வணக்கம் வாசகர்களே!
இருட்டு பகுதியில் முன்பின் தெரியாத ஒரு இளைஞனோடு அதிலும் நெருங்கி அமர்ந்தவாறு, அடுத்து நடந்தது என்ன?
இளைஞனோடு அதிலும் நெருங்கி அமர்ந்தவாறு, அடுத்து நடந்தது என்ன?
கட்டுடல் காளையவன் கைவளைக்குள் கொடி முல்லை போல் சுருண்டிருந்த தன்னை ஒருமுறை நடுக்கத்தோடு பார்த்தாள் பெண்ணவள். காற்று கூட போக முடியாத அளவு அவனில் நெருக்கி பிடித்திருந்தான். அவன் மேனியின் வாசம் அவள் நாசியை தீண்டியிருந்தது. அவன் கை வளைக்குள் அவள் உடலே ஆடிக் கொண்டு இருந்தது. அவள் முகத்தையோ அவன் மார்பு பொதிந்திருந்தது. கொஞ்சம் கூட நகர்த்த முடியாத அளவு இறுக்கி பிடித்திருந்தது அவனின் இரும்பு போன்ற கரம்.
படபடப்பில் அவள் நெஞ்சம் எகிற தொடங்க,
சிலிர்த்து நின்ற உடலை மீட்டெடுத்து அவன் மார்போடு ஒட்டி நின்ற தன் உடலை நீக்க அவளும் போராடினாள். ஆனால் ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை. அப்படி இருந்தது அவனின் இரும்பு பிடி.
இங்கு என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள் அவன் மொத்தமாக அவளை பொதிந்தவாறு அந்த மேஜையின் அடியில் அவசரமாக போய் பதுங்கி கொள்ள, தன்னை சுதாகரித்து கொண்டு மீட்டெடுப்பதற்குள்,
அந்த அறையே நடுநடுங்க தொடங்கியதை அப்போது தான் உணர்ந்தாள் ஓவியா. ஒரு நொடி நிலமை முழுவதுமாக அவளுள் உறைக்கும் முன் அந்த கட்டிடம் படபடவென இடிந்து விழுந்து அவர்கள் பதுங்கியிருந்த மேஜையை மூடிக் கொண்டது மண் புழுதி.
அவள் இதயமே நின்று போனது. பயத்தில் வெலவெலத்து போனவள் அவளையும் மீறி அவனுள் மொத்தமாக புதைய தொடங்கினாள். தன்னை நெருக்கியவளை அவனுமே தன்னுள் நெருக்கி பிடித்து கொண்டான்.
நில சரிவு. எப்படி நடந்தது. யோசிக்கும் முன் எல்லாமே நடந்து முடிந்து விட்டிருந்தது. இரண்டு தினமாய் விடாமல் பெய்த மழை கொடுத்த வரபிரசாதமாய் இருக்க வேண்டும். மலை மீது இதுவரை இயற்கைக்கு ஈடு கொடுத்து படு கவர்ச்சியாய் கண்போரை கவர்ந்திழுத்து கொண்டிருந்த அந்த கட்டிடம் மொத்தமாய் இடிந்து, அவர்கள் இருந்த இடத்தை சுற்றி மண்குவியலால் மூடிவிட்டது. சட்டென ஒரு கும்மிருட்டு. பக்கத்தில் எதுவுமே கண்ணுக்கு புலப்படாத கும்மிருட்டு. பயத்தில் அவள் மனது எகிறி கொண்டிருந்தது. அது அவனாலும் உணர முடிந்தது. அவனுமே அந்த நொடி பயத்தின் விழிம்பில் தான் இருந்தான். அந்த இருட்டில் அவர்கள் நெருக்கம் கூட இருவருக்கும் உறைக்கவில்லை. இருவருள்ளும் பயம் மட்டுமே விரவி நின்றது. அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாத ஒரு உறைந்த நிலை.
பிழைப்போமா? இதிலிருந்து காப்பாற்றப்படுவோமா? என கேள்விகள் கூட அவர்களுக்குள் எழவில்லை. ஆனால் மனதின் அடியில் ஒரு மயான அமைதி இருவருள்ளும் பீதியை கிளப்பி விட்டிருந்தது.
சட்டென ஏதோ பெயர்ந்து விழுந்தது போல ஒரு சத்தம். திடுக்கிட்டு போனாள் பெண்ணவள். பயத்தில் அவன் சட்டையை இறுக்கி பிடித்திருந்து கொண்டாள். அவள் கண்களோ திறக்க பயந்து இறுக மூடி இருந்தது.
கூடவே அவர்கள் இருந்த இடம் நகர்வது போல ஒரு பிரமை ஏற்பட மொத்தமாக அவனுள் தன்னை ஒளித்து கொண்டு நடுநடுங்க ஆரம்பித்தாள். அந்த நடுக்கம் அவனுள்ளும் அதிர்வை கொடுத்தது. ஆனாலும் அதை உணரும் நிலையில் அவனும் இல்லை. பயம். இருவருக்குள்ளும் பயம். இதய துடிப்பு ஒருவர் மற்றவர்களுக்கு கேட்கும் அளவு அதிவேகமாக துடித்து கொண்டது.
அதிலும் இடை இடையே கேட்ட சத்தங்கள் அவர்கள் ஈரகுலையையே நடுங்க வைத்தது. சில நேரம் இருவருக்கும் உயிரே போய்விட்டது போல ஒரு வித அதிர்வு நெஞ்சை அடைத்து கொண்டது. நல்ல வேளை அவர்கள் இருந்த இடம் அசைந்ததே தவிர அது எப்போதும் நகரவேவில்லை. அப்படியே ஆடாமல் அசையாமல் உறைந்து போய் தான் இருந்தனர் இருவரும்.
நொடிகள் அகல இருவருக்குள்ளும் பயம் கூடியதே தவிர குறைந்தபாடில்லை. வாழ்வே இந்த மண்குவியலுக்கு அடியில் முடிந்து விடுமோ என்ற எண்ணம் இருவருக்குள்ளும் எழாமல் இல்லை. அந்த எண்ணம் ஓவியாவின் உள் வந்ததுமே பயத்தில் அவளின் உடல் மொத்தமாக ஆட தொடங்கியது.
அந்த ஆட்டத்தை உணர்ந்தவன், ரொம்பவே பயப்படுகிறாள் என உணர்ந்து அவளை தன்னோடு மறுபடியும் நெருக்கி கொண்டான். பெண்ணவளுக்கும் அந்த உறைநிலையில் அந்த அரவணைப்பு தேவை என்பது போல முடங்கி போய் அவனுள் கிடந்தாள்.
அதே நேரம் அருகில் எதுவோ நகர, சட்டென,
நாலு பக்கமும் மண் நிறைந்து புழுதி பறந்து மூச்சு முட்டத் தொடங்கியது. இருவரும் கண்களை திறக்க கூட இல்லை. அப்படியே அந்த மேஜையின் அடியிலே சுருண்டு கொண்டனர். எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து அங்கேயே இருந்தார்களோ தெரியவில்லை.
கொஞ்சமாக அவள் மனம் நடந்தவற்றை ஜீரணித்து நார்மலாகும் போது தான் அடுத்த ஆடவனுடன் நெருங்கி இருப்பது அவளுக்குமே உறுத்தியது. மெல்ல… மெல்ல அவனில் இருந்து தன்னை பிரித்தெடுக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. அவன் இரும்பு பிடி அந்த அளவு அவளை நெருக்கி பிடித்திருந்தது. பயத்தோடு தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.
இருட்டில் அவன் முகத்தை பார்க்க முடியவில்லை. அவன் தன்னை பற்றி என்ன நினைக்கிறான் என்பதை கணிக்க முடியவில்லை. சுற்றி இருக்கும் சூழலை அனுமானிக்க முடியவில்லை. ஆனால் படபடத்த விழியோடு நாலாபுறமும் அவள் பார்வையை பரபரப்போடு திருப்பியது. இதயம் அதிவேகமாக துடித்தது. கூச்சமும் பயமும் அவளை தவிக்க செய்தது. அவளின் உடல் அசைவை உணர்ந்தவன்,
காற்றுக்கும் கேட்காத குரலில்,
“ஆடாத. இப்போ எப்படியான சூழல்ல இருக்கோம்னு தெரியல. ஒரு நிமிஷம் அப்படியே இரு. நான் செல்லை எடுத்து டார்ச்சை ஆண் பண்ணுறேன்.”
அவனின் மெல்லிய குரல் அவள் செவிப்பறையை தீண்டியதும் சிவந்து போனவள், அவன் மூச்சு காற்று சுவாசத்தில் நெளிந்தவாறு அதே மென்குரலில்,
“ம்….”
என்றாள். வேறு பேச வார்த்தை கூட வெளிவர மறுத்தது.
அவளை இறுக்கி பிடித்திருந்த தன் வலது கரத்தை எடுத்து பாக்கெட்டினுள் மெல்ல நகர விட்டவன், செல்லை எடுத்து அதை ஆண் செய்து ஒளியை பாய்ச்ச… அந்த சிறு வெளிச்சத்தில் ஓவியாவிற்கு அவனின் நெருங்கி நின்ற முகம் தெரிந்தது, ஆபத்து கட்டத்துக்குள் இருப்பது தெரிந்தாலும் அவனை நெருங்கி இருப்பது உறுத்த சிவந்து மறுபடியும் கொஞ்சமாக விலக போராடினாள்.
அதே நேரம் அவனும் நோக்கினான். அவனுக்குமே அவளின் நெருங்கி நின்ற முகமே தெரிந்தது. ஒரு நொடி இருவர் விழியும் சந்தித்து கொள்ள, பெண்ணவளோ நாணம் கொண்டு, நெளிந்து விலகியவள் அவனை கீழ் பார்வை பார்க்க… அவனும் மெல்லமாய் அவள் நகர வழிவிட்டான். இருவருமே ரொம்ப சிரமப்பட்டு தான் அந்த இடத்தில் கொஞ்சமாக விலகி அமர்ந்தனர்.
இருட்டுக்குள் இருந்த போது தோன்றாத ஒரு உணர்வு பெண்ணவளுக்கு ஒளியில் தோன்ற, நாணத்தோடு சிலிர்த்து விலகியவாறு அவனை பார்த்தாள். அவன் முகத்தில் எதையும் அவளால் படிக்க முடியவில்லை. ஆனால் அந்த காந்த கண்கள் அவள் விழியிலே கூர்தீட்டி நிற்க அவளையும் மீறி உடல் ஒரு கணம் சிலிர்த்து மூக்கு விடைத்தது. மெல்ல தலை தாழ்த்தி கொண்டாள். ஆனாலும் அவன் பார்வை அவளிலிருந்து அகலாதிருக்க கண்டதும் மெல்லமாய் கீழ் பார்வை பார்க்க, இப்போதும் அந்த விழி அவளிலே இருந்தது. சட்டென ஒரு விதமான படபடப்பு. அந்த படபடப்பு அதிகரிக்க அதிகரிக்க பயத்தோடு நாலாபுறமும் பார்வையை மோத விட்டாள்.
அந்த மெல்லிய வெளிச்சத்தில் பெரிதாக எதுவும் அவளுக்கு தெரியவில்லை. அவள் கண்ணுக்கு தெரிந்ததே அவளை நெருங்கி நின்ற அவன் உருவம் மட்டும் தான். அதுவே அவஸ்தையை கொடுக்க, மெல்ல நகர முற்ப்பட்டார்.
ஆனாலும் அவளால் பெரிதாய் அவனிலிருந்து இன்னுமே நீங்க முடியவில்லை. நீங்கி இருக்கும் அளவு அங்கு இட வசதியும் இருக்கவில்லை. என்னவோ அவனை நிமிர்ந்து பார்க்க கூட திராணியில்லாமல் பெண்ணவள் தலை குனிந்து இருந்தாள்.
அந்த நெருக்கத்தில் இருவரின் உணர்ச்சியை இருவரும் தெரிந்து கொள்ளாத முடியாத அளவு மெல்லிய இருள் போர்த்தி நின்றாலும் அவளின் பார்வை தன்னில் படுவதையும் அவனின் பார்வை தன்னில் படுவதையும் ஒரு அவஸ்தையோடு தான் அனுபவித்து நின்றனர் இருவரும்.
நேரம் போக போக… அவளுள் பயம் மூண்டெழுந்தது. ஆரம்பத்தில் கட்டி கொண்ட போது தோன்றாத ஏதேதோ உணர்வுகள் அவனை விலகி நிற்கும் இந்நேரம் அவளை ஆட்டி படைக்க தொடங்கியது. பெண்ணவளால் அவ்வளவு நெருக்கத்தில் நெளியாமல் இருக்க முடியவில்லை. அவள் உடலசைவை வினோதமாக பார்த்த முகுந்தன்.
“என்ன?”
என்பது போல் பார்வையால் கேட்க, அவன் விழியை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் அவனிலிருந்து பார்வையை கீழே தாழ்த்தியவாறே,
“ம்கூம்…”
என இருபுறமும் தலையசைத்தாள்.
முகுந்தன் ஒரு நிமிடம் முழுதாய் அவளை பார்த்தான்.
“என்ன இவா இப்படி நெளியுறா?” அவளை கண்களால் அளந்தவன் விழி சட்டென அவள் படபடத்த விழியில் இருந்து மாறி நாசிக்கு வந்த போது அது விடைத்து சிவந்து கொண்டு நிற்க கண்டதும் மெல்லமாய் தலையை கீழ் நோக்கி நகரவிட்டான். இப்போது அவள் விரல்நுனிகள் ஆட கண்டதும்.
“இவா இப்படி மாட்டிக் கொண்டதால பயப்படுறாளா? இல்ல… என்னை பார்த்து பயப்படுறாளா? “
எண்ணியவன் சட்டென விழியை அவள் முகத்தில் பாய்ச்ச…
“உமிழ்நீரை விழுங்குறதை பார்த்தா. பக்கி என்னை பார்த்து பயப்படுறது போல இல்ல தெரியுது. ம்… தேவை தான் சும்மா நாம தனியா வந்து பதுங்காம அவளையும் கூட்டிட்டு வந்து தொலைச்சோம்ல. எனக்கு இது தேவைதான்.”
எண்ணியவன் முகம் நொடியில் மாற, அவனையே பார்த்து கொண்டிருந்தவள் முகம் இன்னுமே பயத்தை காட்டியது.
“ ம்… சரி தான். இந்த பொண்ணு என்னை பார்த்து தான் நடுங்கி சாகுது.”
தனக்கு தானே சொல்லி கொண்டவன் விழி சட்டென அவளின் துடித்த இதழில் பதிய, அந்த இதழ் ரேகைகளில் ஒரு நொடி தன்னை தொலைத்தவன்,
“தூ… வெட்கம் கெட்டவனே. அதுவே நம்மளை பார்த்து பயந்து சாகுது. இந்த லெட்சணத்துல உன் மனசு ஏண்டா அந்த பக்கம் போகுது.”
தனக்கு தானே காறி உமிழ்ந்தவன் மெல்ல கண்களை திருப்பி நாலாபுறமும் பார்வையை செலுத்த தொடங்கினான். ஆனால் அவளை வைத்து கொண்டு அவனால் திரும்பி பார்க்கவே முடியவில்லை.
அது சின்ன மேஜை என்பதாலும். அதில் இருவர் இருப்பதே சிரமம் தான் என்பதாலும் அவனால் அவனை நகர்த்த முடியவில்லை.. அப்படி நகர்ந்திய போதெல்லாம் அவளிடம் முட்டி மோத வேண்டியதாக இருந்தது. சில நொடி அமைதியாக அப்படியே இருந்தான். நேரம் ஆக ஆக இருவருக்குமே மூச்சு முட்ட ஆரம்பித்தது. இப்படியே இதற்கு மேல் இருக்க வாய்ப்பில்லை என உணர்ந்த போது அந்த மேஜையை விட்டு ஏதாவது ஒரு பக்கம் நகர முடியுமா என ஆராய வேண்டி இருந்தது. நாலு பக்கமும் பொதிந்தது போல் மண் குவியல்கள். அதை எப்படி நகர்த்துவது என போராட தொடங்க அவனின் அந்த சின்ன நெளிவு கூட அவளை சங்கடப்படுத்தியது. அவளின் முக மாற்றத்தை பார்த்தவன்,
ஒரு நொடி அவளுள் பார்வையை செலுத்தி விட்டு
“வேணாம்டா. மாட்டிக்காத …” என தனக்கு தானே கட்டளை இட்டவாறு திரும்பி,
மறுபடியும் நான்கு பக்கமும் கைகளை தடவி ஆராய தொடங்கினான். எந்த பக்க மண் குவியலை நகர்த்தி கொண்டு முன்னேறுவது என அவனுக்குமே தெரியவில்லை. அந்த இருளில் எந்த தீர்மானமும் எடுக்க முடியாமல் தடுமாறியவன் ஒளியை, சுற்றி இருந்த மண் குவியலுக்குள் அடித்தான். அந்த ஒளி மண்குவியலில் பட்டு ஓவியாவின் முகத்தில் எதிரொலிக்க, சட்டென அவன் கண்கள் அவளில் மறுபடியும் படிந்தன. அந்த முகத்தில் சென்ற பார்வையை திருப்ப முடியாமல் அவளையே பார்த்தான்.
பெண்ணவளின் நெருக்கம் அவனுக்கு இப்போது தெளிவாக தெரிந்தது. கூடவே அந்த ஒளியில் ஜொலித்து நின்ற அவளின் முக அழகின் வதனத்தில் தன்னை பறி கொடுத்தவன். ஒரு நொடி விழி அகலாமல் பார்த்தான். அடுத்த ஆடவனுடன் இவ்வளவு நெருக்கத்தில் அதுவும் போன் வெளிச்சத்தில் தன்னை ஊடுருவி பார்க்கும் அவனின் ஒளி பார்வையில் நார்மலாக இருக்க முடியாமல் அவளும் வெட்கத்தில் நெளிய தொடங்கினாள்.
“அறிவு கெட்டவனே திரும்புடா.”
என மனசாட்சி வசை மொழி கொடுக்க,
இதுவரை அவளின் பூத்து நின்ற வெட்க சிரிப்பில் தன்னை தொலைத்தவனாக இருந்தவன் பின் உன் அழகு என்னை பாதிக்கவில்லை என்பது போல அந்த குட்டி வெளிச்சத்தில் நாலாபுறமும் ஆராயத் தொடங்கினான்.
அவனை குழப்பமாக பார்த்தவள் அடுத்த நொடியே தன் பார்வையை தாழ்த்தி கொண்டு, அப்படியே சிலையாக அமர்ந்து விட, அவள் எதுவும் செய்யாமல் அப்படியே இருக்க கண்டவன்,
“இங்க என்ன படமா காட்டுறாங்க. இப்படி பார்த்துட்டு இருக்கா. இதுல இருந்து தப்பிக்க வழி இருக்காணு பாரு. இல்ல மூச்சு முட்டியே சாக வேண்டியது தான்.”
அவன் அதட்டலில் திடுக்கிட்டவள் தன் மான்விழியை பயத்தோடு அங்குமிங்கும் மோத விட்டவாறு திரும்பி நாலாபக்கமும் சுற்றி பார்க்க தொடங்க, அவள் முடியின் வாசம் அவன் நாசியை துளைத்தது. அந்த வாசத்தில் தன்னை ஒரு நொடி இழந்தவன்.
“சுத்தம்…”
என சத்தமாக முனங்கியவன்,
“வேணாம். நீ அப்படியே இரு. நான் பாத்துகிறேன்.”
என அவன் உடலை வளைத்த போது அவளும் வளைந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். அப்படி வளைத்தவள் பிடிமானம் இல்லாமல் விழ போக, சட்டென அவன் கழுத்தை இரு கையாலும் கட்டி கொண்டாள்.
அவளின் திடீர் அணைப்பில் அதிர்ந்தவன்
இது என்னடா சோதனை என சட்டென திரும்பி அவளை முறைத்தவாறு பார்க்க…
“நான் வேணும்ணு பண்ணல…”
அவள் படபடவென தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“ உன்னை அப்படியே விட்டுட்டு வந்திருக்கணும் இழுத்துட்டு வந்தேன்ல. எனக்கு இது தேவை தான்.”
என தன்னை கட்டுபடுத்த முடியாத அவஸ்தையில் அவன் முனங்க, அவனை பரிதாபமாக பார்த்தாள் பெண்ணவள். அவளின் அப்பாவி முகம் கூட தன்னை எதுவோ செய்வதை உணர்ந்தவன். சட்டென பார்வையை திருப்பி கொண்டு,
மறுபடியும் அவளை தாங்கி கொண்டே ஒவ்வொரு இடமாக ஆராய தொடங்கினான். நல்ல வேளை அந்த இருட்டில் கூட அவனுக்கு ஒரு பக்க மண்திரையை லேசாக விலக்க முடிந்தது. அவளை, தான் இதுவரை இருந்த இடத்தில் மெல்லமாய் அமர வைத்தவன் மெல்ல குத்து கால் போட்டவாறு அந்த மண் திரையை நகர்த்த முனைந்தான்.
அதே நேரம்,
ஹோட்டல் சித்ராவில் கிளைன்ட்டோடு மீட்டிங்கில் இருந்த நளன்.
தன் உதவியாளன் கொண்டு வந்த செய்தி கேட்டு அதிர்ந்து எழுந்தான்.
“என்னடா சொல்லுறா?”
படபடப்பில் அவன் நெஞ்சே ஒரு நொடி நின்று விட்டது.
“நிஜம் தான் சார். ஒரு பத்து நிமிஷம் தான் இருக்கும். மலைபாதை மொத்தமா அடைச்சிடுச்சி. எந்த வாகனமும் மேல போக முடியாது. ஊரே அங்க தான் கூடி நிக்குது.”
“பாஸ் இருந்த ஹோட்டல்.”
பதட்டத்தோடு அவன் கேட்க,
“அதுவும் தான் மண்ணுல புதைச்சிட்டதா சொல்லுறாங்க சார்.”
தயக்கத்தோடு சொன்னவனை அதிர்ந்து பார்த்த நளன். சட்டென ஷோபாவில் இருந்து எழுந்தான். ஒரு நொடி செய்வது அறியாது திகைத்தவன் பார்வை இப்போது, தீனதயாளனிடம் சென்றது. அவர் புராஜெக்ட் பற்றி விவரித்து கொண்டே இருந்தார். சட்டென நளன் எழுந்து நிற்க கண்டதும்,
“என்னாச்சு நளன்?”
என கேட்க,
“ஒரு நிமிஷம் சார்.”
என்றவன் அடுத்து ஒரு வார்த்தை பேசாமல் பரபரப்போடே வெளியேற, கூட்டமே போகும் அவர்களை குழப்பமாக தான் பார்த்தது. அறையை தாண்டி நளன் வரவேற்பறைக்குள் நுழைந்த போதே,
கும்பல் கும்பலாக அத்தனை பேரும் இதையே பேசி கொண்டிருப்பதை கண்டு, ஒரு நொடி என்ன செய்வது என தெரியாமல் உறைந்து போய் நின்றான்.
“முதல்ல விசயத்தை பெரிய முதலாளி காதுல போட்டு விடலாம் சார். இப்போ அவரால மட்டும் தான் அவர் மகனை பத்திரமா மீட்டெடுக்க முடியும்.”
உதவியாளன் சமயத்துக்கு சரியான யோசனை சொல்ல…
அதிர்ந்து நின்றவன் கண நேரத்தில் தன்னை மீட்டெடுத்து கொண்டு, தன் பாக்கெட்டில் இருந்த செல்லை எடுத்து அவசரம் அவசரமாக முகுந்தன் அப்பா சக்கரவர்த்தியின் நம்பரை தேடி இணைப்பை கொடுக்க, எதிர்முனை உடனே உயிர் பெற்றது.
விபரத்தை அவசரம் அவசரமாக சொன்னவன். அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தான்.
மலையே பெயர்ந்து நகர்ந்து அந்த இடத்தையே நிலை குலைய செய்திருந்தது. இரவு முழுதும் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் போல் எப்பக்கமும் நீர் பாய்ந்தோடி கொண்டிருந்தது. மொத்த கட்டிடமும் இடிந்து அதனுடைய அட்ரஸையே தொலைத்து நின்றது.
| கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை எந்த கட்டிடமும் முழுதாய் தெரியவில்லை. நேற்று வரை கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிந்த மலையழகு இன்று கலையிழந்த மண்மேடாக தெரிந்தது. ஒரே நொடியில் மொத்தமாய் மாறி போய் இருந்த இடத்தை பார்த்தான். நொடியில் கண்ணீர் கட்டிவிட்டது. இந்த இடத்தில் எப்படி தன் தோழனை தேடுவான். ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன் மட்டும் இந்த மண்சரிவு ஏற்பட்டால் அவனும் இதில் மாட்டி கொள்ள நேர்ந்திருக்கும். நினைவே இதயத்துக்குள் பேயாட்டம் ஆட பயத்தோடு அந்த இடத்தை பார்த்தான்.
இவன் அங்கு வந்து சேரும் முன் போலீஸ் படையே குவிந்து விட்டது. மீட்பு பணிக்கு என யாரும் வந்து சேரா விட்டாலும் உள்ளூர் மக்கள் தங்களால் ஆன உதவியை செய்ய தொடங்கியிருந்தனர். நளனும் அவர்களோடு இணைந்து கொண்டான்.
ஆனால் அவன் வேறு எங்கும் நிற்கவில்லை. குத்து மதிப்பாய் முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டல் இருந்த பகுதியை நோக்கியே நகர்ந்தான். ஆனால் அது அவ்வளவு லகுவாக இல்லை. நகர்ந்து வந்த பாறைகளும் காட்டாற்று வெள்ளமும் அவனை நகர விடாமல் பல இடங்களில் தடுத்து நிறுத்தியது.
சிறிது நேரத்திலே மீட்பு படை உள்ளே இறங்கி விட்டது. கூடவே தேசிய மீட்பு படை கிளம்பி வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியும் வந்து விட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பணிகளை முடுக்கி விட்டு கொண்டு நின்றிருந்தார். காவல்படையினர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அப்படி வந்தவர்களில் பலர் பிணமாக வந்தது தான் கொடுமை. அப்படியான நேரங்களில் எல்லாம் நளன் பயத்தில் உறைந்து போனான். அன்றைய நாள் முழுவதும் மீட்பு படையினரோடு அவன் நடத்திய தேடுதல் வேட்டையில் அவன் தன் தோழனை கண்டுபிடிக்க முடியாமல் தான் திரும்பி வந்திருந்தான்.
அதே நேரம்,
கோயம்புத்தூர் முக்கிய வீதியை தாண்டிய அடுக்கு மாடி குடியிருப்புக்கு மேற்குபுறம் அமைந்திருந்த அந்த மூன்று மாடி பங்களா வீட்டின் முன் ஆட்களின் ஆரவாரம் அதிகமாக இருந்தது. வீட்டின் முன் அணிவகுத்து நின்ற வாகனங்களின் டிரைவர்கள் ஒன்று கூடி குசுகுசுக்க ஆரம்பித்து விட்டனர். யார் யாரோ வந்து வந்து செல்ல வேலைகாரர்கள் அத்தனை பேரும் தங்கள் வேலைகளை மறந்து நடந்து கொண்டிருக்கும் பதட்டத்திற்கு காரணம் தெரியாமல் தங்களுக்குள் ஏதேதோ கதை கட்ட ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் ஹாலில் முகுந்தனின் குடும்பம் மட்டும் தான் இருந்தார்கள். அவன் தந்தை சக்கரவர்த்தி போனில் யாரோடோ விபரம் கேட்டு கொண்டே இருந்தார். அவர் அருகில் அவன் தந்தை வரதராசன் பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தார். பேரனோட செய்தி அறிந்த அடுத்த நொடியில் இருந்தே அந்த குடும்பம் பரபரக்க தொடங்கி விட்டது.
மினிஸ்டரில் இருந்து உள்ளூர் எம்.எல்.ஏ வரை
அவசரமாக செய்தி அனுப்பப்பட்டது. மகன் அந்த இடிபாடுகளுக்கு நடுவில் உயிரோடு இருக்கிறானா என்ற கலக்கம் தான் சக்கரவர்த்தியை நிலைகுலைய செய்திருந்தது. அவருக்கு நேர் எதிரில் ஒரு தூணில் சாய்ந்தவாறு,
தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள் நீலவேணி. மகனின் நிலையை அறிந்த நொடியில் இருந்து அவளும் இப்படி உடைந்து போய் அழுது கொண்டு தான் இருக்கிறாள். தாயின் அருகில் பயத்தின் உச்சத்தில் இருந்தாலும் அவளை தேற்றி கொண்டிருந்தாள் முகுந்தனின் தமக்கை பிரபா.
“நீ அழாதம்மா. தம்பிக்கு எதுவும் ஆகாது. தம்பி பத்திரமா தான் இருப்பான். இன்றைக்கே நம்ம சங்கீதாவோட புருஷன் அவனை கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்திடுவான்.”
என்றதும் அவளை பரிதாபமாக பார்த்த நீலவேணி,
“மூணு மணி நேரம் கழிஞ்சிடுச்சேடி. இவ்வளவு செல்வாக்கும் பணபலமும் அதிகாரமும் இருந்தும் இன்றும் என் மகன் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்க முடியலியே.”
தாங்க முடியாமல் கதறியவளை என்ன சொல்லி தேற்ற என தெரியாமல் பிரபா கண்கலங்கிய போது,
ரங்கராஜனின் போன் குரல் கொடுத்தது. செல்லில் சங்கீதாவின் புருஷன் மதியழகன் IPS என தெரிந்ததும் பரபரப்போடு எடுத்தவர்.
“என்னாச்சு மதி. முகுந்த் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிட்டீங்களா?”

“இல்ல சார். மழை கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுக்கல. விடாம பேய் மழை இருக்கிறதால பெரிசா மீட்பு படையால முன்னேற முடியல. ஆனா கவலைப்படாதுங்க. அந்த ஹோட்டல் இருந்த இடத்தை நோக்கி ஒரு தனி படையே போயிருக்கு. கூடிய சீக்கிரத்துல நல்ல செய்தி வரும். நீங்க யாரும் பயப்பட வேணாம். எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்.”
“உன்னை தான் நம்பி இருக்கோம் மதி. என் பேரனுக்கு எதுவும் ஆகிட கூடாது. எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. நிறைய ஆளை உள்ளால அனுப்பி சீக்கிரமா என் பேரன் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிடுங்க. நாங்க உடனே புறப்பட்டு வரோம்.”
“ஒ.கே சார்.”
என்றவன் அடுத்த நொடி போனை வைக்க. எல்லா கண்களும் அவர் மேலே இருக்க கண்டதும், தயக்கத்தோடு,
“இன்னும் இல்லயாம். விடாம மழை இருக்கிறதால முன்னேற முடியலியாம்.”
“ஐயோ… ஐயோ… எல்லாம்… எல்லாம் என்னால தான்.”
என தன் தலையிலே அடித்த நீலவேணி,
“நான் மட்டும் பொண்ணு பார்க்க வற்புறுத்தலணா அவன் இந்நேரம் நம்ம வீட்டுல இருந்திருப்பான். மூணு நாள் வீட்டுல சந்தோஷமா இருக்க வந்த புள்ளையை இப்படி அநியாயமா ஒட வச்சி இப்போ நிலசரிவுல மாட்ட வச்சிட்டேனே.”
வலி தாங்க முடியாமல் கதறிய மருமகளை பார்த்து கோபத்தோடு முறைத்த கந்தாரி,
“செய்தது அம்புட்டையும் செய்துட்டு இப்படி நீலி கண்ணீர் வடிச்சா எல்லாம் சரியா போச்சா. என் மகன் எவ்வளவு படிச்சி படிச்சி சொன்னான். நீ கேட்டியா? இப்போ கட்டி வச்சே ஆவேணு ஒத்த காலுல நின்னால. இப்போ என்ன ஆச்சு. அவனுக்கு தான் கல்யாணத்துக்கு மேல விருப்பம் இல்லயே விடுணு சொன்னதுக்கு கேட்டியா? நீ பாத்து வச்சிருக்கிற பொண்ணை அவன் கட்டி தான் ஆகணும்னு நின்னா இல்ல. அதுக்கு பயந்து அவன் ஒடி ஒளிய அந்த வய நாட்டுக்கு போனான். இப்போ மலை சரிவுல மாட்டிக்கிட்டான். அவனுக்கு ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன்.”
நீலவேணியின் மாமியார்காரி பொரிந்து தள்ள,
படபடப்போடு போனில் யாரோடோ பேசி கொண்டிருந்த சக்கரவர்த்தி சட்டென திரும்பி,
“என்னம்மா… நீ வேற. அவளே அவளால தான் மகன் இப்படி ஒரு ஆபத்துல மாட்டிகிட்டானு குற்ற உணர்வுல இருக்கிறா இந்த நேரம் நீயும் இப்படி பேசுறா?”
என்ற மகனை சுட்டெறிக்கும் பார்வை பார்த்த காந்தாரி.
“உண்மையை தானே பேசுறேன். மும்பையில இருந்து வந்த அவனை ஒரு நாள் நிம்மதியா இருக்க விட்டாளா இவா? அவளோட அண்ணன் பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளாக்கிடணும் என்கிற ஆசையில அவனை நச்சரிக்க போய் தானே அவன் சொல்லாம கொள்ளாம இங்க இருந்து கிளம்பி போனான். இவா மட்டும் வந்த புள்ளைக்கு வகை வகையா சமைச்சி போட்டிருந்தா அவன் ஏன் ஒடி போக போறான். இப்போ குய்யோ முய்யோணு ஒப்பாரி வச்சா எல்லாம் மாறிடுமா?”
என்றதும் நீலவேணி அழுகையினூடே,
“நான் இப்படி நடக்கும்ணு என்னத்த கண்டேன். வரும் போதெல்லாம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லுறானேனு கொஞ்சம் அழுத்தி சொன்னேன். அதுக்கு போய் கோவிச்சிட்டு வீட்டை விட்டு போவானு எனக்கென்ன தெரியும்.”
“தெரியணும்டீ தெரியணும். மகனை பற்றி உனக்கு தெரியாம. அவன் தான் ஒரு வருஷம் டைம் கேட்டானே. நீ கொடுத்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?”
“ஆமா… ஆமா… எல்லாம் என்னால தான்.”
மறுபடியும் நீலவேணி தன் தலையில் அடித்து கொண்டு கதற, மனைவியின் அழுகையை பார்க்க முடியாத சக்கரவர்த்தி,
“நீ கொஞ்சம் சும்மா இரேன்ம்மா. அவளே நொந்து போய் அழுதுட்டிருக்கா. நீயும் ஏனம்மா?”
ஆதங்கத்தோடு கேட்ட மகனை கலங்கும் கண்ணால் பார்த்த காந்தாரி.
“எனக்கு மட்டும் என்னடா ஆசையா. உன் பொண்டாட்டியை திட்டணும்னு. பயமா இருக்குடா சக்கரை. நமக்கு அவன் ஒரே வாரிசு. அவனுக்கு எதுவும் ஆகிட கூடாதுணு மனசு கிடந்து அடிச்சிக்குதுடா.”
என்றதும் முகம் முழுதும் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்த நீலவேணி.
“அவனுக்கு எதுவும் ஆகாது அத்தை. அந்த காளியம்மா என்னை நிச்சயம் கைவிட மாட்டா.”
என்றவள் மறுபடியும் குலுங்க ஆரம்பிக்க,
“இப்ப என்ன நடந்து போச்சுனு எல்லாரும் ஒப்பாரி வைக்கிறீங்க. முதல்ல அழுகையை நிறுத்துங்க. என் பேரனுக்கு எதுவும் ஆகியிருக்காது. சக்கரவர்த்தி முதல்ல நீ கிளம்புடா. நானும் வரேன்.”
ரங்கராஜன் அவசரமாக ரெடியாக,
சக்கரவர்த்தியும் எழுந்து புறப்பட தொடங்கினார்.
“நானும் வரட்டாங்க.”
என்ற மனைவியை ஏறிட்டு பார்த்தவர்,
“வேணாம் வேணி. அங்கு இப்ப சூழல் சரியா இல்ல. நானும் அப்பாவும் போறோம் இல்ல. நம்ம சங்கீதா புருஷன் கூட இப்போ அங்க தான் இருக்கான். அவன் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்கான். அவன் மேலதிகாரிகளுட்ட பேசி தனி படையே அமைச்சிருக்கான். நளனும் கூட இருக்கான். இன்று நைட்டுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்ணு நம்பிக்கை கொடுத்திருக்காங்க. நான் எப்படியாவது மகனை கண்டுபிடித்து கூட்டிட்டு தான் வருவான்.”
என்றவர் சட்டையை மாட்டி கொண்டே வெளிவர, ரங்கராஜனும் ரெடியாக நின்றார். அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டவர்கள் நேரே வந்தது வயநாடு மலை பகுதிக்கு தான்.
அவர்கள் வந்து சேரும் போது மீட்பு படையினர் மிக சுறுசுறுப்போடு பணி செய்து கொண்டிருப்பதை பார்த்தனர். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தான் இருவரையும் அழைத்து கொண்டு போலீஸ் முகாம் அமைத்திருந்த இடத்திற்கு கூட்டி சென்று, விபரங்களை சொன்னான்.
சக்கரவர்த்தி சொன்னது போல கோடீஸ்வரர் சக்கரவர்த்தியின் மகனை தேட தனி டீமே உள் இறங்கி இருந்தது. ஆனாலும் அன்றைய நாள் பகல் போய் இரவு வந்தும் அவர்களால் முகுந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. சக்கரவர்த்தி தன் செல்வாக்கை பயன்படுத்தி நிறைய உள்ளூர் மனிதர்களை உள்ளே அனுப்பி தேட வைத்தார். ஆனாலும் அவருக்கு எந்த நல்ல செய்தியும் வரவில்லை. அதற்கு பதிலாக பிண குவியல் தான் மலைமேல் இருந்து கீழே வந்து கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக… அவருள் பயம் மூண்டெழ தொடங்கியது.
அதே நேரம்
அந்த குறுக்கிய மேஜையின் அடிபகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருந்தனர் முகுந்தனும் ஓவியாவும், இப்போது மட்டும் மண்குவியல் நகர்ந்து அவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இருவருமே மூச்சு முட்டி மரணித்திருப்பார்கள். நல்ல வேளை பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் ஒரு பக்க குவியல் நகர்ந்து வழிவிட மிக மிக சிரமப்பட்டு இருவரும் நகர்ந்து வெளியே வந்தனர்.
நகர்ந்து அவர்கள் வெளிவந்த இடத்தில் சுவர் மொத்தமாக உடையாமல் கூரையை தாங்கி நின்று கொஞ்சம் இடத்தை இவர்களுக்காக கொடுத்து நிற்க, பிடித்து வைத்திருந்த மூச்சை இருவரும் ஆசுவாசமாய் வெளிவிட்டனர். பெண்ணவளின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. வாழ்வா? சாவா? என்று கூட தெரியாமல் ஒரு இருட்டுக்குள் மூச்சடைத்து கிடந்த அவளுக்கு இந்த குறுகிய இடம் கிடைத்ததும் ஏதோ ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான் அவளை முகத்தில் புது பொலிவை தந்திருந்தது.
புரியாமல் அவளை பார்த்தான். அந்த கண்கள் கக்கிய மொழி புரிந்ததும்,
“ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத. இரவா பகலா என்று கூட தெரியாத இந்த இடம் ஒண்ணும் பத்திரமான இடமா தெரியல. இதுல இருந்து தப்பி போகும் வழியும் புலப்படல. என்ன ?… கொஞ்சம் சுவாசிக்க முடியுது அவ்வளவு தான்.”
என்றதும் மூச்சை படுவேகமாக விட்டவள்,
‘முடியுதுல. அந்த இடத்தை விட இது சேப்டி தானே.”
என்றவாறு இமையை நொடி பொழுது சிமிட்ட,
“ம்… அது என்னவோ உண்மை தான்.”
என்றவன் சுற்றி பார்வையை சுழல விட்டான்.
அவளோ சோர்ந்து போய் பக்கத்து சுவரில் சாய்ந்து அமரப் போனாள்.
அந்த நேரம் சரியாக முகுந்தனின் கண்கள் அதை கவனித்தது.
இவர்கள் அந்த மேஜையின் அடியில் இருந்து நகர்த்து வந்த நேரம் மேலே இருந்த ஒரு காங்கிரீட் துண்டை சுமந்து நின்ற தூண் மெல்லமாய் நகர்ந்திருக்க, இதுவரை அது தாங்கி கொண்டு இருந்த அந்த காங்கிரீட் துண்டை இப்போது கீழே நழுவ விட ஆரம்பித்திருந்தது.
அந்த காங்கிரீட் துண்டையும், அது விழும் பகுதியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஓவியாவையும் பார்த்தான். ஒரு நொடி தான்.
அவன் பதறியடித்து கொண்டு ஒடி வந்த போது, அது பிடிமானம் இல்லாமல் கீழ்நோக்கி அதிவேகமாக வந்தது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



