வணக்கம் வாசகர்களே!
முகுந்தன் செயலால் மனமுடையும் ஓவியா…
இதற்கு பின் அவன் நினைவே இன்றி வாழ்க்கையை தொடர நினைக்கும் என உறுதியேற்கிறாள். ஆனால் வந்த கடிதத்தால் அவளில் ஏற்படும் மாற்றம் என்ன?
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஓவியா இறுக்கத்தோடு தான் இருந்தாள். ஆனால் தன்னை அவள் முடக்கி கொள்ளவில்லை. இப்படியே இருப்பது சரியில்லை என்பது அவளுக்கும் தெரிந்து போனது. குடும்ப சூழல் ஒரு பக்கம் என்றால் திலகாவின் தேவை என அதிக பணம் தேவை இருப்பது அவளுக்கு தெரிந்தது. அதற்காகவாவது அவள் வேலை தேடி ஆக வேண்டும். அது மட்டுமல்ல அவனின் நியாபகங்களில் இருந்து தப்பிப்பதற்காக வேண்டியாவது இவள் நிற்காமல் ஒடியாக வேண்டும்.
தீர்மானித்து கொண்டவளின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. அதில் சில இடங்களில் வேலை கிடைக்காவிட்டாலும் சில இடங்களில் வேலை கிடைத்தது. ஆனால் சம்பளம் ரொம்ப குறைவாக இருந்தது.
அது நிச்சயம் தன் குடும்பத்திற்கு போதாது என்பது அவளுக்கு தெரியும். ஹோட்டல் மேனேஜ்மென்ட். இந்த கோஸை அவள் எடுத்ததே படிக்கும் போதே சம்பளம் என்பதால் தான். அந்த நிலையில் தான் அவள் குடும்பம் அன்று இருந்தது. பத்து வரை பள்ளி படிப்பு அவளுக்கு எந்த தடங்கலும் இல்லாமல் தான் சென்றது. அதற்கு காரணம் அவள் அப்பா. அரிசந்திரன் கட்டிட தொழிலாளி என்றாலும் உழைக்கும் பணத்தை மொத்தமாக மனைவியிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவார். அதனால் அந்த குடும்பம் எந்த கஷ்டமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் மூன்று வருடத்திற்கு முன் ஒரு நாள் தந்தை வேலை செய்த இடத்திலே மயங்கி விழுந்து அவரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்ற போது தான் கழுத்து பகுதியில் கேன்சர் இருப்பது தெரிந்தது. முத்திய நிலை இல்லை என்றாலும் இதுவரை சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் வீட்டையும் இழந்து தான் அவரை உயிரோடு கொண்டு வந்தனர் அவளின் குடும்பத்தினர். ஆனாலும் அதன் பிறகு அந்த தந்தையால் அந்த வீட்டிற்கு பலன் கொடுக்க முடியவில்லை. அப்போது ஓவியா பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.
படிப்பு முடிந்து CA ஜாயின் பண்ண வேணும் என்பது தான் அவள் ஆசை. அதுதான் அவள் அப்பாவின் ஆசையும் கூட. ஆனால் சூழல் மாறி படிக்க வைக்கவே முடியாத சூழல் ஏற்பட்டதும் படிக்கும் போதே சம்பளம் என்ற கல்லூரியின் விளம்பரம் பார்த்து இந்த தொழிலை தேர்ந்தெடுத்து படித்தாள். இவளின் உதவி தொகையையும் தாயின் சிறு வருமானத்தையும் வைத்து தான் அந்த இரண்டு வருடத்தையும் கடத்தினர்.
அப்போது எல்லாம் அந்த குடும்பம்பட்ட கஷ்டத்தை சொல்ல முடியாது. பல நாள் இருவேளை தான் உணவு. வருடம் ஒரு புது துணி கூட எடுக்க முடிந்தது இல்லை. வாடகை வீட்டை கூட குறைந்த விலை வாடகை வீடாக தேர்ந்து கொண்டார்கள். ஐந்து பேர் தங்க அது வசதியான வீடு இல்லா விட்டாலும் அந்த சின்ன கூட்டில் அடைந்து கொண்டார்கள். அப்படி வறுமையின் விளிம்பில் வாழ்ந்தவர்களுக்கு ஓவியாவுக்கு கிடைத்த இந்த அருமையான ஹோட்டல் வேலைக்கு பிறகே வாழ்க்கை மாற தொடங்கியது. அனைவர் மனதிலும் சிறு நிம்மதி கிடைத்தது. வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
அஷ்மோரா ஹோட்டல். அது சுற்றுலாதலத்தின் பக்கத்தில் அமைந்திருந்ததால் அங்கு பயணிகளின் கூட்டம் எப்போதும் அலைமோதி கொண்டே இருக்கும். பல நாள் அறை கேட்டு வருபவர்களுக்கு அறையை ஒதுக்கி கொடுக்க கூட முடியாத அளவு கூட்ட நெரிசல் இருக்கும். அப்படியான நேரங்களில் தங்கி கொள்ள என ஒரு பில்டிங்கை அவர்கள் ஹோட்டலுக்கு பக்கத்தில் புதிதாக கட்ட தொடங்கியிருந்தார்கள். அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சமைக்க என்று தான் முதலில் வேலைக்கு எடுத்தார்கள் ஓவியாவை. மாத சம்பளம் இருபதாயிரம் என்பது தான் பேச்சு. அப்புறம் அந்த பில்டிங் வேலை முடிந்து அங்கு பணிபுரிய ஆள் தேர்வு செய்த போது ஓவியாவுக்கும் வேலை கிடைத்தது. அந்த வேலையில் அவளுக்கு கிடைத்த சம்பளம் நாற்பதாயிரம்.
இந்த நாற்பதாயிரம் தான் ஒரு வருடமாக அந்த வீட்டை நார்மலாக வாழ வைத்திருந்தது. ஆனால் இயற்கை சீற்றம் அந்த வேலையையும் அழித்து விட்டது. இனி நிலமை சரியாகி அங்கு ஹோட்டல் அமைவது எல்லாம் லேசில் அமைந்து விட கூடியது இல்லை. அப்படி அமைந்தாலும் அதுவரை காத்திருக்க முடியாது. உடனே சம்பாதித்தாக வேண்டும் என்று தான் ஓவியா வேலை தேடவே ஆரம்பித்தாள். ஆனால் அவள் வாங்கிய சம்பளத்தில் நாலில் ஒரு பங்கை கூட தர இங்கு யாரும் முன்வராத போது சோர்ந்து போனாள்.
அந்த வேதனையோடு தான் திலகா வீட்டிற்கும் வந்தாள். வந்தவள் வந்த நொடியில் இருந்தே பேசாமல் இருக்க கண்டதும்,
தாய் கொடுத்த அவித்த கடலையை எடுத்து அவள் வாயில் திணித்தவாறு,
“என்ன கோட்டையை கட்ட யோசிக்கிறா?”
என்றவாறு கையில் மறுபடியும் கடலையை வாரி வாயில் போட்டு கொண்டாள் திலகா.
“நாம எந்த கோட்டையடி கட்ட முடியும். அன்றாட வாழ்வையே வாழ முடியல. இதுல கோட்டை கட்டி கொடியை நாட்டிட்டாலும்,”
வெறுப்பின் உச்சத்தில் உமிழ்ந்தவளை பார்க்க பாவமாக இருந்தது. வாழ்வில் எவ்வளவோ அடிகளை சந்தித்திருக்கிறாள். அப்படியும் அவளின் குழந்தை மனம் மாறியதே இல்லை. எப்போதும் குழந்தை சிரிப்பும் குதூகலமுமாய் வளைய வந்தவளை இந்த பேரிடர் எப்படி உலுக்கி போட்டு விட்டது.
மெளனமாய் அவள் கையை அழுத்தி கொடுத்தாள்.
“எல்லாம் ஒரு நாள் மாறும் ஓவியா?”
சொன்னவளை வலியோடு நிமிர்ந்து பார்த்தவள்,
“மாறுமா? மாறவா இது எல்லாம் நடந்துச்சு. இல்லடி ஆண்டவன் இல்லாதவங்களை இப்படி அடிச்சி தான் உட்கார வைப்பான் போல, நீ… நீ என்னடி பாவம் பண்ணுனா ? உன்னை ஏண்டி இப்படி உட்கார வச்சான். மனசு விட்டு போச்சுடி.”
சொல்லும் போதே கண்ணீர் வெளிப்பட,
“அசடு. இப்போ என்ன நடந்து போச்சுனு அழுறா? எல்லாம் மாறும். ஆமா வேலை கேட்டு போனியே என்னாச்சு.”
“என்ன ஆகும். எல்லாம் நாசமா போச்சு.”
“என்னடி வேலை எதுவும் கிடைக்கலியா? அந்த கோபாலு என்னால ஆச்சுனு அன்று வீரவசனம் பேசுனான். எல்லாம் பேச்சு தானா?”
“அவன் கூட்டிட்டு போன இடத்துல வேலை இருந்துச்சு திலகா ஆனா சம்பளம் தான் பெரிசா இல்லை.”
“மனசை விடாதடி. எல்லாம் நடக்கும்.”
என்றவள் சற்று நிறுத்தி, அவள் முகம் பார்த்து, மெல்லமாய்…
“நீ… நீ அந்த நெடுமரத்துட்ட பேசணும்ணு சொன்னியே பேசுனியா?”
அவள் மூடை சரி செய்ய வேண்டியே அவள் அவனை பற்றி பேச, உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்த சீற்றம் அவள் முகத்தில் நெருப்பை ஒரு நொடியில் சிந்தி விட்டது. கோபகனலில் ஜொலித்த அவள் முகத்தை புரியாமல் பார்த்த திலகா.
“என்னடி?”
பதறி போய் கேட்டவள் முகத்தை வலியோடு பார்த்தவள்,
“இனி நீ அவனை பற்றி எந்த காலத்துலயும் எனட்ட பேச கூடாது. பிளீஸ்… பிளீஸ் திலகா.”
மொத்தமாய் உருக்குலைந்து பேசும் அவளை புரியாமல் பார்த்தவள்,
“ஏய்… என்னடி ஆச்சு. இந்த அளவு சீற்றம் கொள்ள அவன் என்ன செய்தான்.”
“ம்… என்ன செய்யல அவன். அவன் பேச்சை இனி எடுக்காத திலகா. மனசு நெருப்பா கொதிக்குது. துரை அவனோட பண திமிரை எனகிட்ட காட்டுறான். நான் அவனை கண்ணுக்குள்ள வச்சி பாத்துகிட்டதுக்கு விலை பேசுறான்.”
கொதித்து போய் பேசியவளை பாவமாக பார்த்தவள்,
“நீ… நீ பேசுனியா?”
என்றாள் தயக்கமாக, அவளை வலியோடு பார்த்தவள் உடைந்த குரலில்,
“நல்ல வேளை. பேசி மூக்கு உடையாம தப்பிச்சேன். பேசி இருந்தேன். அவமானத்துலே செத்திருப்பேன். நல்ல வேளை சரசு அக்காவால அவனோட நிஜமுகம் அறிஞ்சேன். அவன் தெளிவா தான் இருந்திருக்கான். நான் தான் மனசை அலைபாய விட்டிருக்கேன். ஒரு முறை கூட பார்த்து பேசாம அவன் கிளம்பியிருக்கும் போதே எனக்கு தெரிஞ்சிருக்கணும். தெரியாம ஏதேதோ நினைச்சது என் தப்பு தான்.”
தன்னை நொந்தவளை பார்க்க பாவமாக இருந்தது.
“விடுடி. எனக்கும் அந்த எண்ணம் இருந்துச்சு. சொன்னா தாங்க மாட்டியோணு தான் நான் அது பற்றி பேசல. எனட்ட வந்துச்சு. பி. ஏனு ஒண்ணு பின்னால சுத்துமே அது தான் பணத்தோட என் முன்னால வந்து நின்னுச்சு. செமத்தியா வாங்கி கட்டிட்டு தான் போச்சு. நீங்க இருந்த இடத்தை கண்டுபிடிக்க முடியாம தவிச்ச போது நான் வழிகாட்டி அவரோட பாஸை காப்பாற்ற உதவினேனாம். அதுக்கு தான் இந்த பணம்ணு கொண்டு வந்து நீட்டுச்சு. அப்போ இருந்த கோபத்துலயும் ஆத்திரத்துலயும் பிடிச்சி கத்தி விட்டுட்டேன்.”
“ஒ!!!!… அந்த வரிசையில தான் எனக்கும் இல்ல…”
சொல்லும் போதே வார்த்தை தொண்டை குழியை அடைக்க சட்டென கண்கலங்கி போனது.
செய்த உதவிக்கு பிராயசித்தம் செய்ய நினைக்கிறாங்க. அவங்க எல்லாம் பணக்காரங்க ஒவியா . அவங்களுட்ட அன்பை எல்லாம் எதிர்பார்க்கிறது முட்டாள்தனம். எல்லாம் காசை வச்சி தான் அளந்து பார்ப்பாங்க.
உதவி. அன்று அவனுக்கு நான் செய்தது உதவி. அதுக்கு சார் பதில் உதவி செய்ய நினைக்கிறாரு. நல்லது.
சொல்லும் போதே கண் சட்டென நீரை சுரக்க, அதை திலகாவிடமிருந்து மறைக்க திரும்பி கொண்டாள்.
திலகா அவளின் வாடி இருந்த முகத்தை புரியாமல் பார்க்க…
இதற்கு மேல் திலகாவிடம் இருந்தால் மனதை கண்டுபிடித்து விடுவாள்.
என அங்கிருந்து சொல்லி விட்டு அவசரமாக கிளம்பினாள் ஒவியா. உடைந்து போகும் அவளை பார்க்கவே பாவமாக இருந்தது திலகாவுக்கு. ஆனால் என்ன செய்ய முடியும். இரண்டே மாதத்தில் இருவரின் உலகமே மாறிப் போய்விட்டதே. காலையில் எழும்பி பட்டாம்பூச்சாய் பறந்த காலம் போய், ஏன் எழும்புகிறோம் என நினைக்கும் காலம் இவ்வளவு விரைவில் வரும் என இருவருமே நினைக்கவில்லை.
வீடு வந்தவளுக்கு யாரின் முகத்தையும் பார்க்க பிடிக்கவில்லை. தன்னையே கூர்ந்து பார்த்த தந்தையின் அருகில் கூட போகாமல் தன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
மகளின் முகவாட்டமே தேடி சென்ற எந்த இடத்திலும் வேலை கிடைக்கவில்லை என்பதை அவருக்கு புரிய வைத்து விட, மனைவியை அழைத்து கொண்டு அவர் தோழர் நாராயணனை பார்க்க சென்றார். போன வாரமே கேட்டு வைத்தது தான். ஆனாலும் இன்னும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் இருக்க, ஒரு முறை போய் விசாரித்து விட்டு வந்து விடுவோம் என்று தான் மனம் கேட்காமல் கிளம்பினார்.
ஆனால் போன இடத்தில் அவரை பார்க்க முடியாமல் திரும்பி வந்த போது அவருக்குமே மனது கனத்து போனது. நிச்சயம் ஓவியாவுக்கு இப்போது ஒரு வேலை கிடைத்தேயாக வேண்டும். இல்லையேல் வீட்டோட நிலமையே மாறி விடும். மனைவியை இயலாமையோடு பார்த்தார். எழிலரசியின் மனம் முழுதும் இந்த எண்ணம் தான் ஒடிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவரிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.யோசித்து கொண்டே இருந்தவருக்கு எதுவுமாகி விட கூடாது என்ற பயத்தில் மருந்தும் மாத்திரையும் கொடுத்து உறங்க வைத்தாள்.
அதே நேரம்,
கட்டிலின் மேல் கிழிந்து போன ஒரு சட்டையையும் கையில் ஒரு டாலரையும் எடுத்து வைத்து அதையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஓவியா. கண்ணீர் நிரம்பி வழிந்திற்று. சட்டென மனதுள் அவன் சட்டையை கிழித்து எடுத்து அவளுக்கு காயம்பட்டிருந்த இடத்தில் அவனே கட்டிவிட்டது நினைவுக்கு வந்து உயிரை வதைத்தது. அவனை அவளுக்கு நியாபகப்படுத்தி கொண்டிருக்கும் இந்த இரண்டு பொருளும் இனி இந்த அறையில் இருக்க கூடாது என்றே அதை கையில் எடுத்தாள். ஆனால் விசிட்டிங் கார்டை கிழித்து குப்பையில் தூக்கி எறிந்தது போல அவ்வளவு லகுவாக இதை அவளால் எறிய முடியவில்லை. நெஞ்சோடு அணைத்து கொண்டு வீறிட்டு வந்த அழுகையை கை கொண்டு வாய் பொத்தி கட்டிலில் விழுந்து குலுங்கினாள்.
எப்படியானதொரு ஏமாற்றம் அவளுக்கு. சத்தியமாக அந்த இடிபாடுகளுக்குள் நடந்து கொண்ட முறைக்கும் இப்போது செய்யும் அவன் செயலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மனது கனந்து போனது. எவ்வளவு நேரம் அந்த கட்டிலில் கிடந்து துடித்தாளோ… அழுது முடித்து சோர்ந்து தூங்கி அவள் கண் விழித்த போது தாய் அழைக்கும் குரல் கேட்டது.
அவசரமாக எழுந்தவள் முகத்தை அழுத்தி துடைத்து விட்டு பழையபடி கிழிந்த அந்த சட்டை துண்டையும், டாலரையும் அந்த அறையில் இருந்த சாமிபடத்தின் முன் வைத்து விட்டு வெளி வந்தாள்.
“சாப்பாடு ரெடியாகிடுச்சி. நீ சாப்பிடுறியணா போட்டு சாப்பிடு. நான் வெளி பக்கம் போறேன்.”
சொல்லி விட்டு எழிலரசி, மகளின் முகத்தை கவலையோடு பார்த்தவாறு வெளியேற, ஒவியா சாப்பிட மனமில்லாமல் தளர்ந்து போய் திண்ணையில் வந்து அமர்ந்திருந்தாள். என்னவோ தூங்கி எழுந்ததால் அவளுள் ஒரு தெளிவு பிறந்திருந்தது. கண்மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை அவள் நார்மலாக்க முனைந்த போது அவள் வீட்டின் முன் வந்து நின்றான் தபால்காரன்.
தன் வீட்டின் முன் வந்து காகித கட்டுகளை பிரித்து தேடி கொண்டிருந்தவனை வினோதமாக தான் பார்த்தாள் ஓவியா. ஏதாவது அட்ரஸ் கேட்கவா இருக்கும் என்று தான் முதலில் நினைத்தாள். ஆனால் அவன் வாயில் இருந்து தன் அட்ரஸ் சொல்ல கேட்டதும் திண்ணையில் இருந்து துள்ளி எழுந்து ஒடி அவர் அருகில் வந்தாள்.
முகத்தில் ஆர்வம்.
அவர் நீட்டிய காகிதத்தை சட்டென வாங்கி பார்த்தாள். முன்பக்க முகவரியை நோட்டமிட்டவள்,
“சரி தான். நமக்கு தான் வந்திருக்கு.”
என வியந்தவள்,
“அனுப்புனது யாரு?”
என திருப்பி பார்த்தவள் விழி வியப்பில் மொத்தமாக விரிந்து போனது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel