வணக்கம் வாசகர்களே!
24 மணி நேரத்தையே மறக்கும் அளவு முருகனின் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? அவனுக்கு தெரியாமல் அவனுள் நடக்கும் மாற்றம் என்ன?
முருகனின் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன?
என்ன சமாதானப்படுத்தியும் அவன் மனம் சமாதானமாக மறுத்தது. இப்படி எத்தனை நாள் இரவு உறங்காமல் வேலை செய்து இருக்கிறேன். எவ்வளவு நேரம் பிந்தி வந்து தூங்கினாலும் ஆறு மணி என்றால் அலாரம் கூட இல்லாமல் விழிப்பு வந்து விடுமே. என்று… எப்படி?… அதுவும் பகல் வேளையில் கூட தூக்கம் வந்திருக்கிறது. அதுவும் தொடர்ச்சியாக 24 மணி நேரம்.
யோசனையோடு தூணில் சாய்ந்தவன் அருகில் வந்தான் குள்ளன்.
“என்னடா நீ வந்ததுல இருந்தே நானும் பாக்குறேன். நீ சரியாவே இல்ல. செல்லம்மாவை பார்த்துட்டு வந்த சந்தோசம் துளி கூட உன் முகத்துல இல்ல. சும்மா அவளை பார்த்துட்டு வந்தாலே மணிக்கணக்கா அவ புராணமே பாடுவா. அவா அப்படி பார்த்தா… இப்படி சிரிச்சா… அப்படின்னு இருக்க விடாம பேசுவா. இப்போ தனியா போய் பேசிட்டு வந்து இருக்கா. வந்ததுல இருந்து வந்து சொல்லுவா சொல்லுவான்னு பாக்குறேன். வாயைத் திறக்காமல் இப்படி தனியா வந்து உட்கார்ந்துட்டா.”
“இதுல வேற அதிசயமா ஒரு நாள் முழுசும் காணாமல் போய் இருக்கா. என்னடா ஆச்சு. செல்லம்மா எதுவும் மோசமா பேசிட்டாளா? நீ இனி என் பின்னால் எல்லாம் சுத்தாதனு பயங்கரமா திட்டிட்டாளா. இல்ல அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து இருக்காங்கன்னு ஏதாவது சொன்னாளா?…”
குள்ளன் கேட்க கேட்க எதுவும் பேசாமல் அவனை மலக்க மலக்கப் பார்த்தான் முருகன்.
“சொல்லுடா. எதுவோ நடந்திருக்கு. இல்லன்னா இவ்வளவு குதித்து விட்டு சந்தோசத்தோட போனவன் இப்படி பேய் அறைந்தது போல வந்திருப்பியா?”
எனக் குள்ளன் ஆதரவாக அவன் தோளை தொட முருகன் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தான். அவன் கண்களில் தெரிந்த கனிவையும் முகத்தில் தெரிந்த சோகத்தையும் பார்த்த முருகன் இதுவரை மனதுக்கு குழப்பிக் கொண்டு இருந்த அத்தனையும் சொல்ல தொடங்க பறட்டையும் அவன் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்னடா சொல்றா?”
“ஆமா குள்ளா. இது எப்படி நடந்தது என்று தெரியல. ஒரே குழப்பமா இருக்கு.”
“இதுல என்னடா குழப்பம். அண்ணாத்த காதல் மயக்கத்திலே கனவு கண்டுட்டே படுத்து இருப்பார். அப்படியே தூங்கி இருப்பார். அதுலயும், கனவுல நம்ம அண்ணி வந்து இருப்பாங்க. அதை நிஜம்னு நம்பி அண்ணாத்த டூயட் பாட ஆரம்பிச்சிருப்பாரு. பல வருஷத்துக்கு அப்புறம் கிடைத்த அன்பாச்சே. அண்ணியை பிரிய மனசு இல்லாம அப்படியே கனவுல வாழ்ந்திருப்பாரு…”
பறட்டை கிண்டலும் கேலியுமாக வம்புக்கு இழுக்க…
“உதைபட போற என்கிட்ட…”
“யோசிச்சு பார்த்தா பறட்டை நக்கலா சொன்னாலும் அப்படியே நடத்திருக்கலாம் தானேடா…”
“என்ன குள்ளா நீயுமா?”
“நாம அனாதைங்க அன்பு செலுத்த நமக்குன்னு யாரு இருக்கா சொல்லு. யாராவது ஒருத்தர் கொஞ்சம் அன்பா பேசினாலே உருகிடுவோம். அப்படி இருக்க, இதுவரை ஏங்கிட்டிருந்த அன்பு கிடைத்ததும் நீ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருப்பா. அவளையே நினைச்சுட்டு உட்கார்ந்தவன் தூங்கி இருப்பா. அதுலயும் ஒரு வாரம் கடுமையா வேலை இருந்ததே அதெல்லாம் சேர்த்து நீ அப்படி அசந்து தூங்கி இருப்பா. இதுக்கா மூஞ்சியை உம்முன்னு தூக்கி வச்சுட்டு இருக்கா. விடு. நாம பேசி செல்லம்மாவை புரிய வைக்கலாம். மனசை போட்டு குழப்பாமல் நீ வேலையை பாரு.”
என அவனை எழுப்பி விட, முருகன், குள்ளளோடு வந்து இரும்பு கம்பியை அடுக்க ஆரம்பித்தான்.
அடுத்து வந்த ஒரு வாரமும் செல்லம்மாவின் பாராமுகத்தாலும் சிடுசிடுப்பாலும் சென்றது. என்றாலும் முருகன் அவளை விடுவதாக இல்லை. போகும் இடம் எல்லாம் அவள் பின்னே வளைய வர ஆரம்பித்தான். அவளும் அவனை போக்கு காட்டத்தான் செய்தாள்.
எவ்வளவோ ஆசையோடு எதிர்பார்ப்போடு அந்த மலைக் கோயிலில் அவனுக்காக காத்திருந்தாள். நேரம் ஆக ஆக கூட அவன் வரமாட்டான் என அவள் நினைக்கவில்லை. காரணம் முருகன் வேலையில் எவ்வளவு சின்சியர் என்று அவளுக்கு தெரியும். மாடா கிடந்து உழைப்பவனை பார்த்த பின் தான் அவன் மேல் அவளுக்கு நேசம் வரவே ஆரம்பித்தது.
அதனால்தான் இன்றும் தன் பணியை முடித்துவிட்டு வர நேரம் ஆகுது என்று நினைத்துக் கொண்டு காத்து தான் இருந்தாள். ஐந்து மணிக்கு டியூட்டிக்கு போய்யாக வேண்டும் என்ற நிலையிலும், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் என காத்திருந்து மணி ஐந்தையும் தாண்டி விட்டது. ஆனாலும் முதல் சந்திப்பு என மறுபடியும் ஒரு மணி நேரம் காத்திருந்தாள்.
மாலை நேர பூஜையும் முடிந்து அனைவரும் கீழே இறங்கிவிட்டனர். லேசாக இருட்ட ஆரம்பிக்க, இதற்கு மேல் காத்திருப்பதில் பலன் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை. அதில் வேறு இந்த மலைக்கோயில் இருட்டியபின் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் பூமியை இருள் கவ்வி கொள்ளும் முன் மலையை விட்டு இறங்கிவிட வேண்டும். என்ற அவசரத்தில் மிகவும் சோர்வோடு மனமின்றி தான் கீழே இறங்கினாள். இறங்கும்போது கூட எதிர் திசையில் முருகன் ஓடி வந்து விடமாட்டானா என மனது துடித்தது.
ஆனால் அவள் மனம் கவர்ந்தவன் வரவே இல்லை. ஒரு கால் மணி நேரம் மலை அடிவாரத்தில் கூட நின்று பார்த்து விட்டாள். ஆனால் அப்போதும் அவன் வராது போகவே மிகவும் மன வலியோடு அதிக படியான கோபத்தோடும் தான் ஹோட்டலுக்கு விரைந்தாள்.
ஆனால் அங்கும் அவள் மனவலி புரியாமல் முதலாளி கண்ணா பின்னா என திட்டு விழ அவளின் மொத்த கோபமும் முருகன் மேல் பாய்ந்தது. உள் சென்று ஒரு மூலையில் அமர்ந்து ஓவென அழுது தீர்த்தாள்.

ஆனால் மறுநாள் வந்து அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு 24 மணி நேரத்தை உறக்கத்திற்கு தாரை வார்த்து கொண்டு பாவமாக வந்து நின்றானோ அன்றே அவன் மேல் கொண்ட கோபம் லேசாக மட்டுப்பட்டது. அதிலும் எத்தனை திட்டினாலும் வாங்கிக் கொண்டு அவளிடம் ஆசையாக பேசி நின்ற நொடியே அவள் மறுபடியும் சரண் அடைந்து இருந்தாள்.
ஆனாலும் வீம்பு. முதல் முறையாக கோயிலுக்கு வர சொன்னா வரலல . அவரை கொஞ்சம் சுத்த விடணும் இல்ல எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்குவான். என்று அவனைப் பார்த்தால் பார்க்காதவள் போல் போக ஆரம்பித்தாள். ஆனால் கள்ளி அவன் தன்னை பார்க்கிறானா? என ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
அதிலும் அவனைக் கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டு வர அவன் வருத்தத்தில் தலைகுனிவதை கண்டதும் உள்ளத்துக்குள் சிரித்துக் கொண்டாள்.
“ வேணும். உனக்கு இது தேவைதான். முதல் நாளே என்னை அழ வச்சால்ல. நல்லா வருத்தப்படு.”
என மனதுக்குள் கூறிக் கொண்டாள்.
ஆனாலும் நிறைய நாள் அவளால் அவனை போக்கு காட்ட முடியவில்லை. அதற்கு காரணம் குள்ளனும் பறட்டையும் தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் முருகனுக்காக வந்து கெஞ்சியதாலும் முருகனின் அப்பிராணி முகத்தை பார்த்து அவன் படும் அவஸ்தை புரிந்து கொண்டதாலும் மறுபடியும் செல்லம்மா இரண்டு நாளாய் முருகனை பழையபடி நோக்க ஆரம்பித்தாள். பார்த்தால் லேசாக சிரிக்கவும் ஆரம்பித்தாள்.
பின்னால் வரும் அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு ஒரு நமட்டு சிரிப்போடு தான் ஹோட்டலுக்குள் நுழைவாள். வேலை முடிந்து வெளிவந்ததும் அவள் கண்கள் தேடுவது அவனைத்தான். ஒருவேளை இல்லை என்றால் தோழியிடம் பேசுவது போல் நின்று முருகன் ஆக்கர் கடைக்குள் இருக்கிறாரா என பார்த்துவிட்டு தான் செல்வாள்.
இப்படி இரண்டு வாரம் போக்கு காட்டியவள் அன்று ஹோட்டலில் வேலை முடிந்து வெளிவரும் போது எதிர் சுவரில் ஒற்றை காலை தூக்கி வைத்துக்கொண்டு கைகள் இரண்டையும் முன்னால் கட்டிக்கொண்டு ஓட்டலையே பார்த்து நின்ற முருகனைப் பார்த்ததும் மனமிறங்கி மெதுவாக அவனை நோக்கி வந்தாள்.
கோபம் தீர்ந்து பல நாளுக்கு பின் தன்னை தேடி வரும் செல்லம்மாவை ஆசையோடு பார்த்தான். ஒரு நொடி அவனை நின்று பார்த்தவள் லேசாக சிரித்துக்கொண்டு,
“இந்தப் பார்வைக்கு ஒரு குறைவுமில்ல. பார்வையிலேயே மனதை இழுக்குறது…”
என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் ஒரு நமட்டு சிரிப்போடு…
“நாளைக்கு எனக்கு பிறந்தநாள்.நாளைக்கும் அன்று போல சொதப்பிடமாட்டியே?”
“என் செல்லம்மாவோட பிறந்தநாள் சொதப்புவேனா? தூள் கிளப்பிடமாட்டேன்.”
“எப்பவும் பேசுறதுல மட்டும் தெளிவா இரு. செயல்ல ஒரு சுக்கும் இருக்காது. பாக்குறதும், பின்னால சுத்துறதையும் மட்டும் சரியா செஞ்சிடு. ஆனால் ஆசையா எதிர்பார்ப்போட காத்திருந்தா வந்து துலைச்சிடாத.”
“இந்த முறை பாரு. அய்யா எப்படி பண்ணி அசத்த போறார்னு.”
“பார்ப்போம். பார்ப்போம். நாளைக்கும் பிறந்தநாளுக்கு மறுநாள் வந்து விஷ் பண்ணாம இருந்தா சரிதான்.”
“ஒருமுறை ஏதோ தவறுதலா நடந்துடுச்சி. அதுக்காக எப்பவும் அப்படியேவா பண்ணுவேன். நான் எங்க வரணும்னு மட்டும் சொல்லு. நீ வருவதற்கு முன்னாலேயே வந்து நான் அங்க உனக்காக காத்திருக்கேன்.”
“நாளைக்கு நான் காலையில ஏழு மணிக்கு புறப்பட்டு இங்க வந்துடுறேன். நீ பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு. நாம ரெண்டு பேரும் சேர்ந்து கோயிலுக்கு போலாம்.”
“ம்…ம்…”
“நாளைக்கு ஹோட்டலுக்கு லீவு சொல்லிட்டேன். நாளை முழுசும் உன்கூட தான். எங்க போலாம்னு நீயே முடிவு பண்ணி பக்கா பிளானோட வந்து சேரு.”
“ம்…ம்…”
“நாம வாழற காலம் வரை மனசுல பசுமையா இந்த நாள் இருக்கிற அளவு பார்த்து நிதானமா யோசிச்சு நாம எங்க போலாம்னு தீர்மானிச்சிட்டு காலையில எனக்காக வெயிட் பண்ணு.”
“ம்… சரி… புள்ள.நாளைக்கு நீயே அசந்து போகிறது மாதிரி முழு நாளும் உன் கூட இருந்து அசத்த போறேன் பாரு. ஒவ்வொரு நொடியும் நீ அனுபவிச்சு வாழ்வது போல மாத்திடுறேன் பாரு. வாழ்க்கையில இந்த பிறந்த நாளை நீ என்றுமே மறக்காதது போல செய்றேன் பாரு.”
“சொதப்பிடாதடா. ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன்.”
“சே… சே…அப்படியெல்லாம் பண்ணுவேனா? கலக்கிட மாட்டேன்.ஒவ்வொரு நொடியும் சந்தோஷத்துல திணறடிச்சிட மாட்டேன். இந்த ஒரு நாளுக்காக எத்தனை நாள் காத்திருக்கேன் தெரியுமா? சரி நாளைக்கு சந்திப்போம்.”
என முருகன் சொல்ல…
சிரித்துக் கொண்டே செல்லம்மாள் விடைபெற்றாள். அவள் கிளம்பியதும் மிகுந்த சந்தோஷத்தோடு குதித்துக் கொண்டு விசில் அடித்தவாறு கடைக்குள் நுழைந்தான் முருகன்.
“என்ன அண்ணாத்த பழையபடி முகத்துல சந்தோசம் தாண்டவம் ஆடுது…”
என கம்பியை தூக்கி போட்டவாறு பறட்டை சொல்ல, முருகனை நிமிர்ந்து பார்த்த குள்ளன்,
“முருகன் முகத்துல சந்தோசமா அப்படின்னா நம்ம செல்லம்மா அவனிடம் வந்து பேசி இருப்பா. சரிதானே முருகா ?”
எனக் கேட்க, வெட்கத்தில் நெளிந்தவன்,
“சரியா சொன்னா குள்ளா? எப்படியோ செல்லம்மா கோபம் குறைஞ்சி என்கிட்ட வந்து பேசிட்டா.”
“இந்த அளவு முகத்தில் சிரிப்பு பொங்குதே அப்படி என்ன பேசினா ?”
“நாளைக்கு அவளுக்கு பிறந்த நாளாம் ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாம்ணு கூப்பிடுறா?”
“ஓ!… அந்த அளவு அண்ணி கூட நெருங்கிட்டியா?”
“பாவமா ஒரு முகத்தை வச்சுட்டு நல்லா தாண்டா ஏமாத்துறா? “
என பறட்டை சிரிக்க,
“முருகா ரொம்ப ஆசையோட சொல்லி இருக்கா. நாளைக்கு எதுவும் பண்ணி சொதப்பிடாத. காலையிலேயே ரெடியாகி நேரா அவ சொன்ன இடத்துக்கு போயிடு.”
“ம்…ம்…”
“அப்புறம் கோயிலுக்கெல்லாம் போயிட்டு பத்து மணின்னா கடைக்கு வந்துடு. அதுவரை முதலாளியை நாங்க சமாளிச்சுக்குறோம்.”
“இல்ல குள்ளா.நாளை ஐயாவுக்கு முழு லீவு.”
“முழு லீவா?”
“ஆமா …”
“பிறந்தநாளை ஒரு நாள் முழுசுமா கொண்டாடப் போறா. கோயிலுக்கு போயிட்டு அந்த புள்ள ஹோட்டலுக்கு போகப்போகுது நீ எதுக்கு தனியா ?”
“யார் சொன்னா தனியான்னு. அவா முழுசும் என்கூட இருக்க விரும்புறா. முழு நாளும் லீவு எடுத்து இருக்கா என்னையும் எடுக்கச் சொல்லி இருக்கா.”
“நாளை முழுசுமா? அப்படின்னா ரெண்டு பேரும் …”
“ம்…எங்க போகணும்னு கூட என்னதான் முடிவு பண்ண சொல்லி இருக்கா.”
“உன்ன எவ்வளவு நம்பினா அப்படி சொல்லி இருப்பா சமாய் டா சமாய் …”
குள்ளன் சந்தோஷத்தில் அவன் தோளை தட்ட…
“இது இரண்டாவது அவள் கொடுக்கிற சந்தர்ப்பம் அவளோட மனசு கோணாம ரொம்ப சந்தோஷமா வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன். எந்த இடங்களுக்கு கூட்டிட்டு போகலாம்னு சொல்லு பறட்டை.”
“ திற்பரப்பு போறியா? இது மழை சீசன்ல சூப்பரா என்ஜாய் பண்ணலாம்.”
பறட்டைச் சொல்ல…
“அவ்வளவு தூரம் எல்லாம் வேணாம்…”
“அப்புறம் பக்கத்துல குற்றாலம் போறியா?”
“ஏண்டா உனக்கு அருவியை தவிர வேற இடமே தெரியாதா?”
“அவனுக்கு பல நாளா இந்த இடம் எல்லாம் சுத்தி பார்க்கணும்னு ஒரு ஆசை. அதை தான் இப்படி சொல்றான்.”
“டே…நீயும் நானும் போகும் இடமா சொல்லாத… நானும் செல்லம்மாகவும் போகும் இடமா சொல்லு. அவளிடம் நான் மனம் விட்டு பேசணும்னு நினைக்கிறேன். அப்படி ஒரு இடமா சொல்லு.”
முருகன் இப்படி சொன்னதும் மூன்று பேரும் யோசிக்க தொடங்கினர். ஆளாளுக்கு ஒவ்வொரு இடமாக சொல்ல, எதுவும் திருப்தியாகாமல் போகவே.
“முருகா நாம செலக்ட் பண்றத விட செல்லம்மாட்டையே கேட்டுடு.”
“அவா என்னை கேட்டா… நான் எப்படி அவளை கேட்கிறது?.”
“பொண்ணுங்களோட சைக்காலஜி உனக்கு தெரியலடா. நீ எவ்வளவு நல்ல பிளேஸ்ஸா செலக்ட் பண்ணி சொன்னாலும் அவங்க அதை ஏத்துக்க மாட்டாங்க. நீ அதையே அவங்ககிட்ட சொன்னான்னு வை . நம்மளை நம்பி கேட்டுட்டாருன்னு பூரிப்போடநல்ல இடமாவும் சொல்லுவாங்க. நம்ம கூட நெருங்கியும் வருவாங்க. போதாக்குறைக்கு அவர் என்ன கேட்காமல் எதுவும் செய்யமாட்டார் என்று பெருமையும் பீத்திப்பாங்க.”
“என்ன பறட்டை … பொண்ணுங்களோட சைக்காலஜியை ரொம்ப நல்லா தெறிஞ்சு வச்சிருக்கிறா?”
குள்ளம் சொல்ல பறட்டை நெளிந்தான். கடைசியாக செல்லம்மாவை கேட்டு அவள் பிடித்த இடம் பார்த்து அவளை அழைத்துச் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
மறுநாள் 5 மணிக்கு விழித்துக் கொண்டவன் அவசரமாக எழுந்து குளித்து முடித்து மிக உற்சாகத்தோடு வாயில் சினிமா பாடல் ஒன்றை முணுமுணுத்தவாறு புறப்படத் தொடங்கினான். தலைவாரி பவுடர் பூசி கொண்டு தன் காதல் பைங்கிளிக்காக நேற்று கடை கடையாக ஏறி தேடி செலக்ட் செய்த பரிசு பொருளை தூக்கிக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தான்.
சுவற்றில் மாட்டியிருந்த வாட்ச்சை எடுத்து கையில் கட்டிக் கொண்டான். அதன் பின் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடக்க தொடங்கினான்.
இதுவரை இருந்த முருகன் முற்றிலும் மாறி புதிய முருகனாக பரிணாமம் பெற்றிருந்தான். அன்று போல் அவன் செயல்கள் அனைத்தும் மாறி போயின. இதுவரை சினிமா பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த அந்த வாய் இப்போது பற்களின் கடிப்பால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள, கண்கள் கோவைப்பழம் போல சிவக்கத் தொடங்கியது. நடையில் இப்போது புதியதொரு மிடுக்கு வந்து ஏறி அமைந்தது. முன்னால் வெறித்தவாறு நடந்தவன் செல்லம்மா சென்ற அந்த பஸ் ஸ்டாப்புக்கு வந்தான்.
செல்லம்மா இவனுக்கு முன்னால் வந்து அவனுக்காக காத்திருந்தாள்.
வீறுநடை போட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி அவசரமாக வந்து கொண்டிருந்த முருகனைப் பார்த்ததும் அவள் உதடு புன்னகையால் விரிந்தது. அதிலும் அவன் கையில் கிப்ட் பாக்ஸை கண்டதும்.
“பரவாயில்ல. பிறந்தநாளுக்கு கிப்ட் எல்லாம் ப்ரெசென்ட் பண்ணனும்னு தோணி இருக்கே.பொழச்சிக்குவா செல்லம்மா.”
எனத் தன்னைத்தானே தட்டி கொடுத்துக் கொண்டாள்.
தன்னை நோக்கி வரும் அவனை ஆசையோடு செல்லம்மா பார்த்து நிற்க, இது எதையும் பொருள்படுத்தாதவன் அவள் இருப்பதை கூட கவனியாதவன் போல முன்னோக்கி வீறிட்டு நடந்தான்.
அவள் குரல் கொடுக்க கொடுக்க காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல வீராவேசமாக முன்னோக்கி விரைந்தான். பின்னால் ஓடி வந்த செல்லம்மாவை கூட அவன் சட்டை செய்யாமல் ஓடத் தொடங்க அவன் செயலை பார்த்த செல்லம்மா விக்கித்து நின்றாள்.
போகும்போது செல்லம்மாவின் கண் எதிரே அவன் அவளுக்காக ஆசையாக வாங்கிய பரிசு பொருளையும் சாலை ஓரத்தில் தூக்கி எறிந்தான். அதுவும் அத்தனையும் அவள் கண் எதிரே நடந்ததால் செல்லம்மாவுக்கு கோபம் கொழுந்துவிட்டு எரிய, அவன் போகும் திசையை வெறித்துப் பார்த்து நின்று கொண்டிருந்தாள்.
திகில் தொடரும்…
Tamil Thriller Novel



