வணக்கம் வாசகர்களே!
திலகா நளனின் அழகான காதல் பயணம் கடைசியில் எதில் நிறைவு பெற்றது? அந்த நிறைவு அவளில் தெளிவை உண்டு பண்ணியதா? தெரிஞ்சிக்க வாங்க பிரண்ட்ஸ் அத்தியாயத்துக்குள்ள போலாம்.
திலகா நளனின் அழகான காதல் பயணம் கடைசியில் எதில் நிறைவு பெற்றது?
வாசலில் வண்டி வந்து நின்றதுமே முதலில் ஒடி வந்தது துர்கா தான். இருபத்து மூன்று வயது இளம் மங்கை. துள்ளலோடு வெளி வந்தவள் வெளியில் வந்து நின்ற வாகனத்துக்குள் நளனையும் திலகாவையும் பார்த்ததும் சத்தமாக…
“அம்மா… அண்ணன் அண்ணியை கூட்டிட்டு வந்துட்டாங்க…”
என உற்சாகத்தில் கத்த, சட்டென அதிர்ந்து திரும்பினாள் திலகா. அவளின் சுட்டெறிக்கும் பார்வையை சகிக்க முடியாமல் தலை குனிந்தவன்.
“அம்மா தான் பார்க்கணும்னு சொன்னாங்க…”
என்றான் திக்கி திணறி,
“அதுக்காக…”
அடுத்த வார்த்தை சொல்ல முடியாமல் அவள் தொண்டை குழி அடைக்க,
“ஒரு முறை உள்ளால வந்து பாத்துடேன். உனக்கு பிடிக்கலனா அடுத்த நொடியே கூட்டிட்டு போயிடுறேன்.”
கண்கள் இடுக்க கெஞ்சுதலோடு கேட்டவனை எதுவும் செய்ய முடியாமல் முறைக்க,
“கொஞ்ச நேரம் தான்… பிளீஸ்… பிளீஸ்…”
என்றவன் அவள் பதில் கேட்காமல் அவசரமாக இறங்கி வீல் செயரோடு அவள் அருகில் வர, திலகாவின் இதயமே வேகம் வேகமாக துடித்தது. நான் இந்த நிலையில் அவர்கள் முன் எப்படி? மனது கூசியது. கூடவே அவன் செய்த செயலை நினைத்து அழுகை வந்தது. எவ்வளவு தைரியம். ஒற்றை வார்த்தை சொல்லாமல் இவன் எப்படி இப்படி ஒரு முடிவெடுக்க முடியும். அந்த உரிமையை இவனுக்கு யார் கொடுத்தது.
எண்ணும் போதே சட்டென ஓவியா முகம் வர,
“இதுவும் அவளுக்கு தெரியுமா? தெரிந்து தான் இவனுடன் ஏற்றி அனுப்பினாளா? அப்படி தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் இவனுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வரும். எல்லாம் அந்த பைத்தியகாரியோட விளையாட்டா தான் இருக்கும்.”
“ஓவியா உனக்கு இருக்குடி.”
என மனதுக்குள் அவளுக்கு அர்ச்சனை வழங்கிய நேரம் அந்த நாற்பத்து எட்டு வயது மதிக்க தக்க பெண்மணி கண்ணில் கனிவோடு அவள் முன் நின்றாள். அவர்களை பார்த்த பின் அவள் மனம் வேறு எந்த பக்கமும் செல்லவில்லை. அவர் கண்களையே பார்த்தாள். அந்த கண்ணீல் தான் எத்தனை கனிவு. அந்த மலர்ந்த முகத்தில் தெரிந்த அமைதியும் ஒடி வந்து தாங்கிய கரிசனமும் கண்டு சிலிர்த்து தான் போனாள். நளனின் குணம் எங்கிருந்து அவனுக்கு வந்தது என்பது அந்த நொடி அவளுக்கு புரிந்தது.
“பாத்தும்மா. பாத்து.”
சொன்னவள் மகனை விலக்கி விட்டு தானே அவள் இறங்கி அமர உதவி செய்து, மருமகளை உள்ளே அழைத்து சென்றாள். வீடு பிரமாண்டம் இல்லா விட்டாலும் பெரிதாகவே இருந்தது. ஹால் விசாலமாகவே இருந்தது. அதில் போடப்பட்ட ஷோபாவில் உட்கார வைத்தவள்,
“சாப்பிட்டுட்டு தான் போகணும். துர்கா நீ அண்ணிட்ட பேசிட்டிரு. நான் சீக்கிரம் சமையலை ரெடி பண்ணுறேன்.”
என கிச்சனுக்குள் நுழைய போகும் அவர்களையே விழி மூடாமல் தான் பார்த்தாள். அவள் கவனத்தை தாயின் பக்கமிருந்து திருப்பியவள் துர்கா தான்.
“ஆமா அண்ணி இந்த தடியனை எப்படி சமாளிக்கிறீங்க…”
என கேட்க, புரியாமல் விழித்தாள் திலகா.
“வாய் மூடாம பேசி அறுப்பானே அதான் கேட்டேன். வீட்டுல கொஞ்ச நேரம் தான் இருப்பான். ஆனா கிளம்புறதுக்குள்ள பேசி பேசி என் காதுல ரத்தம் வர வச்சிட்டு தான் போவான்.”
என்றதும் அவள் சொல்ல வருவது புரிந்து சிரிக்க, தன்மானம் சீண்டப்பட்ட நளனோ அவளை விரட்ட ஆரம்பித்திருந்தான்.
“ஏய்… ஒடாத. பிடிச்சேன். உன் இறகை ஒடிச்சிடுவேன்.”
அவன் கத்தி கொண்டே விரட்ட துர்காவோ வீடு முழுவதும் ஒடினாள். கடைசியாக ஒடி களைத்தவள் திலகா பக்கம் வந்து அவள் தோளோடு கைப் போட்டு கட்டி கொள்ள, திலகா சிரிப்போடே இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“வாடா. வா. இப்போ வா…”
என திலகாவிடம் அடைக்கலமாகி விட்ட குஷியில் சொல்ல, தடுமாறி நின்றவனை பார்த்து வாய் விட்டு சிரித்தவள்,
“போங்க சார் போங்க. துர்கா உண்மையை தானே சொல்லுறா? வாய் இருக்குனு விடாம பேசுனா அப்படி தான் சொல்லுவாங்க.”
என்றதும் துர்கா பின்னால் இருந்து பழிப்பு காட்ட,
“கொன்னுடுவேன்…”
என ஒரு விரலை உயர்த்தி எச்சரிக்க, முகத்தை பாவமாக வைத்தவள்,
“பாத்தீங்களா அண்ணி. இவன் எப்பவும் இப்படி தான். விடாம என்னை துரத்திட்டே இருப்பான்.”
என சிணுங்க, அவர்களின் செல்ல சண்டையை ரசித்தவள் வாய் விட்டு சிரிக்க, ஆறு மாதத்திற்கு பின் வலி மறந்து மனம் விட்டு சிரித்த அவளை கண் கொட்டாமல் பார்த்தான் நளன். இப்போது திலகாவுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஒரு நொடி அவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்தவள் மென்சிரிப்போடு தலை குனிய,
“என் பொண்டாட்டியை சிரிக்க வச்சிட்டா. அதனால விடறேன். இன்று முழுதும் சிரிக்க வச்சிட்டா நாளைக்கு ஒரு பவுன்ல்ல ஒரு செயின்.”
என்றதும் வாய் பிளந்து கன்னத்தில் கை வைத்து வியந்தவள்.
“தங்க செயினா?”
என கேட்க,
“ம். நான் வெளியில போறேன். திரும்பி வருகிறது வரை உனக்கு டையிம். நான் வந்ததும் என் பொண்டாட்டி இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேனேணு எனட்ட கேட்கணும். அப்படி மட்டும் கேட்க வச்சிட்டா. கண்டிப்பா உனக்கு தங்க செயின் தான்.”
என்றதும் துள்ளலோடு திலகா முன் வந்தவள்.
“சொல்லிடுங்க அண்ணி. உங்க செல்ல அண்ணிக்காக சொல்லிடுங்க…”
என கெஞ்ச தன்னை வீட்டில் அதிக நேரம் இருத்த அவன் எடுத்து கொண்ட ஆயுதத்தை நினைத்து உள்ளுக்குள் சிரித்தாள். அதன் பின் அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு நொடியும் தான் நொண்டி என்பதையும் மறந்து சிரித்தாள். திலகா தன் பள்ளி வாழ்வு தொட்டு வீட்டில் நடந்த சுவாரஸியமான நிகழ்வுகளை பற்றி சொல்ல தொடங்கினாள். கூடவே நளனை பற்றியும் பல விசயங்கள் சொன்னாள். அதில் ஒன்று தான் இவர்களின் காதல் வாழ்வு. தான் நேசித்ததை சொன்னவன், தான் மறுத்ததை மட்டும் இவர்களுக்கு சொல்லவில்லை.
இன்னும் ஒரு வருடம் அவள் டையிம் கேட்டிருப்பது போல் மட்டும் தான் சொல்லி இருந்தான். ஒரு வருடத்தில் தன்னை சாய்த்து விடலாம் என்பது அவன் திட்டம் என புரிந்தது. ஆனால் மாறுவாளா? மாற முடியுமா? அது எப்படி மாற முடியும். அவள் மாறும் நிலையை தான் அந்த ஆண்டவர் கொடுக்கவில்லையே. அவனுக்கு ஒன்று தெரியாது. அவன் நேசித்ததை விட அவனை அவள் அதிகம் நேசிக்கிறாள் என்று. தான் நேசித்தவள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவன் நினைப்பது போல் அவன் வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்று தான் நினைப்பேன் என்பது அவனுக்கு எப்படி தெரியாமல் போனது.
அவன் வாழ்வு இந்த நொண்டியோடு முடிந்து விட கூடாது என்று தானே என் மென்மையான உணர்வுகளையே அழித்தேன். அதை மீட்டி விட பார்க்கிறான். நடக்குமா? இல்லை நடந்து விட கூடாது. இந்த குடும்பத்தில் இந்த சந்தோஷம் தொலைந்து விட கூடாது.
என்று தான் நளன் வெளியில் போய் விட்டு, வீட்டிற்குள் நுழையும் வரை நினைத்தாள். உள் நுழைந்தவன் கையில் சாரியை கண்டதும் நொறுங்கி விட்டாள். கூடவே குடும்பத்தின் முன் நெகிழ்வோடு நீட்டியதும் கலங்கி போய் உறைந்து நின்றவள் கையை பிடித்து, அதை வாங்க வைத்த அவன் தாயை பார்த்து நெகிழ்ந்து போனாள். அதன் பின் அந்த வீட்டில் அவள் கண்ட சந்தோஷம். என்றுமே அனுபவிக்காத ஒன்று. பார்வதி மருமகளை அருகில் அமர வைத்து அவளோடு சேர்ந்து உண்டது. உண்ணும் போது மகள் மகனுக்கு ஊட்டி விட்டது போல அவளுக்கும் ஊட்டி விட்டது.
சாப்பிட்ட அவளை மடியில் போட்டு தூங்க வைத்து மகனை பற்றி தன்னுடைய ஆசையை சொன்னது.
என ஒவ்வொரு நொடியும் உலகம் மறந்து தான் அந்த வீட்டில் கிடந்தாள். போகும் எண்ணமே அவளுக்கு வரவில்லை. கூட்டி போ என அவனிடம் சொல்லவும் இல்லை. தாயின் மடியில் தலை சாய்த்தே தூங்கியும் விட்டிருந்தாள். அவள் அப்படி அமைதியாக தூங்க துர்கா தமையனை பிடித்து கொண்டாள்.
“செயின் மட்டும் என்ன? உனக்கு தங்க வளையலே வாங்கி கொடுக்கிறேன்.”
என தங்கையையும் குளிர வைத்தான். எத்தனை மணி நேரம் தூங்கினாளோ தெரியவில்லை. ஆனால் அவள் செல் குரல் கேட்டு தான் எழும்பினாள். ஆனால் எழும்பும் போதும் அதே தாய் மடியில் கிடப்பதை கண்டதும் அவசரமாக எழுந்தவள்,
“சாரிம்மா. அசந்து தூங்கிட்டேன்.”
என்றாள் படபடப்பாக…
“அம்மா மடியில தூங்க எதுக்கு சாரி. நீ நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். என் பையனுக்கு அதுதான் வேணும். அந்த சந்தோஷத்தை என் மகனுக்கு கொடு தாயீ. நீ எங்க வீட்டுக்கே வந்திடு. நாங்க உன்னை நல்லா பாத்துக்கிறோம்.”
என்றதும் நெகிழ்ந்து போய் தாயையும் மகனையும் பார்த்தாள். பேச வாய் வரவில்லை. நிறைவில் நெஞ்சம் அடைத்தது. பதில் சொல்ல முடியாமல் எழுந்தாள். மணியை பார்த்தாள். இரவு எட்டு என்றது. இவ்வளவு நேரமாவா இங்கிருந்தேன். எண்ணும் போதே காலையில் நளன் தங்கையிடம் தங்க செயின் பற்றி பேசியது நினைவுக்கு வர இருவரையும் பார்த்தாள்.
துர்கா சத்தமாக.
“செயின் கண்பாம் அண்ணி. கூடவே தங்க வளையலும் கிடைக்க போகுது. தேங்க்ஸ் அண்ணி.”
என சொல்ல… அவனை நெகிழ்வோடு பார்த்தாள். அவன் மென்சிரிப்போடு நின்றிருந்தான். அந்த நிறைவு அவளுக்கு பேச முடியாத நிலையை கொடுக்க, மேஜையை பார்த்தவள் கண்களால் போனை எடுக்க சொல்ல, நளன் அதை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.
வாங்கி திரையை பார்த்தவள் தாய் என கண்டதும்,
“ அம்மா…”
என கேட்காத அவர்களுக்கு பதில் சொல்லி விட்டு மறுபடியும் தொடர்பு ஏற்படுத்தி பேசத் தொடங்கினாள்.
“சொல்லுங்கம்மா…”
“………….”
“நான் நல்லா இருக்கேன்.”
என்றவள் நளன் பக்கம் திரும்பி பார்த்தவாறே,
“ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கேன்.”
என சொல்லவும் பார்வதி மகனை பார்த்து சிரித்தாள். சிறிது நேரம் தாயிடம் பேசி விட்டு, செல்லை அணைக்க சென்றவள்,
“அந்த பிசாசு ஒரு முறை கூட அடிக்கல. அப்படினா இவனுக்கு தாரை வார்த்து கொடுத்துட்டு நிம்மதியா சந்தோஷமா இருக்கிறியா? வந்துட்டுடீ.”
என திட்டியவள், நளன் பக்கம் திரும்பி,
“கிளம்புவோமா நளன்.”
என கேட்க,
“ம்..ம்…”;
என்றான்.
“ஒரு நிமிஷம் இரும்மா.”
என்ற பார்வதி பூஜை அறைக்கு சென்று திருநீறு எடுத்து வந்து நெற்றியில் வைத்து ஆசீர்வதித்து,
“நீ நல்லா இருப்பாம்மா. எதை நினைச்சும் மனசை போட்டு குழப்பாத. உனக்கு கடவுள் கொடுத்த தண்டனை பெரிசு தான். ஆனா அந்த தண்டனையை கொடுத்திட்டு எதுக்கு உயிரோட வச்சிருக்காரு தெரியுமா? உனக்கு இன்னொரு அழகான வாழ்க்கை இருக்கு. காலை எடுத்தவர் உயிரை எடுக்காம அனுப்புனதே நீ அந்த அழகான வாழ்க்கையை வாழணும்ணு தான். நீ அந்த வாழ்க்கையை எங்களோடு வாழ்ந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். மனசை போட்டு குழப்பாம நல்ல முடிவா எடு. அந்த கடவுள் உனக்கு துணை இருப்பார்.”
என குனிந்து நெற்றியில் முத்தம் வைக்க உடைந்து போனாள் திலகா. இப்படி ஒரு குடும்பமா? இந்த குடும்பத்தில் வாழும் பாக்கியம் எனக்கா? யோசிக்க முடியவில்லை. அதிர்ந்து போய் இருந்த அவளை பார்வதியும் துர்காவும் கையசைத்து விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். காருக்குள் வந்த பின் அவள் ஒற்றை வார்த்தை பேசவில்லை. எதுவாவது சொல்லுவாள் என்று தான் எதிர்பார்த்தான். பிடித்து வைத்த புள்ளையார் போல அப்படியே இருந்தாள். இவன் புறம் திரும்பவே இல்லை. அவனும் ஆவலாக அடிக்கொரு முறை திரும்பி பார்த்தான். ம்கூம். அவளில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் மனதுக்குள்ளே கலவரம் மூண்டுள்ளது என்பதை மட்டும் அவனுக்கு தெளிவாக உணர்த்தியது. இதை இப்படியே விடுவது தான் சிறந்தது என அவனும் அதன் பின் பேசவில்லை. நேரே ஓவியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு தான் வந்தான். வாசலில் வண்டி சத்தம் கேட்டு ஓவியாவும் ஒடி வந்தாள்.
வீல் செயரில் இறங்கி அமரும் அவளை பார்த்தாள். கூடவே கேள்வியாக அவனையும் பார்த்தாள். அவள் அறிய துடிப்பதை உணர்ந்தவன்.
முகத்தை சுழித்து தெரியவில்லை என சொல்ல, ஒடி தோழியின் அருகில் வந்தாள். இப்போது திலகாவின் பார்வை அவள் மீது இறங்கியது.
“என்ன சொல்ல போகிறாளோ” என்ற தடுமாற்றம் அவளில் அதிகமாக இருந்தது. ஆனால் அவள் எதுவும் பேசவில்லை. அவள் கண்களையே கூர்ந்து பார்த்தாள்.

“வீட்டுக்கு வந்ததும் உன் கன்னத்துல பளார் பளார்னு இரண்டு வைக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா இப்போ இல்ல. எப்படியான ஒரு வாழ்வை இன்று எனக்கு தந்திருக்கா. வாழ்க்கை கடைசி நொடி வரை நினைச்சி பாக்குற அளவு பசுமையான நினைவை தந்துட்டா.”
மனது தான் பேசியது. இப்போதும் வாய் பேசவில்லை. அதற்கு பதிலாக கூர் தீட்டி நின்ற அவள் பார்வை எதுவோ சொன்னது. ஆனால் அதை ஒவியாவால் படிக்க முடியவில்லை. நளன் கிளம்பி சென்றதும் வீல் செயரை தள்ளி கொண்டு வீட்டிற்குள் வந்தாள். உள் நுழைத்தது தான் தாமதம் அவள் இடையை இறுக்கமாக கட்டி கொண்டு அவள் மார்பில் தலை சாய்த்து கொண்டாள் திலகா.
அது என்ன மாதிரியான உணர்வு என அவளுக்கும் தெரியவில்லை. ஆனால் அதை எப்படி வெளிகாட்டுவது என்றும் புரியவில்லை. தன் உணர்வை அவளை அணைத்து கொண்டு கண்ணீரால் கரைந்தாள்.
மறுநாள் முகுந்தன் அறையில் தான் மூன்று பேருக்குமான மாநாடு நடந்தது.
“எதுவுமே சொல்லலியா?”
பத்தாவது முறையாக நம்ப முடியாமல் முகுந்தன் தான் கேட்டான். அவளும் உதட்டை பிதுக்கி இல்லை என சொல்ல,
“ அப்போ கஷ்டம் தான் மச்சி உன் காதலை காப்பாற்ற,”
முகுந்தன் சோர்ந்து போய் சொல்ல நளன் மென்மையாக சிரித்தான்.
“என்னடா நீ. நாங்களே பிளான் ஊத்திகிச்சினு சோகமா இருக்கோம். நீ என்னடா சிரிக்கிறா?”
“அப்புறம் சிரிக்காம… என்னை பொறுத்த வரை அவள் எதுவும் பேசாம இருக்கிறதே சக்சஸ் தான்.”
என்றதும் இருவரும் புரியாமல் அவனை பார்க்க,
“நீங்க சொல்லுங்க ஓவியா. சாதாரணமா உங்க பிரண்ட்டுட்ட உண்மை சொல்லாம இப்படி பொய்யா அனுப்பி வச்சா அவங்க சும்மா இருப்பாங்களா?”
“ஐயோ அம்மா. வீட்டுல வந்து பின்னி எடுத்திடுவா?”
“அப்போ நேற்று ஏன் அப்படி எதுவும் செய்யல.”
“ஆமால. நேற்று அனுப்புறது வரை அந்த பயத்தோட தான் இருந்தேன். வந்ததும் செமத்தியா கிடைக்கும்னு வேற காவல் இருந்தேன். ஆனா நான் எதிர்பார்த்தது போல அப்படி எதுவும் நடக்கல.”
“அப்படினா வெற்றி தானே.”
“கண்டிப்பா. அவளுக்குள்ள ஏதோ மாறுதல் உருவாகி இருக்கு. அதை தெரிஞ்சிக்க நாம வெயிட் பண்ணி தான் ஆகணும்.”
“பண்ணிடுவோம்.”
“அப்படினா நீ எங்களுக்கு பார்ட்டி வைடா.”
முகுந்த் கேட்க,
“வச்சிட்டா போச்சு. நாளைக்கு 5 மணிக்கு ரெடியா இருங்க. அப்போ நான் கிளம்புறேன். அம்மா டவுண் வரை போகணும்னு சொன்னாங்க. அவங்களை கூட்டிட்டு கிளம்புறேன்.”
“சரிடா.”
என்றவன்,
“தம்பி. உன் காதல்ல என் கம்பெனியை மறந்திடாத .”
என உரக்க சொல்ல திரும்பி பார்த்து சிரித்தவன்.
“மறக்க மாட்டேண்டா.”
என கதவு கொண்டியை திருக்க, எதிர்திசையில் இருந்து உள்ளே பிரவேஷித்தார் சக்கரவர்த்தி.
அந்த இடத்தில் அந்த நேரம் அவரை கண்டதும் மூன்று பேரும் திகைத்து தான் போயினர். சக்கரவர்த்தி கண்ணிலும் அந்த திகைப்பு தெரிந்தது. அவரின் திகைப்புக்கான காரணம். மகன் அறையில் நின்ற ஓவியாவை பார்த்ததால் தான். இவள் எப்படி இங்கு? இந்த கேள்வி தான் அவர் உள்ளத்தில் ஒடிக் கொண்டிருந்தது. ஆனால் வெளிப்படுத்தாமல் உள்ளே நுழைய, முகுந்தன் எழுந்து தந்தை அமர வழி விட்டான். மூன்று பேரையும் மாறி மாறி பார்த்தவாறு தான் வந்து ரோலிங் செயரில் அமர்ந்தார். அவர் அமர, நளன் விடைபெற்று வெளியேற, கூடவே ஓவியாவும் வெளியேறினாள்.
குழப்பம் மனதில் இருந்தாலும் அதை மகனிடம் கேட்காமல் கம்பெனி விசயத்தை மட்டும் கேட்டு தெரிந்து கொண்டவர் அவனை வேறு வேலையாக வெளியே அனுப்பி விட்டு ராஜேந்திரனை அறைக்குள் அழைந்தார். பெரிய முதலாளி அழைக்கிறார் என்றதும் ராஜேந்திரனுக்கு உறுத்தல் தான். சின்ன முதலாளி நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டாரோ என்ற பயம்.
சக்கரவர்த்தியை பொறுத்த வரை இவன் விசுவாசம் உள்ள வேலைக்காரன். இந்த நம்பிக்கையை சம்பாதித்து வைத்து கொண்டு தான் அத்தனை தப்பையும் செய்தான். ஆனால் இது பெரியவருக்கு தெரியாதல்லவா? அதனால் மகனை பற்றி தெரிந்து கொள்ள அவனையே அழைத்தான்.
“இங்கு என்ன நடக்குது.”
என தான் கேட்டார். ஒரு நொடியில் அவருள் புகைந்து கொண்டிருக்கிற புகைச்சல் தெரிந்து விட, மடை திறந்த வெள்ளம் போல அவனுள் இதுவரை புசுபுசு என இருந்த கோபம் அனைத்தும் கொட்டி தீர்த்து விட்டான் ராஜேந்திரன். முகுந்தன் மேல் கோபம் இல்லாவிட்டாலும் ஓவியா மேல் அதிகம் இருந்தது. அதனால் பெரியவர் கோபம் கொள்ளும் அளவு இட்டு கட்டி கதை படித்தான். இப்படியே பெரியவர் அவளை வெளியேற்றி விட வேண்டும் என்றே தான் சொன்னான். முகுந்த் அவளுக்கு அதிகமான இடம் கொடுப்பதாக சொன்னான். அந்த இடத்தை அவள் தவறாக பயன்படுத்துவதாக சொன்னான். சின்னவர் கொடுக்கும் இடத்தால் பணியாளர்களை மதிக்காமல் நடக்குறாள் என சொன்னான். சதா சின்னவர் அறையில் தான் இருப்பாள் என்றும் சொன்னான்.
வரும் போது இவன் சொல்வதை நிஜமாக்கும் பொருட்டு அவளும் மகன் அறையில் தானே இருந்தாள். அதுவே அவரை சினம் கொள்ள வைத்தது. அந்த சினம் அடுத்து அவரை அவர் நண்பன் அசோகன் வீட்டிற்கு தான் அழைத்து சென்றது.
“அப்படி இருக்காதுடா. வேலை கொடுத்துட்டா. அந்த பொண்ணை விரும்புறானோணு சந்தேகப்பட முடியுமா? ஒருவேளை நீ சொல்லுறது போல வேலை போயிடுச்சேனு கொடுத்திருப்பான்.”
“இல்லடா. எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. என் பையனோட நடவடிக்கையிலும் பெரிய மாற்றம் தெரியுது. சதா வேலை வேலைனு ஒடுனவன் இப்ப எல்லாம் தொழில் பற்றி தெரிஞ்சிக்கவே விரும்பல. எப்போ அது பற்றி பேச போனாலும்,
பிறகு பேசுவோமா டேட். அப்படினா சொல்லிட்டு கிளம்பிடுறான். சதா இந்த மாவு மில்லுலயே கிடக்கிறான். ஸ்டீல் பேக்டறி பற்றிய எண்ணமே அவன் உள்ளத்துல இருக்கிறது போல இல்ல. வெளிநாட்டுல இருந்து வந்து இந்த மாற்றத்தை கண்ட போது ரொம்ப குழப்ப தான் செய்தேன். ஆனா இப்போ தெளிவா தெரியுது. இவன் அந்த பொண்ணோட மாய வலையில விழுந்துட்டானு . இதை இப்படியே விட கூடாதுடா. அப்புறம் முதலுக்கே மோசமாகிடும். நீ கிளம்பு. நாம கேரளா வரை போயிட்டு வந்திடுவோம்.”
“கேரளாவுக்கா? அங்க எதுக்கு?”
“அங்க தான் அவளோட வீடு இருக்கு. அங்க பிடிச்சி இருக்குனா இங்க எல்லாம் சரியாகும்.”
“தப்பா போயிட கூடாதுடா.”
“போகாது. அதுக்கு எனட்ட ஒரு ஐடியா இருக்கு. நீ புறப்படு. நான் போகும் போது சொல்றேன்.”
என்றதும் அசோகன் புறப்பட தொடங்கினான்.
அதே நேரம்,
காலையிலே பூகம்பம் வருகிறது என தெரியாமல் எழிலரசி குளித்து முடித்து பூஜை அறையில் பூஜை செய்து விட்டு கோலம் போட என வாசலுக்கு வந்தாள். மனம் முழுதும் மகிழ்வோடு கோலமும் போட்டாள். கோலம் போட்டு முடிந்து எழுந்த நேரம் அந்த விலையுயர்ந்த கார் வந்து அவர்கள் வீட்டின் முன் நின்றது.
Best Romantic Novel



