வணக்கம் வாசகர்களே!
மலை சரிவில் மாட்டி கொண்டு இடிபாடுகளின் நடுவில் இருந்த ஓவியாவுக்கு நடந்தது என்ன?
மூன்று மணி நேரம் சுற்றி சுற்றி தேடியும் மண் குவியலை நகர்த்தும் வழி தெரியாமல் தடுமாறியவன் சோர்ந்து போய் அமர்ந்து கொள்ள,
நான்… நான் வேணா…
அவள் அடிகுரலில் மேல் பார்வை பார்த்தவாறே இழுக்க,
என்ன… இந்த மண்குவியலை அப்புறப்படுத்தி நீ என்னை காப்பாத்தி கூட்டிட்டு போக போறியா? என்னாலயே முடியல. நீ முடிச்சி காட்டிடுவியா?
முகுந்தன் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிந்தாலும் உதடு இளநகை புரிந்தது.
ஏன் முடியாதா?
மனதுக்குள் தான் கேட்டாள், அவனிடம் கேட்க துணிவு வரவில்லை.
என்ன?… அப்படி பாக்குறா?
ம்கூம்…
அவசரமாக தலையசைத்தாள்.
காலையில சந்தோஷமா புறப்பட்டு மீட்டிங்கிற்கு போயிருப்பேன். நந்தி போல என் வாழ்க்கையில வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டா…
கடுகடுத்து கொண்டு முறைத்தவனை பார்த்து அழுகை வந்தது. கூடவே ஆத்திரமும் வந்தது.
நானும் தான் உங்க கண்ணுல விழாம இருந்திருந்தா இந்நேரம் அம்மாவோட முனிஸ்வரன் கோவில்ல இருந்திருப்பேன். உங்க கண்ணுல மாட்டி அந்த மேனேஜர்ட்ட பனிஷ்மென்ட் வாங்கி என் லீவை இழந்ததும் இல்லாம இப்போ இங்கு வந்து உங்ககிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன்.
இப்போதும் அவள் மனதுக்குள் தான் பொருமினாள். வெளியில் எதுவும் சொல்லவில்லை. அவனை போல் மனதில் இருப்பதை அவளால் சொல்ல முடியவில்லை. ஆனால் மனதின் குரல் முகத்தில் தெரிந்ததோ என்னவோ அவன் குறுகுறுவென அவளை பார்த்தான்.
எதுக்கு இப்படி பாக்குறான்?
கேள்வியோடு அவள் முழியை உருட்ட,
முடியும்னு நினைக்கிறால… செய் பார்ப்போம்.
என்றவனை அதிர்ந்து விழித்தவன்.
இவன் என்ன ஜோஸியகாரனா? அப்படியே மனசை படிச்சி சொல்லுறான்?
பயத்தோடும் நடுக்கத்தோடும் குழப்பத்தோடும் அவனை பார்க்க,
செய்ம்மா. இந்த மண் குவியலை புரட்டி என்னை காப்பாற்றி வெளியில கூட்டிட்டு போயிடு.
நகைப்புடன் சொன்னவனை ஒரு நொடி பார்த்தவள் பின் மெல்லமாய் பார்வையை நாலாபுறமும் திருப்பிய
அதே நேரம்,
ஹோட்டல் சித்ராவில் கிளைன்ட்டோடு மீட்டிங்கில் இருந்த நளனை நோக்கி ஒடி வந்தான் அவன் உதவியாளன் ராஜேஷ்.
தன் உதவியாளன் கொண்டு வந்த செய்தி கேட்டு அதிர்ந்து துடித்து கொண்டு எழுந்தான் அவன்.
“என்னடா சொல்லுறா?”
படபடப்பில் அவன் நெஞ்சே ஒரு நொடி நின்று விடும் போல இருந்தது.
“நிஜம் தான் சார். ஒரு பத்து நிமிஷம் தான் இருக்கும். மலைபாதை மொத்தமா அடைச்சிடுச்சி. எந்த வாகனமும் மேல போக முடியாது. ஊரே அங்க தான் கூடி நிக்குது.”
“பாஸ் இருந்த ஹோட்டல்.”
பதட்டத்தோடு அவன் அவசரமாக கேட்க,
“அதுவும் தான் மண்ணுல புதைச்சிட்டதா சொல்லுறாங்க சார்.”
தயக்கத்தோடு சொன்னவனை அதிர்ந்து பார்த்த நளன். ஒரு நொடி செய்வது அறியாது திகைத்தவன் பார்வை இப்போது, தீனதயாளனிடம் சென்றது. அவர் புராஜெக்ட் பற்றி விவரித்து கொண்டே இருந்தார். சட்டென நளன் எழுந்து நிற்க கண்டதும்,
“என்னாச்சு நளன்?”
என கேட்க,
“ஒரு நிமிஷம் சார். நீங்க பேசுங்க. நான் இப்போ வந்திடுறேன்.”
என்றவன் அடுத்து ஒரு வார்த்தை பேசாமல் பரபரப்போடே வெளியேற, கூட்டமே போகும் அவர்களை குழப்பமாக தான் பார்த்தது. அறையை தாண்டி நளன் வரவேற்பறைக்குள் நுழைந்த போதே,
கும்பல் கும்பலாக அத்தனை பேரும் இதையே பேசி கொண்டிருந்தனர். ஒரு நொடி என்ன செய்வது என தெரியாமல் உறைந்து போய் நின்றான்.
“முதல்ல விசயத்தை பெரிய முதலாளி காதுல போட்டு விடலாம் சார். இப்போ அவரால மட்டும் தான் அவர் மகனை பத்திரமா மீட்டெடுக்க முடியும்.”
உதவியாளன் சமயத்துக்கு சரியான யோசனை சொல்ல…
அதிர்ந்து நின்றவன் கண நேரத்தில் தன்னை மீட்டெடுத்து கொண்டு, தன் பாக்கெட்டில் இருந்த செல்லை எடுத்து அவசரம் அவசரமாக முகுந்தன் அப்பா சக்கரவர்த்தியின் நம்பருக்கு அடித்தான்.எதிர்முனை உடனே உயிர் பெற்றது.
விபரத்தை சொல்லும் போதே எதிர்முனை அதிர்ந்திருக்க வேண்டும். சிறிது நேர மெளனம், பின்
என்னடா சொல்லுறீங்க?… நீங்க… நீங்க எதுக்குடா இப்போ அங்க போனீங்க…
குரல் உடைய சொன்னவர், அமைதியாகி போன நளனிடம் எதுவும் சொல்ல முடியாமல்,
முதல்ல ஸ்பாட்டுக்கு போ. பார்த்து விபரம் சொல்லு.
நான் உடனே கிளம்பி வரேன்.
என்றதும் அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தான் நளன்.
மலையே பெயர்ந்து நகர்ந்து அந்த இடத்தையே நிலை குலைய செய்திருந்தது. இரவு முழுதும் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் போல் எப்பக்கமும் நீர் பாய்ந்தோடி கொண்டிருந்தது. மொத்த கட்டிடமும் இடிந்து அதனுடைய அட்ரஸையே தொலைத்து நின்றது.
கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை எந்த கட்டிடமும் முழுதாய் தெரியவில்லை. நேற்று வரை கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிந்த மலையழகு இன்று கலையிழந்த மண்மேடாக தெரிந்தது. ஒரே நொடியில் மொத்தமாய் மாறி போய் இருந்த இடத்தை பார்த்தான். நொடியில் கண்ணீர் கட்டிவிட்டது. இந்த இடத்தில் எப்படி தன் தோழனை தேடுவான். ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன் மட்டும் இந்த மண்சரிவு ஏற்பட்டால் அவனும் இதில் மாட்டி கொள்ள நேர்ந்திருக்கும். நினைவே இதயத்துக்குள் பேயாட்டம் ஆட பயத்தோடு அந்த இடத்தை பார்த்தான்.
இவன் அங்கு வந்து சேரும் முன் போலீஸ் படையே குவிந்து விட்டது. மீட்பு பணிக்கு என யாரும் வந்து சேரா விட்டாலும் உள்ளூர் மக்கள் தங்களால் ஆன உதவியை செய்ய தொடங்கியிருந்தனர். நளனும் அவர்களோடு இணைந்து கொண்டான். பாதிக்கப்பட்ட மக்களின் அபயகுரல் அந்த இடத்தையே நிரப்பி இருந்தது. தன் உறவுகளை, உறவினர்களை இடிபாடுகளுக்கு நடுவில் விட்டவர்கள் பலர் அரற்றி கொண்டே நின்றனர். பேர் இரைச்சல், அது மழை வெள்ளத்தால் உண்டான இரைச்சல். எங்கும் வெள்ளகாடு தான். இதில் உயிரோடு அவனை மீட்க முடியுமா என்ற பயம் நளனுக்குள் வந்து விட்டது. ஆனாலும் தன் நண்பனை தேடி தன் உயிரையும் பணயம் வைத்து அந்த கூட்டத்தோடு மலையேற தொடங்கி விட்டான்.
பாதை எல்லாம் பெயர்ந்து முன்னோக்கி செல்ல முடியாத அளவு மரங்கள் விழுந்து இடிபாடுகளின் நடுவில் நகர முடியாமல் பல பல குறுக்கீடுகள். ஆனாலும் நளன் நண்பனை காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற துடிப்பில் முன்னோக்கி நகர்ந்தான்.
அவன் எங்கும் நிற்கவில்லை. குத்து மதிப்பாய் முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டல் இருந்த பகுதியை நோக்கியே நகர்ந்தான். ஆனால் அது அவ்வளவு லகுவாக இல்லை. நகர்ந்து வந்த பாறைகளும் காட்டாற்று வெள்ளமும் அவனை நகர விடாமல் பல இடங்களில் தடுத்து நிறுத்தியது.
சிறிது நேரத்திலே மீட்பு படை உள்ளே இறங்கி விட்டது. கூடவே தேசிய மீட்பு படை கிளம்பி வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியும் வந்து விட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பணிகளை முடுக்கி விட்டு கொண்டு நின்றிருந்தார். காவல்படையினர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அப்படி வந்தவர்களில் பலர் பிணமாக வந்தது தான் கொடுமை. அப்படியான நேரங்களில் எல்லாம் நளன் பயத்தில் உறைந்து போனான். அன்றைய நாள் முழுவதும் மீட்பு படையினரோடு அவன் நடத்திய தேடுதல் வேட்டையில் அவன் தன் தோழனை கண்டுபிடிக்க முடியாமல் தான் திரும்பி வந்திருந்தான்.
அவன் நண்பன் இல்லாமல் திரும்பி வந்த செய்தி கேட்டு கோயம்புத்தூரில் முகுந்தன் வீடே அழுகையில் நிறைந்தது. ஒத்த மகனை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் நீலவேணி தலையில் அடித்து கொண்டு கதற ஆரம்பித்து விட்டாள். மகனுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என சக்கரவர்த்தி உயர்மட்ட ஆட்களிடம் விடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
ரங்கராஜனும் தன் பக்கம் உதவிக்கு சில ஆட்களை அழைத்து கொண்டு செல்ல, சிலரை போனிலே பேசி அழைத்துக் கொண்டிருந்தார்.
சும்மா அழுதுட்டிருக்காதம்மா. தம்பிக்கு எதுவும் ஆகியிருக்காது. நளன் தான் கண்டுபிடிச்சிடுவேன்னு சொல்லுறான் இல்ல. அவன் கண்டுபிடிச்சி தம்பியை கூட்டிட்டு வந்திடுவான்.
சொன்ன மகளை திரும்பி பார்த்த வேணி,
முழுசா ஆறு மணி நேரம் முடிஞ்சிடுச்சி. அவன் இருந்த இடத்தையே கண்டுபிடிக்க முடியலணு சொல்லுறப்ப. அந்த இடிபாடுகளுக்க நடுவுல என் மகன் என்ன பாடு படுறானோ…
நீலவேணி மறுபடியும் குரல் எடுத்து அழ, அவளை சமாதானப்படுத்தும் நிலையில் இல்லாத சக்கரவர்த்தி போனில் யார் யாரிடம் எல்லாமோ பேசிக் கொண்டிருந்தார். மகனின் அவஸ்தையை பார்த்தவாறே நின்று கொண்டிருந்த ரங்கராஜன், மகன் அருகில் வந்து,
போதும்டா. எத்தனை பேருக்கு தான் பைத்தியம் போல அடிப்பா . இப்படியே எவனையோ நம்பிட்டு இருக்கிறதுக்கு
நாம நேரே கேரளாவுக்கு போறது தான் சரி.
இவன் … இவன் ஏன்ப்பா அங்க போனான்.
என்ற மகனிடம் வெடித்து கொண்டு வந்த அவன் தாய், தூணில் தலை சாய்த்திருந்த நீலவேணியை காட்டி குற்றம் சாட்டும் விதமாக,
எல்லாம் இவளால தான். இவளால தாண்டா. இவளாலே தான்.
என்றதும் நீலவேணி மாமியார்காரியை அதிர்வோடு பார்க்க,
அப்பவே படிச்சி படிச்சி சொன்னேன். இவா கேட்டாளா? அவனை வற்புறுத்த வேணாம். அவனே வந்து சொல்லுவான். அதுக்கு ஒரு காலம் வரும். கொஞ்சம் பொறுணு. இவா கேட்டாளா?
என்றவளை அழுகையோடு ஏறிட்டவள்,
என்ன அத்தை சொல்லுறீங்க. நான் என் பையனை மணக்கோலத்துல பார்க்க ஆசைப்பட்டது தப்பா.
தப்புணு யாரு சொன்னா? அதான் இப்ப வேணாம்மாணு அவன் அழுத்தி சொன்னால்ல. விட்டுவிட வேண்டியது தானே. நீ அவனை பிளாக்மெயில் பண்ணுனா. அவன் வீட்டுல இருந்தா தானே தொண தொணத்துட்டு இருப்பீங்கணு கிளம்பி போனான். போனவன் அங்கேயா போய் தொலைய வேணும். கடவுளே என் பேரனுக்கு எதுவுமாகாம கொண்டு வந்து கொடுத்திடுய்யா…
காந்தாரி கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் வடிய, நீலவேணிக்கு அன்றைய காலை பொழுது நியாபகத்தில் வந்து கண்ணை கரித்தது.
முகுந்தன் அவருக்கு ஒரே மகன். மகள் பிரபாவுக்கு மணம் முடித்து ஆறுவருடம் ஆகிறது. அதிலிருந்தே அவரும் மகனை நச்சரித்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவன் வரும் போதெல்லாம் நழுவுகிற மீனாகவே இருந்தால் அவரும் என்ன செய்வார்.. இந்த முறை எப்படியும் பேசிவிட வேண்டும் என்று கொஞ்சம் அழுத்தி தான் சொன்னாள். முறைபடி பொண்ணு பார்க்க கூட்டி வந்து விடுவேன் என்று அண்ணனிடம் சொல்லி இருந்ததால் கொஞ்சம் கூடவே வற்புறுத்தினாள் தான். அதற்காக சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியா போவான்.
போய் விட்டான் என தெரிந்ததும் மும்பைக்கு தான் கிளம்பி விட்டான் என்று தான் நினைத்தார். ஆனால் இப்படி போய் மலை சரிவில் மாட்டி கொள்வான் என்று அவள் நினைக்கவில்லை. தன்னால் தான் தன் மகனுக்கு இந்த நிலையோ என அவள் குமுறி குமுறி அழ,
அதே நேரம்,
ரங்கராஜனின் போன் குரல் கொடுத்தது. செல்லில் சங்கீதாவின் புருஷன் மதியழகன் IPS என தெரிந்ததும் பரபரப்போடு எடுத்தவர்.
“என்னாச்சு மதி. முகுந்த் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிட்டீங்களா?”
“இல்ல சார். மழை கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுக்கல. விடாம பேய் மழை இருக்கிறதால பெரிசா மீட்பு படையால முன்னேற முடியல. ஆனா கவலைப்படாதுங்க. அந்த ஹோட்டல் இருந்த இடத்தை நோக்கி ஒரு தனி படையே போயிருக்கு. கூடவே நளனும் போயிருக்கான். நானும் கிளம்புறேன். கூடிய சீக்கிரத்துல நல்ல செய்தி வரும். நீங்க யாரும் பயப்பட வேணாம். எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்.”
என்றதும் திருப்தியானவர்
“உன்னை தான் நம்பி இருக்கோம் மதி. என் பேரனுக்கு எதுவும் ஆகிட கூடாது. எவ்வளவு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. நிறைய ஆளை உள்ளால அனுப்பி சீக்கிரமா என் பேரன் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிடுங்க. நாங்க உடனே புறப்பட்டு வரோம்.”
“ஒ.கே சார்.”
என்றதும், அடுத்த நொடி போனை அவர் வைக்க. எல்லா கண்களும் அவர் மேலே தான் இருந்தது.
தயக்கத்தோடு,
“இன்னும் இல்லயாம். விடாம மழை இருக்கிறதால முன்னேற முடியலியாம்.”
“ஐயோ… ஐயோ… எல்லாம்… எல்லாம் என்னால தான்.”
என தன் தலையிலே அடித்த நீலவேணி,
“நான் மட்டும் பொண்ணு பார்க்க வற்புறுத்தலணா அவன் இந்நேரம் நம்ம வீட்டுல இருந்திருப்பான். மூணு நாள் வீட்டுல சந்தோஷமா இருக்க வந்த புள்ளையை இப்படி அநியாயமா ஒட வச்சி இப்போ நிலசரிவுல மாட்ட வச்சிட்டேனே.”
வலி தாங்க முடியாமல் கதறிய மருமகளை பார்த்து கோபத்தோடு முறைத்த கந்தாரி,
“செய்தது அம்புட்டையும் செய்துட்டு இப்படி நீலி கண்ணீர் வடிச்சா எல்லாம் சரியா போச்சா. என் மகன் எவ்வளவு படிச்சி படிச்சி சொன்னான். நீ கேட்டியா? இப்போ கட்டி வச்சே ஆவேணு ஒத்த காலுல நின்னால. இப்போ என்ன ஆச்சு. அவனுக்கு தான் கல்யாணத்துக்கு மேல விருப்பம் இல்லயே விடுணு சொன்னதுக்கு கேட்டியா? நீ பாத்து வச்சிருக்கிற பொண்ணை அவன் கட்டி தான் ஆகணும்னு நின்னா இல்ல. அதுக்கு பயந்து அவன் ஒடி ஒளிய அந்த வய நாட்டுக்கு போனான். இப்போ மலை சரிவுல மாட்டிக்கிட்டான். அவனுக்கு ஏதாவது ஆச்சு உன்னை சும்மா விட மாட்டேன்.”
நீலவேணியின் மாமியார்காரி பொரிந்து தள்ள,
படபடப்போடு போனில் யாரோடோ பேசி கொண்டிருந்த சக்கரவர்த்தி சட்டென திரும்பி,
“என்னம்மா… நீ வேற. அவளே அவளால தான் மகன் இப்படி ஒரு ஆபத்துல மாட்டிகிட்டானு குற்ற உணர்வுல இருக்கிறா இந்த நேரம் நீயும் இப்படி பேசுறா?”
என்ற மகனை சுட்டெறிக்கும் பார்வை பார்த்த காந்தாரி.
“உண்மையை தானே பேசுறேன். மும்பையில இருந்து வந்த அவனை ஒரு நாள் நிம்மதியா இருக்க விட்டாளா இவா? அவளோட அண்ணன் பொண்ணை இந்த வீட்டுக்கு மருமகளாக்கிடணும் என்கிற ஆசையில அவனை நச்சரிக்க போய் தானே அவன் சொல்லாம கொள்ளாம இங்க இருந்து கிளம்பி போனான். இவா மட்டும் வந்த புள்ளைக்கு வகை வகையா சமைச்சி போட்டிருந்தா அவன் ஏன் ஒடி போக போறான். இப்போ குய்யோ முய்யோணு ஒப்பாரி வச்சா எல்லாம் மாறிடுமா?”
என்றதும் நீலவேணி அழுகையினூடே,
“நான் இப்படி நடக்கும்ணு என்னத்த கண்டேன். வரும் போதெல்லாம் ஏதாவது சாக்கு போக்கு சொல்லுறானேனு கொஞ்சம் அழுத்தி சொன்னேன். அதுக்கு போய் கோவிச்சிட்டு வீட்டை விட்டு போவானு எனக்கென்ன தெரியும்.”
“தெரியணும்டீ தெரியணும். மகனை பற்றி உனக்கு தெரியாம. அவன் தான் ஒரு வருஷம் டைம் கேட்டானே. நீ கொடுத்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?”
“ஆமா… ஆமா… எல்லாம் என்னால தான்.”
மறுபடியும் நீலவேணி தன் தலையில் அடித்து கொண்டு கதற, மனைவியின் அழுகையை பார்க்க முடியாத சக்கரவர்த்தி,
“நீ கொஞ்சம் சும்மா இரேன்ம்மா. அவளே நொந்து போய் அழுதுட்டிருக்கா. நீயும் ஏனம்மா?”
ஆதங்கத்தோடு கேட்ட மகனை கலங்கும் கண்ணால் பார்த்த காந்தாரி.
“எனக்கு மட்டும் என்னடா ஆசையா. உன் பொண்டாட்டியை திட்டணும்னு. பயமா இருக்குடா சக்கரை. நமக்கு அவன் ஒரே வாரிசு. அவனுக்கு எதுவும் ஆகிட கூடாதுணு மனசு கிடந்து அடிச்சிக்குதுடா.”
என்றதும் முகம் முழுதும் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்த நீலவேணி.
“அவனுக்கு எதுவும் ஆகாது அத்தை. அந்த காளியம்மா என்னை நிச்சயம் கைவிட மாட்டா.”
என்றவள் மறுபடியும் குலுங்க ஆரம்பிக்க,
“இப்ப என்ன நடந்து போச்சுனு எல்லாரும் ஒப்பாரி வைக்கிறீங்க. முதல்ல அழுகையை நிறுத்துங்க. என் பேரனுக்கு எதுவும் ஆகியிருக்காது. சக்கரவர்த்தி முதல்ல நீ கிளம்புடா. நானும் வரேன்.”
ரங்கராஜன் அவசரமாக ரெடியாக,
சக்கரவர்த்தியும் எழுந்து புறப்பட தொடங்கினார்.
“நானும் வரேங்க. என் மகனுக்கு என்னாச்சோனு நினைச்சி நினைச்சி செத்திடுவேன் போல தெரியுது.”
என்ற மனைவியை ஏறிட்டு பார்த்தவர்,
“வேணாம். அங்கு இப்ப சூழல் சரியா இருக்காது. நானும் அப்பாவும் போறோம் இல்ல. நம்ம சங்கீதா புருஷன் கூட இப்போ அங்க தான் இருக்கான். அவன் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லியிருக்கான். அவன் மேலதிகாரிகளுட்ட பேசி தனி படையே அமைச்சிருக்கான். நளனும் கூட இருக்கான். இன்று நைட்டுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்ணு நம்பிக்கை கொடுத்திருக்காங்க. நான் எப்படியாவது மகனை கண்டுபிடித்து கூட்டிட்டு தான் வருவான்.”
என்றவர் சட்டையை மாட்டி கொண்டே வெளிவர, ரங்கராஜனும் ரெடியாக நின்றார். அடுத்த நொடியே அங்கிருந்து புறப்பட்டவர்கள் நேரே வந்தது வயநாடு மலை பகுதிக்கு தான்.
அவர்கள் வந்து சேரும் போது மீட்பு படையினர் மிக சுறுசுறுப்போடு பணி செய்து கொண்டிருப்பதை பார்த்தனர். பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தான் இருவரையும் அழைத்து கொண்டு போலீஸ் முகாம் அமைத்திருந்த இடத்திற்கு கூட்டி சென்று, விபரங்களை சொன்னான்.
சக்கரவர்த்தி சொன்னது போல கோடீஸ்வரர் சக்கரவர்த்தியின் மகனை தேட தனி டீமே உள் இறங்கி இருந்தது. ஆனாலும் அன்றைய நாள் பகல் போய் இரவு வந்தும் அவர்களால் முகுந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. சக்கரவர்த்தி தன் செல்வாக்கை பயன்படுத்தி நிறைய உள்ளூர் மனிதர்களை உள்ளே அனுப்பி தேட வைத்தார். ஆனாலும் அவருக்கு எந்த நல்ல செய்தியும் வரவில்லை. அதற்கு பதிலாக பிண குவியல் தான் மலைமேல் இருந்து கீழே வந்து கொண்டிருந்தது. நேரம் ஆக ஆக… அவருள் பயம் மூண்டெழ தொடங்கியது.
அதே நேரம்,
அந்த குறுகிய மேஜையின் அடிபகுதியில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருந்தனர் முகுந்தனும் ஓவியாவும், இப்போது மட்டும் மண்குவியல் நகர்ந்து அவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இருவருமே மூச்சு முட்டி மரணித்திருப்பார்கள். நல்ல வேளை பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் ஒரு பக்க குவியல் நகர்ந்து வழிவிட மிக மிக சிரமப்பட்டு இருவரும் நகர்ந்து வெளியே வந்தனர். முதலில் வந்த முகுந்தன் பின்னால் வந்தவளுக்கு கை கொடுக்க, பெண்ணவளுக்கு ஒரு தவிப்பு, தயங்கியவளை பார்த்து முறைத்தவன்,
பின் நீட்டிய கையை மடக்கி கொண்டு நகர்ந்து விட, அந்த சிறு பகுதி வழியே ஊர்ந்து வந்தவளுக்கு அதற்கு மேல் நகர முடியவில்லை. அவளும் எவ்வளவோ முயன்று பார்த்தாள். ஆனால் வெளிவர முடியவில்லை. மெல்லமாய் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
திரும்பியவாறு பிடறியை வருடியவாறு நின்றிருந்தான் அவன்.
திரும்ப மாட்டானா?
ஒரு நொடி நினைத்தவள்,
பைத்தியம். பயத்துல அவன் மார்புல அவ்வளவு தூரம் ஒட்டி நின்னுட்டு இப்போ வெட்கமே இல்லாம கை கொடுத்தா கற்பு போயிடும் போல சீனை போட்டா அவனுக்கும் கோபம் வர தானே செய்யும். இப்போ இந்த மலையேறுன குரங்குகை எப்படி என் பக்கம் திரும்ப செய்றது.
என யோசித்தவள், மெல்லமாய் இருமி தான் இன்னும் வெளியேறவில்லை என்பதை அவனுக்கு காட்ட முயல, அவனோ அசைந்து கொடுக்கவே இல்லை.
ஐயோ கடவுளே. திரும்ப மாட்டானா? என்னை இதில் இருந்து காப்பாற்ற மாட்டானா?
பரிதவித்த மனது. சட்டென நினைவு வந்தவள் போல…
குடம் குடமா அழணும். அப்போ இறங்கி வருவான். என்றவள் அழ தயாராக, திடீர் என்றால் அழுகை கூட வர மறுத்தது.
என்ன இது அழுகை கூட வர மாட்டேங்குது…
தவித்து போன போது பின் தலையை தடவியவாறு மெல்ல திரும்பி பார்த்தான்.
ஐயோ… பார்க்கிற நேரம் பாழாப்போன கண்ணீர் வர மாட்டேங்குதே…
எண்ணும் போதே நெருங்கி வந்தவன்,
என்ன?… இதுலயே தூங்கிடலாம்ணு முடிவு பண்ணிட்டீங்களா? நல்லது. இதுக்கு மேல ஒரு தொண தொணப்பும் இல்லாம நான் முன்னேறி போவேன். நீ இதுலயே தூங்கு.
சொல்லி விட்டு அவன் நகர போக,
ஐயோ… சார்… பிளீஸ்… எனக்கு கை வலிக்குது.
சொல்லும் போதே கை, வலியை கூட்ட, தனிமையில் விட்டு விட்டு சென்று விடுவானோ என்று பயத்தில் அவளுக்கு கண்ணீர் வந்தது.
அதை அரைக்கண்ணால் பார்த்தவன்,
பின் கழுத்தை அழுந்தி தேய்த்து தன் ஆத்திரத்தை அடக்கி கொண்டு, கோபத்தில் எங்கோ வெறித்து பார்த்தவாறு,
அவள் முன் தன் வலது கையை நீட்டினான்.
அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவள்,
என் கணிப்பு சரிதான். இந்த முசடை சரிகட்டணும்னா குடம் குடமா அழுதா போதும்.
மனதுக்குள் நினைத்து கொண்டவள் தன் வலது கரத்தை அவன் கரங்களில் கொடுத்தாள். மெல்லமாய் அந்த இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து அவரை உருவி எடுத்தான் முகுந்தன். வந்த வேகத்தில் அவள் நிலை தடுமாற, இப்போதும் அவன் மார்பிலே விழுந்தாள்.
ஒரு கணம் நான்கு கண்களும் நங்கூரம் பாய்ச்சி கொண்டன. இப்போது அவன் உதட்டு பகுதியில் ஒரு ஏளனமான நகைப்பு தெரிய, மெல்லமாய் அவனில் இருந்து எழுந்தவளுக்கு இன்னுமே உடம்பே ஆடியது. மெல்ல வந்து சேர்ந்திருந்த இடத்தை பார்த்தாள்.
நகர்ந்து அவர்கள் வெளிவந்த இடத்தில் சுவர் மொத்தமாக உடையாமல் கூரையை தாங்கி நின்று கொஞ்சம் இடத்தை இவர்களுக்காக கொடுத்து நிற்க, பிடித்து வைத்திருந்த மூச்சை ஆசுவாசமாய் வெளிவிட்டாள். பெண்ணவளின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. வாழ்வா? சாவா? என்று கூட தெரியாமல் ஒரு இருட்டுக்குள் மூச்சடைத்து கிடந்த அவளுக்கு இந்த குறுகிய இடம் கிடைத்ததும் ஏதோ ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான் அவளின் முகத்தில் புது பொலிவை தந்திருந்தது.
புரியாமல் அவளை பார்த்தான். அந்த கண்கள் கக்கிய மொழி புரிந்ததும்,
“ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத. இரவா? பகலா? என்று கூட தெரியாத இந்த இடம் ஒண்ணும் பத்திரமான இடமா எனக்கு தெரியல. இதுல இருந்து தப்பி போகும் வழியும் புலப்படல. என்ன ?… கொஞ்சம் சுவாசிக்க முடியுது அவ்வளவு தான்.”
என்றதும் மூச்சை படுவேகமாக விட்டவள்,
‘முடியுதுல. அந்த இடத்தை விட இது சேப்டி தானே.”
என்றவாறு இமையை நொடி பொழுது சிமிட்டினாள்.
“ம்… அது என்னவோ உண்மை தான்.”
என்றவன் சுற்றி பார்வையை சுழல விட்டான்.
அவளோ சோர்ந்து போய் பக்கத்து சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். என்னவோ இந்த இடம் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. வெளியில் பேர் இரைச்சலோடு மழை அடிப்பது கேட்டது. முழுதாய் ஒரு பகலும் ஒரு இரவும் அந்த குறுகிய இடத்தில் இருந்து மூச்சு கூட விடாமல் சிரமப்பட்டதால் உண்டான அதிர்வும், பசியும், குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத அவலமும் சேர்ந்து ஒவியாவை சோர்வுற வைத்து விட, அப்படியே அந்த சுவரில் தலை சாய்த்து கண்மூடி கொண்டாள்.
அந்த நேரம்,
சரியாக முகுந்தனின் கண்கள் அதை கவனித்தது.
இவர்கள் அந்த மேஜையின் அடியில் இருந்து நகர்ந்து வந்த நேரம் மேலே இருந்த ஒரு காங்கிரீட் துண்டை சுமந்து நின்ற தூண் மெல்லமாய் நகர்ந்திருக்க, இதுவரை அது தாங்கி கொண்டு இருந்த அந்த காங்கிரீட் துண்டை இப்போது கீழே நழுவ விட ஆரம்பித்திருந்தது.
அந்த காங்கிரீட் துண்டையும், அது விழும் பகுதியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஓவியாவையும் பார்த்தான். ஒரு நொடி தான்.
அவன் பதறியடித்து கொண்டு ஒடி வந்த போது, அது பிடிமானம் இல்லாமல் கீழ்நோக்கி அதிவேகமாக வந்தது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel