வணக்கம் வாசகர்களே!
வித்தியாசமான பார்வையில் ஓவியாவை பார்கிறான். அதை புரிந்து கொள்ளாமல் அவள் இருக்கிறாள். இவர்களின் மெளனயுத்தத்திற்கு முடிவு வருமா? பார்ப்போம் வாங்க.
வித்தியாசமான பார்வையில் ஓவியாவை பார்கிறான்
தன் முன்னால் கெஞ்சுதலோடு நின்ற பெண்ணவளை ஆழமாக பார்த்தவன் தன் கனத்த குரலை செருமியவாறு,
“யாரு?”
என்றான் அவளை கூர்ந்து பார்த்தவாறு,
“எது யாரு?”
புரியாமல் கேட்டாள்.
“அதான் உங்க பிரண்ட்டை அழ வச்சது யாரு?”
“அதுவா? அது… அது உங்க பிரண்ட் தான்.”
என்றாள் மெல்லிய குரலில்…
“என்னோட பிரண்டா?”
அதிர்ந்தவன் சிறிது நேரத்துக்கு பின்,
“நளனா?”
என கேட்க, “ம்…” என தலையசைத்தாள்.
“அவன் அப்படி என்ன சொன்னான். இவ்வளவு தூரம் வாய் விட்டு கதறுகிற அளவு.”
“ம்… காதலை சொன்னார்.”
“என்னது? காதலையா?”
“ஆமா சார். சும்மா சொன்னா சாடி அனுப்பி இருப்பா. ஆனா உயிரா உருகி முன்னால நிற்கும் போது அவளால அழ தானே முடியும். அதுலயும் காலை இழந்துட்டு நிற்கதியா நிக்குற பொண்ணு முன்னால திகட்ட திகட்ட அன்பை கொட்டுனா அவளாலயும் தாங்கிக்க முடியாது தானே. அப்படி தான் தாங்க முடியாம அழுதிருக்கா.”
“காதலை சொன்னா அழுவாங்களா? அவன் உண்மையா தானே நேசிக்கிறான். ஒ.கே சொல்லிட்டு சேர்ந்து வாழ வேண்டியது தானே.”
“என்ன சார் பேசுறீங்க. காதலை கொடுத்தா கொண்டாணு ஏத்துக்கிற நிலையிலயா அவா இருக்கா. அவருக்கு வேணா இவளோட கால் பிரச்சினை இல்லாம இருக்கலாம். ஆனா அவரோட பேமிலி அப்படி இருக்காது சார். இவருக்காக ஏத்துட்டு காலம் முழுக்க அந்த குடும்பத்து முன்னால என் பிரண்டால கூனி குறுகி நிற்க முடியாது சார்.”
“அவங்க ஏன் கூனி குறுகி நிற்கணும். நளன் அவங்களை நல்லா பாத்துப்பான். அவங்க குடும்பத்துல யாரும் அவனுக்கு எதிரா நிக்க மாட்டாங்க.”
“இப்போ அப்படி தான் சார் பேசுவாரு. ஆண்மனசு தானே. எப்போ எப்படி மாறும்ணு யாருக்கு தெரியும். இப்போ தேனா குழைகிறவங்க அவங்களுக்கானதா மாறுன பிறகு எப்படி மாறுவாங்கணு உலகத்துக்குள்ள பாத்துட்டு தானே இருக்கும். கட்டுறது வரை எந்த பிரச்சினையும் இல்ல சார். கட்டிட்டு போன பிறகு தான் பிரச்சினையே தொடங்கும். என் பிரண்டால ஒரு பொண்ணு செய்ய கூடிய சாதாரண வேலையை கூட செய்ய முடியாது சார். கணவருக்கு விதம் விதமா சமைச்சி போட்டு அவரையும் அவரோட குழந்தையையும் பாத்துக்க முடியாது. ஏன் அவளை பாத்துக்கவே அவளால முடியாது. இந்த சூழல்ல கல்யாணம் எப்படி சார்.”
“எப்படினா? அது எல்லாம் அவனுக்கு தெரியாதுணு நினைச்சீங்களா?”
“ஒருவேளை அவருக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனா அவர் குடும்பத்துக்கு தெரியாது சார். நிதமும் குத்தி குத்தி பேசி அவளை சாகடிச்சிடுவாங்க சார். அதுல வேற இவா தன்மானம் உள்ள பொண்ணு. தாங்கிட மாட்டா சார்.”
“உங்களுக்கு அவன் குடும்பத்தை பற்றி தெரியாததால சொல்லுறீங்க. அவனுக்கு அம்மாவும் தங்கச்சியும் தான் உண்டு. அப்பா ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னால இறந்துட்டாங்க. அவனோட அம்மா ரொம்ப ரொம்ப நல்லவங்க. யார் முன்னாலயும் அதிர்ந்து கூட பேச மாட்டாங்க. தங்கச்சி. அவளை பற்றி ஏன் பேசணும். அவா அடுத்த வீட்டுக்கு வாழ போற பொண்ணு. வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இவன் மேரேஜ்க்கு அப்புறம் அவளுக்கு முடிக்கிறது தான் அவன் அம்மாவோட திட்டம். அவன் இவங்களால எதுவும் பேச முடியாம நாட்களை கடத்திட்டே வரான். எனக்கு தெரிஞ்சி உங்க தோழிக்கு அது ஒரு அருமையான வீடுணு தான் சொல்லுவேன்.”
“அது எப்படி சார். என்னால நம்ப முடியல. ஒருவேளை அது அருமையான குடும்பமா இருக்கலாம். என் தோழி பழையபடி இருந்தா ஒரு வேளை நல்லபடியா வாழலாம். ஆனா இப்போ பக்குவமா புரிஞ்சி ஏத்துப்பாங்கணு சொல்லுறதை என்னால நம்ப முடியல.”
“முடியாது தான். அவங்க கூட பழகுறது வரை நான் சொல்லுறதை உங்களால நம்ப முடியாது தான். வேணா பழகி பாருங்களேன்.”
“என்னங்க நீங்க. ரஜினி சார் சொல்லுறது போலவே சொல்லுறீங்க. அது எல்லாம் நடக்க கூடிய காரியமா?”
“ஏன் நடக்காது? எல்லாம் நம்ம கையில தான் இருக்கு. நீங்க வேணா ஒரு நாள் அவன் வீட்டுக்கு போய் பாருங்க.”
“நானா? நான் எப்படி?”
தயங்கியவள்,
“அப்படியே போனாலும் நான் சொல்லுறதை அவா நம்பணுமே…”
“அவங்க நம்ப மாட்டாங்கணு தோணுச்சுனா நீங்க அவங்களை தான் அனுப்பி வைக்கணும்.”
“அவளா? அவா எப்படி?”
“வேற வழியே இல்ல. ஒரு முறை அவனோட அவன் வீட்டுக்கு உங்க பிரண்டை போக வச்சிட்டீங்கனா எல்லாம் சுபமா முடியும்.”
என்றதும் ஓவியா அமைதியானாள்.
“என்னங்க அமைதியாகிட்டீங்க.”
“என் திலகாவோட வாழ்க்கையில நல்லது நடந்தா எனக்கு சந்தோஷம் தான். அவள் மனசுலயும் காதல் இருக்கு. ஆனா அவள் நிலை அவளை சொல்ல விடல. அவ்வளவு தான். அவங்க இரண்டு பேரும் சேர்ந்தா நல்லா தான் இருக்கு. அவள் பேசுறதை வச்சி பாக்கும் போது இவளோட மனசுலயும் அவர் இருக்கார். இல்லனா அவரை திட்டி அனுப்பிட்டு இவள் அழுவாளா.”
“அப்போ என்ன? இன்றே பேசுங்க.”
“நானா?”

“அப்புறம். இந்த சூழல்ல அந்த பொண்ணு சொல்றதை கேட்குதுனா அது உங்க பேச்சை மட்டும் தான். முணு மாசம் உங்களுக்கு அனுப்புனது போல அவங்களுக்கு நளன் எத்தனை அப்பாயின்மென்ட் லெட்டரை அனுப்புனான் தெரியுமா? ஆனா நீங்க ஒரு போனை தான் போட்டீங்க. அடுத்த நொடி வந்து நிக்குறாங்க. அப்படினா உங்க பேச்சை எவ்வளவு மதிக்கிறாங்கணு தெரிஞ்சிக்குங்க.”
முகுந்தின் பேச்சின் உண்மை தெரிய தெரிய ஓவியாவினுள் நம்பிக்கை சுடர் விட ஆரம்பித்தது. எப்படியும் பேசி தான் ஆக வேண்டும். இதை விட்டால் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க போவது இல்லை என்பதை உணர்ந்தவள், அடுத்த நாளில் இருந்தே பேசி பேசி திலகாவின் மனதை கலைக்க ஆரம்பித்தாள்.
“இப்ப என்ன சொல்ல வரா?”
கடுகடுத்தாள் திலகா.
“ட்ரீட்மென்ட்டுக்காக தானே கூப்பிடுறாரு. போறதுல என்ன தப்பு. என் கூட வரா. டாக்டரை பாக்குறோம். காலை செக் பண்ணுறோம். இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறா?”
“அங்க நாம ரெண்டு பேர் மட்டும் போக முடியாதா?”
“எனக்கு இங்க என்னடி தெரியும். அவர் பிறந்து வளர்ந்த ஊரு. கூடவே டாக்டரை தெரிஞ்ச ஒரு ஆள். அவர் கூட வந்தா தானே நல்லா இருக்கும்.”
“இல்லடி. இதுக்கு சம்மதிச்சி கூட போனா? அவர் இதையே அட்வாஞ்ஜா எடுத்துட்டு சும்மா சும்மா தொல்லை பண்ணுவாரு.”
“அப்படி தொல்லை பண்ண நான் விட்டு விடுவேனா? உனக்கு பிடிக்காம உன்னை நெருங்கட்டும் பாரு. அப்புறம் இருக்கு.”
சொன்னவள் மென் குரலில்,
“உனக்கு பிடிச்சிருக்குணா ஓ.கே…”
என்றதும் சட்டென திரும்பி அவள் முறைக்க, கண் விழியை எங்கெங்கோ மோத விட்டவள்,
“இல்லடி. உனக்கு பிடிக்காம அவர் எப்படி உன்னை நெருங்க முடியும். அதை சொன்னேன்.”
என சமாளிக்க,
“வர வர உன் தொல்ல தாங்கலடி.”
என திரும்ப போக,
“எங்க கிளம்புறா? பதிலை சொல்லிட்டு போ.”
என்றவளை சிறு நொடி அமைதியாக பார்த்தவள்,
“என்னவோ பண்ணி தொலை.”
என அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைக்க, அவள் சம்மதம் கிடைத்த அடுத்த நொடியே ஓவியா வேலையை ஆரம்பித்தாள். நேரே முகுந்தன் அறைக்கு வந்து பேசி விசயத்தை நளனுக்கு சொல்லி மறுநாளே காரோடு வந்து நின்றான்.
தான் சொன்னது போல ஓவியாவும் கிளம்ப தான் செய்தாள். கார் வரை கூட வந்தவள்,
ஒயாது அடித்த செல்லை காதுக்கு கொடுத்து யாரோடோ தீவிரமாக பேசி முடித்து,
“திலகா சாரிடீ. ஒரு எமர்ஜென்ஸி . மும்பையில இருந்து நம்ம கிளைன்ட் ஒருத்தர் ஆபீஸ்க்கு வராங்களாம். பெரிய ஆடர் ஒண்ணு கொடுக்க போறாங்களாம். ஆல்ரெடி கிளம்பிட்டாங்களாம். சார் கூட ஆபீஸ்ல இல்ல. நானும் இல்லாம இருந்தா சரியாகாது. நீ நளனோடவே போயிட்டு வந்திடேன்.”
சொன்னவள் அவளை ஒரு நொடி யோசிக்க விடாமல் அவசரமாக வண்டியின் முன்னால் ஏற்ற, சூழ்நிலையை உணரும் முன் நளன் வண்டியை கிளப்பி இருந்தான். அவள் அங்குமிங்கும் நெளிந்து எதையோ சொல்ல தவித்து கடைசியில் சொல்ல முடியாமல் திரும்பி நளனை முறைத்து பின் அமைதியானாள்.
வண்டிக்குள் ஏறிய நொடியில் இருந்தே நளன் மாறாத புன்னகையோடு அமர்ந்திருந்தான். அவனை பார்க்க பார்க்க ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அவன் முகமே இது இருவரின் பிளான் என்பதை தெளிவாக சொல்லி விட்டது.
“என்ன சிரிக்கிறீங்களா? நல்லா சிரிங்க. சாதிச்சிட்டேனு தோணுமே. நல்லா தோணட்டும். ஆனா நீங்க எப்படி குட்டி கர்ணம் அடிச்சாலும் நிச்சயம் நீங்க நினைக்கிறது நடக்காது. என்ன அந்த பைத்தியம் எனக்கு நல்லது நடக்கட்டும்னு ஏற்றி அனுப்புது. அவளுக்கு தெரியாது. என்னோட காலை எப்படி சரிபடுத்த முடியாதோ அது போல என் மனசையும் எந்த காரணம் கொண்டும் சரிபடுத்த முடியாது.”
மனதுக்குள் தான் சொல்லி கொண்டாள். வெளியில் சொல்லும் தைரியம் அவளுக்கு வரவில்லை. மூன்று நாள் அலுவலகம் வராமல் அவளை அழ வச்சதை இன்னும் அவள் மறக்கவில்லை. இன்னும் ஏதாவது பேசி அவனை அழ வைக்க அவள் விரும்பவில்லை. ஆனால் அமைதியாக இருந்து அவனுக்கு புரிய வைத்து விட வேண்டும் என்றே நினைத்தாள்.
ஆனால் வாழ்க்கை இவளுக்கு அவனை புரிய வைக்க போகிறது என்பதை உணராமலே அவனுடன் பயணமானாள். ஸ்டியரிங்கை விட்டு விட்டு சந்தோஷத்தில் தலையை கோரியவாறு விசிலடித்து சிரித்தவாறே தமிழ் சினிமா பாடல் ஒன்றை பாடிய நளனை ஒர கண்ணால் பார்த்தவள் எந்த ரியாக்ஷனையும் வெளி காட்டாமல் அப்படியே இருக்க கண்டதும், அடுத்து வானொலியை ஒலிக்க செய்தான்.
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலையுதே…
கொஞ்சும் குரலில் உருக்கும் வரியில் அது குரல் கொடுக்க, நளனும் வாய் விட்டு ரசித்து பாட ஆரம்பித்தான். அவன் செய்கையும் பொலிவையும் துள்ளலையும் பார்த்தாளே தவிர அதற்கும் எதுவும் பேசவில்லை.
“இப்படியே கடற்கரைக்கு போயிடுவோமா?”
மெல்ல குனிந்து காது பக்கமாய் அவன் பேச, சட்டென திரும்பி முறைத்தவள்,
“பேசாம ஹாஸ்பிட்டல் போங்க.”
என்றாள் அதட்டும் குரலில்,
“பீச்சுக்கு போயிட்டு போலாம்டி.”
என்றான் கெஞ்சும் பார்வையோடு,
“வேணாம். என் வாயில இருந்து எதையாவது வாங்கி கட்டிட்டு மூணு நாளா காணாம போகாதுங்க. பேசாம வண்டியை ஹாஸ்பிட்டல் விடுங்க.”
என்றதும் வியப்பு மேலிட அவளை பார்த்தவன்,
“ஏய்… அப்படினா மூணு நாளா நீ… நீ… என்னை எதிர்பார்த்தியா?”
மொத்த வியப்பையும் விழிகளில் தேக்கி கொண்டு அவன் கஸ்தி குரலில் கேட்ட நொடி அவள் உடலே ஒரு நொடி சிலிர்த்து போனது. ஆனாலும் அது தெரிந்து விட கூடாது என்று அவசரம் அவசரமாக…
“ஆமா காத்திருந்தாங்க.”
என்றாள் குத்தலாக, இது பொய் கோபம் என உணர்ந்தவன்,
“ஏய்… ஏய்… நிஜம் தானே. நான் வரலணு ஏக்கமா தேடி இருக்கா அப்படி தானே.”
என்றான் மறுபடியும் ஆர்வமாக,
“ஏக்கமா? எனக்கா? கனவு காணாதுங்க. உங்க பிரண்ட் தான் அடிக்கு ஒரு முறை சொல்லிட்டிருந்தாரு. வேலை கொடுத்தா அதை முடிக்காம வீட்டுல போய் தூங்குனா தேட மாட்டாங்களா? அதுவும் கோடி கணக்கா முதலீடு பண்ணுனவங்க. அவங்க பாவம்ணு தான் சொன்னேன்.”
“ஏது? ஏது? அவங்களுக்காக தான் பேசுனா. நீ தேடல… அப்படி தானே…ம்.. நம்பிட்டேன். நம்பிட்டேம்மா நம்பிட்டேன்.”
என்றதும் பார்வையால் முறைத்தவள் பின் பேச்சை வளர்க்க விரும்பாமல் வெளிவுலகை ரசிக்க,
“திலகா இளநீர் கடை வருது. நீ குடிக்கிறியா?”
“எனக்கு எதுவும் வேணாம்.”
“இளநீருக்காக எல்லாம் காதலை கேட்க மாட்டேன். நம்பி குடிக்கலாம்.”
என்றவனை பார்த்து மறுபடியும் முறைத்தவள்,
“உங்க வாயை வச்சிட்டு சும்மாவே வர மாட்டீங்களா?”
“சும்மா தானே. நான் வரேன். நீ பேசுறதுனா நான் பேசாம அமைதியா கேட்டுட்டு வர ரெடி. பேச நீ ரெடியா?”
கேட்டு விட்டு அவன் கண்ணடிக்க,
“ ஓவியா!!!!!!!!…”
என அலறியவள்,
“இந்த பிசாசு கூட அனுப்பி வச்சி தப்பு பண்ணுறியேடி. இவன் என்னை பைத்தியம் ஆக்காம ஒய மாட்டான் போல.”
என கத்தியவள் சட்டென திரும்பி அவனை சுட்டெறிக்கும் பார்வை பார்த்தவாறு,
“நீ முதல்ல வண்டியை நிறுத்து. நான் வேற வண்டி புடிச்சி ஆபீஸ் போறேன்.”
என அவள் அவசரமாக சீற் பெல்ட்டை கழற்றி போட்டு ரெடியாக,
அவள் முன் பெரிய கும்பிடு ஒன்றை போட்டவன் தன் கைவிரலால் வாய்க்கு ஜிப் போட்டது போல காட்டி பேச்சை நிறுத்தி கொள்ள, அவனை ஒரு நொடி பார்த்தாள். அதன் பின் வெளிவுலகம் பக்கம் திரும்பிய திலகாவின் உதடு மெலிதாய் விரிந்தது. அதன் பின் பயந்தே வாய் திறக்கவில்லை நளன். ஆனால் வழியில் இளநீர் வாங்கி கொண்டு வந்து தலையை குனிந்தவாறு அவள் முன் நீட்டி கொண்டு நின்றான். ஒரு நிமிடம் அப்படியே நிற்க விட்டவள் அதன் பின் மறுப்பு எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்தாள். அது போல ஓரமாய் போன பஞ்சு மிட்டாய் காரனை நிறுத்தி பஞ்சு மிட்டாய் வாங்கியவன் இப்போதும் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தலையை தாழ்த்தியவாறு நீட்ட,
திலகாவுக்கு சிரிப்பு வந்து விட்டது. அவனிடம் கோபப்படவும் முடியாமல், அடிக்கவும் தோன்றாமல் இப்போதும் வாங்கி கொண்டு, அவனை பார்த்தவாறே உண்ண தொடங்கினாள். அடுத்து நேரே வண்டி ஹாஸ்பிட்டலுக்கு தான் சென்றது. படிக்கட்டு பக்கத்தில் கொண்டு வண்டியை நிறுத்தியவன் வேகமாக டோரை திறந்து வெளியேறி பின்புறம் டிக்கியில் இருந்த உருட்டு வண்டியை எடுத்து தள்ளி கொண்டே திலகா பக்கம் வந்தான். அவள் இறங்க ரெடியாக இருந்தாள். மெல்ல கையை நீட்ட தயக்கத்தோடு தான் கையை தந்தாள்.
ஆனால் அந்த கை சென்று சேர்ந்த இடம் தனக்கு உரிமை உள்ள இடம் போல அவ்வளவு லாவகமாக அவள் இறங்க உதவி, வண்டியில் ஏறி அமர உதவி, அவள் வண்டியை பிடித்து தள்ளியவாறு முன்னோக்கி அந்த கை அவளை அழைத்து சென்றது. டாக்டரை பார்க்க காத்திருந்த நொடி கூட அவன் போய் செயரில் அமரவில்லை. அவள் அருகிலே நின்றான். டாக்டர் அழைத்த போது அவனே கூட்டி சென்றான். இவளை விட இவளை பற்றி அவனே அதிமாக கேட்டு தெரிந்து கொண்டான். அத்தனை செக்கப்பையும் மறுபடியும் எடுக்க வைத்தான். முழு விபரமும் கேட்டு தெரிந்து கொண்டே தான் வெளியில் அழைத்து வந்தான்.
டாக்டர் அறைக்குள் நுழைந்த நொடியில் இருந்து அவள் எதையும் பேசவில்லை. உரிமையுள்ளவன் போல… அவள் நலனில் அக்கறை உள்ளவன் போல அவ்வளவு படபடப்பாக கேட்டான். அவன் கேட்ட தோனியையே விழி மூடாமல் பார்த்து கொண்டே இருந்தாள் பெண்ணவள். அவளிடம் கேட்ட கேள்விக்கு கூட, கூட வாழ்ந்தவன் போல அவனே பதில் சொல்ல, தன்னை எவ்வளவு கவனித்திருக்கிறான் என்பது புரிய நிஜமாகவே அவள் மனம் நெகிழ்ந்து போனது.
கட்டிய கணவர் கூட அவர் மனைவியை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருப்பார் என்று சொல்ல முடியாது. ஆனா அப்படியான விசயங்களை கூட இவன் பேச அவனை கலங்கும் கண்ணால் தான் பார்த்தாள். கடைசியில் வெளி வரும் போது அவள் மனதோ…
முதல் முறையாக…
ஏன் கடவுளே ? ஏன் கடவுளே என் காலை எடுத்தா?
என தான் கேட்டது. கேட்கும் போதே உள்ளத்தில் வலி ஒன்று மேல் எழுந்து வந்து அவள் முகத்தை சுருங்க வைத்தது. அவள் முக சுருக்கத்தை கண்டவன், என்ன? என்பது போல் விழி உயர்த்தி கேட்க, இல்லை என்பது போல் தலை அசைத்தாள். கூடவே முகத்தையும் அவனுக்காக மாற்றி கொண்டாள். அவளை வெளியே அழைத்து வந்தவன் வண்டிக்கு ஏறி அமர உதவ, அவள் தடுமாறினாள்.
நில்லு. நான் உதவுறேன்.
என்றவன் சட்டென அவளை தூக்கி விட தடுமாறி போனாள். உடல் சிலிர்த்து உள்ளம் சிலிர்த்து உணர்வில் அவள் தவித்த போது இது எதையும் பார்க்காதவன் போல அவளை பாதுகாப்பாய் சீற்றில் அமர வைத்தவன் பின் அந்த உருட்டு வண்டியை தள்ளி கொண்டு வந்து டிக்கியில் ஏற்றி விட்டு டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான்.
பெண்ணவளோ அவன் மீட்டிய மீட்டலில் உருக்குலைந்து அமர்ந்திருந்தாள். உள் ஏறிய வேகத்தில் சட்டென அவளை பார்த்து,
“கிளம்புவோமா?”
என கேட்ட போது தான் அவள் முகத்தில் புதிதாக ஒரு மலர்ச்சி தெரிவதை பார்த்தான். நல்ல மூடுல தான் இருக்கா? இப்ப கேட்டா சரியா இருக்கும். என தீர்மானித்தவன்.
மென் குரலில் சற்று தயக்கத்தோடு,
“சாப்பிட்டுட்டு போவோமா திலகா ?”
என கேட்க, அவனை திரும்பி பார்த்த திலகா அவன் கண்ணில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து தடுமாற்றமாய் அமைதியாக,
“சாப்பிட வந்தா எல்லாம் காதலிக்கிறானு நினைச்சிக்க மாட்டேன்.”
என தயங்கி தயங்கி சொல்ல, அவன் மனதை நோகடிக்க விரும்பாமல்,
“ம்…”
என்றாள்.
“ஐ!…” என வண்டிக்குள் துள்ளியவன் சட்டென திரும்பி, சாரி… சாரி. என சொல்ல அவளும் மென்மையாய் சிரித்தாள். நளன் வண்டியை நேரே அந்த நகரின் பிரமாண்ட ஹோட்டலை நோக்கி செலுத்தினான். பத்து நிமிடம் தான். கண்களை கவர்ந்திழுக்கும் அழகோடு இருந்த அந்த கட்டிடத்தை கண்டதுமே,
“எதுக்கு? எதுக்கு இவ்வளவு காஸ்லியா?”
என்றவளை தயக்கத்தோடு பார்த்தவன்,
“முதன்முதல் என் கூட சாப்பிட வரா. வாழ்வோட கடைசி நொடி வரை நியாபகம் இருக்கணும்ல.”
என்றதும் அவனையும் கட்டிடத்தையும் மாறி மாறி அவள் பார்க்க சிரித்து கொண்டே கீழே இறங்கியவன் மறுபடியும் வீல் செயரை எடுக்க கிளம்பினான். எடுத்து அவளை அமர வைத்து அந்த உயர் ரக ஹோட்டலுக்குள் அழைத்து சென்று உட்கார வைத்தது வரை அவன் முகத்தில் சின்ன ஒரு முக சுழிப்போ அல்லது தயக்கமோ இல்லாதிருக்க கண்டதும் பெருமிதத்தோடு தான் அவனை பார்த்தாள்.
“இவன் நிஜமா?”
என்று தான் தோன்றியது. ஆனால் பொங்கும் சிரிப்போடு ஒவ்வொன்றையும் செய்தவனை சந்தேகப்படவும் முடியவில்லை. அது போல அவனின் அதிகபடியான அன்பை தாங்கி கொள்ளவும் முடியவில்லை. அடிக்கடி கண் கலங்கி மெல்ல மெல்ல தன்னை மீட்டெடுத்தவாறே தான் அமர்ந்திருந்தாள்.
“என்ன சாப்பிடுறா திலகா?”
“இட்லி போதும்.”
“இட்லியா? அது எப்பவும் வீட்டுல சாப்பிடுறது தானே வேற ஏதாவது கேளு.”
“இல்ல… போதும்.”
“சரி.”
என்றவன் இட்லியையும் கூடவே அவனுக்கு அந்த ஹோட்டலில் ஸ்பெஷலான சில உணவு பொருளையும் ஆடர் செய்து விட்டு காத்திருந்தான். பத்து நிமிடத்தில் வந்தது. இட்லியை அவள் பக்கம் திருப்பி வைத்தவன். தனக்கு வந்த உணவை தன் பக்கம் திருப்பியவாறு,
“எடுத்து சாப்பிடலாம். நான் தப்பா நினைக்க மாட்டேன்.”
என தன் உணவை காட்ட, அவன் கண்ணை ஒரு நொடி பார்த்தவள் இதை தனக்காக தான் வாங்கி இருக்கிறான் என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டு,
“ அடுத்தவங்க சாப்பாட்டுல கை போட்டு எடுத்து சாப்பிடுறது எனக்கு பிடிக்காது.”
“எனக்கு பிடிக்கும். வேணா நான் கை போடல. நீ எடுத்து சாப்பிடு. அப்புறம் நான் சாப்பிடுறேன்.”
என்றான் குசும்பை உதட்டில் தவழவிட்டவாறு,
“யார் சாப்பாடும் எனக்கு வேணாம். எனக்கு வாங்குனதே எனக்கு போதும்.”
“எனக்கு அப்படி எல்லாம் இல்லம்மா. இட்லி பிடிச்சா எடுத்து சாப்பிட்டு விடுவேன்.”
என சொன்னவன் சட்டென அவள் உணவில் கை வைத்து விட, திலகாவுக்கு கோபம் தலைக்கேறியது சட்டென அந்த உணவை தள்ளி வைத்தவள்,
“சீக்கிரம் சாப்பிடுங்க. கிளம்பலாம்.”
என முகத்தில் அறைந்தது போல் சொல்லி விட, நளன் முகம் சட்டென வாடிப் போனது. அதன் பின் வேறு இட்லியை வரவழைத்து அதை ரொம்ப வற்புறுத்தி சாப்பிட வைத்தான். ஆனால் அதன் பின் அவன் முகம் விரியவே இல்லை. அதை ஒரக்கண்ணால் பார்த்தவாறு தான் இட்லியை உண்டு முடித்தாள். ஆனால் அவன் உண்ணாமல் அப்படியே வைத்து விட்டு எழுந்து ரெஸ்ட் ரூமுக்குள் சென்று விட போகும் அவனை கலங்கும் கண்ணோடு பார்த்தவள் அவன் தலை மறைந்ததும்,
ஒதுக்கி வைத்த அவன் உண்ட இட்லி துண்டை எடுத்து கண்களில் நீர் வடிய உண்டு முடித்தாள். அவள் உணவை உண்டு முடித்து நிறைவு கொண்ட நொடி நளன் வந்து விட,
“பாவி. என்னை வெறுப்பேற்ற தான் இது எல்லாம் செய்யுறியா? மனசு முழுசும் காதலை தேக்கி வச்சிட்டு எதுக்குடி இப்படி பண்ணுறா? எந்த கூட்டுக்குள்ளும் உன்னை அடச்சிக்காத. உனக்கு நான் இருக்கேன். எப்பவும் இருப்பேன்.”
என சொல்லி கொண்டது, என்றாலும் அவள் சாப்பிட்டு முடியும் வரை அவள் இருந்த மேஜை பக்கம் அவன் வரவே இல்லை. வந்த பின் மொத்த உணவும் சாப்பிட்டு முடிந்த பிளைட்டை கண்டதும் குழப்பமாக பார்க்க,
“சர்வர் வந்து எடுத்துட்டு போயிட்டாரு.”
அவசரமாக சொன்ன திலகாவை அர்த்தம் கலந்த ஒரு சிரிப்போடு கடந்தவன்.
“கிளம்புவோமா?”
என்றான். இவ்வளவு செய்தும் முகத்தில் எதுவும் காட்டாமல் நார்மலாக அழைத்தவனை வினோதமாக தான் பார்த்தாள். ஒருவேளை நாம தான் சாப்பிட்டோம்னு தெரிஞ்சி போச்சோ.
எண்ணியவள் கண்களால் அவனை அளந்தாள். ஆனால் அந்த கண்ணில் அவளுக்கு எதுவும் புலப்படவில்லை. அதே நேரம் நளனும்
“கிளம்பலாம் திலகா.”
என சொல்ல சரி என்பது போல் தலை அசைத்தாள். அவசரமாக அவளை அழைத்து செல்ல வீல் செயரை தூக்க, பெண்ணவளுக்கு தான் தாங்க முடியாத வேதனை வந்தது. ஏனோ அதன் பின் பேச கூட அவன் முன் வாய் திறக்க முடியவில்லை. வழி நெடுக்கிலும் அவன் என்னவெல்லாமோ பேசி கொண்டே தான் வந்தான். மறுத்து பேசும் மனநிலையோ அல்லது சிரித்து பேசும் மனநிலையோ இல்லாதவள் போல வெறுமையாய் அமர்ந்திருந்தாள்.
மனம் முழுவதும் ஏதோ ஒரு வெறுமை. காரணம் தெரியாத கோபம். காட்ட முடியாத ஆத்திரம். சொல்ல முடியாத வேதனை. ஏற்று கொள்ள முடியாத உணர்வு. அவள் எங்கெங்கோ போய், எங்கெங்கோ தொலைந்து, எங்கெங்கோ அலைந்து கடைசியில் நிஜ உலகம் வந்த போது வண்டி வேறு திசையில் பயணிப்பதை பார்த்து அதிர்ந்தாள்.
சட்டென அவன் பக்கம் திரும்பியவள்,
“இங்க… இங்க… இங்க எங்க… நீ… நீ… இப்போ எங்க போறா?”
என அதிர்ந்து கேட்டவளுக்கு எந்த மறுமொழியும் கொடுக்காமல் வண்டியை வேகமாக ஒட்ட,
“கேட்கிறேன்ல பதில் சொல்லு. நீ இப்போ எங்க போறா?”
என மறுபடியும் அதட்டி கேட்க, இப்போதும் பதில் எதுவும் பேசாமல் வண்டியை ஒடித்து திருப்பி ஒரு வீட்டின் முன் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினான்.
அவனையும் அந்த வீட்டையும் புரியாமல் மாறி மாறி பார்த்தவள், அவன் கண்ணை பார்த்தும் எதுவும் தெரிந்து கொள்ள முடியாமல் தடுமாற்றமாய் இருக்க, நளன் மென் சிரிப்போடு அவளை நோக்கினான்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



