வணக்கம் வாசகர்களே!
திலகாவின் நிலையை அறிந்து கொள்ளும் ஒவியா? அடுத்து நடக்க போவது என்ன?
சக்கரவர்த்தி எண்டர்பிரைஸஸ்
இந்த முகவரியை கண்டதுமே ஓவியாவின் முகம் வியப்பில் விரிந்தது. சரசரவென மேல் உறையை அவசரமாகவே கிளித்தாள். உள்ளே இருந்து ஒரு வெள்ளை காகிதம் அவளை பார்த்து சிரித்தது.
அதை பிரித்தவள் வாய் பெரிதாக விரிந்தது.
வியப்பு மேலிட வாய் பிளந்து நின்ற மகளை பார்த்த எழிலரசி துடைப்பத்தை கீழே போட்டு விட்டு மகள் அருகில் வர அவளுடன் ஓவியாவின் தங்கை காயத்ரியும் வந்தாள்.
“அப்படி என்ன செய்தி சொல்லுது காகிதம். இப்படி வாயடைச்சி போய் நிக்குறீங்க?”
என்ற தாயின் நையாண்டி கூட அவள் செவிப்பறையை எட்டவில்லை. இப்போதும் உறை நிலையிலே அவள் நிற்க,
எழிலரசி மகள் கையில் இருந்த காகிதத்தை வாங்கி காயத்ரியிடம் கொடுத்தாள். அதை வாங்கி படித்து பார்த்த காயத்திரியின் முகமும் விரிய விசயம் தெரியாமலே எழிலரசியின் முகமும் விரிந்தது.
“என்னடி எல்லாரும் இந்த அளவு சந்தோஷப்படுறது போல அப்படி என்ன தான் செய்தி வந்திருக்கு.”
என கேட்ட தாயை சுற்றி உலுக்கிய காயத்ரி,
“அம்மா… அக்காளுக்கு வேலை கிடைச்சிருக்கு. அதுவும் பெரிய கம்பெனியில. மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம்.”
என்றதும் எழில் மயங்கி விழாத குறையாக தள்ளாட,
அவளை பிடித்து நிறுத்தியவள்.
“அக்கா… செம… செம… ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்படி ஒரு கம்பெனியில இருந்து வாய்ப்பு வந்திருக்குணா அதிஷ்டம்ணு தான் சொல்லணும். இல்லக்கா… அது லட்ச ரூபாய் சம்பளம்”
முகம் எல்லாம் பூரிப்போடு சொன்ன தங்கையையும்,
“என்ன ஒரு லட்சமா?”
என வாய் பிளந்து நின்ற தாயையும் தயக்கத்தோடு மாறி மாறி பார்த்தாலும் அவளுக்குமே அவளை அறியாமல் உதடு மலர தான் செய்தது. இரண்டு வாரமாய் அவளும் அலைந்து திரிந்தும் கிடைக்காத வேலை அல்லவா கிடைத்திருக்கிறது. அதுவும் எட்டவே முடியாத சம்பளத்தில், ஒரு நொடி தன்னை மறந்து ஏதோ உணர்வுக்குள் ஓவியா சிறைப்பட்ட நேரம்,
“ஆமாம்மா. அதுவும் இந்தியாவுல விரல் விட்டு எண்ண கூடிய பெரிய கம்பெனியில இதுவும் ஒண்ணு. இங்கயிருந்து அக்காவுக்கு எப்படி?”
குழப்பமாகவும் கூடவே முகம் முழுதும் பிரகாசமாகவும் சொன்ன மகளின் முதுகில் செல்ல அடி ஒன்றை வைத்தவள்,
“அப்பா அந்த நாராயணனை போய் பார்த்தார்ல்ல. அவர் தான் பெரிய மனசு பண்ணி இந்த வேலையை வாங்கி கொடுத்திருப்பாரு. முதல்ல விசயத்தை அப்பாவுக்கு சொல்லுவோம்.”
என தாயும் தங்கையும் குதூகலத்தோடு உள் நுழைய,
எதுவும் பேசாமல், புன்னகை சிறிதும் மாறாமல் அந்த காகிதத்தையே பார்த்தாள் ஓவியா. அப்படியே கண்கள் மெல்ல அந்த காகிதத்தின் அடிபகுதிக்கு வந்தது. அதில் முகுந்தன் என கையொப்பம் இடப்பட்டிருந்தது. அதை ஒரு விரலால் வருடியவள் மனதில் அப்படி ஒரு குதூகலம். அவளின் முகமோ பூவாய் விரிந்தது.
முகுந்த் கம்பெனியில் தனக்கு வேலை. அப்படி என்றால் நான் தினமும் அவரை பார்க்க போறேனா? அவருடன் பேச போறேனா? அவருடன் பழகப்போறேனா? நினைவே இனித்தது. கூடவே மனது றெக்கை கட்டி பறந்தது. ஒரு நொடி ஆளே இல்லா காட்டில் அவனுடன் வலம் வந்து விட்டாள்.
அவளுக்கு தெரியும். இது தந்தை வழியாய் கிடைத்த வேலை இல்லை. இது முகுந்தன் தனக்காக கொடுத்த வேலை என்று. தன்னை அவருடன் வைத்து கொள்ள கொடுக்கப்பட்ட வேலை. அப்படி என்றால் நான் மறுபடியும் அவரை சந்திக்க போறேனா? அவர் வட்டத்துக்குள் நுழைய போறேனா?
நினைவே இனம் புரியா மகிழ்வை கூட்ட காகிதத்தை தூக்கி பிடித்தவாறு ஒரு முறை தன்னை மறந்து சுற்றினாள். அப்படியே காற்றில் அந்த காகிதத்துக்கு ஆராரோ பாடியவள் அப்படியே எடுத்து தன் உதட்டால் முத்தமிட்டு கொண்டு தன் அறைக்குள் ஓடினாள். அந்த காகிதத்தோடே கட்டிலில் உருண்டு புரண்டாள். வெளியில் குரல் வராத அளவு பாடினாள். அப்படியே ஸ்பீடு வந்தவள் போல எழுந்து அறைக்குள் ஓடினாள்.
ஓவியாவால் சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. எத்தனை நாள் அவஸ்தைக்கு விடிவு. அவன் மனதுள் தான் இல்லையோ. அதனால் விட்டு விட்டு கிளம்பி விட்டானோ என்ற அவளின் தேடுதலுக்கான விடை.
அவள் தனக்கானவனை சந்திக்க போகிறாள். அவனுடன் ஏதோ ஒரு இடத்தில் இணைய போகிறாள். போதும். இதுவே போதும்.
மனது வகை தொகை இல்லாமல் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்ற நொடி திலகாவின் வார்த்தை அவளுள் ரீங்காரமாய் ஒலித்தது.
“நீ அந்த இடிபாடுகளுக்கு நடுவுல உதவுனதுக்கு அவன் பிராயசித்தம் செய்ய விரும்புறான்.”
என்ற சிந்தனை வந்ததுமே அவள் முகம் பொலிவிழக்க,
“அப்படினா இந்த வேலையும் ஒரு பிராயசித்தமா?”
எண்ணும் போதே முகம் சட்டென இருளை பூசிக் கொண்டது.
இதுவரை முகத்தில் தெரிந்த மகிழ்வு மறைந்து கண்ணீர் மண்டியிட்டது. திலகா சொன்னது சரிதான். பணம் கேட்பேன்னு நம்பர் கொடுத்தாரு. நான் அடிக்கல என்றதும், வேலையை கொடுத்து பதில் உதவி செய்றாரு. அவ்வளவு தான். இது தெரியாம நான் தான் ஒரு நொடி என்னை மறந்துட்டேன்.
அவள் தனக்குள் மறுபடியும் ஒரு பூட்டை போட்டு கொண்டு தளர்ந்து போய் அமர்ந்த நேரம்,
அவள் செல் குரல் கொடுத்தது. மேஜையில் இருந்த செல்லை எடுத்தவள் திலகா என கண்டதும், ஆண் செய்து காதுக்கு கொடுத்து,
“சொல்லுடி…”
என்றாள் சுரத்தே இல்லாமல்.
“என்ன?…உன் தங்கச்சி உனக்கு வேலை கிடைச்சிடுச்சிணு வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறா . நீ என்ன சோத்துக்கு செத்தவா போல குரல் கம்மி பேசுறா?”
“அது எல்லாம் ஒண்ணுமில்ல.”
“என்னடி? வேலை புடிக்கலியா? அதான் இப்படி இருக்கிறியா?”
“அப்படி எல்லாம் இல்ல. நான் அந்த வேலைக்கு போக வேணாம்ணு முடிவெடுத்திருக்கேன்.”
“பைத்தியமாடி உனக்கு. ஒரு லட்ச ரூபாய் வேலையில என் பொண்ணுக்கு வேலை கிடைச்சிருக்குனு உன் குடும்பமே கொண்டாடி தீர்க்குது. நீ என்னடானா அப்படி அபூர்வமா கிடைச்ச வேலைக்கு போக மாட்டேனு சொல்லுறா?”
“இல்லடி. அந்த வேலை…”
“அது எந்த வேலையாவும் இருக்கட்டும். அப்பா கஷ்டப்பட்டு ரெடிப் பண்ணியிருக்காரு. நீ போய் தான் ஆகணும். உன் குடும்பம் ஒரு மாசமா எவ்வளவு கஷ்டப்படுதுணு பாத்துட்டு தானே இருக்கா. அப்பாவுக்கு மாத்திரை கூட வாங்க முடியாம அம்மா அவங்க கம்மலை கழற்றி இருக்காங்க. இந்த மாசம் எப்படியோ சமாளிச்சிட்டாங்க. அடுத்த மாசம்…”
“அதுக்கு ஏதாவது பாத்துக்கலாம்டி. கோபால் நேற்று ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனான் இல்லயா? அங்க வேலை கிடைக்கும் போல தான் இருக்கு. சம்பளம் பன்னிரெண்டாயிரம். போக போக கூட்டி தரலாம்ணு சொல்லுறாங்க.”
“பன்னிரெண்டாயிரமா? நீ என்னடி லூசா. ஒரு லட்சம் சம்பளம் தருகிறேனு சொன்ன இடத்துக்கு போகாம இந்த சம்பளத்துக்கு வேலைக்கு போறேணு சொல்லுறா?”
“அந்த ஒரு லட்சம் சம்பளத்தை யார் தருகிறார்கள்னு தெரிஞ்சா நீயே போக வேணாம்ணு சொல்லுவா?”
“நான் போக வேணாம்ணு சொல்லுவேனா?”
“ம்… கண்டிப்பா போக வேணாம்ணு தான் சொல்லுவா?
“அப்படி உனக்கு யார் வேலை கொடுத்தா. அப்பா பார்த்துட்டு வந்த வேலை தானே.”
“ம்கூம். இல்ல. அவர் பார்த்துட்டு வந்த வேலைனா எவ்வளவு கஷ்டம்னாலும் போகாம இருப்பேனா? இது ஒரு பணக்கார முதலாளி போட்ட பிச்சை.”
“என்னடி சொல்லுறா?”
“செய்த உதவிக்கு மறு உதவி.”
“நீ… நீ… யாரை சொல்லுறா? யாரு இவ்வளவு பெரிய உதவியை உனக்கு செய்தது. ஏய்… அந்த நெடுமரமா?”
என்றதும் சிறிது நேர அமைதிக்கு பின்.
“ம்…ம்…”
என்றாள் வெறுமையாய்…
“அவனா இந்த வேலையை கொடுத்தது.”
“ம்…ம்…”
“அப்புறம் மல்லிகா ஏன் அப்பானு…”
“அவங்க அப்படி தான் நினைச்சிட்டிருக்காங்க…”
“நீ சொல்லலியா?”
“ம்கூம்…”
“ஏன்?”
“எப்படி சொல்லணு தெரியல. ஆனா சொல்லணும். அவங்க ரொம்ப எதிர்பார்க்கிறதுக்கு முன்னால அதுக்கு முற்று புள்ளி வைக்கணும்.”
“ஏய் அவசரப்படாதடி… வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். கொஞ்சம் பொறுமையா இரு.”
“எதுக்கு? எப்படியும் நான் போகப்போறது இல்லை. எதுக்கு அவங்க மனசுல ஆசையை வளர்க்கணும். இப்பவே அவங்க உன் வரை கொண்டு வந்துட்டாங்க. இதுக்க மேல டைம் கொடுத்தேன் எல்லாம் தப்பாகிடும்.”
“வேணாம்டி. அவங்க சந்தோஷத்தை ஒரு நொடியில அழிச்சிடாத.”
“நானும் அழிக்க கூடாதுணு தான் பாக்குறேன். ஆனா நான் அவர் மேல காட்டுன நேசத்துக்கு அவர் விலை பேசிய பின்னால அதை ஏத்துக்க என்னால முடியாது திலகா. நான் அன்று அவரோடு…”
சொல்ல முடியாமல் அவள் தடுமாற…
“என்னடி…”
“இல்ல விடு. நான் போனை வைக்கிறேன். அப்புறம் பேசுறேன்.”
என ஓவியா வைத்து விட. அதன் பின் திலகாவால் வீட்டில் நார்மலாக இருக்க முடியவில்லை. நிலை கொள்ளாமல் தவித்தாள். பழையபடி இருந்திருந்தால் இந்நேரம் திலகா வீட்டிற்கு ஓடியிருப்பாள். இப்போது முடியாதே. கால் காயங்கள் ஆறவில்லையே. நடக்க முடியாமல் இருப்பவளால் எப்படி போக முடியும். தோழி இதுவரை இப்படி சோர்ந்து போய் பேசியது இல்லை. ஓவியா எத்தனையோ வலிகளையும், வேதனைகளையும் தாண்டி வந்தவள் தான். ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவு உடைந்தவள் இல்லை. எதையும் எளிதில் கடந்து விடுவாள். இன்று என்ன ஆச்சு. அப்படி அந்த மூன்று நாள் இருட்டில் என்ன நடந்தது. ஏன் இவ்வளவு உடைந்து போய் பேசுகிறாள்.
நேரம் ஆக ஆக குழப்பம் மேலிட்டதே தவிர குறையவில்லை. அந்த குழப்பமே ஒருவித ஆத்திரத்தை தர அவள் கோபம் வேறு பக்கம் செல்ல ஆரம்பித்தது. அவசரம் அவசரமாக போனை எடுத்தாள். அதில் முதல் ஆளாய் சேவாகியிருந்த நம்பருக்கு கால் செய்தாள்.
காத்திருந்தவர் போல முதல் ரிங்டோனுக்கே எதிர்முனை உயிர்ப் பெற்றது.
“என்ன?… மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க. பணத்தை தூக்கி போட்டீங்க. வேணாம்ணு சொன்னதும் பதவியை தூக்கி போடுறீங்களா? ஏழைகள் என்ன நீங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிற பொம்மைகள்ணு நினைச்சீங்களா? உங்களால எங்களுக்கு எதுவும் வேணாம்ணு சொன்னா விடமாட்டீங்களா? அது என்ன வீட்டுக்கு அப்பாயின்மென்ட் ஆடரை அனுப்புறது. பணம் படைச்சவங்கணா அடுத்தவங்களோட உணர்ச்சியோட தான் விளையாடுவீங்களா?”
படபடவென பொரிந்து தள்ளிய திலகா மூச்சு வாங்க அமைதியானதும், மெல்ல வாய் திறந்தான் நளன். என்றாலும் கோபப்படாமல் அமைதியாக பேச வேண்டும் என்று உள்ளுக்குள் தீர்மானம் எடுத்து கொண்டான். அதனாலே குரலை தாழ்த்தி மென் குரலில்…
“என்ன பேசி முடிச்சிட்டியா? இப்போ நான் பேசலாமா? கம்பெனியில நிஜமா ஒரு வேக்கன்ஸி வந்துச்சு. அப்போ பாஸ் தான் இந்த வேலைக்கு அந்த பொண்ணு சரியா இருக்கும். வர சொல்லி லெட்டர் அனுப்புனாங்க. நான் அதை தான் செய்தேன். அவங்களுக்கு தான் வேலை போயிடுச்சே. எப்படியும் இன்னொரு வேலை தேடி தானே ஆகணும். அதுக்கு நாங்க கொடுக்க கூடிய இந்த ஆபரை வாங்கிக்கலாம் தானே.”
என்றதும் படபடவென வெடிக்கத் தொடங்கி விட்டாள்.
“இது… இது தாய்யா உங்க பிரச்சினை. ஆபர். நீங்க ஆபர் போட்டு நாங்க அதுல வாழ வேணாம். எங்க தகுதிக்கான வேலையை எங்களுக்கு தேடிக்க தெரியும். நீங்க ஒண்ணும் பிச்சை போட வேணாம்.”
என்றதும் கடுப்பாகி போன நளன்,
“பிச்சை. இதுல எங்க இருந்து பிச்சை வந்தது. தகுதி இல்லாமலா பாஸ் வேலை கொடுக்க சொல்லி இருப்பாங்க. அவர் ஒருத்தரை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறதே வித்தியாசமா இருக்கும். நிச்சயம் இந்த வேலைக்கு அந்த பொண்ணு தகுதியானவானு தெரிஞ்சதால தான் பாஸ் இந்த முடிவுக்கே வந்திருக்கணும். மற்றபடி எங்க மனசுல நீ நினைக்கிறது போல எந்த எண்ணமும் இல்லை. உனக்கு என் மேல உள்ள மனஸ்தாபத்தை அவங்க மனசுல தெளிச்சி அவங்களுக்கு கிடைக்க இருக்கிற நல்ல வாய்ப்பை கெடுத்து விட்டுடாத. அவங்க வீட்டோட நிலமை என்னை விட உனக்கு நல்லா தெரியும். அவங்களோட வருமானத்துல தான் அந்த குடும்பமே இருக்குணு நீ தானே சொன்னா. அப்படி இருக்க உன் வீம்பால அதை கெடுத்து விட்டுடாத. பிளீஸ் நம்ம பஞ்சாயத்தை அப்புறமா வச்சிக்கலாம். நீ உன் பிரண்ட்க்கு நல்லது செய்ய நினைச்சா உடனே அவங்களை மெட்ராஸ் அனுப்பி வை.”
“…………….”
“என்ன மௌனமாகிட்டா. அனுப்புறா தானே.”
“ம்….ம்….”
“குட் அப்படியே எங்க மனுவையும் கொஞ்சம் பரிசீலனை பண்ணுனீங்கனா ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”
“ம்… அது நிராகரிக்கப்பட்ட மனு. அதுக்கு இதுக்க மேல முக்கியத்துவம் கொடுக்க முடியாது.”
“மலை சரிவு நடந்த அன்று காலையில ஏற்று கொள்ளப்பட்ட மனும்மா அது. நிலசரிவு ஏற்பட்ட பிறகு மறுதலிக்கிறது நியாயம் இல்ல.”
“எனக்கு நியாயமா தான் படுது. இதுக்க மேல உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.”
“ஏய்… வாங்குன முதல் முத்தத்தோட ஈரம் இன்னும் காயலடி. மனசுல பசுமையா இன்னும் இருக்கு. அப்படியிருக்க உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லணு சொல்லுறா? இது உனக்கே நியாயமா இருக்கா.”
“இருக்கு. நியாயமா தான் இருக்கு. இதுக்க மேல உங்க கூட சேர்கிற தகுதி எனக்கில்ல. தயவு செய்து இதோட இந்த பேச்சை விட்டு விடுங்க.”
“விட்டு விடுறதா. ஏய் இதுக்க பிறகு தாண்டி என் அன்பு உனக்கு பரிபூரணமா வேணும். விட்டுவிட்டு போணு சொல்லுறா?”
“அதான் வேணாம்ணு சொல்லுறேன்ல்ல. உங்க கரிசனை எனக்கு தேவை இல்லை. இரண்டு காலும் தானே போயிருக்கு. என்னை பாத்துக்க எனக்கு தெரியும். நீங்க உங்க வேலையை பாருங்க.”
“இனி என் வேலையே அதாண்டி. அப்புறம் என்ன சொன்னா கரிசனையா? அடப்பாவி காதலுக்கும் கரிசனைக்கும் கூட வித்தியாசம் தெரியல.”
“காதல். பொல்லாத காதல்”
“ஆமா. அது என்னவோ உண்மை தான்.பொல்லாத காதல் தான். இல்லனா உன்னை விட்டு பிரிஞ்சி வந்த நாளுல இருந்து இரவு தூங்க முடியாம தவிப்பேனா? தயவு காட்டுடி. உன் புருஷன் பாவம் இல்லயா?”
“புருஷனா அடி செருப்பால …”
“அடி தானே. எத்தனை வேணா கொடு. அதை என் பக்கத்துல வந்து கொடுடி வாங்கிக்கிறேன்.”
“இந்த டயலாக் பேசுறதை நிறுத்துங்க நளன் கடுப்பாகுது.”
“காலு போனதும் காதல் போச்சுணு சொல்லுறியே எனக்கு கடுப்பாகாது.”
“கடுப்பாகுதுனா போனை வைங்க. எதுக்கு கால் பண்ணி என் கோபத்தை கூட்டுறீங்க.”
“எம்மா… ஹால் பண்ணுனது நீம்மா. என் மேல பழி போடுறா?”
“ஒ… சாரி… தெரியாம பேசிட்டேன். வச்சிடுறேன்.”
“ஏய்… ஏய்… வச்சிடாதடி. எனக்கு பதில் சொல்லிட்டு வை.”
என்றதும் போன் கட்டாக…
“வச்சிட்டியா. வச்சிட்டா விட்டு விடுவோமா?
உன் பிரண்ட் வரா தானே. அவளை வச்சே உன்னை இங்க கொண்டு வந்திடுறேன். என் பக்கத்துல வந்த பிறகு எப்படி கட் பண்ணுறானு நானும் பாக்குறேன்.”
சொன்னவன் சிரித்து கொண்டே போனை பார்க்க போன் திரையில் சிரித்து கொண்டிருந்தாள் திலகா.
திலகாவை அந்த ஹோட்டலில் வைத்து தான் முதல் முதல் பார்த்தான் நளன். பார்த்த நொடியே பசை போல வந்து ஒட்டி கொண்டாள் அவன் மனதில். இரண்டு நாள் அவள் அருகில் செல்லாமல் தான் ரசித்தான். மூன்றாம் நாள் காலையில் தான் தன் காதலை அவளிடம் சொன்னான். யார் என்று தெரியாத ஒரு வாலிபனாக திலகாவுக்கு தெரியவில்லை. நெருங்கி நின்று அவன் பூங்கொத்தை நீட்டி சொன்ன ஒற்றை வார்த்தையிலே சரணடைந்து விட்டாள். காரணம் இரண்டு நாள் ஓவியா முகுந்த் மோதலில் ஓவியாவுக்காக பேசியவன் ஆயிற்றே. அவன் பேச்சிலும் நடத்தையிலும் கவரப்பட்டு அவனை ஏக்கத்தோடு பார்த்தவள் ஆயிற்றே. அதனாலே அவன் ஒற்றை பார்வையில் விழுந்து அவன் காதலில் கலந்து மென்மையாய் ஏற்று கொண்டாள்.
அவளுக்கு தான் தெரியாதே. நாம் காதலை கொடுத்த மூணே மணி நேரத்தில் நம் உலகம் தலைகீழாக மாறும் என்று. மாறிவிட்டது. அந்த நிலசரிவு அவள் உலகத்தை மாற்றி போட்டிருந்தது. காலை இழந்த நான் அந்த நிலசரிவில் மாண்டிருக்க கூடாதா என அவளும், காலை இழந்தாலும் அவள் உயிரோடு கிடைத்து விட்டாளே என அவனுமாக தான் ஹாஸ்பிட்டலில் நான்கு நாளும் கரைந்தது. அவனும் அவளுக்கு எவ்வளவோ உதவி செய்ய நெருங்கி வந்தான் தான். கால்களை இழந்த அவள் அவனை நெருங்க விடவில்லை. என்றாலும் முகுந்த்தை பார்க்க வந்த டாக்டரை அழைத்து வந்து இவளுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்க வைத்தான். ஆனாலும் கால்கள் இரண்டையும் காப்பாற்ற முடியாது என்பது அப்போதே அவனுக்கு தெரிந்து போனது.
ஆனாலும் உண்மையாய் நேசித்த அவனால் அவளை விட முடியவில்லை. அவளால் இப்படி அவனுக்கு தன்னை கொடுக்க முடியவில்லை. இந்த போராட்டத்தில் இருந்ததால் தான் திலகா ஓவியாவிடம் அப்படி எல்லாம் பேசியது. அவளுக்கு இவர்கள் செய்யும் உதவி மனிதாபிமானத்தால் என்று தெரியும். காலை இழந்த அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. கூடவே இவனை கழற்றி விட வேண்டும் என்ற எண்ணம். அவனுக்கு தான் தகுதியில்லை என்ற மனபாக்கு. அதனாலே அவளை விட்டு மொத்தமாக ஒதுங்கி விட முடிவெடுத்து விட்டாள்.
அவனிடம் இதற்கு மேல் பேச கூடாது என்று தான் நினைத்தாள். ஆனால் ஓவியாவுக்கு என வந்த போது அந்த எல்லையை தாண்டாமல் அவளால் இருக்க முடியவில்லை.
என்ன தான் நளன் மேல் திலகாவுக்கு கோபம் இருந்தாலும் இந்த விசயத்தில் நளன் சொல்வது தான் சரி என்று தோன்றியது. ஓவியா தலைகீழ் நின்றாலும் இப்படி ஒரு வேலை அவளுக்கு கிடைக்காது என்பது அவளுக்கு தெரியும். ஒருவேளை நளன் சொல்வது போல ஓவியாவின் ஏதோ ஒரு செயல் இந்த வேலைக்கு சரியானதாய் இருக்கும் என்பதை உணர்ந்து அவன் முதலாளி இந்த வேலையை ஓவியாவிற்கு கொடுத்து இருக்கலாமே. நாம் ஏன் தவறாக நினைக்க வேண்டும். அவள் வேலை செய்து கொடுக்க போகிறாள். அவர்கள் அதற்கான சம்பளத்தை கொடுக்க போகிறார்கள். இதில் நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்.
இந்த தெளிவு வந்த நொடியே ஓவியாவுக்கு தான் அடித்தாள். ஆனால் இவள் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஓவியா இறங்கி வரவில்லை. இவள் நினைப்பது போல் அவள் இல்லையே. அவள் மனதுள் காதல் ஏறி அமர்ந்து விட்டதே. இந்த எண்ணத்தோடு அங்கு போவது சரியில்லை என்பது அவள் எண்ணம். ஒரு வாரம். ஒரு வாரமாக அவளையும் சரிகட்ட குடும்பம், தோழி, தெரிந்தவர் தெரியாதவர் என எல்லாரும் போராட தான் செய்கிறார்கள். ஆனால் இவள் கிளம்ப தயாராய் இல்லை.
இங்கு எல்லாருமே அவளை தான் குறை சொல்கிறார்கள். திமிர் எடுத்து அலைவதாக தாய் கூட கொதித்து விட்டார். ஆனாலும் இவர்கள் யாருக்கும் தெரியாது அவள் மனம்படும் வேதனை.
ஓவியாவுக்கு நன்றாக தெரிந்தது. தன் எண்ணம் அதிகபடி என்று. ஆனால் பாழாய் போன மனதுக்கு தெரியவில்லை. அவன் எட்டா காய் என்று. அன்று அந்த இடிபாடுக்குள் இருட்டு பகுதியில் அவன் தன்னை அவனோடு அணைத்து நெரித்த போது பேதை பெண்ணுக்கு நாளைய பயம் வரவில்லை. அவனுள் முடங்கி போய் கிடந்தாள். குளிரில் நடுநடுங்கி கொண்டிருந்த அவனுக்கு தன் உடலை கொடுத்து நின்றதே அவன் தனக்கானவன் என்று தோன்ற ஆரம்பித்ததால் தான். அப்போது அவன் வசதி குறுக்கே வரவில்லை. அவளுக்காக அவன் நின்ற நொடிகள் அவனை வேறொருவனாக நினைக்க அவளை விடவில்லை.
சின்ன சின்ன தொடுதலும், இடிபாடுகளுக்கு நடுவில் அவன் அவளின் பாதுகாப்புக்கு கொடுத்த முக்கியத்துவமும், ஒவ்வொரு இடத்திலும் குருவி தன் குஞ்சை காப்பது போல அணைத்து பிடித்து கொண்டு முன்னேறிய கரிசனமும் அவனை சக்கரவர்த்தியின் மகனாக காட்டாமல் தனக்கானவனாக காட்டியதன் வெளிப்பாடு தான் இன்று இந்த அவஸ்தை. அவனுள்ளும் தனக்கான இடம் இருக்கிறது என்று தான் ஹாஸ்பிட்டலில் இருக்கும் வரை நம்பினாள்.
ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் அவன் கிளம்பியதும், போதா குறைக்கு இவள் அவனுக்காக செய்ததற்கு எல்லாம் அவன் பணத்தை கொடுக்க தயாரானப் போதும் தான் அவனில் தான் இல்லை என்பதே அவளுக்கு உறைத்தது. அதிலும் சரசு அக்காவும் திலகாவும் வாய் ஓயாமல் அவன் வசதியையும் அவனுக்கு கொடுத்த அதிகபடியான ட்ரீட்மென்டையும், அவனுக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி கடனாக பணத்தையும் வாரி வழங்கியதையும் சொல்ல சொல்ல, அவள் உள்ளம் தளர்ந்து போய் விட்டது. அப்போதே முடிவெடுத்து விட்டாள்,
அவனை விட்டு மொத்தமாக விலகுவது தான் தனக்கு நல்லது என்று. அதன்படியே ஒவ்வொரு நாளும் அவன் நியாபகங்களை அழிக்க அவளும் போராடுகிறார்.
இவளின் போராட்டமும், அவஸ்தையும், உணராத திலகாவும் அவளிடம் மூஞ்சியை காட்ட ஆரம்பித்தாள். தோழியின் ஒதுக்கல் அவளை அதிகமாக காயப்படுத்தியது.
“நீயும் ஏண்டி என்னை படுத்துறா? என்னால முடியாதுடி. அவனை இதுக்கு மேல என்னால நிமிர்ந்து பார்க்க முடியாது. பிளீஸ் திலகா. இது மட்டும் என் போக்குல விட்டுடேன்.”
கெஞ்சி கொண்டு நின்றவளை சீற்றத்தோடு முறைத்தவள்,
“நான் விட்டுட்டா. உன் வீடு விட்டு விடுமா? அம்மா அழுறாங்கடி. அப்படி உனக்கென்ன பிடிவாதம். நெடுமரம் முசடு தான். நான் இல்லணு சொல்லல. பார்த்த முதல் நாளே முட்டிகிட்டீங்க தான். எப்பவும் சிடுசிடுணு தான் நிற்கும். அதுக்காக வந்திருக்க கூடிய இப்படியான ஒரு வாய்ப்பை இழக்க நினைப்பியா? எந்த முதலாளி சிடுசிடுக்கல. அந்த ஹோட்டல் மேனேஜர்ட்ட நாம வாங்காத திட்டா?”
“அது இல்லடி. அன்று போல இன்றும் சிடு சிடுத்திட்டா பிரச்சினை இல்லயே.”
தயங்கியவாறு சொன்னவளை புரியாமல் நோக்கியவள்,
“புரியல… அவன் சிடுசிடுக்காம வேற என்ன பண்ணுவான்னு நினைக்கிறா?”
தோழி ஊடுருவி கேட்ட அவள் கேள்வியின் நிலைதடுமாறியவள்,
பேச முடியாமல், அவளை பொங்கும் விழியோடு பார்க்க,
“ஏய்… எதுக்கு இப்போ அழுறா?”
“வேணாம் திலகா. அவனோட அருகாமை எனக்கு இனி வேணாம். அது சரியாகாது. பிளீஸ்…இதுக்கு மேல அவன் முன்னால போய் நார்மலா என்னால நிற்க முடியாது. அது பல பல பிரச்சினையை தான் உண்டு பண்ணும்.”
“பிளீஸ்டி. நீயாவது என்னை புரிஞ்சிக்கயேன்.”
என்பது போல இவளை அவள் பார்க்க,
“ஏய்… என்னடி சொல்லுறா? எனக்கு ஒண்ணும் புரியல.”
ஆரம்பத்துல அவனை எனிமியா பார்த்தது போல என் மனசு இப்போதும் இருந்திருந்தா என் வீட்டு கஷ்டம் உணர்ந்து திட்டு வாங்கியாவது காலத்தை ஒட்டிக்கலாம்ணு போயிடுவேன். இல்ல… இப்போ இருக்கிறது போல எனக்கு வேலை தர கூடிய பாஸா மட்டும் என் மனது அவரை நினைக்கிறதா இருந்தா குதூகலமா கிளம்பி இருப்பேன். ஆனா மூணு நாளா அவனை எனக்கானவனா பார்த்து பழகிட்டேனே திலகா. நான் எப்படி போய் அவர் முன்னால நார்மலா நிற்க முடியும்.
என்றவளை திடுக்கிடலோடு பார்த்தவள் விழியை அகற்றாமல் அவளிலே நங்கூரம் பாய்ச்சி விட,
“வெளியில வந்ததும் அவன் நிறம் மாறி போவான்னு தெரியாம, என் மனசை அவனுக்கு கொடுத்துட்டேன்டி. தப்பு தான். தப்பே தான். அவன் நம்மை விட வசதியானவன்னு தெரியும் தான். ஆனா இந்த அளவு நினைக்கலடி. இது என்னை மீறி நடந்தது. அவனோட தொடுகை, அவன் என்ன பாத்துக்கிட்ட விதம், முழுசா அவனோட மூன்று நாள் வாழ்க்கை எல்லாமே சேர்த்து என்னை குழப்பிடுச்சி. அந்த குழப்பம் மொத்தமா என் மனசை அவருட்ட கொண்டு போயிடுச்சி.”
“ஓவியா…”
“தெரியாதுடி. அவரில் நானா நின்ற நொடிகள் எனக்கு அவர் இவ்வளவு வசதியானவன் என்றோ, இல்ல ஆபத்து காலத்துல அவர் செய்த உதவிகள் இது என்றோ… அன்பால நான் செய்த உதவியை அவர் இப்படி பணம் கொடுத்து கொச்சைப்படுத்த நினைப்பார் என்றோ தெரியாம, மனசுக்குள்ள அவரை வரைஞ்சிட்டேன். இந்த மனநிலையோடு அவர்ட்ட போறது சரியா படல திலகா. என்ன என் வீட்டுக்கொரு சம்பளம் வேணும். கொஞ்சம் குறைவு என்றாலும் நான் இங்கே பாத்துக்கிறேன் திலகா. அவர் முன்னால போய் நின்று என்னை நானே அசிங்கப்படுத்திக்க முடியாது. பிளீஸ்டி. நீயாவது என்னை புரிஞ்சிக்க…
பொங்கி பொங்கி அழுதவள் சட்டென அவளை கட்டி அணைத்து கொள்ள, திலகாவும் அவளை வலியோடு அணைத்து கொண்டாள். சட்டென நளனின் நியாபகங்கள் தான் அவளுக்கும் வந்தது.
“பிளீஸ்டி. அப்படி மனசொடஞ்சி பேசாத. எனக்கு நீ வேணும். உன்னை நான் என் கண்ணுக்குள்ள வச்சி பாத்துப்பேன்.”
தன் மனதை பிசைந்து சொன்ன அவன் வரிகளை மனதில் ஒட விட்டவளின் மனமும் கனத்து போனது.
அதன் பிறகு ஏனோ திலகா அவளை வற்புறுத்தவில்லை. ஓவியாவின் மனதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆசை கொண்டவன் முன் போய் நின்று அவனின் புறக்கணிப்பை பார்த்து பார்த்து வலியில் உழல்வது அவளுக்கு ரொம்பவே கொடுமையாக இருக்கும் என்றே அன்றோடு அப்பேச்சை நிறுத்தி கொண்டாள்.
ஆனால் எழிலரசியால் அப்படி விட முடியவில்லை. அலையில் தத்தளித்த படகு போல தன் குடும்பம் அல்லாடும் போது அவளால் எப்படி வாய் மூடி இருக்க முடியும்.
அன்று வேலை தேடி களைத்து வீட்டிற்குள் நுழைந்த ஓவியாவின் முன் வந்து பாவமாக நின்றாள் எழிலரசி. அவளால் மகளிடம் அதட்டி பேச முடியவில்லை. பேசும் முன் அழுது விடும் தோரணையில் நின்றாள்.
“என்ன?”
என தாயை கேள்விகுறியோடு பார்த்தாள் ஓவியா.
“என்னப் பண்ணலாம்ணு இருக்கா?”
வலியில் கேட்ட தாயை ஒருமுறை கூர்ந்து பார்த்தவள்,
“அதான் என் முடிவை சொல்லிட்டேனே.”
என்றாள் கொஞ்சம் அதட்டல் குரலில்.
“இது என்னடி முடிவு. ஏன் போகமாட்டா என்கிற காரணத்தை சொல்லு.”
பாவமாக கெஞ்சிதலோடு தன் முன் நின்ற தாயிடம் அவளால் என்ன சொல்லி விட முடியும். ஆனாலும்.
“எனக்கு அவ்வளவு தூரமா போக புடிக்கல.”
என்றாள் பூமி மீது பார்வையை செலுத்தியவாறு,
“ஏய்… சொல்லணும் என்கிறதுக்காக சொல்லாத.” தூரமா வேலைக்கு போகணும்ணு ஆரம்பத்துல நீ எவ்வளவு முயற்சி பண்ணுனானு எங்களுக்கு தெரியும். எத்தனை நாள் நாராயணன் அண்ணனை அப்பா கூட போய் பார்த்தா என்கிறதும் எனக்கு தெரியும். அப்படி முயன்று கிடைக்கலயேணு எவ்வளவு வருத்தப்பட்டா என்கிறதும் எனக்கு தெரியும்.”
கொஞ்சமாக குரல் உயர்த்தி கேட்ட தாயை முறைத்து பார்த்தவள்,
“பட்டேன் தான். அப்போ பிடிச்சிருந்துது. இப்போ இல்ல. பிடிக்கலனா விட வேண்டியது தானே. எதுக்கு பிடிச்சி அதையே தொங்குறீங்க.”
கொதிப்போடு பேசிய மகளை சினம் கலந்து பார்த்தவள்,
“வீட்டு கஷ்டம் கொஞ்சமாவது தெரிஞ்சா நீ இப்படி பேசுவியா? எந்த பிரச்சினை வந்தாலும் தோள்ல்ல சுமந்துட்டு மூணு வேளையும் எதையோ வடிச்சி கொட்டுறேன் இல்ல. அதனால தின்னுட்டு இப்படி திமிர் எடுத்து ஆடத்தான் தோன்றும்.”
இரண்டு மாதமாய் வருமானம் இல்லாமல் ஒவ்வொரு மணி துளியையும் நகர்த்தி கொண்டு போக அவள்பட்ட கஷ்டம் அவளை அப்படி பேச வைத்தது. தாயின் மனவேதனை புரிந்தாலும் தன் மனவலியை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆத்திரத்தில், கண்ணில் நீர் கோர்த்து கொள்ள தாயை முறைத்தாள்.
“இப்போ எல்லாம் வீட்டுக்கு வரவே எனக்கு புடிக்க மாட்டேங்குது. வருகிற மனுஷியை ஒரு நாளாவது நிம்மதியா இருக்க விடுறீங்களா?. உங்களுக்கு பணம் வேணும். உங்க குடும்பம் அலுங்காம குலுங்காம நடத்த பணம் வேணும். அதுக்கு நான் எங்கு போனா உங்களுக்கென்ன? எப்படி ஆனா உங்களுக்கென்ன? பணம் காய்க்கிற மரமா தானே என்னை பாக்குறீங்க. எனக்கு புடிக்குதா? இல்லயா? அது பற்றி உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லல. வருத்தப்படாதுங்க. கூடிய சீக்கிரம் உங்க கைநிறைய பணம் கொண்டு தர எப்படியாவது ஒரு வேலையை ரெடிப் பண்ணிடுறேன். ”
என சாடிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள். வார்த்தையை மொத்தமாக வீசி விட்டு அழுகையோடு செல்லும் மகளை கலக்கத்தோடு பார்த்தார் அரிசந்திரன். மனசு வலித்தது. அவளை எப்படி எல்லாம் வைத்து கொள்ள வேண்டும் என்று அவரும் நினைத்தார். ஆனால் விதி அவரை முடக்கி மகளை தினமும் அழ வைக்கிறதே. கண்ணில் மெல்லமாய் நீர் படலம் உற்பத்தியானது. மனைவி பார்க்கா வண்ணம் ஒற்றை விரலால் அப்புறப்படுத்தினார்.
ஆனாலும் மனதின் அடி ஆழத்தில் ஒரு சந்தேகம். மகள் ஏன் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கிறாள் என்று. இது அவளுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. இதை ஏற்றுக் கொள்வதில் இவளுக்கு என்ன தயக்கம் என்ற எண்ணம் தான் அவரை விடாமல் துரத்தி கொண்டிருந்தது.
ஆனாலும் மனைவியை போல அவர் எதுவும் மகளிடம் கேட்கவில்லை. அவள் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை. வீட்டு சூழல் தெரியாத பெண்ணும் இல்லை. அப்படியும் இப்படி பேசுகிறாள் என்றால் அவருக்குள் எதுவோ நெருடியது. அதனால் மனைவியை சமாதானப்படுத்தும் முனைப்பில்,
“விடு எழிலு. அவளுக்கு பிடிக்கலனா விடு.”
“நீங்களும் என்னங்க இப்படி புரியாம பேசுறீங்க.”
“புரியாம பேசல. புரிஞ்சதால தான் பேசுறேன். நாம இவ்வளவு சொல்லியும் அவள் கேட்கலனா நாம என்ன பண்ண முடியும்.”
“அவள் புரியாம நடந்துக்கிறானா நாம விட்டு விட முடியுமா? அடுத்த மாத ஹாஸ்பிட்டல் செலவு வருமே, வைஷ்ணவியோட ஸ்கூல் ஃபீஸ் வருமே. நான் என்ன பண்ணுவேன்.”
“அதான் அவள் கோபால் சொன்ன இடத்துக்கு போறேனு சொல்லுறா இல்லியாம்மா. அவா போகட்டும். நானும் இனி எங்காவது வாட்ச்மேன் வேலையாவது கிடைக்குமானு பாக்குறேன்.”
மனைவியை சமாதானப்படுத்த அவர் அப்படி சொல்லவில்லை. அவருக்குமே கொஞ்ச நாளாக அந்த எண்ணம் இருந்தது. அதையே மனைவியின் ஆறுதலுக்காக சொல்ல,
அடுத்த நொடி வீறிட்டு வெளி வந்தவள்,
“அப்பா…”
என காட்டமாய் சாட, குடும்பமே திரும்பி பார்த்தது,
“யாரும் வேலைக்கு போக வேணாம். நான் என்ன வேலைக்கு எதுவும் போக மாட்டேன். தெண்டமா இருப்பேனா சொல்லுறேன். கோபாலோட சித்தப்பா எனக்கு வேலை ரெடி பண்ணிட்டார். அடுத்த வாரத்துல இருந்து போக தான் போறேன். அதை நேற்றே உங்களுட்ட சொன்னேன் தானே. அப்புறம் எதுக்கு இந்த பேச்சு. என்ன சம்பளம் கொஞ்சம் குறைவு. சீக்கிரத்துல கூட்டி தருகிறதா சொல்லி இருக்காங்க. அப்படியும் உங்களுக்கு பணம் பத்தலனா நைட் வந்து டியூசன் எடுத்தாவது உங்களுக்கு காசு கொடுக்கிறேன். ஆனா அந்த வேலைக்கு மட்டும் என்னை போக சொல்லாதுங்க.”
இதுவரை அடக்கி அடக்கி வைத்திருந்த குமுறல் அத்தனையும் கொட்டி விட்டு அறைக்குள் நுழைந்தவள் துப்பட்டாவை எடுத்து போட்டு கொண்டு வெளியேறி திலகா வீட்டை நோக்கி நடந்தாள்.
“யாரும் ஏன் என்னை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். நான்… நான் எப்படி மறுபடியும் அவன் முன். முடியாது. அவன் முன் இதற்கு மேல் நார்மலாக வேலை செய்ய முடியாது.”
வழி நெடுக்கிலும்,
அந்த மூன்று நாள் நியாபகங்கள் அலைகடல் போல் திரண்டு வந்து அவள் நெஞ்சை ஆர்ப்பரிக்க…
அவன் மார்பு கூட்டில் அவளை நெருக்கி கொண்ட அந்த காட்சியே மறுபடியும் மறுபடியும் வந்து அவளை அலக்கழித்தது.
அதே உணர்வோடு திலகா வீட்டிற்குள் நுழைந்தவள். அங்கு திலகாவின் அருகில் யாரோ இருப்பது போல் தெரிய, தயங்கியவாறு அவர்கள் அருகில் சென்றாள்.
“சொல்லுறது எல்லாம் நான் சொல்லிட்டேன் கோசலையம்மா. முடிவை நீங்க தான் எடுக்கணும்.”
சொல்லியவாறு கொண்டு வந்த மருத்துவ கிற்றை எடுத்து கொண்டவர் வேகமாக வெளியேற,
புருவ முடிச்சோடு திலகாவை பார்த்தாள் ஒவியா.
“இல்லடி. செயற்கை கால் பொருத்தலாம்ணு அம்மா வேலை பார்த்த வீட்டம்மா சொல்லியிருக்காங்க. அம்மா அது பற்றி தெரிஞ்சிக்கலாம்ணு வர சொல்லியிருக்காங்க வந்தவங்க விபரம் சொல்லிட்டு போறாங்க.”
என்றதும் கோசலையம்மா தொடர்ந்தார்.
“அவங்க சொல்லுற காசுக்கெல்லாம் நான் எங்க போவேன் ஒவியாம்மா. அவளுக்கு விதி என்ன எழுதியிருக்கோ அது நடக்கட்டும்.”
உச்சி கொட்டி விட்டு தாய் எழுந்து வெளி செல்ல, டாக்டர் சொன்ன அனைத்தையும் திலகாவின் வாய்மொழியாக கேட்டு விட்டு வெளி வந்தவள் மனமோ என்றும் இல்லாத இறுக்கத்திற்கு போயிருந்தது.
அதே மனநிலையோடு வீட்டுக்கு வந்தவள்,
“நான் நாளைக்கே மெட்ராஸ்க்கு கிளம்புறேன்.”
என சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட, ஹாலில் இருந்த அத்தனை முகமும் ஒற்றை நொடியில் பிரகாசமாக எரிந்தது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel