வணக்கம் வாசகர்களே!
தன் அலுவலகம் வரும் ஓவியாவை கிண்டலோடு வரவேற்ற முகுந்தன். அவனை சீற்றத்தோடு பார்க்கும் ஒவியா? அவளின் சீற்றத்திற்கான காரணத்தை புரிந்து கொள்வானா?
மகள் சம்மதம் சொன்ன அன்றே எழிலரசி அவள் கிளம்ப வேண்டிய வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒவியா அதன் பிறகு எதுவும் அவர்களிடம் பேசவில்லை என்றாலும் டிக்கெட் கொண்டு நீட்டிய பின் அதை எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கி கொண்டாள்.
கிளம்பும் முன் தந்தையின் மார்பு கூட்டில் மட்டும் கொஞ்ச நேரம் படுத்திருந்தாள். என்னவோ வாஞ்சையோடு அவர் தலையை வருடி விடும் அந்த சுகம் அவளுக்கு தேவையாய் இருந்தது. கடைசியில் எல்லாரிடமும் சொல்லி விட்டு வாடிய முகத்தோடே கிளம்பி விட்டாள். தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வந்து ஆட்டோ பிடிக்கும் வரை அவள் இழுத்து பிடித்து வைத்திருந்த வைராக்கியம் அவன் இடத்தை நெருங்க நெருங்க விடைபெற தொடங்கியது.
நெஞ்சம் அவளையும் மீறி வேகம் வேகமாக துடிக்க தொடங்கியது. கூடவே இருளில் அவனோடு வாழ்ந்த அந்த மூன்று நாள் நியாபகமும் நொடி பொழுது வந்து போனது. அந்த நியாபகம் நெஞ்சில் நிழலாடியதுமே ஒருவித இறுக்கமும் அவள் முகத்தினில் ஏறி அமர்ந்து கொண்டது. அவன் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியுமா தன்னால். மனது முழுதும் இருப்பவனிடம் இருந்து ஒதுங்கி தன்னை வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமா? தன்னிடம் சொல்லாமல் வந்த அவனை மன்னிக்க முடியுமா? மன்னித்து அவனோடு சகஜமாக பழக முடியுமா? முடிய வேண்டும். முடிந்தே ஆக வேண்டும்.
எண்ணும் போதே மனதில் ஒரு இறுக்கம் குடிக் கொண்டது. அதே நேரம்
முகுந்தன் எக்ஸ்போர்ட் கம்பெனிக்குள் ஓவியாவின் ஆட்டோ நுழைந்தது. வான் அளவு உயர்ந்து நின்ற கட்டிடத்தை கண் கொட்டாமல் பார்த்தவாறு தான் இறங்கினாள். இறங்கிய வேகத்தில் ஆட்டோவுக்கு காசு கொடுத்து அனுப்பி விட்டு நிமிர்ந்த போது அந்த கட்டிடத்தின் உள் பகுதி அவள் கண்ணில் விழுந்தது. அவள் வந்திறங்கிய போது காலை பதினொரு மணி என்பதால் ஆட்களின் நடமாட்டத்தால் அந்த இடம் பரபரப்பாக தான் இருந்தது.
தயக்கத்தோடு தான் வந்தாள். ஆனால் ஒரு நிமிர்வோடு கொண்டு வந்த ஒற்றை பேக்கை தூக்கி கொண்டு உள் நோக்கி நகர்ந்தாள். வாசலை தாண்டி உள் நுழைந்ததுமே மனதில் ஒரு சபதம் எடுத்து கொண்டே நடக்க தொடங்கினாள்.
“ஒவியா நீ உன் தோழிக்காகவும் குடும்பத்துக்காகவும் மட்டும் தான் இந்த வேலைக்கு போறா. மற்றபடி எதுவும் இல்லை. நல்லா நியாபகம் வச்சிக்க மற்றபடி எதுவுமே இல்லை. நீ எந்த காரணம் கொண்டும் அந்த மூன்று நாளில் தன்னில் பூத்த உணர்வை அவர் முன்னால காட்டவே கூடாது. அவன் தனக்கானவன் என நினைக்க கூடாது. அவன் உன் முதலாளி. முதலாளி மட்டும் தான்.
கலைந்து கிடந்த மனதுக்கு உறுதி கொடுத்து கம்பீரமாக நிமிர்த்தி விட்டே நடக்க தொடங்கினாள்.
ஆபீஸ்க்குள் நுழைந்ததுமே முகுந்த் பார்வையில் தான் முதலில் விழுந்தாள். ஆனாலும் அது அவள் தானா என்ற சந்தேகம் நொடி பொழுது அவனுள் வர, முன்னால் இருந்த திரையை வெறித்து பார்த்தான் முகுந்தன். ஆபீஸோட பிரமாண்டத்தை பார்த்து மலக்க மலக்க விழித்தவாறு வரவேற்பறையில் நின்று கொண்டிருந்தாள் ஓவியா. ஆனால் அவளுள் பெரிதாக ஒரு வித்தியாசம் தெரிந்தது. அது அவள் சேலையில் இருந்ததாலா? ஹோட்டல் யூனிபாமில் பார்த்தவன் சேலையில் பார்த்ததாலா? தெரியவில்லை. ஆனாலும் அதை புறம் தள்ளியவன் முகத்தில் நொடி பொழுது தோன்றிய புன்னகை மறைத்து, “முப்பத்து எட்டாவது நாள் வர தோணியிருக்கு.”
ஒரு நொடி எழுந்த எண்ணத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு சட்டென ரோலிங் செயரில் இருந்து எழும்ப,
முன்னால் மும்முரமாக எதையோ அவனிடம் விளக்கி கொண்டிருந்த நளன் பேச்சை நிறுத்தி முகுந்தை புரியாமல் பார்த்தான். தன் தோழனுக்கு ஓவியாவில் வருகையை கண்களால் காட்டியவன்.
“போ…”
என கட்டளை பிறப்பிக்க, புரிந்து கொண்டு நளன் கையில் இருந்த ஃபைல்ஸை கீழே வைத்து விட்டு வெளியே வந்தான். அதே நேரம் அவனை நெருங்கி வந்த சுந்தரி.
“சார்… நியூ அப்பாயின்மென்ட் ஒண்ணு வந்திருக்கு. பேரு ஓவியாவாம். கையில அப்பாயின்மென்ட் லெட்டரும் இருக்கு. நம்ம ஆபீஸ்ல புது ஸ்டாப்ஸ் எடுக்கிறாங்களா சார். நான் கூட என் தூரத்து உறவு கார பொண்ணு ஒருத்தங்களை பற்றி சொல்லி இருந்தேனே சார்.”
“ம்… சொன்னீங்க. இப்ப வேக்கன்ஸி இல்லணு தான் உங்களுக்கு தெரியுமே சுந்தரி. இது ரெண்டு மாதத்துக்கு முன்னால கொடுத்த ஆடர். அவங்க உடல்நிலை சரியில்லாததால இப்போ வந்து ஜாயின் பண்ணுறாங்க. அவ்வளவு தான். அதுவும் இது பாஸோட தனிப்பட்ட அப்பாயின்மென்ட்.
என்றவன் நேரே ஒவியாவின் அருகில் வர, நெருங்கி வந்த சோடாபுட்டியை பார்த்ததும் இதுவரை இருந்த கலக்கம் மாறி, முகத்தில் லேசாக புன்னகையை படரவிட்டவாறு, அவளும் நெருங்கி வந்தாள்.
“என்னங்க. இவ்வளவு நாள் எடுத்திட்டீங்க. நான் விசிட்டிங் கார்டை பார்த்ததுமே வந்திடுவீங்கணு நினைச்சேன். எனிவே இப்பவாவது வரணும்னு தோணுச்சே. ரொம்ப சந்தோஷம்.”
என்றவன் அவளை அழைத்து கொண்டு நேரே முகுந்தன் அறைக்குள் நுழைய, அவனை தொடர்ந்து படபடப்போடு தான் அவளும் நுழைந்தாள். சரியாக அதே நேரம் ஸ்டைப்பிஸ்ட் ஸ்டெல்லாவின் முகத்தில் பைல்ஸ் ஒன்றை விட்டெறிந்தான் முகுந்தன்.
நளனின் பின்னால் வந்த ஒவியா இக்காட்சியை கண்டு வெலவெலத்து தான் போனாள். ஆனாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் அவள் உள் நுழைந்த நேரம்.
அந்த பெண்ணோ இது அன்றாட வாடிக்கை போல எந்த பதற்றமும் படாமல் அத்தனை பேப்பஸையும் எடுத்து கொண்டு,
“சாரி சார். பத்து நிமிஷத்துல சரிப்படுத்திடுறேன்.”
என வெளியேற, இப்போது முகுந்த் பார்வை வாசலில் நின்ற ஓவியாவிலே நிலைபெற்றது. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் உள் நுழைந்தவளை புருவ முடிச்சோடு பார்த்தவன், பின் எதுவும் பேசாமல் அப்படியே இடம் மாறி நளனை பார்வையால்,
“என்னடா நீ…”
என அதட்ட, சூழ்நிலையை மாற்ற எண்ணிய நளன்.
“நீங்க உள்ளால வாங்க ஓவியா. நம்ம பாஸ் வேலைனு வந்துட்டா இப்படி தீயா தான் நிப்பாரு. அவர் கீழ வேலை பாக்குற யாரும் எந்த தப்பும் செய்திட கூடாது. மீறி செய்தா உடனே தண்டனை தான்.”
அவள் தப்பாக நினைத்து விடுவாளோ? என நளன் அவசரமாக சொல்ல,
அவளோட தப்புக்கு இவர் தண்டனை கொடுத்துட்டாரு. இவர் செய்த தவறுகளுக்கெல்லாம் யார் தண்டனை கொடுக்கிறது.
சட்டென மனம் கேட்ட கேள்வியை மனதுக்குள் புதைத்தவள், எந்த பதிலும் தன்னிடம் இல்லை என்பது போல. அமைதியாக நின்றாள். அவளின் அமைதியும் நிமிர்வும் முகுந்தனை புருவம் சுருங்க வைத்தது. என்றாலும் அதை வெளிக் காட்டாமல்,
“மேடம். முப்பத்தெட்டாவது நாள் வந்திருக்காங்க. முப்பத்து எட்டு நாள் அப்படி மேடத்துக்கு அந்த பட்டிகாட்டுல என்ன வேலையோ…”
என கீழ் பார்வை பார்த்தவாறு குத்தலாக அவன் கேட்க, அதற்கும் அவளிடம் பதில் இல்லை. அவள் அவனை பார்க்கவே இல்லை. எதுவும் சரியில்லை என உணர்ந்தானோ என்னவோ அதற்கு மேல் பேசாமல்,
நளன். மேடத்தை கூட்டிட்டு போங்க. உள்ளால வாணி மேடத்துட்ட இவங்களை அறிமுகப்படுத்தி வைங்க. அவங்க முழு விபரமும் சொல்லுவாங்க. தினதயாளனோட ஒரு மீட்டிங். நீங்க சீக்கிரம் வாங்க. நாம புறப்படணும்.
என்றதும் நளன் ஓவியாவை ஒரு பார்வை பார்க்க, இப்போதும் அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவ்விடம் விட்டு நகர்ந்தாள். ஆனாலும் மனதில் அனல் அடித்தது.
நல்ல வேளை நெடுமரம் உசந்து அதே உச்சாணி கொப்புல தான் நிக்குது. எப்படி சமாளிச்சிக்கலாம். அந்த மூன்று நாள் முகுந்தனை என் முன்னால காட்டாம இருந்தா சரி.
தனக்குள் பேசியவாறு நகர்ந்தவள், கதவுக்கு அப்பால் சென்று மெல்லமாய் திரும்பி அவன் முகத்தை ஒரு முறை பார்த்தாள்.
முகுந்தன் யாரோடோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். அவன் மலர்ந்த முகத்தை கண்களில் நிரப்பி கொண்டு கீழ் உதட்டை கடித்து தன் உணர்வை அடக்கி கொண்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
நளன் ஓவியாவை அழைத்து கொண்டு நேரே அந்த அலுவலகத்தின் பின் பகுதியில் நிறைய மிஷினரீஷ் உள்ள கட்டிடத்துக்குள் வந்தான். அந்த கட்டிடத்தில் குறைந்தது நூறு மிஷனாவது இருக்கும். ஒவ்வொரு மிஷின் பக்கத்திலும் இரண்டு பேர் நின்றனர். மாவு போன்ற ஒரு பொருள் உற்பத்தியாகி கொண்டிருந்தது. அதை பார்த்தவாறே நளனோடு நடந்தவள், நளன் நிற்க கண்டதும் சட்டென திரும்பி முன்னால் பார்த்தாள்.
ஒரு முப்பது முப்பத்திரண்டு வயது மதிக்கதக்க ஒரு இளம்பெண் முன்னால் நிற்பதை பார்த்தாள்
“இது மிஸ்ஸஸ் வாணிரவிசந்திரன். இந்த உற்பத்தி பிரிவுக்கு இவங்க தான் ஹெட்.”
என்றதும் ஓவியா அவர்களை பார்த்து புன்னகைத்தவாறு வணக்கம் சொல்ல… பதிலுக்கு அந்த பெண்மணியும் சிரித்து கொண்டாள்.
“இவங்க மிஸ். ஓவியா. நியூ அப்பாயின்மென்ட்.”
“ம்… சார் சொன்னாங்க. இரண்டு வாரத்துக்கு முன்னாலயே ஜாயின் பண்ண வருவாங்கணு சொன்னாங்க. நீங்க என்ன இன்று வந்திருக்கீங்க.”
என்றதும் நளனே,
“அது ஒரு பெரிய கதை மேடம். அது எல்லாம் பேச இப்போ நேரம் இல்ல. எனக்கு சாரோட ஸ்டீல் பேக்டறிக்கு போகணும். நீங்க அவங்களுட்ட பதமா பேசி தெரிஞ்சிக்கோங்க. அதற்கு முன்னால வாங்க. இவங்களுக்கான அறைக்கு போலாம்.”
என்றவன் முன்னோக்கி நகர, இரண்டு பெண்மணியும் அவன் பின்னால் நடந்தனர். கூடவே வாணியின் பார்வை அடிக்கடி ஓவியாவின் மேல் படிந்து மீள்வதை அவளும் பார்த்தவாறே தான் பின் நோக்கி நடந்தாள். அந்த கட்டிடத்தின் இன்னொரு பகுதிக்கு அழைத்து வந்தவன் ஒரு விசாலமான அறைக்குள் நுழைந்து,
“இது தான் உங்க அறை ஓவியா.”
என்றதும் அறையை கண்களால் அளந்தவள்,
“என்னோட வேலை பற்றி எதுவும் சொல்லலியே.”
என கேட்க,
நளனோ…
“நம்ம கம்பெனி கழிந்த நான்கு வருடமா குழந்தைகள் வளர்ச்சிக்கான புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு மாவை தயார்படுத்தி வருகிறது ஓவியா. அதுல பன்னிரெண்டு நட்ஸ் வகைகளும் சில விசேஷமான பழ வகைகளும், சில புரதசத்து நிறைந்த பொருட்களும் கலந்து அந்த மாவை நாம தயாரிச்சு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள்ல்ல எட்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டிருக்கோம்.”
என்றதும் வியந்து போய் அவனை பார்த்தவள்,
“எட்டுக்கு மேற்பட்ட நாட்டுக்கா?”
என்றாள்.
“ம்… இப்ப கூட நான்கு நாட்டுல பேச்சு வார்த்தை நடந்திட்டு தான் இருக்கு. ஆல்மோஸ்ட் எல்லாம் ஒ.கே தான். ஒருவேளை அடுத்த மாதம் அங்கு கூட அனுப்ப வேண்டி வரலாம். பிராடெக்ட் அதிகரிக்கும் முயற்சியிலயும் இருக்கோம். அந்த மாவு உற்பத்தி செய்ய இந்தியாவுல பல மாநிலங்களிலிருந்தும் மூல பொருள் நமக்கு வருது. இங்க இருந்து தான் உங்க வேலை தொடங்குது. பொருளை ராஜேந்திரன் கொள்முதல் செய்து கொண்டு வந்து சேர்த்திடுவான். வருகிற பொருளோட குவாலிட்டி செக் பண்ணுறதுல இருந்து, வறுத்து வெளிவரும் மூலப்பொருளோட தரத்தை ஆராய்கிறது. கூடவே அது மாவாகி பேக்கிங் டிப்பாட்மென்ட்க்குள்ள போகிறது வரை அதோட முழு பொறுப்பும் உங்களுக்கானது தான். குழந்தைகளுக்கான ஊட்டசத்து பொருள் என்கிறதால பாஸ் இதுல ரொம்ப கவனமா இருப்பாரு. அதுனால உங்க வேலையில சிறு கவன குறைவு கூட வந்திட கூடாது.”
“ம்…ம்… புரியுது சார்.”
“சரி. மீதியை அவங்க சொல்லுவாங்க. நான் கிளம்புறேன்.”
என்றவன் அவளை வாணியிடம் ஒப்படைத்து விட்டு நகர்ந்து விட, வாணி அவளை அழைத்து கொண்டு குடோனுக்கு விரைந்தாள்.
அதே நேரம் அதிவேகமாக முகுந்தன் அறைக்குள் நுழைந்த நளன்.
“கிளம்புவோமா?”
என கேட்க,
“ம்…”
என்றவன் எழும்பாமல் ஏதோ யோசனையில் இருக்க கண்டதும்,
“என்னாச்சு. கிளம்பலியா? தீனதயாளன் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு.”
என நளன் சூழ்நிலையை புரிய வைக்க முயல .
“ உனக்கு அந்த பொண்ணுட்ட ஏதாவது வித்தியாசம் தெரியுதா?.”
“யாரை கேட்கிறா?”
“இப்போ கூட்டிட்டு போனியே. அந்த கேரள வெளவாலு.”
“ஓவியாவா?”
“ம்… அந்த ஓவியமானவளை தான்.”
“என்ன வித்தியாசம். எனக்கு எதுவும் தெரியலியே.”
“இல்லடா. எனக்கு தெரியுது. குழந்தை தனமா பார்த்த அவளுட்ட இப்போ ஒரு நிமிர்வு தெரியுது.”
“தெரிஞ்சதால தான் முறைச்சிட்டு நின்னியா?”
“இதோட விட்டதே அந்த நிமிர்வை பார்த்ததால தான். அப்போ போல பச்சை குழந்தை மாதிரி எதையாவது உழறிட்டு நின்னிருந்தா சரியா வாங்கி கட்டியிருப்பா.”
“ஏண்டா… ஏண்டா உனக்கு அவங்க மேல இம்புட்டு கோபம்.”
“முப்பத்தெட்டு நாளாச்சுடா. மகாராணிக்கு இங்க கிளம்பி வர முப்பத்தெட்டு நாளாகியிருக்கு. எனக்கு இப்படி கிடைக்கிற நல்ல வாய்ப்பை பயன்படுத்த தெரியாத பொண்ணுங்களை கண்டாலே பிடிக்காது. அவங்களோட இந்த குணம் தான் அவங்களை வளர விடாமலே செய்றது. ஐயோ பாவம் வேலை போயிடுச்சேனு விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு வந்தா, மேடம் பேச மாட்டாங்களோ? பேசி வாய்ப்பை கேட்டு வாங்க மாட்டாங்களோ? பத்தொன்பது நாள் பத்தொன்பது நாள் பாத்துட்டு தானே அந்த அப்பாயின்மென்ட் லெட்டரை அனுப்புனோம். அப்படியும் வந்தாளா? பெரிய ரதினு நினைப்பு. ஆடி அசைஞ்சி முப்பத்தெட்டு நாளை வேஸ்டாக்கிட்டு வந்து சேர்ந்திருக்கு.”
முகுந்த் ஆத்திரத்தில் பல்லை நரநரவென கடித்து புஷ்டியை மடக்கி மேஜையில் குத்த,
“இப்போ எதுக்கு இவ்வளவு ஆவேசம். அவங்களுக்கு ஒரு வேளை முடியாம இருந்திருக்கும். நீயும் தானே ஒரு மாசம் கழிச்சி ஆபீஸ் வந்தா.”
“அவளோட கோமாளி தனத்தால என் தோள்பட்டையில வாங்கி கட்டிகிட்டேன். அதனால கை காயங்கள் ஆற ஒரு மாசமாச்சு. அவளுக்கு என்ன நல்லா தானே இருந்தா. அதுல வேற அந்த ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வந்து சேர்த்ததுலயே ரொம்ப விரைவா நார்மல் ஆனவா இவா ஒருத்தியும் தான். அதான் அந்த சரசு அக்கா சொன்னாங்களே. நாம கூட கிளம்புறதுக்கு முன்னால போய் பார்த்தோமே. வெட்டி விழுங்கிட்டு தானே இருந்தா ஆப்பிளை.”
பார்த்தவற்றை ஒரு முறை நியாபகப்படுத்தி பார்த்த நளன், சிரித்து கொண்டே,
“அந்த நாளை மறக்க முடியுமா? சின்ன குழந்தை போல சாப்பிட்ட அழகை பார்த்து சிரிச்சிட்டு வந்தவன் தானே நீ. இப்ப என்ன? அதையும் குத்தமா சொல்லுறா.”
சிரிப்பினூடே கேட்டவனை அனல் கக்கும் பார்வை பார்த்தவன்.
“சிரிக்காதடா. அவளோட கோமாளிதனத்தை எப்பவும் ரசிக்க முடியாது. வேலைனு வந்துட்டா சின்சியரா இருக்கணும். இப்படி நாட்களை வேஸ்ட் ஆக்க கூடாது. அன்று முதல் நாள் என் மேல வந்து மோதுனப்ப அந்த பொண்ணு. அதாண்டா இவளோட பிரண்ட், அவா வந்து இவளோட குடும்ப சூழலை சொன்னதால தான். அதன் பிறகு இவா செய்த கோமாளி வித்தையை எல்லாம் அந்த மேனேஜர்ட்ட சொல்லல. இப்ப கூட அவளோட குடும்ப சூழல் புரிஞ்சி தான் அந்த விசிட்டிங் கார்டையே கொடுத்துட்டு வந்தேன். மேடம் பேசுனாங்களா? இல்ல தானே. திமிரு. அவன் கொடுத்தா. நாம பேசிடணுமா என்கிற திமிரு.”
“விடுங்க பாஸ். அதான் வந்துட்டாங்களே.”
“வந்துட்டா விட முடியுமா? இரண்டு நாள் கண்காணி. அங்க உள்ள குரங்கு வித்தையை இங்க காட்டி எதுவும் தப்பா பண்ணிடாம. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். டிசிப்ளிங் ரொம்ப முக்கியம். கூடவே வேலையில சின்சியரா இருக்கணும்.”
“ம்… சொல்லுறேன்.”
“அப்புறம். இன்று தான் ஊருல இருந்து வந்திருப்பா. தங்குறதுக்கு திங்கிறதுக்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து கொடு. நாளைக்கு காலையில சார்ப்பா 9.30 க்கு ஆபீஸ்க்குள்ள என்ட்ரி ஆகியிருக்கணும். உள்ளால வந்துட்டா வேலையில மட்டும் தான் கவனம் இருக்கணும். சொல்லி வை. அந்த ஹோட்டல்ல என்னை கத்த வச்சது போல இங்க வச்சா அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.”
என்ன முகூர்த்தத்தில் இப்படி சொன்னானோ தெரியவில்லை. மறுநாளே பிந்தி வந்து மேனேஜர் ராதிகாவிடம் வசை வாங்கியவாறே நின்று கொண்டிருந்தாள். ஆபீஸ்க்குள் நளனுடன் எதையோ மும்முரமாக பேசி கொண்டே உள் நுழைந்தவன் கண்களில் இந்த காட்சி விழ, பேச்சை நிறுத்தி விட்டு தலையை தொங்க போட்டவாறு நின்ற ஓவியாவை முகுந்தன் வெறித்து பார்க்க,
“முதல் நாளே பத்து நிமிஷம் லேட்டா வந்திருக்காங்க சார்…”
ராதிகா குற்றப்பத்திரிகை வாசிக்க, முகுந்த் ஓவியாவை பார்த்தான்.
“சாரி சார்… காலையில எழும்ப நேரமாகிடுச்சி. அப்படியும் அவசரம் அவசரமா தான் சார் புறப்பட ஆரம்பிச்சேன். ஹாஸ்டல் பாத்ரூம்ல தண்ணீர் வரல சார். அப்புறம் வாட்ச்மேன் அங்கிள்ட்ட பேசி சரி பண்ணி தண்ணீரை வர வச்சி குளிச்சிட்டு வர நேரமாகிடுச்சி.”
திக்கி திணறி மென்று விழுங்கி அவள் சொன்ன தோரணையில் நளனுக்கு சிரிப்பு தான் வந்தது. சட்டென சிரித்து விட்ட அவனை பார்த்து முறைத்த முகுந்தன் கண்களால் அவனை அடக்கியவாறு திரும்பி அவளை மறுபடியும் கோபத்தோடு பார்க்க,
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன் மென்குரலில்,
பத்து நிமிஷம் தானேடா விட்டுடு. பாவம். முகத்தை பாரு ரொம்ப பயந்து போய் இருக்காங்க.
என்றதும் அவள் படபடக்கும் விழியையும்… சாரி சார்… என குவிந்து நின்ற உதட்டையும் ஒரு நிமிடம் பார்த்து விட்டு பின்,
“நீங்க கிளம்புங்க…”
என்றான் அதிகாரமாய்…
“புரியல… எங்க…”
கேட்கவில்லை தான். ஆனால் அவள் பார்வை அந்த கேள்வியை தான் கேட்டது.
“டேய்… இந்த ஒரு முறையும் விட்டுடுடா. பாவமா இருக்கு. அதுல முதல் நாள் வேற. உன்னோட கண்டிஷன் தெரியாதுல. தெரியாம வந்துட்டாங்க. பிளீஸ் இந்த ஒரு முறையும்.”
ஓவியாவுக்காக நளன் கெஞ்ச, அவனை திரும்பி சுட்டெறிக்கும் பார்வை பார்த்தவன் அதே வேகத்தோடு அவள் பக்கம் திரும்பி,
“நீங்க போகலாம்னு சொன்னேன்.”
என வெடிக்க, துடித்து போனவள் அவனை பயத்தோடு பார்த்தவாறு,
“போலாம்ணா… உள்ளாலயா?… இல்ல… வெளியிலயா?”
மறுபடியும் அவள் பாவமான முகத்தை வைத்து கொண்டு இழுவையாக நிறுத்த,
“ஹெட் அவுட்.”
என வெளியில் கை காட்டியவாறு சீற
“டேய்… டேய்… பாவம்டா.”
நளன் மறுபடியும் வக்காளத்துக்கு வர,
“முதல் நாள். முதல் நாளே பிந்தி வந்திருக்கானா. என் ஆபீஸையும் அந்த ஹோட்டல் மாதிரி நினைச்சிட்டாணு தானே அர்த்தம். வேலையில சின்சியர் வேணும். நேரத்தை சரியா பயன்படுத்த தெரியணும். இப்படி இடியட் போல முழிச்சிட்டு வந்து நிற்க கூடாது. யாரும் நமட்ட கேள்வி கேட்கிறது போல நடக்க கூடாது.”
என்றவன் ஓவியா பக்கம் திரும்பி,
“நீ இன்னும் போகல,”
என வெடிக்க, துடித்து சிலிர்த்தவள் அவனை ஒரு கணம் பார்த்து விட்டு, பின் திரும்பி,
“ நானாவது 9.40 க்கு வந்துட்டேன். நீங்க 9.55 க்கு தானே வந்திருக்கீங்க. பாஸ்க்கு ஒரு நியாயம் ஸ்டாப்ஸ்க்கு ஒரு நியாயமா?”
என முணுமுணுத்தவாறு முன்னோக்கி நகர,
“என்ன?…. என்ன?… என்ன சொன்னடா அவா.”
என முகுந்த் சீற,
“உண்மையை தானே பாஸ் அவங்க பேசுறாங்க.”
நளன் சிரித்து கொண்டே சொல்ல,
“ஐயோ கேட்டுடுச்சா. போச்சு போச்சு. ஓவியா ஒடி தப்பிச்சிடுடி.”
தனக்கு தானே சொல்லி கொண்டு அங்கிருந்து அவசரமாக நழுவி வெளியே ஓடியவளை பார்த்து முறைத்தவன்.
“என்னடா பெரிய உண்மை. எனக்கான ஆபீஸ் டைம் 10 மணி தான். நான் 9.55 க்கு உள்ளால வந்தாச்சு. நான் என்ன இவளை போலனா நினைச்சா.”
“அவங்க போயிட்டாங்க பாஸ். யாருட்ட விளக்கம் கொடுக்குறீங்க. வாங்க நம்ம வேலையை பாக்கலாம்.”
என்றவனை ஒரு முறை மேலிருந்து கீழ் பார்த்தவன் அடுத்த நொடி ஓவியா போன பக்கம் பார்த்தவாறே உள் நோக்கி நகர்ந்தான்.
அதே சமயம் தன் அறைக்கு வந்த ஓவியா கையில் இருந்த பேக்கை தூக்கி சோபாவில் ஏறிந்து விட்டு கையை விரித்து பாட்டு பாடியவாறு ஒரு முறை சந்தோஷத்தில் சுற்றி விட்டு மெத்தையில் பொத்தென விழுந்தாள்.
“ இது நல்லா இருக்குதே. லீவு எடுக்கணும்னு தோணுச்சினா ஆபிஸ்க்கு பிந்தி போனா போதும் போலயே. சிடுமூஞ்சினாலும் பணிஷ்மென்ட் எல்லாம் நல்லா தான் இருக்கு. இன்று செமயா தூங்கலாம்.”
என சந்தோஷத்தில் ஓவியா புரண்ட நேரம் அலுவலகத்தில் தன் அறையிலே நளனிடம் பொரிந்து தள்ளி கொண்டிருந்தான் முகுந்த்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novels