வணக்கம் வாசகர்களே!
ஏன் இவள் இப்படி பார்க்கிறாள்? குழம்பிய முகுந்தனுக்கு ஓவியாவின் மனது தெரிந்ததா? வாங்க அத்தியாத்துக்குள்ளே போய் தெரிஞ்சிக்கலாம்
ஏன் இவள் இப்படி பார்க்கிறாள்?
ஓவியாவின் பார்வையால் அவன் அடி மனது குழம்பிய நேரம், அவன் விழியை சந்தித்த தன் விழியை நொடி பொழுதில் அப்புறப்படுத்தி விட்டு திடுக்கிடலோடு அங்கிருந்து நகர்ந்தாள் ஒவியா. சில நொடி தான். சில நொடி தான் முகுந்தனுள் அந்த குழப்பம் இருந்தது. அதன் பின் யோசிக்க சூழல் இடம் தரவில்லை.
நளன் நான் இன்றே கிளம்பணும். இன்றைக்கான என்னோட வேலையை முடிச்சிட்டேன். நான் திரும்பி வர இரண்டு நாள் ஆகும். அதுவரை கம்பெனியை பாத்துக்க.
என எழுந்து கொள்ள,
“சரி சார்…”
என அவனும் எழுந்தான். சட்டென ஏதோ யோசனை வந்தவன் போல,
“ அப்புறம் உனட்ட ஒண்ணு பேசணும்னு நினைச்சேன்.”
என திரும்ப
“சொல்லுங்க சார்…”
என்று அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தான் நளன். அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தவன்.
“நேற்று ஓவியா ஒரு ஸ்டாப்ஸ்ட்ட பேசிட்டிருந்ததை கேட்டேன். அவங்க இப்போ தங்கியிருக்கிற ஹாஸ்டல் அவ்வளவு வசதியா இல்லாதது போல சொல்லிட்டு நின்னாங்க. நீங்க ஏன் அவங்களுக்கு நம்ம ஸ்டாப்ஸ் பலரும் தங்கியிருக்கிற பில்டிங்குல ஒரு அறையை கொடுக்க கூடாது.”
என்றதும்,
“கொடுக்கலாம் சார். ஆனா தற்சமயம் எந்த அறையும் காலியா இல்ல.”
என்றதும் ஒரு நொடி யோசித்தவன். மேஜை டிராயரை திறந்து ஒரு சாவியை எடுத்து அவன் முன் நீட்டினான். அவனையும் சாவியையும் மாறி மாறி புரியாமல் பார்த்தவனிடம்,
“என் அறையை அவங்களுக்கு திறந்து கொடுத்திடு. அவங்க அங்கேயே தங்கிக்கட்டும்.”
என சொல்ல அதிர்ந்து தான் அவனை பார்த்தான்.
“என்ன சார் சொல்லுறீங்க. நீங்க தங்க கூடிய அறையையா?”
“ம்… அது இப்போ சும்மா தானே இருக்கு. இனி அவங்களுக்கு பயன்படட்டும்.”
என்றதும் அதிர்ந்து விழித்தவன்.
“உங்க அப்பாவோட திங்ஸ் இருக்குது சார்.”
“மூணு அறை இருக்குதுல. அதுல ஒரு அறையில எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு மீதி போஷனை அவங்களுக்கு கொடுங்க.”
சொல்லி விட்டு அவன் கிளம்பி விட, நளன் நேரே ஓவியாவின் அறைக்கு தான் வந்தான். விபரம் சொன்னதும், முதலில் மறுத்தவள் கடைசியில் ஒப்பு கொண்டாள். அன்றே நளனோட உதவியால் பொருட்களை மாற்றியும் கொண்டாள். ஆனால் அந்த அறை அவள் தகுதிக்கு மிஞ்சிய அறை போல் இருக்க கண்டதும் குழப்பமானாள்.
“ஸ்டாப்ஸ்க்கு எல்லாம் இந்த அளவு வசதியோட அறை ரெடி பண்ணி கொடுத்திருக்காரா?”
இந்த சந்தேகத்தோடு தான் அடுத்தடுத்த அறைகளுக்கு சென்று பார்த்தாள். ஆனால் தனக்கான அறை மட்டும் பெரிதாக அனைத்து வசதிகளோடும் இருக்க கண்டவள் குழப்பமானாள்.
“எதுக்கு?… சார் எனக்கு மட்டும் இவ்வளவு வசதியோட அறை தரணும்.”
இந்த குழப்பத்தோடு தான் மூன்று நாளை கடத்தினாள். மூன்றாம் நாள் தான் நளன் சொல்லி தானும் சுந்தரியும் பேசி கொண்டதை அவர் கேட்டு கொண்டிருந்திருப்பதை தெரிந்து கொண்டாள். அதன் பின் எந்த கேள்வியும் கேட்கவில்லை. இந்த அறைக்கு வந்த பின் ரொம்ப சௌகரியமாகவே இருந்தது.
குளிக்க மணி கணக்காய் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவை தான் சமைத்து உண்ண வேண்டிய அவசியம் இல்லை. இரவு கொசு கடியில் தூக்கத்தை தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை. இரவு முழுதும் பஸ்களின் இரைச்சல் இல்லை. மொத்தத்தில் ரொம்ப சௌகரியமான இடமாய் இருந்தது. அதிலும் அங்கு அறையில் கிடந்த கட்டிலும் மெத்தையும் அவளை சுகமாக தூங்க வைத்து அதிகாலையில் சுறுசுறுப்பாக எழும்ப வைத்தது. அதனாலே இப்போது எல்லாம் ஆபீஸ்க்கு சரியான நேரம் அரக்க பறக்க ஓடாமல் போய் சேர முடிந்தது.
இரவு வெகு நேரம் வேலை முடிய ஆனாலும் பயப்படாமல் சில நிமிடத்திலே அறைக்கு வரவும் முடிந்தது. அதனாலே அதன் பிறகு அதிக நேரம் அலுவலகத்தில் இருக்க முடிந்தது. அதுவே ஆபீஸ் பற்றியும் முகுந்தன் பற்றியும் அதிகமாகவே தெரிய வைத்தது. அந்த தெரிதலே அவளுள் அதிகமான பக்குவத்தையும் விதைத்திருந்தது. மூன்று நாள் தான் அவன் இவளை விட்டு பிரிந்து இருந்தான். இந்த மூன்று நாளுமே அவன் அந்த மூன்று நாள் பழகியது போல் தன்னிடம் பழகாதது எவ்வளவு நல்லது என்று தோன்ற வைத்தது. ஏணி வைத்தால் கூட எட்டாத உயரத்தில் இருப்பவர் மேல் ஆசைபடுவது எவ்வளவு தவறான விசயம் என்பதை உணர்ந்து கொண்டாள். அவரின் உயரம் மிக பெரிது என்பதை தெரிந்து கொண்டாள்.
அதனால் மூன்றாம் நாள் கழித்து வந்த முகுந்த் பக்கம் அவள் வரவே இல்லை. முகுந்தும் இவளை அழைக்கவே இல்லை. இப்படியே முகுந்த் ஓவியாவின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க, அவளின் எண்ண அலையை குழப்புவது போல,
மறுபடியும் சங்கீதாவின் வருகை அவளை தவிக்க வைக்க வைத்து விட்டது. என்னவோ முகுந்த் தனிமையில் இருக்கும் போது பெரிதாக எதுவும் அவள் உள் தோன்றுவது இல்லை தான். அதுவே அவனுடன் வேறு ஒரு பெண்ணை, அதுவும் அழகான பெண்ணை பார்த்து விட்டால் போதும் மனது நிலை கொள்ளாமல் தவிக்க ஆரம்பித்து விடுகிறது. அன்றும் அப்படி தான். அவன் கையோடு கை கோர்த்து அவள் வெளிப்பட நேரம் சரியாக ஒவியாவின் கண்களில் விழுந்தனர்.
அவள் கை அவன் கையோடு இணைந்திருந்த இடத்தை ஒரு நிமிடம் பார்த்தவள் அவனை சுட்டெறிக்கும் பார்வை பார்க்க, இப்போதும் முகுந்த் குழம்பி தான் போனான். இவன் வட்டத்தில் இது பெரிய விசயம் இல்லாததால் அவன் குழம்பி இருக்கலாம். இல்லை என்றால் நான் எவளுடன் கை கோர்த்தால் இவளுக்கு என்ன? இவள் ஏன் முறைக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் திரும்பி பார்த்தவாறே தான் அவளுடன் கிளம்பி வெளியே போனான். அவன் வெளியேறிய அடுத்த நொடியே பெர்மிஷன் கேட்டு விட்டு அவளும் வெளியேறி விட்டாள். நேரே அறைக்கு போக வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் அலை பாய்ந்த மனது அவளை நார்மலாக இருக்க விடாமல் நாலாபுறமும் அலைய வைத்தது. அப்படி அவள் அலைந்து திரிந்து கடைசி வந்த இடம் தான் கன்னிமரியா ஹோட்டல். சாப்பிடும் எண்ணம் இல்லை. ஒரு டீயாவது குடித்து விட்டு கிளம்புவோம் என்று தான் உள் நுழைந்தாள்.
ஆனால் உள் நுழைந்த நொடியே ஹாலின் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த கண்ணாடி மேஜையின் பக்கத்தில் அவ்வளவு நெருக்கத்தில் இருந்த இருவரையும் கண்டதும் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. எதை காண சகியாமல் வந்தாளோ அதே தொல்லை முன்னால் நிற்பதை பார்த்ததும் கடுகடுப்போடு வெளியே வந்தவள் நேரே ஆட்டோ பிடித்து அறைக்கு தான் வந்து சேர்ந்தாள். அறைக்குள் நுழைந்ததுமே அவள் கவனத்தை கலைத்தது போல செல் குரல் கொடுத்தது. எடுத்து பார்த்தாள். செல்லில் தெரிந்த நம்பரை கண்டதும் அவளை அறியாமல் அவள் உதடு மெல்ல மலர்ந்தது. ஆண் செய்து காதுக்கு கொடுத்தவள்,
“சொல்லுடி. எப்படி இருக்கா?”
என்றாள் உற்சாகமாக,
“ போய் இரண்டு வாரமாச்சு. ஒரு போன் அடிக்கிறியாடி. வசதியான வாழ்க்கை கிடைச்சதும் எங்களை எல்லாம் மறந்துட்டால.”
கொஞ்சம் குரல் உடைந்தவாறே திலகா பேச,
“மறக்கிறதா இப்ப கூட உன்னை தான் நினைச்சிட்டே வந்தேன். மனசுல ஒரு குழப்பம்.”
“ஒ!… மேடத்துக்கு குழப்பம் வந்ததால தான் என் நியாபகமே வந்துச்சுல…”
“ஏய்… கோபப்படாதடி. தெரியாத இடத்துக்கு அனுப்பி வச்சிட்டா. இங்க பழகவே ஒரு வாரம் ஆகிடுச்சி. முதல் நாள் ஹாஸ்டல் தேடுற வேலையிலே நொடிகள் போச்சு. அப்புறம் ஒரு சின்சியர் சிகாமணிட்ட என்னை நீ அனுப்பி வச்சியே அதுட்ட மாட்டி சின்னா பின்னமா சிதையுறதே வேலையா போச்சு.”
“ என்னடி அங்கேயுமா?”
“எங்க இருந்தா என்ன? மனுஷனோட குணம் மாறவா செய்யும். அதுவும் இந்த மனுஷனோட குணம் எங்க இருந்தாலும் மாற போறது இல்ல. அங்க செய்ததை விட எட்டு மடங்கு இங்க செய்யுறாரு. மனுஷருக்கு ஸ்கூல் நியாபகம் இன்னும் போகல போல. 9.30 க்கு ஆபீஸை வச்சிட்டு ஒரு நிமிஷம் பிந்தி வந்தா பணிஷ்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சிடுறாரு. உள்ளே நுழைஞ்சதுமே நிமிர்ந்து பார்க்க நேரம் இல்லாத அளவு வேலை வாங்குறாரு. இதுல வேற நான் வந்தது அங்க வேலை பாக்குற பல பேருக்கு புடிக்கல. அதுங்க தொந்தரவு வேற,”
“என்னடி ரொம்ப கஷ்டமா இருக்கா…”
“கஷ்டம்ணு சொல்ல முடியாது. ஆனா நேரம் தான் கிடைக்கிறது இல்ல. அதுல இந்த ஹிட்லர் வேற யாரையும் சும்மா இருக்க விடுறது இல்ல. எப்பவும் எதையோ செய்ய சொல்லி வேலை வாங்கிட்டே இருக்காரு. இதுல உனட்ட பேச எனக்கு எங்க நேரம். ஆபீஸ் முடிஞ்சி வந்தா சமையல் வேலை என் சங்கை பிடிச்சிக்குது. அப்புறம் பத்து மணிக்கு அப்படானு தூங்குனா? மறுநாள் அதே ஒட்டம் தான்.”
“போய் நெடுமரத்தோட கூத்தடிச்சிட்டு என்னை மறந்துட்டாணு சொல்லு. அதை விட்டுட்டு கதை அளக்காத.”
“ஆமா சுத்திட்டாலும். முகம் கொடுத்து பேசுதா பாரு. உர்ணு ஒரு மூஞ்சியை வச்சிட்டு, நான் பக்கத்துலயே போறது கூட இல்ல.”
“அப்படினா ஹோட்டல்ல ஆரம்பிச்ச உறவு இன்னும் முடிவுக்கு வரலணு சொல்லு.
“அது எல்லாம் எம்மாத்திரம்ணு சொல்லுற அளவு இங்க இருக்கார்டி. கம்பெனியே அந்த கிட்லரை பார்த்து பயந்து சாகுது. மொத்த பேரையும் பார்வையாலே மிரட்டி தான் வச்சிருக்காரு. ஆனா ஒண்ணுடி ரொம்ப சூப்பரா கம்பெனியை ரண் பண்ணுறாரு. சும்மா இல்ல ஊருக்கு ஒரு கம்பெனியை வச்சிட்டு நெடுமரம் உசந்து நிக்குறது. ஆனா சிரிப்பு கிலோ என்ன விலைனு கேட்கிற அளவு இருக்காரு.”
“என்னம்மா. அவர் சிரிச்ச முகத்தை பார்க்க ஏங்குனாப்புல இருக்கு.”
“ஆமா ஏங்கிட்டாலும், பக்கத்துல கொண்டு போய் விடாம தூரமா என்னை கொண்டு போய் வைப்பானு நான் வேண்டாத நாள் இல்ல. ஆனா அந்த ஆண்டவர் சனியன் பிடிச்ச அவரை என் பக்கத்துலயே வச்சிட்டு கொடுமைப்படுத்துறாரு.”
“அப்படினா…எப்பவும் அவர் நீ வேலை பாக்குற கம்பெனியிலயா இருப்பாரு.”
“நான் வந்த ஐந்து நாளும் இங்க தான் இருந்தாரு. அடுத்து மூணு நாளா வெளியூர் போயிட்டாரு. எங்க போனார் என்று தெரியல. அதன் பின் வந்திட்டாரு. இப்படி அடிக்கடி கிளம்பி போவார் போல… மாசத்துல ஒரு நாள் இரண்டு நாள் தான் இந்த கம்பெனிக்கு வருவாராம். மற்ற நாள் எல்லாம் அவரோட அப்பா தான் பாத்துக்குவாங்களாம். இவருக்கு கையில அடிப்பட்டதால வெளிநாட்டு பயணம் வேணாம்ணு பெரிய முதலாளி அங்க போயிட்டதா பேசிகிட்டாங்க. அதனால தான் தினமும் இங்க வராரு. கொஞ்ச நாள் தான் அப்புறம் கிளம்பிடுவாரு.”
“ அப்போ தினமும் சாரோட முட்டி மோதல் தான்.”
“ எங்க? என் பக்கம் திரும்ப கூட அவருக்கு நேரம் இல்ல… ஆனாலும் போண்ல வேலை வாங்கிட்டே இருப்பாரு. பக்கத்துல போனாதே சிடுமூஞ்சி எப்பவும் சிடுசிடுத்துட்டே தான் இருக்கும். ஒரு வார்த்தை அன்பா பேசாது.”
“என்னடி சோகமா சொல்லுறா? அப்படினா உன் பக்கம் திரும்பணும் உன் கூட அன்பா பேசணும்ணு ஆசைப்பட்டியா?”
என்றதும் சட்டென தன்னை மீட்டெடுத்தவள்,
“நானா?… நான்… நான் எதுக்கு அவர் என்னை பார்க்கணும்ணு ஆசைப்படணும். நான் எல்லாம் ஆசைப்படலம்மா… அதான் அவர் பார்க்க நிறைய பேர் இருக்காங்களே.”
“நிறைய பேர் இருக்காங்களா?”
“அம்மா தாயே கொஞ்சம் நிறுத்துறியா? கேள்வியா கேட்டு என்னை சாகடிக்காம கொஞ்சம் போனை வைக்கிறியா?”
“பாத்துடி. உன் பேச்சே சரியில்ல
“என்ன சரியில்ல. முதல்ல நீ போனை வை. எனக்கு சமையல் வேலை இருக்கு. நான் சமைக்கணும். செம பசி.”
“ம்… நானும் அந்த நிலசரிவுக்கு பிறகு பார்க்க தான் செய்றேன். நீ சரியாவே இல்லை. உன் பேச்சும் சரியாவே இல்ல.”
“என்ன சரியா இல்ல. எல்லாம் சரியா தான் இருக்கு. முதல்ல நீ சொல்லு. டாக்டரை போய் பார்த்தியா காலுக்கு ஏதாவது மாற்று வழி உண்டாணு கேட்டியா?”
என பேச்சை திசை திருப்ப, பெருமூச்சு ஒன்றை விட்டவள்,
“அதை கேட்டு இப்ப என்ன பண்ண போறா? போனது போனது தான். அறுத்து போட்டதை எடுத்து ஒட்ட வைக்கவா முடியும். காலம் வரை கட்டிலே கதினு கிடக்க வேண்டியது தான்.”
என்றாள் விரக்தி சிரிப்போடு,
“ஏண்டி அப்படி சொல்லுறா? எல்லாம் மாறும்.”
என குரல் உடைந்து சொன்னவளிடம்,
“என்ன மாறும். நான் எழுந்து நடந்திடுவேனா? இல்ல இதுவரை எனக்காக வாழ்ந்த அம்மாவை உட்கார வச்சி சோறு போட்டு விடுவேனா? முடியாதுல . இது எதுவும் என்னால இனி முடியாதுல. அப்புறம் எது மாறும்ணு சொல்லுறா?”
“ஏய் கலங்காதடி. எல்லாம் சரியாகும்.”
“ நீ என் ஆறுதலுக்காக சொல்லலாம். ஆனா எதுவும் இனி சரியாகாதுணு எனக்கு தெரியும். எனக்கு கால் போனது கூட வருத்தம் இல்ல. ஆனா காலத்துக்கும் அம்மாவுக்கு பாரமாகி போனேனே அது தான் வருத்தமா இருக்கு. எவ்வளவு ஆசைப்பட்டேன். அம்மாவை உட்கார வச்சி சோறு போடணும்னு. கடைசியில அது நடக்காமலே போக போகுதுல. கடைசி வரை அவங்க உழைப்பிலே சாப்பிட போறேன்ல.”

இந்த வார்த்தை. இந்த வார்த்தை தான் அதற்கு அடுத்து வந்த இரண்டு நாளும் ஓவியா மனதை நிறைத்து நின்றது. திலகா எவ்வளவு நல்லவள். அவளுக்கு ஏன் ஆண்டவன் இப்படி ஒரு அநியாயம் செய்தான். அவள் சொல்வது சரி தானே. இனி அவள் வாழ்வு மாறாது தானே.
இப்படியே சிந்தித்து கொண்டு வந்தவள் முன்னால் வந்த முகுந்தை பார்க்க தவறி விட, முன்னால் வந்த தன்னை கூட கவனியாது எதையோ இழந்தது போல் செல்லும் அவளை நின்று கவனித்து விட்டு தான் நகர்ந்தான் முகுந்த். அறைக்குள் வந்தவனுக்கு ஒரே குழப்பம். சுந்தரியிடம் சொல்லி ஓவியாவை தன் அறைக்கு அழைக்க, குழப்பமாக தான் உள் நுழைந்தாள். அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன்.
இரண்டு நாளுக்கான பைல்ஸை பார்க்கணும்.
என்றான் அவள் விழியை பார்த்தவாறே, அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“இதோ கொண்டு வரேன் சார்.”
என சொல்லி விட்டு வெளியேற முயல, எதுவும் பேசாமல் அவள் பின் முதுகையை முறைத்து கொண்டு நின்றான். நேரடியாய் கேட்டால் பதில் சொல்ல மாட்டாள் என தெரிந்தே , அவளை வேலை வாங்கி கொண்டே விசயத்தை கரந்து விடுவது என காவல் இருந்தான்.
தன் அறைக்கு வந்து முகுந்த் கேட்ட இரண்டு நாளுக்கான பைல்ஸை எடுத்து கொண்டு அவன் அறைக்கு வந்தாள். அவள் கையில் இருந்த பைல்ஸை வாங்கி புரட்டியவன், அவளை நிமிர்ந்து பார்க்காமலே,
“ஏதாவது பிராப்ளமா?”
என கேட்க,
“பிராப்ளமா? அப்படி எதுவும் இல்ல சார்…”
திடீர் என கேட்ட கேள்வியில் தடுமாற்றமாய் அவளிடம் இருந்து பதில் வர, குழப்பமாக பைல்ஸில் இருந்த பார்வையை அவள் முகத்திற்கு நேர் மாற்றியவன்,
“அப்படினா முகத்துல ஏன் இத்தனை குழப்பம்.”
என ஒரு நொடி நிறுத்த, பதில் பேச முடியாமல் தடுமாறியவளை பார்த்து,
“சொல்லுறதுனா சொல்லலாம். முடிஞ்சா வழி சொல்றேன்.”
என்றான் முதல் முறையாக கனிவோடு,
“என்ன? இவனுக்கு இவ்வளவு மென்மையா பேச தெரியுமா?”
என ஒரு நொடி எண்ணி வியப்போடு அவனை பார்த்தவள், அவன் பார்வை தன்னிலே இருக்க கண்டதும் தலையை தாழ்த்தி மென்குரலுக்கு மாறி,
“என் பிரண்ட் திலகாவை நினைச்சேன் சார்.”
என்றாள் வலியோடு,
“யாரு? ஹோட்டல்ல உன்னோட பார்த்தேனே அந்த பொண்ணா?”
என்றான் ஆர்வமாக,
“ம்…”
என்றவள் அடுத்து என்ன பேச போகிறான் என ஆர்வமாக பார்க்க,
“அவங்களுக்கு என்ன?”
என்றான் நெற்றி சுருங்கியவாறு யோசனையோடு,
“அவளுக்கு என்னணு கேட்கிறீங்க. உங்களுக்கு அவளுக்கு என்னாச்சிணு தெரியாதா?”
என்றாள் சற்று கோபத்தோடு, அவள் கோபத்தை ஒரக் கண்ணால் பார்த்தவன்.
“தெரியாம என்ன? கால் போனதை தானே சொல்லுறா?”
“ம்…ம்…”
“அதுக்கு என்ன செய்ய முடியும். அது விதி.”
“என்ன சார் விதி. விதி என்ன சார் நல்லவங்க மேல மட்டுமா பாயும் சார். அவா எவ்வளவு நல்லவா தெரியுமா சார் உங்களுக்கு. ஒருத்தர்ட்ட கூட அதிர்ந்து பேசாதவா. யார் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்ய கூடியவா. அவளோட அம்மாவை தெய்வமா நடத்த கூடியவா. அவளோட பிரண்ட் என்கிற ஒரே காரணத்துக்காக எனக்கு என்னவெல்லாம் செய்திருக்கா தெரியுமா சார்,”
படபடவென ஓவியா பொறிந்து தள்ளி விட,
“கூல்… கூல்… இப்போ எதுக்கு கோபப்படுறீங்க. நடக்கணும்னு இருந்திருக்கு. நடந்திடுச்சி. இனி அதை நினைச்சி வேதனைப்படுறதுல எந்த அர்த்தமும் இல்ல. அதை தான் அப்படி சொன்னேன்.”
“ம்… இல்ல தான். ஆனா ஆயிரம் ஆசையோடும் ஆயிரம் கற்பனையோடும் வாழ்ந்தவளுக்கு இனி அந்த ஆசை கனவு எதுவும் நடக்க போறது இல்லணு தெரிஞ்சதும் எவ்வளவு நொருங்கி போவாங்க. இப்போ என் தோழியும் அப்படி நொருங்கி போய் தான் இருக்கா. அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல.”
சொல்லும் போதே அவள் கண் சட்டென கலங்கி விட, தோழியின் நிலை இவளை எந்த அளவு பாதித்திருக்கிறது என உணர்ந்தவன்.
“யோசிங்க. அவங்களுக்கும் கடவுள் ஒரு திரைகதையை எழுதாமலா போயிருப்பான். நிச்சயம் எழுதி இருப்பான். அது அவங்க நினைச்சி பார்க்காத அளவு சந்தோஷமான திரைகதையா கூட இருக்கலாம். மனசை தளர விட வேணாம்ணு சொல்லுங்க. வாழ்க்கையில கடவுள் போடுற கணக்கு நமக்கு தெரிகிறது இல்ல. அது தெரியாம தான் நாம நடக்கிற எல்லாத்தையும் விதி மேல பழியை போட்டு புலம்புறோம். இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க. ஆண்டவன் இந்த திருவிளையாட்டை ஏன் உங்க பிரண்ட் மேல விளையாடுனாருணு அப்போ தெரியும்.”
முகுந்த் இப்படி பேசிய போது அது அவளை சமாதானப்படுத்தும் வார்த்தை என்று தான் நினைத்தாள். ஆனால் எதிர்காலத்தை அவ்வளவு துல்லியமாய் கணித்து சொல்கிறான் என்று அப்போது அவளுக்கு தெரியவில்லை. மூன்று மாதம். மூன்று மாதம் முழுதாய் அவள் வந்து ஆகி விட்டிருந்தது. இந்த மூன்று மாதத்தில் கம்பெனியின் மொத்த வேலையும் பழகி கொண்டாள் ஓவியா. இவள் வந்த பின் முகுந்தின் வேலை பாதியாக குறைந்தது என்றே தான் சொல்ல வேண்டும்.
அதனால் இப்போது எல்லாம் அவன் இந்த பேக்டறிக்கு அடிக்கடி வருவதே இல்லை. மெயிலில் சில விசயங்களை அனுப்பி சரி பார்ப்பவன் மொத்தமாக கவனத்தை ஸ்டீல் பேக்டறி மேல் செலுத்த ஆரம்பித்தான். அதற்கு ஓவியா மேல் உள்ள நம்பிக்கையும் ஒரு காரணம். கூடவே தந்தை வெளிநாட்டிலே தங்கி விட்டிருந்ததால் இவன் இந்தியாவில் இருந்த மொத்த கம்பெனியும் வழிநடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். ஒரு மாதம். ஒரு மாத ஒயாத அலைச்சலுக்கு பின் மறுபடியும் மாவு மில்லுக்கு வந்தான். என்னவோ ஒரு மாறுதல் அவனுக்கு தேவையாக இருக்க தான் இங்கு வந்தான்.
சின்ன முதலாளி வந்திருக்கிறார் என அறிந்ததுமே பலரும் அவனை சந்திக்க அவன் அறைக்கு படையெடுத்தனர். ஆனால் பார்க்க துடித்த மனதை அடக்கி கொண்டு அறையிலே இருந்தாள் ஓவியா. இப்போது எல்லாம் முகுந்த் நினைவு அவளுக்கு அடிக்கடி வரத்தான் செய்தது. அவனின் ஒரு மாத கால பிரிவு அவளுக்கு தாங்க முடியாத வலியை கொடுத்திருந்தது. பக்கத்தில் இருக்கும் போது கூட எழாத சில உணர்வுகள் அவனை பிரிந்த இந்த ஒரு மாதத்தில் மேல் எழுவதை உணர்ந்தாள். பார்த்து கொண்டே இருந்தால் கூட நாட்களை கடத்தி விடலாம் போல. ஆனால் அவனை பார்க்காமல் முடியாது என்பது போல் இருந்தது.
ஆனால் இதை அவளால் வெளிப்படையாக சொல்ல முடியாதே. புத்தி இது தப்பு என ஓங்கி மண்டையை அறைந்து தான் சொல்கிறது. ஆனால் மனது தான் கேட்க மறுக்குது. ஆபீஸ்க்குள் நுழைந்ததுமே ஏக்கத்தோடு தான் அவன் அறையை நோக்குகிறது கண்கள். அவன் இல்லை என்று தெரிந்தாலும் ஏக்கமாக தான் திரும்புகிறது. முறைத்து கொண்டு தான் நின்றாலும் அவனுடன் நின்று பேசிய இடங்கள் எல்லாம் அவனை நினைவுப்படுத்தி கொல்ல தான் செய்தது. இரவில் தூக்கம் தொலைத்து பகலில் சுறுசுறுப்பு தொலைத்து தான் ஒரு மாதத்தை கடத்தியிருந்தாள்.
ஆனால் எந்த உணர்வுமே இல்லாமல் ஜடமாக இருப்பவனை என்னவென்று சொல்வது. உணர்ச்சியை மொத்தமாக எழுப்பி விட்டு மொத்தமாய் மனதுக்குள் நுழைந்து கொண்டு அவன் தான் எதுவும் செய்யாதது போல் அமர்ந்து விட்டான். பேதை பெண்ணால் அப்படி இருக்க முடியவில்லை. அவன் உயரம் அவளை தள்ளி வைத்தாலும் காதல் மனது கலங்க தான் செய்தது. ஏங்க தான் வைத்தது.அதனாலே அவனை விட்டு விலகி இருப்பது என்று அவன் வந்திருக்கிறான் என தெரிந்தும் தன் அறையை விட்டு வெளியேறவில்லை.
ஒரு மாதத்தில் ஒரு நாள் கூட தன்னை பற்றி விசாரிக்கவில்லை என்ற கோபம் வேறு. இதற்கு மேல் தன் மனதை மாற்றியே ஆக வேண்டும் என்ற உறுதி மறுபக்கம். இது இரண்டும் சேர்த்து தான் அன்று முழுதும் அப்படியே கடத்தினாள். மாலையில் கூட அவன் கிளம்பி போகும் 5 மணி தாண்டியும் வெளி வரவில்லை. இல்லாத வேலையை செய்வது போலவே எதையோ நோண்டி கொண்டே இருந்தாள். கடைசியாக ஒரு வழியாக கடிகாரம் ஆறு அடித்து ஓய்ந்ததும், கைப்பையை எடுத்து கொண்டு சோர்வோடு வெளி வந்தாள். இடமே காலியாக இருந்தது. எல்லாரும் கிளம்பி விட்டார்கள் என புரிந்தது.
மெதுவாக திருப்பி நடந்தாள். ஏதேச்சையாக அவள் பேச்சை கேட்காமல் இன்றும் கண்கள் அவன் கண்ணாடி மாளிகையை பார்த்தது. யாருமின்றி அது வெறுமையாய் தவமிருந்தது.
“போயிட்டார். போய் தொலையட்டும். இப்படியே வராம வட நாட்டுலயே கிடந்துட்டா ரொம்ப நல்லா இருக்கும். நானாவது நிம்மதியா இருப்பேன்.”
என மனதுக்குள் கடுகடுத்த நேரம் அவள் பின்னால் இருந்து,
“ஓவியா…”
என ஒரு குரல் கேட்க, அவள் மனது சட்டென அதிவேகமாக துடிக்க தொடங்கியது. “இது முகுந்த் குரல் தானே. “
நினைக்கையிலே கண்கள் பெரிதாக விரிந்தன.
“ஓவியா…”
மறுபடியும் அவன் அழைக்க, நின்று மெல்லமாய் திரும்பியவள், முன்னால் முகம் நிறைய சிரிப்போடு நின்ற முகுந்தை பார்த்து, மென்மையாய் சிரிக்க,
“காங்கிராஜுலேஷன்.”
என தன் கையை நீட்டினான், புரியாமல் அவனை பார்த்தாள் ஓவியா. அவன் கண்ணில் அவ்வளவு பெருமிதம். முகம் முழுதும் சிரிப்பு. ஆனால் அதற்கான காரணம் தெரியாமல் குழம்பியவள்,
“எதுக்கு சார்?”
என்றாள் தயக்கமாக,
“நம்முடைய புது புராடெக்ட் செம ஹிட்டு. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ரஷ்யாணு முன்னணி கம்பெனியோட போட்டி போட்டு நம்பர் ஒன் இடத்துல இருக்குது. நீங்க வந்து அந்த ஐடியாவை சொல்லும் போது அது மக்கள் மத்தியில இவ்வளவு பேசப்படும்ணு நினைக்கல. ஆனா ஹெல்த்தியான அந்த புராடெக்ட்டை வாங்கி சாப்பிட்டவங்க உடல்நிலையில ரொம்ப முன்னேற்றம் தெரிகிறதா ரிப்போட். அதனால அதிகமான ஆடர் கிடைச்சிருக்கு. இது எல்லாம் உங்களால தான்.”
“நான் என்ன சார் செய்தேன். எனக்கு தோணுனதை சொன்னேன். செயல்படுத்தி வெற்றி பெற்றது நீங்க தானே சார். இதுல எனக்கு எதுக்கு வாழ்த்து.”
“உங்களுக்கு தெரியாது. அப்பா எவ்வளவோ பிஸ்னஸ் வச்சிருந்தாலும் நான் அவருக்கு உதவியா இருந்து கோடி கோடியா சம்பாதிச்சாலும் அது என்னோடது இல்ல. ஆனா இந்த கம்பெனி கொடுக்கிற மொத்த வெகுமதியும் என்னோடது. காரணம் இந்த கம்பெனியை நான் தனிப்பட்ட முறையில தான் உருவாக்குனேன். அப்பாவுக்கு இதுல பெரிசா ஆர்வம் இல்ல. ஆனா மக்களுக்கு நல்ல ஒரு பிராடெக்டை கொடுக்குறோம் என்ற ஆத்ம திருப்தி இருந்துச்சு எனக்கு. ஆனா எங்க இரண்டு பேரால இந்த கம்பெனியை சரியா பார்க்க முடியல. ஸ்டீல் பேக்டறி வேலைகளே தலைக்கு மேல இருந்துச்சு.”
“அப்பாவோட வற்புறுத்தலால தான் இந்த கம்பெனியை அவர் கையில கொடுத்துட்டு அவரோட கம்பெனியை பார்க்க வெளிநாடு போயிட்டேன். அப்ப அப்ப இந்தியா வரும் போது கம்பெனிக்கு வருவேன். மற்ற நேரம் மெயில் பண்ணி தான் வழிநடத்த முடிஞ்சிது. இது மனசுக்குள்ள ஒரு குறையாவே இருந்துச்சு. ஆனா நீங்க வந்த பிறகு எனக்கு அந்த குறை நீங்கிடுச்சி. நான் எப்படி என் கம்பெனியை கொண்டு போகணும்னு நினைச்சேனோ அப்படியே கொண்டு போறீங்க. இதோட நிறுத்திட கூடாது. இன்னும் நிறைய பிராக்டெக்ட் அறிமுகப்படுத்தனும். எல்லாமே ஆர்கானிக் முறையில இருக்கணும்.”
“கண்டிப்பா சார். ஒரு நாள் பஸ்ல போகும் போது ஒரு லேடி தன் குழந்தைக்கு பால் இல்லணு சொன்னாங்க. அதனால புட்டி பால் கொடுக்கிறதாவும் அது குழந்தைக்கு ஒத்துக்காம குழந்தை விடாம வாந்தி எடுக்கிறதாவும் சொன்னாங்க. அந்த இடத்துல இருந்து தான் என் தேடல் ஆரம்பமாச்சு. அதிகமா பால் சுரக்கும் இயற்கை பொருளை தேட தொடங்கினேன். என் தேடலின் முடிவையும் என் எண்ணத்தையும் சொன்ன போது நீங்க உடனே சம்மதிச்சீங்க.”
“நான் இது போல பல புராடெக்டை கொடுக்கணும் என நினைச்சி தான் இந்த பேக்டறியை தொடங்கினேன் ஓவியா. ஆனா அதை செயல்படுத்த முடியல. ஆனா நீ வந்த பிறகு என் எண்ணத்தை அப்படியே நடைமுறைப்படுத்துறா? இதை இப்படியே நிறுத்திட கூடாது. இது போல கற்பமான பெண்களுக்கான ஊட்ட சத்து, படிக்கிற மாணவர்களுக்கான ஊட்ட சத்துணு உங்க முயற்சி விரிஞ்சிட்டே போகணும்.”
“கண்டிப்பா சார். நானும் அதுக்கான யோசனையில தான் இருக்கேன். கூடவே வேற ஒரு ஐடியாவும் மனசுல இருக்கு. அதையும் உங்களுட்ட சொல்லணும்னு நினைச்சேன்.”
“சொல்லுங்க மேடம். கேட்க காத்திருக்கேன்.”
“இல்ல சார். இதுவரை நம்ம புராடெக்ட் ஆப்லைன் மூலமா தான் செயில்ஸ் பண்ணுறோம். ஆண்லைன் மூலமாவும் பண்ணுனா எப்படினு ஒரு யோசனை.”
“சூப்பர் ஓவியா.”
என மலர்ந்தவன் சட்டென முகம் மாறி,
“ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனா இருக்கிற ஆட்கள் வைத்து அதை செயல்படுத்த முடியாதே ஓவியா. நிறைய ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டி வருமே. கூடவே ஒரு நல்ல ஹெட் பார்க்கணும். இல்லனா பிளான் சொதப்பிடுமே.”
“ஆரம்பமே எதுக்கு சார் அவ்வளவு ஆட்கள். ஒரு நான்கு ஐந்து பேர் போதும். அவங்களை வச்சே தொடங்கலாம். அப்புறம் விரிவுப்படுத்தலாம்.”
“ அதுவும் சரிதான். என்றாலும் பொறுப்பா உங்களை போல பாத்துக்க ஒரு ஹெட் வேணுமே ஓவியா. சரி. அதுக்கான ஆளை நான் பாத்துக்கிறேன். நீங்க வேற எல்லாம் ரெடி பண்ணுங்க.”
“ம்… ஓ.கே சார்.”
என்றவள் முகமோ ஒரு நொடி வாடிப் போனது போல் தெரிய,
“நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா ஓவியா? எதுக்கு இப்போ உங்க முகம் சுருங்குது.”
“அது ஒண்ணுமில்ல சார்…”
“சும்மா சொல்லுங்க. என்ன விசயம்.”
“இல்ல சார். இன்னும் ஒண்ணு சொல்லணும். ஆனா சொல்லலாமா? வேணாமானு தெரியல.”
“எனட்ட என்ன தயக்கம். அதான் முழு பொறுப்பையும் உங்களுட்ட கொடுத்துட்டேனே எதுனாலும் சொல்லுங்க.”
“ முழு பொறுப்பையும் கொடுத்தீங்க தான். ஆனா கூட ஒரு பொறுப்பையும் கொடுப்பீங்களா சார்?”
“என்ன இதையும் நீங்களே பார்க்க போறீங்களா? ரெண்டு வேலையும் சேர்த்து பார்க்கிறது ரொம்ப கஷ்டம் ஓவியா. இப்பவே உங்களுக்கு ஓய்வு இல்லாத வேலை இருக்கும். இது கூட அது எல்லாம். வேணாம் ஓவியா.”
“ நான் செய்யல சார்…”
“நீங்க இல்லயா அப்புறம்?”
“வேற ஒரு ஆளை நான் பாத்திருக்கேன்.”
என்றதும் சட்டென அவன் முகம் வாட, அவன் வாடிய முகத்தை பார்த்தவள்,
“உங்களுக்கு பிடிக்காதுணு தெரியும். வேலைக்கு ஆள் எடுக்கிற பொறுப்பை நீங்க உங்க அப்பாவுக்கு கூட கொடுத்தது இல்லணு அறிஞ்சேன். ஆனாலும் இந்த ஒரு முறையும் நான் சொல்றதை கேட்பீங்களா சார். பிளீஸ்?”
அவளின் தடுமாறிய குரலில் தன்னை சரி செய்தவன்,
“சொல்லுங்க ஓவியா. நல்ல ஆளா இருந்தா நிச்சயம் கேட்கிறேன். சொல்லுங்க நீங்க யாரை சொல்லுறீங்க.”
கேட்டு விட்டு ஆர்வமாக அவள் முகத்தை அவன் பார்க்க, அந்த முகத்தை பார்க்க கஷ்டப்பட்டு தலை குனிந்தவள் வாயோ உடைந்த குரலில்.
“திலகா!”
என்றாள் உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்தை வெளிகாட்டியவாறு, ஒரு நொடி இருவரிடையும் ஆழ்ந்த அமைதி.
அமைதிக்கு பின் முகுந்த் மெல்லமாய் வாய் திறந்தான். அவன் முன் திக்திக் மனதோடு நின்றிருந்தாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novels



