வணக்கம் வாசகர்களே!
தன் வாழ்வே போக போகிறது என தெரிந்தும் முருகன் ஏன் தன் காதலியின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த செல்லவில்லை? இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டு சென்ற அவனை அவள் மன்னிப்பாளா?
இக்கட்டில் மாட்டி விட்டு சென்ற அவனை அவள் மன்னிப்பாளா?
“என்னடா நீ வந்துட்டா. அவன் எங்கடா …”
பூவோடு உள்ளே நுழைந்த பறட்டையை பார்த்து கேட்டான் குள்ளன்.
“அவன் இன்னும் வரலியா? அப்பவே ரெடியாகி வந்தானே. நான் கூட நம்ம கடைக்கு வருகிற பாதையில திருப்பி விட்டுட்டு தானே பூ வாங்கிட்டு வரேணு போனேன்.”
“விட்டுட்டு போனியா? அவன் இன்னும் இங்க வரலடா?”
“அது எப்படி வராமல் போவான். பின்னால பாத்தியா அந்த பொடியன்களை வேலை வாங்கிட்டு இருப்பான்.”
“இல்லடா … பின்னால போகணும் என்றாலும் இந்த வழியா தானே போகணும். நான் நீ போனதுலயிருந்து இதுல தான் வெயிட் பண்ணுறேன்.”
“அப்படியா?…. நான் கிளம்பி போகும் போது முருகனுக்கு எதிர் திசையில் இருந்து நம்ம டீக்கடை முனியாண்டியோ மகன் வந்துட்டு இருந்தான். அவனும் நம்ம முருகனும் தோஸ்த்ல… ஏதாவது பேசிட்டிருப்பான். இப்பே வந்துடுவான்.”
“சரி அப்படிணா முதல்ல முதலாளிக்கு போன் பண்ணுவோம். கிளம்பிட்டராணு தெரிஞ்சிக்குவோம்.”
என குள்ளன் போனை அடிக்க…அவரும்,
“பத்து நிமிடத்தில் நான் அங்கு இருப்பேன்.”
என்றதும் முழு திருப்தியோடு கொண்டு செல்ல வேண்டிய அத்தனை பொருளையும் ஆர்வமாக எடுத்து வைக்கத் தொடங்கினான் குள்ளன்.
“பூ போதுமா குள்ளா… தங்க விலை சொல்றான். இன்று முகூர்த்த நாளாம். அதுனால விலை ஏறி போச்சாம். நூறு ரூபாய்க்கு இவ்வளவு தான் தந்தான்.”
“போதும்டா சாஸ்திரத்துக்கு தான்.”
“பறட்டை நீயும் ஒரு முறை எல்லாம் எடுத்து வச்சிட்டோமாணு செக் பண்ணிடு. அப்புறம் அங்க போய் நின்னு கையை பிசைந்து கொண்டு நிற்க கூடாது.”
என்றதும் பறட்டையும் நேற்று காமாட்சி பாட்டி சொன்ன அத்தனை பொருள்களும் சரியாக இருக்கிறதா என பார்த்தவன் திருப்தியோடு தலை அசைக்க ,
மன நிம்மதியோடு இருவருக்காகவும் காத்து நின்றனர். முதலாளி சொன்னது போல் பத்து நிமிடத்தில் வந்து விட்டார். ஆனால் அரை மணி நேரம் காத்திருந்த பிறகும் முருகன் வராது போகவே, பதட்டமாக மூவரும் எல்லா திசைகளிலும் தேட ஆரம்பித்தனர். வீட்டுக்கு தேடி சென்ற பறட்டை வீடு பூட்டி இருப்பதாகவும், சாவி தான் வைத்து அதே இடத்தில் இருப்பதையும் பார்த்து குழப்பமுற்று முன்னால் இருந்த முனியின் கடையில் விசாரித்தான்.
அவரும் உன்னுடன் தானே புறப்பட்டு வந்தான். இப்போ இங்கு வந்து கேட்கிறா என்றார். பறட்டை குழப்பமாக மறுபடியும் வீட்டிற்கு வந்தான். ஜன்னலை திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். ஹால் வெறுமையாக தான் தெரிந்தது. அப்படி என்றால் அவன் தூங்கவும் இல்லை. சாவி வெளியில் இருக்கும் போது அவன் எப்படி தூங்க முடியும் என தன் தலையிலேயே அடித்துக் கொண்டு முருகன் செல்லும் பல இடங்களுக்கு சென்று தேடியும் அவன் இல்லாததால் சோர்வாக கடைக்கு வந்தான். இங்குள்ள இருவரும் அவன் கடைக்கு பக்கத்தில் மெயின் ரோட்டில் என எல்லா இடத்திலும் தேடி விட்டு வந்து சோர்ந்து இருந்தனர். இவன் ஏன் இப்படி செய்றான். முருகன்ட்ட எதுவோ தப்பா இருக்கு.
“ஒரு வேளை நம்மிடம் நல்லவன் வேஷம் போட்டுட்டு உள்ளால எதுவும் தப்பா வேலை பாக்குறானா?”
“செல்லம்மா சொல்வது போல் அவள் மேல் உண்மையான அன்பு இல்லையா? காதலித்து சுத்த மட்டும் நினைத்து விட்டு கல்யாணம் என்றதும் ஓடி ஒளிகிறானா? நாம் தான் அவனை ரொம்ப நம்பி விட்டோமோ. ஆள் ஆளுக்கு எது எதுவோ பேச,
குள்ளன் முகம் மட்டும் இறுகியே போயிருந்தது. அவனை தன் தம்பி போல் அல்லவா அவன் பார்த்துக் கொண்டான். இப்படி அனைவர் முன்னிலையிலும் கரியை பூசி விட்டானே. என்னை விட அந்த பொண்ணு செல்லம்மா எவ்வளவு ஆசையோடு கனவோடு இவனுக்காக எதிர்பார்த்து காத்திருக்கும்.
“இவன் இப்படி செய்வான் என துளி கூட எதிர்பார்த்திருக்காதே, இன்று இவன் போகாததால் அவளுக்கும் அவள் முறை மாமனுக்கு நிச்சயம் முடிந்து விடுமே, மனதில் இவனை ஏற்றி வைத்து விட்டு மாமனோடு வாழ எவ்வளவு கஷ்டப்படும். இவனுக்காக போய் ஒவ்வொரு முறையும் அவளிடம் நின்றேனே. அதை நம்பி தானே அப்பெண் தன் கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு இவனிடம் பேச வந்தாள். கடைசியில் இப்படி கழுத்தறுத்து விட்டானே.”
என தான் குள்ளனில் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மூன்று மணி நேரம் காத்திருந்து விட்டு முதலாளி எழுந்து சென்று விட பறட்டை எந்த வேலையும் செய்ய மனமின்றி கட்டிலிலே படுத்து விட்டார். குள்ளன் மட்டும் தானிருந்த இடத்திலேயே எழுந்து செல்ல மனமின்றி அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான்.
காலை 7 மணியிலிருந்து வாசலையும், முற்றத்தையும் ஆர்வத்தோடும், எதிர்பார்ப்போடும் பார்த்து நின்ற செல்லம்மா 10 மணிக்கு மாமன் வரும் வரை நம்பிக்கையோடு தான் இருந்தாள். எப்படியும் முருகன் வந்து காப்பாற்றி விடுவான் என்று, வீட்டில் புறப்படச் சொன்ன பிறகும் சிறு தயக்கம் கூட இல்லாமல் புறப்பட்டாள். அது முறை மாமனுக்காக இல்லை அதற்கு முன் வந்து விடுகிறேன் என்று சொன்ன முருகனுக்காக வீட்டில் சம்மதிக்கா விட்டாலும் அடம்பிடித்தாவது சம்மதம் வாங்கி விட வேண்டும் என எண்ணி கொண்டாள்.
தங்கைகள் இருவரும் அலங்காரம் என்ற பெயரில் எது எதுவோ அள்ளி பூச செல்லம்மாவின் விழி மட்டும் தூரத்தில் தெரிந்த சாலையைப் பார்த்து இருந்தது. எப்படியும் அனைவரும் வந்து விடுவார்கள் என்று தான் நம்பி இருந்தாள். ஆனால் அவள் மாமன் வந்ததும் முருகனையும் அவன் கூட்டாளிகளும் வரவே இல்லை.
வீட்டில் ஆரவாரம் தொற்றிக் கொண்டாலும் செல்லம்மாவின் கண்கள் வாசலை நோக்கி இருந்தது. ஒவ்வொரு முறை அரவம் கேட்கும் போதும் ஆர்வமாக திரும்பிப் பார்த்து ஏமாந்தாள். கடைசியில் அவள் மாமன் பரிசம் போட்டு முடிவது வரை முருகன் வராததால் ரொம்பவே நொந்து போனாள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட அவன் வராதது. செல்லம்மாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. கடைசியில் நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டானே,

“இந்த கோழையை நம்பியா தன் வாழ்க்கையை கொடுக்க நினைத்தேன். இவனை போயா முழுமையாக நம்பினேன். இவனையா உயிருக்கு உயிராய் நேசித்தேன்.” நினைக்க நினைக்க நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது.
வீடே குதூகலத்தில் இருக்க செல்லம்மா உள்ளத்துக்குள் நொறுங்கிப் போயிருந்தாள். யாருடனும் பேச பிடிக்காமல் அறைக்குள் முடங்கி கொண்டாள். சுற்றமும் உறவும் பிரிந்து போய் விட தனிமையில் இருந்த செல்லம்மா குலுங்கி குலுங்கி அழுதாள்.
மனது சரியில்லாமல் குள்ளன் இரவு 7 மணிக்கு எழுந்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். பக்கத்துக் கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது கிழக்கு திசையிலிருந்து முருகன் வீறு கொண்டு வந்து கொண்டிருப்பதை பார்த்தான். இரவு 8:00 மணி வரை இவன் எங்கு சென்று விட்டு வருகிறான்.
குழப்பத்தோடும், கோபத்தோடும் அவனை நெருங்கிய குள்ளன்,
“மனசுல என்னடா நினைச்சிட்டிருக்கா?”
ஆவேசமாக கூறிக்கொண்டு அவன் பக்கத்தில் நெருங்க, இவனை கவனியாதவன் போல போய்க் கொண்டிருந்தான் முருகன். ஓடி சென்று அவன் பக்கத்தில் செல்வதற்குள் அவன் நாலு கால் பாய்ச்சலில் விரைந்திருந்தான். அவன் ஸ்பீடுக்கு ஈடு கொடுக்க முடியாத குள்ளனால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடக்க முடியவில்லை.
ஆனால் வீட்டை நோக்கி தான் போகிறான் என்பது மட்டும் புரிய குள்ளன் முடிந்த மட்டும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தான்.
குள்ளன் வீட்டை அடையும் போது வீடு சாத்தப்பட்டு தான் இருந்தது. பக்கத்திலிருந்த சின்ன ஜன்னல் வழியாக உள்ளே பார்க்கும் போது அன்று முருகன் சொன்ன அதே இடத்தில் வெறும் தரையில் படுத்திருந்தான்.
குழப்பத்தோடு சாலைக்கு வந்த குள்ளன் வித்தியாசமாக உணர ஆரம்பித்தான். “அன்று செல்லம்மா முன்பும் இப்படி நடந்து கொண்டதாக சொன்னாள். அன்று நாம நம்பல. ஆனால் இன்று நம் முன்பே அவன் அப்படித்தானே நடந்து கொள்கிறான்.”
“ஒரு வேளை தூக்கத்தில் நடக்கும் வியாதியாக இருக்குமோ? அப்படி என்றால் கூட இரவில் தானே தூக்கத்தில் எழுந்து போவார்கள்ணு சொல்லுவாங்க. இவனுக்கு இது என்ன வியாதி பகல் முழுசும் நடந்திட்டு ராத்திரி முழுசும் நிம்மதியா தூங்குற வியாதி ரொம்ப வித்தியாசமாக இருக்குதே. முருகனுக்கு எதுவோ ஆகுது. அவன் சரியில்லை என்பது மட்டும் குள்ளனுக்கு அன்றைய பொழுது விளங்கியது. மனநிலை சரியில்லை என தான் நினைத்தோம் ஆனால் இவனுக்கு வேறு ஏதோ நோய் தொற்றிக் கொண்டுள்ளது என தான் நினைக்கத் தோன்றியது. சிந்தித்தவாறு தன் இருப்பிடத்திற்கு வந்த குள்ளனால் நார்மலாக வேலை செய்ய முடியாமல் கட்டிலில் சுருண்டு கொண்டான்.
காலையில் சந்தேகத்தோடு முருகன் வீட்டிற்கு சென்ற போது முருகன் தன் கையாலேயே தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான். பொறுக்க முடியாமல் கதறி அழுத அவனைப் பார்த்து திட்ட எடுத்த வாயையும் அடக்க வேண்டியதாகி போனது. அதிலும் அவன் சொல்லும் போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நேற்று அவனே அவன் நிலையை பார்த்து விட அவன் மேல் கோபம் மாறி பரிதாபம் தான் வந்தது. இன்று இவன் நிலைமை தன் காதலியை வேறு ஒருவன் பரிசம் போட்டு விட்டான். இனி அவள் முகத்தை எப்படி போய் விழிப்பது என தான் நினைத்து அழுகிறான் என்பது புரிந்தது. அவனை ஆறுதல்படுத்த தோன்றாமல் அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.
இரண்டு மணி நேரம் கழிந்த பிறகும் அவன் அழுகை நிற்காததால் அவனை தன் மடியில் சாய்த்து ஆதரவாக தடவிக் கொடுத்தான்.
“விடு முருகா. எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சி. இனி அதையே நினைச்சி அழுறதுல என்ன இருக்கு. நாம கொடுத்து வச்சது அவ்வளவுதாணு நினைச்சிட்டு அனாதை பயலாலே வாழ்ந்திட்டு போயிட வேண்டியது தான். நாம வாங்கிட்டு வந்த வரம் அப்படி. அதை அவ்வளவு சீக்கிரத்துல மாற்ற முடியுமா?.. உன் வாழ்க்கையாவது மாறுணு ரொம்ப ஆசையா இருந்தேன். சின்னதுல இருந்தே நமக்கு உறவுணு யாருமில்லையே உனக்கு ஒரு குடும்பம் குழந்தைணு வந்தா நமக்கு உறவுணு ஒருத்தர் இருப்பாங்களே. உன் குழந்தையாவது எடுத்து கொஞ்சலாமேணு நினைச்சேன்.ஆனா அனாதையா பொறந்தா அனாதையாவே சாகணும்னு கடவுள் நினைச்சிட்டான் போல…”
சொல்லிக்கொண்டு பொறுக்க முடியாமல் குள்ளனும் அழ,
“செல்லம்மா பாவம் குள்ளா… எவ்வளவு ஆசையா வந்து என் கையை பிடிச்சிட்டு கெஞ்சினா தெரியுமா? என்னை கைவிட்டுடாதடா. இது வரை சொதப்பினது போல இப்பவும் பண்ணிடாத. எவ்வளவு எடுத்து சொல்லிட்டு போனா தெரியுமா? அதுலயும் கடைசியா அவா திரும்பி திரும்பி ஏக்கமா ஒரு பார்வை பார்த்த பாரு. அதை இப்ப கூட மறக்க முடியல குள்ளா. அவளோட நம்பிக்கையை சுத்தமா கொடுத்துட்டேனே குள்ளா ?…”
“எவ்வளவு ஆசையோடு எதிர்பார்த்திட்டிருப்பால…”
“…………….”
“என்னை நம்பிக்கை துரோகிணு சபிச்சிருப்பாலியா?. இனி அவ்வளவு தான்ல. எனக்கு இனி அவா இல்லை. அப்படித்தானே. எல்லாமே முடிஞ்சு போச்சுல…”
என்றவன் முகத்தை அறைந்து கொண்டே ஒ வென குரல் எடுத்து அழுதான்.
“விடுடா. பழையபடி உனக்கு நாங்க. எங்களுக்கு நீ. அப்படியே வாழ்ந்திட்டு போயிடுவோம். என்ன ஒரு பொண்ணு சமைச்சி குடும்பமா வாழ தான் நமக்கு கொடுத்து வைக்கல. உன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா அதுவும் நடக்காம போச்சு. விடு எழும்பு. இப்படியே எவ்வளவு நேரம் அழுதுட்டிருப்பா?”
என அவனை எழுப்பி முகம் கழுவ வைத்து, புறப்பட வைத்து, உடன் அழைத்துக் கொண்டு கடைக்கு வந்தான். அன்றைய பொழுது மூவரும் அதிகமாக பேசிக் கொள்ளவும் இல்லை. மதியம் வந்த சாப்பாட்டு பார்சலையும் திறக்கவும் இல்லை.
நான்கு நாளுக்கு பின் ஒரு நாள் சிவன் கோவிலில் வைத்து செல்லம்மாவை பார்த்தான் குள்ளன். அழுதழுது அவள் முகம் சிவந்து போயிருந்தது. சாமிடம் எதையோ சொல்லி அழுது விட்டு வந்திருப்பதை உணர்ந்த குள்ளன். அவள் மேல் இரக்கம் கொண்டான். ஆனாலும் அவள் முன் சென்று பேச சிறு தயக்கமாகவே இருந்தது.
அவள் நிலையை பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. நந்தி சிலை பக்கத்தில் இருந்த கல்தூணில் சாய்ந்து எதையோ வெறித்து அமர்ந்திருந்தாள்.
பார்த்ததும் பார்க்காமல் செல்ல மனசு இடம் தராமல் மெதுவாக அவள் அருகில் வந்தான்.
அவனை கண்டதும் செல்லம்மா சட்டென எழும்பி கோபத்தோடு முன்னோக்கி நடக்க,
“செல்லம்மா…”
என அழைத்துக் கொண்டு அவள் பின்னால் ஓடினான். சிறிது தூரம் வரை திரும்பி கூட பார்க்காத செல்லம்மா அவன் மறுபடியும் கூப்பிட்டுக் கொண்டே பின்னால் வர, ஆத்திரத்தோடு திரும்பியவள்.
“என்னை நிம்மதியாவே இருக்க விடக்கூடாதுணு என முடிவு பண்ணிட்டீங்களா மூணு பேரும்.”
“இல்ல… செல்லம்மா. அது வந்து …”
“இப்ப தான் மறந்திட்டு கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். என்னை இப்படியே விட்டுடு குள்ளா?”
“மனசை தொட்டு சொல்லு. நிம்மதியா அவனை மறந்திட்டு தான் இருக்கிறியா?”
அவனின் கேள்வி மனதில் அடி ஆழம் வரை ஊடுருவி சென்று குத்தி நிற்க, முட்டி கொண்டு வந்த கண்ணீரை வெளியில் சிந்து விடாமல் தலை குனிந்தாள்.
“பதில் சொல்லு செல்லம்மா. இவ்வளவு காலையில கோவில்ல வந்து முகம் சிவக்க அழுதுட்டு போறியே அவனை மறந்ததால வந்த ஆனந்த கண்ணீரா இது. பொறுக்க முடியாம பேசும் போது உன் உதடு துடிக்குதே அது எதனாலணு சொல்லிடு. அதையும் கேட்டுட்டே போயிடுறேன்.”
“பொறுக்க முடியாமல் ரொம்ப நொந்து போய் இருக்கேன். மறுபடியும் மறுபடியும் என்னை வருத்தப்பட வச்சாதுங்க. அப்புறம் நான் ஒரேயடியா போய் சேர்ந்திடுவேன். என் மனசு என்ன பாறைனா நினைச்சீங்க… அடிக்கடி வந்து பேசிட்டு பேசிட்டு போறா. அவளுக்கு அப்படி என்ன கஷ்டம் வந்திடும்ணு தானே மூணு பேரும் இப்படி என்ன புலம்ப வச்சீங்க. இரண்டு வருஷமா நான் திட்டத்திட்ட…. விரட்ட விரட்ட… பின்னால வந்து ஏக்கமா ஒரு முகத்தை வச்சிட்டு. நீ தான் என் உலகம், நீதான் என் வாழ்க்கை. என்னை நம்பி உன் வாழ்க்கையை கொண்டு. தங்கமாக உன்னை பாத்துப்பேணு காதல் வசனம் பேசி நம்ப வச்சு ஏங்க வச்சி, ஆசையா கனவு காண வச்சிட்டு, இப்படி செஞ்சா எப்படி வலிக்கும். ரொம்ப சோர்ந்து போயிட்டேன் குள்ளா. இனி மறுபடியும் அது பற்றி பேச விரும்பல. என்னை விட்டு விடுங்களேன். பிளீஸ்.”
என்றாள் நெஞ்சில் இருந்த வலியை மறைக்க தெரியாமல்,
“இந்த அளவு அவன் மேல் அன்பு வைத்திருக்கிறதால, நான் ஒண்ணு மட்டும் சொல்றேன். அதை கேட்டுட்டு போய் எந்த முடிவும் எடு. உன்னை நான் தொந்தரவு பண்ண மாட்டேன். என்றாவது ஒருநாள் வந்து இதை நீ அப்ப சொல்லிருக்க கூடாதா என்னையும் அவனையும் பிரிச்சிட்டீங்களேணு நீ சொல்லக்கூடாது பாரு. அதுனால தான் சொல்றேன்.”
“நான் முதன் முதலா முருகனை ஒரு பீச்சுல தான் சந்திச்சேன். அப்போ அவனுக்கு பத்து வயசு. அன்று நான் ஒரு கோடீஸ்வரன்ட்ட கை நீட்டிக்கிட்டு நின்னேன். மனிதாபிமானமே இல்லாத அவன் என் பசியை புரிஞ்சிக்காம பிடிச்சு தள்ளுனான். நான் நிலை தடுமாறி கீழே விழ போன போது முருகன் தான் ஓடி வந்து தாங்கி பிடிச்சான்.”
“……………”
“என் பசியை புரிஞ்சிகிட்டு அவன் தனக்கு சாப்பாடு வாங்கி வச்சிருந்ததை எனக்கு சாப்பிட கொடுத்தான். நான் சாப்பிட்டு முடிஞ்ச பிறகு தான் தெரிந்தது. அவன் சாப்பிடலணு. அன்று அவனுக்கு இருந்த உணவே அது மட்டும் தான்.”
“நான் ஒருவேளை சாப்பிடலணா செத்துப் போயிட மாட்டேன். நீ சந்தோஷமா இருக்கிறால அது போதும் குள்ளா. இப்படி யாருட்ட போயும் கையேந்தக்கூடாதுணு தான் நான் பீச்சுல கிடக்கிற பிளாஸ்டிக் எல்லாம் பொறுக்கி காயிலான் கடையில போட்டு ஒவ்வொரு நேரமும் சாப்பிட்டுடுவேன்.”
“முதல்ல நானும் உன்னை போல கையேந்திட்டு தான் நின்னேன். நீ இப்போ பட்ட அசிங்கத்தை நான் பல இடத்துல பட்டிருக்கேன். அப்போ ஒரு நாள் நான் தெருவில் நடந்து வரும் போது ரொம்ப வயசான பாட்டி கூன் தள்ளின நிலையிலயும் பேப்பர் பெறுக்கிட்டிருந்ததை பார்த்தேன், பாட்டிகிட்ட போய் பேச்சு கொடுத்தேன். அவங்ககிட்ட இருந்து தான் பாட்டில் பொறுக்கி விற்கலாம் என்கிற ஐடியா எனக்கு கிடைச்சது.”
“அதுல இருந்து இன்று வரை நான் இப்படித்தான் சாப்பிடுறேன். சீசன் நேரம் நிறைய பாட்டில் கிடைக்கும். சீசன் இல்லணா பெருசா கிடைக்காது. கிடைக்கும் போது ஆசை தீர சாப்பிட்டுக்குவேன். கிடைக்காத போது ஒரு நேரம் சாப்பிட்டு, குழாயடி தண்ணீரை மொண்டு குடிச்சுக்குவேன். நீயும் இனி என்னோடவா நான் பாட்டில் பொறுக்கிறேன். நீ பேப்பர் பொறுக்கு. நமக்கு தேவையான பணம் அதுலயே கிடைச்சிடும். அப்புறம் எதுக்கு இந்த சில்லறை பசங்களுட்ட கை ஏந்தணும்ணு சொல்லி எனக்கு நல்ல ஒரு வழியை காட்டினான். அன்றிலிருந்து எனக்கு முருகன். முருகனுக்கு நானும் இருந்தோம்.”
“ஆனா வாழ்க்கையில பல பல அசிங்கங்களையும், அவமானங்களையும் சந்திச்சிருக்கோம். சில நாள் மூணு நாள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கூட இருந்திருக்கோம்.. ஆனா அப்போ எல்லாம் முருகன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்தது இல்ல. ஆனா நீ இனி இல்லணு தெரிஞ்சதும் அவன் அழுத அழுகையை பாக்கணுமே, மூணு மணி நேரமா அந்த இடத்தை விட்டு எழும்பல அவன்.தலையில அடிச்சி அடிச்சி அழுதான்.”
“நடிப்பு…எல்லாம் நடிப்பு.”
“உன்னை போல நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா நீ முதல் நாள் வந்து அவன் என் கண் முன்னால தான் போனான். நான் கூப்பிட கூப்பிட சத்தம் தராமல் போனாணு சொன்னியே. அதே கோலத்தில் தான் நான் அன்றும் அவனை பார்த்தேன். அவன் சரியில்ல செல்லம்மா. திடீர்னு என்னவோ அவனுக்கு ஆகுது. ஆனா என்னனு தான் தெரியல.”
“நல்லா கதை சொல்ல ஆரம்பிச்சிட்டா குள்ளா பேசாம கதாசிரியரா போ. நல்ல வருமானம் கிடைக்கும். எதுக்கு இந்த ஆக்கரோட கிடந்து கஷ்டப்படுறா ? நடிக்க வேணா கூட அவனையும் கூட்டிட்டு போ. காதல் காட்சியில சூப்பரா நடிப்பான். அந்த நடிப்புல தானே நானும் விழுந்தேன். அப்பிராணி போல ஒரு முகத்தை வச்சிட்டு எந்த பொண்ணையும் ஈசியா மயக்கிடுவான் போ. அவனையும் உன்னோட அழைச்சிட்டு போயிடு. ஆனா தயவு செய்து என் பக்கம் மட்டும் வந்திடாதுங்க.”
பெரிய கும்பிடு போட்டு விட்டு செல்லம்மா சென்று விட, அவளை தடுத்து நிறுத்தும் திராணியின்றி சிலையாக நின்றான் குள்ளன்.
திகில் தொடரும்…
Tamil Thriller Novel



