வணக்கம் வாசகர்களே!
திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா? அவன் மனதை திலகா புரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அலுவலகம் அவளுக்கு அமைத்து கொடுத்ததா? தெரிஞ்சிக்கலாமா?
திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா?
திலகா மெட்ராஸ்க்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகி விட்டது. ஆனால் இந்த பத்து நாளும் நளன் அந்த அலுவலகத்தில் இல்லை. வேலை விசயமாக முகுந்த் தான் அவனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தான். அவனுக்கு இவள் வந்ததே தெரியாது.
இந்த மூன்று மாதத்தில் அவனும் அவளை எப்படி எல்லாமோ அழைத்து பார்த்தான். அவள் மசியவே இல்லை. ஆனால் இன்று, தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் தான் அவளும் வேலை பார்க்கிறாள் என்ற உண்மை அவனுக்கு தெரியாமலே போனது.
ஓவியா சொல்லும் போது ஆரம்பத்தில் முரண்டு தான் பிடித்தாள்.
“என்னம்மா. இப்படியே இருந்திடலாம்ணு நினைச்சியா? அம்மாவுக்கு என்னவெல்லாமோ செய்யணும்ணு கதை கதையா சொல்லிட்டு காலு போனதும் அதை காரணம் காட்டி தப்பிச்சிடலாம்ணு பாத்தியா. கால் போனா என்ன? அதுக்கு மேல தான் ஆயிரம் உறுப்புகள் இருக்கே. அது போதாது உன் ஆசையை நிறைவேற்ற. சும்மா மூணு மாசம் கட்டிலே கதினு கிடந்தது போதும். பேசாம கிளம்பி வா . கூட அம்மாவையும் என் அப்பாவையும் அழைச்சிட்டு வா. உனக்கான ஏற்பாட்டை நான் இங்க செய்து வைக்கிறேன்.”
என அவளிடம் அனுமதி கேட்காமல் வைத்து விட, அவளின் பேச்சை மீற முடியாமல் தான் கிளம்பி வந்தாள். கூடவே மனதின் ஓரத்தில் தாயை பார்த்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை துளிர்விட அன்றே கிளம்பி ரெடியாகிவிட்டாள். இளம் வயதிலே கணவனை இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்து விட்டு சுய கெளரவத்தோடு வாழ, தினம் தினம் போராடி போராடி தனக்கு ஒரு அடையாளத்தை தந்த தாயை நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது திலகாவின் நீண்ட நாள் ஆசை. சின்ன வயது முதல் தாய்படும் வேதனையையும், அவமானங்களையும் பார்த்து பார்த்து வளர்ந்தவளுக்கு தாய் நிம்மதியாக வாழும் காலத்தை பார்க்க ரொம்ப ஆசை. அந்த ஆசை தான் அவளை ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வைத்தது. அதற்கான செலவை கூட கொடுக்க தாய் பல வேளை சிரமப்பட்டிருக்கிறாள். ஆனாலும் மகள் முன் எப்போதும் அவள் தன் கஷ்டத்தை காட்டியதே இல்லை. சிரித்தவாறே வலம் வருவாள்.
ஆனால் கூட இருப்பவளுக்கு நிஜம் தெரியாதா? தெரிந்தது. அந்த தெரிதல் தான் அவளை தாய்க்காக வாழும் முடிவை எடுக்க வைத்தது. ஆனால் விதி அவளை தூக்கி எறிந்து விட்டது. நிஜத்தில் உடைந்து போய் தான் கட்டிலில் கிடந்தாள். இனி விடியல் இல்லை என்று தான் நினைத்தாள். ஆனால் தன் வாழ்வுக்கு இன்னொரு பயணம் இருக்கிறது என்பதை ஒவியா காட்டியதும் துணிந்து முடிவெடுத்து விட்டாள். ஆனாலும் மனம் முழுவதும் ஒருவித வேதனை. நளனை எதிர் கொள்ள வேண்டுமே என்ற வேதனை. எப்படியும் தன்னுடைய வருகையை நினைத்து சந்தோஷப்பட தான் செய்வான். அதோடு நிறுத்தி கொண்டால் பரவாயில்லை. அவன் பக்கம் இழுக்க பார்ப்பானே. எப்படி அவனை சமாளிப்பது என்ற குழப்பத்தோடு தான் வந்தாள்.
நல்ல வேளை அவள் வந்த நேரம் அவன் இல்லை. இந்த பத்து நாளும் அவன் இல்லாமல் நிம்மதியாக தான் வேலையை செய்தாள். மொத்த வேலையும் கம்பியூட்டர் முன் என்பதால் பெரிதாக கஷ்டம் எதுவும் இல்லாமல் தான் நாட்கள் கழிந்தது. வெளியில் போக வேண்டும் என்றாலும் டாய்லெட் தேவையின் போதும் ஒவியா துணையாக வந்தாள். ஓவியா அறையிலே அவளுடன் தான் இவளும் தங்கி இருக்கிறாள். அவள் சமைத்து தான் இருவரும் உண்கிறார்கள். இவளுக்கு ஓவியா எல்லாமுமாய் இருப்பதால் திலகா தன் வீட்டு அளவு கூட இங்கு கஷ்டப்படவில்லை. என்று தான் சொல்ல வேண்டும்.
வீட்டில் கூட தாய் வேலைக்கு சென்ற பின் தனக்கான வேலைகளை செய்ய அவள் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறாள். ஆனால் இங்கு அவள் தோழி அந்த கஷ்டத்தை கூட அவளுக்கு கொடுக்கவில்லை. தனக்காக தான் இந்த ஆன்லைன் வேலையையே உருவாக்கி இருக்கிறாள் என்பது மட்டும் இன்னும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்பை கட்டியாக பிடித்து தனக்கான பாதையை அழகாக அமைத்து விட வேண்டும் என்ற உறுதியோடவே இருந்தாள். திலகா வந்து பணியை ஆரம்பித்தது முதல் கொண்டு முகுந்த் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறான். ஒரு துளி அளவு குறை கூட கண்டுபிடிக்க முடியவில்லை அவனால். அதன் பின் ஏனோ அவன் பார்வை வேறு பக்கம் சென்று விட்டது. அவர்கள் இருவர் மேல் அவ்வளவு நம்பிக்கை.
முழுதாய் பத்து நாட்கள் இவர்களின் ராஜாங்கம் தான் கம்பெனியில் . முதலாளியிடம் இருவருக்கும் அதிக செல்வாக்கு இருந்ததால் கம்பெனியில் இப்போது எல்லாம் யாரும் ஓவியாவிடம் நேரடியாக மோதுவது இல்லை. பின்னால் திட்டி தீர்த்து மனதை சமாதானப்படுத்தி கொண்டாலும் முகத்துக்கு நேர் பேசும் துணிவு ஒருவருக்கும் வரவில்லை. கூடவே யாரும் முதுகுக்கு பின்னால் வேலை செய்ய துணியவில்லை. வாணி உட்பட. அதனால் இவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலைக்கு அந்த கம்பெனி மாற ஆரம்பித்தது.
கூடவே சுந்தரி கல்யாணி என புதிதாய் தோழிகளும் கிடைத்தனர். ஒவியா கிடைத்த தோழிகளை வைத்து முகுந்தின் ஆசைப்படி புதுபுது புராடெக்டாக அறிமுகம் செய்து வைக்க, அவள் அறிமுகமாக்கும் புராடெக்டை திலகா உலகம் முழுதும் விற்று தீர்க்க முழு முயற்சி எடுத்தாள். அவளுக்கு படிக்கும் போதே கம்பியூட்டர் அறிவும் நிகழ்கால இன்டெர்னெட் வசதி பற்றியும் தெரிந்திருந்ததால் புதுபுது வழிகளை கண்டுபிடித்து விற்பனைக்கான முயற்சியை எடுத்தாள்.
அவள் முயற்சியும் வெற்றியை நோக்கி போக திலகா மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை மெல்ல மெல்ல விடைப்பெற தொடங்கியது. என்றாலும் இந்த சமுதாயத்துக்கும் வீட்டிற்கும் நாலு நல்ல விசயங்கள் செய்ய முடியும் என வந்த பிறகு தான் அவளின் இறுகி இருந்த மனது லேசாக இளக தொடங்கியது.
தன் கனவு தேவதை இங்கு வந்து வேலையை தொடங்கி விட்டாள் என தெரியாமல் பத்து நாள் கழித்து முகுந்த் கொடுத்த வேலையை முடித்து கொண்டு சென்னை திரும்பினான் நளன். நேரே வந்தது என்னவோ தோழனின் மாவுமில் பேக்டறிக்கு தான். முடித்த வேலையை பற்றி பேசி பைல்ஸை அவன் வசம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பலாம் என்ற முடிவோடு தான் இங்கு வந்தான். வந்தவன் நேரே அலுவலகத்துக்குள் நுழைந்து விட்டான்.
உள் நுழைந்ததுமே ஏதோ வித்தியாசம் தெரிந்தது அவனுக்கு. இந்த ஒரு மாதத்தில் கம்பெனியே புது பொலிவு பெற்றிருப்பது போல தோன்றியது. புதிதாக சில பேர் ஸ்டாப்ஸாக முளைத்திருப்பதையும் பார்த்தவாறே தான் தோழன் அறைக்குள் நுழைந்தான்.
உள் நுழைந்தவன் வந்த வேகத்திலே தோழன் முன் கொண்டு வந்த பைல்ஸை தான் வைத்தான்.
அவனையும் பைல்ஸையும் ஒரு முறை பார்த்தவன். அந்த பைல்ஸை புரட்டாமல் அதை ஒரமாய் ஒதுக்கி வைத்து விட்டு ஆர்வமாய் அவனை பார்த்தான்.
“என்னடா அப்படி பாக்குறா? நீ கொடுத்த வேலையை முடிச்சிட்டேன். முதல்ல பைல்ஸை செக் பண்ணு.”
“அதை அப்புறமா பாத்துக்கலாம். முதல்ல உட்காரு.”
முகம் நிறைய மகிழ்வோடு பேசிய தோழனை புரியாமல் பார்த்தவன்.
“என்னடா? எதுவும் நல்ல விசயம் நம்ம ஆபீஸ்ல நடந்திருக்கா?”
“நல்ல விசயம் தான். ஆனா ஆபீஸ்க்கு இல்ல. உனக்கு…”
“எனக்கா? எனக்கு என்ன நல்ல விசயம் நடந்திருக்கு.”
“உன் சந்தோஷம் இப்போ நம்ம ஆபீஸ்ல தான் இருக்கு.”
“என் சந்தோஷமா? என்ன?… என்ன என் சந்தோஷம்.”
ஒரு நொடி தடுமாறியவன்.
“ஏய்…திலகா ?”
என வியப்பு மேலிட கேட்க,
ஆமாம் என்பது போல் தலை அசைத்து கண் சிமிட்டி சிரித்தான் முகுந்த்..
“ நிஜமா?….”
நம்ப முடியாமல் மறுபடியும் கேட்டவனை பார்த்து சிரித்த முகுந்த்.
“ம்… சத்தியமா? அதுல வேற இப்போ அவங்க உட்கார்ந்து இருக்கிறது கூட உன் அறையில தான்.”
என்றதும் சந்தோஷத்தில் துள்ளி எழும்பி விட்டான் நளன். முகம் முழுதும் அப்படி ஒரு பிரகாசம்.
‘போ… போய் பாரு.”
என்றான் அவன் முகம் கொள்ளா மலர்வை பார்த்து. ஆனால் அப்படியே வியந்து நின்றவன்.
“எப்படிடா?”
என்றான் அவன் முன் குனிந்து அவன் கண்ணை நிமிர்ந்து பார்த்தவாறு,
“ம்…”
என பெருமூச்சு விட்டவாறு எழுந்தவன், சிறிது நேரத்துக்கு பின்.
“நீயும் அவங்களை இங்க கொண்டு வர எவ்வளவு குட்டி கர்ணம் அடிச்சா. ஆனா ஓவியா ஒரே பிளான்ல்ல தூக்கி கொண்டு பக்கத்துல வச்சிட்டாங்க. முதல்ல அவங்க பிளானை சொன்ன போது நான் நம்பல. நீ இந்த மூணு மாசத்துல எத்தனை வேலைக்கான அப்பாயின்மென்டை அனுப்புனா. ஒண்ணுக்கு கூட அவங்க பக்கம் இருந்து ரெஸ்பான்சே வரலணு எனக்கு தெரியும். அதனால பெரிசா நம்பல. நீ வேற எத்தனை நாள் வீடு தேடி போய் மன்றாடி கூப்பிட்டா. வந்தாங்களா? ஆனா தோழி கூப்பிட்டதும் அடித்து புடித்து அடுத்த நாளே வந்து சேர்ந்துட்டாங்க.”
என்றதும் தன் மகழ்வை முகத்தில் காட்டியவாறு,
“நான் போய் பார்க்கட்டுமாடா.”
என்றான் கெஞ்சுதலோடு…
“அப்புறம் உன்னை வர வச்சதே அதுக்காக தான்.”
என்றான் சிரித்து கொண்டே,
“ரொம்ப தேங்க்ஸ்டா.”
உணர்ச்சி மிகுதியாய் தான் சொன்னான்.
“தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும். ஒவர் சந்தோஷத்துல எதையாவது பேசி இன்றே ஒடிட செய்திடாத.”
என்றான் குறும்பு சிரிப்போடு…
“நான் எதுவும் பேசல. அவா அந்த குழியில இருந்து எழும்பி வந்ததே போதும். எந்த அளவு நொறுங்கி போயிட்டா தெரியுமா? இதோட தன் வாழ்வே முடிஞ்சிடுச்சி. இதுக்கு மேல வசந்தத்தை உனக்கு தருவேணு நீ கனவுல கூட நினைக்க வேணாம். உன்னோட நேரத்தை வேஸ்டாக்காம வாழ பாருணு சொல்லுறா? எப்படி முடியும். அவா இல்லாம எப்படி முடியும். அதை அவளுட்ட எவ்வளவோ சொல்லியும் பார்த்தேன். கேட்க மாட்டேனுட்டா. பேசாம போயிடுணு என்னை துரத்துனா? கம்பீரமா பார்த்த அவளை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. இப்போ வெளியில கூட்டிட்டு வந்துட்டால. இனி அவளை ஓவியாவை வச்சே நான் மீட்டு எடுத்திடுவேன்.”
சொன்னவன் அதே சந்தோஷத்தோடே தன் அறையை நோக்கி ஓடினான். வாசல் வரை ஒடத்தான் செய்தான். கதவுக்கு முன் போய் நின்று கொண்டு தன் கலைந்து கிடந்த கேசத்தை சரிபடுத்தி மடங்கி இருந்த சட்டை நுனியை சரிப்படுத்தி தன்னை நார்மலாக்கி கொண்டே உள்ளே பிரவேசித்தான்.
தன் அறையில் தன் செயரில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு கணிபொறியோடு கலந்து கிடந்தவளை கண்டதும் சட்டென கண்கள் கலங்கி விட, அப்படியே உணர்ச்சி பொங்க அவளை பார்த்தான். தன்னை யாரோ குறுகுறுவென பார்ப்பது போல உறுத்த கணினியில் இருந்த கண்ணை சட்டென தூக்கி பார்க்க, முன்னால் நின்ற நளன் தெரிந்தான்.
“தொல்லை வந்திடுச்சா. இனி விளங்குன மாதிரி தான்.”
என உள்ளுக்குள் நினைத்தவள்.
“வாங்க சார். வாங்க. உட்காருங்க. முழுசா பத்து நாள் எந்த தொல்லையும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருந்தேன். வந்துட்டியா இனி நிம்மதியா வேலை பார்த்த மாதிரி தான்.”
என்றாள் வெறுப்பின் உச்சத்தில்,
“ இல்லடி. நான் உனக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன். வாழ்த்து சொல்லிட்டு போக தான் வந்தேன்.”
“சரி… சரி. சொல்லியாச்சுல கிளம்பு.”
அவனை துரத்தி விடுவதில் அவள் அவசரம் காட்ட,
“அது எப்படி?”
ஏமாற்றமாய் அவன் கேட்டான்.
“அதான் தொல்லை பண்ண மாட்டேணு சத்தியம் பண்ணுனியே… அப்படினா கிளம்ப வேண்டியது தானே.”
“தொல்லை பண்ண மாட்டேணு தான் சத்தியம் பண்ணுனேன். விலகி போவேணு சொல்லல.”
என்றவனை கோபமாக முறைத்தவள்,
“இப்ப என்ன சொல்ல வரா?”
என்றாள் சற்று குரல் உயர்த்தி, ஆனால் சற்று கூட கோபம் கொள்ளாமல் மென்குரலில்,
“கொஞ்ச நேரம் இதுல இருக்கேனே. பழையபடி கம்பீரமாய் எழுந்து வந்திருக்கிற என் திலகாவை கொஞ்ச நேரம் பார்த்து ரசிக்கிறேனே.”
என்றான் கெஞ்சிதலோடு,
“இதுதானே வேணாங்கிறது. நான் அப்பவே உனட்ட சொல்லிட்டேன். இதுக்க மேல உன் திலகாணு சொல்லாதணு .”
வெறுத்து போனது போல சொன்னவளை நேசமாய் பார்த்துவன்,
“அது எப்படி சொல்லாம இருக்க முடியும். என் திலகா என் திலகா தான். அதை எப்படி மாற்ற முடியும்.”
குறும்போடு சொல்லி சிரிக்க, அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாததால்…
“இந்த ஜென்மத்துல நான் யார் திலகாவாவும் இருக்க விரும்பல. என் அம்மாவுக்கு நல்ல மகளா இருந்தா போதும்ணு நினைக்கிறேன். காலை இழந்ததுமே என் கனவு கனவா போயிடுச்சினு தான் நினைச்சேன். என் கனவுக்கு என் ஓவியா உயிர் கொடுத்திருக்கா. தயவு செய்து அந்த கனவை கலச்சிடாதுங்க. பிளீஸ் இதுக்கு மேல இப்படி என் முன்னால தயவு செய்து வராதுங்க.”
கெஞ்சிதலோடு சொல்ல, அவளை ஏக்கமாக பார்த்தவன்,
“பிளீஸ்டி. எல்லாம் மாறும். இப்படி பேசாதடி.”
என்றான் கண் கலங்க,
“எல்லாம் மாறும். ஆனா நான் உன்னோட சேருகிறது மட்டும் நிச்சயமா நடக்காது. ஒரே ஒரு நாள் தானே. அந்த ஒரு நாளும் உங்க வாழ்க்கையில வரலணு நினைச்சிக்கோங்க. தன்னால மறப்பீங்க.”
என்றாள் வெடித்து கொண்டு,
“ஒரு நாள். ம்… உனக்கு தெரிஞ்சது ஒரு நாள் தான். ஆனா நீ என் கண்ணுக்குள்ள விழுந்து ஒரு வருஷமாச்சு. இந்த ஒரு வருஷத்துல பல நாள் கேரளா வந்ததே உன்னை பார்க்க தான். தெரியுமா?. ஆனா அடாவடியான உனட்ட பேச பயம். அந்த பயம் தான் தூரமா இருந்து உன்னை ரசிக்க வச்சிது. நீ செய்யுற ஒவ்வொரு செயலும் என்னை ரசிக்க வச்சிது. உன் பின்னால அலைய வச்சிது. உனக்கு தெரியாம உன் பின்னால இருந்து ரசிக்கிறதே எனக்கு பிடிச்சும் இருந்துச்சு. அதுக்காகவே லீவு கிடைச்சா ஒரு நாள் என்றால் கூட ஒடி வந்திடுவேன். மலை சரிவு நடக்கிற ஒரு மாசத்துக்கு முன்னால ஒரு நாள் உன்னை பார்க்க அப்படி தான் வந்தேன். என் காதலை சொல்லிடனும்னு முடிவோட தான் இங்க இருந்து கிளம்புனேன். மூன்று நாள் உன் பின்னாலயே நடந்தேன். ஏன் ஹோட்டல்ல இருந்து மலைபாதை வழியா உங்க கூட பின்னால மறைச்சவாறு உங்க வீடு வரை வந்தேன். அப்போ தான் உனக்கு தெரிஞ்ச பையன் உனட்ட பேச போய் அடி வாங்குனதை பார்த்தேன். என் கன்னத்துல அறைஞ்சது போல இருந்துச்சு. அதுக்கு பிறகு சொல்லும் தைரியம் எனக்கு என்று வரல. அப்படியே கிளம்பி வந்துட்டேன்.”
“ஹோட்டலுக்கு வந்த நான் இரவு முழுதும் என்னை தேற்றி மறுநாள் நீ ஹோட்டலுக்கு வரும் போது சொல்லிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா சென்னையில இருந்து சின்ன முதலாளி ஊருக்கு வந்திருக்கிறதாவும் நீ உடனே கிளம்பி வாணும் அம்மாட்ட இருந்து போன் வந்துச்சு. அதனால தான் கிளம்பி போனேன். ஒரு வாரம் அவரோட சுத்துறது தான் பிளான். ஆனா அங்கு அவருக்கும் அவர் அம்மாவுக்கும் ஒரு சின்ன பிரச்சினை. வெளியூர் எங்காவது போகணும். அங்க யாருக்கும் நம்மளை தெரிய கூடாதுணு முகுந்த் சார் சொன்னப்ப எனக்கு கண்ணுக்குள்ள நீ தான் வந்தா. உன்னை மறுபடியும் பார்க்க கூடிய ஆசையில தான் சாரை இங்க இருந்து அங்கேயே கூட்டிட்டு வந்தேன்.”
“என்னோட நல்ல நேரம். இரண்டு நாள் முழுசா உன் கூடவே சுத்துறது போல ஓவியாவோட சாரு முட்டிகிட்டாரு. அதுல அதிகம் சந்தோஷப்பட்டது நான் தான். அந்த இடங்களுல தான் உன் பார்வை என் மேல விழுந்துச்சு. அந்த நேரம் தான் நீ என்கிட்ட பேச ஆரம்பிச்சா. சிரிக்க ஆரம்பிச்சா. இல்லனா அதுவரை இப்படி ஒருத்தன் உன்னை சுத்தி சுத்தி வருகிறதே தெரியாம போயிருக்கும். நல்ல வேளை மலை சரிவுக்கு முன்னால மனசை சொன்னேன். சொல்லாம விட்டிருந்தேன். இப்போ கூட சொல்லி இருக்க முடியாது. அப்படியே சொல்ல வந்தாலும் நான் பேசுறதை நீ காது கொடுத்து கேட்டிருக்க மாட்டா. நல்ல வேளை இது நடக்கிறதுக்கு முன்னால சொல்லி ஒரு முத்தத்தையும் வாங்கிட்டேன்.”
கண்ணில் காதலோடு சொன்னவனை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவள் சட்டென தன்னை மீட்டெடுத்தவாறு,
“அப்படி மட்டும் நடந்திருந்தா நான் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேன்.”
என்றவளை குழப்பத்தோடு ஏறிட்டவன்,
“எப்படி நடந்திருந்தா?”
என குழப்பத்தோடு அவளை நிமிர்ந்து பார்க்க, அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு,
“நிலசரிவுக்கு முன்னால நாம பேசாம இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ணு தோணுது. அப்படி மட்டும் நடந்திருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்னு தோணுது
என்றாள் இறுகிய முகத்தோடு, அவள் வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை கேட்டதும் மனம் கலங்கி நெஞ்சம் உறைய கோபத்தோடு முறைத்தவன்.
“ இப்போ என்ன நடந்து போச்சுனு இப்படி விரக்தியில பேசுறா? கால் மட்டும் தானே போச்சு . அது பற்றிய கவலை எனக்கே இல்லாத போது உனக்கு என்ன?”
என்றான் தாங்க முடியாதவன் போல,
“எனக்கு என்னவா? எனக்கு தான் சார் பிரச்சினை. நான் கால் இழந்ததால உங்களுக்கு என்ன பிரச்சினை. கஷ்டமோ துன்பமோ அது எல்லாம் எனக்கு தானே. நீங்க எப்படி கவலை பட முடியும். நான் தான் சார் கவலைபடனும்.”
கண்ணில் தீயோடு சென்னவளை பாவமாக நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் சட்டென நீரை கோர்த்து கொள்ள, அடுத்து பேச வார்த்தை வராமல் அமைதியாக தலை குனிந்தான். அவன் திடீர் மெளனமும் சட்டென கலங்கிய கண்ணையும் பார்த்தவள் மனமோ நொடியில் உருக, அவளும் அதன் பின் எதுவும் பேசாமல் அமைதியானாள். ஆனால் வலித்தது. எத்தனை அடித்தாலும் திரும்ப திரும்ப வரும் அவனை வார்த்தையால் அடிக்க அடிக்க அவளுக்குமே வலித்தது. ஆனாலும் அவனை அவளிலிருந்து பிரித்தெடுக்கும் முடிவில் இருந்தாள். அதனாலே மனதை கல்லாக்கி கொண்டு,
“அப்போ கிளம்புறீங்களா சார்? எனக்கு நிறைய வேலை இருக்கு,”
என வலித்த மனதில் மறுபடியும் ஈட்டியை எறிய கலங்கும் கண்ணோடு அவளை பார்த்தவாறே எழுந்து வெளிவந்தான். வெளியேறியவன் பின் முதுகை முறைத்த திலகாவின் கண்களும் கலங்க தான் செய்தது. கூடவே அவனை விட அதிகமாக வலிக்கவும் செய்தது. கையில் இருந்த பேனாவை தூக்கி ஆத்திரத்தின் உச்சத்தில் சுவரில் எறிந்து விட்டு தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டாள்.

இப்படி ஒரு நாளை சந்திக்க வேண்டும் என்பது அவளுக்கு தெரியும் தான். ஆனால் அந்த நாள் இப்படி வலிக்கும் என்பது இப்போது தான் தெரிந்தது. அவன் கண்களில் கண்ணீரை கண்டதும் ஏன் எனக்கு உயிர் வலி எடுத்தது. இங்கு வந்த பின் தனக்கு இப்படி ஒரு சந்திப்பு நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்ததால் என்ன பேச வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்ததால் கொண்டு வந்த அத்தனை வார்த்தையையும் கொட்டி அவனை அனுப்பி விட்டாள். ஆனால் அவனை உயிராக ஏற்று கொண்ட மனது அவனுக்காக அழத்தான் செய்தது.
கவலையின் உச்சத்தில் இருந்தவளை வாசலில் கேட்ட ஓவியாவின் குரல் சட்டென கலைத்தது. அவசரம் அவசரமாக கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்தவள், வராத சிரிப்பை சட்டென முகத்தில் அணிந்து கொண்டு,
“சொல்லு ஓவியா”
என முகம் மலர கேட்க, அவளை ஒரு நொடி ஆழமாக பார்த்து விட்டு பின் சமாதானம் ஆனவள் போல்,
“இன்று அனுப்ப வேண்டிய லிஸ்ட் கொடுத்துட்டா பேக்கிங் செக்ஷன்ல கொடுத்திடுவேன்.”
என்றாள் வாங்கி செல்லும் முனைப்போடு, தோழியை ஒரு முறை பார்த்தவள் எதுவும் பேசாமல், பேசினால் மாட்டி கொள்ள கூடுமோ என்றே,
அவசரமாக கம்பியூட்டரில் சில பட்டன்களை தட்டி பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து அவளிடம் நீட்டி விட்டு மறுபடியும் பார்வையை கம்பியூட்டரில் செலுத்த,
“ வேலையை முடிச்சிட்டு ரெடியா இரு. நாம இன்று சாப்பிட வெளியில போலாம்.”
“எதுக்கு இப்போ வெளியில…”
புரியாமல் பார்த்தவளை சினேகமாக பார்த்தவள்,
“சுந்தரி அக்காவுக்கு இன்று பிறந்த நாளாம். அதான் எல்லாரும் சேர்ந்து வெளியில போலாம்ணு முடிவெடுத்திருக்கோம். நீயும் வா.”
“நான் எதுக்குடி இந்த காலை வச்சிட்டு.”
“ஆனா ஊனா எதுக்கு நீ காலை பற்றி பேசுறா? பசி வயிற்றுக்கு தானே. அது உனட்ட இருக்கு தானே. பேசாம கிளம்பு.”
என்றாள் அதிகார தோரணையில்,
நளனிடம் தூக்கி எறிந்து பேசுவது போல திலகாவால் இவளிடம் பேச முடியவில்லை. அதனால் அவளுடன் கிளம்ப வேண்டி, வேலையை அவசரமாக முடிக்க தொடங்கினாள்.
ஆனால் இவளால் காயப்பட்டவனால் இவளை போல அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை. ரொம்பவே வலித்தது. எவ்வளவு ஆசையாக அவள் இருக்கும் இடம் தேடி போனான். ஆனால் வார்த்தையால் மொத்தமாய் அவன் சந்தோஷத்தை திருடி அல்லவா அனுப்பி இருக்கிறாள்.
மொத்தமாய் சிரிப்பை தொலைத்தவனாக முகுந்த் அறையில் தலையை தொங்கப் போட்டவாறு அமர்ந்திருந்தான். அவன் நிலை பார்த்து சட்டென எழுந்த முகுந்தன் அவன் அருகில் வந்து,
“என்னடா இது. எதுக்கு இப்போ இப்படி உடைஞ்சி போறா? இது எல்லாம் தெரிஞ்சது தானே. ஒரே நாளுல வளைக்க பார்க்காதடா. வரவே மாட்டாங்கணு நினைச்சா. ஆனா வந்துட்டாங்கல. இப்படியே ஒரு நாள் உன் அன்பு புரியும். அப்போ அவங்களே உன்னை தேடி வருவாங்க? முதல்ல நீ இதுல இருந்து எழும்பு. வீட்டுக்கு கிளம்பலாம்.”
என வற்புறுத்தி தான் அவனை அழைத்து கொண்டு வெளியே வந்தான்.
“இந்தா…”
சாவியை அவனை நோக்கி எறிந்தவன்.
“வண்டியை எடு. முதல்ல என்னை என் வீட்டுல விட்டுட்டு அப்புறம் உன் வீட்டுக்கு கிளம்பு. ஒரு நாள் முழுசா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வா.”
என்றதும் மறுப்பு எதுவும் சொல்லாமல் சாவியை பிடித்தவன் அதை எடுத்து கொண்டு முகுந்தன் வண்டியின் அருகில் வந்தான். டோரை திறந்து உள்ளே ஏறியவன் உடனே வண்டியை ஸ்டாட் செய்ய மறுபக்கம் ஏறி அமர்ந்தான் முகுந்தன். வண்டி நேரே முகுந்தன் வீட்டிற்கு தான் வந்தது. அவன் இறங்கியதும் நளன் கிளப்பிக் கொண்டு போனான். முகுந்தன் வீட்டிற்குள் சோர்வோடு தான் நுழைந்தான். அவனை கண்டதுமே அவன் தாய் நீலவேணி ஒடி வந்து,
“வந்துட்டியாப்பா. போய் டிரஸ் மாற்றிட்டு வா. சாப்பிட ஏதாவது எடுத்து வைக்கிறேன்.”
“ம்..ம்…”
என்றவன் மேல் நோக்கி நகர போக, எதையோ யோசித்தவன் போல் சட்டென திரும்பியவன்,
“இன்று அப்பா இந்தியா வராங்கம்மா. நைட் பதினொரு மணி வாக்குல வீட்டுல ரீச்சாகிடுவாரு.”
“என்னடா சொல்லுறா? நேற்று கூட பேசுனாரு. எனட்ட எதுவும் சொல்லல.”
“செய்திட்டு இருந்த வேலை முடியுமா? முடியாதா? கிளம்புவோமா? கிளம்ப மாட்டோமானு ஒரு சந்தேகம். அதான் சொல்லி இருக்க மாட்டாங்க. காலையில எனக்கு போன் பண்ணுனாங்க. அங்க இருந்து கிளம்பிட்டாங்களாம்.”
என்றதும் நீலவேணி உற்சாகத்தோடு கிச்சனுக்குள் நுழைந்தாள். ஆறு மாதத்திற்கு பின் வீடு வரும் புருஷனுக்காக விதம் விதமாய் செய்ய ஆரம்பித்தாள். இடையில் கீழே வந்த மகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள். மனம் முழுதும் பூரிப்பு. இந்த பூரிப்புக்கு காரணம் கணவரின் வருகை மட்டுமல்ல. வந்த பின் அவர் தன் மகனிடம் பேச போகும் விசயமும் தான். அவர் இல்லாமல் மறுபடியும் பேச போய் பழையபடி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட கூடாது என்றே இந்த ஆறுமாத காலமும் அவள் வாய் திறக்கவில்லை. ஆனாலும் பெற்றவள் மனது மகனை மணக்கோலத்தில் காண ஏங்கியது. கூடவே தமையனின் நச்சரிப்பும் அதிகமாகி இருந்தது. இந்த விசயத்தை சக்ரவர்த்தியிடம் சொன்ன போது தான்,
“பழையபடி பேசி சொதப்பி வச்சிடாத. நான் வந்து பதமா பேசுறேன்.”
என கூறிவிட்டார். அதனால் தான் அவரின் இந்தியா வருகை நீலவேணியை உற்சாகத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது. அதே நேரம் மேல் மாடியில் பால்கனி ஒரத்தில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு முன்னால் இருந்த பூச்செடி மேல் பார்வையை வீசியவாறு நின்று கொண்டிருந்தான் முகுந்தன். அவன் பார்வை தான் பூச்செடி மேல் இருந்தது. மனமோ நளன் திலகா இருவர் மேலுமே இருந்தது.
“எப்படியான காதல். காலை இழந்தும் கொஞ்சம் கூட பின்வாங்காமல் அவளுக்காக நிற்கிறானே. நளன் கிரேட் தான் இல்ல.” என்று தான் யோசிக்க தோன்றியது அவனுக்கு. திலகா மட்டும் என்ன குறைஞ்சவளா? தன்னை விரும்பிய பாவத்திற்கு கால் இல்லா என்னோடு காலம் எல்லாம் கஷ்டப்பட கூடாது என்று தானே தன் மன காதலை மறைத்து கொண்டு அப்படி எல்லாம் பேசுகிறாள். அப்படி என்றால் இந்த காலத்தில் கூட இப்படியான உண்மையான காதல் இருக்கின்றனவா?
யோசிக்க யோசிக்க அவனுக்கு வியப்பாகவே இருந்தது. அவன் இதுவரை வளைய வந்த கூட்டத்தில் அவன் இப்படியான பெண்களை இதுவரை பார்த்தது இல்லை. இன்று ஒருவன் நாளை ஒருவன் என அதிவேகமாக போய் கொண்டிருக்கிறார்கள். இந்த கண்டிராவிகளை பார்த்ததால் தானே திருமண வாழ்வு மேலேயே இவனுக்கு ஆர்வம் இல்லாமல் போனது.
ஆனால் இப்போது கொஞ்ச நாளாய் மனது எதையோ தேடுவது போல தான் அவனுக்கு தோன்றியது. இதுவரை தனிமை அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த வட்டத்திற்குள் அவன் இதுவரையும் யாரையும் வரவிட்டதே இல்லை. ஆனால் இப்போது எல்லாம் அந்த தனிமையான நொடி ஏதோ ஒரு அரவணைப்பு, ஆறுதலை தேடுவது போல தான் உணர்ந்தான். ஆனால் உடலும் மனமும் ஒரு பெண்ணை தான் தேடுகிறது என்பதை உணராமல் இருந்தான்.
இதுவரை இருந்த வாழ்க்கை இப்போது சுவாரஸியம் இல்லாமல் இருப்பது போல நினைக்க ஆரம்பித்தான். அப்படி தோன்றும் நேரங்களில் எல்லாம் அவன் மனம் மாவு மில்லை நோக்கி நகர்வதை கவனித்தான். அங்கு ஏதோ ஒரு அமைதி கிடைப்பதை உணர்ந்தான். ஆனால் அந்த அமைதி தனக்கு பிடித்த தொழிலால் கிடைத்ததா? அல்லது தொழிலாளர்களால் கிடைக்கிறதா என அவனால் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆனால் கிடைத்தது. அந்த அலுவலகத்துக்குள் நுழைந்த அடுத்த நொடியே அவனுக்கு அது கிடைத்து விடுகிறது. ஆனால் அது எதனால் கிடைக்கிறது என்பது மட்டும் தெரியவில்லை.
அதனால் தான் தொழில் பயணமாக எங்கு சென்றாலும் மனசு மாவு மில்லை நோக்கியே அவனுக்கு நகர தொடங்கியது. அதிலும் மில்லோட வளர்ச்சி, தான் விரும்பிய வழியில் பயணப்பட ஆரம்பித்த பின் எனிடையிம் இந்த கம்பெனியிலே மனது இருந்து விட பரபரத்தது.
முகுந்தன் இப்படி நின்று எதையாவது யோசிப்பவன் இல்லை. நொடிகள் ஒவ்வொன்றையும் பயனுள்ளதாக அமைக்க வேண்டும் என்று பறந்து கொண்டிருப்பவன் தான். அவனோட பன்னிரெண்டாவது வயதில் இந்த துறைக்குள் வந்தான். தந்தைக்கு தோள் கொடுக்க தான் உள் நுழைந்தான். தந்தையின் பின்னால் தான் மூன்று வருடம் நின்றிருந்தான். அதன் பின் படிபடியாக முன்னேறி அவரை தாண்டி வரும் அளவு அனுபவம் பெற்றான். அதற்கு காரணம் அவன் பள்ளியில் அவன் கற்ற ஜெர்மனி மொழி தான். தந்தையின் தொழில் அவனோட பதினெட்டாவது வயதில் வளர்ச்சி கண்ட போது ஜென்மானியர்களிடம் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. தந்தையின் எண்ண கிடக்கையை அவர்களிடம் சொல்ல வேண்டியே தந்தையின் முன்னால் வந்தான். இன்றுவரை முன்னால் தான் நிற்கிறான்.
பிஸ்னஸ் மேல் அவன் கொண்ட ஆர்வம் அதை முன்னேற்றுவதில் அவனை பைத்தியகாரதனமாக செயல்பட வைத்தது. இதுவரை அன்பு, பாசம், நேசம் என எதையும் முழுமையாக அனுபவித்தது இல்லை. காரணம் உலகே வீடாகி போன பின் வீட்டில் இருந்து இதை எல்லாம் அனுபவிக்க நேரம் ஏது? ஆனால் வீட்டில் உள்ள அனைவரும் அவன் மேல் ரொம்ப பாசமாகவே இருந்தனர். ஆனாலும் அதை வெளிப்படுத்த அவன் விட்டதே இல்லை. இதுவே அவனை குடும்பத்தில் இருந்து ஒதுங்க வைத்திருந்தது.
எவ்வளவு நாள் ஊரோடு ஒடினாலும் ஒரு நாள் அலுப்பு தட்டும் தானே. அப்படி ஒரு அலுப்பு தான் முகுந்தனுக்கு இப்போது தட்டியது. அது கூட அந்த நிலசரிவுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாய் தட்ட ஆரம்பித்து இப்போது ரொம்பவே ஒரு சோர்வாக மாறி போயிருந்தது. அதற்கு அவன் மனம் தேடுவது காதல் தான் என்பதை அவன் உணரவே இல்லை. அந்த உணர்வை தனக்குள் விதைத்தவளும் ஓவியா தான் என்பதையும் அவன் அறிந்து கொள்ள முனையவில்லை.
ஆனால் அடிக்கடி அவன் மனதில் வந்த பெண்ணுருவம் அவள் தான். எப்போதும் அவன் வியந்து பார்க்கும் இடத்தில் தான் அவளும் இருந்தாள். வந்த நாள் முதலாய் இன்று வரை அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனை வியக்க தான் வைத்தது. “என்னமோ அவளிடம் இருக்கிறது. அது தன்னை எதுவோ செய்கிறது என்பதையும் உணர்ந்து தான் இருந்தான். இல்லை என்றால் அவளை ஏன் அந்த நில சரிவில் இருந்து காப்பாற்ற நினைக்க வேண்டும். அந்த இடிபாடுகளுக்கு நடுவில் அவளுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று நாம் ஏன் பதற வேண்டும். அவளுக்கு வந்த வலியை தான் ஏன் ஏற்று கொள்ள வேண்டும். அவள் மடியில் படுத்த போது மட்டும் அப்படி ஒரு அமைதியை ஏன் மனம் பெற வேண்டும்.”
இந்த எண்ணம் எல்லாம் அவனில் எழாமல் இல்லை. ஆரம்பத்தில் எழத்தான் செய்தது. அந்த எழல் தான் அவளுக்கு வேலை போய் விட்டது. இதற்கு மேல் வேலை இல்லாமல் கஷ்டப்படுவாள் என அவனை உணர வைத்தது. அப்படி உணர்ந்ததால் தான் பெருமுயற்சியை திரும்ப திரும்ப அவளுக்காக செய்ய வைத்தது. இன்று யாரையும் நம்பாத அவன் மனது அவள் கையில் மொத்தப் பொறுப்பையும் கொடுக்கும் அளவு கொண்டு போயிருக்கிறது.
இது எல்லாம் தெரிந்தும் அதற்கு பெயர் தான் காதல் என்பது மட்டும் அவனுக்கு தெரியவே இல்லை. அந்த இருளில் அவளோடு நெருங்கி இருந்த நொடியே தன் மனம் அவள் பால் சென்று விட்டது என்பதை மட்டும் இன்று வரை உணராமல் இருந்தான். அதனால் தான் எதையோ இழந்தவன் போல் இருந்தான். இந்த நொடியும் அப்படி தான் இருக்கிறான். இனியும் அப்படி தான் இருப்பான். அவள் மேல் தனக்கு உண்டாகி இருக்கிற காதலை உணராத வரை அவன் இப்படி தான் இருப்பான்.
ஆனாலும் அவனுள் இப்போதும் இருப்பதும் ஓவியாவின் அழகு முகம் தான். திரும்ப திரும்ப அது அவனில் முளைத்து வந்தும் அதை உணராமலே அப்படியே சிலையாக நின்றிருந்தான்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



