராண்டியது. அதனால் எதுவும் பேசாமல் முன்னால் இருந்த புரோட்டாவை பிய்த்து வாய்க்குள் வைத்தான்.
“என்னடா எதுவுமே பேச மாட்டேங்குறா?”
முருகனைப் பார்த்து உணவை வாயில் வைத்தவாறு குள்ளன் கேட்க…முருகனிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போனது.
“எங்கெல்லாம் போனீங்கடா ?”
பறட்டை ஆர்வமாக கேட்டான். அதற்கும் முருகனிடமிருந்து எந்த பதிலும் வராது போகவே இருவரும் முருகனை நிமிர்ந்து பார்த்தனர்.
“பையன் சரியில்லையே செமத்தியா எதுவும் கொடுத்திருப்பாளோ?”
என்றான் நமட்டு சிரிப்போடு குள்ளன்.
“முகம் எல்லாம் சிவந்துதான் கிடக்குது. நடந்தாலும் நடந்திருக்கும்.”
என்றும் போல் இருவரும் கலகலவென பேசிக் கொண்டிருந்தாலும் முருகன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்க,
கலவரம் குள்ளனையும் பறட்டையையும் தாக்கிக் கொள்ள,ரொம்ப வேதனையோடு அவன் மேவாயை நிமிர்த்தி,
“என்னடா ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்கா?”
கலங்கும் கண்ணோடு முருகன் அவனை நிமிர்ந்து பார்த்தான். அவர் கண்களில் கண்ணீரை கண்ட குள்ளன் இதுவரை இருந்த சந்தோசம் மொத்தமாய் வடிந்தவாரு பதட்டத்தோடு அவனைப் பார்த்தான். அவன் விழியை சந்தித்தவன் தயங்கும் மனதோடு…
“நான்… நான்…”
“ம்… சொல்லுடா?…”
“நான் நேற்று செல்லம்மாவை பார்க்க போகல…”
முருகனின் வார்த்தையை கேட்டதும் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர். மூன்று பேரும் ஒருவர் முகத்தை மற்றவர் ஒருமுறை பார்த்துக் கொண்டனர்.
“என்னடா சொல்றா? பிறந்தநாளுக்கு போகாம நேற்று அப்படி எங்கு போனா ?”
பறட்டை தான் குள்ளனை முந்தி கொண்டு கேட்டான்.
“நான் எங்கேயும் போகல. வீட்டிலேயே தூங்கிட்டேன்.”
“என்னது தூங்கிட்டியா?”
“……….”
“அது எப்படிடா? அன்றாவது ரெண்டு நாள் நைட் வேலை. தூங்க முடியல. அசதியில தூங்கிட்டான்னு சொல்லலாம். ஆனா இன்று அப்படி எந்த அசத்தியும் இல்லையே. அப்புறம் எப்படி?”
“……….”
“அதுலயும் நேற்று நைட் முழுசா தூங்கி இருப்பா? அப்படி இருக்கிறப்ப எப்படி காலையில் எழுந்த பிறகும் தூங்க முடியும். முருகா மறைக்காம உண்மையை சொல்லு. எங்களுக்கு தெரியாம எங்க போறா நீ?”
குள்ளன் சற்று குரல் உயர்த்த…
“எங்கேயும் போகலடா. காலைல அவசரமா ரொம்ப சந்தோஷத்தோட புறப்பட்டது ஞாபகம் இருக்கு. ஆனா எப்ப தூங்கினேன். எப்படி தூங்கினேன் ? தெரியல. ஆனா கொஞ்சம் முன்னால தான் முழிப்பே வந்தது. அப்போ காலைல நான் போட்ட அதே டிரஸ்ஸோட இந்த தரையில தான் தூங்கிட்டு இருந்தேன். அது எப்படிணு தான் இதுவரை புரியல.”
முருகன் உண்மைதான் சொல்கிறான் என்பதை அவன் முகத்தைப் பார்த்து புரிந்து கொண்ட குள்ளன் யோசனையோடு மேம் வாயை தடவினான்.
“என்னடா இது வியாதி. அதிசயமான வியாதியா இருக்கு.”
என்றான் பறட்டை.
“ஆமா முருகா.இது உனக்கு எப்போ இருந்து இருக்கு.”
“சரியா தெரியல. முதல்ல சில நாள் கொஞ்ச நேரம் என்ன நடந்துச்சுன்னு மறக்க ஆரம்பிச்சிது. ஆனால் முதல் முதலில் செல்லம்மாவை மலை கோயிலுக்கு பார்க்க போனதா புறப்பட்ட அந்த 24 மணி நேரம் இப்படி தூங்குனது. அடுத்து நேற்று . எப்படி? அவளை பார்க்க போக நினைக்கிறப்ப எல்லாம் இப்படி நடக்குதுன்னு மட்டும் இன்னும் புரியல.”
“………”
“அதுலயும் வேற ஒண்ணும் உன்கிட்ட மறைச்சிட்டேன்.”
“என்னடா…”
என்றனர் இருவரும்.
“முதல் நாள் தூங்கி எழுந்தப்ப ரொம்ப உடல் வலியா இருந்துச்சு. டிரஸ் எல்லாம் ரொம்ப கசங்கி சேறா இருந்துச்சு. அப்போ ஒரு வாரம் ஓய்வு இல்லாமல் உழைச்சதாலணு நீங்க சொன்னதும், உடல் வலி ஒருவேளை அதனாலதான் இருந்திருக்கும். டிரஸ் உருண்டு படுத்ததால அழுக்காகி இருக்கணும்ணு மனசை தேத்திகிட்டேன். ஆனால் நேற்று…”
பயத்தில் அவன் கண்கள் விரிய,
“நேற்று என்னடா…”
அவனை உலுக்கினான் குள்ளன்.
“சட்டை…என் சட்டை முழு ரத்த கதையோட இருந்துச்சுடா…”
“என்ன ரத்தமா?”
இருவரும் ஒரே நேரம் கேட்க,
“ஆமாடா. அதான் எழுந்த நேரத்தில் இருந்தே ஒரே குழப்பமா இருக்கு.”
“அது ரத்தமா இருக்காது முருகா… ஏதாவது கலர் பட்டு இருக்கும். நீ வீணா மனச போட்டு குழப்பாத.”
குள்ளன் அவனை ஆசுவாசப்படுத்த சொல்ல…
“என்ன? ஹீரோன்னு நினைப்பா உனக்கு. நீ அந்த அளவு ஒர்த் இல்லை மாப்பிள்ளை. முதல்ல அதை புரிஞ்சுக்க. எவனாவது அடிக்க வந்தா, நின்ன இடத்திலேயே உனக்கு யூரின் வந்துடும். அந்த அளவு பயந்தாங்கொள்ளி. திறந்த செட்லபடுக்கவே பயந்து தானே தனி வீடு எடுத்து எங்கள்ட்ட இருந்து பிரிஞ்சி வந்து இங்க தங்குறா. அப்படிப்பட்ட நீயாவது அடுத்தவர் ரத்தத்தை சிந்த வைக்கிறதாவுது.”
பறட்டை அந்த சூழ்நிலையிலும் அவனை கிண்டல் செய்ய, என்றும் போல் அவன் மேல் பாயாமல் முருகன் மௌனமாக இருந்தான்
“விடுடா பாத்துக்கலாம். விடு. இப்ப சாப்பிடு. நாம வேணா ஒருமுறை டாக்டரை போய் பாத்துட்டு வந்துடலாம். எதுவும் உடல்ல மாற்றம் தெரியுதான்னு சொல்லு. அதற்கு ஏதோ ஒரு பெயரைச் சொல்லி மாத்திரை கொடுப்பாங்க. சாப்பிட்டா சரியா போயிடும். அதுக்கு போய் உம்முணு இருக்கிறா. எதையும் மனசுல ஏத்திக்காம ஃப்ரீயா இரு.”
எனக் குள்ளன் அவனிடம் சொல்ல, முருகன் மனது லேசாக தேறத் தொடங்கியது. அதனூடே பறட்டையின் வம்பும் நக்கலும் ஆரம்பமாக, மூவரும் சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்டு முடித்து மூவரும் கை கழுவிக்கொண்டு காலுக்குள் நுழையும் போது புயல் வேகத்தில் உள்ளே வந்தாள் செல்லம்மா.
அவளை அவ்விடத்தில் எதிர்பார்க்காத மூவரும் கலக்கமாக நின்றனர். அதிலும் தான் வாங்கிய பரிசு பொருள் அவள் கையில் இருப்பதை பார்த்த முருகன் விக்கித்து போனான். “
இது எப்படி இவள் கைக்கு போனது. நான் தான் இவளை சந்திக்கவே போகவில்லையே. அப்புறம் எப்படி? அது அவள் கைக்கு போனது.”
முருகனுக்கு மண்டையை பிச்சி எறியலாம் போல இருந்தது.
ஆவேசமாக உள்ளே வந்து செல்லம்மா முருகனின் அருகில் சென்று,
“ உனக்கு நான் அவ்வளவு இளக்காரமா போயிட்டேன் இல்ல. உன் புத்தியை காட்டிட்டா பாத்தியா? முதலிலேயே உன்னை பத்தி எனக்கு தெரியும். அனாதை கழுதைங்க தானே நீங்க. உங்ககிட்ட போய் அன்பையும், காதலையும் எதிர்பார்த்தது என்னோட தப்பு தான். அதுலயும் ஒருமுறை பட்ட பிறகும் புத்தி வந்துருச்சா எனக்கு. வலிய வலிய போய் முட்டிக்கிட்டு வலிக்குதுன்னு சொன்னா எப்படி?”
என தன்னை தானே நொந்தவளாய், கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்து,
“ஒரு நொண்டிட்ட போய் நான் உன்னை விரும்புறேன்னு சொன்னா கூட அவன் அவளை தேடி ஓடி வருவான். நீ வராத போதே நான் யோசித்து இருக்கணும். மறுபடியும் உன்னை நம்பி வந்தேன்ல.”
என்றவள்.
“வந்தேன்ல!”
என மறுபடியும் கேட்க, முருகன் தலைகவிழ்ந்தான்.
“என்னை தேஞ்ச செருப்பால தான் அடிச்சுக்கணும்.”
“என்னடா இப்போ பேசாம நிக்குறீங்க. வாக்காளத்து வாங்கிட்டு பின்னால வருவீங்க இல்லையா? இப்ப என்ன கொழுக்கட்டையா முழுங்கிட்டீங்க. வாயை திறக்காமல் நிக்கிறீங்க.”
பறட்டையையும் குள்ளனையும் பார்த்து செல்லம்மாச் சீற….
“இல்ல செல்லம்மா பையன் அசதியில தூங்கிட்டான்.”
குள்ளன் இழுக்க.
“கொன்னுடுவேன். இனி ஒரு முறை இவனுக்காக என்கிட்ட பொய் சொன்னீங்கன்னா… கொன்னுடுவேன்.”
அவள் கோபத்தில் கத்த…
“உண்மை செல்லம்மா. பையன் அசதியா தூங்கிட்டான்.”
“மறுபடியும் மறுபடியும் பொய்யா சொல்றா? எவளாவது இளிச்சவாய் இருப்பா. அவளோட காதுல போய் மூணு பேரும் பூ வெச்சுக்கோங்க. என்கிட்ட வச்சுக்காதீங்க. செம கடுப்புல இருக்கேன். இதுக்கு மேல உங்க பிரண்டுக்காக பொய் சொல்லாதீங்க.”
“உண்மை செல்லம்மா. இப்ப நாங்க வந்து தான் அவனை எழுப்பி சாப்பிட வைத்திருக்கோம்.”
“ நீ வந்து சாப்பிட வச்சா…”
“ஆமா செல்லம்மா…”
“முந்தாநாள் ராத்திரி தூங்குனவனை | நீ இப்போ காலையில் வந்து எழுப்பி சாப்பிட வச்சா.”
“ சரியான கும்பகர்ணனா இருக்கான் செல்லம்மா. முதல் நாள் உன்னை பார்க்க வரும்போதும் அப்படித்தான்.”
“இதை என்னை நம்ப சொல்றா? என்னை பாத்தா எப்படி தெரியுது உனக்கு.”
செல்லம்மா சூடேற …
“கோவப்படாத செல்லம்மா. அவன் பண்ணுனது தப்புதான். ஆனா இதான் உண்மை.”
“எதுடா உண்மை. நீங்க சொல்றதா? அப்படிணா நான் நேற்று என் கண் முன்னால நடந்து போனதை பார்த்தேனே. அது அவனோட ஆவியா ?”
“என்னது நடந்து போனானா?”
“அப்புறம் காலைல அவ்வளவு ஆசையா நேரமே வந்து அவனுக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கேன். அவ்வளவு கம்பீரமா ஹிப்ட்டோட என்னை பாத்துட்டே இவன் வருகிறான். என்னை நோக்கி தான் வந்தான்.”
“என்னது? உன்னை நோக்கியா? அப்புறம் எங்க போனான்.”
“எவனுக்கு தெரியும். ஒரு நொடி. ஒரு நொடி அவன் ஸ்டைலிலும் கம்பீரத்திலும் நானே அசந்து போயிட்டேன். அப்படி ஒரு முருகனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அப்படி ஸ்டைலா… ஹீரோ மாதிரி … என்னை நோக்கி வரான். நானும் என்னிடம் தான் வருகிறான் என்று நினைத்து தான் அவனை பார்த்து சிரிச்சிட்டே நிற்கிறேன்.”
ஆனா அவன் என் முகத்தை கூட பார்க்காம எவளையோ பார்த்தது போல பார்த்துட்டு கடந்து போறான். அவன் பக்கத்துல தான் நிக்குறேன். என்னை தெரியவே தெரியாத ஒரு ஆள் மாதிரி கடந்து போறான். ஒரு நொடி எதுவும் புரியல எனக்கு. விளையாடுறானு தான் ஆரம்பத்துல நினைச்சேன். ஆனா அவன் திரும்பி கூட பார்க்காம முன்னோக்கி தெனாவட்டா போயிட்டு இருந்தான். திரும்பி வருவான்னு பார்த்துட்டே இருந்தேன். அவன் திரும்பவே இல்ல…”
சட்டுனு சுதாரிச்சுக்கிட்டு…
“முருகா முருகாணு கூப்பிட்டுட்டு பின்னாலே ஓடுனேன். காதுல விழாதவன் போல முன்னோக்கி வேகமா போயிட்டான். போதாக்குறைக்கு எனக்கு வாங்குன ஹிப்ட்டை கூட என் கண் முன்னாலேயே தெருவுல வீசி எறிஞ்சிட்டு போறான்.”
“என்னது?”
இரண்டு பேருமே அதிர்ச்சியில் கேட்க, முருகன் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து நின்றான். பறட்டை தான் தன்னை சுதாகரித்துக் கொண்டு,
“நீ!… நீ!…சொல்றது உண்மையா செல்லம்மா?” அதிர்ச்சி மாறாமல் அவன் கேட்க…
கண்ணில் நீர் கோர்த்துக் கொண்ட செல்லம்மா.
“நான் ஏன்டா பொய் சொல்லணும். இந்தா… இதுதான் அவன் தூக்கி எறிஞ்சிட்டு போன ஹிப்ட்.”
என முருகனின் முகத்தில் அந்த ஹிப்ட் எறிய,
குள்ளன் ஒருமுறை நம்பாமல் முருகனைப் பார்த்தான்.
“தான் வாங்கிய ஹிப்ட் அதுதான்.”
என்பது போல அவன் தலை அசைக்க குள்ளன் எதுவும் பேச முடியாமல் தலை கவிழ்ந்தான்.

“எவ்வளவு ஆசையா? எவ்வளவு எதிர்பார்ப்போட , கனவோட, கற்பனையோட, காத்து நின்னேன் தெரியுமா. வாழ்க்கையில எந்த சந்தோஷத்தையும், அன்பையும் அனுபவிக்காதவன் என் அன்பு கிடைச்சா என்னை தங்கமா பாத்துப்பான்னு நம்பி என் மனசை சொன்னேன். எத்தனை நாள் எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியா என் பிறந்தநாளை தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு நொடியும் அவனோடு எவ்வளவு சந்தோசமா கழிக்கணும்னு வந்தேன் தெரியுமா? ஆனா இவன் … என் மொத்த சந்தோஷத்தையும் அழிச்சிட்டு மரமா என்னை கடந்து போறான். திமிரு… ஆம்பளை என்கிற திமிர்.”
“இதோட நமக்குள்ள உறவு முடிஞ்சு போச்சு. இனி எவனாவது என் பின்னால வந்தீங்க கொலைக்காரி ஆயிடுவேன். அப்புறம் முகத்தை சோகமா வச்சுட்டு சுவத்துல சாஞ்சி நிக்கிறதை பார்த்தேன். செருப்பால அடிப்பேன். என் கண்ணுக்கு முன்னால மட்டும் வந்துட்டா, உங்க பிரண்டு செத்தானு நினைச்சிடுங்க. ஒண்ணும் இல்ல. அவனை இனி என் கண்ணுல படாம வாழச் சொல்லுங்க. அது தான் அவனுக்கு நல்லது. இல்ல பெட்டியை கட்டிட்டு எங்காவது ஓடிட சொல்லுங்க. அதை மீறி இனி நான் பார்த்தேன். சாகடிச்சிடுவேன்.
என உட்சபட்ச கோபத்தில் சீறியவள்,
“இதுதான்… இதுதான்… நான் உங்களை பார்க்கிற கடைசி நாளா இருக்கணும்.”
ஆவேசமாக அதுவும் தீர்க்கமாக சொல்லிவிட்டு செல்லம்மா போக, இங்கு மூன்று பேரும் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றனர்.
திகில் தொடரும்…
Tamil Thriller Novel



