வணக்கம் வாசகர்களே!
படிப்பில் தன்னை நிரூபிக்கும் பல்லவி. அவளுக்கு கிடைக்கும் பாராட்டும் பரிசாலும் வாய் பிளந்து நிற்கும் கமலம். அடுத்து நடந்தது என்ன?
இது நடந்து இரண்டு வாரம் சென்றிருக்கும் அந்த இரண்டு வாரத்தில் பல்லவியின் பேச்சு தான் ஊர் முழுவதும் பரவி இருந்தது. ஊருக்குள்ளே இதுவரை வராதவர்கள் எல்லாம் வந்து விட்டு சென்றனர். பல்லவி மனதால் சந்தோஷமாக இருந்தாள். யாரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும், இரவில் தாயோடு பேசினாள். ஊரில் ஒவ்வொருவரும் புகழ்வதை சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டாள்.அவளால் பாண்டிக்கு மட்டும் பெருமை இல்லை. கமலத்திற்கும் பெருமையாக இருந்தது. இப்படி ஒரு உயரத்தில் தங்களைக் கொண்டு வைப்பாள் என அவள் நினைக்கவே இல்லை. அதிலும் வருகிறவர்கள் எல்லாம் பணமாய் கொடுத்துவிட்டு செல்ல அந்த பணத்தை அவள் எடுக்காமல் அனைத்தையும் கமலத்திடம் கொடுக்க, கமலத்திற்கு கண்ணீரே வந்துவிட்டது.
அதிலும் கனகம் பேப்பரில் வந்த தன்னுடைய வீட்டைக் காட்ட, நொறுங்கி தான் போனாள். அதிலும் ஒரு பக்கம் முழுவதும் பல்லவியின் படத்தை போட்டு செய்தி வெளியாகி இருக்க கணவரை நச்சரிக்க செய்து படித்து தெரிந்து கொண்டாள். அவளுக்கு எல்லாம் இது புது விஷயம் தான். வாழ்வில் இப்படியெல்லாம் சந்தோஷப்படும் நாளும் வரும் என அவள் நினைக்கவே இல்லை. அப்படி கமலம் உச்சத்தில் இருந்த ஒரு நாள் கையில் ஒரு காகிதத்தோடு உள்ளே வந்தார் பாண்டி. பல்லவியின் நெற்றியில் முத்தமிட்டவாரு
“ஒரு சந்தோச செய்தி அம்மா…”
எனச் சொல்ல பல்லவி மட்டுமல்ல கமலமும் விழி விரியதான் அவரைப் பார்த்தாள். உனக்கு ரோட்டரி சங்கம் சார்பாக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்கம்மா. அதுல ஹோம் மினிஸ்டர் கலந்து கொண்டு உனக்கு பதக்கமும்,பணமும் கொடுக்குறாங்களாம். என்றதும்…
“பணமா!…”
கமலம் வாய் பிளக்க…
“இவா ஒருத்தி. ஹோம் மினிஸ்டரே நம்ம ஊருக்கு வந்து அவர் கையால பரிசு வாங்குவது என்றால் சும்மாவா? பாரு..ஒரு வாரமும் இங்க திருவிழா தோத்துடும்..வெளியூர்காரங்களே நம்ம பிள்ளைக்கு இவ்வளவு சிறப்பு செய்தா,உள்ளூர்காரங்க சும்மா இருக்கலாமான்னு நம்ம விவசாய சங்க தலைவர் கூட எதையோ பண்ண போறதா பேசிக்கிறாங்க.”
என்றதும் கமலம் வாயெல்லாம் பல்லாக சிரிக்க,
பல்லவியோ புன்சிரிப்போடு நின்றிருந்தாள்.
“இதுதான்ம்மா நோட்டீஸ். பாத்துக்க.”..
என பல்லவியிடம் நீட்ட, அதைப் பிரித்துப் பார்த்தவள் முகம் மலர நின்றிருந்தாள்.
அதே நேரம்…
“இப்படி கண்ட கண்டவங்க எல்லாம் பேசினா என் பிள்ளைக்கு கண் திருஷ்டி ஆகிடும். நான் முதல்ல சுத்தி போட்டு விடுறேன்.”
என கமலம் உள் செல்ல
தயங்கித் தயங்கி அவர் அருகில் வந்த பல்லவியோ
“மாமா…”
என அழைக்க…
“என்னடா…”
“இந்த விழாவுக்கு…”
அவள் இழுக்க…
“இந்த விழாவுக்கு…”
அவர் கேட்க
“சங்கிலியையும் கூப்பிடுறீங்களா மாமா”
என்றதும் சட்டென திரும்பி அவளைப் பார்க்க…அவள் மெல்ல தலை குனிந்தாள்.
“நானும் அவனை போய் பார்க்கணும்னு தான் நினைச்சேன். உனக்கு பத்தாவது ரிசல்ட் வந்தப்ப அந்த குதி குதிச்சான். இப்ப ஆளை காணல. எல்லாம் நான் போய் சத்தம் போட்டேனில்ல அந்த கோவமா தான் இருக்கும். கண்டிப்பா அவனும் இந்த பாராட்டு விழாவுக்கு வருவான். போதுமா?..”.
என்றதும் பல்லவி நிறைவோடு தலையசைக்க, பாண்டி வெளியேறினான்.
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஊரில் பிளக்ஸ் வைப்பது, மந்திரியின் வருகைக்காக அலங்காரம் பண்ணுவது, மேடை அமைப்பது என ஊரே உற்சாகத்தில் இருக்க… இது எதிலும் கலந்து கொள்ளாமல் தான் சங்கிலி இருந்தான்.ஆனாலும் இதற்கு மேல் அவளை பார்க்காமல் இருக்க முடியாது என தோன்ற மூன்று நாள் வெளியூர் சென்று விட்டு வருகிறேன். என சங்கிலி கிளம்பி விட, பாண்டி வந்து பார்த்தும் அவனை அழைக்க முடியாமல் போனது,
அதை பல்லவியிடம் சொன்னபோது ஏனோ அவளுக்கும் ஏமாற்றமாக தான் இருந்தது. கண்களை மூடிக்கொண்டு செயரில் சாய்ந்து இருந்தாள். அன்று மாடு அவளை இழுத்துக் கொண்டு போன சீனே மன அலையில் வந்தது. அதனூடே..அழுகையினுடே தன் கால் காயத்திற்கு மருந்திட்டதும் நினைவலையில் தவழ்ந்தது.
“இருந்திருக்கணும். அவன் ஒருத்தனும் என் பார்ட்டிலே இருந்து இருக்கணும்.” இது மட்டும்தான் அவளுக்கு தோன்றியது. அதன் பின் அதை மறந்தே போனாள். நினைக்கும் அளவு சூழல் இடம் தரவில்லை. புது டிரஸ் எடுப்பது, மேடையில் எப்படி பேசுவது என அவள் மனம் வேறு பக்கம் சென்று விட, சங்கிலி பற்றி அவள் அதன் பிறகு பேசவே இல்லை.
அன்று விழா நடக்கும் நாள். கமலம் தன் குழந்தைகளுக்கும், பல்லவிக்கும் பூவை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க… ஐஸ்வர்யாவும், பல்லவியும் சூடிக்கொண்டனர். ரவியும், செழியனும் புது டிரஸ்ஸில் வர பாண்டியும் வந்தார்.
“கிளம்பலாமா?”
என்றதும் அவ்வளவு சந்தோஷத்தோடு அந்த குடும்பம் புறப்பட்டு வெளியே வந்தது..வெளியில் விழா தலைவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த வண்டி வந்து நிற்க, அதில் ஏறிக்கொண்டனர்.
அதே உற்சாகம் குறையாமல் விழா மேடையின் அருகில் வர,
ஊரே அங்கு தான் கூடியிருந்தது. மினிஸ்டர் இன்னும் வரவில்லை. ஆனால் கட்சித் தொண்டர்களின் ஆரவாரத்தால் அவ்விடம் சலசலத்துக் கொண்டே இருந்தது.
நேரம் ஆக ஆக வெள்ளை வேஷ்டிகாரர்களின் நெருக்கத்தால் அந்த மைதானமே நிரம்பி வழிந்தது. பல்லவி பிரமிப்பு மாறாமல் பார்த்தாள். கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. தாயின் உரு தான் நெஞ்சில் ஆடியது.
அந்த சின்ன வயதில் அவள் மடியில் பிடித்து அமர்த்திக் கொண்டு அவள் கரம் இரண்டையும் தன் கையால் பிடித்து ஆட்டிக் கொண்டு…
“என் பொண்ணு ஒரு நாள் இந்த உலகமே புகழக்கூடிய ஒரு இடத்துல போய் நிப்பா. அப்போ இந்த அம்மா கீழயிருந்து சந்தோஷத்துல என் செல்லத்தை அண்ணாந்து பாப்பேன். என் செல்லம் முகமெல்லாம் பூரிப்போட,நெஞ்சு நிறைய மகிழ்ச்சியோட இருப்பா.அந்த நாளுக்காகதான்டா அம்மா காத்திருக்கேன்.”
“உன்னை வளர்த்து ஆளாக்கிடமாட்டேன் என்று என் முன்னால சவால் விட்ட உறவுகளுக்கு முன்னால நீ உசந்து காட்டணும்டா, காட்டுவா தானே?…”
தாய் சொன்ன வரிகள் நெஞ்சில் அலைய…கண்கள் முட்டிக்கொண்டு வந்தது.
“நீயும் இந்த நேரம் என் கூட இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்மா. உனக்காக தான் உன் ஆசைக்காக தான் உன் பொண்ணு இந்த இடத்துல வந்து நிக்குறேன். பாக்குறியாம்மா. நான் உனக்கு தெரியுறேனாமா…”
விழி நிறைய நீரோடு சுத்தி சுத்தி பார்த்தாள். பேதை பெண்ணுக்கு தாயின் உருவம் தான் தெரியவில்லை. ஆனால் மாமாவின் உருவம் தெரிந்தது.
கண்ணீர் மல்க நின்ற அவளிடம் வந்தவர்
“என்னம்மா..அம்மாவை நினைச்சுக்கிட்டியா?”…
என சரியாக கேட்கவும்
“ம்..ம்…”.என்றாள்.
“எங்க போயிட போறா.இந்த மேடையை சுற்றி எதுலயோ தான் நிக்கபோறா. உன் சந்தோஷத்துல அவா இல்லாம எப்படி?”…
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது ஆரவாரம் தெரிய, அந்த இடமே பரப்புக்கு மாறியது.
ஆம். மினிஸ்டர் கார் வந்து நின்றது. அதிலிருந்து ஹோம் மினிஸ்டர் சதாசிவம் இறங்க, கட்சித் தொண்டர்கள் பூங்கொத்தோடு நெருங்க, வரவேற்பு முடிந்து அவர் மேடையில் வந்து அமர்ந்த போது பல்லவியையும் அழைத்துக் கொண்டு போய் மேடையில் உட்கார வைத்தனர்.
அது பிரம்மாண்ட மேடை. மேடையின் மேலே விஐபிகள் 20 பேர் சூழ்ந்திருந்தனர். ஒவ்வொருவராக பேசி, கடைசியில் பல்லவி பேசும் நேரமும் வந்தது. இதுவரை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த மட்டில் பல்லவியை புகழ்ந்து தள்ளினர்.
கடைசியாக இவளை அழைத்து மினிஸ்டர் கேடயமும்,பரிசும் கொடுக்க..ஆயிரம் மின்னல் வெட்டுவது போல ஆளுக்கு ஒரு கேமராவில் அதை படம் பிடித்து ஓய…
கையில் பதக்கம் வந்த நொடி…சட்டென்று பல்லவியின் மனதில் வந்தான் சங்கிலி. அவன் வந்திருக்கானா நாலாபுறமும் கண்கள் சுழலவிட்டாள். ஆனால் கூட்டத்தில் அவனை பார்க்க முடியவில்லை, ஆனால் அதன் பிறகு நினைக்கும் அளவு சூழல் இடம் தரவில்லை
மைக் அவள் முன் நீட்டப்பட்டது.அவள் கண் மாமாவிடம் ஒரு முறை சென்று திரும்பியது.
“முதல்ல என் அம்மாவுக்கு தான் நன்றி சொல்லணும். நான் இந்த இடத்துக்கு வர அவங்க தான் காரணம். உங்களுக்கு தெரியாது. இந்த இடத்துக்கு நான் வந்து நிற்க, என் அம்மா ரெண்டு வயசுலயே பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு மூணு வயசு நிரம்புறப்ப நான் திருக்குறள்ல 1330 பாடலையும் மனப்பாடமா சொல்லிடுவேன். அஞ்சாம் வகுப்பு படிச்சப்ப அதோட மொத்த பொருளோட என்னால திருக்குறள் முழுவதும் சொல்ல முடியும். அந்த அளவு படிப்பு மேல் எனக்கு தாகத்தை ஏற்படுத்துனவங்க எங்க அம்மா தான்.”
“ஆனா நான் எந்த உயரத்துக்கு வரணும்னு விரும்புகிறார்களோ அதை பார்க்காமலே போய் சேர்ந்துட்டாங்க. அதன் பிறகு எனக்கு அந்த அம்மா ஸ்தானத்தில் கிடைத்த உறவு என் மாமா தான். இன்று 600 க்கு 600 எடுத்திருக்கேனா அது என் மாமா, அத்தை கொடுத்த உற்சாகத்தால தான். தூரத்து சொந்தம் என்கிற ஒரே உறவுல தனியா நின்ன என்னை கூட்டிட்டு வந்து, என்னையும் தங்களோட சொந்த பிள்ளையா பார்த்துகிட்டு, என்னை படிக்க வச்சு இவ்வளவு உயர வச்சதே, என் மாமாவும், அத்தையும் தான்.”
“அவங்களுக்கு தான் நான் இந்த நேரத்துல நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”
“அடுத்ததா என் டீச்சர்,தலைமை ஆசிரியர், என் தோழி இவங்க எல்லாருமே எனக்கு முழு சப்போர்ட்டிங்கா இருந்தாங்க. படிப்பிலும் சரி வெளில வேற பிரச்சினைனாலும் சரி என் கூடவே இருந்த… இருந்த..சட்டென்று சங்கிலி நினைவு வர,எல்லாருக்கும் என்னோட மிகப்பெரிய நன்றியை இந்த நேரம் சொல்லிக்க விரும்புகிறேன்.”
“டாக்டர் ஆகணும் என்கிறது தான் என் அம்மாவோட கனவு. அது நிறைவேறுமாணு தான் தெரியல. முடிஞ்ச மட்டும் முயற்சி பண்ணனும்னு நினைக்கிறேன். அதுக்கும் உங்க எல்லாரோட சப்போர்ட்டும் கிடைக்கும்னு நம்புறேன்.”
நன்றி…
என அவள் வந்து அமர, கூட்டமே கோரஸ் பாடியது.
பின் செய்தியாளர் சந்திப்பு நிகழ, மினிஸ்டர் செய்தியாளர்களிடம்…
“பெற்றோரை இழந்து ஒரு புள்ள இந்த அளவு அதுவும் குடிசை வீட்டில் ஒரு ஏழை குடும்பத்தால இந்த அளவு உயர்ந்து நிற்கிற இந்த சூழல்ல…அரசு இந்த குழந்தைக்கு எந்த வழியில உதவும்ணு சொன்னீங்கன்னா…”
என்றதும்
“உங்களுக்கே தெரியும். நமது அரசு நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மானிய முறையில படிப்பு எல்லாம் அறிவிச்சிருக்கு. நீட் தேர்வில் இவங்க வெற்றி பெற்றா இவங்களால ஈஸியா டாக்டர் சீட் பெற முடியும் அதுலயும் சலுகையா பாதி அளவு பீஸ் இவங்க குறைவா கட்டுனா போதும் அதுக்கு எந்த முயற்சி செய்தாலும் நான் உறுதுணையா இருப்பேன் சொல்லிவிட்டு அனைவரிடமும் விடைபெற்று பல்லவியை கையைப் பிடித்து குலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பி விட பாண்டி மிக மிக சந்தோஷத்தோடும் பெருமையோடும் வீடு வந்து சேர்ந்தார்.
அன்று முழுவதும் அவர்கள் வீடு நிறைய ஆட்களாகவே இருந்தனர் ஆனால் பல்லவி என்றும் போல் அமைதியாகவே இருந்தாள்.வழக்கத்திற்கு மாறாக கமலம் ஆழ்ந்த அமைதியிலே இருந்தாள்.அவரிடம் படபடத்த பேச்சும் இல்லை..நொடிக்கு 300 முறை துடிக்கும் துடிப்பும் இல்லை.எதையோ மனதில் போட்டு பிசைவது போல் தான் இருந்தாள்.
ஒருவேளை பணம் வந்தபோது சிரித்துக் கொண்டிருந்தவள் டாக்டர் படிக்க வைக்க வேண்டி வருமோ என தான் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாளோ என பாண்டி எண்ணி கொண்டார் ஆனாலும் கேட்கவில்லை. இவள் என்ன சொன்னாலும் கேட்கக்கூடாது யார் காலில் விழுந்தாவது அந்த டாக்டர் சீட்டை வாங்கிவிட வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என்று அவருக்கு அப்போது தெரியவில்லை. இன்று மின்னும் விளக்கில் பேசிய யாரும் வெளிச்சத்திற்கு அப்பால் இப்படி இருப்பதில்லை என தெரியாமல் பாண்டி கனவு கண்டு கொண்டிருந்தார்..
அன்றைய நாள் முடிந்து இரவும் வந்தது. எல்லாரும் அவரவர் வீட்டுக்கு கிளம்பி விட வீடே அமைதியானது. குழந்தைகள் எல்லாம் படுத்து உறங்கி விட்டனர். பல்லவியும் தன் இடத்திற்கு போய் முடங்கிக் கொண்டாள். பாண்டியால் தூங்க முடியவில்லை வெகு நேரம் வெளியில் உலாத்தியவர் என்னவெல்லாம் செய்யலாம் என மனதில் ஒரு கணக்கு போடத் தொடங்கினார். அது எழுந்து எழுந்து நேரம் இரவு 11 மணி தாண்டியது –
“போதும் இனி படுக்கலாம் காலையில எழுந்து அவளோட கிளாஸ் மிஸ்ஸை போய் பாக்கணும். நீட் தேர்வு பற்றி விசாரிக்கணும்” என்ற எண்ணத்தோடு தூங்க வந்தவர் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து அதிசயித்தவாறு அருகில் வந்து அமர்ந்தார் பாண்டி.
“என்ன உனக்கு தூக்கம் வரலையா?” அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக அவளை பிடித்து உலுக்க…
“என்ன?… எந்த உலகத்துல இருக்கா.” என்றதும் சுதாகரித்துக் கொண்டு
“நான் இன்னும் அந்த மேடைல இருந்து இறங்கி வரவே இல்லைங்க. எப்படியான ஒரு இடத்தில் இருந்து நம்ம பல்லவி என்னமா பேசினா பாருங்க. என்னால அதை மறக்க முடியல.”
“உன்னையும் என்னையும் பத்தி பேசினாளே அதைச் சொல்றியா?”
“ஆமாங்க உங்கள சொன்னா அது 100% உண்மை. என்னையும் அல்லவா சொல்லி இருக்கா அதை தான் என்னால தாங்க முடியல”
“நீயும்தான் அதன் பிறகு பாசமா தானே இருக்கா அதான் பல்லவி சொன்னா?”
“இல்லங்க அதான் இல்ல. நான் அவளிடம் ஒரு நாள் கூட பாசமா நடந்துக்கிட்டது கிடையாது. அதுதான் தாங்க முடியாம இருக்கு. உங்க முன்னால மட்டும் தான் பாசமா நடிச்சேன். நீங்க போன பிறகு நான் செய்யாத கொடுமை இல்லை. ஒருநாள் கால்ல சூடு கூட வைத்தேன். ஒருநாள் பண்ணை வீட்ல மாடு கூட மேய்ச்சலுக்கு விட்டேன். வீட்ல அத்தனை வேலையும்…”
சொல்ல முடியாமல் அவள் குலுங்க
பாண்டியின் முகம் சிவக்கத் தொடங்கியது
“என்னை மன்னிச்சிடுங்க. இன்று அவா எனக்கு சரியான தண்டனையா கொடுத்துட்டா. என்னை உயர்வா பேசி என்னை உணரவச்சிட்டா. இனி நான் அவளுக்கு நல்ல அம்மாவா இருப்பேன். அவளை எப்படியாவது டாக்டர் ஆக்கணும்ங்க. எம்புட்டு பெரிய மனுஷர் எல்லாம் பேசினாங்க. அவங்களுக்கு கையில கால்ல விழுந்தாவது அந்த பொண்ணோட ஆசையை நிறைவேத்தனும்.. நம்ம ரவியும் படிச்சான். பிளஸ் டூல ரெண்டு பாடம் பெயில். ஆனா நான் இவ்வளவு கஷ்டப்படுத்தியும் பல்லவி 600க்கு 600 எடுத்திருக்கானா நாம முழு ஒத்துழைப்பு கொடுத்தா அந்த பொண்ணு பெரிய ஆளா வருவா.”
மனைவி இவ்வளவு மனம் வருந்தி சொல்ல அவளை தன்னோடு அணைத்தவர்.
“பண்ணனும். நம்மள அவ பெருமை படுத்திட்ட, நாம அவளுக்கு செய்ய வேண்டியத கண்டிப்பா செய்யணும். ஆனா?… கைல காசு இல்லாம எப்படி டாக்டர் படிப்பு எல்லாம் பெரிய படிப்பு.. அதுக்கெல்லாம் நாம எப்படி?”
“தெரியலங்க எனக்கும் தெரியல. ஆனா எப்படியும் பண்ணனும் தான் தோணுது. நாம ஏன் எம்எல்ஏவை போய் பார்க்க கூடாது. பெற்றோர் இல்லாத அவா இவ்வளவு சாதிச்சிருக்கா அவளுக்காக நாம எதுவும் செய்யலாம்னு அவர்தானே சொன்னாரு. நீங்க ஒரு முறை அவரை போய் பாருங்க.”
“பாக்குறேன்.அதுக்கு முன்னால நீட்னு ஒரு டெஸ்ட் இருக்கு அது பற்றி அவளோட கிளாஸ் மிஸ்ட்ட கேட்டு,அது எழுத முதல் செய்யணும்”
. “ஆமா அது பற்றியும் பேசினாங்க இல்ல.”
“நமக்கு இல்லனா எப்படி தெரியும். அது எல்லாம் அவங்க கிளாஸ் மிஸ் பண்ணி கொடுத்துடுவாங்க.பாஸாகி நல்ல மார்க் பல்லவி எடுத்துடுவா. ஆனா பீஸ் கட்ட தான் நாம முயன்றாகணும். முடியுமானு தான் தெரியல.”
“நம்புவங்க எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம் இதெல்லாம் கல்பனா தான் தெய்வமா இருந்து செய்றானு தோணுது. அதையும் அவா பார்த்துப்பா. இப்ப தூங்குங்க. காலையில எல்லாம் பாத்துக்கலாம்.”
என கணவரை பிடித்து படுக்க வைத்து தானும் படுத்துக்கொண்டாள்.
மறுநாள் காலையிலேயே பாண்டி விவசாய சங்க தலைவரை போய் சந்திக்க, அவர் வழியாக எம்எல்ஏவையும் சந்தித்தார்..எல்லாம் நீட் தேர்வு எழுதட்டும். எனச் சொல்லிவிட பல்லவி கிளாஷ் மிஸ்ஸை தேடி போனார். அவர்கள் அனைத்து வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்து வழிகாட்ட, அடுத்து ஒரு மாதம் பல்லவியின் பயணம் அதை நோக்கியே சென்றது. உண்மையில் ஹார்ட்ஒர்க் பண்ணினாள் என்று தான் சொல்ல வேண்டும். அது சம்மந்தமான கோச்சிங் கிளாசுக்கு அந்த ஆசிரியரே அழைத்து சென்று சேர்த்து விட, பல்லவி ஒரு நேரத்தை கூட வேஸ்ட் ஆக்காமல் படிக்கத் தொடங்கினாள். நாட்கள் சென்றது. தேர்வு எழுதும் நாளும் வந்தது. கடைசியில் நல்ல மதிப்பெண் எடுக்கவும் செய்திருந்தாள்.
அரசாங்க ஸ்கூலில் படித்தவள் என்பதால் இட ஒதுக்கீட்டில் அவளுக்கு டாக்டர் சீட்டும் கிடைத்தது. இது அனைத்தையும் பாண்டி நினைத்தது போல எல்லாம் சரியாக நடந்தது. ஆனால் அதன் பின் தான் அவர் நினைத்த எதுவும் நடக்கவில்லை. யாரைப் போய் பார்த்தாலும் ஒன்றுமில்லை என்று திரும்பி வருவார்.
இல்லை கைவிரித்து திரும்பி வருவார். ஆக மொத்தத்தில் இரண்டு வாரமாக கமலமும் பாண்டியும் அலைந்தும் எதுவும் பண்ண முடியவில்லை. பீஸ் மட்டும் கட்ட வேண்டும் என்றாலும் ஒரு வருடத்திற்கு மூன்று லட்சம் கட்ட வேண்டும் என்றார்கள். நான்கு வருடமும் 3 லட்சம் என்றால், 12 லட்சம் வேண்டும்.
அதோடு முடியுமா? அதன் பிறகு வரும் செலவு கைக்குள் கொள்ளாது. பாண்டி சோர்ந்து போனார். இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.
அவர் சோர்ந்த நேரம் பல்லவி அவர் அருகில் வந்தாள்.
“முடியலன்னா விடுங்க மாமா. எனக்காக நீங்கபடுற கஷ்டத்தை பாக்க முடியல. ஏதாவது காலேஜ்ல சேர்த்து விடுங்க. படிச்சு ஏதாவது சின்ன வேலைக்கு போறேன். நாம எல்லாம் ஆசைப்படக்கூடாது மாமா. மேடையில பேசுவதெல்லாம் உண்மை இல்லை என்று தெரியாமல் ஓவரா ஆசைப்பட்டு விட்டோம். அது தப்புன்னு இந்த உலகம் புரிய வச்சுடுச்சு. நீங்க வருத்தப்படாதீங்க மாமா. என்னால படிக்க முடியலன்னு கூட வருத்தம் இல்லை. உங்களை இப்படி பார்க்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.”
. சொல்லிக்கொண்டு பாண்டியை பாவமாக பார்க்க,
“இல்லடா மனசு தளர விடாத. நாளைக்கு ஒரு சிலரை போய் பார்க்க போறேன். ஏதாவது வழி இருக்கும் பாப்போம். நீ போ.மாமா பாத்துக்குறேன்.”
என்றதும் பல்லவி தயங்கி தயங்கி உள் செல்ல,
பாண்டி எழும்பி வெளியே வந்தார். மனது பாரமாக இருந்தது. பலரிடம் போய் சொல்லிவிட்டு வந்துவிட்டார். அப்படி கேட்க இனி யாருமில்லை. எல்லாரிடமும் கேட்டாகிவிட்டது. விசயம் மொத்த ஊருக்கு தெரிந்தும், ஊரிலும் யாரும் உதவ தயாரா இல்லை. பேர் புகழ் தன் ஊருக்கு வரப்போகிறது என்பதும் மட்டும் ஓடி வந்தார்கள். டிவியில் தன் முகமும் தெரியவேண்டும் என்பதற்காக முண்டியடித்தார்கள். இன்று உனக்கு வந்ததற்கு நான் என்ன செய்ய என எல்லாரும் ஒதுங்கி விட்டார்களே. கண்ணில் ஆசையோடும் நெஞ்சில் ஏக்கத்தோடும் இருக்கும் அந்த புள்ளையிடம் நான் என்ன சொல்வேன். நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக ஒரு மார்க் கூட குறையாமல் எடுத்து நிற்கும் அவளை நான் ஏமாற்றிவிட்டேனே. இந்த போலி உலகத்தையும், பகட்டு மனிதர்களையும் நம்பி, அவள் மனதில் ஆசையை தூவி இப்போது நானே அழித்துவிடும் நிலையில் இருக்கிறேனே…
பாண்டியின் உள்ளம் குலுங்கி குலுங்கி அழுத போது அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான் சங்கிலி.
.
. அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel