வணக்கம் வாசகர்களே!
அவள் கையில் இருக்கும் கடிதத்தை அனுப்பியது யார்? ஏன் அவள் இப்படி அதிர்ந்து போய் நிற்கிறாள். தெரிஞ்சிக்க 6வது அத்தியாயத்தை வாசிங்க.
அவள் கையில் இருக்கும் கடிதத்தை அனுப்பியது யார்?
சக்கரவர்த்தி எண்டர்பிரைஸஸ்
இந்த முகவரியை கண்டதுமே ஓவியாவின் முகம் வியப்பில் விரிந்தது. சரசரவென மேல் உறையை கிளித்தாள். உள்ளே இருந்து ஒரு வெள்ளை காகிதம் சிரித்தது.
அதை பிரித்தவள் வாய் பெரிதாக விரிந்தது.
வியப்பு மேலிட வாய் பிளந்து நின்ற மகளை பார்த்த எழிலரசி துடைப்பத்தை கீழே போட்டு விட்டு மகள் அருகில் வர அவளுடன் ஓவியாவின் தங்கை மல்லிகாவும் வந்தாள்.
“ அப்படி என்ன செய்தி சொல்லுது காகிதம். இப்படி வாயடைச்சி போய் நிக்குறா?”
என்ற தாயின் நையாண்டி கூட அவள் செவிப்பறையை எட்டவில்லை. இப்போதும் உறை நிலையிலே நிற்க,
எழிலரசி மகள் கையில் இருந்த காகிதத்தை வாங்கி மல்லிகாவிடம் கொடுத்தாள். அதை வாங்கி படித்து பார்த்த மல்லிகாவின் முகமும் விரிய விசயம் தெரியாமலே எழிலரசியின் முகமும் விரிந்தது.
“என்னடி எல்லாரும் இந்த அளவு சந்தோஷப்படுறது போல அப்படி என்ன தான் செய்தி வந்திருக்கு.”
“அம்மா… அக்காளுக்கு வேலை கிடைச்சிருக்கு. அதுவும் பெரிய கம்பெனியில. மாசம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம்.”
என்றதும் எழில் மயங்கி விழாத குறையாக தள்ளாட,
அவளை பிடித்து நிறுத்தியவள்.
“அக்கா ரொம்ப கொடுத்து வைச்சவா. அதான் இப்படி ஒரு கம்பெனியில இருந்து வாய்ப்பு வந்திருக்கு.”
“என்ன ஒரு லட்சமா?”
“ஆமாம்மா. அதுவும் இந்தியாவுல விரல் விட்டு எண்ண கூடிய பெரிய கம்பெனியில இதுவும் ஒண்ணு. இங்கயிருந்து அக்காவுக்கு எப்படி?”
குழப்பமாக சொன்ன மகளின் முதுகில் செல்ல அடி ஒன்றை வைத்தவள்,
“அப்பா அந்த நாராயணனை போய் பார்த்தார்ல்ல. அவர் தான் பெரிய மனசு பண்ணி இந்த வேலையை வாங்கி கொடுத்திருப்பாரு. முதல்ல விசயத்தை அப்பாவுக்கு சொல்லுவோம்.”
என தாயும் தங்கையும் குதூகலத்தோடு உள் நுழைய, எதுவும் பேசாமல் அந்த காகிதத்தையே பார்த்தாள் ஓவியா. அப்படியே கண்கள் அந்த காகிதத்தின் அடிபகுதிக்கு வந்தது. அதில் முகுந்த் என கையொப்பம் இடப்பட்டிருந்தது. அதை ஒரு விரலால் வருடியவள் மனதில் அப்படி ஒரு குதூகலம். முகுந்த் கம்பெனியில் தனக்கு வேலை. அப்படி என்றால் நான் தினமும் அவரை பார்க்க போறேனா? அவருடன் பேச போறேனா? அவருடன் பழகப்போறேனா? நினைவே இனிந்தது. கூடவே மனது றெக்கை கட்டி பறந்தது. ஒரு நொடி ஆளே இல்லா காட்டில் அவனுடன் வலம் வந்து விட்டாள்.
அவளுக்கு தெரியும் இது தந்தை வழியாய் கிடைத்த வேலை இல்லை. இது முகுந்தன் தனக்காக கொடுத்த வேலை. தன்னை அவருடன் வைத்து கொள்ள கொடுக்கப்பட்ட வேலை. அப்படி என்றால் நான் மறுபடியும் அவரை சந்திக்க போறேனா? அவர் வட்டத்துக்குள் நுழைய போறேனா?
நினைவே இனம் புரியா மகிழ்வை கூட்ட காகிதத்தை தூக்கி பிடித்தவாறு ஒரு முறை தன்னை மறந்து சுற்றினாள். அப்படியே காற்றில் அந்த காகிதத்துக்கு ஆராரோ பாடியவள் அப்படியே எடுத்து தன் உதட்டால் முத்தமிட்டு கொண்டு தன் அறைக்குள் ஓடினாள். அந்த காகிதத்தோடே கட்டிலில் உருண்டு புரண்டாள். வெளியில் குரல் வராத அளவு பாடினாள். அப்படியே ஸ்பீடு வந்தவள் போல எழுந்து அறைக்குள் ஓடினாள்.
ஓவியாவால் சந்தோஷத்தை அடக்கவே முடியவில்லை. எத்தனை நாள் அவஸ்தைக்கு விடிவு. அவள் தனக்கானவனை சந்திக்க போகிறாள். அவனுடன் ஏதோ ஒரு இடத்தில் இணைய போகிறாள். போதும். இதுவே போதும்.
மனது வகை தொகை இல்லாமல் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்ற நொடி திலகாவின் வார்த்தை அவளுள் ரீங்காரமாய் ஒலித்தது.
“நீ அந்த இடிபாடுகளுக்கு நடுவுல உதவுனதுக்கு அவன் பிராயசித்தம் செய்ய விரும்புறான்.”
“அப்படினா இந்த வேலையும் ஒரு பிராயசித்தமா?”
சட்டென அந்த எண்ணம் உதிக்க, இதுவரை மலர்ந்திருந்த முகம் சட்டென இருளை பூசிக் கொண்டது.
இதுவரை முகத்தில் தெரிந்த மகிழ்வு மறைந்து கண்ணீர் மண்டியிட்டது. திலகா சொன்னது சரிதான். பணம் கேட்பேன்னு நம்பர் கொடுத்தாரு. நான் அடிக்கல என்றதும், வேலையை கொடுத்து பதில் உதவி செய்றாரு. இது தெரியாம நான் தான் ஒரு நொடி என்னை மறந்துட்டேன்.
அவள் தனக்குள் ஒரு பூட்டை போட்டு கொண்டு தளர்ந்து போய் அமர்ந்த நேரம்,
அவள் செல் குரல் கொடுத்தது. மேஜையில் இருந்த செல்லை எடுத்தவள் திலகா என கண்டதும், ஆண் செய்து காதுக்கு கொடுத்து,
“சொல்லுடி…”
என்றாள்.
“என்ன?…. உன் தங்கச்சி உனக்கு வேலை கிடைச்சிடுச்சிணு வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறா . நீ என்ன சோத்துக்கு செத்தவா போல குரல் கம்மி பேசுறா?”
“அது எல்லாம் ஒண்ணுமில்ல.”
“என்னடி? வேலை புடிக்கலியா? அதான் இப்படி இருக்கிறியா?”
“அப்படி எல்லாம் இல்ல. நான் அந்த வேலைக்கு போக வேணாம்ணு முடிவெடுத்திருக்கேன்.”
“பைத்தியமாடி உனக்கு. ஒரு லட்ச ரூபாய் வேலையில என் பொண்ணுக்கு வேலை கிடைச்சிருக்குனு உன் குடும்பமே கொண்டாடி தீர்க்குது. நீ என்னடானா அப்படி அபூர்வமா கிடைச்ச வேலைக்கு போக மாட்டேனு சொல்லுறா?”
“இல்லடி. அந்த வேலை…”
“அது எந்த வேலையாவும் இருக்கட்டும். அப்பா கஷ்டப்பட்டு ரெடிப் பண்ணியிருக்காரு. நீ போய் தான் ஆகணும். உன் குடும்பம் ஒரு மாசமா எவ்வளவு கஷ்டப்படுதுணு பாத்துட்டு தானே இருக்கா. அப்பாவுக்கு மாத்திரை கூட வாங்க முடியாம அம்மா அவங்க காத்துல கிடந்த கம்மலை கழற்றி இருக்காங்க. இந்த மாசம் எப்படியோ சமாளிச்சிட்டாங்க. அடுத்த மாசம்…”
“அதுக்கு ஏதாவது பாத்துக்கலாம்டி. கோபால் நேற்று ஒரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனான் இல்லயா? அங்க வேலை கிடைக்கும் போல தான் இருக்கு. சம்பளம் பன்னிரெண்டாயிரம். போக போக கூட்டி தரலாம்ணு சொல்லுறாங்க.”
“பன்னிரெண்டாயிரமா? நீ என்னடி லூசா. ஒரு லட்சம் சம்பளம் தருகிறேனு சொன்ன இடத்துக்கு போகாம இந்த சம்பளத்துக்கு வேலைக்கு போறேணு சொல்லுறா?”
“அந்த ஒரு லட்சம் சம்பளத்தை யார் தருகிறார்கள்னு தெரிஞ்சா நீயே போக வேணாம்ணு சொல்லுவா?”
“நான் போக வேணாம்ணு சொல்லுவேனா?”
“ம்… கண்டிப்பா போக வேணாம்ணு தான் சொல்லுவா? நான் போறேணு சொன்னாலும் நீ வேணாம்ணு சொல்லுவா? “
“அப்படி உனக்கு யார் வேலை கொடுத்தா. அப்பா பார்த்துட்டு வந்த வேலை தானே.”
“ம்கூம். இல்ல. அவர் பார்த்துட்டு வந்த வேலைனா எவ்வளவு கஷ்டம்னாலும் போகாம இருப்பேனா? இது ஒரு பணக்கார முதலாளி போட்ட பிச்சை.”
“என்னடி சொல்லுறா?”
“செய்த உதவிக்கு மறு உதவி.”
“நீ… நீ… யாரை சொல்லுறா? யாரு இவ்வளவு பெரிய உதவியை உனக்கு செய்தது. ஏய்… அந்த நெடுமரமா?”
என்றதும் சிறிது நேர அமைதிக்கு பின்.
“ ம்…ம்…”
என்றாள் வெறுமையாய்…
“அவனா இந்த வேலையை கொடுத்தது.”
“ம்…ம்…”
“அப்புறம் மல்லிகா ஏன் அப்பானு…”
“அவங்க அப்படி தான் நினைச்சிட்டிருக்காங்க…”
“நீ சொல்லலியா?”
“ம்கூம்…”
“ஏன்?”
“எப்படி சொல்லணு தெரியல. ஆனா சொல்லணும். அவங்க ரொம்ப எதிர்பார்க்கிறதுக்கு முன்னால அதுக்கு முற்று புள்ளி வைக்கணும்.”
“ஏய் அவசரப்படாதடி… வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். கொஞ்சம் பொறுமையா இரு.”
“எதுக்கு? எப்படியும் நான் போகப்போறது இல்லை. எதுக்கு அவங்க மனசுல ஆசையை வளர்க்கணும். இப்பவே அவங்க உன் வரை கொண்டு வந்துட்டாங்க. இதுக்க மேல டைம் கொடுத்தேன் எல்லாம் தப்பாகிடும்.”
“வேணாம்டி. அவங்க சந்தோஷத்தை ஒரு நொடியில அழிச்சிடாத.”
“நானும் அழிக்க கூடாதுணு தான் பாக்குறேன். ஆனா நான் அவர் மேல காட்டுன நேசத்துக்கு அவர் விலை பேசிய பின்னால அதை ஏத்துக்க என்னால முடியாது திலகா. நான் அன்று அவரோடு…”
சொல்ல முடியாமல் அவள் தடுமாற…
“ என்னடி…”
“இல்ல விடு. நான் போனை வைக்கிறேன். அப்புறம் பேசுறேன்.”

என ஓவியா வைத்து விட. அதன் பின் திலகாவால் வீட்டில் நார்மலாக இருக்க முடியவில்லை. நிலை கொள்ளாமல் தவித்தாள். பழையபடி இருந்திருந்தால் இந்நேரம் திலகா வீட்டிற்கு ஓடியிருப்பாள். இப்போது முடியாதே. கால் காயங்கள் ஆறவில்லையே. நடக்க முடியாமல் இருப்பவளால் எப்படி போக முடியும். தோழி இதுவரை இப்படி சோர்ந்து போய் பேசியது இல்லை. ஓவியா எத்தனையோ வலிகளையும், வேதனைகளையும் தாண்டி வந்தவள் தான். ஆனால் அப்போதெல்லாம் இந்த அளவு உடைந்தவள் இல்லை. எதையும் எளிதில் கடந்து விடுவாள். இன்று என்ன ஆச்சு. அப்படி அந்த மூன்று நாள் இருட்டில் என்ன நடந்தது. ஏன் இவ்வளவு உடைந்து போய் பேசுகிறாள்.
நேரம் ஆக ஆக குழப்பம் மேலிட்டதே தவிர குறையவில்லை. அந்த குழப்பமே ஒருவித ஆத்திரத்தை தர அவள் கோபம் வேறு பக்கம் செல்ல ஆரம்பித்தது. அவசரம் அவசரமாக போனை எடுத்தாள். அதில் முதல் ஆளாய் சேவாகியிருந்த நம்பருக்கு கால் செய்தாள்.
காத்திருந்தவர் போல முதல் ரிங்டோனுக்கே எதிர்முனை உயிர்ப் பெற்றது.
“ என்ன?… மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க. பணத்தை தூக்கி போட்டீங்க. வேணாம்ணு சொன்னதும் பதவியை தூக்கி போடுறீங்களா? ஏழைகள் என்ன நீங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிற பொம்மைகள்ணு நினைச்சீங்களா? உங்களால எங்களுக்கு எதுவும் வேணாம்ணு சொன்னா விடமாட்டீங்களா? அது என்ன வீட்டுக்கு அப்பாயின்மென்ட் ஆடரை அனுப்புறது. பணம் படைச்சவங்கணா அடுத்தவங்களோட உணர்ச்சியோட தான் விளையாடுவீங்களா?”
படபடவென பொரிந்து தள்ளிய திலகா மூச்சு வாங்க அமைதியானதும், மெல்ல வாய் திறந்தான் நளன். என்றாலும் கோபப்படாமல் அமைதியாக பேச வேண்டும் என்று உள்ளுக்குள் தீர்மானம் எடுத்து கொண்டான். அதனாலே குரலை தாழ்த்தி மென் குரலில்…
“என்ன பேசி முடிச்சிட்டியா? இப்போ நான் பேசலாமா? கம்பெனியில நிஜமா ஒரு வேக்கன்ஸி வந்துச்சு. அப்போ பாஸ் தான் இந்த வேலைக்கு அந்த பொண்ணு சரியா இருக்கும். வர சொல்லி லெட்டர் அனுப்புனாங்க. நான் அதை தான் செய்தேன். அவங்களுக்கு தான் வேலை போயிடுச்சே. எப்படியும் இன்னொரு வேலை தேடி தானே ஆகணும். அதுக்கு நாங்க கொடுக்க கூடிய இந்த ஆபரை வாங்கிக்கலாம் தானே.”
என்றதும் படபடவென வெடிக்கத் தொடங்கி விட்டாள்.
“இது… இது தாய்யா உங்க பிரச்சினை. ஆபர். ஆபர் போட்டு நாங்க அதுல வாழ வேணாம். எங்க தகுதிக்கான வேலையை எங்களுக்கு தேடிக்க தெரியும். நீங்க ஒண்ணும் பிச்சை போட வேணாம்.”
என்றதும் கடுப்பாகி போன நளன்,
“பிச்சை. இதுல எங்க இருந்து பிச்சை வந்தது. தகுதி இல்லாமலா பாஸ் வேலை கொடுக்க சொல்லி இருப்பாங்க. அவர் ஒருத்தங்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறதே வித்தியாசமா இருக்கும். நிச்சயம் இந்த வேலைக்கு அந்த பொண்ணு தகுதியானவானு தெரிஞ்சதால தான் பாஸ் இந்த முடிவுக்கே வந்திருக்கணும். மற்றபடி எங்க மனசுல நீ நினைக்கிறது போல எந்த எண்ணமும் இல்லை. உனக்கு என் மேல உள்ள மனஸ்தாபத்தை அவங்க மனசுல தெளிச்சி அவங்களுக்கு கிடைக்க இருக்கிற நல்ல வாய்ப்பை கெடுத்து விட்டுடாத. அவங்க வீட்டோட நிலமை என்னை விட உனக்கு நல்லா தெரியும். அவங்களோட வருமானத்துல தான் அந்த குடும்பமே இருக்குணு நீ தானே சொன்னா. அப்படி இருக்க உன் வீம்பால அதை கெடுத்து விட்டுடாத. பிளீஸ் நம்ம பஞ்சாயத்தை அப்புறமா வச்சிக்கலாம். நீ உன் பிரண்ட்க்கு நல்லது செய்ய நினைச்சா உடனே அவங்களை மெட்ராஸ் அனுப்பி வை.”
“…………….”
“என்ன மௌனமாகிட்டா. அனுப்புறா தானே.”
“ம்….ம்….”
“குட் அப்படியே எங்க மனுவையும் கொஞ்சம் பரிசீலனை பண்ணுனீங்கனா ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”
“ம்… அது நிராகரிக்கப்பட்ட மனு. அதுக்கு இதுக்க மேல முக்கியத்துவம் கொடுக்க முடியாது.”
“மலை சரிவு நடந்த அன்று காலையில ஏற்று கொள்ளப்பட்ட மனும்மா அது. நிலசரிவு ஏற்பட்ட பிறகு மறுதலிக்கிறது நியாயம் இல்ல.”
“எனக்கு நியாயமா தான் படுது. இதுக்க மேல உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.”
“ஏய்… வாங்குன முதல் முத்தத்தோட ஈரம் இன்னும் காயலடி. மனசுல பசுமையா இன்னும் இருக்கு. அப்படியிருக்க உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லணு சொல்லுறா? இது உனக்கே நியாயமா இருக்கா.”
“இருக்கு. நியாயமா தான் இருக்கு. இதுக்க மேல உங்க கூட சேர்கிற தகுதி எனக்கில்ல. தயவு செய்து இதோட இந்த பேச்சை விட்டு விடுங்க.”
“விட்டு விடுறதா. ஏய் இதுக்க பிறகு தாண்டி என் அன்பு உனக்கு பரிபூரணமா வேணும். விட்டுவிட்டு போணு சொல்லுறா?”
“அதான் வேணாம்ணு சொல்லுறேன்ல்ல. உங்க கரிசனை எனக்கு தேவை இல்லை. இரண்டு காலும் தானே போயிருக்கு. என்னை பாத்துக்க எனக்கு தெரியும். நீங்க உங்க வேலையை பாருங்க.”
“இனி என் வேலையே அதாண்டி. அப்புறம் என்ன சொன்னா கரிசனையா? அடப்பாவி காதலுக்கும் கரிசனைக்கும் கூட வித்தியாசம் தெரியல.”
“காதல் பொல்லாத காதல்”
“ஆமா. அது என்னவோ உண்மை தான்.பொல்லாத காதல் தான். இல்லனா உன்னை விட்டு பிரிஞ்சி வந்த நாளுல இருந்து இரவு தூங்க முடியாம தவிப்பேனா? தயவு காட்டுடி. உன் புருஷன் பாவம் இல்லயா?”
“புருஷனா அடி செருப்பால …”
“அடி தானே. எத்தனை வேணா கொடு. அதை என் பக்கத்துல வந்து கொடுடி வாங்கிக்கிறேன்.”
“இந்த டயலாக் பேசுறதை நிறுத்துங்க நளன் கடுப்பாகுது.”
“காலு போனதும் காதல் போச்சுணு சொல்லுறியே எனக்கு கடுப்பாகாது.”
“கடுப்பாகுதுனா போனை வைங்க. எதுக்கு கால் பண்ணி என் கோபத்தை கூட்டுறீங்க.”
“எம்மா… ஹால் பண்ணுனது நீம்மா. என் மேல பழி போடுறா?”
“ஒ… சாரி… தெரியாம பேசிட்டேன். வச்சிடுறேன்.”
“ஏய்… ஏய்… வச்சிடாதடி. எனக்கு பதில் சொல்லிட்டு வை.”
என்றதும் போன் கட்டாக…
“வச்சிட்டியா. வச்சிட்டா விட்டு விடுவோமா?
உன் பிரண்ட் வரா தானே. அவளை வச்சே உன்னை இங்க கொண்டு வந்திடுறேன். என் பக்கத்துல வந்த பிறகு எப்படி கட் பண்ணுறானு நானும் பாக்குறேன்.”
சொன்னவன் சிரித்து கொண்டே போனை பார்க்க போன் திரையில் சிரித்து கொண்டிருந்தாள் திலகா.
திலகாவை அந்த ஹோட்டலில் வைத்து தான் முதல் முதல் பார்த்தான் நளன். பார்த்த நொடியே பசை போல வந்து ஒட்டி கொண்டாள் அவன் மனதில். இரண்டு நாள் அவள் அருகில் செல்லாமல் தான் ரசித்தான். மூன்றாம் நாள் காலையில் தான் தன் காதலை அவளிடம் சொன்னான். யார் என்று தெரியாத ஒரு வாலிபனாக திலகாவுக்கு தெரியவில்லை. நெருங்கி நின்று அவன் பூங்கொத்தை நீட்டி சொன்ன ஒற்றை வார்த்தையிலே சரணடைந்து விட்டாள். காரணம் இரண்டு நாள் ஓவியா முகுந்த் மோதலில் ஓவியாவுக்காக பேசியவன் ஆயிற்றே. அவன் பேச்சிலும் நடத்தையிலும் கவரப்பட்டு அவனை ஏக்கத்தோடு பார்த்தவள் ஆயிற்றே. அதனாலே அவன் ஒற்றை பார்வையில் விழுந்து அவன் காதலில் கலந்து மென்மையாய் ஏற்று கொண்டாள்.
அவளுக்கு தான் தெரியாதே. நாம் காதலை கொடுத்த மூணே மணி நேரத்தில் நம் உலகம் தலைகீழாக மாறும் என்று. மாறிவிட்டது. அந்த நிலசரிவு அவள் உலகத்தை மாற்றி போட்டிருந்தது. காலை இழந்த நான் அந்த நிலசரிவில் மாண்டிருக்க கூடாதா என அவளும், காலை இழந்தாலும் அவள் உயிரோடு கிடைத்து விட்டாளே என அவனுமாக தான் ஹாஸ்பிட்டலில் நான்கு நாளும் கரைந்தது. அவனும் அவளுக்கு எவ்வளவோ உதவி செய்ய நெருங்கி வந்தான் தான். கால்களை இழந்த அவள் அவனை நெருங்க விடவில்லை. என்றாலும் முகுந்த்தை பார்க்க வந்த டாக்டரை அழைத்து வந்து இவளுக்கும் ட்ரீட்மென்ட் கொடுக்க வைத்தான். ஆனாலும் கால்கள் இரண்டையும் காப்பாற்ற முடியாது என்பது அப்போதே அவனுக்கு தெரிந்து போனது.
ஆனாலும் உண்மையாய் நேசித்த அவனால் அவளை விட முடியவில்லை. அவளால் இப்படி அவனுக்கு தன்னை கொடுக்க முடியவில்லை. இந்த போராட்டத்தில் இருந்ததால் தான் திலகா ஓவியாவிடம் அப்படி எல்லாம் பேசியது. அவளுக்கு இவர்கள் செய்யும் உதவி மனிதாபிமானத்தால் என்று தெரியும். காலை இழந்த அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. கூடவே இவனை கழற்றி விட வேண்டும் என்ற எண்ணம். அவனுக்கு தான் தகுதியில்லை என்ற மனபாக்கு. இதுதான் ஓவியாவிடம் அப்படி எல்லாம் பேச வைத்தது.
ஆனால் இன்று வரை ஓவியாவுக்கு தன் தோழிக்கு இரண்டு காலும் போய்விட்டது என்று தெரியாது. காலில் அடிப்பட்டிருக்கிறது. நடக்க முடியாது என்று தான் தெரியும். தெரிந்தால் தாங்கி கொள்ள மாட்டாள் என்று தான் யாருமே இதுவரை அவளிடம் சொல்லவில்லை. காரணம் ஓவியா திலகாவின் நட்பு அப்படியானது. சின்ன வயது முதல் ஒன்றாக படித்தவர்கள். பள்ளி வாழ்வில் தொடங்கி இன்று வரை நட்போடே இருப்பவர்கள். இருவர் வாழ்விலும் ஒளிவு மறைவு என்பதே இல்லை. இந்த காதலை கூட அன்று மாலை பணி முடிந்து வீடு திரும்பி இருந்தால் அவள் சொல்லி இருப்பாள். ஆனால் விதி அவளுக்கு சொல்ல விடவில்லை. அது போல சூழல் சரியாக அமைந்திருந்தால் ஓவியா கூட தன் மனதை அவளிடம் கொட்டி இருப்பாள்.
ஆனால் கிடைக்காத… நடக்கவே நடக்காத ஒன்றை பற்றி பேசி என்ன? என்று தான் இருவருமே தங்களுக்குள் சொல்லி கொள்ளவில்லை. என்ன தான் நளன் மேல் திலகாவுக்கு கோபம் இருந்தாலும் இந்த விசயத்தில் நளன் சொல்வது தான் சரி என்று தோன்றியது. ஓவியா தலைகீழ் நின்றாலும் இப்படி ஒரு வேலை அவளுக்கு கிடைக்காது என்பது அவளுக்கு தெரியும். ஒருவேளை நளன் சொல்வது போல ஓவியாவின் ஏதோ ஒரு செயல் இந்த வேலைக்கு சரியானதாய் இருக்கும் என்பதை உணர்ந்து அவன் முதலாளி இந்த வேலையை ஓவியாவிற்கு கொடுத்து இருக்கலாமே. நாம் ஏன் தவறாக நினைக்க வேண்டும். அவள் வேலை செய்து கொடுக்க போகிறாள். அவர்கள் அதற்கான சம்பளத்தை கொடுக்க போகிறார்கள். இதில் நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்.
இந்த தெளிவு வந்த நொடியே ஓவியாவுக்கு தான் அடித்தாள். ஆனால் இவள் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஓவியா இறங்கி வரவில்லை. இவள் நினைப்பது போல் அவள் இல்லையே. அவள் மனதுள் காதல் ஏறி அமர்ந்து விட்டதே. இந்த எண்ணத்தோடு அங்கு போவது சரியில்லை என்பது அவள் எண்ணம். ஒரு வாரம். ஒரு வாரமாக அவளையும் சரிகட்ட குடும்பம், தோழி, தெரிந்தவர் தெரியாதவர் என எல்லாரும் போராட தான் செய்கிறார்கள். ஆனால் இவள் கிளம்ப தயாராய் இல்லை.
அன்றும் வேலை தேடி களைத்து வீட்டிற்குள் நுழைந்த ஓவியாவின் முன் வந்து பத்திரகாளியாய் நின்றாள் மல்லிகா.
“ மனசுல என்ன நினைச்சிட்டிருக்கா. அப்பா எவ்வளவு கெஞ்சி கேட்டா அந்த நாராயணன் இப்படி ஒரு வேலையை ஏற்பாடு பண்ணி கொடுத்திருப்பாரு. நீயும் தெரு தெருவா அலைஞ்சியே. ஒருத்தன் மதிச்சானா? எவனாவது பழைய சம்பளத்தோட வேலை தரேணாவது சொல்லியிருப்பானா? இந்த லட்சணத்துல கஷ்டப்படாம கிடைச்ச வேலை கசக்குதா? உன் திமிரை காட்டாம பேசாம கிளம்பி போற வழியை பாரு.”
என்ற மல்லிகாவை முறைத்து கொண்டு ஓவியா அறைக்குள் செல்ல… கலங்கும் கண்ணோடு போகும் மகளை பார்த்தவாறே,
“ இப்படியே பிடிவாதம் பிடிச்சிட்டு இருந்தா. அப்புறம் எதுவும் செய்ய முடியாது. அடுத்த வாரத்துல இருந்து பழையபடி இரண்டு வேளை கூட சாப்பிட முடியாம தான் போக போகுது. உன்னை நம்பி கடைசி தங்கச்சியை வேற காலேஜ்ல்ல கொண்டு சேர்த்துட்டேன். இனி அவளுக்கு என்ன பண்ணுறதுணு தெரியல. உன் சந்தோஷம் தான் பெரிசுணு இரு. எல்லாரும் பட்டினியோடவே சாகிறோம்.”
எழிலரசி தன் ஆதங்கத்தை கொட்டியவாறு கண் கலங்க, அது எதுவும் என்னை பாதிக்காது என்பது போல் அமைதியாகவே உள்நுழைந்து விட்டாள் ஓவியா.
மகளின் அலட்சியம் வலியை கூட்ட, குரல் எடுத்து அழ தயாரான மனைவியிடம் வந்த அரிசந்திரன்.
“விடு எழிலு. அவளுக்கு விருப்பம் இல்லனா விடு. கையாலாகாத அப்பன் ஆகிட்டேன்ல்ல. இதுக்க மேல நம்ம பேச்சை எல்லாம் கேட்பாங்களா? நீ டென்ஸனாகாத . நான் செத்து ஒண்ணும் போகலலியா. ஏதாவது வேலைக்கு நான் கேட்டுட்டு போறேன். மகாராணி அப்படியே இருக்கட்டும்.”
என்றதும் ஆத்திரம் வந்தவள் போல தன் அறையில் இருந்து ஓடி வந்த ஓவியா.
“யாரும் வேலைக்கு போக வேணாம். நான் என்ன வேலைக்கு எதுவும் போக மாட்டேன் தெண்டமா இருப்பேனா சொல்லுறேன். கோபாலு எனக்கு வேலை ரெடி பண்ணிட்டான். அடுத்த வாரத்துல இருந்து போக தான் போறேன். என்ன சம்பளம் கொஞ்சம் குறைவு. சீக்கிரத்துல கூட்டி தருகிறதா சொல்லி இருக்காங்க. அப்படியும் உங்களுக்கு பணம் பத்தலனா நைட் வந்து டியூசன் எடுத்தாவது உங்களுக்கு காசு கொடுக்கிறேன். ஆனா அந்த வேலைக்கு மட்டும் என்னை போக சொல்லாதுங்க.”
இதுவரை அடக்கி அடக்கி வைத்திருந்த குமுறல் அத்தனையும் கொட்டி விட்டு அறைக்குள் நுழைந்தவள் துப்பட்டாவை எடுத்து கொண்டு வெளியேற முயல,
அவளின் பேச்சில் அதிர்ந்து போய் இருந்தவர்கள், அவள் கோபத்தில் வெளியேற முயன்றதும் கலவரமாகி,
மல்லிகாவை தட்ட,
தாயின் உணர்வை புரிந்த மல்லிகாவோ…
“ஆமா இப்போ நீ எங்க கிளம்புறா?”
என்றவளை திரும்பி அனல் கக்கும் பார்வை பார்த்தவள்,
“ம்… செத்து ஒண்ணும் போக மாட்டேன். நான் திலகா வீடு வரை போயிட்டு வரேன். வீட்டுக்கு வந்தாலே நிம்மதி இல்லாம போயிருச்சி,”
என கிளம்பி விட, இங்கு ஆள் ஆளுக்கு முகத்தை பார்த்து கொண்டனர்.
“எல்லாம் என் தலைவிதி. இப்படி அடங்காத புள்ளையை தந்து அந்த ஆண்டவன் சோதிச்சிட்டான்.”
என புலம்பி கொண்டே சோற்றை வடிக்க தொடங்கினாள். பானையில் இருந்து நீர் வடிந்து அதை தூக்கி வைக்கும் போது தான் தாய்க்கு அது உறைக்கவே செய்தது. அதிர்ந்து கூடத்துக்கு வந்தவள்.
“ மல்லி… ஓவியா திலகா வீட்டுக்கு போயிருக்காடி. “
என்றதும் தான் அவளுக்குமே உறைத்தது. தாயை பயத்தோடு அவள் பார்க்க,
“அதை எப்படி மறந்தோம். நீ உடனே திலகாவுக்கு போன் அடிச்சி சொல்லு. அவா இவளை வீட்டுக்கு விட கூடாதுணு சொல்லி இருந்தாளே. நாம மறந்துட்டோமே…”
தாய் பதட்டமாகி சொன்னதும் அவசரமாக செல்லை எடுத்து விசயத்தை திலகாவுக்கு சொல்ல…
“ பக்கிங்களே எத்தனை முறை சொன்னேன். அவளை என் வீட்டுக்கு விடாதுங்கணு. இப்போ கோபப்படுத்தி அனுப்பி வச்சிட்டு சர்வசாதாரணமாவா சொல்லுறீங்க.”
வகை தொகை இல்லாமல் திட்டி தீர்த்தவள் அவசரமாக போனை கீழே வைத்த போது திண்ணையில் ஓவியாவின் குரல் கேட்டது.
பதட்டமான திலகா கட்டிலின் காலில் சாய்ந்து அமர்ந்தவாறே அவசரமாக பெட்ஷீட்டால் தன் காலை பொதிந்து மூட தன்னை வளைத்து பெட்ஷீட்டை எடுத்த போது அந்த அறைக்குள் நுழைந்து விட்டாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



