வணக்கம் வாசகர்களே!
தோழி நிலையில் உறைந்து ஓவியா இனி என்ன செய்ய போகிறாள். முகுந்த் கொடுத்த ஆபரை ஏற்றுக் கொள்ள போகிறாளா? நிராகரிக்க போகிறாளா? இந்த அத்தியாயம் உங்களுக்கு சொல்லும்.
தோழி நிலையில் உறைந்து ஓவியா இனி என்ன செய்ய போகிறாள்
உள் நுழைந்த ஓவியாவின் கண்களில் சரியாக விழுந்தது திலகாவின் கால்களை இழந்த தொடை பகுதி தான். நொடி பொழுது அதிர்ந்து உடைந்து அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள். அவளின் நிலையே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தீர்மானமாய் சொல்லி விட சூழ்நிலையை மாற்ற தெரியாமல் இயலாமையோடு தோழியை கலக்கத்தோடு பார்த்தாள் திலகா.
காலில் இதுவரை பதிந்து இருந்த விழியை மேல் தூக்கி அவள் முகத்திற்கு கொண்டு வந்த போது அவள் வேதனையை விவரிக்க முடியவில்லை. திலகாவின் கண்களை ஒரு நொடி தான் சந்தித்தாள். கதறி அழுது விட்டாள்.
கதறி அழுதவள் கண்ணில் இத்தனை வருடமும் அவளுடன் ஓடி ஆடி விளையாடிய நொடிகளே வந்தது. சின்ன வயதில் பள்ளிக்கு நடந்து சென்றது தொடங்கி சைக்கிள் ஒட்டி படித்தது, மதிய உணவை மாறி மாறி ஊட்டி விட்டது. ஒரு நாள் விழுந்து அடிப்பட்ட அவளை திலகா தூக்கி வந்தது, வலியிலும் வாழ்விலும் அவள் கூடவே வந்தது. என ஒவ்வொரு விசயமும் அழையா விருந்தாளியாய் வர குரல் எடுத்து அழுதாள்.ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் கழித்தும் அவள் அழுகையை நிறுத்தவே இல்லை.
அவள் முகத்தை தூக்கி கண்ணீரை துடைத்து விட்டவள்,
“இந்த கண்ணீர் ஒன்றும் எனக்கு காலை கொண்டு வந்து கொடுக்காது. இப்போ அழுது அழுது உன் உடம்பை ஏன் கெடுத்துக்குறா?”
என்றவளை கட்டி அணைத்து கொண்டு தாங்க முடியாமல் குரல் எடுத்து மறுபடியும் அழத் தொடங்க, அவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடாகி போய் விட்டது திலகாவால் .
ஆனால் அதன் பின் அவள் நொடியும் தாமதிக்கவில்லை. முகுந்த் தனக்கு கொடுத்த ஆபரை ஏற்று கொள்வது என முடிவெடுத்து விட்டாள். இந்நாள் வரை தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் எவ்வளவோ செய்த திலகாவையும் இனி தான் தான் பார்க்க வேண்டும் அவளை பெரிய ஹாஸ்பிட்டல் கொண்டு சென்று காலை சரிபடுத்த வேண்டும் என அந்த இடத்தில் இருந்து தீர்மானித்து விட்டு தான் வீடு வந்து சேர்ந்தாள். வந்தவள் வந்த வேகத்திலே தன் முடிவை குடும்பத்துக்கும் சொல்லி விட வீடே சந்தோஷப்பட்டது.
ஆனால் ஓவியாவால் தான் சந்தோஷப்பட முடியவில்லை. அவள் மனதில் மட்டும் முகுந்த் மேல் அந்த எண்ணம் உருவாகவில்லை என்றால் அவளும் சந்தோஷமாக தான் கிளம்பி இருப்பாள். ஆனால் மனதில் சஞ்சலத்தை வைத்து கொண்டு கிளம்புவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. முகுந்த் அந்த இருளில் இந்த அளவு வசதியானவன் என நினைத்து பார்க்கும் நிலை அவளுக்கு இல்லாமல் போனது தான் இந்த பாதிப்பின் காரணமாய் இருக்கலாம். மனதை பறி கொடுத்தவன் முன் நார்மலாக வளைய வர முடியும் என அவளுக்கு தோன்றவில்லை.
ஆனால் தன்னை மறைத்து அவன் முன் வேலைகாரியாய் வாழ்ந்து தான் ஆக வேண்டும். தன் குடும்பத்திற்காகவும் கால்களை இழந்த தோழிக்காகவும் அந்த துன்ப கிண்ணத்தை பருகி தான் ஆக வேண்டும்.
எண்ணியவள் அன்றே கிளம்புவதற்காக ரெடியானாள். தந்தை மறுநாளே மெட்ராஸ் கிளம்புவதற்கான டிக்கெட்டோடு வந்து விட்டார். அவளும் மறுநாளே கிளம்பியும் விட்டாள். ரயில்வே ஸ்டேஷன் வந்து ஆட்டோ பிடிக்கும் வரை அவள் இழுத்து பிடித்து வைத்திருந்த வைராக்கியம் அவன் இடத்தை நெருங்க நெருங்க விடைபெற தொடங்கியது.
நெஞ்சம் அவளையும் மீறி வேகம் வேகமாக துடிக்க தொடங்கியது. கூடவே இருளில் அவனோடு வாழ்ந்த அந்த மூன்று நாள் நியாபகமும் வந்து போனது. அவனை முகத்துக்கு நேர் பார்க்க முடியுமா தன்னால். ஒரு வேலைகாரி போல் அவனில் இருந்து ஒதுங்கி நிற்க முடியுமா? மனது முழுதும் நிரப்பி விட்டு பிடிக்காதவன் போல வாழ முடியுமா? தான் ரசித்தவனை முன்னாலே உலவ விட்டு ரசிக்காமல் கண்களை மூட முடியுமா?
இப்படி அவளுள் ஆயிரமாயிரம் கேள்வி கேட்டு ஒய்ந்த நேரம் முகுந்த் எக்ஸ்போர்ட் கம்பெனிக்குள் ஓவியாவின் ஆட்டோ நுழைந்தது. வான் அளவு உயர்ந்து நின்ற கட்டிடத்தை கண் கொட்டாமல் பார்த்தவாறு தான் இறங்கினாள். இறங்கிய வேகத்தில் ஆட்டோவுக்கு காசு கொடுத்து அனுப்பி விட்டு நிமிர்ந்த போது அந்த கட்டிடத்தின் உள் பகுதி அவள் கண்ணில் விழுந்தது. அவள் வந்திறங்கிய போது காலை பதினொரு மணி என்பதால் ஆட்களின் நடமாட்டத்தால் அந்த இடம் பரபரப்பாக தான் இருந்தது.

தயக்கத்தோடு தான் கொண்டு வந்த ஒற்றை பேக்கை தூக்கி கொண்டு உள் நோக்கி நகர்ந்தாள். வாசலை தாண்டி உள் நுழைந்ததுமே மனதில் ஒரு சபதம் எடுத்து கொண்டே நடக்க தொடங்கினாள்.
“ஒவியா நீ உன் தோழிக்காகவும் குடும்பத்துக்காகவும் மட்டும் தான் இந்த வேலைக்கு போறா. மற்றபடி எதுவும் இல்லை. நல்லா நியாபகம் வச்சிக்க மற்றபடி எதுவுமே இல்லை. நீ எந்த காரணம் கொண்டும் அந்த மூன்று நாளில் தன்னில் பூத்த உணர்வை அவர் முன்னால காட்டவே கூடாது.”
என்ற உறுதியோடு கம்பீரமாக நடக்க தொடங்கினாள்.
ஆபீஸ்க்குள் நுழைந்ததுமே முகுந்த் பார்வையில் தான் முதலில் விழுந்தாள். ஆனாலும் அது அவள் தானா என்ற சந்தேகம் நொடி பொழுது அவனுள் வர, முன்னால் இருந்த திரையை வெறித்து பார்த்தான் முகுந்தன். ஆபீஸோட பிரமாண்டத்தை பார்த்து மலக்க மலக்க விழித்தவாறு வரவேற்பறையில் நின்று கொண்டிருந்தாள் ஓவியா. நொடி பொழுது அவன் முகத்தில் தோன்றிய புன்னகை மறைந்து,
“முப்பத்து எட்டாவது நாள் வர தோணியிருக்கு.”
ஒரு நொடி எழுந்த எண்ணத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு சட்டென ரோலிங் செயரில் இருந்து எழும்ப,
முன்னால் மும்முரமாக எதையோ அவனிடம் விளக்கி கொண்டிருந்த நளன் பேச்சை நிறுத்தி முகுந்தை புரியாமல் பார்த்தான். தன் தோழனுக்கு ஓவியாவில் வருகையை கண்களால் காட்டியவன்.
“போ…”
என கட்டளை பிறப்பிக்க, புரிந்து கொண்டு நளன் கையில் இருந்த ஃபைஸை கீழே வைத்து விட்டு வெளியே வந்தான். அதே நேரம் அவனை நெருங்கி வந்த சுந்தரி.
“சார்… நியூ அப்பாயின்மென்ட் ஒண்ணு வந்திருக்கு. பேரு ஓவியாவாம். கையில அப்பாயின்மென்ட் லெட்டரும் இருக்கு. நம்ம ஆபீஸ்ல புது ஸ்டாப்ஸ் எடுக்கிறாங்களா சார். நான் கூட என் தூரத்து உறவு கார பொண்ணு ஒருத்தங்களை பற்றி சொல்லி இருந்தேனே சார்.”
“ம்… சொன்னீங்க. இப்ப வேக்கன்ஸி இல்லணு தான் உனக்கு தெரியுமே சுந்தரி. இது ரெண்டு மாதத்துக்கு முன்னால கொடுத்த ஆடர். அவங்க உடல்நிலை சரியில்லாததால இப்போ வந்து ஜாயின் பண்ணுறாங்க. அவ்வளவு தான். அதுவும் இது பாஸோட தனிப்பட்ட அப்பாயின்மென்ட்.
என்றவன் நேரே ஒவியாவின் அருகில் வர, நெருங்கி வந்த சோடாபுட்டியை பார்த்ததும் இதுவரை இருந்த கலக்கம் மாறி, முகத்தில் லேசாக புன்னகையை படரவிட்டவாறு, அவளும் நெருங்கி வந்தாள்.
“என்னங்க. இவ்வளவு நாள் எடுத்திட்டீங்க. நான் விசிட்டிங் கார்டை பார்த்ததுமே வந்திடுவீங்கணு நினைச்சேன். எனிவே இப்பவாவது வரணும்னு தோணுச்சே. ரொம்ப சந்தோஷம்.”
என்றவன் அவனை அழைத்து கொண்டு நேரே முகுந்தன் அறைக்குள் நுழைய, அவனை தொடர்ந்து படபடப்போடு தான் அவளும் நுழைந்தாள். சரியாக அதே நேரம் ஸ்டைப்பிஸ்ட் ஸ்டெல்லாவின் முகத்தில் பைல்ஸ் ஒன்றை விட்டெறிந்தான் முகுந்தன்.
நளனின் பின்னால் வந்த ஒவியா இக்காட்சியை கண்டு வெலவெலத்து போனாள். இவன் சிடுமூஞ்சு என்று தெரியும் தான். ஆனால் தனக்கு கீழ் வேலைப் பார்ப்பவர்களை இப்படி நடத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை. கடவுளே எனக்கு என்ன நிலமையோ என எண்ணும் போதே முதல் நாள் இருவரின் சந்திப்பை நினைத்து கொண்டவள்.
அப்படியே தான் இருக்கிறான்.
ஒரு முறை அதிர்வோடு சொல்லி கொண்ட நேரம் அந்த பெண்ணோ இது அன்றாட வாடிக்கை போல எந்த பதற்றமும் படாமல் அத்தனை பேப்பஸையும் எடுத்து கொண்டு,
“ சாரி சார். பத்து நிமிஷத்துல சரிப்படுத்திடுறேன்.”
என வெளியேற இப்போது முகுந்த் பார்வை வாசலில் மிரட்சியோடு நின்ற ஓவியாவிலே நிலைத்து பின் இடமாறி நளனை பார்வையால்,
“என்னடா நீ…”
என அதட்ட, சூழ்நிலையை மாற்ற எண்ணிய நளன்.
“நீங்க உள்ளால வாங்க ஓவியா. நம்ம பாஸ் வேலைனு வந்துட்டா இப்படி தீயா தான் நிப்பாரு. அவர் கீழ வேலை பாக்குற யாரும் எந்த தப்பும் செய்திட கூடாது. மீறி செய்தா உடனே தண்டனை தான்.”
“அதான் தெரிஞ்ச விசயமாச்சே…”
என அவள் முனங்க,
“என்னது?… தெரியுமா?”
அவன் அதிர்ந்து கேட்டான் ஒருவிதமான புன்னகையோடு,
“இல்ல… இல்ல…”
என்றவள் அதிக பிரசங்கி என தன்னை தானே திட்டியவாறு தலை குனிய,
இறுக்கத்துக்கு நொடி பொழுது மாறிய முகுந்தன்.
“மேடம். முப்பத்தெட்டாவது நாள் வந்திருக்காங்க. அப்பாயின்மென்ட் கிடைச்சும் பத்து நாள் கழிச்சி வந்திருக்கீங்க. அந்த கிராமத்துல அப்படி என்ன முக்கியமான வேலையோ…”
என கீழ் பார்வை பார்த்தவாறு குத்தலாக முகுந்தன் கேட்க,
“டேய்… என்னடா பேசுறா?”
நளன் மென்குரலில் அவன் காது அருகில் முனங்கினான். கூடவே அவளை பார்த்து இளித்தவாறு சூழ்நிலை இயல்பாக்க முயல, நண்பனை திரும்பி பார்க்காமல், அவள் மேல் இருந்த பார்வையை அகற்றாமல்,
“இல்லடா. மேடம் முகுந்த் ஆபீஸ்ல வேலை கிடைச்சும் இவ்வளவு சர்வசாதாரணமா வந்திருக்காங்களே. அதான் கேட்டேன். ஒருவேளை மேடத்துக்கு அந்த மலை பிரதேசத்துல நிறைய வேலை இருந்திருக்குமோனு தெரிஞ்சிக்க தான் கேட்டேன்.”
என்றவன் தன் முகத்தை கூட பார்க்காமல் தரையையே ரசித்து நின்ற அவள் மேல் வந்த கடுப்பை விழுங்கியவாறு,
“எனிவே என் அழைப்பை ஏற்று பெரிய மனசு பண்ணி முப்பத்தெட்டாவது நாளா வருகை தந்ததுக்கு ரொம்ப நன்றிங்க மேடம். நளன் மேடத்துக்கான வேலை பற்றி கூட்டிட்டு போய் விளக்கி சொல்லுங்க. நான் அப்பாவோட ஒரு மீட்டிங். அட்டன் பண்ணிட்டு வந்திடுறேன்.”
ஒவ்வொரு வார்த்தையும் குத்தலோடவே சொல்லி விட்டு முகுந்த் கிளம்பி விட,
“அப்படா என்றிருந்தது ஓவியாவுக்கு. அவன் மட்டும் இப்படி ஒரு முகத்தை காட்டாமல் அந்த இருளின் முகத்தை காட்டி இருந்தால் பெண்ணவளும் தவித்து தான் போய் இருப்பாள். நல்லவேளை நெடுமரம் முதலில் பார்த்தது போலவே உயர்ந்து தான் நிற்குது. நான் பிழைத்தேன். மனதுக்குள் சொல்லி கொண்ட போது அவள் உதட்டில் லேசாக புன்னகை முழைத்தது.”
அதை பார்த்து விட்ட நளன்,
“என்னங்க நீங்க. அவன் மறைமுகமா உங்க மேல கோபப்பட்டுட்டு போறான். நீங்க சிரிக்கிறீங்க.”
“ ம்… உங்க நெடுமரம் இதோட நிறுத்திட்டு போச்சே அதை நினைச்சி தான் சிரிக்கிறேன். யார் கையில கிடைச்சாலும் உண்டு இல்லணு ஆக்குறது தானே உங்க பாஸோட வேலை.”
“அது என்னங்க நெடுமரம்…”
என்றதும் சட்டென நுனி நாக்கை கடித்தவள் மென்சிரிப்பில் நெளிய,
“அந்த ஹோட்டல்ல அவன் உங்களை படுத்துன பாட்டுல வச்ச பெயரா? ரொம்ப பொருத்தம் தான். ஆனாலும் பாத்துங்க. எனட்ட பேசுனது போல அவனுட்ட பேசிடாதுங்க. அப்புறம் முறிஞ்சி உங்க மேலயே விழுந்திடுவான்.”
என்றதும் வாய் விட்டு சிரித்தவளை வெளியில் தூரமாய் இருந்து பார்த்து முறைத்து கொண்டிருந்தது முகுந்த் கண்கள்.
“நெடுமரமா?”
தன்னையே ஒரு முறை அளந்தவன்,
“அவ்வளவு உயரமாவா இருக்கேன்.”
என தனக்கு தானே கேட்டும் கொண்டான்.
அதே நேரம் நளனும் ஓவியாவும் வெளிவர, முகுந்த் தன்னை அந்த தூணின் பின்னால் மறைத்து கொண்டான்.
நளனும் ஓவியாவும் அவனை தாண்டி சென்ற பின் தூணை விட்டு வெளி வந்தவன்.
நேரே தன் அறைக்குள்ளே புகுந்து கொள்ள, அதன் பின் நொடிகள் ஏனோ அவனுக்கு ஒருவித அவஸ்தையாகவே சென்றது.
அதே சமயம் ஒவியாவை அழைத்து போன நளன், நிறைய மிஷினரீஷ் உள்ள கட்டிடத்துக்குள் அழைத்து சென்றான். அந்த கட்டிடத்தில் குறைந்தது நூறு மிஷனாவது இருக்கும். ஒவ்வொரு மிஷின் பக்கத்திலும் இரண்டு பேர் நின்றனர். மாவு போன்ற ஒரு பொருள் உற்பத்தியாகி கொண்டிருந்தது. அதை பார்த்தவாறே நளனோடு நடந்தவள், நான் நிற்க கண்டதும் சட்டென திரும்பி முன்னால் பார்த்தாள்.
ஒரு முப்பது முப்பத்திரண்டு வயது மதிக்கதக்க ஒரு இளம்பெண் முன்னால் நிற்பதை கண்டாள்.
“இது மிஸ்ஸஸ் வாணிரவிசந்திரன். இந்த உற்பத்தி பிரிவுக்கு இவங்க தான் ஹெட்.”
என்றதும் ஓவியா அவர்களை பார்த்து புன்னகைத்தவாறு வணக்கம் சொல்ல… பதிலுக்கு அந்த பெண்மணியும் சிரித்து கொண்டாள்.
“இவங்க மிஸ். ஓவியா. வாணி மேடம். நியூ அப்பாயின்மென்ட்.”
“ம்… சார் சொன்னாங்க. இரண்டு வாரத்துக்கு முன்னாலயே ஜாயின் பண்ண வருவாங்கணு சொன்னாங்க. நீங்க என்ன இன்று வந்திருக்கீங்க.”
என்றதும் நளனே,
“அது ஒரு பெரிய கதை மேடம். அது எல்லாம் பேச இப்போ நேரம் இல்ல. எனக்கு சாரோட ஸ்டீல் பேக்டறிக்கு போகணும். நீங்க அவங்களுட்ட பதமா பேசி தெரிஞ்சிக்கோங்க. அதற்கு முன்னால வாங்க. இவங்களுக்கான அறைக்கு போலாம்.”
என்றவன் முன்னோக்கி நகர, இரண்டு பெண்மணியும் அவன் பின்னால் நடந்தனர். கூடவே வாணியின் பார்வை அடிக்கடி ஓவியாவின் மேல் படிந்து மீள்வதை அவளும் பார்த்தவாறே தான் பின் நோக்கி நடந்தாள். அந்த கட்டிடத்தின் இன்னொரு பகுதிக்கு அழைத்து வந்தவன் ஒரு விசாலமான அறைக்குள் நுழைந்து,
“இது தான் உங்க அறை ஓவியா.”
என்றதும் அறையை கண்களால் அளந்தவள்,
“என்னோட வேலை பற்றி எதுவும் சொல்லலியே.”
என கேட்க,
நளனோ…
“நம்ம கம்பெனி கழிந்த நான்கு வருடமா குழந்தைகள் வளர்ச்சிக்கான புரோட்டீன் அதிகம் உள்ள ஒரு மாவை தயார்படுத்தி வருகிறது ஓவியா. அதுல பன்னிரெண்டு நட்ஸ் வகைகளும் சில விசேஷமான பழ வகைகளும், சில புரதசத்து நிறைந்த பொருட்களும் கலந்து அந்த மாவை நாம தயாரிச்சு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள்ல்ல எட்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டிருக்கோம்.”
என்றதும் வியந்து போய் அவனை பார்த்தவள்,
“எட்டுக்கு மேற்பட்ட நாட்டுக்கா?”
என்றாள்.
“ம்… இப்ப கூட நான்கு நாட்டுல பேச்சு வார்த்தை நடந்திட்டு தான் இருக்கு. ஆல்மோஸ்ட் எல்லாம் ஒ.கே தான். ஒருவேளை அடுத்த மாதம் அங்கு கூட அனுப்ப வேண்டி வரலாம். பிராடெக்ட் அதிகரிக்கும் முயற்சியிலயும் இருக்கோம். அந்த மாவு உற்பத்தி செய்ய இந்தியாவுல பல மாநிலங்களிலிருந்தும் மூல பொருள் நமக்கு வருது. இங்க இருந்து தான் உங்க வேலை தொடங்குது. பொருளை ராஜேந்திரன் கொள்முதல் செய்து கொண்டு வந்து சேர்த்திடுவான். வருகிற பொருளோட குவாலிட்டி செக் பண்ணுறதுல இருந்து, வறுத்து வெளிவரும் மூலப்பொருளோட தரத்தை ஆராய்கிறது. கூடவே அது மாவாகி பேக்கிங் டிப்பாட்மென்ட்க்குள்ள போகிறது வரை அதோட பொறுப்பு உங்களுக்கானது தான். குழந்தைகளுக்கான ஊட்டசத்து பொருள் என்கிறதால பாஸ் இதுல ரொம்ப கவனமா இருப்பாரு. அதுனால உங்க வேலையில சிறு கவன குறைவு கூட வந்திட கூடாது.”
“ம்…ம்… புரியுது சார்.”
“சரி. மீதியை அவங்க சொல்லுவாங்க. நான் கிளம்புறேன்.”
என்றவன் அவளை வாணியிடம் ஒப்படைத்து விட்டு நகர்ந்து விட, வாணி அவளை அழைத்து கொண்டு குடோனுக்கு விரைந்தாள்.
அதே நேரம் அங்கிருந்து கிளம்பிய நளன் நேரே முகுந்த் அறைக்குள் நுழைந்தான். உள் நுழைந்தவன் அறைக்குள் முகுந்த் இருக்க கண்டதும்,
“என்ன சார்… அப்பாவோட மீட்டிங்ணு சொன்னீங்க. போகலயா?”
“இல்லடா. சும்மா சொன்னேன். இதுக்க மேல அவளோட முன்னால நின்னா தப்பு தப்பா தான் பேசுவேன். அதுல இருந்து என்னை காத்துக்க தான் இல்லாத மீட்டிங்கை தூக்கிட்டு ஒடுனேன்.”
“ ம்… புரியுது. ஆனாலும் நீங்க கொஞ்சம் ஓவரா தான் போறீங்க.”
“என்னடா ஒவரு . முப்பத்தெட்டு நாளாச்சுடா. மகாராணிக்கு இங்க கிளம்பி வர முப்பத்தெட்டு நாளாகியிருக்கு. எனக்கு இப்படி கிடைக்கிற நல்ல வாய்ப்பை பயன்படுத்த தெரியாத பொண்ணுங்களை கண்டாலே பிடிக்காது. அவங்களோட இந்த குணம் தான் அவங்களை வளர விடாமலே செய்றது. ஐயோ பாவம் வேலை போயிடுச்சேனு விசிட்டிங் கார்டை கொடுத்துட்டு வந்தா மேடம் பேச மாட்டாங்களோ? பேசி வாய்ப்பை கேட்டு வாங்க மாட்டாங்களோ? பத்தொன்பது நாள் பத்தொன்பது நாள் பாத்துட்டு தானே அந்த அப்பாயின்மென்ட் லெட்டரை அனுப்புனோம். அப்படியும் வந்தாளா? பெரிய ரதினு நினைப்பு. ஆடி அசைஞ்சி முப்பத்தெட்டு நாளை வேஸ்டாக்கிட்டு வந்து சேர்ந்திருக்கு.”
முகுந்த் ஆத்திரத்தில் பல்லை நரநரவென கடித்து புஷ்டியை மடக்கி மேஜையில் குத்த,
“இப்போ எதுக்கு இவ்வளவு ஆவேசம். அவங்களுக்கு ஒரு வேளை முடியாம இருந்திருக்கும். நீங்களும் தானே ஒரு மாசம் கழிச்சி ஆபீஸ் வந்தீங்க.”
“அவளோட கோமாளி தனத்தால என் தோள்பட்டையில வாங்கி கட்டிகிட்டேன். அதனால கை காயங்கள் ஆற ஒரு மாசமாச்சு. அவளுக்கு என்ன நல்லா தானே இருந்தா. அதுல வேற அந்த ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வந்து சேர்த்ததுலயே ரொம்ப விரைவா நார்மல் ஆனவா இவா ஒருத்தியும் தான். அதான் அந்த சரசு அக்கா சொன்னாங்களே. நாம கூட கிளம்புறதுக்கு முன்னால போய் பார்த்தோமே. வெட்டி விழுங்கிட்டு தானே இருந்தா ஆப்பிளை.”
பார்த்தவற்றை ஒரு முறை நியாபகப்படுத்தி பார்த்த நளன், சிரித்து கொண்டே,
“அந்த நாளை மறக்க முடியுமா? சின்ன குழந்தை போல சாப்பிட்ட அழகை பார்த்து சிரிச்சிட்டு வந்தவங்க தானே நீங்க. இப்ப என்ன? அதையும் குத்தமா சொல்லுறீங்க.”
சிரிப்பினூடே கேட்டவனை அனல் கக்கும் பார்வை பார்த்தவன்.
“சிரிக்காதடா. அவளோட கோமாளி தனத்தை எப்பவும் ரசிக்க முடியாது. வேலைனு வந்துட்டா சின்சியரா இருக்கணும். இப்படி நாட்களை வேஸ்ட் ஆக்க கூடாது. அன்று முதல் நாள் என் மேல வந்து மோதுனப்ப அந்த பொண்ணு அதாண்டா இவளோட பிரண்ட், அவா வந்து இவளோட குடும்ப சூழலை சொன்னதால தான். அதன் பிறகு இவா செய்த கோமாளி வித்தையை எல்லாம் அந்த மேனேஜர்ட்ட சொல்லல. இப்ப கூட அவளோட குடும்ப சூழல் புரிஞ்சி தான் அந்த விசிட்டிங் கார்டையே கொடுத்துட்டு வந்தேன். மேடம் பேசுனாங்களா? இல்ல தானே. திமிரு. அவன் கொடுத்தா. நாம பேசிடணுமா என்கிற திமிரு.”
“விடுங்க பாஸ். அதான் வந்துட்டாங்களே.”
“வந்துட்டா விட முடியுமா? இரண்டு நாள் கண்காணி. அங்க உள்ள குரங்கு வித்தையை இங்க காட்டி எதுவும் தப்பா பண்ணிடாம. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். டிசிப்ளிங் ரொம்ப முக்கியம். கூடவே வேலையில சின்சியரா இருக்கணும்.”
“ம்… சொல்லுறேன் சார்.”
“அப்புறம். இன்று தான் ஊருல இருந்து வந்திருப்பா. தங்குறதுக்கு திங்கிறதுக்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து கொடு. நாளைக்கு காலையில சார்ப்பா 9.30 க்கு ஆபீஸ்க்குள்ள என்ட்ரி ஆகியிருக்கணும். உள்ளால வந்துட்டா வேலையில மட்டும் தான் கவனம் இருக்கணும் சொல்லி வை.”
என்ன முகூர்த்தத்தில் இப்படி சொன்னானோ தெரியவில்லை. மறுநாளே பிந்தி வந்து மேனேஜர் ராதிகாவிடம் வசை வாங்கியவாறே நின்று கொண்டிருந்தாள். ஆபீஸ்க்குள் நளனுடன் எதையோ மும்முரமாக பேசி கொண்டே உள் நுழைந்தவன் கண்களில் இந்த காட்சி விழ, பேச்சை நிறுத்தி விட்டு அவர்கள் அருகில் வர,
“முதல் நாளே பத்து நிமிஷம் லேட்டா வந்திருக்காங்க சார்…”
ராதிகா குற்றப்பத்திரிகை வாசிக்க, முகுந்த் ஓவியாவை பார்த்தான்.
“சாரி சார்… காலையில எழும்ப நேரமாகிடுச்சி. அப்படியும் அவசரம் அவசரமா தான் சார் புறப்பட ஆரம்பிச்சேன். ஹாஸ்டல் பாத்ரூம்ல தண்ணீர் வரல சார். அப்புறம் வாட்ச்மேன் அங்கிள்ட்ட பேசி சரி பண்ணி தண்ணீரை வர வச்சி குளிச்சிட்டு வர நேரமாகிடுச்சி.”
திக்கி திணறி மென்று விழுங்கி அவள் சொன்ன தோரணையில் நளனுக்கு சிரிப்பு தான் வந்தது. சட்டென சிரித்து விட்ட அவனை பார்த்து முறைத்த முகுந்த் கண்களால் அவனை அடக்க.
கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன் மென்குரலில் பத்து நிமிஷம் தானேடா விட்டுடு. பாவம். முகத்தை பாரு ரொம்ப பயந்து போய் இருக்காங்க. என்றதும் அவள் படபடக்கும் விழியையும்… சாரி சார்… என குவிந்து நின்ற உதட்டையும் ஒரு நிமிடம் பார்த்து விட்டு பின்,
“நீங்க கிளம்புங்க…”
என்றான் அதிகாரமாய்…
“புரியல… எங்க…”
கேட்கவில்லை தான். ஆனால் அவள் பார்வை அந்த கேள்வியை தான் கேட்டது.
“டேய்… இந்த ஒரு முறையும் விட்டுடுடா. பாவமா இருக்கு. அதுல முதல் நாள் வேற. உன்னோட கண்டிஷன் தெரியாதுல. தெரியாம வந்துட்டாங்க. பிளீஸ் இந்த ஒரு முறையும்.”
ஓவியாவுக்காக நளன் கெஞ்ச, அவனை திரும்பி சுட்டெறிக்கும் பார்வை பார்த்தவன் அதே வேகத்தோடு அவள் பக்கம் திரும்பி,
“நீங்க போகலாம்னு சொன்னேன்.”
என வெடிக்க, துடித்து போனவள் அவனை பயத்தோடு பார்த்தவாறு,
“போலாம்ணா… உள்ளாலயா?… இல்ல… வெளியிலயா?”
மறுபடியும் அவள் பாவமான முகத்தை வைத்து கொண்டு இழுவையாக நிறுத்த,
“ஹெட் அவுட்.”
என வெளியில் கை காட்டியவாறு சீற
“டேய்… டேய்… பாவம்டா.”
நளன் மறுபடியும் வக்காளத்துக்கு வர,
“முதல் நாள். முதல் நாளே பிந்தி வந்திருக்கானா. என் ஆபீஸையும் அந்த ஹோட்டல் மாதிரி நினைச்சிட்டாணு தானே அர்த்தம். வேலையில சின்சியர் வேணும். நேரத்தை சரியா பயன்படுத்த தெரியணும். இப்படி இடியட் போல முழிச்சிட்டு வந்து நிற்க கூடாது. யாரும் நமட்ட கேள்வி கேட்கிறது போல நடக்க கூடாது.”
என்றவன் ஓவியா பக்கம் திரும்பி,
“நீ இன்னும் போகல,”
என வெடிக்க, துடித்து சிலிர்த்தவள் அவனை ஒரு கணம் பார்த்து விட்டு, பின் திரும்பி,
“ நானாவது 9.40 க்கு வந்துட்டேன். நீங்க 9.55 க்கு தானே வந்தீங்க. பாஸ்க்கு ஒரு நியாயம் ஸ்டாப்ஸ்க்கு ஒரு நியாயமா?”
என முணுமுணுத்தவாறு முன்னோக்கி நகர,
“என்ன?…. என்ன?… என்ன சொன்னடா அவா.”
என முகுந்த் சீற,
“உண்மையை தானே பாஸ் அவங்க பேசுறாங்க.”
நளன் சிரித்து கொண்டே சொல்ல,
“ஐயோ கேட்டுடுச்சா. போச்சு போச்சு. ஓவியா ஒடி தப்பிச்சிடுடி.”
தனக்கு தானே சொல்லி கொண்டு அங்கிருந்து அவசரமாக நழுவி வெளியே ஓடியவளை பார்த்து முறைத்தவன்.
“என்னடா பெரிய உண்மை. எனக்கான ஆபீஸ் டைம் 10 மணி தான். நான் 9.55 க்கு உள்ளால வந்தாச்சு. நான் என்ன இவளை போலனா நினைச்சா.”
“அவங்க போயிட்டாங்க பாஸ். யாருட்ட விளக்கம் கொடுக்குறீங்க. வாங்க நம்ம வேலையை பாக்கலாம்.”
என்றவனை ஒரு முறை மேலிருந்து கீழ் பார்த்தவன் அடுத்த நொடி ஓவியா போன பக்கம் பார்த்தவாறே உள் நோக்கி நகர்ந்தான்.
அதே சமயம் தன் அறைக்கு வந்த ஓவியா கையில் இருந்த பேக்கை தூக்கி சோபாவில் ஏறிந்து விட்டு கையை விரித்து பாட்டு பாடியவாறு ஒரு முறை சந்தோஷத்தில் சுற்றி விட்டு மெத்தையில் பொத்தென விழுந்தாள்.
“ இது நல்லா இருக்குதே. லீவு எடுக்கணும்னு தோணுச்சினா ஆபிஸ்க்கு பிந்தி போனா போதும் போலயே. சிடுமூஞ்சினாலும் பணிஷ்மென்ட் எல்லாம் நல்லா தான் இருக்கு. இன்று செமயா தூங்கலாம்.”
என சந்தோஷத்தில் ஓவியா புரண்ட நேரம் அலுவலகத்தில் தன் அறையிலே நளனிடம் பொரிந்து தள்ளி கொண்டிருந்தான் முகுந்த்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel



