வணக்கம் வாசகர்களே!
ஓவியா முன்பே பெண் பார்க்க கிளம்புகிறான் முகுந்தன். இப்போவாவது தன் காதலை வெளிப்படுத்தினாளா ஒவியா?
குளித்து முடித்து டவ்வலோடு தன் அறைக்குள் நுழைந்த முகுந்தன் கவனத்தை, விடாமல் ஒலித்த செல்போன் கலைத்தது. ஓவியாவுக்கு கொடுத்த முதல் முத்தத்தில் மலர்ந்த உதடு இன்னுமே விரிந்திருக்க, விசிலடித்தவாறு சினிமா பாடல் ஒன்றை முணுமுணுத்தவாறே வந்து அதை எடுத்தான். திரையில் தெரிந்த நம்பரை கண்டவன்.
“சொல்லுங்க நரேன்.”
என்றவாறே தன் தலையை துவட்ட தொடங்க, எதிர்முனை ஆள் சொன்ன விசயம் அவனை ஆச்சரியப்படுத்தி இருக்க வேண்டும். டவ்வலை வீசி எறிந்தவன் மெத்தையில் அமர்ந்தவாறு,
“நினைச்சேன் நரேன். அந்த ஹோட்டலுக்கு கட்டிக்க போறவளை கூட்டிட்டு போறவன் நிஜமா நல்லவனா இருக்க மாட்டானு நினைச்சேன். நல்லது. நீங்க போனை வைங்க. இனி நான் பாத்துக்கிறேன்.”
சொன்னவன் செல்லை மெத்தையில் எறிந்து விட்டு, கோட்டையும் சூட்டையும் எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். வந்தவன் முகத்தில் இப்போதும் குறும்பு சிரிப்பு. விசிலடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த நினைத்த போது வீட்டிற்கு போக கிளம்பி வந்து, மகேந்திரனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த ஒவியா விழுந்தாள். திலகா அருகில் இல்லை. தனித்து அதுவும் காட்டன் சாரியில் கலக்கலாக நின்ற தன்னவளை பார்த்ததும் நெஞ்சம் சந்தோஷத்தில் துள்ள,
“என்னடி மனசை அடக்கிட்டு நல்ல பிள்ளையா நானும் இருக்கணும்னு பார்த்தா இப்படி வந்து முன்னால… அதுவும் தனியா? பளபளப்பா வேற நிக்குறா?”
வாய் விட்டே முனங்கியவன் கால்கள் அவனையும் அறியாமல் அவளை நோக்கி நகர, அவனை எதிர்கொண்டு வந்த வேலைகாரன் கையில் இருந்த பாத்திரத்தில் நறுக்கி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் துண்டுகளை அள்ளியவாறு புன்சிரிப்போடு அவளை நோக்கி நடந்தான்.
முகுந்தன் செயலால் கலவரமாகி இருந்த ஓவியா. அடுத்து என்ன நடந்து விடுமோ என்ற பதைபதைப்பில் வெளிவுலகை முறைத்தவாறே நின்று கொண்டிருந்தாள். சக்கரவர்த்திக்கு தெரியாமல் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்ற அவசரமும் படபடப்பும் தான் அவளிடம் இருந்தது. ஆனால் அவளின் படபடப்பை உணராத மகேந்திரன் அவள் அவ்வளவு அழுத்தி சொல்லியும் இன்னும் வரவில்லை. அவன் அறையையே கலவரத்தோடு பார்த்து கொண்டிருந்தவள் பின்னால் வந்து நின்ற முகுந்தனை பார்க்கவில்லை.
அவளின் அலைந்தாடும் கூந்தலில் மனதை அலைய விட்டவாறு, ஒரு நிமிடம் பின்னால் நின்றவன், அடுத்த நொடி அவள் தோள்பட்டையை பிடித்து சட்டென திருப்பி விட, தடுமாறி விழ போனவளை தாங்கி பிடித்தவன், அவள் அனுமதியின்றி அவள் வாயில் ஆப்பிள் துண்டுகளை திணிக்க… திணறி விட்டாள் பெண்ணவள். ஒரு நொடி நடப்பதை கூட அவளால் உணர முடியவில்லை. வாய் நிறைய ஆப்பிள் பீஸாக அடைத்திருக்க, அதை சாப்பிட கூட தோன்றாமல் உறைந்து போய் அவன் கைவளைக்குள் இருந்தவாறு அவனை மிரட்சியோடு அவள் பார்க்க… விழி உயர்த்தி சைகை செய்து சிரித்தவன்,
“சாப்பிடுறியா? இல்ல நான் சாப்பிடட்டுமா?”
என அவள் வாய் நோக்கி குனிய போக, பெண்ணவளோ அந்த உறைநிலையிலும் ஆவேசமாக உண்டு முடித்தாள்.
“எப்பவும் போல, இப்பவும் சொல் பேச்சு கேட்க மாட்டா. நாம சாப்பிட்டு விடலாம்ணு பார்த்தா கொண்டு வந்த மொத்தத்தையும் முழுங்கிட்டா. பரவாயில்லை. ஒரே நாளுல நல்ல முன்னேற்றம் தான். இப்படியே சொல் பேச்சு கேட்டா எல்லாம் சுபமாகும். வரட்டா…”
என அவள் கன்னத்தில் தட்டி விட்டு செல்ல… அந்த ஒரு தட்டலில் அவள் உடலே சிலிர்த்து போனது.
“ இவன் என்ன இப்படி எல்லாம் செய்றான்.”
அதிர்ந்து விழித்தவள் விழிகள் போகும் அவனில் படிய, முகுந்தனோ, உதட்டை குவித்து முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு மாடி படியில் துள்ளலோடு இறங்கினான்.
மொத்தமாய் உறைந்து நின்ற அவள் உடல், உயிர்ப்பை பெறவே பத்து நிமிடம் பிடித்தது.
அவன் அணைப்புக்குள் இதுவரை சுருண்டு கிடந்த உடலை பார்த்தாள்.
“த்தூ… மானங்கெட்ட உடம்பு. பிடிச்சி இழுத்து அணைச்சதும் கோழி குஞ்சு போல அவரில் சுருண்டு கிடக்குது. பிடிச்சி தள்ளிட்டு கம்பீரமா நிக்குதா பாரு…”
எண்ணும் போதே கோபம் வந்தது.
“ பாவி … பாவி. என்னடா நினைச்சிட்டு இப்படி எல்லாம் பண்ணுறா? ரொம்ப படுத்துறாடா. பிளீஸ் என்னை அனுப்பி வச்சிடுடேன். இதுக்க மேல தாங்க மாட்டேன்.”
கண்கலங்கி அவன் போகும் திசையை வெறுமையாய் பார்த்த போது, மகேந்திரன் அவளை நெருங்கி வந்தான்.
“கிளம்புவோமா?”
என்றவன் முகத்தில் துளியும் மலர்ச்சி இல்லாததை ஒரு வித அதிர்வோடு தான் பார்த்தாள். ஆனாலும் எதுவும் கேட்கவில்லை. அவனும் வரும் போது தொண தொணத்து விட்டு வந்தது போல இம்முறை தொணதொணவென பேசவில்லை. அமைதியாக அவள் முன் நடந்தான்.
ஓவியாவும் எதுவும் பேசாமல் பின்னால் நடந்தாள். முன்னால் சென்றவன் மேற்கொண்டு நடக்காமல் நிற்கவும், ‘என்னாச்சு…’ என நிமிர்ந்தவள் கண்ணில்,
தீயில் கருகி போன முகம் போல கறுத்து இருண்டு நின்றிருந்த சக்கரவர்த்தியின் முகம் தான் விழுந்தது.
பயத்தில் உறைந்தே விட்டாள். அதிலும் அவர் முகம் காட்டும் தோரணையில் அவள் ரத்த நாளங்களே உறைந்து போனது. மெல்ல அவர் பின்பகுதியில் நின்றிருந்த முகுந்தனை பார்த்தாள். தந்தையின் கறுத்தேறிய முகம் தெரியாததாலோ என்னவோ இப்போதும் குறும்போடு சிரித்து கொண்டு நின்றிருந்தான்.
“மகேந்திரா… இன்று நம்ம வீட்டுல ஒரு விசேஷம். நீயும் அந்த பொண்ணும் இன்று ஒரு நாள் மட்டும் தங்கிட்டு போனா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.”
என்று சொன்ன சக்கரவர்த்தியை நம்ப முடியாமல் தான் பார்த்தாள் ஓவியா.
“இவரா?… இவரா? என்னை அவர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள சொல்வது.” நம்ப முடியவில்லை அவளால். இது எல்லாம் முகுந்தன் வேலை தான் என்பதை அவன் குரங்கு முகம் அவளுக்கு தெளிவாக சொன்னது.
மறுபடியும் ஒரு முறை அவளின் பார்வை சக்கரவர்த்தியிடம் இருந்து அவனிடம் போனது. இமையை மேல் தூக்கி அவன் கண்ணை சிமிட்ட,
“அப்படி என்னடா சொல்லி தொலைஞ்சா. ஊரை விட்டு ஓட ஒட விரட்டுனவரே. தங்கிட்டு போங்கணு சொல்லுறாரு. எங்க வீட்டுக்குள்ள நுழையுற தகுதி கூட உன் கூட்டத்துக்கு இல்லணு சொன்னவரு தன் வீட்டு விசேஷத்துக்கே கலந்துக்க சொல்லுறாரு. அப்படி என்ன தாண்டா சொன்னா?”
உதடு துடிக்க, மெளன மொழியால் கேட்டவளின் உள்ளத்தை படித்தாரோ என்னவோ சக்கரவர்த்தியே தொடர்ந்தார்.
“பல வருஷமா நானும், என் மனைவியும் என் மகனுக்கு மேரேஜ் பண்ணி வைக்க பெரும் முயற்சி செய்தோம். அவன் இதுவரை நழுவுற மீனா தான் இருந்திருக்கான். ஆனா இன்று பொண்ணு பார்க்க போலாம்ணு கூப்பிடுறான். இந்த நாளை விட்டா அப்புறம் அவனோட மனசு மாறிட கூடாதுணு நானும் உடனே பொண்ணு வீட்டுலயும் சொல்லிட்டேன். பெரிசா சொந்த பந்தங்களுக்கு சொல்ல முடியல. அவனோட உயிரை மீட்டு கொடுத்த இந்த பொண்ணை அவனோட சொந்தமா நினைக்கிறான். அதான் நீங்களும் வந்தா நல்லா இருக்கும்ணு பிரியப்படுறான். அதனால… நீங்களும்…”
நல்லவேளை சக்கரவர்த்தி மகேந்திரனை பார்த்து பேசினார். இதுவே அவர் பார்வை ஒவியாவின் முகத்தில் படிந்திருந்தால், இங்கு நடப்பதே வேறாக இருந்திருக்குமோ… நொடியில் அவள் முகமே வெளிறி போனது. உணர்வுகள் மொத்தத்தையும் துடைத்து எடுத்தது போல இருந்த அந்த முகத்தை பார்க்க முகுந்தனுக்கே வேதனையாக போய் விட்டது.
சக்கரவர்த்தியின் வாயில் இருந்து கேட்ட இந்த ஒற்றை செய்தியால் அவள் பாதத்திற்கு கீழ் உள்ள மொத்த பரப்புமே ஆடத் தொடங்கியது.
ஒரு நொடி, இன்று அதிகாலை அவன் கொடுத்த முத்தமும், பத்தே நிமிடத்துக்கு முன் அவன் அணைத்த அணைப்பும் நினைவுக்கு வர, அவளின் உலகமே தலைகீழாக சுழல்வது போல் இருந்தது. எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து அதிலேயே நின்றாளோ…
அவள் செவிப்பறையை மூச்சு காற்று ஒன்று தீண்ட, மெல்லமாய் நிஜ உலகம் வந்தவளின் காதில்,
“முன்னால நின்னு அர்ச்சனை தூவி சந்தோஷமா ஆசீர்வதிப்பேணு சொன்னால. அதான் இந்த ஏற்பாடு.”
பொங்கும் சிரிப்போடு சொன்னவனை, கண்ணின் கருவிழி இரண்டும் வெளி வரும் அளவு முறைத்தவள், வாய்க்குள் வைத்து எதையோ முணுமுணுத்தவாறு அவசரமாக மூச்சை இழுத்து விட,
உதட்டுக்குள் சிரித்தவன்.
“உன் ஆசையை நிறைவேற்றணும்னா முதல்ல பொண்ணு பார்க்கணும்மா. அப்புறம் தான் மற்ற எல்லாத்தையும் ஒண்ணு ஒண்ணா செய்ய முடியும். என் காதலி ரொம்ப ஆசைப்பட்டு கேட்டிருக்கா. அவளோட ஆசையை நிறைவேற்றாத நான் என்ன காதலன். அதான் உடனே ரெடி பண்ணிட்டேன்.”
தன் முன் துள்ளலோடு நின்றவனை பார்க்க பார்க்க சொல்ல முடியா ஆத்திரம் வந்தது ஓவியாவுக்கு. ஆனாலும் காட்ட முடியாமல் தன்னை கட்டுபடுத்தியவாறு நின்றிருந்தாள்.
சுற்றி ஒரு முறை மௌனத்தோடு பார்த்தாள். அவள் தன்னிலை மறந்து நின்ற நொடியே சக்கரவர்த்தியும் மகேந்திரனும் கிளம்பி விட்டிருக்க, தான் இதில் மாட்டிக் கொண்டு விட்டோம் என்பது தெளிவாக தெரிந்ததால் உணர்வை பெரும்பாடு பட்டு அடக்கி கொண்டு இறுக்கமாக நின்றிருந்தாள்.
“பொண்ணு பார்க்கிறதோட உன் ஆசை முடியாது. அதன் பிறகு தன் காதலனோட திருமணத்தை முன்நின்று நடத்தணும் என்று கூட ஆசை இருக்கும். வேணா நான் அப்பாட்ட சொல்லி மகேந்திரன்ட்ட பேச சொல்லட்டுமா? நீ ஒரு வாரம் இங்கேயே தங்கி, உன் காதலனோட திருமணத்துக்கு பொண்ணு பார்த்து, அந்த பொண்ணுக்கு உடை நகை எல்லாம் பர்சஸ் பண்ணி…”
அவன் பேச்சு நீண்டு கொண்டே போக,
ஆவேசமாக அவன் முன் பெரிய கும்பிடு ஒன்றை போட்டவள்.
“போதும்… போதும். இதோட நிறுத்திடுங்க. தயவு செய்து இதுக்க மேல வேணாம். தாங்காது. பெரிய மனசு பண்ணி என்னை ஊருக்கே அனுப்பி வச்சிடுங்க.”
கண்ணில் நீர் கோர்க்க சொன்னவளை
ஒரு மார்க்கமாக பார்த்தவன் ஒரு முறை அவளை சுற்றி வந்து, பின் நிதானமாக அவள் பின்புறம் இருந்து குனிந்து அவள் காது மடல் குறுகுறுக்க…
“ஐ… லவ்… யூணு சொல்லு. அத்தனை ஏற்பாட்டையும் உடனே நிறுத்திடுறேன்.”
என்றதும் ஆவேசமாக திரும்பியவள், அவன் பொங்கும் சிரிப்பில் உடைந்து, கடைசியில் உருக்குலைந்து, அதன் பின் நெளிந்து, கொஞ்சமாய் தன்னை மீட்டெடுத்து கொண்டு,
“நான் வாரேன். உங்க வருங்கால மனைவியை செலக்ட் பண்ண நானே வரேன். உங்க ஆசைப்படி அவள் கூட நீங்க ஒண்ணா நிக்குறதை கண்குளிர பார்க்கிறேன். நீங்க தம்பதியா நிக்குறதை பார்த்து உள்ளம் குளிர்ந்து ஆசீர்வதித்து உங்க மாமனார் வீட்டுல போடுற சாப்பாட்டை வயிறு நிமிர சாப்பிட்டுட்டே என் ஊருக்கு கிளம்புறேன். போதுமா?”
சொன்னவள் அதன் பின் ஒரு நொடி நிற்கவில்லை. சிட்டாக மறைந்து விட்டாள்.
“கஷ்டம் தான்…”
வாய்க்குள் முனங்கியவாறு தன் அறைக்கு சென்றான் முகுந்தன்.
பகல் பதினொரு மணிவாக்கில் குடும்பமே ரெடியாகி ஹாலில் காத்திருந்தது. சக்கரவர்த்திக்கு ஒவியா இங்கு இருக்கும் விசயம் சுந்தரம் வழியாக தான் தெரிந்தது. ஆத்திரத்தோடு தான் வீட்டிற்குள் நுழைந்தார். நுழைந்தவர் பார்வையில் முதலிலே முகுந்தன் விழுந்து விட, கொஞ்சமாக தன் ஆத்திரத்தை அடக்கி கொண்டு அவன் முன் நின்றார்.
என்ன நினைத்தானோ… அவர் அருகில் வந்து, நிதானமாக, மிக நிதானமாக,
“அப்பா… நான் நல்லா யோசிச்சு பார்த்தேன். அம்மா சொல்லுறதும் சரிதாணு தோணுச்சு. எத்தனை நாளுக்கு இப்படி தனியா வாழுறது. எனக்கும் ஒரு குடும்பம் இருந்தா நல்லா இருக்கும்ணு தோணுது. இன்னும் இரண்டு வாரத்துல சிங்கப்பூர்ல ஒரு மீட்டிங் இருக்கு. நான் அங்கு போயிட்டா. திரும்பி வர மூணு மாசமாவது ஆகும். அதனால நாளைக்கே பொண்ணு பார்த்து முடிவு பண்ணிடலாம்ணு நினைக்கிறேன். உங்களுக்கும் சம்மதம்னா நாளைக்கே வருகிறதா தீனதயாளன் சாருக்கு செய்தி சொல்லிடுங்க.”
சொல்லி விட்டு அவன் தன் அறைக்குள் போய் விட்டான். ஆனா நம்ப முடியாமல் அதிர்ந்து நின்றவர் சக்கரவர்த்தி தான். பின் தன் காது கேட்ட உண்மை தன்னுள் ஜீரணமான போது எதையோ சாதித்து விட்டது போல் ஒரு நிறைவு ஏற்பட்டு விட்டது அவருக்கு, அதன் பின் ஏனோ ஒவியா விசயம் அவருக்கு பெரிதாகவே தெரியவில்லை. தீனதயாளனுக்கு விபரம் சொல்வது, நெருங்கிய குடும்பத்திற்கு போன் செய்வது என நொடிகளை கடத்த தொடங்கினார்.
நீலவேணிக்கு மகனின் இந்த முடிவு பெரிய ஆனந்தத்தை தந்தது. தன் அண்ணன் மகளை தன் மகன் திருமணம் செய்யாவிட்டாலும் தனக்கு ஒரு மருமகள் வந்தால் போதும் என்றிருந்தது. அந்த அளவு இந்த நாலு வருடத்தில் அவன் அவரை படுத்தி எடுத்திருந்தான். ஒரு வழியாக மகன் சம்மதித்து விட்டான் என்றதுமே பொண்ணு பார்க்கும் பங்ஷனுக்கு தேவையானவற்றை எடுத்து வைக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார். கூடவே சக்கரவர்த்தியும்,காந்தாரியும் வேறு உதவிக்கு வர நேற்றே கொண்டு செல்ல வேண்டிய அத்தனை பொருளையும் எடுத்து வைத்து விட்டார் நீலவேணி.
பிரபா போன் அடித்து சொன்னவுடனே கிளம்பி வந்து விட்டார் குடும்பத்தினரோடு. அதனால் வீடே கொஞ்சம் கலகலப்பாக மாறி இருந்தது. அதிலும் குட்டி பெண் அஞ்சனாவால் வீடே குதூகலத்திற்கு மாறி இருந்தது.
ஆனாலும் மேலிருந்து ஓவியா கீழே வரவே இல்லை. ஒரு பக்கம் முகுந்தன் கொடுத்த அடியும், மறுபக்கம் திலகா இல்லாத தனிமையும் அவளை கொடுமை செய்தது. இரவு முழுதும் விடாது கண்ணீர் கண்ணின் ஒரம் வழி மெத்தையை நனைத்து கொண்டு தான் இருந்தது. காலை எழுந்தும் மெத்தையின் மேல் பிடித்து வைத்த பிள்ளையார் போலவே தான் இருந்தாள். அதற்கு மேல் அப்படி இருக்க முடியாது என நினைத்தவள் எழுந்து புறப்படத் தொடங்கினாள்.
“என்னப்பா… இன்னும் ரெடியாகலியா? சீக்கிரம் சீக்கிரம் நல்ல நேரம் முடிகிறதுக்குள்ள கிளம்பி ஆகணும்.”
மனிதர் சந்தோஷத்தின் எல்லையில் குதித்துக் கொண்டிருந்தார். மகனை சிரிப்போடு பார்த்த ரங்கராஜன்.
“இதோ ரெடியாகிடுறேண்டா” என அறைக்குள் நகர, சக்கரவர்த்தி காலில் சக்கரம் கட்டி கொண்டது போல பம்பரமாக சுழல ஆரம்பித்தார்.
ஒவியா மகேந்திரனை திருமணம் செய்ய ரெடியாகி விட்டது தெரிந்ததால் தான் மகனில் இந்த மாற்றம் என நம்பினார். அதிலும் தன் ராஜதந்திரம் பலன் கொடுத்து அந்த கூலிகார கும்பலில் இருந்து தன் மகனை மீட்டெடுத்து தன் தகுதிக்கும் அந்தஸ்துக்கும் சற்றும் குறையாத தீனதயாளனோடு சம்மந்தம் வைக்க போகும் நிகழ்வே அவருள் சமாதானத்தை விதைத்து விட்டிருந்தது. அதனால் அதற்கு மேல் யோசிக்கவே இல்லை அவர். சக்கரவர்த்தியா கொக்கா? மனதுள் தனக்கு தானே புகழாரமும் சூட்டிக் கொண்டார்.
சந்தோஷத்தோடு அறையை விட்டு வெளிவந்தவர் மகள் வயிற்று பேத்தியோடு குதூகலமாய் விளையாட தொடங்கிய போது, முகுந்தன் பட்டுவேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை தோரணையில் மேலிருந்து கீழ் இறங்கி வந்தான். அவனின் தோற்றமும் கலகலப்பும் வீட்டினரை சந்தோஷப்படுத்த, அவன் தன் பாட்டியின் அருகில் போய் அமர்ந்தான். பக்கத்தில் தாத்தாவும் இருந்ததால் காந்தாரி எதுவும் பேரனிடம் கேட்கவில்லை.
அதே நேரம் ஒரு மோசமான சாரியை அணிந்து கொண்டு ஓவியா கீழே வந்தாள். அவளை அந்த உடையில் பார்த்தவனின் உதடு விரிந்தது.
“பட்டிகாடு. இதை போய் கூட கூட்டிட்டு போகணும்னு தலையில எழுதியிருக்கு பாரு. இவள் கூட வரணும்ணு இவன் வேற ஆசைப்படுறானே. இவனை என்னத்த சொல்லுறது.”
சக்கரவர்த்தி சலித்து கொண்டாலும், எதுவும் பேசவில்லை.
பேசினால் வாக்கு தடித்து மகன் பெண் பார்க்கும் படலத்தையே நிப்பாட்டி விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் அந்த கூலிகாரன் மகள் தன் தகுதியை பார்த்து வெட்கி தலைகுனிந்து மொத்தமாய் தன் மகனிடம் இருந்து விலகி ஒட வேண்டும் என்ற எண்ணமும் தான் அவரை அமைதியாக்கி இருந்தது.
ஓவியா வந்த பத்தாவது நிமிடம் அத்தனை பேரும் மூன்று வண்டியில் ஏற, வண்டி பெண் வீட்டை நோக்கி பயணமானது. இந்த நொடி கூட ஓவியாவை மகேந்திரன் அருகில் இருக்க விடாமல் காந்தாரியின் பக்கத்திலே இருக்க வைத்தான்.
எங்கு இருந்தாலும் அவன் பார்வை நொடி பொழுதும் அவளில் பட்டு பட்டே மீண்டது. ஆனால் அந்த இடத்தில் அவள் முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போல் இருந்தாள். அவர்கள் குடும்பத்தோடு அவளால் சிறிது கூட ஒட்டுதல் ஏற்படுத்த முடியவில்லை. அவர்களின் பேச்சும் அலட்டலும் அவளை ஒதுங்கி அமர வைத்து விட்டது.
“உனக்கு என்ன கொடுமையான மனசு முகுந்த். உன்னை போயா உயிரை விட மேலா நேசிச்சேன். உனக்கு எவ்வளவு கொடூர புத்தி. நான் இந்த நொடி எவ்வளவு கஷ்டப்படுவேன்னு தெரியும். ஆனாலும் இவங்க மத்தியில புழு போல துடிக்க விடுறீங்கல. சக்கரவர்த்தியோட மகன் ஆச்சே. உங்களுக்கு மனித உணர்வுகளோட விளையாடுவது என்ன புதிதா? ஆனா உன் அப்பா பண்ணுறதை விட இப்போ நீ பண்ணுறியே. அது தாண்டா கொடுமையா வலிக்குது. அதுல வேற என் மனசுல இருக்கிற உன்னை இன்னொரு பொண்ணோடு பார்க்கவே சகிக்காத என்னை, நீயே கூட்டிட்டு போய் இன்னொரு பொண்ணை நிச்சயம் பண்ணி உனக்கானவளா உன் பக்கத்துல நிற்க வைக்கிறதை என் கண்ணால் பார்க்க வைக்க போறா பாரு. இதை விட கொடுமையான வலியை உங்க அப்பாவால கூட எனக்கு கொடுக்க முடியாது. உனக்கு எவ்வளவு கொடுமையான மனசு இல்ல முகுந்தன்.
வழி நெடுக்கிலும் அவனை திட்டிக் கொண்டே தான் பயணமானாள். அவள் முக சுழிப்பும் நெற்றி சுருக்கமும் அதை சரியாக அவனுக்கு சொல்லி விட,
இறங்கி பெண் வீட்டிற்குள் நுழையும் இடைவெளியில்,
“ரொம்ப கஷ்டமா இருக்குனா. முகுந்த் ஐ… லவ்… யூனு சொல்லு. இந்த நொடியே எல்லாத்தையும் நிறுத்திடுறேன்.”
கஸ்தி குரலில் சொன்னவனை அதிர்ந்து பார்த்தவள் பரபரவென நாலாபக்கமும் தான் பார்த்தாள்.
“யாரும் கேட்கல. என்ன சொல்லுறா? சொல்லுறியா?”
அவன் கண் சிமிட்டி கேட்க,
“அறிவு கெட்டவனே. எங்க வந்து நின்னு என்ன பேசுறா?”
அவள் வாய்க்குள் வைத்து திட்ட,
“ஒ.கே… ஓ.கே… அந்த கண்ணை இப்படி பாடாபடுத்தாத. நான் இந்த பொண்ணையே கட்டிக்கிறேன்.”
என முகுந்தன் உள் செல்ல, ஒவியா திருதிருவென விழித்தாள். “என்ன மனுஷன் இவன். எப்படி எல்லாம் பேசுறான். என்னை உறைய வைக்கிறதே இவன் வேலையா போச்சு. நொடி பொழுதும் இப்படி பதட்டத்தோடவே வச்சிருப்பானா? என்ன கொடுமை கடவுளே இது.”
தலையில் அடித்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே வந்தாள். நிற்க முடியவில்லை அவர்களோடு, பெண்ணை நிமிர்ந்து பார்க்கும் திராணியும் இல்லை. அவன் முன் பெண் வந்து காப்பியை நீட்டும் படலத்தை காணும் அளவு தைரியமும் இல்லை. எழுந்து பின்புறம் யாரும் இல்லாத இடமாய் தேடி ஓடினாள். போகும் முன் முகுந்தனை ஒரு முறை பார்த்து விட்டு தான் சென்றாள். காரணம் அவன் பின்னால் வந்து விட கூடாதே என்ற பயம். நல்ல வேளை அவன் பார்வை மொத்தமாக அவளில் இருந்து விலகி இருந்தது.
கூடவே பெண்ணின் தமையனிடம் மிக சுவாரஸியமாக பேசிக் கொண்டிருந்தான். சுற்றி பார்வையை சுழல விட்டாள். மகேந்திரன் இளம்பெண் ஒருத்தியோடு வாய்விட்டு சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.
“ரெண்டு தொல்லையும் ஒழிஞ்சி.”
வாய் விட்டே சொன்னவள் மெல்ல திரும்பி நடந்து யாருமில்லா இடம் தேடி அமர்ந்தாள்.
அவர்கள் தொல்லையில் இருந்து விலகினால் நிம்மதி கிடைத்து விடும் என்று தான் இங்கு வந்தாள். ஆனால் தனிமை அதை விட அதிகமான வலியை கொடுக்கும் என்பதை உணராமல் வந்து விட்டாள். வந்த நொடியில் இருந்தே மலை சரிவுக்கு பின் தன் வாழ்வில் நடந்த எல்லாம் படம் போல ஒடி வந்து அவளுள் அமர்ந்து விட,
அவளை அறியாமல் விழி நீர் விழியை தாண்டி கன்னத்தில் வழிந்தது. சிறிது நேரம் தான் உன்னை அழ விடுவேன் என்பது போல…
அந்த குரல்… ஆம் அதே குரல் அவள் அருகில் கேட்டது. திடுக்கிட்டு திரும்பினாள்.
‘அவனே தான்.”
கண் சிமிட்டி நின்றவன். அவள் கண்ணீரை பார்த்து சட்டென முகம் மாற,
“வலிக்குதுல. அப்படியும் ஏன் அடம்பிடிக்கிறா? இப்ப கூட எதுவும் ஆகல. வாய் திறந்து சொல்லு. இது எல்லாத்தையும் நிறுத்திடுறேன்.”
என்றவனை முறைத்தவள்,
“இந்த அழுகை நீங்க பொண்ணு பார்க்க வந்ததால வரல. என்னை கூட்டிட்டு வந்து கொடுமைப்படுத்துறீங்களே அது தான் வருது. நீங்க யாரை கட்டுனா எனக்கென்ன? அதுக்கு நான் ஏன் அழப் போறேன். என்னை விட்டா போதும்.”
ஆத்திரத்தோடு சொன்னவளை ஆழமாக பார்த்தவன், ஒரு நொடி அமைதிக்கு பின்,
“அப்போ எழுந்து வா. நானும் என் வருங்கால மனைவியும் ஒண்ணா சந்தோஷமா இருக்கிறதை பாரு. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ மனதார வாழ்த்து.”
“அம்புட்டு தானே. போங்க வரேன்.”
ஒவியா சொல்ல மட்டும் செய்யவில்லை. செய்யவும் செய்தாள். முழு பங்ஷனும் முடியும் மட்டும் அந்த கூட்டத்துக்குள்ளே இருந்தாள். இறுக்கத்தோடு நின்றவளை பார்க்க பார்க்க பரிதாபத்துக்கு பதில் ஆத்திரம் தான் வந்தது. அந்த ஆத்திரமே அதன் பின் அவள் அருகில் செல்ல விடவில்லை. தூரமாய் நின்றாலும் அவன் தன்னையே பார்த்து கொண்டு நின்றதால் அவளும் அங்கிருந்து நகரவில்லை.
ஆனால் அந்த மூன்று மணி நேரமும் மூச்சை பிடித்து கொண்டு எப்படி தான் நின்றாளோ அவளுக்கே தெரியவில்லை. முகத்தில் உணர்வை காட்டாமல் நிற்பது அவளுக்கு பெரும் சவாலாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா இறுகி மொத்தமாய் இறுகி போய் தான் முகுந்தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
வீட்டினுள் நுழைந்ததுமே தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டாள். உடைந்து போய் உள் நுழையும் அவளை பார்க்க பார்க்க ஆத்திரம் தான் வந்தது முகுந்தனுக்கு. இந்த ஒரு இடத்தில் கூட அவள் தனக்கானவளாய் மாறவில்லையே என்ற ஆத்திரம். அந்த ஆத்திரமே அவளை தொடர்ந்து செல்லவும் விடவில்லை. நேரே தன் அறைக்கு வந்தவன் டிரஸை மாற்றி ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்க்கு மாறி வெளியே வந்தான்.
வெளிவந்தவன் நேரே வண்டியை எடுத்துக் கொண்டு நளனின் வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தான்.
“ வாங்க தம்பி. நளன் உள்ளால படுத்திருக்கான்.”
என்ற பார்வதிக்கு ஒரு புன்சிரிப்பை கொடுத்தவன் உள்ளே வந்தான்.
உள் வந்த நண்பனை கண்டதும் புன்முறுவல் பூத்தவன்,
“வாடா புது மாப்பிள்ளை. பங்ஷன் எல்லாம் எப்படி இருந்துச்சு.”
“ம்… தீனதயாளன் ரொம்ப நல்லாவே ரெடிப் பண்ணியிருந்தாரு. இனி அப்பாவுக்கு வேலை தலைக்கு மேல இருக்கும். அவரோட பல வருஷ ஆசை இல்லயா? தேதி முடிவு பண்ணுன நொடியில இருந்து அந்த வேலையில முழ்கிட்டாரு. இனி கம்பெனியை நாம தான் பார்க்கணும். என்ன பக்காவா ரெடியாகிட்டா தானே.”
என்றதும் தயக்கமாக முகுந்தன் முகத்தை திலகா பார்க்க,
“முகத்தோட மருவை பற்றி நீங்க யோசிக்க வேணாம். அதுக்காக ஒரு ஸ்பெஷல் டாக்டரை பார்த்து வச்சிருக்கேன். உங்க மேரேஜ்க்கு முன்னால மாத்திடலாம். அதுக்காக அதுவரை உங்க ஆள் கட்டிலே கதினு கிடக்கணும் நினைக்காதுங்க. அவனுக்கு என்னோட அதிக வேலை இருக்கு.”
சிரித்த முகத்தோடு சொன்னவனை சினேகமாக பார்த்தவள்,
“சரி சார். அவனை நீங்க பழையபடி மீட்டு கொடுத்துட்டாப் போதும். முகமே மாறி போச்சுனு உடைஞ்சி இருக்கான். வெளியில வரவே தயங்குறான்.”
“என்னடா… அப்படியா?” எதுக்கு தயங்குறா. உன்னை ரசிக்க வேண்டியவளே இந்த அழகு போதும்னு இருக்கிறப்ப உனக்கு என்ன தயக்கம். எழும்பு மேன். இது எல்லாம் நளனோட அகராதியில ஒரு விசயமே இல்லனு காட்டு.”
சொன்னவன் அவனை பிடித்து தூக்கி அணைத்தவாறு,
“அவனை நான் பாத்துக்கிறேன் திலகா. நீங்க உடனே கேரளாவுக்கு கிளம்பணும்.”
“நானா?… கேரளாவுக்கா?”
ஆமாம்மா. இப்போ நீ ஒவியா கூட இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். திருமணம் முடிகிற வரை மகேந்திரனோட நிழல் கூட அவள் மேல படாம பாத்துக்க. கூடவே ரொம்ப உடைஞ்சி போய் இருக்கா. கொஞ்சம் பேசி சரிப்படுத்து.”
என்றதும் திலகா தயக்கத்தோடு நளனை பார்க்க,
“அவனை நினைச்சி தயங்காத , எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு இன்னும் இரண்டு நாளுல நாங்க இரண்டு பேரும் அங்க வந்திடுவோம். அப்புறம் ஒவியாவோட திருமணம் முடிகிற வரை அங்கே தான் இருப்போம்.”
“ம்…சரி சார்.”
என்றவள் நளனிடம் சொல்லி விட்டு முகுந்தனோடு கிளம்பினாள். அவர்கள் வீடு வந்து சேரும் போது, மறுபடியும் மகேந்திரனும் ஓவியாவும் கிளம்ப ரெடியாகி இருந்தனர். அவர்களுடன் திலகாவும் இணைந்து கொள்ள, திலகாவை பார்த்த பின் தான் மெல்லமாய் அவள் மனமும் உதடும் விரிந்தது.
அவள் சென்ற பின் முகுந்தனுக்கு ஆபீஸ்ஸிலும் வெளியிலும் அதிக வேலை இருந்தது. கூடவே நரேனுடன் அதிக நேரம் செலவிட வேண்டியதாக போனது.
“நீங்க இனி கிளம்புங்க சார். சொன்னது போல நான் எல்லா வேலையும் முடிச்சிட்டு உங்களை கேரளாவுல வந்து பாக்குறேன்.”
“கவனம் நரேன். இது என் வாழ்க்கை. ரொம்ப காலதாமதம் ஆகிட கூடாது. இன்னும் ஒரு நாளுல நீ எல்லாத்தையும் ரெடி பண்ணனும்.”
“தெரியும் சார். பக்கவா ரெடிப் பண்ணிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்.”
“ஓ.கே… அப்போ நான் கேரளாவுக்கு கிளம்புறேன்,
என நரேனிடம் சொல்லி விட்டு வந்தவன் மறுநாளே ரெடியாகி மிக மிக உற்சாகத்தோடு வெளி வந்தான். வந்தவன் கண்ணுக்கு சோபாவில் இருந்த சக்கரவர்த்தி தான் முதலில் விழுந்தார்.
“என்னப்பா எல்லாரும் ரெடியாகிட்டீங்களா?”
என்றவனை கோபத்தோடு முறைத்தார் சக்கரவர்த்தி.
“எதுக்குப்பா முறைக்கிறீங்க…”
“இது எல்லாம் இப்போ நமக்கு தேவையா முகுந்தன். கம்பெனியில ஆயிரம் வேலையை வச்சிட்டு நமட்ட வேலை பார்த்த பொண்ணோட மேரேஜ்க்கு மூணு நாள் முன்னால போகணுமா? இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியாப்பா.”
என்றவரை சினேகமாக பார்த்தவன்,
“இதுல என்னப்பா இருக்கு. நம்ம கீழ ஆயிரம் பேர் வேலை பார்க்கலாம். ஆனா ஒவியா குடும்பம் போல நம்மளை யாரும் ஸ்பெஷலா ட்டீட் பண்ணல தானேப்பா. பொண்ணும் மாப்பிள்ளையும் வீடு தேடி வந்து அழைச்சிருக்காங்கப்பா. கூடவே உங்க மகனோட பொண்ணு பார்க்கும் பங்ஷன்ல்லயும் கலந்திருக்கிறாங்க. அப்படியும் எப்படிப்பா போகாம இருக்க முடியும். அதுலயும் அவங்க அம்மாவும் அப்பாவும் கூட போன் செய்து எல்லாரும் கட்டாயம் வரணும்னு உங்களை கேட்டாங்களேப்பா. நீங்க கூட,
நான் இல்லாம எப்படி? நான் முன்னால நின்னு நடத்தி வைக்கிறேனு வாக்கு கொடுத்திருக்கிறீங்களேப்பா. அப்படியும் இப்படி பேசினா எப்படி? அதுலயும் என் உசுரை காப்பாத்துனவளோட திருமணம். அவங்க இதுவரை நமட்ட எந்த உதவியும் கேட்கல. அவங்க கேட்டது ஒண்ணே ஒண்ணு தான். அது நாம குடும்பத்தோட போய் அவங்க மகள் கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும்ணு தான். அதை கூட செய்யலனா எப்படிப்பா…
என்ற மகனின் சாதுரியமான பேச்சில் அடிப்பட்டவர் அமைதியாக, அதன் பின் குடும்பத்தில் யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் சக்கரவர்த்தி மகனின் வார்த்தையில் இடை சொறுகி நின்ற வார்த்தையை கவனிக்க தவறி விட்டார்.
தான் ஓவியாவின் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசியது இவனுக்கு எப்படி தெரியும் என்று ஒரு முறை யோசித்தால் போதும், மகன் அனைத்தையும் தெரிந்து வைத்து கொண்டு தான் காய் நகர்த்துகிறான் என்பது தெரிந்திருக்கும். ஆனால் அதை யோசிக்க முடியாத அளவு அவரை பெண் பார்க்கும் படலம் மாற்றி இருந்தது. நிச்சயம் செய்ய நாளும் குறித்து, அதற்கான வேலையையும் முகுந்தன் அவர் தலையில் ஏற்றிருந்தால், மகனின் சொற்களில் தெரிந்த நிஜம் அவரை சுடவே இல்லை. மகன் கொடுத்த இன்ப அதிர்வில் இருக்கும் வரை அவரால் இங்கு நடக்கும் எதையுமே உணரவே முடியாது.
இது இத்தனை வருடம் அவரோடவே இருக்கும் அவனுக்கு தெரியாதா? அதனால் தானே ஓவியா பக்கம் இருந்த அவர் பார்வையை மாற்ற பெண் பார்க்கும் படலத்துக்கே அவன் சம்மதித்தான். அவன் யூகம் சரிதான் என்பது போல மகன் திருமணத்திற்கு சம்மதித்ததும் ஒவியா பக்கம் இருந்த அவர் பார்வை மகனின் நிச்சயம் பக்கம் நகர்ந்து விட்டது அல்லவா. இந்த மூன்று நாளாய் தீனதயாளனோடே அவர் பேச்சு அதிகமாகி போக, இவர் பார்வையில் இருந்து ஓவியா குடும்பம் முழுமையாக விலகி விட்டது.
இதன் பிறகு அவர்கள் பின்னால் போக என்ன இருக்கிறது என்றே நினைத்தார் சக்கரவர்த்தி. ஆனாலும் இப்போது மனதின் அடி ஆழத்தில் எதுவோ சரியில்லையோ என உறுத்த ஆரம்பித்தது. சற்று தயங்கியவரை மகன் விடவில்லை. அவனுக்காக வேண்டியாவது கிளம்பியாக வேண்டும். வேண்டா வெறுப்பாக தான் கிளம்பி இருந்தார். கூடவே தீனதயாளன் குடும்பமும் முகுந்தன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வந்திருக்க… அதன் பின் ஏனோ சக்கரவர்த்தி வெறுப்பை காட்டவில்லை. தன் வருங்கால சம்மந்தியோடும் அவர் குடும்பத்தோடும் இணைந்து கேரளா நோக்கி பயணமானார்.
வண்டி ஓவியாவின் வீட்டின் முன் வந்து அணிவகுத்து நிற்க, எழிலரசி நம்ப முடியாமல் தான் பார்த்தாள். அடுக்கடுக்காய் ஆறு வண்டிகள் வரிசை கட்டி நிற்க, ஒவியா வீட்டில் கூடி நின்ற உறவு கூட்டம் மொத்தமும் விழி உயர்த்தி தான் பார்த்தது.
அதிலும் தெற்கு மூலையில் பூ தொடுத்து கொண்டிருந்த பெண் ஒருத்தி தன் பக்கத்தில் இருந்தவளிடம்,
“இது, ஓவியா வேலை பார்த்த கம்பெனியோட முதலாளி. ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னால இங்கு வந்தாரு. இவரால தான் நம்ம ஓவியாவுக்கு இம்புட்டு பெரிய இடத்துல சம்மந்தம் முடிஞ்சிக்கிறதா ஊர்ல்ல எல்லாரும் பேசிக்கிறாங்க…”
அவள் காற்றுக்கும் கேட்காத குரலில் கிசுகிசுக்க, அதை கேட்டுக் கொண்டிருந்தவள் முகம் வந்திருந்தவர்களை ஆராய்ந்தது.
“அதுல யாருப்பா அவளோட முதலாளி.”
“அதோ கசண்டி தலையோட இருக்காரே அந்த பெரிய மனுஷர் தான்.” சக்கரவர்த்தியை அவள் காட்ட, அந்த கூட்டத்தில் இருந்த அனைவருமே திரும்பி பார்த்தனர்.
அதே நேரம், அந்த கூட்டத்தில் இருந்த இளம்பெண் ஒருத்தியை எழிலரசி அழைக்க,
“வந்துட்டேக்கா.”
என எழுந்து ஓடியவள் எழிலரசி பக்கம் வர,
“கலா… ஒவியாவோட முதலாளி குடும்பம் இப்படி வந்து நிற்கும்ணு நான் கனவுல கூட நினைக்கல. அந்த தம்பி போன் செய்து அவங்களை முறைப்படி கூப்பிட சொன்னதால சம்பிரதாயத்துக்கு கூப்பிட்டேன். ஆனா அவங்க இப்படி வந்து குடும்பத்தோட இறங்குவாங்கணு தெரியாது. அவங்களை உட்கார சொல்ல கூட நல்ல சோபா இல்ல. உன் வீட்டுல இருக்கிறதை இரண்டு நாள்…”
சொல்லி முடிக்கவில்லை.
“அதனால என்னக்கா… இதோ இருங்க. அந்த மனுஷனை தூக்கிட்டு வர சொல்லுறேன். பெரிய இடத்து ஆளுங்க எல்லாம் வருகிற அளவு அக்கா குடும்பம் உயர்ந்து நிக்குறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா தான் இருக்கு.”
என்ற கலா வெளியேறி அடுத்த நிமிடமே தன் கணவரின் உதவியோடு சோபாவை வீட்டின் முன் பந்தல் போட அமைக்கப்பட்டிருந்த ஓலை கூரையின் அடியில் கொண்டு வந்து போட, வந்திருந்தவர்கள் அனைவரும் அதில் அமர்ந்தனர்.
எழிலரசிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இவர்களை உபசரிப்பது எப்படி என்றும் புரியவில்லை. அரிசந்திரன் சற்றும் யோசிக்காமல் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் ஜுஸ்சும் பழமும் கொடுக்க, அவர்களும் வாங்கி உண்டனர்.
முகுந்தன் அருகில் வந்த மோனிகா, வீட்டை கண்களால் அளந்தவாறு,
“இங்கேயா முகுந்த் நாம மூணு நாள் தங்கணும்.”
என வெறுப்பின் உச்சத்தில் அதிலும் கிசுகிசுப்பாய் மென் குரலில் கேட்க,
“உங்களுக்கு பிடிக்கலியா?”
ஆர்வமாய் கேட்டவனை ஒரு அசட்டு சிரிப்போடு பார்த்தவள்,
“இப்படியான வீட்டுல தங்கி பழக்கம் இல்ல முகுந்த். இது தான் பங்ஷன் வீடுணு தெரிஞ்சா வந்திருக்கவே மாட்டேன்.”
என்றவளை ஒருமுறை திரும்பி பார்த்தவன், மெல்ல சிரித்தவாறு.
“ரொம்ப கஷ்டப்பட்டுக்க வேணாம். நீங்களும் உங்க குடும்பமும் தங்க வேற ஏற்பாடு பண்ணியிருக்கேன். அங்கு சௌகரியமா தங்கிட்டு, நாளைக்கு கன்னியாகுமரியையே சுத்தி பார்க்க ரெடிப் பண்ணியிருக்கேன். மறுநாள் மேரேஜ்ல கலந்துகிட்டு நீங்க கிளம்பிட வேண்டியது தான்.”
சொன்னவனை சிரிப்போடு பார்த்தவள்,
“தப்பிச்சேன்…”
என வாய் விட்டு சொல்லியவாறே நகர, இப்போதோ சக்கரவர்த்தி நெருங்கி வந்தார். தந்தையை தவிர்த்து ஒடிக் கொண்டிருந்த எழிலரசி பக்கம் வந்தவன் முகுந்தன், தன்னை தவிர்த்து செல்லும் அவனை பார்க்க ஆத்திரம் வந்தது அடக்கி கொண்டார். எழிலரசியின் முன் நின்ற மகனை சுட்டெறிக்கும் பார்வை பார்த்தார். ஆனால் அதை கவனத்திலே கொள்ளாதவன் போல, அவன் எழிலரசியிடம்,
“எதுக்கும்மா… இப்படி அல்லல்ப்படுறீங்க. வந்தவங்க இருக்கிற செயர்ல்லயே உட்காருவாங்க.அவங்களுக்காக நீங்க ஸ்பெஷலா எதுவும் பண்ணவேணாம்.”
“அது இல்லப்பா. நீங்க இருப்பீங்க. கூட வேலை பாக்குற பொண்ணு வீடு அனுசரிச்சி உட்காருவீங்க. அவங்க முதலாளிங்க. அவங்களை எப்படிப்பா சாணி தரையில உட்கார வைக்க முடியும்.”
எழிலரசி இப்போதும் அவனை ஓவியாவோடு வேலை பார்ப்பவன் என்ற ரீதியிலே பார்க்க, நளனுக்கு சிரிப்பு வந்தது.
“பொண்ணு கழுத்துல தாலி கட்டுனாலும் உன்னை முதலாளி மகன்னு சொல்ல மாட்டாங்க போல இருக்குடா.”
நளன் மென் குரலில் சொல்ல,
“சும்மா இருடா. “
என அவன் காலை மிதித்தவன்,
“எதாவது வேலை இருக்குணா சொல்லுங்கம்மா. நாங்களும் செய்கிறோம்.”
என அவன் ரெடியாக,
“அது எதுக்கு தம்பி. எல்லாம் நாங்க பாத்துக்கிறோம்.”
“அப்படி சொல்ல கூடாது. ஒவியாவோட கல்யாணத்துல முன்னால நின்னு இழுத்து போட்டு செய்வோம்ணு சொல்லி இருக்கோம். கொடுத்த வாக்கை மீறுகிற பழக்கம் எங்களுக்கில்ல…”
சென்னவன் ஒரு பக்கம் இருந்த செயரை எடுத்து எல்லாரும் உட்கார விரிக்க தொடங்க, கொலைவெறியோடு அவனை பார்த்து நின்ற சக்கரவர்த்தியின் அருகில் வந்த தீனதயாளன்,
சும்மா சொல்ல கூடாது. மாப்பிள்ளை ஸ்டாப்ஸ் வீட்டு விசேஷங்களுல இப்படி தான் கலக்குவாரு போல… இனி நாமளும் மாறணும். இது கூட ரொம்ப நல்லா இருக்குல சம்மந்தி. வசதியான வீட்டு விசேஷங்களுல நிறைய கலந்திருக்கேன். ஆனா இப்படியான பங்ஷன்ல்ல ஒன்றுல கூட கலந்துகிட்டது கிடையாது. மாப்பிள்ளையால இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. என்னவோ மனசுக்கு இதமா இருக்கு.
நெகிழ்வோடு சொன்னவரிடம் எதுவும் பேச முடியாமல் சிரித்து வைத்தார் சக்கரவர்த்தி. ஆனால் அவர் உள்ளம் கொதிகலன் போல கொதித்து கொண்டிருப்பது பாவம் அங்கு இருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. அவர் உடல் தான் அந்த நொடி அங்கு இருந்தது மனமோ என்ன என்னவெல்லாமோ செய்ய சொல்லி அவரை உசுப்பேற்றியது.
ஆனாலும் அந்த இடத்தை விட்டு நகர முடியாது என்பது தெரிய, பல்லை கடித்து கொண்டே அமர்ந்திருந்தார். பாவம் அவரால் பாவப்பட்ட ஓவியாவை தன் அதிகாரத்தை காட்டி அடக்குமுறையில் வைக்க முடிந்தது. ஆனால் மகனிடம் குரல் உயர்த்தி ஒற்றை வார்த்தை பேச முடியவில்லை.
அதே நேரம்,
எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்த ஒரு பெரியவர்,
“வாங்க… வாங்க… எங்க ஊருக்கு, அதுவும் எங்க குடும்ப பங்ஷனுக்கு குடும்பத்தோட வந்திருக்கிறதை நினைச்சி ரொம்ப சந்தோஷப்படுறோம். தம்பி சொன்னப்ப நம்பல. ஆனா நேர்ல்ல பார்த்தப்ப சந்தோஷத்தை தாங்க முடியல…”
வந்த பெரிசு சொல்லி கொண்டே போக, தீனதயாளன் புருவம் சுருக்கி அவரை பார்த்தார்.
“நான் இந்த ஊர் தலைவர் தம்பி. பஞ்சாயத்து தலைவரும் கூட, நாங்க இவ்வளவு பேர் இருந்தும் இப்படி ஒரு நல்லகாரியத்தை செய்யணும்னு எங்களுக்கே தோணல. ஆனா தன் கம்பெனியில வேலை பார்க்கிற பொண்ணுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கொடுக்கணும்னு ஐயாவுக்கு தோணியிருக்கு பாருங்க. என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்.”
வந்தவர் நிறுத்தாமல் புகழ்ந்து கொண்டே போக சக்கரவர்த்தி சம்மந்தி முன் நெளிய தொடங்கினார். மனதில் அழுக்கை வைத்திருக்கும் அவருக்கு இந்த புகழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போலும்.
தடுமாறிய அவரை தீனதயாளன் வேறு புகழ்ந்து பேச ஆரம்பிக்க, சக்கரவர்த்திக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. அந்த நபர் மட்டுமல்ல அடுத்து அந்த வீட்டிற்கு வந்த அனைவருமே சக்கரவர்த்தியை உயர்வாகவே பேசினர். அதிலும் இளைஞர் அணி தலைவர் என வந்த ஒரு துடிப்பான இளைஞன்.
“தன் கம்பெனியில சாதாரணமா வேலை செய்கிற ஒரு பெண் வீட்டுக்கு மூணு நாள் முன்னால வந்து திருமண வேலைகளை முன்னின்று கவனித்து திருமணத்தை தன் தலைமையில நடத்த வந்திருக்கிறதுக்கு எல்லாம் ஒரு பெரிய மனசு வேணும். அப்படி ஒரு தங்கமான முதலாளியை பார்த்த சந்தோஷம் எனக்கு இருக்கு. உங்களை போல உயர்வான எண்ணம் கொண்ட உங்களோட சேர்ந்து நாங்களும் இந்த மேரேஜை முன்னின்று நடத்துறோம்.
சொன்னவன் அதோடு நிற்காமல், கூட வந்த அத்தனை இளவட்டங்களையும் பார்த்து,
இந்த நொடியில இருந்து இது நம்ம வீட்டு கல்யாணம். இனி நீங்க எல்லாருமே ஐயாவோட சேவகன். ஐயா என்ன சொல்லுறாங்களோ அதை தட்டாம செய்யணும். தங்கச்சி ஓவியாவோட கல்யாணம் சீரும் சிறப்புமா நடந்து முடிகிறது வரை யாரும் இங்கிருந்து நகர கூடாது.
சொன்னது மட்டுமல்லது, அரிசந்திரனுக்கு உதவியாக போய் விட, இதுவரை ஆள் இல்லாமல் அலங்கோலமாய் கிடந்த வேலைகள் எல்லாம் சரசரவென செய்து முடிக்கப்பட்டு கொண்டிருந்தது.
நடக்கும் அத்தனையும் பார்க்க பார்க்க சக்கரவர்த்தி வியர்த்து போனார். வெளியில் நடந்து கொண்டிருக்கும் உரையாடல் அத்தனையும் கேட்டு கொண்டே செயரை தூக்கி விரித்து கொண்டிருந்தவனின் அருகில் நெருங்கி வந்த நளன்,
“நல்லா மாமியாருக்கு ஐஸ் வைக்கிறாடா… கூடவே அப்பாவுக்கு ஆழமா அட்வைஸ் பண்ணுறா? நடத்து… நடத்து…”
என்றவனின் தோளில் செல்ல அடி கொடுத்தவன்.
“விடுடா… விடு. இது போல பல விசயம் இனி இங்கு நடக்கும். கண்டுக்காத,”
என சிரிக்க, இழுத்து போட்டு செய்யும் அவனை மகிழ்வோடு பார்த்து விட்டு உள்ளே வந்தாள் எழிலரசி.
“ஓவியா. அப்பாவுக்கு கட்டிக்க ஒரு புது வேஷ்டி வாங்கி வச்சிருந்தோம்ல அதை எடும்மா…”
“எதுக்கும்மா…”
திலகா தான் கேட்டாள். ஓவியா பேசும் நிலையில் இல்லை. மெட்ராஸில் இருந்து வந்த நொடியில் இருந்தே இப்படி தான் இருக்கிறாள். நடந்த விசயம் நளன் வழியாக தெரியும் என்பதால் திலகா அவளிடம் எதையும் கேட்டு சங்கடப்படுத்தவில்லை. சுந்தரி வழியாக மகேந்திரன் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லாத போது அவனும் அப்படிப்பட்டவன் தான் என அன்றே நிரூபித்த நொடியில் இருந்து அவளுக்குமே இந்த திருமணம் நின்று ஒவியா முகுந்தனுடன் சேர்ந்து விட வேண்டும் என்றே தோன்றியது,
அது பற்றி பேசினால் இவள் காது கொடுத்து கூட கேட்க மாட்டாள் என உறுத்த, அவள் யோசிக்க நேரம் கொடுத்து அமைதியாகவே இந்த இரண்டு நாளும் இருந்தாள். ஆனால் அருகில் இருந்த இந்த இரண்டு நாளும் மகேந்திரனிடம் அவளுக்கு எந்த ஒட்டுதலும் ஏற்படவில்லை என்பதும் முகுந்தனின் செயல்கள் பல அவளை கொடுமையாக சித்திரவதை செய்து கொண்டிருப்பதையும் அவளால் உணர முடிந்தது.
அதனால் தான் முகுந்தனுக்கு நம்பிக்கையே கொடுத்தாள். அந்த நம்பிக்கையை பிடித்து கொண்டு தான் முகுந்தன் மோனிகாவோடு வந்து இறங்கி இருந்தான். அவனுக்கு தெரியும். அவளால் தன்னை இன்னொரு பெண்ணுடன் பார்க்க முடியாது என்று. அந்த அவஸ்தையே,
“எப்படியாவது இந்த திருமணத்தில் இருந்து என்னை காப்பாற்றி எங்காவது கொண்டு சென்று விடு” என சொல்ல வைத்து விடும் என்றே திருமணம் முடிந்த மறுநாளே சிங்கப்பூர் போக டிக்கெட்டும் புக் பண்ணி வைத்து விட்டு தன் காதலை தேடி கேரளாவுக்கு வந்தான். ஆனால் சக்கரவர்த்தியின் வலையில் மொத்தமாக விழுந்து கிடக்கும் அவள் இவன் திட்டப்படி மாறி வருவாளா என்பது தான் இப்போது மில்லியன் கேள்வி.
படுத்து கிடந்த மகளின் தலைக்கு கீழ் இருந்த, தலையணையை நீக்கி அடியில் இருந்த பீரோ சாவியை எடுக்க போக,
“என்னம்மா பண்ணுறா?”
என்று சலிப்போடு கேட்ட மகளிடம்,
“சாவியை கொடுடீ. பீரோவை திறந்து கலர் வேஷ்டியை எடுக்கணும்.”
“இப்போ எதுக்கு எடுக்கிறா?”
“வந்திருக்கிற தம்பிகளுக்கு கொடுக்க,”
என்றதும் சட்டென தலையை தூக்கிய ஓவியா,
“வந்திருக்கிற தம்பிகளா? யாரு?”
என்றாள் கொஞ்சம் படபடப்போடு,
“அதாம்மா. உன் கூட வேலை பார்க்கிறதா சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு வந்தாங்களே. அந்த தம்பிகள்.”
சொன்னவள் உள்ளே இருந்த கலர் வேஷ்டியை எடுத்து கொண்டு கிளம்ப போக,
“நீங்க… நீங்க யாரை சொல்லுறீங்க.”
அதிர்ந்து தான் கேட்டாள்.
“அதாம்மா. ஏதோ பாம்முல சைன் போட்டதால நீ மறுபடியும் ஒரு வாரம் பயிற்சி கொடுக்க வந்தே ஆகணும்ணு உன் சின்ன முதலாளி அனுப்பி வச்சாரே. அந்த இரண்டு தம்பியும் தான் வந்திருக்காங்க.”
என்றதும் சட்டென எழுந்து விட்டாள் ஓவியா.
“நீங்க… நீங்க… என்னை மெட்ராஸ்க்கு கூட்டிட்டு போக வந்தவங்களை பற்றியா சொல்லுறீங்க.”
நம்ப முடியாமல் தான் கேட்டாள்.
“ஆமாடி. அந்த தம்பிங்க தான். ஆனா ரொம்ப நல்ல புள்ளைங்க . வந்த நேரத்துல இருந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்துங்க…”
தாய் பெருமையோடு சொல்லி கொண்டு போக, ஒவியா திலகாவை தான் பார்த்தாள்.
“அவள் உதடோ நளனும் சாருமோ…”
என விழியால் கேட்க, ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினாள் ஓவியா கலங்கி போன விழியோடு,
“ஒ.கோ சார். அவரோட விளையாட்டை தொடங்கிட்டார் போல…”
மனதுக்குள் எண்ணியவள்,
“என்ன ஓவியா. கம்பெனியில வேலை பாக்குற பொண்ணோட கல்யாணத்துக்கு எல்லாம் ஒரு முதலாளி மூன்று நாளுக்கு முன்னால வருகிறது எல்லாம் டூமச்.”
காது மடல் தீண்டி சொல்லிவிட்டு அவள் சிரிக்க,
“அவர் எதுக்குடி என் வீட்டுக்கு வரணும். அதுவும் மூன்று நாள் முன்னாடி .”
“என்னை கேட்டா. அவரை போய் கேளு.”
என்றவளை கோபமாக முறைத்தவள்,
“என்னை நிம்மதியா இருக்கவே விட கூடாது என்கிற முடிவுல இருக்கார் போல. அவரை யாரு இங்க கூப்பிட்டது.”
ஆத்திரத்தில் சொன்னவளை பொங்கும் சிரிப்போடு பார்த்தவள்,
“யாரோ ஆபீஸ் தேடி போய் அவர் கையில பத்திரிகை கொடுத்ததா நியாபகம்.”
என்றவளை சீற்றத்தோடு முறைத்தவள்,
“பத்திரிகை கொடுத்தா தூக்கி பிடிச்சிட்டு வந்திடுறதா?”
“ஏய்… அதுக்கு தாண்டி பத்திரிகை கொடுப்பாங்க.”
என்றவளை கோபமாக முறைத்தவள்,
“இங்கு வந்து என்னவெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்காரோ…”
நினைக்கும் போதே அவன் வீட்டில் அவன் அத்துமீறி நடந்தது ஒவ்வொன்றும் நியாபகம் வர,
“கடவுளே இது எதுல போய் நிற்க போகுதோ…”
முனங்கியவள், எழுந்து வெளியேற முயல,
“ஓவியா…”
என்ற தோழியின் அழைப்பு கேட்டு திரும்பியவளிடம்,
“என்ன இருந்தாலும் உங்க ரெண்டு பேரோட மோதல் சூப்பர்டி…”
என்றாள் கண் சிமிட்டி. அவளை கோப தீயால் பொசுக்கி விட்டு வெளி வந்தவள் கண்களில்
தூரமாய்…
சமையலுக்கு தேவையான அண்டா குண்டா பானை சட்டி என வந்து இறங்கிய எல்லா சாதனங்களையும் தோளில் தூக்கி கொண்டு பின்புறம் நோக்கி சென்று கொண்டிருந்த முகுந்தன் விழுந்தான். அந்த கோலத்தில் அவரை பார்த்ததுமே அவள் நெற்றி சுருங்கியது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel