மனிதநேயம் மற்றும் ஒற்றுமை குறித்த தமிழ் கட்டுரை
வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே நின் விளையாட்டெல்லாம்
மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள் போல லயங்கீற்றம்மா…
என்ற தாயுமானவர் மதத்தின் இயல்பையும் இறைவன் ஒருவனே என்பதையும் அழகாக இந்த வரிகளில் படம் பிடித்து காட்டுகிறார். வேறுபட்டு நிற்கின்ற ஒவ்வொரு சமயத்தையும் நீ உள் சென்று ஆராய்ந்து பார்த்தால் இறைவனின் மாட்சியை தவிர மாறுப்பட்ட ஒன்றை உன்னால் காண முடியாது என்பதையே தாயுமானவர் அவ்வாறு பாடியுள்ளார்.
பல்வேறு இடங்களில் தோன்றினாலும் ஆறுகள் முடிவில் கடலில் தான் கலக்கின்றன. அது போல சமயங்கள் பல சூழலில் உருவாகினாலும் அவற்றின் முடிவு இறைவனில் கலப்பதேயாகும்.
என்ற கருத்தை தான் சான்றோர் பலரும் சொல்லி சென்றுள்ளனர்.
அன்பும் அறமும் இரக்கமும் இல்லாத சமயம் தான் இப்புவியில் உண்டோ? அன்பே சிவம் என்பான் இந்து. நான் அன்பு செய்வது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள் என்றார் கிறிஸ்து. இறைவனையே அன்பாகவும் அருளாகவும் வர்ணிப்பவர்கள் இஸ்லாமியர்கள். எந்த சமயத்தை நோக்கினாலும் அன்பே முதலாகவும் முடிவாகவும் கருதப்படுகிறது.
ஆனால் இன்று மத தலைவர்கள் அன்பு என்ற கொள்கையை மறந்து மதத்தை கூறியே மனித கோடியை பிரிக்கிறார்கள். மதத்தை காட்டியே வன்முறையை தூண்டுகிறார்கள். மதத்தை ஊட்டியே மானிட உள்ளங்களை திசை திருப்புகிறார்கள்.
அன்பு என்ற அச்சாணியில் சுழல வேண்டிய மத உணர்வுகள் வன்முறை என்ற அச்சாணியில் சுழன்று கொண்டிருக்கிறது என்பது தான் வேதனையான விசயமாக இருக்கிறது.
இதை தான் கவிஞர் மேத்தா அழகாக கூறுவார்.
இந்தியனே இந்தியனே
முதலில் நீ இருக்க ஒரு இடம் தேடு
ஆண்டவருக்கு வேண்டிய இடத்தை
அவர் தேடி கொள்வார்.
பாவம் கடவுளை பற்றி
அதிகம் தான் கவலைப்படுகிறீர்கள்
கடவுளோ
மனிதர்களை எண்ணியன்றோ
மனம் வருந்துகிறார்.
பக்தியை காட்டினால்
பரமன் மகிழ்வான்.
நீங்கள் உங்கள்
சக்தியை காட்டுகிறீர்கள்.
ஆண்டவர் சங்கடப்படுகிறார்.
உடலில் ரத்தம் ஒட வேண்டும்
என்பது தான் இறைவன்
நமக்கு இட்ட கட்டளை.
தெருவில் அதை ஓட விடுவது
தெய்வ நிந்தனை.
எந்த மத கொடியையும்
ஏந்தி கொள்ளுங்கள்.
ஆனால் அதை,
ரத்தத்தில் கழுவி
அழுக்காக்காதீர்கள்…
அவர் அவர் மதக்கொடிகள்
அசையட்டும் அழகாய்,
வெறியெறும் நெருப்புக்கு
விசிறியாய் அல்ல.
சளைத்தவன் வாழ்விற்கு
கலங்கரை விளக்காய்…
ஒவ்வொரு மதமும்
உபதேசிப்பதென்ன?
அன்பை அல்லவா?
அந்த அன்பை அடகு வைத்தா
ஆயுதம் வாங்குவது.
இன்னொரு நவகாளியை
இந்தியா தாங்குமா?
அவர் அவர் விருப்பப்படி
அனைவருக்கும் உரிமையுண்டு.
கோவில்களில் கும்பிடலாம்.
தேவாலயங்களில் தியானிக்கலாம்.
மசூதியில் தொழலாம்.
ஆனால் எவனது விருப்பப்படியும்
எவனுக்கும் உரிமை இல்லை.
மதவெறி வாளால் மற்றவர்களை
கொல்வதற்கு,
கங்கையும் காவிரியும்
கை கலந்து கொள்வதில்லை.
கடலில் தான் கலக்கின்றன.
பலம் கொண்ட யானைகள்
மோதி கொண்டால் நடுவில்
அகப்பட்டு நசுங்கி போனது
எளிய மக்களின் வாழ்க்கை
அல்லவா?
இந்துவே திரண்டு வா என்றோ ?
கிறிஸ்தவனே கிளம்பி வா என்றோ ?
இஸ்லாமியனே எழுந்து வா என்றோ ?
எழுப்பாதீர் முழக்கத்தை.
மனிதனே இணைந்து வா என்று
முழங்கி மானிட சமுதாயத்தை
இனியேனும்
மகத்துவப்படுத்துங்கள்.
தீபங்களே நீங்கள்
தெரிந்து கொள்ளுங்கள்.
திரிகள் மட்டுமே கருகி
கொண்டிருக்கின்றன.
தூண்டுகோல்கள் சுகமாய்
தூங்குகின்றன…
இந்தியனே இந்தியனே
முதலில் நீ இருக்க
ஒரு இடம் தேடு…
என மதவெறி கொண்ட மானிட சமுதாயத்தில் மனித உள்ளங்களுக்கு மேத்தா மதத்தின் தூய்மையை படம் பிடித்து காட்டி மதத்தின் பேரால் மனிதனை வதைப்போருக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார். இந்த உண்மையை புரிந்து நாம் அனைவரும் இனியேனும் மதம் என்ற மனதை மயக்கும் மாய மந்திர சொல்லுக்கு குட் பை சொல்லி விட்டு மனித உள்ளங்களை இறைவனில் உண்மை உள்ளவர்களாகவும் நேர்மையான எண்ணம் கொண்டவர்களாகவும் வாழ்வை அழகாக்க இன்றே முடிவெடுப்போம். இந்திய தேசம் மதசார்பற்ற மண் என்பதை உலகுக்கே பறை சாற்றுவோம்.
முற்றும்.
Mathanallinakkam Katturai



