வணக்கம் வாசகர்களே!
ஓவியாவின் பேச்சால் அதிர்ந்து போன முகுந்தன். அடுத்து அவன் எடுக்க போகும் முடிவு தான் என்ன? அவளிடமிருந்து மொத்தமாய் விலகி விடுவானா?
“அங்கிள் நீங்களும் புறப்படுங்க…”
தீனதயாளன் பக்கமும் திரும்பி அவன் சொல்ல…
“என்னடா பண்ணுறா?”
பின்னால் ஒடி வந்த நளன் தான் கேட்டான்.
“நீ வேணா தங்கி பங்ஷனை முடிச்சிட்டே வாடா. நாங்க எல்லாரும் கிளம்புறோம்.”
“ஏண்டா இந்த அவசர முடிவு.”
“நீயே சொல்லு. இதுக்க மேலயும் நான் ஓவியா முகத்துல முழிக்க முடியும்ணு நினைக்கிறியா?”
“நீ… நீ என்னடா சொல்லுறா?”
“மறைக்க நினைக்க வேணாம் நளன். ஒவியா இவர் முன்னால பேசின எல்லாத்தையும் நானும் கேட்டேன். இவர் மகனை வசதியான இடத்துல வாழ வைக்க எல்லா அப்பனையும் போல ஆசைபட்டார்ணு நினைச்சேன். ஆனா ஒரு குடும்பத்தையே அழிச்சி அதுல வாழ வைக்க நினைக்கும் அளவு கொடூரமானவரா நினைக்க முடியல. நரேன் தீ விபத்துக்கு உங்க அப்பாவும் ஒரு காரணமா இருக்குமோணு சந்தேகமா கேட்டப்ப…”
“சே… சே… அப்பா எல்லாம் அந்த அளவு போக மாட்டாங்க. மகன் மேல உள்ள பாசத்துல எதையாவது பேசியிருப்பாங்க. அந்த ராஜேந்திரன் அதை பயன்படுத்திட்டான் அப்படினு தான் சொன்னேன். அவருக்கு தேவை அவர் மகன் மேரேஜ் பண்ணிக்கணும். அவ்வளவு தான்னு நினைச்சி தான் பொண்ணு பார்க்க சொன்னேன்.”
“ஆனா உன் அப்பன் நீ நினைக்கிற அளவு இல்லடா. ரொம்ப கொடூரமானவன்னு காட்டிட்டாரு. இதுக்கு மேல ஓவியா முகத்துல போய் நான் எப்படி முழிக்க முடியும். சொல்லு. அவள் சம்மதிச்சே இந்த கல்யாணம் நடந்தாலும், என் வீட்டுல அவளால எப்படி வாழ முடியும். ஒரு வயசு பொண்ணுட்ட பேசுறது போலவா பேசியிருக்காரு. அந்த வார்த்தையை சொல்லவே நா கூசுது. கிளம்புங்க. ஆத்திரத்துல நான் எதுவும் சொல்லிட போறேன். இது கல்யாணவீடு. இங்கு இருந்து எதுவும் பேச வேணாம். அந்த ஏழை பெற்றோர் காதுல இது விழுந்துணா அவங்க துடிச்சி போவாங்க. முதல்ல இங்கிருந்து கிளம்புங்க.”
அருவருப்போடு சொல்லி விட்டு அவன் நகர போக,
“நீ கிளம்புறியணா கிளம்பு. நான் அந்த பொண்ணோட திருமண பங்ஷன் முடிஞ்சிட்டு தான் வருவேன்.”
இதுவரை மெளனத்தையே அணிந்திருந்த சக்கரவர்த்தி வாய் திறந்து பேச, அவரை புழு போல பார்த்தவன்,
“இன்னும் உங்க குணம் மாறலல …”
என்றதும் அவனை நிமிர்ந்து பார்க்காமல் அதே இறுக்கத்தோடே,
“மாறலடா. இனியும் மாறாது. அந்த பொண்ணுக்கு என் தலைமையில நாளைக்கு காலையில கல்யாணம் நடக்கும். முடிஞ்சா நின்னு வாழ்த்திட்டு போ. இல்ல இங்க என்ன நடந்தாலும் கண்டுக்காம கிளம்பு.”
இப்போது அவர் குரல் சற்று உயர்ந்திருக்க, நளன் முகுந்தனை இழுத்துக் கொண்டு போனான்.
பின் பக்கமாய் கூட்டி வந்து அந்த வீட்டை தாண்டிய ஒரு நிலபரப்பில் மாம்மரம் ஒன்றிற்கு அருகில் கூட்டி வந்தவன்.
“இப்போ நீ ஓவியாவுக்கு சப்போட்டா இங்கு நின்று தான் ஆகணும். உன் அப்பாவால அந்த பொண்ணு குடும்பத்துக்கு எதுவும் ஆகாம நீ தான் பாத்துக்கணும்.”
“எப்படிடா. அந்த குடும்பத்துக்கு எதுவும் ஆகாம நான் பாத்துக்கலாம். ஆனா ஓவியாவை அந்த மாப்பிள்ளையிடம் இருந்து எப்படிடா காப்பாத்த முடியும். அப்பா இம்புட்டு செய்திருக்கிறார்னு தெரிஞ்ச பிறகு அவள் முகத்துல போய் எப்படி விழிக்க முடியும். அவளை என்னோட வாழ எப்படி கூப்பிட முடியும்.”
“இப்பவே ஒவியா அம்மாவை கூப்பிட்டு உண்மையை சொல்லிடுவோமா முகுந்தன். உன் கல்யாணம் நடக்கா விட்டாலும் பரவாயில்லை. அவளை அந்த கயவன்ட்ட இருந்து காப்பாத்துவோம்.”
“நரேன். இன்னும் முழு ஆதாரத்தோடு வரலியேடா. அவன் வராம நாம பேசுறதை அவங்க அம்மா நம்ப மாட்டாங்களேடா. அதுல வேற நான் சக்கரவர்த்தியின் மகனா அறிமுகம் ஆகல. பொய் சொல்லி பிராடு பண்ணுனதா நம்மளை நினைச்சிக்க மாட்டாங்களா?”
“விடிஞ்சா கல்யாணம். இப்போ போய் மாப்பிள்ளை மோசம்னு எப்படி சொல்லுறது. நான் அவள் மேல ஆசைப்பட்டு கட்டிக்க தான் அப்படி பேசுறேன்னு என் அப்பாவே பிளைட்டை தூக்கி போடுவாரு.”
“இப்போ என்ன செய்றது முகுந்தன்.”
“எதுவும் புரியலடா. இரண்டு நாளுல ஓவியா மனசை மாற்றி காதலை சொல்ல வச்சிடலாம். அவள் சம்மதம் கிடைச்சதும் நரேன் கொண்டு வரும் ஆதாரத்தை காட்டி மகேந்திரனை ஜெயிலுக்கு அனுப்பிடலாம். அவள் சப்போட் இருக்கும் போது எதுவும் தப்பா நடக்காது. குறிச்ச நாள் குறிச்ச நேரத்துல நானே அவள் கழுத்துல தாலி கட்டிடலாம் என்கிற ஆசையில தான் குடும்பத்தோட கிளம்பி வந்தேன். என் மனசு நான் சொல்லாம மோனிகாவுக்கு தெரியணும்ணு தான் அவளையும் கூட்டிட்டு வந்தேன். ஆனா இங்கு என்னவெல்லாமோ நடக்குது. இதுல என்ன செய்யணு கூட தெரியல…”
“இரு. நான் நரேன்ட்ட பேசுறேன்.”
சொல்லிய நளன் அவனை விட்டு கொஞ்சம் நீங்கி செல்ல, தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவன் வெறியோடு தன் பலம் மட்டும் காட்டி அந்த மண் தரையில் குத்தினான். ஆனாலும் அந்த கை வலிக்கவில்லை. கைவலியை காட்டிலும் அவன் மனவலி அதிகமாக இருந்தது.
அதே நேரம்,
ஹாலில் கூட்டி வரப்பட்ட மணபெண் ஓவியாவின் கண்கள் நாலாபுறமும் சுற்றி சுழன்றன.
அவள் கண்பட்ட எந்த இடத்திலும் முகுந்தன் இல்லை. இதற்கு அவள் மனம் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சந்தோஷப்படுவதற்கு பதில் இந்த மனம் ஏன் அவஸ்தைபடுகிறது என்பது தான் பேதை பெண்ணுக்கு இன்னும் விளங்கவில்லை. அவனை காணாமல் கண்கள் அலைபாய்ந்தன.
“எங்க போயிட்டான்.”
யோசிக்கும் முன்,
“இதுல உட்காரு ஓவியா. மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பிட்டாங்க. இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவாங்க…”
பக்கத்து வீட்டு அக்கா வந்து கிசுகிசுத்து விட்டு போக, தங்கைகள் இருவரும் வந்து அவள் அருகில் கலகலப்பாக நின்று கொண்டனர்.
உற்றார், உறவினர்கள் வர வர அவள் எழுந்து நின்று வரவேற்றாலும் கண்கள் பரபரவென எங்கெங்கோ ஓடியவாறே இருந்தது.
அதே நேரம் அறைக்குள் இருந்த திலகா நளனுக்கு அடித்தாள். நளன் நடந்தவற்றை சொல்ல, கோபால் உதவியோடு பின்புறம் வந்தாள்.
“எங்கடா இருக்கீங்க.”
மறுபடியும் அவள் அடித்து கேட்க, நளன் வந்து அவளை கூட்டி சென்றான். கோபாலும் அவர்களை தொடர்ந்தே சென்றான்.
தூரமாய் தரையில் கலை இழந்து இருந்த முகுந்தனை பார்க்க கஷ்டமாக இருந்தது.
“இப்போ என்னடா செய்ய போறீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுல இருந்து முகூர்த்தப்பட்டு கொண்டு வந்திடுவாங்க. சீக்கிரம் ஏதாவது செய்ங்கடா. அந்த பொறுக்கி கையில என் ஓவியாவை கொடுத்திடாதுங்க.”
என்றதும் ஒடி வந்த முகுந்தன்.
“நீ சொல்லுறியா? அவளோட அம்மாட்ட நீ சொல்லுறியா? நாங்க சொன்னா நம்ப மாட்டாங்க. அவா எனக்கு கிடைச்சாட்டாலும் பரவாயில்லை. அவள் அந்த நரேன் கைகளுக்கு போயிட கூடாது. பிளீஸ்… நீ… நீ பேசுறியா?”
அவன் பதட்டத்தோடு சொன்னாலும் ஆர்வத்தோடு கேட்க,
“உனக்கு எப்படி தெரியும்ணு கேட்டா. நாளைக்கு முகூர்த்தத்தை வச்சிட்டு இன்று போய் பேசணும்னா சரியான ஆதாரம் வேணும் சார். சும்மா எல்லாம் பேச முடியாது.”
“ஆதாரம்… ஆதாரம்… டே… நரேனுக்கு அடிச்சியா?”
“அவரை பிடிக்க முடியல முகுந்த்…”
“எங்கடா போய் தொலைஞ்சான். நீங்க கிளம்புங்க. ஒரு நாளுல எல்லா எவிடென்டையும் கலெக்ட் பண்ணிட்டு வந்து சேர்ந்திடுவேன்னு சொன்னான். இரண்டு நாள் முடிய போகுது. அப்படியும் தொலைஞ்சி போயிருக்கானே.”
ஆத்திரத்தில் அவன் குதிக்க, இப்போது யாருக்கும் எதுவும் பேச முடியவில்லை.
இங்கு வழி தெரியாமல் நான்கு பேரும் முழித்து கொண்டிருக்கும் போது, மாப்பிள்ளை வீட்டில் இருந்து முகூர்த்த புடவையோடு ஓவியாவின் வீட்டிற்குள் நுழைந்தனர். இரண்டு வாகனம் நிறைய ஆட்கள் இருந்தனர்.
அதிலும் மாப்பிள்ளையின் பெரியப்பா பொண்ணு பட்டை எடுத்து ஓவியா கையில் கொடுக்க அது அத்தனையும் உள்வாங்கி கொண்டு நின்றனர் வீடியோகாரர்கள்.
வந்தவர்கள் பூ வைத்து சம்பிரதாயம் முடித்து சாப்பிட்டு கிளம்பியும் முகுந்தனை காணவில்லை. மனதின் அடியில் ஒரு இனம் புரியாத கலக்கம். எதுவோ தப்பா நடப்பது போல ஒரு உறுத்தல். அவர் எதுவும் செய்து கொள்ள கூடாதே என்ற தவிப்பு வேறு குடைந்து கொண்டிருந்தது. இந்த திலகாவை வேறு காணவில்லை. இந்த சக்கரவர்த்தியை வேறு சீண்டி விட்டு விட்டு வந்திருக்கிறேன். என்ன நடக்க போகிறதோ என்ற பரிதவிப்பு வேறு.
சுற்றி இருந்தவர்கள் விலகும் வரை தான் அவளால் தன்னை அடக்கி கொண்டு இருக்க முடிந்தது. அதன் பின் முடியவில்லை. பின்புறம் வந்தாள். திலகாவின் வண்டியை உருட்டிக் கொண்டு நளன் வருவது தெரிந்தது.
“எல்லாவற்றையும் சொல்லி விட்டானோ…”
ஆழமாக அவளை பார்த்தாள். திலகா எதையும் காட்டிக் கொள்ளாமல் உள் நோக்கி நகர்ந்தாள். அவள் எதுவும் பேசாமல் சென்றதே நளன் எல்லாவற்றையும் சொல்லி விட்டான் என்பதை அவளுக்கு தெரியப்படுத்திவிட்டது. இது போல் முகுந்தனிடமும் சொல்லி இருப்பானோ…
நினைவே பயத்தை விதைக்க, அவள் அதிர்ந்து நின்ற நேரம், இருட்டு பகுதிக்குள் இருந்து கோபால் வருவது தெரிந்தது.
“நீ… நீ என்னடா இங்க இருந்து வாரா?”
“இல்ல… சும்மாக்கா…”
அவனும் அமைதியாக கடக்க முயல, அவனை பிடித்து நிப்பாட்டியவள்,
“நில்லுடா…”
என அதட்ட, நின்று அவள் முகம் பார்க்க முடியாமல் அவன் தலையை குனிந்து கொள்ள,
“என்னடா. எதுவும் தப்பாயிடுச்சா…”
“அப்படி எல்லாம் இல்லயே…”
“உண்மையை சொல்லு கோபாலு. நீயும் சரியா இல்ல திலகாவும் சரியா இல்ல…”
“அப்படி எதுவும் இல்லக்கா. நாங்க சும்மா தான் இருக்கோம்.”
“ஆக நான் சக்கரவர்த்திட்ட பேசுனது உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சிருக்கு. நீங்க ரெண்டு பேரும் என் மேல கோபமா இருக்கீங்க. சரி தானே…”
அவள் அப்படி சொன்ன பிறகும்,எதுவும் பேசாமல் நிற்க,
“சொல்ல கூடாதுணு சொல்லாம இல்லடா. சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கணு தான் சொல்லல. தப்பு தான். சாரி. என்னை மன்னிச்சிக்கடா. பிளீஸ்…”
“மன்னிப்பு கேட்டு இப்போ எது மாறப் போகுது. எல்லாம் தப்பாக்கி வச்சிட்டு மன்னிப்பு கேட்டு இப்போ ஆக போறது என்ன? சொல்லு. எல்லாம் தெரிஞ்சும் இப்போ எதுவும் செய்ய முடியாம நிக்குறோம்.”
“இப்போ என்னடா ஆகி போச்சுனு இப்படி உடைஞ்சி போய் பேசுறா?”
“இனியும் என்ன ஆகணும். நீ கட்டிக்க ரெடியாகி நிக்குறியே அவன் யாரு தெரியுமா? ஒரு பொறம்போக்கு, பொறுக்கி.”
“என்னடா சொல்லுறா?”
“அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லயாம்.”
“யார்ட்டா சொன்னா?”
“முகுந்தன் சார் தான்.”
“அவர் சொல்லுறதை கேட்டா புலம்பிட்டிருக்கா. அவர் இந்த திருமணத்தை நிறுத்த எதையும் பேசுவார்.”
“இவளே நம்பாத ஒரு விசயத்தை இவளை பெற்றவர்கள் எப்படி நம்புவார்கள்.”
கோபால் தனக்குள்ளே கேட்டு கொண்டு அவளை பாவமாக பார்த்தான்.
“என்னடா அப்படி பாக்குறா? அவர் எப்படியும் என் வாயால காதலை வாங்கிடலாம்ணு பார்த்தாரு. அது நடக்கலல. அதான் இப்படி சொல்லியாவது திருமணத்தை நிறுத்தி விடலாம்ணு பிளான் பண்ணியிருப்பாரு. நீ பெரிசா நினைச்சிட்டு வெளியில போய் உழறி விடாத. அப்புறம் அம்மா அப்பா அவமானத்துல தூக்குல தொங்கிடுவாங்க… பெரிய மனுஷன்களுக்கெல்லாம் நம்ம போல சாதாரண குடும்பத்தோட எமோஷ்னல் தெரியாது. அவமானப்பட்டு உயிர் வாழ நினைக்க மாட்டாங்கணு புரியாது. அப்படி அவங்க அப்பா விளையாடுன எத்தனை விளையாட்டை பாத்திருக்கேன். அவர், மகன் வாழ்க்கையில இருந்து பிரிச்சி விட விளையாடுனாரு. இவர் கட்டிக்க விளையாடுறாரு. ஆக மொத்தத்துல விளையாடுறது அவங்க குணம். விட்டுட்டு போய் தூங்குடா. நாளைக்கு விடியல் இதுக்கு ஒரு முடிவு சொல்லட்டும்.”
சொன்னவள் அவனை கடந்து செல்ல எத்தனித்த போது தான் தலை எல்லாம் கலைந்து பைத்தியகாரன் போல அந்த இருட்டுக்குள் இருந்து வெளிவரும் முகுந்தனை பார்த்தாள். ஒரு நொடி அவன் கோலம் கண்டு தடுமாறியவள் துடித்து ஓடி போய் அணைக்க துடித்த மனதை அடக்கி கொண்டு அப்படியே நின்ற போது,
இருட்டில் இருந்து வெளி வந்த முகுந்தன் ஒரு முறை அவளை பார்த்து விட்டு, பின் எதுவும் பேசாமல் முன்னோக்கி நடந்தான்.
“பாவம்க்கா முகுந்தன் சாரு…”
“இன்னும் ஒரு நாள்டா. அப்புறம் தெளிஞ்சிடுவாரு. ஒரு இரண்டு மாசம் அதோட மறந்திடுவாரு. அடுத்து அந்த மோனிகாவை கட்டிட்டு கடந்திடுவாரு.”
“நீ அப்படியாக்கா நினைக்கிறா? அவர் அப்படி இல்லணு தான் எனக்கு தோணுது. ஒரு மூணு மணி நேரத்துக்கு முன்னால தான் அவர் அப்பாட்ட போய்…
இனி உங்க வாழ்க்கையில மகனை மண கோலத்துல பார்க்கவே மாட்டீங்க. எல்லார் வாழ்க்கையில விளையாடுறது போல பெத்த மகன் வாழ்க்கையிலும் விளையாடிட்டீங்க இல்ல. இருக்கட்டும். எந்த மகனை கல்யாண கோலத்துல பார்க்க விரும்பி இது எல்லாம் செய்தீங்களோ அந்த கோலத்த இந்த ஜென்மத்துல நீங்க பார்த்திடவே மாட்டீங்கணு சொல்லிட்டு தான் வந்தாங்க.”
“அது எப்படி? அவருக்கு நிச்சயம் முடிஞ்சாச்சு. அந்த பெண் வீட்டுல விடுவாங்களா? இல்ல அவர் கையை விடாம பிடிச்சிட்டு சுத்தி சுத்தி வந்தாளே அந்த பெண் விடுமா?”
அவள் அவளையே சமாதானப்படுத்திக் கொண்டு கேட்க,
“அது உனக்கு தெரியாதா?”
“அந்த பொண்ணு சாரை நெருங்க நெருங்க இவர் ஒதுங்குனது அந்த பொண்ணுக்கு உறுத்தலா இருந்திருக்கு. அது படிச்ச பொண்ணு. நேராகவே கேட்டுடுச்சி. சாரும் உண்மையை சொல்லிட்டாரு.”
“என்ன உண்மையை…”
அதிர்ந்து தான் கேட்டாள்.
“உன்னை விரும்புறதை தான். கட்டுனா உன்னை தான் கட்டுவேணு சொல்லிட, கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் அந்த குடும்பம் கிளம்பி போச்சு.”
“இது எல்லாம் எப்போடா நடந்துச்சு.”
“எல்லாமே நீ சக்கரவர்த்தி சார்ட்ட பேசிட்டு வந்த பிறகு நடந்தது.”
“அப்படினா சக்கரவர்த்தி சார்ட்ட பேசுனது எல்லாருக்கும் தெரியுமா?”
“ம்…”
“எப்படிடா. தனியா தயாளன் சாரோட தானே நின்னாங்க.”
“அவர் நின்னது தயாளன் சாரோட தான். ஆனா அந்த இருட்டுல கொஞ்ச தூரத்துல இருந்து வாழை இலையை வெட்டிக் கொண்டு நின்ற முகுந்தன் சாரை பார்க்க நீ தவறிட்டா. நீ ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் சக்கரவர்த்தி சார்ட்ட கத்தி பேசுன அம்புட்டையும் சார் கேட்டிருக்காரு.”
என்றதும் திரும்பி பார்த்தாள். தலையை தொங்க போட்டு கொண்டு வீட்டிற்குள் நுழைய முற்படும் முகுந்தன் தெரிந்தான். அவனை விட்டு இவனிடம் ஒடி வந்தாள். அவன் முன் கை நீட்டி அவனை நிப்பாட்டியவள்,
“என்ன சார். இப்படி பேசாம மெளனமா போனா என்ன அர்த்தம்.”
கவிழ்ந்திருந்த தலையை தூக்கி நிமிர்த்தி அவளை பெரும்பாடுபட்டு பார்த்தான். இமை உயர்த்தி அவள் கேட்ட விதத்தில் அடிப்பட்டவன் கண்கள் சட்டென கலங்கி விட, அது உள்ளத்துக்குள் பெரிய இடியையே இறக்கி இருந்தும் அதை வெளிகாட்டாமல் சிரித்தவள்.
“என்ன சார்… இனியாவது கிளம்பலாம் இல்ல. என்ன தான் நீங்க திட்டம் போட்டாலும் நாளைக்கு என் கல்யாணம் கண்பாம். இனி அதுல மாற்றம் இருக்க போவதில்லைனு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அப்படியும் எதுக்கு இந்த வீறாப்பு. கிளம்புங்க சார். கிளம்பி போய் வாழ பாருங்க. இனி உங்க வாழ்க்கையில இந்த ஓவியா இல்லை.”
இமை உயர்த்தி கிண்டல் தோனியில் அவள் சொன்ன விதத்தில் அடிபட்டவன் அதை காட்டி கொள்ளாமல்,
“நான் சொன்னா கேளு. இந்த கல்யாணம் வேணாம்ணு சொல்லு. நீ என்னை கட்டிக்காவிட்டாலும் பரவாயில்ல. அந்த மகேந்திரன் உனக்கு வேணாம். அந்த குடும்பம் உனக்கு வேணாம்.”
“ஏன்?”
“அவனும் நல்லவன் இல்ல. அவன் குடும்பமும் நல்லவங்க இல்ல.”
“என்ன? உங்களை விடவா?”
“ஓவியா…”
அதிர்ந்து கேட்டவனை ஆத்திரத்தோடு பார்த்தவள்.
“வயசு பொண்ணுணு கூட பார்க்காம ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தை சொல்லி தினமும் என்னை பதட்டத்தோட வச்சிருந்தாரே உங்க அப்பா. அதை விடவா மகேந்திரன் அப்பா மோசமா இருந்திட போறாரு. அப்படியே இருந்தாலும் உன் அப்பாவை சமாளிச்சது போல அவரை நான் சமாளிச்சிக்கிறேன்.”
“ம்… பேசு. உன் பக்கம் பேச வார்த்தை இருக்கு. எனட்ட பேச வார்த்தை இல்லை தான். ஆனாலும் சொல்றேன் அந்த மகேந்திரன் உனக்கு வேணாம். அவன் ஒரு மோசமானவன். அவன் கூட எல்லாம் உன்னால வாழ முடியாது.”
“தெரியும்.”
“தெரியுமா?
“ஆமா. தெரியும். அவன் நல்லவன் இல்லணு தெரியும். ஒரு நாள் முழுதும் அவன் கூட டிராவல் பண்ணியிருக்கேன். ஒரு ஆண் கூட ஒரு மணி நேரம் இருந்தாலே தெரிஞ்சிடும். அவன் கூட மூணு நாள் இருக்க வச்சீங்களே. அப்ப கூட தெரியாமலா போயிருக்கும்.”
“அப்புறம் ஏன்?”
வலியில் தாங்க முடியாமல் வந்தது அவன் வார்த்தை.
“இந்த வாழ்க்கைக்குள்ள நான் போகணும் என்கிறது என் ஆசையோ என் பேமிலி ஆசையோ இல்ல சார். அது உங்க அப்பாவோட ஆசை.”
“நீ… நீ என்ன சொல்லுறா?”
அதிர்ந்து கேட்டவன் முன் ஒரு புளித்த சிரிப்பை உதிர்த்தவள்,
“ஏழை அரிசந்திரனோட பொண்ணை எதுவும் வேணாம் பொண்ணை கொடுங்க போதும்னு ஒரு குடும்பம் கேட்குதுனா யோசிக்க மாட்டோமா சார். அதுவும் வேலை எடுத்து கொடுத்து கட்டிக்கிறோம் என்கிறது சின்ன விசயமா? கூடவே பாதி சம்பளத்தை என் பேமிலிக்கே கொடுக்கும் அளவு உத்தமர் கிடைக்கிறது எல்லாம் வரம் இல்லயா? அப்படிப்பட்ட வரம் கொடுத்த சாமியை பார்க்க நான் ஒரு நாள் அவர் ஆபீஸ்க்கு போனேன். அங்கு நான் முகுந்தனோட ஒவியாவா போனேன். அப்போ தான் மகேந்திரன் அவன் நண்பனுட்ட பேசுனதை கேட்டேன்.
உன் அப்பா என்னை எந்த அளவு தரம் தாழ்ந்து நினைச்சி வேலை பாத்திருக்கார்ணு அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்.”
“நான் போனதை கூட காட்டிக்காம திரும்ப வந்துட்டேன்.”
“அப்புறமும் ஏன்?”
தாள மாட்டாமல் கேட்டான்.
“அங்க நான் பார்த்தது, கேட்டது எல்லாம் மகேந்திரனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் மட்டும் இல்ல முகுந்தன். உன் குடும்பம் பற்றியும் தான். ஒரு குடும்பத்தை அழிக்க உன் குடும்பம் எந்த அளவு தரம் தாழ்ந்து போகும் என்பதையும் அங்க தான் நான் தெரிஞ்சிகிட்டேன். எனக்கு கோபம் அவன் மேலயோ அவன் குடும்பம் மேலயோ வரல உன் மேலயும் உன் அப்பா மேலயும் தான் வந்துச்சு. அதுனால தான் உண்மை தெரிஞ்சும் அமைதியா இருந்தேன். எனக்கு உன்னை விட அவன் பெஸ்ட் சாயிஸ்ணு தோணுச்சு. அதான் அவனோட தாலிக்காக காத்திருக்கேன். போதுமா? இனியாவது கிளம்பு. என்னை விட்டு மொத்தமா கிளம்பு. என் மனசுல நீ ஒரு சதவீதம் கூட இல்லை என்கிறதை உணர்ந்து கிளம்பு.”
உணர்வின் உச்சத்தில் ஓவியா கத்தி விட,
அவமானத்தில் சிறுத்து போனவனாக அங்கிருந்து நகர்ந்தான் முகுந்தன். போகும் அவன் பின் முதுகை ஒரு நிமிடம் நின்று பார்த்தவள் கண்கள் கலங்கிவிட்டது. வலி ஒன்று உருண்டு வந்து அவள் மூச்சை அடைக்க குரல் எடுத்து அழுது விடுவோமோ என பயந்தவள் சட்டென வாய் பொத்தி தன் குமுறலை அடக்கி கொண்டு திரும்பிய போது தீ பார்வையோடு அவள் பின் இதுவரை நின்று கொண்டு மொத்தத்தையும் கேட்டு விட்ட முறைப்பில் இருந்தாள் திலகா.
அந்த முகத்தில் தெரிந்த சீற்றமும் ஆத்திரமும் கண்டவள், ஒடி போய் அவள் மடியில் விழுந்து கதறி விட,
அவளை தொட கூட செய்யாத அவள் செயலில் இன்னும் காயப்பட்டவள், பாவமாக அவளை நிமிர்ந்து பார்த்து,
“அடிக்கிறதா இருந்தா கூட அடிச்சிக்க. ஆனா இப்படி பேசாம மட்டும் இருக்காத. தப்பு தான்… தப்பே தான். இது எல்லாத்தையும் உனட்ட இருந்து மறைச்சது தப்பு தான். ஆனா என்னால தான் நீ தீ விபத்துல மாட்டி மயிற் இழையில தப்பிச்சா என்கிற உண்மை தெரிஞ்ச பிறகு, என் வலைக்குள்ள உன்னை கொண்டு வர பயந்தேன் திலகா. நிச்சயமா நான் இதை எல்லாம் உனட்ட சொல்லி இருந்தா நீ அந்த சக்கரவர்த்தியை விட்டிருக்க மாட்டா. ஆனா அந்த சக்கரவர்த்தியை நம்மால எதுவும் செய்ய முடியாது திலகா. அதான் என்னால உங்க யாருக்கும் எந்த கெடுதலும் நடந்திட கூடாதுணு நான் எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு புழுங்கிட்டு கல்யாணத்துக்கு ரெடியாகிட்டேன்.”
“கல்யாணத்துக்கு இல்ல… கருமாதிக்கு ரெடியாகி இருக்கா…”
அடிகுரலில் சீறினாள் திலகா. அவளின் வாயில் இருந்து கேட்ட சூடான வார்த்தையில் ஒரு கணம் அதிர்ந்தவள், சற்று நேரத்துக்கெல்லாம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு.
“ம்… அது சரி தான். மகேந்திரன் கையில என் வாழ்க்கை போனா எனக்கு நானே கருமாதி பண்ணிட்டது போல தான்.”
என்றவளை அனல் கக்கும் பார்வை பார்த்தவள்,
“அப்படியும் பட்டு கட்டி பிணமாக ரெடியாகிட்டா. அப்படி தானே?”
பல்லை கடித்து கொண்டு கேட்க, அவள் சீற்றத்தில் அடிப்பட்டவள்,
“வேற வழி…”
என்றாள் நிதானமாக, அவளை ஏற இறங்க பார்த்தவள்,
“ஏன் இவ்வளவு யோசிக்க தெரிஞ்ச உங்களுக்கு அதை யோசிக்க தெரியலியா மேடம்?”
என்றவள் சட்டென வண்டியை திருப்ப, ஒடி வந்து இடையில் நின்னவள்,
“எங்க போறா?”
“அம்மா… அப்பாட்ட சொல்ல போறேன்.”
“ஏய்… என்னடி விளையாடுறியா?”
“நான் விளையாடல. நீ தான் விளையாடுறா? அதுவும் உன் வாழ்க்கையோட விளையாடுறா?”
“வாழ்க்கை… விளையாட்டு…”
அவள் ஏளனமாக சொல்ல,
“நீ விலகு. நான் எதுனாலும் அம்மாட்டயே பேசுறேன். அவங்களே இதுக்கு முடிவு சொல்லட்டும்.”
“நீ அம்மாட்ட பேச கூடாது.”
“நான் பேசுவேன்.”
“பேச கூடாதுணு சொல்றேன்.”
“நான் பேசுவேன்னு சொல்றேன்.”
இருவரும் மாறி மாறி வாக்கு தர்க்கத்தில் ஈடுபட, ஒரு கட்டத்திற்கு மேல் திலகாவை அடக்க முடியாது என தோன்ற அவள் வண்டியை தள்ளிக் கொண்டு மறைவான இடம் தேடி நகர்ந்தாள் ஓவியா.
அதே நேரம், காதில் போணோடு,
“எடு சுந்தரம்… எடு…”
ஆத்திரத்தில் உறுமிக் கொண்டிருந்தார் சக்கரவர்த்தி, அவரை சிறிது நேரம் தவிக்க விட்டு விட்டு போனை எடுத்த சுந்தரம்,
“சொல்லுங்கைய்யா…”
“என்னடா அங்க நடந்துட்டிருக்கு.”
“நரேனை கண்டுபிடிக்க முடியலங்கைய்யா. நம்ம ஆட்கள் நாலாபுறமும் தேடிட்டு தான் இருக்காங்க.”
“விட்டு விடாதுங்க. சீக்கிரம் கண்டுபிடிங்க. அவன் கையில இருக்கிற எவிடென்ட் நமக்கு ரொம்ப முக்கியம்.”
“கண்டிப்பா சார். நாலாபக்கமும் ஆள் அனுப்பி இருக்கேன். நானும் அசோகன் சாரும் கூட அந்த மகேந்திரனோட குடோனுக்கு தான் போயிட்டிருக்கோம்.”
“கவனம்டா. இன்னும் மூணு மணி நேரத்துக்குள்ள அந்த நரேனும் அவன் கையில இருக்கிற எவிடென்டும் நம்ம கையில இருக்கணும்.”
“சொல்லிட்டீங்க இல்ல. செய்திடுறேன்.”
சொன்னவன் வைத்து விட,
சக்கரவர்த்தி அடுத்து ராஜேந்திரனுக்கு அடித்தார். மகன் பேசி விட்டு சென்ற நொடியில் இருந்து அவர் வேலை இங்கு பம்பரமாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் கூட முகுந்தன் இல்லை. அது தான் ஒரே வார்த்தையில் அவனை முடக்கி விட்டாளே. மகேந்திரன் குடும்பத்தோடு அல்லவா தன் குடும்பத்தை ஒப்பிட்டு பேசி விட்டாள். அதில் வேறு இவன் குடும்பத்தில் வாழ்வதை விட அவன் குடும்பத்திற்கு போவது மேல் என்று விட்டாளே. இதை விட அவமானத்தை வேறு எந்த வார்த்தை கொடுத்து விட முடியும்.
மொத்தமாக உருக்குலைந்து போய் விட்டான் முகுந்தன். இவனை ஆறுதல் படுத்துவது ஒன்றே தன் வேலையாக போய் விட நளனும் வேறு எதையும் யோசிக்கவில்லை. யாரின் இடையூறும் இல்லாமல் சக்கரவர்த்தியின் வேலை மிக எளிதாக நடந்தேறியது.
தன் அறைக்கு வந்து திலகாவை உள் விட்டு தன் அறையை சாத்தி கொண்டி இட்டாள் ஓவியா. அவள் திமிறினாள். இவள் விடவில்லை.
கொண்டியிட்டு திரும்பியவளை பார்த்து,
“என் கால்கள் போனதை நினைச்சி இன்று தாண்டி வருத்தப்படுறேன். என் காதல் இதனால முடிவுக்கு வந்து விடும்ணு என் மனசு சொன்னப்ப கூட நான் மனம் வருந்தல. ஆனா இன்று என்னோட இயலாமையை பயன்படுத்தி இப்படி உள்ளால கொண்டு வந்து அடைக்கிறியே இப்ப தாண்டி உண்மையா என் காலு போனதை நினைச்சி கலங்குறேன்.”
சொல்லும் முன்பே அவள் கண்கள் கண்ணீரை கக்கி விட, துடிதுடித்து போனாள் ஓவியா.
“என்ன பேச்சுடி பேசுறா?”
“அப்புறம் என்னடி பேச சொல்லுறா? எல்லா உண்மையும் தெரிஞ்சும் இப்படி கல்லு போல உள்ளால வந்து இருக்கேனே இதை விட கொடுமையான விசயம் வேற என்னடி இருக்க முடியும். இப்போ மட்டும் எனக்கு காலு இருந்துச்சு. இந்த கதவை அடிச்சி தகர்த்துட்டு அந்த சக்கரவர்த்தி முன்னால போய் நின்னு அவர் சட்டையை பிடிச்சி உலுக்கியிருப்பேன். இப்படி உங்க காலை நம்பி இருக்க மாட்டேன்.”
சொன்னவள் தாங்க மாட்டாமல் குலுங்க.
“ஏய்… என்னடி பேசுறா? என்னை பக்கத்துல வச்சிட்டு இப்படி எல்லாம் பேசுறா?”
“நீ கூட என்னை கையாலாகாதவாணு நினைச்சிட்டா இல்ல புள்ள. இல்லனா இம்புட்டு நடந்திருக்கு. நீ ஒரு வார்த்தை எனட்ட சொல்லாம இருந்திருப்பியா? இல்ல நான் உன் வாழ்க்கையை இந்த இடம் வரை வர விட்டிருப்பேனா? எல்லாரும் ஒதுக்குனது போல நீயும் ஒதுக்கிட்டால. இவளால எனக்கு என்ன செய்ய முடியும்ணு நினைச்சிட்டால…”
“ஏய்… ஏய்… அப்படி எல்லாம் இல்லடி. உன்னை போய் நான் அப்படி எல்லாம் நினைப்பேனா? ஏய்… சாரிடி. நான் உனட்ட சொல்லாதது தப்பு தான். சாரி… சாரிடி…”
“இப்போ இந்த சாரியால என்ன மாறி போகும்னு நினைக்கிறா? என் கண்முன்னே அந்த கயவனுக்கு கழுத்தை நீட்ட போறா? அதை நினைச்சி நினைச்சி காலம் எல்லாம் நான் துடிக்க போறேன். இது எல்லாமே என்னால என்ற குற்ற உணர்வுல நான் கொஞ்சம் கொஞ்சமா சாகப் போறேன்.”
“என்னடி உழறுறா? இதுல உன் தப்பு என்ன இருக்கு.”
“நான் தானே… நான் தானே பொய் சொல்லி இந்த பெண் பார்க்கும் படலத்துக்கே அனுப்பி வச்சேன். அன்று நான் உண்மையை சொல்லி இருந்தா இப்படி வந்து சக்கரவர்த்தி வலையில விழுந்திருக்க மாட்டா தானே.”
“ஏய்… அது இல்லனா இன்னொரு வழியில இது நடந்திருக்கும். ஆக மொத்தத்துல இது நடந்தே ஆகும். நீ இதுக்கு காரணம்ணு நினைக்காத. இது விதி. இதை மாற்ற முடியாது. நான் மாட்டிக்கிட்டேன்.”
“நான் விடமாட்டேன். இதுக்க மேல மாட்டிக்க விடமாட்டேன். என்ன நடந்தாலும் நடக்கட்டும். நான் உண்மையை அம்மாட்ட சொல்ல தான் போறேன். நீ என்னை தடுக்க கூடாது.”
“சரி. தடுக்கல. ஆனா இப்போ வேணாம். முகுந்தன் கிளம்பட்டும்.”
“அவர் கிளம்புறதுக்கும் இதுக்கும் என்னடி சம்மந்தம்.”
“அவர் போகணும். அவர் போன பிறகு நீ சொல்லாட்டாலும் நான் சொல்ல தான் போறேன்.”
“ஏய்… அதுக்குள்ள மாப்பிள்ளை வீட்டுல இருந்து ஆட்கள் வந்துட்டா.”
“வரட்டும். அவங்களும் வந்தா தான் நல்லா இருக்கும்.”
“என்னடி குழப்புறா? அவங்க வந்தா கல்யாணத்தை நிறுத்த சம்மதிக்க மாட்டாங்க.”
. “அவங்க என்ன சம்மதிக்கிறது. அவங்களை சம்மதிக்க வைக்க, எனட்ட அவங்க சங்கு கழுத்து நெரிக்கிற மாதிரி ஒரு விசயம் இருக்கு. அந்த விசயத்தை மட்டும் சொன்னேன். அலறி அடிச்சிட்டு ஓடிடுவாங்க.”
“ஓவியா…”
அதிர்ந்து தான் கேட்டாள். ஒரு மர்மமான சிரிப்போடு பிரோ அருகில் சென்றவள் கையில் ஒரு காகித கட்டோடு வந்து அவள் முன் தூக்கி போட்டாள்.
“என்னடி இது…”
அதிர்ந்து தான் கேட்டாள்.
“உன் பாஸ்சு இந்த நொடி வரை தேடிட்டு இருக்காரே மகேந்திரனோட ஜாதகம். அது தான் இது.”
“அது எப்படி உன்கிட்ட…”
“நரேன் தான் கொண்டு வந்து கொடுத்தாரு.”
“நரேனா? நரேனை உனக்கு எப்படி தெரியும்.”
“நரேனை எனக்கு தெரியாது. ஆனா நரேனுக்கு என்னை தெரிஞ்சிருக்கு. மெட்ராஸ்ல இருந்து வந்த மறுநாள் சில திங்க்ஸ் வாங்கணு அம்மா என்னை மார்த்தாண்டம் கூட்டிட்டு போனாங்க இல்லயா?”
“ஆமா?”
“அங்கு வச்சி தான் இதை கொடுத்தாரு. தன்னை யாரோ விரட்டுறதாவும் தன் கையில இருந்துணா இதை அந்த கும்பல் எடுத்து விடும் என்று சொல்லி இதை உங்க பாஸ்ட்ட சேர்த்திட முடியுமானு கேட்டாரு. நானும் ஒ.கேணு சொல்லிட்டு வாங்கிட்டு வந்தேன்.”
“வந்து பார்த்தா… நான் இந்த கல்யாணத்துல இருந்து தப்பிக்க போதுமான ஆவணம். விடுவேனா? பத்திரப்படுத்திட்டேன்.”
“அதை ஏண்டி பத்திரபடுத்துனா? அப்பவே அம்மாட்ட காட்டி உன் கல்யாணத்தை நிறுத்திட வேண்டியது தானே.”
“நிறுத்தி. அப்புறம் உங்க பாஸோட அப்பா அடுத்த போக்கிரியோட உள்ளால வரவா? இப்போ நம்ம பிரச்சினை மகேந்திரன் இல்ல திலகா. சக்கரவர்த்தி. அவருக்கு அவர் மகனுக்கு அவர் விரும்புற பொண்ணோட கல்யாணம் நடக்கணும். அது நடக்காத வரை அந்த மனுஷன் என்னை விடப் போறது இல்ல.”
“அதுக்காக கட்டிக்க போறியா அந்த மகேந்திரனை.”
“நான் என்ன லூஸா?”
“அப்புறம் என்ன தாண்டி செய்ய போறா?”
“இப்போ என்னை வெறுத்துட்டு முகுந்தன் கிளம்புறது நடந்தா போதும். சக்கரவர்த்தி ஹேப்பி ஆகிடுவாரு. அவர் ஹேப்பி ஆகிட்டா. அடுத்த ஜாதகத்தை தூக்கிட்டு என் பின்னால வர மாட்டாரு. அதான் அவங்க கிளம்பி போன பிறகும் என் மேரேஜ் நிக்கணும்.”
“ஒ!… அதுக்கு தான் முகுந்த் சார்ட்ட அப்படி மட்டமா பேசுனியா?”
“இல்லனா அவர் போக மாட்டார் திலகா. என்னை மறக்கவும் மாட்டார்.”
“அவர் ஏண்டி உன்னை மறக்கணும்.”
“அவர் மறக்கலனா இன்னும் சக்கரவர்த்தி பார்வையில நான் விழணும். ஒவ்வொரு நொடியையும் பயத்தோட கடத்தணும். இனி என்னால முடியாதுடி ரொம்ப தளர்ந்து போயிட்டேன்.”
“நீ இப்படி பயந்து ஒதுங்குறதால தான் அவரோட ஆட்டம் அதிகமா இருந்திருக்கு. நீயும் அவரை எதிர்த்துட்டு நின்னிருக்கணும் ஓவியா.”
“நின்று…”
“அவர் மகனை அவர் முன்னால உன் கழுத்துல தாலி கட்ட வச்சிருக்கணும்.”
“சரி தாலி கட்ட வச்சி.”
“என்னடி இப்படி கேட்கிறா? அவர் முகத்துல கரியை பூசியிருக்கணும்.”
“ஒ.கே கரியை பூசிட்டு…”
“………”
“அந்த வீட்டுல தானே வாழ போகணும். அப்படி போனா என் வாழ்க்கை அந்த வீட்டுல சந்தோஷமா இருக்குமா? இருக்காது தானே. அப்படினா இது எல்லாம் செய்து எதுக்கு? எனக்கு என் முகுந்தனோட நிம்மதி சந்தோஷம் ரொம்ப முக்கியம். அது நான் பிரிஞ்சா தான் அவனுக்கு கிடைக்கும்ணா நான் பிரிஞ்சிட்டு போறேன். அவன் நல்லா இருந்துட்டு போகட்டும். எனக்கு அம்புட்டு தான் வேணும்.”
சொன்னவள் சற்று குரலை தளர்த்தி முகத்தில் ஒரு வித புன்னகையை படரவிட்டவாறு,
“அவன் கொஞ்சம் இல்ல. அதிகமான நியாபகங்களை எனக்கு தந்திருக்கான் திலகா. காலம் முழுதும் அதே நினைவோட என்னால வாழ முடியும்.”
“ஏய்… அப்படினா நீ… நீ… இன்னொரு…”
“அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த இடிபாடுக்குள்ள எப்போ என் உடலை அவனுக்கு கொடுத்தேனோ அப்பவே அவனோட வாழ்ந்துட்டேன். தப்பா எதுவும் நடக்கல தான். ஆனா அவன் எனக்கானவன் என்ற எண்ணம் தான் அன்று என் உடலின் தகதகப்பை அவனுக்கு கொடுக்க வச்சிது. அது என்றும் மாறாது. என்னால மாத்த முடியாது. என்ன இருந்தாலும் அவனோட நான் வாழ்ந்துட்டேன். அந்த நினைவோட வாழ்ந்திடுவேன்..
“நீ என்ன சொன்னாலும் என் மனசு கேட்கலடி.”
“கேட்காது. கேட்டா அது திலகா இல்லவே . திலகாவோட மனசுக்கு தோழியோட சந்தோஷம் தான் முக்கியம். இந்த தோழிக்கு இப்படி நடந்தா தான் நிம்மதி சந்தோஷம். அதை மனசுல வச்சிட்டு கொஞ்ச நேரம் அமைதியா இரு. எல்லாம் நான சொன்னது போல நடக்கும்.”
சொன்னவள் வண்டியில் இருந்து இறங்கி கட்டிலில் அவளை உட்கார வைத்து விட்டு,
“நீ படுத்துக்க… நான் முகுந்தனை ஒருமுறை போய் பார்த்துட்டு வந்திடுறேன்.”
என்றதும் சட்டென அவள் கையை பிடித்தவள்,
“பாவம்டி அவர்.”
“பாவம் தான். அதான் இந்த வலிக்குள்ள அவரை வருத்த கூடாதுணு அனுப்பி வைக்கிறேன்.”
கண்ணடித்து சொன்னவளை பாவமாக பார்க்க,
மனசை போட்டு குழப்பாத. நாம எல்லாருக்கும் நல்லது தான் செய்திருக்கோம். அதனால நமக்கும் நல்லது தான் நடக்கும். நீ நிம்மதியா தூங்கு. நாளைய விடியல் நல்லதாவே இருக்கும்.
சொல்லி விட்டு அவள் கைக்குள் அகப்பட்டிருந்த தன் கையை உருவிக் கொண்டு, அவள் வெளிவந்த போது,
முகுந்தனிடம் நளன் கெஞ்சி கொண்டிருப்பது கேட்டது.
“வேணாம்டா முகுந்தன் அவசரப்படாத…”
“இல்லடா. இதுக்கு மேல இங்கு இருந்தேன். என்னை விட மானம் கெட்டவன் யாரும் இருக்க முடியாது. என்னை… என்னை… அந்த மகேந்திரனை விட மோசம்ணு சொல்லிட்டா. ஊருக்கு ஒரு பொண்டாட்டி வச்சிட்டு சுத்துறவனை விட நான் கோவலமாகி போயிட்டேன் அவள் பார்வையில, இதுக்க மேல அவளுட்ட கெஞ்சிட்டு நிற்க சொல்லுறியா? முடியாது. முடியவே முடியாது. இவா என்ன பெரிய ரதியா? இவளைவிட அழகான பொண்ணா பார்த்து கட்டுவேன்.”
ஆத்திரத்தில் சொன்னவன் பின் அழுகைக்கு மாறி,
“அழகான பொண்ணை கட்டுவேன் ஆனா அவளை கட்ட முடியாதுலடா…”
என குரல் உடைய இங்கு கேட்டு கொண்டு நின்றவளில் உயிரே உடைந்தது. கீழ் உதட்டை கடித்து வலியை அடக்கினாள். ஆனாலும் அடங்கிய வலி கண்ணீரை குப்பென சிந்தி விட, புறங்கையால் துடைத்து தன்னை சமரசமாக்க முனைந்தாள்.
என்ன இருந்தாலும் அவள் அப்படி பேசியிருக்க கூடாது இல்லியாடா… ஆனா பேசிட்டாளேடா… இதுக்க மேல என்னால இங்க இருக்க முடியாது. நான் கிளம்புறேன். இவளோட பார்வை படாத ஒரு தேசத்துக்கு ஒடி தப்பிக்க போறேன்.
என நளனின் கையில் இருந்து பையை உருவி விட்டு வேகமாக முன்னோக்கி நடந்தான் முகுந்தன்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel