வணக்கம் வாசகர்களே!
இடிபாடுகளுக்கு நடுவில் 3 – நாளாய் மாட்டி கொண்ட முகுந்த் ஓவியாவின் நிலை என்ன ஆனது? அவர்களை தேடி கொண்டு போன நளன் டீம் அவர்களை கண்டுபிடித்தனரா?
3 – நாளாய் மாட்டி கொண்ட முகுந்த் ஓவியாவின் நிலை என்ன ஆனது?
வயநாட்டு மலை சரிவில் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் தன்னுள் ஏந்தி கொண்டு அந்த ஹாஸ்பிட்டல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மூன்று நாட்களாய் டாக்டர், நர்ஸ் யாருமே ஓய்வு எடுக்கவில்லை. இரவு பகல் பாராமல் பம்பரமாக அந்த கட்டிடத்தின் பணியாளர்கள் அத்தனை பேருமே நகர்ந்து கொண்டிருந்தனர்.
ICU – வின் முன் ஒரு பெரும் கும்பலே கூடி இருந்தது. தலையை தொங்க விட்டவாறு மகனை தூக்கி வந்த நொடியே சர்க்கரவர்த்தியின் மனம் உடைந்து போனது. கதறி அழுத அவரை தேற்றி உட்கார வைத்து விட்டு நளனும் சங்கீதாவின் கணவரான மதியழகனும் தான் முகுந்தை இந்த ஹாஸ்பிட்டலில் கொண்டு வந்து சேர்த்தனர். முதலுதவி கொடுத்து விட்டு பின் வேறு ஹாஸ்பிட்டல் கொண்டு செல்லலாம் என்பது அவர்களின் திட்டம்.
உள்ளே சிகிட்சை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அதே அறையில் தான் ஓவியாவும் இருந்தாள். ஆனால் உள் சென்ற ஒரு மணி நேரத்திலே அவளுக்கு நினைவு திரும்பி விட்டது.
நினைவு வந்தவுடன் அவள் மனம் அவனை தான் தேடியது. ஆனால் எப்படி விசாரிப்பது என்று தெரியவில்லை. சுற்றி முற்றி பார்வையை செலுத்தினாள். ஒவ்வொரு பெட்டிலும் நோயாளிகள். அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் ஒரு நொடி சந்தித்து மீண்டவள், விழி வலியில் மூடிய நேரம் அவள் விழியை தாண்டி இருதுளி நீர் சட்டென உடைப்பெடுத்தது.
மலக்க மலக்க விழித்தவாறு கண்கலங்கும் தன் மகளின் அருகில் வந்த எழிலரசி.
“அந்த ஆண்டவன் அவ்வளவு நம்மளை சோதிக்கலங்க…”
என்றவாறு மகளின் நெற்றியில் முத்தமிட, தூரமாய் இருந்த தந்தையின் முகத்திலும் இப்போது தான் ஒளி பிறந்தவர் போல அப்படி ஒரு மகிழ்வை முகத்தில் காட்டினார். வி.ஜ.பிகள் அறையில் முகுந்திற்கு உயரக சிகிட்சை அளிக்கப்படுவது தெரியாமல் அவருக்கு என்னாச்சோ என பெண்ணவளின் மனம் பதைபதைத்தது.
அதே நேரம் திலகா
தன் அறையில் நுழைந்த தாயிடம்,
“ஓவியாவுக்கு எப்படிம்மா இருக்கு.”
என்றாள் ஆர்வத்தோடு. வதங்கி போய் பெட்டில் கிடந்த மகள் அருகில் வந்த கோசலை.
“ ம்… அவளுக்கு என்ன? அவா நல்லா தான் இருக்கா. இப்போ தான் எழிலை பார்த்துட்டு வாரேன். கண்விழிச்சிட்டதா சொன்னா.”
என்றதும் நொடி பொழுது மகிழ்ந்த திலகா, சட்டென முகம் வாடியவள் போல,
“அவளுக்கு என்னை போல பெரிசா எந்த அடியும் இல்ல தானேம்மா. அவா நல்லா தானே இருக்கா.
என்ற மகளை பரிதாபமாக பார்த்த கோசலை.
“ம்… உன் அளவு ஆண்டவன் அவளை சோதிக்கல. உடம்புல சின்ன சின்ன சிறாப்பு தான். நாலு நாள் சாப்பிடாத மயக்கம் மட்டும் தான்.”
என்றவள் கண்கள் நீரை கட்டிக் கொள்ள,
“அம்மா… இப்படி அழுதே காட்டி கொடுத்திடாத. அவா தாங்கிக்க மாட்டா. அவளுட்ட போய் வலியில உழறி வச்சிடாத.”
“எத்தனை நாளுக்கு மறைக்க போறா? எப்படியும் ஒரு நாள் தெரிஞ்சி தானே ஆகும்.”
“ ம்… தெரிஞ்சி தான் ஆகும். அப்போ பாத்துக்கலாம்.”
என்ற மகளை ஆசையாக தடவியவள்,
“என்னமோடி மனசே தாங்கல. எப்படி இந்த உலகத்துல இரண்டு கால் இல்லாம வாழப் போறா? நாம நல்லாயிருக்கும் போதே உன் அப்பன் கண்டுக்கல. தனியா கிடந்து செத்தோம். இப்போ கால் இல்லாத உன்னை நான் எப்படிடீ பாத்துக்க போறேன்.”
என்றவாறே சிந்திய மூக்கை சேலை தலைப்பில் பிடித்தவாறு எழுந்து வெளியே போனாள் கோசலை. வலியின் உச்சத்தில் சென்ற தாயின் பின் முதுகை பார்த்தவாறே, அவள் கொண்டு வந்த இட்லியை எடுத்து முட்டிக்கு கீழே மொத்தமாய் சிதைந்து போன காலை பெட்ஷீட்டால் மறைத்தவாறு திலகா உண்ண தொடங்கிய அதே நேரம்,
தன்னை நெருங்கி வந்த தங்கையிடம்,
“திலகா… திலகா… எப்படியிருக்கா? அவா ஏன் என்னை பார்க்க வரல,”
என்றாள் மென் குரலில் ஓவியா,
“ம்… அவங்க நல்லாயிருக்காங்க. ஆனா எழும்பி வர முடியாதபடி காலுல ஒரு சின்ன அடி. சரியாக இரண்டு வாரம் ஆகும்.”
“கால்ல அடியா?”
என கலவரமானவளை சமாதானப்படுத்தும் நோக்கோடு,
“நீ அதிர்ச்சியாகும் அளவு எதுவுமில்ல. சீக்கிரம் சரி ஆகிடும்.”
என்றதும் சிறிது நார்மல் ஆனவள் போல்
“ம்…ம்… அப்படியா? நீ கூடவே இருந்து அவளையும் பாத்துக்க. கோசலை அம்மாவால தனியா பாத்துக்க முடியாது.”
“ம்… நீ தூங்கு. நாங்க பாத்துக்குறோம்.”
என்றதும் ஒரு நொடி அமைதியானவள், மறுபடியும் எதையோ கேட்கும் முனைப்பில்,
“அப்புறம்…”
என ஆர்வமாக அவளை பார்க்க,
“சொல்லுக்கா . அப்புறம் என்ன? ஏதாவது வேணுமா? தண்ணீர் தரவா?”
என எழுந்து கொள்ள முயல .
“இல்ல. எனக்கு எதுவும் வேணாம். ஆனா…
“என்ன அக்கா ஆனா…”
“இல்ல…என் கூட அடிப்பட்டு வந்தாரே அவருக்கு… அவருக்கு…”
“யாரைக்கா சொல்லுறா? உன் கூட அப்படி யாரும் வரலியே.”
“வரலியா? அவர் இல்லாம நான் எப்படி?”
“நான் எப்படினா? எனக்கு புரியல.”
“என்னை தனியாவா கொண்டு வந்தாங்க.”
“ஆமா…”
“என் கூட யாரும் வரலியா?”
“இல்லக்கா…”

என்றதும் உள்ளம் உடைந்து போனவளாய்… மலக்க மலக்க விழித்தாள். அது எப்படி அவர் இல்லாம நான் மட்டும். எண்ணும் போதே அந்த இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கி கொண்ட நினைவு வர, “நாலு நாள் எதுவும் சாப்பிடாம நான் மயங்கியிருக்கலாம். அவருக்கு தான் கிடைச்ச எல்லாத்தையும் கொடுத்தேனே. அப்படியிருக்க என்னை காப்பாத்துன இடத்துல அவர் இல்லாம எப்படி?”
யோசனையோடு கண்மூடி கொண்டாள். அடுத்து வந்த நொடிகள் எல்லாம் ஓவியாவுக்கு அவஸ்தையாகவே போனது. யாரிடம் கேட்பது. அவர் நலம் பற்றி எப்படி அறிவது. எதுவும் தெரியவில்லை.
மூன்று நாள் முழுதாய் அந்த வேதனையிலே நொடிகளை கடத்தினாள். நான்காம் நாள் தான் தாயை வற்புறுத்தி திலகாவை பார்க்க அழைத்து போக சொன்னாள். போகும் போது கூட அந்த ஹாஸ்பிட்டலின் மூலை முடுக்கெல்லாம் அவளின் கண்கள் அவனை தான் தேடியது. ஆனால் அந்த மாயகள்வனின் உருவம் தான் அவள் பார்வையில் விழவே இல்லை. அவளுக்கு அவனை பார்க்க வேண்டும் என்றில்லை. அவன் நலமாக இருக்கிறான் என்ற செய்தியை மட்டுமாவது அவள் செவி கேட்டாக வேண்டும் என துடித்து நின்றது.
ஆனால் அவளுக்கு அச்செய்தியை சொல்ல கூட யாரும் இல்லை. அவளும் யாரிடம் கேட்பாள். மூன்று நாள் முழுதாய் அவனுடன் இருந்தாள். ஆனாலும் அவனை பற்றி அவளுக்கு என்ன தெரியும். பெயர் கூட தெரிந்து கொள்ளாமல் அவனை எப்படி விசாரிப்பது. அந்த கும்மிருட்டில் தவிப்பும், வலியுமாக நொடியை கடத்தியவளுக்கு அவனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே வரவில்லை. கடைசியாக இவர்கள் இருவரையும் யார் மீட்டெடுத்து கொண்டு வந்தார்கள் என்பது கூட இவளுக்கு தெரியாது. இந்த லட்சணத்தில் யாரிடம் போய் விசாரிப்பாள்.
இந்த தவிப்பில் தான் நான்கு நாளை கடத்தினாள். ஆனால் இதற்கு மேல் முடியாது என்று தான் திலகாவை சந்திக்கும் சாக்கில் வெளியே வந்திருந்தாள். வாசலிலோ வராண்டாவிலோ அவன் முகம் தென்பட்டு விட வேண்டும் என சாமியை வேண்டி கொண்டே தான் பார்வையால் துழாவினாள். ஆனால் திலகா அட்மிட்டாகி இருந்த அறைக்குள் நுழைந்தும் அவள் கண்ணில் அவன் தட்டுபடவே இல்லை.
தன்னை பார்க்க வந்தும் தன் நிலை பற்றி விசாரிக்காமல் ஏதோ ஒரு உலகில் இருப்பது போல இருந்த தோழியை வினோதமாய் பார்த்த திலகா.
“என்னடி? உன் பார்வையே சரியில்லயே. நீ… நீ… யாரை தேடுறா?”
என உலுக்கியவளை வினோதமாக ஒரு வித பதட்டத்தோடு எதிர்கொண்டவள்,
“இல்லயே… நான்… நான் யாரை தேடுறேன்.”
என்றதும் நெற்றி சுருங்க அவளை பார்த்தவள், குழப்பத்தின் உச்சத்தில்…
“அதை தான் நான் கேட்கிறேன். பார்க்க வந்தது என்னை. ஆனா நீயும் இங்க இல்லை. உன் பார்வையும் இங்க இல்லயே.”
என அவளை ஊடுருவி பார்க்க,
தோழி மனதை சரியாக கணித்து விட்டதை கண்டதும். மொத்தமாய் தடுமாறியவள்,
“அப்படி எல்லாம் இல்ல… நான்… நான்… உன்னை தான் பார்க்க வந்தேன்.”
“அப்போ என்னை பாரு.”
என அவள் முகம் தாங்கி சொல்ல, சட்டென ஓவியா கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிற்று.
“ஏய்… எதுக்கு இப்போ அழுறா?”
“எனக்கு பார்க்கணும். ஒரு முறை. ஒரே ஒரு முறை பார்க்கணும்.”
விம்மலோடு கண்ணில் நீர் கோர்த்து சொன்ன தோழியை வினோதமாக பார்த்தவள்,
“யாரை…”
என விழி உயர்த்தி கேட்க, அவள் விழியை சங்கடமாக பார்த்தவள்,
“அ… அந்த … அந்த…”
அவள் சொல்ல முடியாமல் திணற, சட்டென அவள் மனதில் எதுவோ தட்டுபட,
“நெடுமரத்தையா?”
என கேட்டு விட, தோழியை அதிர்வோடு பார்த்தவள் மெல்ல தலையை கவிழ்ந்து கொண்டே,
“ம்…”
என இரு பக்கமும் ஆட்டினாள். அவளின் கோலத்தை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவள் பிசிறடித்த குரலில்,
“வேணாம்டி. அது ரொம்ப பெரிய இடம். அவன் பக்கத்துல கூட போக முடியாத அளவு பெரிய இடம்.”
என்றதும் சட்டென பார்வையை எங்கெங்கோ செலுத்தியவளாக,
“தெரியும். ஆனா நானும் பக்கத்துல போக ஆசைப்படல. அவர் எப்படி இருக்கார்ணு தெரிஞ்சா போதும்.”
என்றாள் மூன்று நாள் தவிப்பை மறைத்தவளாக, அவளின் தடுமாற்றத்தால் குழப்பமானவள்,
“அவனுக்கென்ன நல்லா தான் இருப்பான். உன்னை போல என்னை போல லோக்கல் டாக்டர் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கல. மெட்ராஸ்ல இருந்து டாக்டஸை கூட்டிட்டு வந்து ட்ரீட்மென்ட் பாத்திருக்காங்க. அப்புறம் எப்படி குணமாகாம இருப்பான்.”
என்றதும்
“ஒ…”
என்றாள் உணர்வு துடைக்கப்பட்ட குரலில். அவள் குரலின் சுருதி இறங்கி போய் இருக்க கண்டதும்,
“என்ன ஒ?”
என அதட்டி கேட்க,
“அப்படினா குணமாகிட்டாரு தானே.”
என்றாள் பட்டும் படாமலும்.
“அப்படி தான் நினைக்கிறேன். குணமாகலனா ஊருக்கு கிளம்பி போயிருக்க மாட்டார் இல்லயா?”
என்றாள் அவளை ஊடுருவி பார்த்தவாறு,
“என்ன? ஊருக்கு போயிட்டாரா?”
அதிர்ந்து கேட்டவளை புருவ முடிச்சோடு பார்த்தவள்,
“அதுக்கு ஏண்டி நீ அதிர்ச்சியாகுறா?”
என்றாள் புரிந்து கொள்ள முடியாதவளாய்,
“அது… இல்ல… போயிட்டாராணு கேட்டேன்.”
என்றாள் தன் மொத்த தவிப்பையும் மறைத்தவளாக,
“போயிட்டாங்கணு தான் சரசக்கா சொன்னாங்க. போகும் போது ஒரு நூறு ரூபாய் கட்டையே எடுத்து சரசு அக்காவுக்கு கொடுத்திருக்காங்க.”
என்றதும் புரியாமல் ஏறிட்டவள்,
“சரசு அக்காளுக்கா. சரசு அக்காளுக்கு எதுக்கு பணம்.”
என்றதும் இதுவரை இருந்த முகத்தை மொத்தமாக மாற்றிய திலகா மென் சிரிப்பை முகத்தில் படரவிட்டவாறு,
“அவங்க தானே அவர் கூட இருந்து எல்லா உதவியும் செய்தது. அதுக்காக தான் அவர் அப்பாட்ட சொல்லி காசு வாங்கி கொடுத்ததா சரசு அக்கா எனட்ட வந்து பீத்துச்சு. பாத்தியா. தன்னை கவனிச்சிட்டதுக்கே கட்டு பணம் கொடுக்கிற அளவு கோடீஸ்வரன்.”
என்றவள் சட்டென நினைவு வந்தவள் போல,
“ஆமா இப்போ நீ அவரை பற்றி தெரிஞ்சிக்க வந்தியா. என்னை பற்றி விசாரிக்க வந்தியா?”
என்றதும் சட்டென உதட்டை கடித்து நாணத்தை அடக்கியவள், முகம் முழுவதும் மென்சிரிப்பை படரவிட்டவாறு,
“நான் வந்தது என்னவோ உன்னை பற்றி விசாரிக்க தான். நீ தான் அவரை பற்றி சொல்லிட்டிருக்கா.”
சொல்லி விட்டு சிரித்த ஓவியாவை பார்த்து முறைத்தவள்,
“பாவமா ஒரு மூஞ்சியை காட்டி எல்லாத்தையும் கறந்துட்டு இப்போ நல்லவா வேஷமா போடுறா நீ? உன்னை…”
அவள் அடிக்க கை ஓங்க , எழுந்து ஓடினாள் ஓவியா.
“ ஓட வா செய்யுறா? அப்புறமா அவரை பற்றி கேட்க வருவாலியா அப்ப பாத்துக்கிறேன்.”
“இனி ஏன் நான் உனட்ட வரணும். அதுதான் ஒரு ஆளை கை காட்டிட்டியே. நான் அவங்களுட்டே கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.”
“நான் கை காட்டுனேனா?”
“இல்லையா பின்ன?”
“யாரு…”
“நம்ம சரசு அக்கா. அவங்களுட்ட போய் கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.”
என கண் சிமிட்டி கொண்டு ஒட, திலகாவும் சிரித்து கொண்டாள் கூடவே,
“பாத்துடி. அது பணக்கார வர்க்கம்.”
“பாத்துக்கலாம். பாத்துக்கலாம். நீ உன் உடம்பை முதல்ல பாத்துக்க. சீக்கிரம் எழும்பி நடமாட வேணாம். அப்போ தானே ஓடி போற என்னை பிடிக்க பின் தொடர்ந்து வர முடியும்.”
சொன்னவள் கண்சிமிட்டி கொண்டே வெளியேற, போகும் அவளை பார்த்து புன்னகை மாறாமல் இருந்தாள் திலகா. ஆனாலும் அவளின் அடி ஆழத்தில் ஒரு பயம். ஒவியா முகத்தில் இப்படி நாணத்தையும் வெட்கத்தையும் இதுவரை பார்த்திராததால் உண்டான கலக்கமாய் இருக்கலாம்.
ஆனால் நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் குதூகலத்தோடு தன் அறைக்குள் புகுந்தவள், உள் இருந்த தாயின் குரலுக்கு கூட செவி கொடுக்காமல் பொத்தென பெட்டில் விழுந்தாள். என்னவோ மனதில் புது பொலிவு. கூடவே ஒரு அழுத்தம். அவருக்கு குணமாகி விட்டது என்ற செய்தி சந்தோஷத்தை கொடுத்தாலும். ஒற்றை வார்த்தை பேசாமல் கிளம்பி விட்டார் என்ற செய்தி அவளுக்கு சோர்வை தான் கொடுத்தது. ஆனாலும் மனதின் அடி ஆழத்தில் எதுவோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.
சிலிர்த்து போய் கண்களை இறுக மூடினாள்.
அந்த முதல் நாள் இருட்டில் அவனும் அவளும். அந்த நொடி தான் கண்ணுக்குள் காட்சியாக விரிந்தது. நெஞ்சில் ஒரு படபடப்பு. உடலில் சட்டென பூத்த வியர்வை பூக்கள். இப்போதும் நெருங்கி இருப்பது போன்றதொரு சிலிர்ப்பு.
சட்டென மூடிய கண்களை திறந்தாள்.
உடலும் மனமும் பரவசம் அடைவது போன்றதொரு உணர்வு. அந்த நொடி மட்டும் அல்ல. அன்று இரவு வரை அன்றைய நாள் இருட்டில் அவனும் அவளும் அவளின் பூத்து பூத்து மறைந்தார்கள். கண்களை அப்படியே மூடி அந்த பரவசத்தை அனுபவித்து கொண்டிருந்த நேரம்,
சட்டென அந்த எண்ணம் முளைத்தது.
அவர் கிளம்பிட்டார்ணா. இதுக்க மேல அவரை எப்படி பார்ப்பது. பார்க்கவே முடியாதோ…
மனசு அப்படியே துவண்டு போய் சோர்ந்து விட, சட்டென இரு துளி கன்னத்தில் உருண்டோடியது.
அந்த அழுகையினூடே,
“ஆமா. நான் ஏன் அவரை பார்க்கணும். அவர் குணமாகிட்டாராணு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன்.அதான் திலகா குணமாகி கிளம்பிட்டாருணு சொல்லிட்டாளே, அப்புறம் எதுக்கு இந்த அவஸ்தை. அவர் குணமாகிட்டாரு. இது போதாதா? போதும் தானே. அப்படியும் ஏன் மனசு தவிக்குது. எதுக்கு ஏங்குது. ஏன் பார்க்க துடிக்குது. ஒரு முறை ஒரு முறை என்னை பார்க்காம கிளம்பிட்டாரேனு கோபப்படுது. ஆமா அவர் ஏன் பார்க்கணும். எதுக்கு என்னை பார்க்கணும். நிலசரிவு வந்துச்சு. அவர் என்னை காப்பாற்றி மேஜைக்கு அடியில கூட்டிட்டு போய் என் உசுரை காப்பாத்துனாரு. அதுக்கு நாம உரிமை எடுக்க முடியுமா? அது ஆபத்து காலத்துல செய்த உதவி. முடிஞ்சி போச்சு. இதோட அந்த உறவு முடிஞ்சி போச்சு. நீ எதுக்கு இப்போ அங்கலாய்க்குறா. எல்லாம் முடிஞ்சி . அவ்வளவு தான். அவர் உன்னை காப்பாற்றினார். நீ அவருக்கு சாப்பிட உதவுனா அம்புட்டும் தான். இதுக்க மேல ஒண்ணுமில்ல.”
இப்படி ஏதேதோ சொல்லி சொல்லி மனதை சமாதானப்படுத்தி எப்படியோ அந்த பெட்டில் சரிந்தாள். உறக்கம் வரவில்லை. கண்களை மட்டும் தான் மூட முடிந்தது. மனது எதையோ தேடி அலைபாய்வது கொண்டு தான் இருந்தது. அதனாலோ என்னவோ அவளையும் மீறி அழுகை வந்தது. அது எதற்காக வந்தது என காரணம் கேட்டால் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் வந்தது. தாங்க முடியாத அளவு அழுகை பொத்து கொண்டு வந்தது.
ரொம்ப போராடி அடக்கி கொண்டு படுத்திருந்தவள் ஏதோ ஒரு கட்டத்தில் லேசாக கண்ணயர ,
இருள் சூழ்ந்த அந்த பகுதியில் மெல்லிய வெளிச்சத்தில் அவனை நெருங்கி மிக நெருங்கி அவள். காற்று அளித்த பரிசால் அவள் முடி அசைந்தாடி அவள் அழகு முகத்தை அந்த இருளிலும் ஒளிர செய்தது போல் இருந்தது. அந்த மெல்லிய இருளில் அவள் முகத்தில் அவனும் எதை தேடினானோ. ஆனால் கண்டுவிட்ட பூரிப்பும் குறும்பும் அவன் உதட்டில் தெரிந்தது. மெல்ல கண்டு கொண்ட கனியை பறிக்க அவன் இதழ் இவள் இதழ் நோக்கி குனிந்து நெருங்கிய நேரம்…
அசுரதனமாய் மூச்சை இழுத்து விட்டு விட்டு வாரி சுருட்டி கொண்டு எழுந்து அமர்ந்தாள் ஓவியா…
அவள் இதயம் இப்போது கூட அதிவேகமாக அடித்தது. உடலே தூக்கி தூக்கி போட்டது. ஒரு நொடி கண்மூடி தன்னை ஆசுவாசபடுத்த பார்த்தால் மூடிய கண்ணுக்குள் மறுபடியும் அவனின் குறும்பு சிரிப்பு.
கலைந்து கிடந்த முடியை ஒதுக்கியவாறு, மெல்ல நகர்ந்து அமர்ந்தவள் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள பாட்டிலில் இருந்த நீரை எடுத்து பருகினாள். என்னவோ குளிர்ந்த நீர் உள் சென்று அவள் செல்லை குளிர்வித்து அவளை அமைதியாக்க, கண்கள் தானாக மூடிக் கொண்டது.
“ஏன் எனக்கு இப்படி ஒரு கனவு. நிஜமாகவே அவர் என்னுள் வந்து விட்டாரா? அதனால் தான் அப்படி ஒரு கனவு வந்ததா? என் மனது அவர் பக்கம் சென்று விட்டதா? அதனால் தான் இந்த அளவு நெருங்கி நின்றாரா?”
“இது எப்படி சாத்தியம். இனி பார்க்கவே முடியாத ஆள் மேல் எப்படி எனக்கு காதல் வந்தது. அவர் நிழலில் கூட நிற்க தகுதியே இல்லாத எனக்கு எப்படி அவர் துணையாகும் ஆசை வந்தது. கடவுளே. இது என்ன அவஸ்தை.”
அவள் மனம் மொத்தமாய் கலங்கி போயிருந்த அந்த நேரம் சரியாக,
அந்த அறை கதவை திறந்து கொண்டு யாரோ உள் நுழையும் ஒசை கேட்டது.
தாயாக இருக்கும் என்று தான் அவள் கண் திறக்கவில்லை. தன் கனவை கலைக்க அவள் மனமும் இடம் தரவில்லை என்பது தான் உண்மை.
ஏனோ முகுந்தோடு தான் இருந்த அந்த நொடிகளை கண்திறந்து கூட இழக்க மனமில்லாமல் அவனிலே புதைந்து அப்படியே கண் மூடி இருந்தவளை நோக்கியே உள் நுழைந்த காலடி சத்தம் வந்து நிற்க, சட்டென கண் திறந்தாள் ஓவியா.
கண் முன்னே ஒரு விசிட்டிங் கார்டு,
அந்த கார்டை குழப்பமாக பார்த்தவள் அப்படியே அந்த கார்டை சுமந்து நின்ற கையை பார்த்து கடைசியில் மேலேறி முகத்தை சென்றடைந்த போது,
அதிர்ந்து எழுந்தாள்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



