வணக்கம் வாசகர்களே!
செல்லம்மாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து அவளின் நகர்வு எப்படி இருக்கும். தன்னை கோபப்படுத்திய முருகனை ஏற்று கொள்வாளா? அல்லது அவன் மாமனை மனமுவந்து கட்டி கொள்வாளா?
தன்னை கோபப்படுத்திய முருகனை ஏற்று கொள்வாளா?
அவள் சென்று ஒரு மணி நேரம் கழிந்த பிறகும் மூவரும் நார்மல் ஆக முடியாமல் இருந்த இடத்திலே அப்படியே இருந்தனர். அவள் திட்டி விட்டு போனதை விட அவள் சொன்ன விஷயங்கள் தான் மூவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதிலும் அவன் பஸ் ஸ்டாப்புக்கு போனதாகவும் அவள் கண்முன்னே சென்ற பிறகும் அவளை திரும்பி கூட பார்க்காமல் சென்றான் என்பதையும் தான் மூவராலும் நம்ப முடியாமல் தவித்தனர். ஆனால் அவள் சொல்வது பொய் என்றால் கிப்ட் எப்படி அங்கு சென்றது. அப்படி என்றால் செல்லம்மா சொல்வது உண்மை என்றால் முருகன் அங்கு சென்றானா?…
அங்கு சென்றது அவனுக்கு எப்படி தெரியாமல் போகும். இங்கு என்ன நடக்கிறது குள்ளனும், பறட்டையும் குழம்பித் தவிக்க…. முருகன் அவள் சொன்ன உண்மையின் அதிர்ச்சியில் இருந்து விடுபடாமல் தவித்துப் போனான். எப்படி?. இது எப்படி நடந்தது. புறப்பட்டது வரை தான் என் நினைவில் இருக்கிறது. அதன் பின் என்ன நடந்தது எதுவும் மன அலையில் இல்லை.
செல்லம்மா சொல்வது போல் நான் அங்கு சென்றிருந்தால், அவளிடம் ஏன் அப்படி நடந்து கொண்டேன். அவள் என்னுடைய உயிர். உலகம். அவளை எப்படி என்னால் அழ வைக்க முடியும். செல்லம்மாவின் கண்ணில் தெரிந்த கண்ணீரே அவள் சொல்வது அனைத்தும் உண்மை என சொல்கிறது. அப்படி என்றால் அவளை கூட மறக்கிற அளவு என்னுள் என்ன நடக்கிறது. அப்படி அவளை கடந்து, தான் எங்கு சென்றேன்.
அப்படி என்றால் சட்டையில் பட்டது கலர் பொடி இல்லையா? ரத்தக்கரை தானா?அது யாருடைய ரத்தம். நான் என்னை மறந்த நிலையில் என்ன செய்கிறேன். செல்லம்மாவையை தெரியவில்லை என்றால் தன் மனது பாதிக்க தொடங்கி விட்டதா? தனக்கு பைத்தியம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறதா? உண்மையில நான் சரியில்லை என்பது எனக்குத் தெரிகிறது. செல்லம்மா பேசி விட்டு சென்ற பின் முருகன் உண்மையிலே தனக்கு மனநிலை சரியில்லாமல் ஆக தொடங்கியிருப்பதாக நம்ப தொடங்கினான்.
குள்ளன் என்னவெல்லாமோ சொல்லி அவனை தேற்றிய பின்பும் பல நாள் முருகனால் அதிலிருந்து வெளியே வரவே முடியவில்லை. தனக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக நம்ப தொடங்கினான். அதனாலேயே செல்லம்மாவை விட்டு விலக ஆரம்பித்தான். ரொம்ப சுறுசுறுப்பாகவும், ஜாலியாகவும் வலம் வந்த முருகன் மொத்தமும் முடங்கியது போல சோர்ந்து போய் வலம் வர குள்ளன் ரொம்பவே வருத்தப்பட்டான்.
இடையில் இது வரை சம்பாதித்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொண்டு பறட்டையும், குள்ளனும் முருகனை அவன் திருப்திக்காக மன நிலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த டாக்டர் அவனுக்கு அப்படி எந்த மனநிலை கோளாறும் இல்லை என சொல்ல அதன் பிறகு தான் கொஞ்சமாக மாற ஆரம்பித்தான். என்றாலும் செல்லம்மா பக்கம் அவன் செல்லவே இல்லை.
அவள் பக்கம் போகவே இல்லையே தவிர அவன் மனதுக்குள் அவள் இல்லாமல் இல்லை.
நிதமும் நெஞ்சில் வந்து சிறை எடுத்துச் சென்றாலும் வெளியில் அவளைப் பற்றி பேசுவதோ, அவள் இருக்கும் திசை பக்கம் திரும்புவதோ . இல்லாமல் நாட்களை கடத்தி வந்தான்.
ஆரம்பத்தில் படு கோபமாக இருந்த செல்லம்மா திரும்பி கூட அவன் வேலை பார்க்கும் இடத்தை பார்ப்பதில்லை. பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடக்கையில் கூட நிமிர்ந்து அவனைத் தேடுவதில்லை. ஆனால் ஒரு நாள் பறட்டை வந்து ஹாஸ்பிட்டல் போனதாகவும் முருகனுக்கு நாம் பயந்தது போல அப்படி எந்த மனநிலை சம்பந்தமான நோயும் இல்லை என்றும் எதுவோ அவனை மீறி நடந்து விட்டது என்றும் உன்னை பார்க்காமல் அவன் நிஜமாகவே பைத்தியம் ஆகி விடுவானோ என பயமாக இருப்பதாகவும் கூறி சென்றான்.
அதிலும் அவன் முதலாளி கணேஷன் முதன் முறையாக அவளை பார்க்க வந்து பேசவும் அவள் மனம் இளகத் தொடங்கியது. அதிலும்,
“அவன் மொத்த சுறுசுறுப்பையும் தொலைத்து விட்டு, நடைப்பிணம் போல் வாழ்வதை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சின்ன பையனா இருக்கும் போதே அவன் என்கிட்ட வந்துட்டான். உன்னை எந்த அளவு விரும்புகிறானு எனக்கு தெரியும். உன்னை பாத்துட்டு வந்து ஒவ்வொரு நாளும் உன்னை பற்றியே பேசிட்டிருப்பான்.”
“…………….”
“அப்படிப்பட்டவன் ஏன் அப்படி நடந்துகிட்டாணு தான் எனக்கும் புரியல. நீ எதையும் மனசுல வச்சுக்காதம்மா.”
என்று சொல்லிட்டு போகவும் செல்லம்மாவின் உள்ளம் அழத் தொடங்கியிருந்தது.
அதிலும் தன் மனம் கொஞ்ச நாளாவே அவனைப் போல் தான் அவதிப்படுகிறது என அவர்களுக்கு தெரியாது. ஒவ்வொரு நாளும் என் கண்ணும் என் மனமும் அவனை தான் தேடுகிறது என்பதும் அவர்களுக்கு தெரியாது.
அன்று ஆத்திரத்திலும், கோபத்திலும் பேசி விட்டு வந்து விட்டாள். ஆனால் பெண் மனசு கொஞ்ச நாள் தான் இறுக்கமாகவே இருந்தது. அப்புறம் விழியும் மனமும் அவனைத் தேட தொடங்கியது. ஆனாலும் வீம்பும் கோபமும் வரிசை கட்டி நின்றது என்றாலும் இவர்களின் பேச்சிற்கு பின் மனது அவளை நோக்கி அலை பாயத் தொடங்கியது.
அதிலும்,
“ அங்கு நடந்த எதுவும் அவன் நியாபகத்தில் இல்லை செல்லம்மா. நான் வேணும்ணு அப்படி செய்யல குள்ளா என்ன நடந்துச்சுணே எனக்கு தெரியலணு ஒவ்வொரு நாளும் குலுங்கி குலுங்கி அழுறான்”
என்று தொடக்கத்திலே குள்ளன் வந்து சொன்னதையும் நினைத்துக் கொண்டாள். எல்லாம் சேர்த்து அவள் மனமும் அவனைத் தேட தொடங்க, அவனிடம் பேச சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்த நேரம் தான் அவள் வீட்டில் வரம் தேட தொடங்கினர்.
செல்லம்மா அவள் வீட்டில் மூத்த பெண். அவளுக்கு அடுத்து இரண்டு தங்கைகள். கூலி வேலை செய்யும் அவள் அப்பாவும், சமையல் வேலைக்கு செல்லும் தாயும் மூத்த மகளை சீக்கிரமே புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட வேண்டும் என முடிவெடுத்திருந்ததால் செல்லம்மா சம்பாதித்து வரும் பணத்தை ஒன்றை கூட செலவழிக்காமல் சீட்டு போட்டிருந்தனர். போன மார்கழியில் ஒரு சீட்டு விழுந்து ஒரு லட்சத்தையும் போன மாதம் மறு சீட்டு விழுந்து ஒரு லட்சத்தையும் தந்திருந்ததால் இனியும் தாமதிக்காமல் மூத்த மகளின் திருமணத்தை நடத்தி விட பெற்றோர் முனைந்தனர். அது அறிந்த தாய்மாமன் முறையாக வந்து பேச, குடும்பம் வற்புறுத்த, பெற்றோர்களும் சம்மதித்து விட, செல்லம்மா தான் தடுமாறி போனாள்.
“நாளை முறையாக வந்து தாய் மாமன் பரிஷம் போட போகிறார்.”
என வேலை முடிந்த வந்தவுடன் வீட்டில் பேச்சு எழ…. துடித்துப் போன செல்லம்மா அவசரமாக அவனை தேடி ஆக்கர் கடைக்கு வந்தாள்.
உள்ளே வந்தவுடன் ஒரு மூலையில் முடங்கி போயிருந்த முருகனைப் பார்த்ததும் அழுகை முட்டி கொண்டு வந்தது.
அழுகையும், ஆத்திரமுமாக அவனைத் தேடி வந்திருந்த செல்லம்மாவை பார்த்ததும் பறட்டையும், குள்ளனும் அவர்கள் இருவரையும் தனியே விட்டு விட்டு வெளியேற, செல்லம்மாள் மெதுவாக அவன் அருகில் வந்தாள்.
முருகன் அவளை நிமிர்ந்து பார்க்காமலே,
“சொல்லு புள்ள…” என்றான்.
“ஏன்?… நிமிர்ந்து பார்க்க மாட்டீங்களோ…”
“அப்படியெல்லாம் இல்ல. சொல்லு…” என்றவன் ஒருமுறை நிமிர்ந்து பார்த்து விட்டு பின் சட்டென வெளியே திருப்பி வேறு எங்கோ வெறித்தான்.
“நான் வேணாம்ணு முடிவு பண்ணிட்டால…”
என சொல்லும் போதே செல்லம்மாவின் குரல் உடைந்து போயிருக்க…
“உன்னால என்னை விட்டு ஒதுங்க முடிஞ்சிது. என்னால தான் ஒரேயடியா உன்ன விட்டு ஒதுங்க முடியல. மனசுல தூக்கி இருத்திட்டேனே…எப்படி அழிக்கிறது. நீ மாறிட்டா என்னால முடியல. அதான் தேடி வந்திருக்கேன். இனியும் என் மேல உள்ள கோபம் உனக்கு போகலியா…. நான் வேணாம்ணு முடிவே பண்ணிட்டியா? அதான் இப்படி இருக்கிறியா?
என்றவள் சற்றும் யோசிக்காமல் அவன் அருகில் உட்கார்ந்து, அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி, அவன் கண்களை சந்தித்து கொண்டு, அவ்வளவு உரிமையோடு அவள் கேட்கவும் உடைந்து போய் அழுதான் முருகன்.
இத்தனை நாள் அவன் உள்ளம் பட்ட சித்திரவதையை சொல்லி சொல்லி அழுதான். உன் மன வலியை அதிகரிக்கக் கூடாது என, தான் ஒதுங்கினாலும் அதனால் தான் அடைந்த மரண வலியை சொல்லி மாளாது என சொல்லி சொல்லி அழுதான்.
ஒரு வழியாக அவனை சமாதானப்படுத்திய செல்லம்மா. இந்த சூழலில் தான் வந்த காரணத்தை எப்படி செல்வது என தயங்கி நின்றாள். அவள் தயக்கத்தை புரிந்து கொண்ட முருகன்.
“என்ன புள்ள…ஏன் அப்படி பாக்குறா ?.”
“முருகா நான் இன்று உன்னை தேடி வந்ததே ஒரு முக்கியமான விஷயம் பேச தான்.”
“சொல்லு புள்ள…”
“அது…” அவள் தயங்க,
“சொல்லு…” என ஆர்வமாக அவன் அவளை நோக்க ஒரு நொடி நிதானித்தவள்,
வீட்டுல எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க முருகா. வீட்டுல வரன் பார்க்கிறதை யார் மூலமாகவோ தெரிஞ்சுக்கிட்ட முறை மாமன் தனக்கு கட்டி வைக்குமாறு வற்புறுத்த அம்மா குடும்பம் பஞ்சாயத்து வச்சி என்ன பரிஷம் போட வருகிறதா மொத்த குடும்பமும் முடிவெடுத்திருக்காங்க. இந்த விஷயம் இப்ப தான் எனக்கு தெரிஞ்சது. அதுலயும் நாளை பரிஷம் போட வருகிறதா நான் கிளம்பும் போது அம்மா கூப்பிட்டு சொன்னாங்க.”
“…………”
“முருகா இதை மட்டும் தயவு செய்து சொதப்பிடாத. என் மாமன் வருகிறதுக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னால நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு வந்து முறையா பொண்ணு கேட்கணும். இதை மட்டும் செய்யலணா இதன் பிறகு மன்னிக்கக்கூட நான் உன் பக்கத்துல இருக்க மாட்டேன் பாத்துக்க.”
“………………”
“எனக்கு நீ வேணும். ப்ளீஸ்டா. நாளைக்கு மட்டுமாவது சொதப்பாம வந்து சேரு. உனக்காக நான் என் வீட்டுல வெயிட் பண்ணுவேன். ப்ளீஸ்டா சொதப்பிடாத. மாமா பரிஷம் போட்ட பிறகு எதுவும் நம்மால பண்ண முடியாது. உனக்காக தான் நான் அங்கே ஒவ்வொரு நொடியும் வெயிட் பண்ணிட்டு இருப்பேன். அதை மனசுல ஏத்திட்டு தூங்கு.”
செல்லம்மா உணர்ச்சி வசப்பட்டு பேச,
“ பயப்படாம போ புள்ள. நான் நிச்சயமா வருவேன். நீ இந்த அளவு இறங்கி வந்ததே பெரிய விஷயம். இனி எல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ மட்டும் என் கூட இரு. அது போதும்.”
என நம்பிக்கையோடு முருகன் கூற, செல்லம்மா அவனை திரும்பி பார்த்து பார்த்து சென்றாள். அவள் கண்களில் தெரிந்த ஏக்கம், பயம் எல்லாம் அவனை யோசிக்க வைத்தது. அவன் சொதப்பி விடக்கூடாது என்ற பயம் தான் கண்ணில் அவனுக்கு அதிகமாக தெரிந்தது.
அன்று முழுவதும் குள்ளனின் பேச்சை கேட்டு ஆக்கர் கடையிலேயே பயந்து போய் படுத்துக் கொண்டான். இரவு பல மணி நேரம் தூக்கம் வரவில்லை. கண்ணீரோடு வந்து காதலோடு கலங்கி நின்ற செல்லம்மாவின் நிலையே அவன் மனம் முழுவதும் விரவி நின்று தூக்கத்தை கெடுத்து இரவு வெகு நேரம் கழித்து அவன் தூங்கினாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து விட்டான்.
குள்ளன் அதற்கு முன்பே எழுந்து விட்டிருந்தான். அனாதையாய் வாழ்ந்ததாலோ என்னவோ இந்த நிகழ்வு அவனுக்குள் புதுவித பொறுப்பை கொடுத்திருந்தது. செல்லம்மாள் வந்து சொன்ன நொடியிலிருந்து பரபரப்பாக முதலாளியிடம் கேட்டு பெண் கேட்டுப் போக தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொண்டான். அதை எடுத்து பார்த்து கொண்டிருந்த குள்ளன்.
முருகனைக் கண்டதும்,
“வாடா… எழும்பிட்டியா?….”
“ம்….ம்…”
“சரி பறட்டையை கூட்டிட்டு போய் குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு சீக்கிரமா வாருங்க.”
என குள்ளன் அவசரப்படுத்த பறட்டையை துணைக்கு அழைத்துக் கொண்டு முருகன் வெளியேறினான்.

இது அனைத்தும் நேற்றே தீர்மானிக்கப்பட்டிருந்ததால் முருகன் மறுத்து பேசவில்லை. அவன் தனித்து போனால் தானே தூங்கி விடுவான். அல்லது எங்கேயாவது தூக்க கலக்கத்தில் எழுந்து சென்று விடுவான். அதுவே அவன் தம்முடன் படுக்க வைத்து, பின் பறட்டையின் துணைகொண்டு புறப்பட்டு வந்து விட்டால் தவறு நடக்காதே என்பது குள்ளனின் திட்டம். அதிலும் முருகன் நேற்று செல்லம்மா வந்த விஷயத்தை சொல்லி இந்த முறை நான் சொதப்பி விடக்கூடாது என கண் கலங்கிய போதே குள்ளன் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என ஒவ்வொன்றையும் யோசித்து திட்டம் தீட்டி அவர்கள் இருவரிடமும் சொல்ல…. இருவரும் சம்மதித்தனர்.
குள்ளனின் திட்டப்படி அவர்கள் அருகில் தூங்கியவன் காலையில் எழுந்தவுடன் பறட்டையின் துணைகொண்டு வீட்டிற்கு கிளம்பினான். வேறு எங்கும் போகாமல் யாரிடமும் பேசாமல் நேரே வீட்டிற்கு வந்தவர்கள் குளித்து துணி மாற்றிக் கொண்டனர். அதிலும் பெண் பார்க்க செல்வதால் முதலாளி செலவில் நேற்று போய் மூவருக்கும் துணி எடுத்துக் கொண்டனர்.
புது துணியோடு வெளி வந்த முருகனைப் பார்த்த பறட்டை ….
“சூப்பர்டா…உண்மையிலேயே மாப்பிள்ளை போல தான் இருக்கிறா?என் டிரஸ் எப்படி இருக்கும் முருகா…”
“உனக்கென்னடா… ராஜா மாதிரி அழகா இருக்கா.” என்றவனிடம்,
“சீப்பு எங்கடா …”
“மேஜை மேலே தான் வச்சேன் பாரு.”
என்றவன் பெட் ரூமுக்குள் செல்ல,
மேஜை மீது சீப்பை காணாததால் சுற்றி சுற்றி தேடினான். காணாது போகவே குனிந்து கீழே பார்க்க மேஜையின் அடியில் அது விழுந்து கிடந்தது.
“ எந்த பொருளையும் பத்திரமா வச்சிடாத.
எல்லா பொருளையும் கண்ட கண்ட இடத்துல தூக்கி போட்டுடு”
என முருகனைத் திட்டியவாறு சீப்பை எடுக்க குனிந்தவன் கண்கள்,
“என்னடா நீ…எவ்வளவு சண்டை போட்டு எங்களுட்டயிருந்து புடிங்கி எடுத்துட்டு வந்தா. இந்த வாட்சை. அதைக் கூட பத்திரமா வைக்க மாட்டியாடா?”
என்றவாறு கீழே இருந்த வாட்சை எடுத்தவன் முருகனை கடிந்து கொண்டே வாட்சை எடுத்து புறப்பட்டு வெளியே வந்த முருகனின் கையில் கட்ட போனான்.
“ இது எங்கடா கிடந்தது. எத்தனை நாளா தேடுறேன் தெரியுமா?. தொலைச்சிட்டேனு நினைச்சேன். ஆனா நீ கண்டுபிடிச்சி கொடுத்துட்டா.”
“கட்டிக்கடா…”
என நீட்ட,
முருகன் வாங்கிக் கொண்டான்.
“சரி முருகா. நீ புறப்பட்டு கடைக்கு போ. நான் கொஞ்சம் பூ வாங்கிட்டு நேரே அங்க வந்திடுறேன்.”
“சரி. நீ கிளம்பு.” என்றான் முருகன்.
“இல்ல… நீ வெளியில வா. கதவை பூட்டிட்டே நான் போறேன்.”
என்றவன் முருகனை வெளியேற்றி விட்டு கதவை பூட்டி சாவியை மேலே வைத்தான்.
“வாடா கிளம்புவோம்.”
என்று முருகனையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் போகும் சாலையில் விட்டு விட்டு பறட்டை திரும்பி எதிர்சாலையை கடக்க,
சிரித்துக் கொண்டே திரும்பிய முருகன் கையிலிருந்த வாட்சை அவன் கையில் கட்டினான். மிடுக்கான மாப்பிள்ளை தோரணை வந்து விட புன்னகையோடு சாலையில் மிக வேகமாக நடந்தான்.
திகில் தொடரும்…
Tamil Thriller Novel



