வணக்கம் வாசகர்களே!
வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா? போன பின் நடப்பது என்ன? அவள் தாயின் மாயவலையில் சிக்குவாளா? அல்லது தன் காதலை தேடி திரும்ப வருவாளா?
வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா?
காலை வேளையில் தன் வீட்டின் முன் வந்து நின்ற உயரக காரை பார்த்து குழப்பமாக எழிலரசி அருகில் வர, சத்தம் கேட்டு அரிசந்திரனும், அவன் இரண்டு மகள்களும் கூட வெளியே வந்தனர்.
வாசலில் வந்தவர்கள் கண்களில் காரில் இருந்து இறங்கிய சக்கரவர்த்தி விழ,
“யார் இவர்? பெரிய கோடீஸ்வரர் போல இருக்கிறார். நம்ம வீட்டுக்கு முன்னால வந்து இறங்குறாங்களே.”
என்று தான் எல்லாரும் நினைத்தனர். ஆனால் அவர் தங்கள் வீட்டிற்கு வருகிறார் என்பதை, வண்டியில் இருந்து இறங்கி வாசல் பக்கம் வந்த பின் தான் நம்ப ஆரம்பித்தனர். ஆனால் ‘உள்ளே வாருங்கள்’ என சொல்ல கூட முடியாமல் உறைந்து போனவர்களை கடந்து உள்ளே போக முடியாமல்,
“நான் யாருணு தானே பாக்குறீங்க. உங்க பொண்ணு ஒவியா வேலை பாக்குற கம்பெனியோட எம்.டி.”
என்றது தான் தாமதம். அத்தனை முகமும் சட்டென பிரகாசமாய் எரிந்தன. கூடவே வாய் நிறைய வரவேற்கவும் செய்தனர்.
உள்ளே வந்து பத்து நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தார். சுற்றி இருந்தவர்கள் பேசி விட மாட்டாரா? என காவல் இருக்கும் அளவு மெளனத்தை தான் அணிந்து கொண்டார். கடைசியில் அவர் போட்ட குண்டில் குடும்பமே உரு தெரியாமல் போனது. ஒரு வழியாக மீண்டு முதலில் கேட்டது அரிசந்திரன் தான்.
“நீங்க… நீங்க… என்னங்க சொல்லுறீங்க.”
“நீங்க இவ்வளவு அதிர்ச்சியாகிற அளவு நான் அப்படி எந்த ஷாக்கிங் நியூஸ்சும் சொல்லலியே. என் கம்பெனியில உங்க பொண்ணு வேலை பார்க்க கூடாதுணு தான் சொன்னேன். அதுக்காக அப்படியே அம்போணு விட்டு விடுவேணு நினைக்க வேணாம். அவா வாங்கிற அதே சம்பளத்துல , கேரளாவுல என் பிரண்ட் மனோகரன் ஆபீஸ்ல உங்க பொண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்திடுறேன். நீங்க உடனே உங்க பொண்ணை ஏதாவது காரணம் சொல்லி திரும்ப அழைச்சிடுங்க. என் பேச்சை மதிக்காம மறுபடியும் அவளை அங்க விட்டா அப்புறம் எந்த வேலையும் இல்லாம தான் மகா வீட்டுல வந்து இருப்பா பாத்துக்கோங்க.”
குரல் உயர்த்தாமல், அதிகம் பேசாமல், மெல்ல கத்தியை நெஞ்சில் ஏற்றி விட்டு சென்று விட்டார். ஆனால் அன்று முழுதும் வலியில் துடித்தது அந்த குடும்பம் தான். வேலையையும் விட முடியாமல், வந்து சொன்னவரின் பேச்சையும் அவமதிக்க முடியாமல் திண்டாடி போனார்கள். இதை எப்படி மகளிடம் சொல்வது என்ற பயம் வேறு. இப்படியே யோசித்து யோசித்து நாள் கடத்தியவர்கள் அவர் வந்து சென்ற நான்காம் நாள் மகளுக்கு போன் செய்தார்கள்.
போனை திலகா தான் எடுத்தாள். அவளிடமே மனதில் இருந்ததை சொல்லி விட்டார்கள்.
“ என்னம்மா சொல்லுறீங்க?.”
“நல்ல வரன் ஒன்று நம்ம ஓவியாவுக்கு வந்திருக்கும்மா. அவா ஒரு முறை ஊருக்கு வந்துட்டு போனாணா நல்லா இருக்கும். குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். நம்ம வசதிக்கும் வாய்ப்புக்கும் ஒத்து வர கூடிய குடும்பம். மாப்பிள்ளை கூட ஒரு கம்பெனியில தான் வேலை பாக்குறாரு. கல்யாணத்துக்கு பிறகு அவர் கம்பெனியிலே வேலைக்கும் சேர்ந்திடலாம்ணு சொல்லுறாரு. அவ்வளவு பெரிய கம்பெனியில வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்குணு சொன்னா போதும் எம்.டி உடனே வேலை கொடுத்திடுவாருனு சொல்றார். இப்படி ஒரு வரன் யாருக்கு அமையும். நாங்க இதை சொன்னா உன் பிரண்ட் சம்மதிக்க மாட்டா. நீ தான் ஏதாவது ஒரு பொய்யை சொல்லி அவளை அனுப்பி வைக்கணும்.”
என்றதும் ஒவியா குடும்பம் சொல்வது உண்மை என நம்பி அவளும் ஓவியாவிடம் பேசினாள்.
“அப்பாவுக்கு சுகமில்லையாம் ஓவியா. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம். அப்பா போன் பண்ணுனாங்க.”
என்றவள் சட்டென நாக்கை கடித்து, பின் தெளிவாகி
“சாரி அம்மா போன் பண்ணுனாங்க.”
என்றதும் ஒடி வந்து அவள் கைகளை தாங்கியவள்.
“என்னடி சொல்லுறா? அப்பாவுக்கு என்னடியாச்சு. பழைய படியா? எதுவும் பிரச்சினை இல்லை தானே.”
படபடப்போடு கேட்டவளிடம்,
“நீ பதறுற அளவு எதுவுமில்ல. ஆனாலும் நீ ஊருக்கு போய் ஒன்றிரண்டு நாள் கூட இருந்து அவங்களை பாத்துட்டு வருகிறது நல்லது. நீ கிளம்பு.”
“இப்பவேவா? முகுந்தன் சார்ட்ட பெர்மிஷன் வாங்க வேணாமா?”
“கேளு. உடனே கேளு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு.”
“எப்படிடீ இப்ப தான் போட்ட விதை முளைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த நேரம் பொறுப்பில்லாம எப்படி கிளம்பி போறது. சார் என்ன நினைப்பாரு.”
“நீ என்ன நிறைய நாளா நிக்க போறா? ஒன்றிரண்டு நாள் தானே சமாளிச்சிக்கலாம்.”
“வேலையை எல்லார் கூடவும் சேர்ந்து சமாளிச்சுக்குவா சரி. உனக்கான தேவையை நான் இல்லாம எப்படி பூர்த்தி செய்வா?”
“பாத்துகலாம்டி.”
“நான் நளனுட்ட சொல்லட்டுமா?”
“அவன்ட்டயா வேணாம்மா. அதுக்கு நான் தனியா இருந்தே கஷ்டப்படுவேன்.”
“ஏண்டி அப்படி சொல்லுறா?”
“பேசி பேசியே சாகடிச்சிடுவான்.”
“பாவம்டி அவர். நீ அவரை பரிசீலனை பண்ணலாம்.”
“அவரை…”
“ஆமா… அவரை விட வேற யார் உன்னை நல்லா பாத்துப்பா.”
“தப்பு கணக்கு போடாத…”
“தப்பு கணக்கா? அவர் உனக்கு மேச்சான ஆள் தாண்டி. அவர் பொறுப்புல விட்டுட்டு போறதுணா நான் எந்த பயமும் இல்லாம போவேன்.”
“அதுக்காக என்னை அதுட்ட மாட்டி விட்டுட்டு போயிடாதடி. அப்புறம் திரும்பி வரும் போது குடம் குடமா அழப் போறேன்.”
“அழப்போறியா? அணைக்கப் போறியாணு அப்புறம் பாத்துக்கலாம்.”
என்றதும் அன்று நளன் வீட்டிற்கு போய் விட்டு வந்து அணைத்தது நினைவுகள் வர சட்டென அவள் முகம் சிவந்தது. அதை பார்த்தவள்,
“நல்லா யோசி. நளன் உனக்கு பெஸ்ட் சாயிஸ் தான்.” சொன்னவள் ரெடியாகி அங்கிருந்து கிளம்பி முகுந்தன் அறைக்கு வர, நளனும் அங்கே தான் இருந்தான். விபரம் சொன்னவள் கிளம்பட்டுமா? என அனுமதி கேட்க,
“தனியாவா போறீங்க. துணைக்கு நானும் வரட்டுமா? அப்பாவுக்கு வேற உடம்புக்கு முடியலணு சொல்லுறீங்க. கூட இருந்தா உதவியா இருக்கும்ல.”
முகுந்தன் தான் கேட்டான். அந்த நொடி, கூட இருந்த இருவர் கண்களும் ஒரே மாதிரி அவன் மேல் தான் படிந்தது.
“இல்லடா. அப்பாவுக்கு முடியலல… அதான்.”
அவன் தன் மனதை மறைத்து அப்படியே இழுக்க, அவன் விழிக்குள் தன் விழியை ஒடவிட்டவாறு ஓவியா அந்த விழி ஏதாவது பேசுகின்றனவா என பார்த்தவாறு, அப்படி எதுவும் பேசாமல் அந்த விழி தாழ்ந்த போது,
“இல்ல சார். நானும் இல்லாம நீங்களும் இல்லாம சரியாகாது. இப்ப தான் முதல் ஸ்டெப்பையே எடுத்து வச்சிருக்கோம். இந்த நேரம் சரியா கொண்டு போகல. அப்புறம் கஷ்டமாகிடும். அப்பாவுக்கு இது அடிக்கடி வருகிறது தான். என்ன இதுவரை நான் அவங்க கூட இருப்பேன். எல்லாத்தையும் பாத்துப்பேன். இப்போ தனியா இருக்காங்களா? அதான் பயந்து போய் போன் பண்ணியிருக்காங்க. நானே பாத்துக்குறேன். நீங்க இங்க இருங்க.”
“அப்படினா நான் வரட்டுமா?”
என்றான் நளன்.
“என்ன சார். நான் சின்ன குழந்தையா? துணைக்கு வர, நான் போயிடுவேன் சார். போய் பார்த்து வேண்டிய உதவியை செஞ்சிட்டு ரெண்டே நாளுல திரும்பி வந்திடுவேன்.”
இப்படி சொல்லி கொண்டு தான் ஊருக்கு வந்தாள். ஆனால் ஊருக்கு வந்து முழுசாய் நான்கு நாள் முடிந்தும் அவள் கிளம்பவில்லை. அதற்கு காரணம் தந்தையின் உடல்நிலை இல்லை. இவள் வரும் போதே அவள் நினைத்து வந்தது போல் தந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்டாள். கட்டில்லயே கிடந்தாலும் பெரிதாக பாதித்தது போல் தெரியவில்லை.
என்றாலும் தாய் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லியே அவளை போக விடாமல் தடுத்தாள். நான்கு நாள் முடிந்து ஐந்தாம் நாள் தொடங்கியதுமே ஓவியாவின் கோபம் எல்லையை தாண்டியது.
“என்னம்மா நீ. விளையாடவா செய்யுறீங்க?. அங்க முகுந்தன் சார். என்னை நம்பி அவ்வளவு பெரிய தொகையை முதலீடா போட்டிருக்காரு. வளர்ந்து வருகிற நேரம் கூப்பிட்டு கழுத்தறுக்குறீங்க. இப்ப உங்களுக்கு என்ன தான் பிரச்சினை.”
என்றவளின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குனிந்தவாறே,
“எங்களுக்கு என்ன பிரச்சினை. அம்மா அப்பாவோட கூட ஒரு வாரம் இருந்துட்டு போணு சொல்லுறது தப்பா?”
என்றாள் தடுமாற்றமாய்…
“என்ன இன்னும் ஒரு வாரமா? வாய்ப்பே இல்ல. என்னம்மா பழையதை மறந்துட்டியா என்ன? இந்த வேலை கிடைக்கிறதுக்கு முன்னால அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடுனீங்க. இப்ப பணம் வந்ததும் காலை கீழ ஊன்றாம ஆடுறீங்க. அப்படி தானே. ரொம்ப பண்ணாதம்மா. நான் இன்றே கிளம்ப ஏற்பாடு பண்ணுங்க.”
என்று கோபத்தோடு சொன்ன மகளை பார்த்து சாந்தமாக…
“கூட ஒரு வாரம் கண்ணு.”
என கெஞ்ச,
“இப்போ நீங்க டிக்கெட் புக் பண்ணுறீங்களா? இல்ல நான் பண்ணிட்டு கிளம்பட்டுமா?”
என்றாள் சற்றே குரல் உயர்த்தி,
மகளின் பிடிவாதம் ஆத்திரத்தை தர,
“என்ன சம்பாதிக்கிறேன் என்கிற திமிரா?”
என்றாள் தாய் சற்று சூடாக, அவளை அனல் கக்கும் பார்வை பார்த்தவள்,
“அப்படியே வச்சிக்கோங்க. நான் போகணும்.”
என்றாள் பிடிவாதமாக,
“வேணாம். நீ போக வேணாம்.”
என்ற தாயை முறைத்து பார்த்தவள்,
“போக வேணாம்ணா. இன்று போக வேணாமா? இனிமேல் போக வேணாமா?”
என்றாள் சற்று கோபத்தோடு, மகளின் கோபத்தில் அடிபட்டவள்,
“இனிமேல் தான் போக வேணாம்.”
என்றாள் தாழ்ந்த குரலில்…
“என்னம்மா விளையாடுறியா? போகாம எப்படி சாப்பிடுறதாம்.”
என்ற மகளை இளக்காரமாக பார்த்தவள்,
“அதை நாங்க பாத்துக்கிறோம். நீ மெட்ராஸ் போக வேணாம். இங்க ஏதாவது வேலை பாரு போதும்.”
அவ்வளவு தீர்க்கமாக சொன்ன தாயை கூர்ந்து பார்த்த ஒவியா?
“இங்க வேலை பாக்குறதா? என்னம்மா தெரிஞ்சி தான் பேசுறியா?”
என புரியாமல் கேட்க,
“எல்லாம் தெரிஞ்சி தான் பேசுறேன். பொட்ட புள்ளையை கண்காணா தேசத்துக்கு அனுப்பிட்டு நிம்மதியா இருக்க முடியல. அதான் இந்த முடிவு.”
என்றவளை புருவ முடிச்சோடு பார்த்தவள்,
“ஏழு மாசமா இருந்தியேம்மா…”
என கேட்க.
“இருந்தேன் தான். ஆனா என் ஈரகுலை வெடிச்சது எனக்கு தான் தெரியும். போக வேணாம்ணு சொல்றேன்ல உள்ளால போ. என்ன செய்யணுமோ அதை நாங்க செய்றோம்.”
என அறை பக்கம் கை காட்ட,
“ஆமா இத்தனை நாள் அந்த நாங்க எங்க போனீங்க. மெட்ராஸ் போகலணு சொன்னவளை அடிச்சி விரட்டாத குறையா அனுப்பி வச்சது நீங்க தானே. இப்ப என்ன?”
“தெரியாம அனுப்பி வச்சிட்டோம் தாயீ. இப்ப முடியல. என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கலாம்னு ஆசையா இருக்கு. அதனால இனி நீ தூர இடங்களுக்கு எல்லாம் போக வேணாம். பக்கத்துலயே வேலை ரெடியாகி இருக்கு. மாசம் நீ வாங்குற சம்பளம் தான். அந்த பணம் பக்கத்துலயே கிடைக்கும் போது அவ்வளவு தூரமா ஏன் போகணும்.”
என்றதும் வெறி ஆனவள்,
“கல்யாணமா?”
என அனல் கக்கும் பார்வையை தாயின் மேல் வீசியவள் தாயின் அலைந்தாடும் விழியை பார்த்தவாறு,
“ஆமா பக்கத்துல இவ்வளவு பெரிய தொகையை தர கூடிய இளிச்சவாயன் யாரு?”
என்றாள் சீற்றத்தோடு,
“யாரு. மாப்பிள்ளை தான்.”
என்றாள் எழில் அரசி கூலாக…
“மாப்பிள்ளையா?”
என்றாள் அதிர்ந்து,
“மாப்பிள்ளைணா? மாப்பிள்ளை இல்லை. அவரோட ஆபீஸ்ல .”
“பொண்ணுக்கு வேலை எடுத்து கொடுத்து கட்டிக்கிற மாப்பிள்ளையா? அவரை எங்க இருந்து புடிச்சா.”
“நான் எங்கடி புடிச்சேன். அவங்களா தான் விரும்பி வந்து உங்க பொண்ணை கொடுங்கணு கேட்டாங்க.”
“கேட்டதும் நீ ஓக்கே சொல்லிட்டா.”
“அப்புறம் இப்படி ஒரு வரன் எல்லாருக்கும் அமையுமா? நாம செய்த புண்ணியம் தான் வீடு தேடி வந்திருக்கு.”
“வந்திருக்கு சரி. நான் போயிட்டா ஊவாவுக்கு என்ன பண்ணுவீங்க.”
“அதுக்கு மாப்பிள்ளை பாதி சம்பளத்தை தரேன்னு சொல்லி இருக்காரே.”
“அட… இது வேறயா? அவர் என்ன என் குடும்பத்துக்கு பிச்சை போடுறாரா?”
“தப்பா பேசாதடி அந்த புள்ளையை . இந்த காலத்துல எந்த பசங்களாவது இப்படி இருப்பாங்களா? மாமியார் குடும்பமும் வாடிட கூடாதுணு பாதி சம்பளத்தையே தர முடிவு பண்ணியிருக்காரு. அவரை போல ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்.”
“அதான் என்னை கொடுத்து வச்சிக்கலாம்ணு முடிவு பண்ணிட்டியா? இந்தா பாரும்மா. நீ என்ன முடிவுனாலும் எடுத்துக்க. ஆனா இப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு நிறைய ஆசை லட்சியம் இருக்கு. அது எல்லாம் நிறைவேறுகிறதுக்கு முன்னால குடும்ப வாழ்க்கைக்குள்ள போக முடியாது. பேசி பேசி மாத்திடலாம்னு தப்பு கணக்கு போடாத. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.”
என்றவளை கோபமாக முறைத்தவள்,
“அப்படினா நீ இதையும் கேட்டுக்க. இதுக்க மேல நீ மெட்ராஸ்க்கு போக கூடாது. இங்க எங்களோட தான் இருக்கணும்.”
என்றாள் அதிகாரமாக,
“அது எப்படி முடியும். அவர் என்னை நம்பி பல கோடி ரூபாய் இன்வெஸ்மென்ட் பண்ணியிருக்காரு. அப்படி எல்லாம் அம்போணு விட்டுட்டு வர முடியாது.”
“ கம்பெனியை விட்டுட்டு வர முடியாதுணு சொல்லுறியா? கம்பெனியை நடத்துறவரை விட்டுட்டு வர முடியாதுணு சொல்லுறியா?”
என்றதும் அதிர்ந்து போய்
“அம்மா…”
என கத்தி விட,
“கத்தாதடி. போக வேணாம்ணு சொன்னா விட வேண்டியது தானே. போவேணு அடம்பிடிக்கிறா?”
“அதுக்காக இப்படியா பேசுவா?”
“இப்படி இல்ல. இதுக்க மேலயும் பேசுவேன். பேசாம நாங்க சொல்லுறதை கேட்டு அந்த பையனை கட்டிக்க ரெடியாகு. கூடவே அந்த வேலைக்கு போ. போதும்.”
சொல்லி விட்டு எழிலரசி கிச்சனுக்குள் போக, ஒவியா பாவமாக தந்தையை பார்த்தாள். அவர் எதுவும் பேச என்னிடம் இல்லை என்பது போல பேசாமல் நகர்ந்து விட, பின்னாலேயே தங்கைகளும் நழுவினர். ஓவியாவுக்கு என்ன செய்ய என புரியவில்லை. மெட்ராஸில் இருந்து கிளம்பி வரும் போது இப்படி ஒரு வலையில் மாட்ட வைப்பார்கள் என தெரிந்தால் அவள் வந்திருக்கவே மாட்டாள்.
அவளால் எப்படி முடியும். முகுந்தன் இருந்த இடத்தை இன்னொருவனுக்கு கொடுக்க, அவன் தனக்கு இந்த ஜென்மத்தில் கிடைக்க போறது இல்லை என்று தெரியும் தான். அதற்காக இவளால் அவன் இடத்தை நிச்சயமாக வேறு ஒருவனுக்கு கொடுக்க முடியாது. இதை எப்படி சொல்லி புரிய வைப்பாள்.
சோர்ந்து தளர்ந்து போய் கட்டிலில் விழுந்த அதே நேரம், முகுந்தன் அறையில் நளன் மற்றும் திலகாவோடு பேசிக் கொண்டிருந்தான் முகுந்தன். பேசி கொண்டிருந்தான் என்பதை விட ஆத்திரத்தில் சாடிக் கொண்டிருந்தான் என்பதே சரியாக இருக்கும். ஒவியா போய் மூன்றே நாளில் திரும்பி விடுவேன் என்று சொல்லி சென்றவள் வாரம் ஒன்று ஆகியும் திரும்பி வராத கோபத்தில் திலகாவிடம் சாடி கொண்டிருந்தான் முகுந்தன்.

கம்பெனியில் இப்போது ஓவியாவின் தேவை அதிகம் என தெரிந்ததால் அவன் கோபத்திற்கு மறுமொழி கொடுக்காமல் அமைதியாக இருந்தாள் திலகா. அவளுக்கு தெரியும். ஓவியா இனி மேல் இங்கு வர போவது இல்லை என்று. எழிலரசி எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விட்டிருந்தாள். ஆனாலும் அந்த உண்மையை இவரிடம் சொல்ல திலகாவுக்கு பயமாக இருந்தது. மூன்று நாள் பிந்தியதற்கே இவர் இந்த குதி குதிக்கிறார். இந்த நேரம் வரவே மாட்டாள் என சொன்னால்… அவளை விட்டு விட்டு என்னை வாங்கு வாங்கு என வாங்கி விடுவார். அதனால் பேசாமல் இருப்பதே சிறப்பு.
என அமைதியாக நின்றவளை கோபத்தோடு முறைத்தவன்.
“இப்ப என்ன தாங்க உங்க பிரண்ட் சொல்லுறாங்க. இன்னும் எத்தனை நாள் லீவு எடுக்கிறதா உத்தேசம். கிளம்பி போகிற வரை கம்பெனியில அக்கறை உள்ளவங்க போல அப்படி பேசுனாங்க. இப்ப என்ன எல்லா அக்கறையையும் திருடிட்டா போயிட்டாங்க.”
முகுந்தன் வெடித்து விட, நளன் பாவமாக திலகாவை பார்த்தான். அவள் அழுகைக்கு மாற தயாராய் இருப்பதை உணர்ந்து,
“டேய்…”
என கெஞ்சுதலோடு அழைக்க,
“அப்புறம் என்னடா? வேலையில ஒரு சின்சியர் வேணாமா? லீவு எடுத்தா இப்படி ஒரேயடியாவா போவாங்க. இதுக்கு மொத்தமா போறேனு சொல்லிட்டு கிளம்பி இருக்க வேண்டியது தானே.”
ஆத்திரத்தில் தான் அவன் அப்படி சொன்னான். ஆனால் அது தான் உண்மை என திலகா திக்கி திணறி சொன்ன போது ஆடி போய் விட்டான்.
“அவா உங்களுட்ட சொல்லலியே தவிர மொத்தமா போயிட்டானு தான் எனக்கு தெரியுது சார்.
என்றதும் புரியாமல் விழி முடிச்சோடு அவளை பார்க்க, அவன் விழியை பார்க்காமல் சற்றே தலையை தாழ்த்தியவாறு,
அவா இதுக்க மேல இங்க திரும்பி வர மாட்டாணு நினைக்கிறேன் சார். நீங்க அவள் இடத்துக்கு வேற ஆளை பார்க்கிறது தான் சரினு தோணுது.
என்றதும் அவள் மேல் அனல் கக்கும் பார்வையை வீசியவன்.
என்னங்க சொல்லுறீங்க.
என வெடிக்க, அவன் கேட்ட தோனியிலும் உடல் மொழியிலும் பயந்து போன திலகா,
“ம்… அப்பாவுக்கு முடியாம தான் அவளை ஊருக்கு அழைச்சாங்க. ஆனா போன இடத்துல அவளை ஒரு குடும்பம் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. வந்தவங்களுக்கு பொண்ணை புடிச்சிப் போச்சாம். அதான் அவளோட பேரன்ஸ் மேரேஜை முடிச்சிடலாம்ணு முடிவு பண்ணியிருக்காங்க.”
“மேரேஜா?”
நிஜமாகவே அதிர்ந்து போய் செயரில் இருந்தே எழுந்து விட்டான். அவனின் அதிர்வை பார்த்த நளன் குழப்பத்தோடே அவனை ஏற இறங்க பார்த்தவாறு அவன் இந்த அளவு அதிர்ச்சியாகும் காரணம் புரியாமல் குழப்பத்தோடே திலகா பக்கம் திரும்பி,
“அப்படினா இந்த விசயம் உனக்கு முன்பே தெரியுமா திலகா?”
என்றான். ஆனால் அவள் வார்த்தையில் நொந்து போனவன் என்னவோ முகுந்தன் தான்.
“தெரியும். எனக்கும் அவங்க அம்மா சொன்னது நியாயமா தெரிஞ்சிது. அதான் நானும் உண்மையை சொல்லல.”
என்றதும் சட்டென சூடான முகுந்தன்,
“என்னங்க நியாயமா தெரிஞ்சி, அவங்களுட்ட உண்மையை சொல்லாம மறைச்சி அனுப்புனதா?”
வெடித்து கொண்டு தான் கேட்டான் முகுந்தன். ஆனால் அவனின் கோபத்தை பார்த்து இருவருமே அரண்டு தான் போனார்கள். ஆனாலும் வாய் மூடி திலகாவால் இருக்க முடியவில்லை.
“எதுக்கு சார் இப்போ இவ்வளவு கோபப்படுறீங்க. அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைச்சிருக்கு. அதை அமைச்சிக்க அனுப்பி வைக்கிறது தப்பா?”
என்றாள் வெடுக்கென்று,
“தப்பு தாங்க. தப்பே தான். அவங்க மனசுல என்ன இருக்குணு தெரியாம அனுப்பி வச்சது தப்பு தான்.”
“அவளோட மனசுல என்ன இருக்குணு எனக்கு தெரியாதா?”
“தெரியாதுங்க. தெரிஞ்சிருந்தா அனுப்பி வச்சிருக்க மாட்டீங்க. கடைசியில நீங்க போய் அவளுக்கு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சிட்டீங்களே.”
சாடி கொண்டு எழுந்தவன் அதன் பின் அவர்கள் முன் நிற்கவில்லை. நளனுக்கும் புரியவில்லை. திலகாவுக்கும் புரியவில்லை.ஏன் இவன் இவ்வளவு கோபப்படுகிறான் என்று. ஏன்? அவனுக்குமே புரியவில்லை. ஆனால் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கையில் கிடைப்பதை எல்லாம் அடித்து நொறுக்கும் அளவு ஆத்திரம் வந்தது. கட்டுபடுத்த முடியாமல் வண்டியை எடுத்து கொண்டு முழு வேகத்தில் அங்கிருந்து பறந்தான்.
அதே நேரம், வேறு ஒரு கார் அந்த காம்பவுண்ட்டுக்குள் நுழைந்தது. அதிலிருந்து சக்கரவர்த்தியும் அசோகனும் இறங்கினார்கள். நேரே மகன் அறைக்கு வந்தவர்கள் அவன் இல்லாதிருக்க கண்டதும் உள்ளே சென்று ஆளுக்கொரு செயரில் அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினர். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அல்ல. முழுதாய் மூன்றுமணி நேரம் பேசி முடித்து சிறு புன்னகையோடு அங்கிருந்து கிளம்பினர். வழியில் எதிர்ப்பட்டு நளன் வர,
“முகுந்தன் எங்கப்பா…”
சக்கரவர்த்தி தான் கேட்டார்.
“ஒரு கிளைன்ட்டை பார்க்க போயிருக்காங்க சார்.”
என்று பொய் தான் சொன்னான்.
“கிளைன்ட்டை பார்க்க போயிருக்கானா? நீ போகல.”
நம்பாதவர் போல புருவ முடிச்சோடு அவர் கேட்க, ஒரு நொடி தடுமாறி தான் போனான். ஆனாலும் உண்மையை சொல்லாமல்,
“வர வேண்டாம்ணு சொல்லிட்டு போனாங்க.”
“சரி. நீ கொஞ்சம் அவன் எங்க இருக்கான்னு பார்த்து சாயங்காலம் 6 மணிக்குள்ள வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுப்பா.”
“ஆறு மணிக்கா?
என்றவன் சற்று நிறுத்தி.
“என்ன விசயம் சார்…”
என கேட்க, முகம் எல்லாம் சிரிப்போடு,
“எல்லாம் நல்ல விசயம் தான். உன் பிரண்ட்டுக்கு பொண்ணு பாக்க போறோம். பொண்ணு என் பிரண்ட் கதிரவேலோட பொண்ணு தான். நேற்று தான் அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா. எல்லாம் நானும் அவனும் பேசி முடிச்சது தான். எதுக்கும் பொண்ணும் பையனும் ஒருமுறை பாத்துக்கணும் இல்லயா? அதுக்கான ஏற்பாட்டை தான் செய்திருக்கேன்.மறக்காம விசயத்தை அவனுட்ட சொல்லி நீயும் அவனோட வந்திடு.”
என்றதும் நளன் முகத்திலும் பூரிப்பு. காரணம் தன் நண்பனை அவன் அவ்வளவு நேசித்தான். அவன் வாழ்வில் ஒரு நல்லது நடக்கிறது என்றால் அவனை விட வேறு யாராலும் இந்த அளவு சந்தோஷப்பட முடியாது. இருவரின் நட்பு அந்த அளவு ஆழமானது. முகுந்தனை காலேஜ் பஸ்ட் இயரில் தான் பார்த்தான் நளன். வசதியில் குறைந்த நளனிடம் ஆரம்பத்தில் முட்டிக் கொண்டவன் தான் முகுந்தன். ஆனால் காலேஜ் நாட்கள் நகர நகர அவர்களின் நட்பு ஆழமாகி போனது. காலேஜ் முடிந்து M.B.A முகுந்தன் சேர்ந்த போது நளன் படிக்கும் வசதியில் இல்லை. காரணம் தந்தையின் நோய். அதுவரை அவன் வீட்டிற்கு ஆதாரமாய் இருந்த தந்தை படுக்கையில் விழுந்த போது அவர் சுமந்து வந்த சுமையை இவன் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட, நான்கு வருட வாழ்வு இவர்களை பிரித்து போட்டது.
படிப்பு முடிந்து முகுந்த் தாயகம் வந்த போது ஒரு ஹோட்டலில் தான் நளனை சந்தித்தான். அங்கு சர்வர் வேலை பார்த்து கொண்டிருந்தவனை வற்புறுத்தி அழைத்து வந்து தன்னோடவே வைத்து கொண்டான். அவனுக்கு என்ன பணி. என்ன சம்பளம் என்று எந்த கேள்வியும் நளன் கேட்கவும் இல்லை. இவன் சொல்லவும் இல்லை. ஆனால் இவன் சொல்லும் எல்லா வேலையும் செய்வான். மாதம் தோறும் இவன் வங்கி கணக்கில் பெரிய தொகை ஒன்று விழ, இது தனக்கான சம்பளம் என எடுத்து கொண்டான். அதனால் தான் ஆட்கள் முன்னால் நண்பனை பாஸ் என்று மதிப்பாகவும் தனி அறையில் டேய் என்று உரிமையோடும் அழைப்பது. முகுந்தன் எவ்வளவோ சொல்லி பார்த்தான். இவன் கேட்கவில்லை. அவனும் அப்படியே விட்டு விட்டான்.
அன்றிலிருந்து இன்றுவரை நான்கு ஆண்டுகளாக அவனோடு தான் இருக்கிறான். அவர்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லை. இவனும் எவ்வளவோ நாள் மேரேஜ் பண்ணிக்க வற்புறுத்தியது உண்டு. வந்த பிரபோஸலில் ஒன்றையாவது ஏற்றுக் கொள் என கெஞ்சியதும் உண்டு. ஆனால் அவன் இதுவரை யாருடைய மாய வலையிலும் விழவில்லை. இவனுக்கு அரேஜ் மேரேஜ் தான் சரி என தீர்மானித்து வெகுநாட்கள் ஆகி விட்டது. இன்று தந்தை அதற்கு பிள்ளையார் சுழி போட மிக மிக சந்தோஷத்தோடு தன் அறைக்கு வந்த நளனோ விடாமல் முகுந்தனுக்கு போன் அடித்தான். அவன் எடுக்கவே இல்லை.
பல முறை அடித்தான். அவன் எடுக்கவே இல்லை.
“இவனுக்கு என்னாச்சு?”
குழம்பியவன் மனதில் மூன்று மணி நேரத்திற்கு முன் முகுந்தன் அறையில் முகுந்தன் நடந்து கொண்ட வினோதமான செய்கையில் நிலைப் பெற்றது.
“ஆமா ஓவியா வேலையை விட்டு நின்னா இவன் ஏன் இவ்வளவு கோபப்படுறான். திலகாளுட்ட அப்படி பேசுறான். கொஞ்சம் விட்டா அவா அழுதிருப்பா. இந்த அளவு மூடு கெட என்ன காரணம்.”
குழப்பத்தோடு எழுந்தவன் அதே குழப்பத்தோடே வெளி வந்தான். நாலாபக்கமும் கண்களை சுழல விட்டும் நண்பன் திருமுகம் தெரியாததால் அங்கிருந்து கிளம்பி, அவன் போகும் இடம் எல்லாம் போய் தேட ஆரம்பித்தான். எங்கும் காணவில்லை. புரியவில்லை. ஒவியா போனதில் அவனுக்கு அப்படி என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. அதுதான் காரணமா? வேறு ஏதாவது பிரச்சினையா?
யோசிக்க யோசிக்க, நளனுக்கு எதுவுமே விளங்கவில்லை. ஆனால் நண்பனின் இன்றைய செயல் வினோதமாக தான் இருந்தது. ஒவியா போனது கம்பெனிக்கு ஒரு சின்ன இழப்பு தான். ஆனால் சரிபடுத்த முடியாத இழப்பு இல்லை. அவள் இல்லை என்றால் இன்னொருத்தி. அதற்கு எதற்கு இவன் ஆத்திரப்பட வேண்டும்,
ஒருவேளை அவளை நம்பி கம்பெனியை கொடுத்தேனே விட்டு விட்டு போய் விட்டாளே என்று ஆத்திரப்படுகிறானா? இல்லை தன்னிடம் பொய் சொல்லி விட்டு கிளம்பியதால் ஆத்திரப்படுகிறானா?
குழப்பம். ஒரே குழப்பமாக இருந்தது. தன் குழப்பத்தை தீர்த்து கொள்ள அவன் வேண்டும். ஆனால் இவன் எங்கு தொலைந்து போனான்.
யோசித்தவாறே அலுவலகத்துக்குள் நுழைந்தான். நேரே முகுந்தன் அறைக்கு தான் வந்தான். ஒருவேளை வந்திருப்பானோ என்ற சந்தேகத்தில் தான் வந்தான். வெறிச்சோடி தான் கிடந்தது. அடுத்து திலகா அறைக்குள் தான் நுழைந்தான். திலகா பிஸியாக இருந்தாள். ஓவியா இல்லாதது அவளை இரட்டிப்பு வேலை பார்க்க வைத்தது. அதுவே அவளை நிமிர விடாமல் செய்ய, திரையை வெறித்தவாறே,
“சொல்லு…”
என்றாள்.
“முகுந்தன் எங்க போனான்னு தெரியுமா?”
என்றதும் சட்டென நிமிர்ந்தவள் அவன் கண்ணை பார்த்து பொங்கும் சிரிப்போடு,
“இந்த கேள்வியை நாங்க உங்களுட்ட கேட்க வேண்டியது சார். என்ன நீங்க எனட்ட கேட்கிறீங்க.”
என்றாள். யோசனையோடு நின்றவன்.
“எங்க போனான்னு தெரியல. பல வருஷ பழக்கம் எனக்கு அவனுட்ட. ஆனா இப்படி மாயமா மறைஞ்சி நான் பார்த்தது இல்லை. எங்கெல்லாமோ தேடிட்டேன். ஆனா எங்கேயும் இல்ல.”
“என்னாச்சு உங்க பிரண்ட்டுக்கு,”
“தெரியல…”
“ஒருவேளை ஓவியா வேலையை இடைநிறுத்தம் செய்தது பிடிக்கலியோ…”
“இருக்கலாம். ஆனாலும் அவங்களும் அப்படி செய்திருக்க கூடாது.”
“எப்படி செய்திருக்க கூடாது.”
“இவங்க தானே அவனை உசுப்பேத்தி இத்தனை பிராடெக்டை அறிமுகப்படுத்துனது. இப்போ அம்போணு எல்லாத்தையும் போட்டுட்டு போனா எப்படி?”
“என்னங்க பேசுறீங்க. ஊர்ல்ல அவளோட பேரன்ஸ் அவளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை பார்த்து வச்சிருக்காங்க. உங்க கம்பெனி வளர்ச்சிக்காக அவளோட எதிர்காலத்தை அழிக்க முடியுமா?”
“அழிக்க சொல்லல. கட்டிட்டும் வேலை பார்க்கலாம் தானே.”
“எப்படி? அவர் அங்கேயும். இவள் இங்கேயுமா?”
“அப்படி யாரும் பார்க்கலியா?”
“பார்க்கிறாங்க தான். வாய்ப்பு இல்லனா பார்த்து தான் ஆகணும். ஆனா வாய்ப்பு இருக்கும் போது அவங்க ஏங்க பிரியணும்.”
“வாய்ப்பு இருக்கா?…”
“ஆமா. மாப்பிள்ளை வேலை பார்க்கிற கம்பெனியிலே இவளுக்கும் வேலை பார்த்திருக்காரு. இரண்டு பேரும் ஒரே ஆபீஸ்லணா கஷ்டம் இல்ல தானே.”
“சரிதான். ஆனாலும் அவங்களை நம்பி பல கோடி ரூபாய் இன்வெஸ்மென்ட் பண்ணுனவனையும் நினைக்கணும் இல்லயா?”
“நினைக்கணும் தான். ஆனா சூழல் மாறி போன பிறகு அவளால என்ன செய்ய முடியும். ஆமா அவா இல்லனா என்ன? அவள் இடத்துல அடுத்த ஆளை போட வேண்டியது தானே? அதுக்காக எதுக்கு இவ்வளவு வாதாடுறீங்க. ஏன் இதுக்கு முன்னால யாரும் இந்த ஆபீஸ்ல இருந்து மாறி போகலயா? இல்ல அந்த இடத்துல நீங்க வேற ஆளை போடலயா? எதுக்கு இப்ப இந்த கோபம். ஓவியா போல பல திறமையான பொண்ணுங்க இருக்காங்க. உங்க பிரண்ட் தான் ஆட்களை தேர்வு செய்கிறதுல கெட்டிகாரர் ஆச்சே. அப்புறம் எதுக்கு இந்த வீண் பிடிவாதம்.”
“நானும் அதை தான் யோசிச்சேன். மச்சான் இதுவரை இப்படி ரியாக்ட் பண்ணுனது இல்ல. ஏன் இந்த சின்ன விசயத்துக்கு இப்படி ரியாக்ட் பண்ணுறானு தான் தெரியல… சரி. நம்ம ஓவியா வாழ்க்கையில நல்லது நடந்தா சந்தோஷம் தான்.”
“நடக்கும். நிச்சயம் நடக்கும். அதுவும் கூடிய சீக்கிரத்துல நடக்கும்.”
“அப்படினா தேதி எல்லாம் குறிச்சாச்சா…”
“இன்னும் இல்ல. ஆனா பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டு போயாச்சு. தேதி முடிவாகல. ஆனா ஒரு மாசத்துக்குள்ள இருக்கும்ணு சொல்றாங்க.”
“யாரு? ஓவியாவா சொன்னாங்க.”
“அவா எங்க? போனதுல இருந்து என்கிட்ட பேசவே இல்ல. போன் அடிச்சா கூட புது பொண்ணு பிஸியா இருக்காங்க. அவங்க அம்மா தான் சொன்னாங்க. எப்படியோ என் தோழி வாழ்வோட அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துட்டா.”
“என்னமோ நல்லது நடந்தா சரி. ஆனா நம்ம ஆபீஸ்ல இது மேரேஜ் வாரம் போல…”
புரியாதவள் போல முழிக்க…
“இங்க வேலை செய்ற ஒவ்வொருத்தருக்கா திருமணம் முடிவாகுது.”
“நம்ம ஆபீஸ்லயா? அப்படி யாருக்கு முடிவாகி இருக்கு.”
“என் பிரண்ட் முகுந்தனுக்கு முடிவாக போகுது.”
“சாருக்கும் மேரேஜா?”
“ம்… இன்று பொண்ணு பார்க்க போறாங்க. அவங்க அப்பா தான் சொன்னாரு.”
“அப்படினா சார் அது சம்மந்தமா எங்காவது தான் போயிருப்பாங்க. நீ தான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டு பேசுறா?”
“சரிம்மா. நான் பேசுறதாவே இருக்கட்டும். அப்போ அவன் எங்க? அதை சொல்லு முதல்ல. போன் அடிச்சா ஏன் எடுக்கல அவன். அவங்க அப்பா அடிச்சும் எடுக்கல. அதனால தான் அவர் பொண்ணு பார்க்க போற விசயத்தையே அவனை பார்த்து எனட்ட சொல்ல சொல்லுறாரு. இந்த அளவு எல்லாருட்ட இருந்தும் தூரமா எதுக்கு போகணும்.”
“அதை நீங்க தான் கண்டுபிடிக்கணும்.”
“கண்டுபிடிக்கிறேன். இவன் ஏன் இப்படி இருக்காணு நான் கண்டுபிடிக்கிறேன்.” என்றவன் சட்டென குழைந்தவாறு,
“ஆமா… நம்ம கல்யாணம் எப்போது?”
என கண்ணடித்து சிரிக்க,
“வீட்டுல ஒ.கே சொன்னீங்கணா . அடுத்த முகூர்த்தத்துலயே உங்க அம்மா பொண்ணை ரெடிப் பண்ணிடுவாங்க. உங்க பிரண்ட்டுக்கு என்ன அதுக்கு முன்னாலயே உங்க வீட்டுல கெட்டிமேள சத்தம் ஒலிக்க செய்யலாம். எப்படி? இன்றே போய் பொண்ணு பார்க்க சொல்லுறீங்களா?”
அவளும் கண் சிமிட்டி சிரித்து கொண்டே சொல்ல, மொத்தமாய் முகம் சுருங்கியவன்,
“உனக்கு என்னதாண்டி பிரச்சினை. அதான் என் வீட்டுல கூட ஏத்துகிட்டாங்கலியா? அப்புறம் எதுக்கு இந்த பிடிவாதம்.”
“பிடிவாதம் பிடிக்கிறேனு தெரியுதுல. விட்டுட்டு போக வேண்டியது தானே. எதுக்கு என்னையே தொங்கிட்டு நிக்குறீங்க.”
“ம்… பச்சையாவே சொல்லுறேன்.”
என்றவன் மென்குரலுக்கு மாறி,
“முடியலடி. என்னை ஏத்துக்கையேன்.”
“ஐயே… இது என்ன இப்படி இறங்கிட்டீங்க. முதல்ல உங்க பாஸை போய் தேடுங்க சார். அப்புறம் பொண்ணு பார்க்க போகிற நேரம் வரை இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணியிருக்கிறதே தெரியாம எங்காவது இருந்திடப் போறாரு.”
என பேச்சை மாற்ற, ஒரு நொடி அவளை ஆழமாக பார்த்தவன்.
“எத்தனை நாள் இப்படியே என்னை அலைய வைக்கிறானு நானும் பாக்குறேன். இப்போ போறேன். பாஸ் எங்க போனாருணு பார்க்க வேண்டி இருக்கு. மாலையில அவரை கூட்டிட்டு பொண்ணு பார்க்க போக வேண்டியிருக்கு. நான் கிளம்புறேன்.”
என எழுந்தவன்,
“ஆமா…உனக்கு ஏதாவது செய்ய வேணும்ணா சொல்லு. செய்துட்டு கிளம்புறேன்.”
“இல்ல. நான் என்னை பாத்துக்கிறேன். நீங்க சாயுங்காலமா வந்து கூட்டிட்டு போய் வீட்டுல மட்டும் இறக்கி விட்டு விடுங்க. போதும்.”
“ம்… சரி. ஆமா? நீ சாப்பிட்டியா?”
“ம்… சாப்பிட்டேன்.”
“மதியானத்துக்கு…”
கொண்டு வந்துட்டேன்.
“அப்படினா நான் கிளம்புறேன். அவனை தேடி கண்டுபிடிக்கணும். மாலையில சரியா வந்து கூட்டிட்டு போறேன். இடையில என் தேவை வந்துச்சினா என் செல்லுக்கு கூப்பிடு.”
“ம்…” என்றதும் நிறைவோடு வெளியேறியவன் கண்ணில், கண்ணாடி அறைக்குள் தலையை தொங்கப் போட்டவாறு இருந்த முகுந்தன் தான் விழுந்தான். முகுந்தனை கண்டதும் சட்டென அவன் முகம் ஒளி வீசியது. ஆனால் கண்ணாடி கூண்டினுள் இருந்த முகுந்தன் முகமோ இருள் பரவியிருக்க கண்டு குழப்பமாக அவன் அறையை நோக்கி நடந்தான்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



