வணக்கம் வாசகர்களே!
பிடிக்காத இடத்திற்கு வருகிறாள் ஓவியா. அவன் முன் தன் குழையாமல் திடமாக நிற்பாளா? அவள் உறுதிமொழியை அவளாலேயே நிறைவேற்ற முடியுமா? தெரிஞ்சிக்க வாசிக்க ஆரம்பிங்க
அவள் உறுதிமொழியை அவளாலேயே நிறைவேற்ற முடியுமா?
மறுநாள் முகுந்துக்கு தலைவலியை கொடுக்காமல் குறிப்பிட்ட நேரம் அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஓவியா. உள் நுழைந்தவளை கண்டதுமே ஒரு கோணலான சிரிப்பை உதிர்த்த சுந்தரி,
“பரவாயில்லயே. பத்து நிமிஷத்துக்கு முன்னாலயே வந்துட்டியே…”
என்றவளை பார்த்து ஒரு புளித்த சிரிப்பை உதிர்த்தவள்,
“அப்புறம் நீங்க பிடிச்சி அந்த நெடுமரத்தோட முன்னால விட்டுட கூடாதுல. அதான் காலையில சாப்பிடாம கையில எடுத்துட்டே கிளம்பி வந்துட்டேன்.”
என்றவாறு உள் நுழைந்தவள் நேரே தன் அறைக்கு தான் விரைந்தாள். போகும் போதே அவளை அறியாமல் அவள் கண்கள் முகுந்த்தின் கண்ணாடி அறையை ஒரு முறை நோட்டமிட்டது. ரோலிங் செயர் காலியாக தான் கிடந்தது.
“முசுடு இன்னும் வரல. போயும் போயும் இவனுட்ட வந்து மாட்டுனேன் பாரு. மூணு நாளே அந்த ஹோட்டல்ல மூஞ்சு முட்டி போச்சு. இனி வாழ்க்கை முழுசும் இவனோட எப்படி குப்பை கொட்ட போறேனோ?… இதுல அதோட அராஜகம் தான் தாங்க முடியல.”
சலிப்பாக வந்தவள் தன் செயரில் அமர, உள்ளே நுழைந்தான் ராஜேந்திரன்.
“குடோன்ல்ல பொருள்கள் வந்து இறங்கியிருக்கு மேடம். ஒரு முறை வந்து பார்த்தீங்கணா. மொத்த சரக்கையும் குடோன்ல்ல இறக்க சொல்லிடுவேன்.”
“ஓ.கே. நான் வரேன். நீங்க போங்க…”
என்றவள் அவன் கிளம்பிய அடுத்த நொடியே அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். இவள் அவசரமாக வெளியேறுவதை தன் அறைக்குள் நுழைய இருந்த முகுந்த் பார்க்க…
“வந்ததும் வராததுமா இவ்வளவு அவசரமா எங்க கிளம்புறா?”
யோசனையோடே அவள் போன திசையில் நகர, போகும் பக்கம் எல்லாம் வெறிச்சோடி கிடக்க கண்டதும், மறுபடியும் முன்னோக்கி நகர்ந்தான். பணிகளுக்கான ஆட்கள் யாருமின்றி அந்த இடம் வெறுமையாய் இருக்க கண்டதும் குழப்பமாக மறுபடியும் முன்னோக்கி நகர்ந்தான். அவள் போன இடம் தெரியவில்லை. குழப்பமாக திரும்பியவன் கண்களில் தூரமாய் குடோன் பக்கத்தில் ராஜேந்திரனோடு நின்ற ஓவியா தெரிய, தன் வரவை தெரியப்படுத்த விரும்பாமல் மறைந்து மறைந்து அவர்கள் இருவரும் நின்ற இடத்திற்கு வந்தான்.
“செக் பண்ணிட்டேன் ராஜேந்திரன். நேற்று வேணி மேடம் காட்டிய முதல் குவாலிட்டி சில தானியத்துல இல்லாதது போல சந்தேகமா இருக்கு. இந்த ஒரு முறையும் வேணி மேடம் வந்திடட்டும். அப்புறம் குடோன்ல்ல இறக்கலாம்.”
“இல்ல மேடம். இது முதல் குவாலிட்டி தான். நான்கு வருஷமா இறக்குறேன் எனக்கு தெரியாதா?”
“ தெரியும். தெரியாது. இது மேட்டர் இல்ல. இது குழந்தைகளுக்கான உணவு. சிறு சந்தேகம் மனசுல வந்தாலும் அதை கிளீயர்படுத்திக்க வேண்டியது நல்லது. வேணி மேடம் வந்திடட்டும்.”
என்றவள் நகரப் போக,
“இருங்க மேடம். அவங்க வருகிறது வரை லோடுமேன் நிற்க முடியாது. அவங்க ஸ்டீல் பேக்டறிக்கு போகணும். நீங்க புதுசுல. அதனால உங்களுக்கு தெரியல. அதுதான் நான் சொல்றேனே மேடம். இறக்க சொல்லுங்க. இதுல ஒரு சைன்னை போட்டுட்டு நீங்க கிளம்புங்க.”
கொஞ்சம் அதிகாரமாகவே அவன் சொல்ல,
“என்ன சார் விளையாடுறீங்களா? இது என்னோட வேலை. எனக்கு சந்தேகமா தோற்றிய பின் அந்த விசயம் முதலாளி வரை போகாம குடோன்ல்ல இறக்க விடமாட்டேன்.”
என வெடித்து கொண்டு அங்கிருந்து நகர, போகும் அவளை விழி அகலாமல் பார்த்து நின்றான் முகுந்த்.
“ம்… பரவாயில்ல. நமட்ட தான் குழந்தை போல சீனை போட்டிருக்கா. வேலையில தைரியமா செயல்பட கூடிய பொண்ணு தான். இருந்தாலும் ஒரு நாளுல எப்படி இவ்வளவு தெளிவா பேசுறா? நாலு வருஷமா இவன் தான் லோடு கொண்டு வந்து சேர்க்கிற வேலையை பாக்குறான். தரத்துல இதுவரை எந்த குறைவும் வந்தது இல்லை. இவள் வந்த நாள் எப்படி தரத்தில் குறைவு ஏற்படும். இவா தெரியாம வீம்பு பண்ணுறாளோ.”
எண்ணியவன் கொஞ்சம் நகர்ந்து குடோனுக்குள் செல்லும் நோக்கோடு மேல் ஏறி வந்த போது, ராஜேந்திரன் யாரோடோ பேசும் குரல் கேட்டது. நின்று காதை கூர்மையாக்கி கேட்டவன் கண்கள் கோவை பழம் போல் சிவந்து போய்விட்டது.
“என்னடா இப்படி ஆகிடுச்சி. புது பொண்ணு. பெரிசா செக் பண்ணாதுணு தரம் குறைஞ்ச பொருள் சிலவற்றை இறக்குமதி பண்ணுனா. இவா என்ன இப்படி பேசிட்டு போறா?”
“போகட்டும் விடுடா. அடுத்து இவா வேணிட்ட தானே போய் நிற்பா. அவளுட்ட கொஞ்சம் காசு கொடுத்து சரிகட்டிடலாம்.”
என்றதும் அதிர்ந்து விழித்தான் முகுந்தன்.
கூலாக சொன்ன ராஜேந்திரனை அடித்து நொறுக்கி இன்றே வேலையை விட்டு கிளப்பி விட தான் நினைத்தான் முகுந்தன். ஆனால் நடப்பது மொத்தத்தையும் அறிய விரும்பி அப்படியே மறைந்து நின்று கொள்ள,
அடுத்த பத்தாவது நிமிடம்,
வாணியோடு அங்கு வந்த ஓவியா, நட்ஸ் ஒவ்வொன்றையும் எடுத்து காட்ட, இப்போது வாணி பார்வை ராஜேந்திரனில் நிலைத்தது. அவன் கண் ஜாடையில் புரிந்தவள்,
“நீ கிளம்பு ஓவியா. இதை நான் பாத்துக்கிறேன்.”
என்றவளை புரியாமல் பார்த்தவள்,
“என்ன எங்க கிளம்ப சொல்லுறீங்க மேடம். முதல்ல கொண்டு வந்த சரக்கை திரும்ப கொண்டு போக சொல்லுங்க.”
என்றவளை கிண்டலோடு பார்த்தவள்,
“அப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க முடியாது ஓவியா. ஒரு மூட்டையை செக் பண்ணிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. இன்று உனக்கு முதல் நாள் உள்ளால நிறைய வேலை இருக்கும். அதை போய் பாரு. இதை நான் செக் பண்ணி உள்ளால அடுக்க வேண்டியதை உள்ளாலயும், வெளியில அனுப்ப வேண்டியதை வெளியிலயும் அனுப்பிறேன்.”
“இல்ல மேடம். இந்த வேலையையும் நான் தானே பார்க்கணும். இதுல ஏதாவது தப்பு வந்தாலும் சார் என்னை தானே கேட்பாரு. அதுல வேற நேற்று நளன் சார். இது எவ்வளவு முக்கியம்ணு எனக்கு சொன்னாரு. அதனால நானும் கூட நிக்குறேன். நீங்க செக் பண்ணுங்க.”
என்றதும் இவளை நகர்த்த முடியாது என உணர்ந்த வாணி ராஜேந்திரனை அழைத்து கொண்டு நீங்கி போய்,
“இந்த பொண்ணுட்ட உன் வேலை பலிக்காது ராசா. நீ பேசாம எடுத்து கொண்டு போறது தான் நல்லது. அப்புறம் பாஸ் காதுவரை போச்சு. உன் வேலை கோவிந்தா தான். அது மட்டுமல்ல நம்ம முகுந்த் சாரை பற்றி தெரியும் தானே. அவரோட அகராதியில நம்பிக்கை துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. உடனே ஆக்ஷன் தான். அதனால இனி ஒரு மாசத்துக்கு அடக்கி வாசி. இல்ல. எங்கேயும் வேலை பார்க்க முடியாம சார் செஞ்சிடுவாங்க.”
“என்ன பூச்சாண்டியா காட்டுறா? சாருக்கு எப்படி இது தெரியும். அவர் வந்து குடோன் வரை செக் பண்ணவா போறாரு.”
“அதுக்கு தான் குள்ள நரி ஒண்ணை நம்ம கூட்டத்துக்குள்ள அனுப்பி இருக்காரே.”
“நீ யாரை சொல்லுறா? அந்த பொண்ணு ஓவியாவையா? அவா எனக்கு சப்ப மேட்டரு.”

“நீ அவளை சாதாரணமா நினைக்காத. அவா முகுந்த் சார் கூட்டிட்டு வந்திருக்கிற பொண்ணு. அவளை எல்லாம் நீ வளைச்சிக்க முடியும்னு நினைக்காத. அவளுட்ட பேசுனதை வச்சி சொல்லுறேன். அவா எல்லாம் உன் திட்டத்துக்கு வளைஞ்சி கொடுக்கிற ஆளே இல்லை. நான் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு உன்கிட்ட கை ஏந்துனது போல அந்த பொண்ணை நினைச்சிடாத. கூடவே இப்போ இருக்கிறது முகுந்த் சார். பெரிய முதலாளி இல்லை. அவர் லண்டன் போயிட்டு இவர் வந்த அன்று என் ஈர குலையே நடுங்கி போச்சு தெரியுமா?. நீ குடோன்ல்ல பதுக்கி வச்சிருந்த சரக்கை முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்ணு ஆகிடுச்சி. சரக்கு கொடுக்கிறவன் தருகிற காசுக்கு ஆசைப்பட்டு முகுந்த் சாரை பகைச்சிக்க நினைக்காத. அவருக்கு என் மேலயே சின்ன சந்தேகம் வந்திருக்குமோனு தோணுது.”
“ சாருக்கா? உன் மேலயா?”
“ ஆமாடா. இல்லனா எதுக்கு என் வேலையில சில வேலையை பிரிச்சி இந்த பொண்ணுக்கு கொடுத்திருக்கணும். இதுக்கு முன்னால இருந்த ஜாஸ்மின் வறுத்து வந்த தானியங்களையும் மாவையும் தானே குவாலிட்டி செக் பண்ணி அனுப்புவா? இப்போ சார் இவளுட்ட சரக்கை செக் பண்ணுற பொறுப்பையும் கொடுத்திருக்காரு. இதுவரை அந்த வேலையை நான் தானே செய்தேன். சக்கரவர்த்தி சார் இதுவரை இந்த பக்கம் எல்லாம் நுழைஞ்சதே இல்ல. அவர் லண்டன் போய் இவரை அனுப்புனாரு. இவர் மூலை முடுக்கெல்லாம் தாவுறாரு. பாத்து நடந்துக்க…”
என்றவள் சிறிது நேரம் கூட அவனிடம் பேசி விட்டு இருவரும் வெளி வர, இங்கே நடந்து கொண்டிருந்த செக்கிங்கை பார்த்து இருவரும் அதிர்ந்து தான் போயினர்.
“என்ன செய்றீங்க மேடம்…”
“பார்த்தா தெரியல. செக் பண்ணுறேன்.”
“அதுக்காக ஒவ்வொரு மூட்டையாவா?”
“சந்தேகம் வந்திடுச்சில. அப்போ செக் பண்ணி தானே ஆகணும்.”
என்றவள் அவர்கள் இருவரும் சொல்ல சொல்ல கேட்காமல் அத்தனை மூட்டையையும் செக் பண்ணி, நல்ல தரம் வாய்ந்த சரக்குகளை மட்டும் உள்ளே ஏற்ற சொல்லி விட்டு மீதியை திரும்ப அனுப்பி விட்டே உள்ளே போனாள். அவள் தயாரிப்பு அறைக்குள் நுழைந்ததும், மெல்ல மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்ட முகுந்த்,
முகத்தில் புன்னகையை படரவிட்டவாறு தன் அறையை நோக்கி நடந்தான். அதே சமயம் அவனை தேடிக் கொண்டு எதிர் வந்த நளன்.
“என்ன பாஸ் தனியா சிரிச்சிட்டே வாறீங்க.”
“சும்மா சொல்ல கூடாதுடா. ஆள் செம பார்ட்டி தான். நானும் குழந்தை போல நெளியுறாளே இதுக்கு சரிபடுவாளானு நினைச்சேன். மொத்த கம்பெனி பொறுப்பையும் நம்பி கொடுக்கலாம். துளி பயம் இருக்கா பாரு. வேலைக்கு வந்த முதல் நாளே பல வருஷமா வேலை பாக்குறவங்களை இப்படி ஆட்டி வைக்குறா?
என்றவனை குழப்பமாக பார்த்த நளன்.
“நீங்க யாரை சொல்லுறீங்க?.”
“யாரை சொல்லுவேன். கிராமத்துல இருந்து ஒரு பட்சி பறந்து நம்ம அலுவலகம் வந்துச்சே அதை சொல்றேன்.”
“ஓவியா மேடத்தையா?”
“ம்… அந்த ஓவியமானவளை தான்.”
சிரித்து கொண்டே சொன்னவன் நடந்தவற்றை விவரிக்க…
“முதல் நாளுலயே இந்த அடாவடியா?”
“ நமட்ட தாண்டா பூனை போல பதுங்குறா? ஆனா தப்பு நடக்குதுணு தெரிஞ்சிது புலி போல தான் பாயுறா? இப்ப தான் தெரியுது. அந்த ஹோட்டல் மேனேஜர் இவளுக்காக வந்து ஏன் மன்னிப்பு கேட்டான்னு. விசுவாசம் உள்ள பொண்ணுடா. தப்பு செய்திடாது.”
“அப்படினா கண்காணிக்க வேணாம்ணு சொல்லுங்க.”
“வேணாம்டா. தனக்கு கொடுத்த வேலையை உயிரா நினைச்சி செய்ய கூடிய பொண்ணு. அவளோட இஷ்டப்படி விடு. அவளால எந்த தப்பும் நடக்காது.”
முகுந்த் ஓவியாவுக்கு நல்ல சர்ட்டிபிகேட் கொடுத்த அதே நேரம் ராஜேந்திரன் கூட்டாளிகளோடு, அவளை கிளப்பி விடும் வேலையை செய்ய ஆரம்பித்திருந்தான். இது தெரியாமல் உற்பத்தி கூடத்தில் இருந்து வெளிவந்தவள் நேரே தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அதே நேரம் அவள் சென்று கொண்டிருந்த பாதையை தாண்டிய சுவருக்கு மறுபுறம் இருந்து இரு பெண்கள் பேசும் குரல் ஓவியாவுக்கு தெளிவாகவே கேட்டது.
“ நீ… நீ தானே அந்த இடத்துக்கு வந்திருக்கணும்.”
“ஆமாண்டி. நானும் ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தேன். அடுத்த மாசத்துல இருந்து ஒரு லட்ச ரூபாய் வாங்கலாம்ணு கனவோட இருந்தேன். ஆனா எல்லாத்துலயும் மண்ணை வாரிப் போட்டுட்டா புதுசா வந்த அந்த பொண்ணு.”
“அது எப்படிடீ பொதுவா நம்ம கம்பெனியில எக்ஸ்பீரியன்ஸ் அடிப்படையில தானே அந்த போஸ்ட்க்கு ஆள் போடுவாங்க. குறைஞ்சது ஒரு வருடமாவது வேலை பார்த்திருக்கணும் தானே. இது என்ன இதுவரை வேலையே பார்க்காத பொண்ணை கொண்டு வந்து போட்டிருக்காரு இந்த முகுந்த் சார்.”
“அதுதாண்டி எனக்கும் புரியல. நம்ம சக்கரவர்த்தி சார்ணா நிச்சயம் இப்படி செய்ய மாட்டார். இவரு எங்கேயோ போய் ஒரு பொண்ணை புடிச்சிட்டு வந்திருக்காரு.”
“ஒருவேளை சாருக்கும் அந்த பொண்ணுக்கும் சம்திங் சம்திங் இருக்குமோ…”
“நீ வேற. சார் எங்க? அந்த பொண்ணு எங்க? பார்த்தா பஞ்சத்துல அடிப்பட்டவா போல இருக்கா. இவளை போய் சாருக்கு ஜோடியா நினைச்சிட்டியே. ஒருவேளை பஞ்சத்துல அடிப்பட்டு தான் இங்க கொண்டு வந்து சேர்த்தாரோ என்ன?”
“ இருக்கும் இருக்கும்”
சொல்லி சிரிக்க உடன் இருந்தவளும் சிரித்தாள்.
“இவா எல்லாம் சாரோட நிழல் பக்கம் ஒதுங்க முடியுமா? ஒரு பேச்சுக்கு கூட அப்படி சொல்லிடாத. ஐயோ பாவம்ணு வேணா கொண்டு வந்து சேர்த்திருப்பாரு.”
“ஏய் அப்படி பொதுவா சொல்லிட கூடாது. பெரிய மனுஷனுங்க எல்லாம் பொண்டாட்டியை தான் தன்னோட தகுதிக்கு ஏத்த பொண்ணா தேர்ந்தெடுப்பாங்க. ஆனா இவளை போல உள்ளவங்களை எதுக்கு வச்சிப்பாங்க தெரியுமா?”
என்றதும் கூட இருந்த பெண் நமட்டு சிரிப்பு சிரித்தவாறு,
“அதுவும் சரி தான்.”
என்றதும் சட்டென தன் இரு காதையும் பொத்திக் கொண்டாள் ஓவியா. சட்டென இரு துளி கண்ணீர் வெளிப்பட்டது.
கேலியும் கிண்டலுமாக பேசி சிரித்தவர்கள். பொறாமை தீயில் வெந்தவர்களாக தான் அங்கிருந்து கிளம்பினார்கள்.
ஆனால் இது அத்தனையும் கேட்டு கொண்டிருந்தவளின் வெண் தேகம் சட்டென சூடானது. ஆத்திரமும் கோபமும் அதிகபடியாக எழுந்தது. கூடவே இவர்கள் சொல்வது சரி தானே. அப்புறம் எதற்கு எனக்கு கோபம் வர வேண்டும். பஞ்சத்துக்கு அடிப்பட்டு விட கூடாது என்று தானே பெரிய மனசு பண்ணி இந்த வேலையை அவர் கொடுத்திருக்கிறார். அப்படி இருக்க எனக்கு ஏன் கோபம் வர வேண்டும். அதற்காக என்னை தப்பாக பேச இவர்களுக்கு என்ன தைரியம்.
பேசியது யார் என பார்க்கும் நோக்கில் அவசரமாக ஓடியவள், மறுபக்கம் வரும் போது வராண்டாவில் யாரும் இல்லாதிருக்க கண்ட, நாலாபுறமும் பார்வையை செலுத்தியவாறே,
மெல்ல நடந்து தன் அறைக்குள் நுழைந்தாள். மனசு ஏனோ பாரமாக இருந்தது. அதன் பின் ஏனோ வேலை செய்ய முடியவில்லை… ஒரு இடத்திலும் அமர முடியாமல் குட்டிப் போட்ட பூனை போல அங்கும் இங்கும் நகர்ந்தாள். இதற்கு மேல் முகுந்த்தை நெருங்குவது கூட இப்படியான பெயரை தான் பெற்று தரும் என்பது தெளிவாக தெரிந்தது.
“நமக்கு வேணாம் இந்த எண்ணமே வேணாம். வந்த வேலையை மட்டும் பார்ப்போம்.”
உள்ளே ஒளிந்திருந்த காதல் மனது அவளையும் தாண்டி வெளி வந்து கதறியது. கூடவே அழையா விருந்தாளியாய் அந்த நாள் நியாபகங்கள் வந்து அவளை கலங்க வைத்தன. இதற்கு மேல் அந்த எண்ணம் கூட தனக்கு வர கூடாது என உறுதியேற்றவள் மெல்ல எழுந்து வெளியே வந்தாள். முதல் பார்வையிலே தூரமாய் இருந்த முகுந்த் அறைதான் விழுந்தது. கலங்கிய கண்ணோடு பார்த்தாள். கண்ணாடி சுவரின் மறுபக்கம் ரோலிங் செயரில் அமர்ந்தவாறு யாரோடோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான் முகேஷ்.
ஒரு நொடி அவன் சிரிப்பில் தன்னை தொலைந்தவளாய் அப்படியே நின்றவள்,
“ஏண்டா… ஏன்? நீ இந்த அளவு வசதியான வீட்டுல பிறந்து தூரமா போனா? நீயும் என் போல சாதாரண குடும்பத்துல பிறந்திருக்க கூடாதா? அப்படி மட்டும் பிறந்து இருந்தால் மனம் முழுதும் புசுபுசுனு பட்டாம்பூச்சா பறந்துட்டிருக்கிற என் காதலை இதுக்க முன்னால உன்னிடம் சொல்லியிருப்பேனே. மூணு நாளா எது எதுவோ செய்து மனசு முழுசும் நிறைஞ்சிட்டு இப்படி போய் உசரத்துல அமர்ந்துட்டியேடா.”
நினைக்கும் போதே கண்ணீர் சட்டென வேலி தாண்டி பாய, யாரும் பார்த்து விட கூடாதே என அவசரமாக அதை துடைத்து கொண்டு அவள் நிமிர்ந்த போது,
முகுந்த் அறைவாசல் திறந்தது. அதிலிருந்து சிரித்த முகத்தோடு வெளிவந்தவனை தொடர்ந்து வந்த பெண்ணை பார்த்ததும் அவள் நெற்றி சுருங்க ஆரம்பித்தது. மாடல் உடையில் நச்சென்று இருந்தாள் கூட இருந்த பெண். ஏனோ அவனுடன் அவளை பார்த்த ஓவியாவின் உள்ளத்தில் கசப்பு தட்டியது. கூடவே கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அதே நேரம் விடைபெறும் நோக்கோடு அந்த பெண் அவனை கட்டி பிடித்து பின் கை குலுக்க,
“ஐயே… இவன் என்ன எல்லாரையும் கட்டி புடிக்கிறான்.”
எண்ணிய போது சட்டென அந்த இடிபாடுகளுக்கு நடுவில் அவள் மடியில் படுத்து கொண்டு ஹைபீவரில் அவள் இடுப்பை கட்டி அணைத்து கொண்டு புலம்பியது நினைவுக்கு வர,
அவனை கண்ணீர் மல்க பார்த்தாள்.
“ இவ்வளவு தான் உன் அணைப்பின் மதிப்பா. இது தெரியாமல் தான் நான் சிலிர்த்து சிலையாக இருந்தேனா? நீ அணைத்த அணைப்பில் என்னில் எது எதுவெல்லாமோ பூத்ததே. அப்படி என்றால் இவளுக்கு பூத்திருக்குமா?”
அவள் கண்களையும் முகத்தையும் ஆழமாக பார்த்தாள். தெரியவில்லை. ஆனால் அந்த கண்ணில் எதுவோ ஒளிந்திருக்கிறதோ. பேதை மனம் பரிதவித்தது. சட்டென ஒரு எண்ணம் வர இருவரையும் அதிர்ந்து பார்த்தாள்.
ஒரு வேளை… ஒரு வேளை… இருக்காது. ஏன் இருக்காது. இவர் எப்படி இவர்களை. இருக்காது. இவர்கள் ஏன் அழகாய் தானே இருக்கிறார்கள். மாடலா அவருக்கு பொருத்தமாய் தானே இருக்கிறார்கள். அப்புறம் ஏன் இருக்காது. நெருக்கமாய் வேறு பழகுகிறார்கள்.
என்ற எண்ணம் பூத்ததுமே விழிகள் அவளையும் மீறி விரிய தான் செய்தது. கூடவே மனசு சுணங்க ஆரம்பித்தது. “எனக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி. அவரை யார் விரும்புனா என்ன? விரும்பலனா எனக்கு என்ன? எட்டாத காய்க்கு கொட்டாவி விடுறதை விட்டுட்டு அவர் பக்கம் இருந்து ஒதுங்கி உன் வேலையை பாரு.”
எண்ணிய மனதை சமாதானப்படுத்த முடியாமல் அப்படியே உறைந்து போய் அவர்களை பார்த்து கொண்டே நின்றாள். அதே நேரம் திரும்பிய முகுந்தன் பார்வையில் அவளின் சோர்ந்து போன முகம் விழ,
அவளை புரியாமல் நோக்கினான் அவன்.
“இவா என்ன இப்படி நிக்குறா? பொண்ணுகளையே பார்த்தது இல்லையா?”
மனதுக்குள் எண்ணியவன் வந்திருப்பவளையும் அவளையும் மாறி மாறி பார்க்க… இவனின் பார்வையை உணராமல் அதே குழப்பத்தோடே அப்படியே நின்று கொண்டிருந்த ஒவியா அருகில் வந்த சுந்தரி.
“என்னாச்சு மேடம். ஏன் அவங்களை விழுங்கி விடுறது போல பாக்குறீங்க.”
என்றாள் மென்குரலில்.
“இது யாரு சுந்தரி,”
என்றாள்.அதிர்வோடு முகுந்தை நெருங்கி நின்ற பெண் மேல் இருந்த பார்வையை திருப்பாமல்,
“சாரோட கிளாஸ்மெற். ஏன் கேட்கிறீங்க.”
என குழப்பமாக சுந்தரி அவளை பார்க்க, இப்போதும் திரும்பாமல்,
“இல்ல. அரேபியன் குதிரை மாதிரி இருக்காங்களே அதான் கேட்டேன்.”
“அரேபியன் குதிரையா? “
என்றவள் ஒரு முறை சங்கீதாவை பார்த்து விட்டு,
“சரிதான். இதை மட்டும் சார் கேட்டாரு. என் பெஸ்ட் பிரண்டை அரேபியன் குதிரைனா சொல்லுறா? இதுக்க மேல உனக்கு இங்க வேலை இல்லனு அனுப்புனாலும் அனுப்புவாங்க.”
என்றதும் சட்டென திரும்பியவள்,
“பெஸ்ட் பிரண்டா?”
“ம்..ம்…”
“அவளுக்காக வேலையை விட்டு தூக்குற அளவு நெருக்கமான பிரண்டா??”
“ம்…ம்… “
என கொஞ்சம் அழுத்தி சொன்னவள்,
“இவங்ளுக்காக ஒரு வருஷத்துக்கு முன்னால ஒரு சின்சியர் ஆபீஸரையே வேலையை விட்டு நீக்கியிருக்காருணா பாத்துக்கோங்க.”
என்றதும் அதிர்ந்து அவள் விழியை பார்த்தவள்,
“ம்…ம்…”
என நம்ப முடியாமல் அதிர்வோடு தலையை மேலும் கீழும் ஆட்டி கேட்க.
ஆம் என்பது போல் தலையாட்டியவள்,
“சார் அவங்களை விரும்புறாங்கணு தான் நினைக்கிறேன். இப்போ இல்ல. பல வருஷமா? அடிக்கடி வருவாங்க. அவங்க வந்தாலே சாரோட முகத்துல சிரிப்பு மட்டும் தான் இருக்கும். கொஞ்ச நேரம் அவர் அறையில இருந்து பேசுவாங்க. அப்புறம் கிளம்பி வெளியில போயிடுவாங்க. அதன் பிறகு சார் அன்று ஆபீஸ்க்கு வருகிறதே இல்லை. அப்படி ஒரு முறை அவங்க இங்க வரும் போது தான் நம்ம ஆபீஸ்ல வேலை பார்த்த கண்ணன் இவங்களுட்ட பேசி பழக நெருங்கி போயிருக்கான். இதை தெரிஞ்சிட்டு தான் சார். அவனை வேலையை விட்டே தூக்கிட்டாரு. அதனால ஆர்வகோளாறுல நீயும் எதுவும் பேசிடாத. போய் வேலையை பாரு.”
சொல்லி விட்டு அவள் கிளம்பி விட, ஓவியா மனது காரணம் இல்லாமலே தவிக்க ஆரம்பித்தது. அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி போன நொடியில் இருந்து கற்பனை குதிரை தறிகெட்டு ஒட, அதை பிடித்து கட்டி போட முடியாமல் தவித்து போனவள் காரணம் இல்லாமலே அழத் தொடங்கினாள். ஆபீஸில் மட்டும் அல்ல தன் அறை வந்து சேர்ந்தும் அந்த எண்ணம் அவளை விட்டு போகவில்லை. மெத்தையில் பொத்தென விழுந்த பின் அன்று அவள் அந்த கட்டிலை விட்டு எழும்பவே இல்லை. இரவு உணவை கூட உண்ணவில்லை.
மறுநாள் அலுவலகம் வந்த போது அவளுக்கு முன் அவன் அந்த அலுவலகத்தில் இருந்தான். அவன் அறையை தாண்டி தன் அறைக்கு செல்லும் போது தான் ஏதேச்சையாக திரும்பி பார்த்து தெரிந்து கொண்டாள்.
நேற்று முழுசும் அந்த அரேபியன் குதிரையோட கூத்தடிச்சிட்டு இன்று காலையிலே வந்தாச்சா அவளையும் மீறி எண்ணங்கள் முளைக்க அவனை கோபமாக வெறித்தாள். அதே நேரம் முகுந்த்துக்கு எதுவோ உறுத்த சட்டென நிமிர்ந்து பார்த்தவன் அவளை பார்த்து விட,
“இப்ப எதுக்கு என்னை முறைச்சிட்டு நிக்குறா?”
என எண்ணியவன் மனதோ அவளை புருவ முடிச்சிகளோடு நோக்கியது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



