வணக்கம் வாசகர்களே!
ஓவியாவை கொலை செய்ய துடிக்கும் அந்த மர்ம நபர் யார் என்று ஒவியா தெரிந்து கொண்டாளா? அது போல் ஹாஸ்பிட்டலில் நளனின் அருகில் இருக்கும் திலகாவின் மனநிலை என்னவாக இருந்தது. தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போலாமா?
ஓவியாவை கொலை செய்ய துடிக்கும் அந்த மர்ம நபர் யார் என்று ஒவியா தெரிந்து கொண்டாளா?
சுந்தரியின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு குடோனை நோக்கி விரைந்தாள் ஓவியா. சென்னையில் அவளுக்கு இது முதல் பயணம் தான். என்றாலும் மனதில் பயமோ கைகால்களில் நடுக்கமோ சிறிது கூட இல்லை.
மனது, எதையோ தேடுவதால் உண்டான கம்பீரமாய் இருக்கலாம். தாயிடம் தெரிந்து கொள்ளலாம் என நினைத்து அவளிடம் பேசியவளுக்கு தாய் பெரிதாக எதையும் சொல்லவில்லை தான். தன்னை சமாதானப்படுத்த பூசி முழுகினாள் தான். ஆனால் அந்த பேச்சின் தெரிந்த நடுக்கமும் படபடப்பும் அவளுக்கு எதையோ சொல்லி விட்டிருந்தது. அந்த நொடியில் இருந்தே மனதின் அடியில் ஒரு நெருடல் உருவாகி விட்டது.
என்றுமே பேசியிராத ஒரு வார்த்தையை தாய் பேசுகிறாள். தன் உயிருக்கு எதுவும் ஆகிவிட கூடாது என பயப்படுகிறாள். அப்படி தனக்கு எதுவும் ஆகிவிடும் என ஏன் நினைக்க வேண்டும். அதுவும் இதுவரை அப்படி பேசி இராத சுந்தரி எதுவும் நடக்காமல் அப்படி பயப்பட வேண்டிய அவசியம் தான் என்ன?. இது எல்லாவற்றையும் விட நான் போக வேண்டிய இடத்தில் திலகா போய் தான் இந்த தீ விபத்தில் மாட்டிக் கொண்டாள். தீ விபத்து நடக்கும் அளவு குடோன் இல்லை. அப்படியும் அந்த தீ விபத்து எப்படி நடந்தது.
அப்படி என்றால் இந்த தீ விபத்திற்கும் அவர்களின் பயத்திற்கும் எதுவும் சம்மந்தம் இருக்குமோ.
நேற்று முழுதும் அவள் ஈரகுலையை குடைந்து கொண்டிருந்தது இந்த கேள்வி தான். ஆக இது பற்றி நான் தெரிந்தேயாக வேண்டும். அப்படி தெரிந்து கொள்வது என்றால் குடோனில் இருந்து தான் தன் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டும்.
அப்படி எண்ணி கொண்டு தான் சுந்தரியின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு கிளம்பி இருந்தாள். ஆனால் மனதின் அடியில் ஒரு அவ நம்பிக்கை. தன் எண்ணம் தவறாக தான் இருக்கும். என்னை கொலை செய்ய நினைக்கும் அளவு வன்மம் உள்ளோர் யார் இருக்க போகிறார்கள். கொலை செய்ய நினைக்கும் அளவு அப்படி நான் எதுவும் செய்து விடவில்லையே. என்று தான் நினைத்தாள். அப்படி இருக்க இந்த பயணம் பெரிதாக தனக்கு எதையும் சொல்லி விட போவது இல்லை என தெரிந்தே தான் வந்தாள். வந்தவள் குடோனில் ராஜேந்திரனை பார்க்கும் வரை அப்படி தான் நினைத்தாள்.
ஆனால் தன்னால் வேலை இழந்த ராஜேந்திரனை குடோனில் பார்த்த போது அவளில் சந்தேகம் மெல்ல எட்டிப் பார்த்தது.
“ஏய்… வந்து ஒரே வாரத்தில் என்னை வேலையை விட்டு போக வைச்சிட்டால. உன்னை என்ன செய்கிறேன் பார்…”
அன்று அவன் கடைசியாய் கத்தி விட்டு போனது நினைவுக்கு வந்தது.
“அப்படி என்றால் இவன் தானா? இவன் என் உயிரை எடுக்கும் அளவு துணிந்து விட்டானா? இவன் செய்த தப்புக்கு தண்டனை தானே வழங்கினேன். அதற்கு என் உயிரை எடுக்கும் அளவு போவானா?”
நினைக்கவே பயமாக இருந்தது. அப்படி என்றால் “என்னால் தான் திலகா தீ விபத்தில் மாட்டி கொண்டாளா?
கடவுளே இவனுள் இவ்வளவு வன்மமா?”
சந்தேகத்தோடு மெல்ல நெருங்கி வந்தாள். இப்போது ராஜேந்திரன் வடிவேலுவிடம் பேசும் குரல் கேட்டது.
“ ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்க பிளான் பண்ணுனா? ஆனா ஒண்ணு மிஸ்ஸாகிடுச்சி.”
வடிவேலு சொல்லி சிரிக்க,
“எவ்வளவு பக்காவா பிளான் பண்ணுன பிறகும். தப்பிச்சிடா பாருடா. அதை தான் தாங்க முடியல. இந்தநேரம் அவா இந்த உலகத்தை விட்டே போய் நான் பார்ட்டி வச்சி கொண்டாடி இருக்கணும். கொஞ்சம் மிஸ்ஸாகிடுச்சி.”
அவன் முகம் பேய் உணர்வை தெளிவாக காட்ட, வடிவேலுவோ…
“அதுக்கு தான் அடுத்த பிளானை ரெடிப்பண்ணுறதா சொல்லிட்டாரே பாஸ். அப்புறம் என்ன?”
“ம்… அது ஒண்ணும் தான் இப்போ ஆறுதல். இனி நான் அடிக்கிற அடி அவளுக்கு மரண அடியா தான் இருக்கணும். இதுக்கு மேல எழும்பவே முடியாத அடியா இருக்கணும். அதான் யோசிச்சிட்டிருக்கேன்.”
“ஆக, இந்த பக்கி தான் எல்லாத்தையும் செய்திருக்கிறான். அதுக்கு இந்த வடிவேலுவும் துணைப் போயிருக்கிறான். அநியாயமா திலகாவோட உயிர் மேல விளையாடியிருக்கானுங்க. இவனுங்களை சும்மா விட கூடாது. முகுந்தன் சார்ட்ட சொல்லுவோம். அவர் ஒருத்தரால தான் இவனை அடக்க முடியும். இப்பவே பேசிடணும். இல்ல அடுத்த பிளானை ரெடிப் பண்ணிடுவான்.”
யோசித்தவள் அவசரமாக மறைவில் இருந்து வெளிவர நினைக்கையிலே அவள் இருந்த மறைவை தாண்டி ஒரு ஆட்டோ அந்த குடோனை நோக்கி போனது.
ஒவியாவின் பார்வை எதேச்சையாக அந்த ஆட்டோவுக்குள் சென்றது.
“வாணி…”
வாய் விட்டு சொன்னவள்,
“ இவா இப்போ இங்க எதுக்கு வரா? எதுக்கா இருக்கும். பார்த்த வேலைக்கு பணம் தருகிறதா இந்த தடியன் சொல்லி இருப்பான். அதை கூச்சமே இல்லாம வாங்க வந்திருப்பா.”
வலியோடு நினைத்த போது அவள் நெஞ்சம் கனத்து போனது, மனிதர்கள் இவ்வளவு மோசமானவர்களாக இருப்பார்களா? தன் பண தேவைக்கு அடுத்தவர் உயிர் மேல் விளையாடும் அளவு கொடூரமனம் படைத்தவர்களாகவா இருக்கிறார்கள்.
நெஞ்சம் கனத்து போக, போகும் அவளை பார்த்து கொண்டு நின்றாள் ஒவியா. அவள் நினைத்தது போல ஆட்டோ குடோன் வாசலில் போய் தான் நின்றது. ஆட்டோவுக்கு காசு கொடுத்து விட்டு இறங்கியவளை கண்ட ராஜேந்திரன் முகம் மலர அவள் அருகில் வந்தான்.
“என்னடா… உடனே கிளம்பி குடோனுக்கு வர சொன்னா? என்ன விசயம்.”
“ம்… சொல்றேன். உள்ளால வா.”
என்றதும் அவன் கையை பிடித்து நிறுத்தியவள்.
“உள்ளால எதுக்குடா. எது சொல்லுறதா இருந்தாலும் இங்கேயே சொல்லு. தீ விபத்து நடந்த பகுதியை எல்லாம் என்னால பார்க்க முடியாது. நீ என்னடா போயும் போயும் இங்கு வர சொல்லியிருக்கா. உனக்கு நாம சந்திக்க வேற இடமே கிடைக்கலியா?”
“நான் எங்க சொன்னேன். பாஸ் தான் வர சொன்னார். என்றதும்,
“சார்… உள்ளாலயா இருக்காங்க…”
வந்தவள் ஆச்சரியத்தோடு கேட்க, ராஜேந்திரன் இரண்டு கட்டு பணத்தை எடுத்து காட்டி கண்சிமிட்டி சிரிக்க… பணத்தை பார்த்த ஓவியாவின் கண்களும் பெரிதாக விரிந்தன.
“ பாஸா? அது யாரு? “
எண்ணியவள் மறுபடியும் இருவரையும் நோக்க,
“நீ வாங்கிட்டியா? எதுவும் சொல்லாம கொடுத்தாரா.”
என்றதும் பெரிதாக தலையாட்டினான் ராஜேந்திரன்.
“அது எப்படி? அவர் ஸ்கெச் போட்டது வேற ஆளுக்கு. தீயில மாட்டுனது காலு ஒடிஞ்ச கொக்கு. அப்படியும் எப்படி கொடுத்தாரு?…
“அது தான் பாஸ். அவர் அப்படி தான்.”
என்றதும் நம்ப முடியாமல் பார்த்தவளிடம்,
“நீ வேலை பார்த்தா அதுக்கான பணம் இந்தா. தப்பிச்சது அவளோட அதிஷ்டம். அதுக்காக நீ வேலை செய்தது இல்லணு போகாதுல . வச்சிக்க. அப்படினு சொல்லி என் கையில இந்த இரண்டு கட்டு பணத்தையும் கொடுத்தாரு.”
சொல்லி சிரித்தவாறு அவன் மறுபடியும் பண கட்டை காட்ட , வாய் பிளந்து பார்த்த வாணி,
“அப்படியா சொன்னாரு, உன் காட்டுல மழை தான் போ. உன் எதிரியை சாய்க்க, உனக்கு பணம் கொடுத்து வேலை வாங்குறதுனா அது அதிஷ்டம் தானே…”
என்றவளை பார்த்து புன்முறுவல் பூத்தவன்
“அது மட்டுமா? அடுத்து அவளையோ, அவள் குடும்பத்தையோ தூக்க பக்காவா பிளான் பண்ணிட்டு சொல்லுறதா சொல்லியிருக்காரு.”
அவன் உற்சாகமாக சொல்ல…
“அப்படினா வெகு சீக்கிரத்துல இன்னொரு வேலை கிடைக்கும்ணு சொல்லு. ஆமா சாருக்கு அவள் மேல அப்படி என்னடா கோபம்.”
“என்ன கேட்டா. என்னமோ அவள் பெயரை சொல்லி இரண்டு மாசம் உட்கார்ந்து சாப்பிடலாம். அதுக்குள்ள பாஸ் அடுத்த வேலைக்கு கூப்பிட்டு விடுவாரு. ம்… இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு.”
சொன்னவன் சட்டென முகம் மாற,
“ என்னை வேலையை விட்டு தூக்குனால, அவளை வெகு சீக்கிரத்துல இந்த உலகத்தை விட்டு தூக்கி காட்டுறேன். இந்த முறை தப்பிச்சிட்டா. அடுத்த முறை விட மாட்டேன்.”
ஆங்காரமாய் சொல்லி சிரித்தவனுடன் இணைந்து வாணியும் சிரித்து கொண்டு தனக்கான பங்கு பணத்தை வாங்க உள்ளே சென்றாள்.
கண்ணில் அனல் பறக்க அந்த மறைவில் இருந்து வெளியே வந்தாள் ஓவியா.
“ஆக… செய்து முடிச்சது தான் இந்த பக்கிங்க. அப்படினா எய்தவன் யாரு?
என யோசித்தவள் மண்டையில் எதுவும் உதிக்கவில்லை.
“ஆக சுந்தரி சொன்னது உண்மை தான். இது எனக்கு விரிச்ச வலை தான். ஆமா…எதுக்காக என்னை கொலை செய்ய நினைக்கிறான். இவனுங்க பாஸ்.”
தெரிந்து கொள்ள ஆர்வம் பிறந்தது. தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்தது. யார் என்று தெரியாமல் அடுத்து வரும் ஆபத்தில் இருந்து தப்ப முடியாதல்லவா? அதற்காக வேண்டியே,
நைசாக பின்புறம் வந்தாள். சுற்றி சுற்றி பார்த்தாள். உள் செல்ல எந்த வழியும் இல்லை. ஒரு முறை கூட சுற்றி பார்த்தாள். ‘ம்கூம்’ எந்த வழியும் புலப்படவில்லை.
“எப்படியும் வெளியில வந்து தானே ஆகணும். முன்னால போயே நிற்போம்.”
எண்ணியவள் மறுபடியும் வந்து அந்த மரத்திற்கு பின்னால் நின்று கொள்ள, பத்து நிமிடத்தில் ராஜேந்திரனும் வாணியும் முகம் எல்லாம் மத்தாப்பு பளிச்சிட்டது போல சந்தோஷமாக வந்தார்கள்.
ஓவியாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. “அங்கு இரண்டு உயிரை கட்டிலில் முடக்கி போட்டுட்டு இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா போகிறதை பாரு.” மனசுக்குள் பொருமினாள். ஆனாலும் அவளின் அலாட் மனது அடுத்து எப்படியும் அவன் வருவான். இவர்களை ஏவி விட்டவன் வருவான்.
என்று தான் காவல் இருந்தது.
ஆனால் அரை மணி நேரம் ஆன பிறகும் அவன் வெளிவரவே இல்லை. வரமாட்டானா? மனதுக்குள் கேட்டவள் மறுபடியும் அரை மணி நேரம் அவனுக்காக காத்திருந்தாள். இதற்கு மேல் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என உணர்ந்து, மறுபடியும் பின்பக்கம் வந்தாள். கட்டையாக இருந்த ஒரு பக்க கம்பவுண்ட் சுவரை தாண்டுவதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. கஷ்டம் தான். ஆனால் வேறு வழியும் இல்லை.
நான்கு முறை முயற்சிக்கு பின் காம்பவுண்டுக்குள் குதித்தாள். உடைந்து போன பழைய சாமான்களை தவிர அங்கு வேறு ஒன்றுமில்லை. மெல்ல மெல்ல நகர்ந்து ராஜேந்திரனும் வாணியும் வெளிவந்த வாசலுக்கு பக்கத்தில் வந்தாள். உள்ளே எந்த சத்தமும் இல்லை. ஆள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.
“ஒருவேளை கிளம்பி போயிருப்பானோ…’
எண்ணியவள் திறந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே பார்வையை விட்ட போது தான், அந்த பார்வையில் பட்ட மனிதனை பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டாள். இவருக்கும் எனக்கும் என்ன பகை. உள் நெஞ்சம் நொடியில் கேட்க, முன்னால் இருந்தவரோ போதையின் உச்சத்தில் தள்ளாடியவாறு அமர்ந்திருந்தார்.
அதே நேரம்,
தீ காயங்களால் உருக்குலைந்து போய் கிடந்த தன்னவன் அருகில் கண்ணில் ஜலத்தோடு நெருங்கினாள் திலகா. அவன் முகத்தை பார்க்க முடியவில்லை. அக்னி மொத்தமாய் அவன் அழகை கொள்ளை கொண்டிருந்தது. தன் முன்னால் அழகு சிரிப்புடன் வசீகரித்து நின்ற நொடிகள் எல்லாம் மன கண்ணில் வந்து வந்து மறைந்தது. அழுகையை அவளால் கண்ரோல் பண்ணவே முடியவில்லை.
குலுங்கி குலுங்கி அழுதவளை பாவமாக பார்த்தான். ‘அழாத’ என தலையை ஆட்டினான். பெண்ணவளுக்கு அவன் தலையசைவை பார்த்துமே அழுகை வந்தது.
“எல்லாம் என்னால தான். உன்னை என்னால இப்படி பாக்க முடியலடா. ஏண்டா… ஏண்டா எனக்காக வந்து இவ்வளவு கஷ்டப்படுறா? போறவா போய் தொலையட்டும்னு விட வேண்டியது தானே. பாரு… பாரு… உடம்பே ஆறா காயங்களா இருக்கு.”
மென்மையாய் வருடி விட்டாள்.
“அம்மா எங்க?”
மெல்லமாய் தான் குரல் வந்தது அவனிடமிருந்து.
“வெளியில இருக்காங்க…”
கண்ணீரோடே சொன்னாள்.
“நீ… நீ கிளம்பு. அவங்களை வர சொல்லு…”
சொல்ல முடியாமல் திணறலோடு சொன்னான்.
“ஏன்?…. ஏன்?….”
அவசரமாக கேட்டாள்.
“உனக்கு இந்த இடம் எல்லாம் செட்டாகாது. நீ கிளம்பு. பூரணமா குணமான பின்னால வா.”
“எதுக்கு? நான் எங்கேயும் போக மாட்டேன். உன் கூட தான் இருப்பேன்.”
“பிடிவாதம் பிடிக்காத திலகா. உன்னால இங்க இருக்க முடியாது. நாற்றம் குடலை புரட்டும்.”
“அந்த நாற்றத்துக்குள்ள தானே நீயும் இருக்கா. நானும் பழகிக்கிறேன். உன்னை தனியா விட்டுட்டு எல்லாம் போக முடியாது.”
“ஏய்… உன்னால சாப்பிட முடியாதுடி. ஏன் தண்ணீர் கூட குடிக்க முடியாது. சொன்னா கேளு. நீ கிளம்பு. என்னை அம்மா பாத்துப்பாங்க.”
“ஏன் நளன். என்னை வெறுத்துட்டியா? இவள் மேல வச்சிருந்த பைத்தியகாரதனமான காதல் தான் இப்படி படுக்கவச்சிதுணு நினைச்சி என்னை ஒதுக்கப்பாக்குறியா?”
கண்ணில் ஜலத்தோடு கேட்டவளை வலியோடு நோக்கியவன்,
“பைத்தியம் மாதிரி பேசாத. உன்னை வெறுக்கிறதா? உன் நல்லதுக்கு தான் சொல்றேன். கொஞ்ச நாள் நீ என்னை பார்க்க வராத… தாங்கிட மாட்டா.”
“உன்னை பார்க்காம அந்த சொகுசு அறையில இருக்கிறதை தான் நான் தாங்கிக்க மாட்டேன். என் புருஷனுக்கு என் கையால பணிவிடை செய்ததை தாங்கிப்பேன்.”
அழுகையினூடே சொன்னவளை விழி நீரோடு பார்த்தவன்.
“சொன்னா கேட்க மாட்டியா?”
இயலாமையோடு சொன்னவனை காதலோடு நோக்கியவள்,
“இப்ப என்ன நான் இங்க இருந்து சாப்பிட்டிட மாட்டேனு நினைக்கிறா? அவ்வளவு தானே.”
சொன்னவள் நர்ஸை அழைத்து பார்வதியிடம் இருந்து இட்லியை வாங்கி வரச் சொல்லி, அவன் முன் அந்த நாற்றத்தில் இருந்தே உண்ணத் தொடங்கினாள்.
வெளியில் கூட செல்லாமல் தன் அருகில் இருந்தே அந்த நாற்றத்தை பொருட்படுத்தாது தனக்காக சாப்பிடும் தன்னவளை நெஞ்சின் பாரத்தோடு பார்த்திருந்தான் நளன்.
அதே நேரம்,
தன் அறையில் ரோலிங் செயரில் கண்மூடி அமர்ந்திருந்த ஓவியாவிடம் சுந்தரி வந்து முகுந்தன் அழைப்பதாக சொல்ல, மெல்ல கண்திறந்த ஒவியா மனதை ஒரு நிலைப்படுத்தி தன்னை நார்மலாக்கி கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவோடு முகுந்தன் அறைக்குள் நுழைந்தாள்.
“உட்காரு ஓவியா…”
அவன் பேச்சில் தெரிந்த ஒருமையும், அவன் முகம் தாங்கி நின்ற ஆர்வத்தையும் ஒரு முறை பார்த்தவள், மனதுக்குள் தீயாய் தகதகத்து கொண்டிருந்த எண்ணங்களை அழுத்தி உட்கார வைத்து விட்டு, அவன் மேல் தன் பார்வை போகாமல் பெரும்பாடுபட்டு அடக்கி கொண்டு,
அவன் முன் அமர்ந்தாள்.
அவளை ஒரு நொடி தான் பார்த்தான். அவளுள் எதுவோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது. மறுபடியும் கேள்வியோடு பார்த்தான். நிசப்தமாக அமர்ந்திருந்த அவளின் மெளனம் அவனுள் புயலை கிளப்பியது. அன்று கடைசியாய் காதலை அவளிடம் சொன்ன நொடி நினைவலையில் வந்தது. தனக்காக உருகி நின்ற அவள் பூமுகத்தை ஒரு முறை நினைவலையில் ஒட விட்டவன்.
“இல்லையே… நான் காதலை சொல்லும் போது இப்படி இல்லையே. எனக்காக ரெடியானது போல தானே இருந்தாள். அப்படினா இப்போ என்ன? ஒரு வேளை நளன் திலகா வாழ்வை யோசிப்பாளோ. இருக்கலாம். மெல்ல பேசி பார்க்கலாம். தீர்மானித்தவன்.
“எதுவும் பிரச்சினையா ஓவியா…”
என்றதும் சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் ஓவியா. அவன் கனிந்துருகும் காதலை தாங்கி நின்ற கண்களையும், மென்மொழியை தாங்கி நின்ற உதட்டையும் ஒரு நொடி ஆழமாக பார்த்தவள்,
“பிரச்சினை எதுவும் இல்ல சார். ஆனா வீட்டுல வற்புறுத்திட்டு இருக்காங்க. நான் கிளம்பணும். இன்னும் இரண்டே வாரத்துல கல்யாணத்தை வச்சிட்டு அப்படி அங்க என்னடி வேலை. கிளம்பிவாணு சொல்றாங்க. அவங்க சொல்லுறதும் நியாயம் தானே. மகேந்திரன் வேற விடாம வற்புறுத்திட்டிருக்காரு. போட்டோ சூட் எல்லாம் பண்ணணும் எப்போ வராணு கேட்கிறாரு. இன்னும் ரெண்டு நாளுல வந்திடுறேனு சொல்லி இருக்கேன். நீங்க வேற நளனோட நிலையில் ரொம்ப அப்செட்டாகி இருந்தீங்க. திலகாவுக்கு நடந்தது அங்கு இருக்கிறவங்களுக்கு தெரியாதுல… அதான் விடாம போன் அடிக்கிறாங்க. இந்த நேரம் எப்படி உங்களுட்ட கிளம்புறது பற்றி பேசுறதுணு தெரியல. அதான்…”
அவள் இழுவையாக நிறுத்த,
ஒரு நொடி அவளை மெளனமாக பார்த்தவன், பெருமூச்சு ஒன்றை விட்டவாறு எழுந்து,
“ஆக மிஸஸ் மகேந்திரன் ஆக நீ… சாரி… சாரி… நீங்க ரெடியாகிட்டீங்க. அப்படி தானே.”
அவன் வாயில் இருந்து ஒருமை மாறி தன்னை நீக்கி நிறுத்தும் நீங்க என்ற வார்த்தையை கேட்டதும் ஒரு நொடி கலங்கிய மனதை, சட்டென சுதாகரித்து கொண்டு,
“அது தீர்மானிக்கப்பட்ட ஒண்ணு சார். அதை இனி மாற்ற முடியாது.”
இப்போதும் அவள் பார்வை அவனில் இல்லை.
“ஒ… தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது சரி. அப்போ நான்…”
சொல்லும் போதே அவன் குரல் உடைய, ஒரு நொடி வந்த வலியை பெரும்பாடு பட்டு அடக்கியவள்,
“நான்… நான் போகணும் சார்.”
என்றாள் உடைந்த குரலில்,
“போங்க. மிஸஸ் மகேந்திரன். போங்க. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போங்க.”
அவன் தன்னை மீறி கத்தினான்.
“நான் என்ன முடிவு சொல்லுறது. எனக்கு போகணும்.”
என்றாள் பார்வையை படபடவென அலை பாய விட்டு… அவளை ஒரு முறை சுற்றி வந்தவன்,
“ம்… போகணும் இல்ல…”
என வெடித்தவன்,
“ம்…போங்க… போங்க…”
என உடைந்த குரலுக்கு மாறி, பின் மெல்லமாய் நிதானமான போது ஓவியா மெல்ல எழுந்தாள். அவனின் கோபத்தை சகிக்க முடியாமல் சட்டென எழுந்து கொண்டாலும் இன்னுமே அவளால் நகர முடியவில்லை. அவன் முகம் பார்க்க சகியாமல் அப்படியே மெளனமாய் அவள் நிற்க,
“போங்கணு சொல்றேன்ல்ல. இதுக்க மேல என் முன்னால வந்திடாதுங்க. போய் தொலைங்க…”
என்றான் ஆவேசமாக, ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்து விட துடித்த மனதை ரொம்ப கஷ்டப்பட்டே அடக்கியவள்,அவனை நிமிர்ந்து பார்க்காமலே வெளியேறி விட்டாள். உடைந்து விட்டான் முகுந்தன். சத்தியமாக இப்படி ஒரு ஓவியாவை அவன் எதிர்பார்க்கவில்லை. அன்று இவன் மனதை சொன்ன போது கூட உருகி குழைந்து தன் முன் நின்றவளா இப்படி பேசி கொண்டு போகிறாள் என்று தான் இருந்தது அவனுக்கு. அதனாலே அடுத்து வந்த மூணு மணி நேரமும் அந்த அறையிலே குமைந்து கொண்டிருந்தான்.
அதன் பின் மனதை ஒரு வழியாக நார்மலாக்கி விட்டு வெளி வந்த போது அவள் கிளம்பி விட்டாள் என்ற விபரம் கிடைத்தது. அவளை தடுத்து நிறுத்தும் எண்ணமும் அவனில் இல்லை. தேடி செல்லும் மனமும் இல்லை. நளனின் நிலையால் ரொம்பவே நொந்து போயிருந்தவனுக்கு ஓவியாவின் ஒதுக்கல் பெரிய வலியை கொடுத்தது. அதனாலே அவளை தடுத்து நிறுத்த அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நேரே நளனை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்தான். டாக்டரிடம் நளன் உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு அவனை பார்க்கும் ஆவலில் அவன் இருக்கும் அறைக்கு வந்தான்.
இப்போதும் கூடவே திலகா இருந்தாள். அதிலும் அவனுக்கு எல்லாமுமாய் இருந்தாள். அதை பார்க்க பார்க்க அவனுக்கு பொறாமையும் வந்தது. எப்படியான ஒரு புரிதல். இரண்டு பேருக்குமான அந்த உறவின் நெருக்கம் அவனை இன்னுமே ஆச்சரியத்தில் மூழ்க செய்தது.
“வாங்க சார். உட்காருங்க.”
திலகா தான் உபசரித்தாள்.
விசாரிப்பு முடிந்து அவன் செயரில் அமர்ந்த போது,
“என்னடா ஒவியா மேடம் வரலியா?”
நளன் தான் கேட்டான். அவன் வாடி இருந்த முகத்தை பார்த்தவாறு,
“ அவா கிளம்பிட்டா…”
என்றான் மொட்டையாக,
“கிளம்பிட்டாங்களா? எங்க?
என்றான் விழி உயர்த்தி, இவனின் பாவனையில் தான் திலகாவும் முகுந்தனை பார்த்தாள். இவனோ இருவரின் முகத்தையும் பார்த்து பேச சங்கடப்பட்டவன் போல விழியை தாழ்த்தியவாறு,
“ம்… மிஸஸ். மகேந்திரன் ஆக அவசரப்பட்டாங்க. அதான் அனுப்பி வச்சிட்டேன். இப்போ ஊருக்கு கிளம்பியிருப்பாங்க.”
என்றான் வெறுமையாய். அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்தாலும் நம்ப முடியாமல் பார்த்த திலகா குழப்பமாகி நளனை பார்த்தாள். நளனுக்கே இவன் சொல்வதை நம்ப முடியவில்லை. திலகா இப்படி இருக்கும் சூழலில் அவள் விட்டு போவாளா என்று தான் இருந்தது.
அதனாலே நம்ப முடியாதவன் போல,
“என்னடா சொல்லுறா?”
என்றான் அவளுக்கும் சேர்த்து,
“போட்டும் விடுடா? மனசு முழுசும் மகேந்திரனை வச்சிட்டு இருக்கிறவளை பிடிச்சி இங்க வச்சா எதுவும் மாறி போகாதுல. அதான் விட்டுட்டேன். அவா போகட்டும். போய் தொலையட்டும்.”
என்றான் வெறுப்பின் உச்சத்தில்,
இல்லடா. அவங்க எப்படி?… நீ எப்படி?
வார்த்தையை முழுமையாக்காமல் நண்பன் கேட்ட கேள்வியை புரிந்து கொண்ட முகுந்தன் ஒரு விரக்தி சிரிப்போடு…
“எப்படினா. போகணும்னு கேட்டா. போய் தொலைனு சொல்லிட்டு வந்துட்டேன். அவளும் கிளம்பிட்டா. இப்ப என்னை, என்ன பண்ண சொல்லுறா? ஆல்ரெடி நானே நொந்து போய் இருக்கேன். இதுக்கு இடையிலே இவளோட மகேந்திரன் புராணத்தை கேட்க சகிக்கல. அதான் அனுப்பி வச்சிட்டேன். போய் தொலையட்டும். அவள் வந்த நாளுல இருந்தே நான் நானா இல்ல. விடு. அவளை பற்றி பேசுறதை விடு. நான் டாக்டரை பார்த்தேன். இன்னும் இரண்டு நாளுல வீட்டுக்கு கிளம்பலாம்ணு சொல்லிட்டார். ஆனா காயங்கள் ஆற இரண்டு மூணு மாசமாவது ஆகும்ணு சொல்றாரு.
“எங்களுட்டயும் சொன்னார்டா.”
“நான் மும்பை கிளம்புறேன். வருகிறதுக்கு இரண்டு நாள் ஆகும். வந்ததும் உங்களை வீட்டுல வந்து பாக்குறேன்.”
என்றவன் அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பினான். திலகா தான் போகும் அவனை புரியாமல் பார்த்தாள்.
“இவர் ஏன் இப்படி பேசுகிறார்.”
என்ற குழப்பம் அவள் முகத்தில் தெளிவின்மையை காட்ட,
“என்னாச்சுமா. முகம் ஒரு மாதிரி மாறுது.”
என்ற நளனை நிமிர்ந்து பார்த்தவள்.
“ஆமா ?… முகுந்தன் சார். ஏன் அப்படி பேசுனாரு. அவருக்கும் ஓவியாவுக்கும் அப்படி என்ன பிணக்கு.”
என புரியாமல் கேட்டவளை சிரிப்போடு பார்த்தவன்,
“உனக்கு தெரியாதா? உன் தோழி உனட்ட எதுவும் சொல்லலியா?”
என்றான் அடக்கப்பட்ட வலியோடு,
“இல்லையே…”
என்றவளை பார்த்து,
“முகுந்தன் உன் பிரண்டை உயிருக்குயிரா லவ் பண்ணுறான்.”
“என்னது? முகுந்த் சாரா?”
“ம்…ம்… ரொம்ப ஆழமா?”
“ஒ… அது அந்த பைத்தியகாரிக்கு தெரியுமா?”
“ம்… தெரியும். அவனே சொன்னான். அவன் காதலை ஏற்றுக் கொள்ள முடியாதுணு சொல்லிட்டு தான் உன் பிரண்ட் கிளம்பி போயிருக்காங்க.”
“அப்புறம். நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு இரண்டு வாரம் இருக்கும் நேரம் காதலை சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அவள் செய்தது சரி தான்.”
*அவங்க செய்தது தப்புனு நானும் சொல்லல. ஆனா அவன் காதலுக்கு கொஞ்சம் இம்பார்ட்டென்ட் கொடுத்திருக்கலாம்.”
“ கொடுத்து…”
திலகா கோபமாக பார்க்க,
“கொடுத்திருந்தா. நம்ம காதலை போல அவங்க காதலும் சக்சஸாகியிருக்கும்.”
“என்ன பேசுறீங்க நளன். இதுக்கு மேல அவள் ஏத்துகிட்டா அது எவ்வளவு பிரச்சினை ஆகியிருக்கும் தெரியுமா?”
“பிரச்சினையை பார்த்து பயப்படுறவன் இல்ல முகுந்தன். எல்லா பிரச்சினையையும் அவனே பாத்திருப்பான். மாப்பிள்ளை வீட்டுல பேசி புரிய வைக்கிறதுல இருந்து, ஓவியா குடும்பத்தை சரிகட்டுறது வரை எல்லாத்தையும் அவனே பண்ணிருப்பான். அதுக்கான ஏற்பாட்டை எல்லாம் செய்ய ரெடியா தான் இருந்தான். ஆனா இவங்க தன் காதலை துச்சமா நினைச்சி தூக்கி எறிஞ்சிட்டு கிளம்புவாங்கணு சத்தியமா எதிர்பார்த்திருக்க மாட்டான். அந்த அளவு அவங்களை நம்புனான். அவங்க மனசுல நான் இருக்கேனு அடிச்சி சொன்னான். அதனால தான் இவ்வளவு கோபப்பட்டுட்டு போறான்.”
“………….”
“நீ அவங்க இனி வர மாட்டாங்கனு சொல்லுறது வரை அவன் ஓவியா அவனை விட்டு போயிட்டானு நினைச்சி கூட பாத்திருக்க மாட்டான். பக்கத்துல இருக்கிறவளிடம் பதமா சொல்லிடலாம்ணு நினைச்சிட்டிருந்தவன் தலையில நீ பெரிய குண்டா தூக்கி போட்டா பாரு. தாங்க முடியாம உடைஞ்சி அழுதான். அப்படிப்பட்டவனை மொத்தமா விட்டுட்டு போயிட்டாங்கனு இருக்கிறப்ப அவனோட மனநிலையை கொஞ்சம் நீ நினைச்சி பாரு திலகா. பையன் தாடி தான் வைக்கல. ஆனா தேவதாஸா மாறிட்டான். இன்று மட்டும் நீ அவன் கூட இருந்தா புலம்பியே உன்னை சாகடிச்சிடுவான். இப்போ அப்படி புலம்பவும் யாரும் இல்லாததால தான் மச்சான் மனம் நொந்து போறான். விடு. சீக்கிரம் சரியாகிடுவான்.
என்றதும் ஒரு நொடி அமைதியானவள்,
“உங்க பிரண்ட் நினைச்சது உண்மை தான். அவளோட மனசுல அவர் இருந்தார் தான். இப்போ இல்ல ஆரம்பத்துல அவர் மேல ஒரு ஈர்ப்பு இருந்தது நிஜம்.
“என்ன சொல்லுறா திலகா… மேடம் முகுந்தன் மேல் ஆசைப்பட்டாங்களா?”
“இடிபாடுகளுல சிக்கிட்ட போது அவளுள் ஒரு உணர்வு வந்தது நிஜம். அது… அன்று நீங்க சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டீங்கணு சொல்லி அவள் வந்து எனக்கிட்ட வருத்தமா பேசுனதுல இருந்தே எனக்கு தெரிஞ்சிது. அப்புறமா… அவரோட வசதி அவள் மனசுல லேசா விட்ட ஈர்ப்பை அழிச்சிடுச்சி நினைக்கிறேன். இப்போ அப்படி எந்த எண்ணமும் அவளுட்ட இல்லை. உங்க பிரண்டை ஒதுங்கிட சொல்லுங்க. இதுக்க மேல அவளோட வாழ்க்கையில வருகிறது நல்லா இருக்காது.”
“அது தெரிஞ்சி தான் ஒதுங்க நினைச்சிருப்பான்.”
“நல்லது. இப்படியே இருக்க சொல்லுங்கள்.
சொன்னவளின் உள்ளத்தில் புசுபுசுவென எதுவோ ஊர்வது போல இருந்தது. இதுவரை ஒவியா மேல் இருந்த கோபம் இப்போது முகுந்தன் மேல் ஏறி அமர்ந்தது.
அதே நேரம்,
தன் காரில் இருந்து இறங்கி எரிந்து கிடந்த குடோனை நோக்கி நடந்தான் முகுந்தன். அவனின் வரவை அறிந்து ஒடி வந்த காளி,
“என்னங்கைய்யா. இந்த நேரம் வந்திருக்கீங்க.”
என்றவனுக்கு எந்த மறுமொழியும் கூறாமல் உள்ளே நுழைந்தவனை கிலியோடு பார்த்து நின்றான் காளி. அவனுக்கு தெரியும். சின்ன முதலாளி எதுவும் காரணம் இல்லாமல் வர மாட்டார் என்று,
அவன் சந்தேகத்தை உறுதி செய்வது போல் அடுத்தடுத்து வண்டிகள் வந்து நிற்க, பயத்தோடு பார்த்தான்.
“உள்ளால வாருங்க.”
வந்ததில் வளர்ந்த ஒரு மனிதன் தான் வந்தவர்களை உள் அழைத்து சென்றான். முகுந்தன் இவர்களுக்காக காத்திருப்பது தெரிந்தது.
“வாருங்க…”
என வந்தவர்களை முகுந்தன் உள் அழைக்க, அந்த வளர்ந்த மனிதன் மட்டும் வெளியில் நின்று சுற்றி சுற்றி நோட்டமிட்டான். அவனை பயத்தோடு பார்த்த காளி மெல்ல அவன் அருகில் வந்தான்.
“என்ன விசயம் சார். சின்ன முதலாளியே நேர்ல வந்திருக்காங்க.”
என்றவனை திரும்பி பார்த்த அந்த வளர்ந்த மனிதன்,
“நீங்க…”
என கேட்க,
நான் இந்த குடோன்ல்ல தான் பத்து வருஷமா வேலை பாக்குறேன் சார்.
“ஒ… உங்க பெயரு…”
“காளி சார்…”
“ம்…”
“சார்…நான்… நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலியே.”
காளி தயங்கியவாறு தான் கேட்டான். அவனை திரும்பி ஏற இறங்க பார்த்த அந்த வளர்ந்த மனிதர், ஒரு நிமிட அமைதிக்கு பின்,
“கட்டிடத்தை சரிபடுத்த போறாங்க. அது பற்றி பேச தான் ஆட்களை வரவச்சிருக்காங்க.”
என்றதும் மன நிறைவோடு வெளியே வந்தான். அதே நேரம் உள்ளே சென்ற நான்கு பேரோடு வெளிப்பட்ட முகுந்தன் அவர்களை அனுப்பி வைத்து விட்டு நரேனோடு உள்ளே நுழைந்தான்.
“என்னாச்சு நரேன். ஏதாவது உருப்படியான விசயம் அகப்பட்டுச்சா.”
“இன்னும் இல்ல சார். ஆனா கண்டுபிடிக்காம விட மாட்டேன்.”
“நல்லது. சீக்கிரம் சொல்லு. ஒரே குழப்பமா இருக்கு.”
“காளி பற்றி என்ன நினைக்கிறீங்க சார்.”
“யாரையும் என்னால தப்பு சொல்ல முடியாது. காரணம் இதுவரை இப்படியான எதுவும் என் தொழிற் கூடங்களுல நடந்தது இல்லை. நிச்சயம் இது தன்னிச்சையா நடந்ததும்ணும் சொல்ல மாட்டேன். காரணம் தீப்பிடித்து எரிய கூடிய நிலையில என் குடோனை நான் அமைக்கல. அதையும் மீறி பிடிச்சிருக்குணா உண்மையை தெரிய வேண்டியது அவசியம் தானே. இரண்டு உசுரோட விளையாடி இருக்காங்க. அது யாரா இருந்தாலும் நான் சும்மா விட மாட்டேன். நீங்க கொஞ்சம் மெனகெட்டு எனக்காக வேலை பாருங்க. உங்களுக்கு டிப்பாட்மென்ட்டுல கொடுக்கிற சம்பளத்தோட இரண்டு மடங்கு அதிகமா சம்பளம் தரேன்.”
“ நான் உங்க சம்பளத்துக்காக வரலணு உங்களுக்கு நல்லா தெரியும். இரண்டு மாசம் டிப்பாட்மென்ட்ல லீவு போட்டுட்டு உங்க வேலை பார்க்க வந்ததே உங்க குழப்பத்தை தீர்க்க தான்.”
“அது எனக்கு தெரியும் நரேன்.”
“சந்தோஷம். நீங்க கிளம்புங்க. நான் இன்றே என் வேலையை பார்க்க ஆரம்பிக்கிறேன்.”
என்றதும் முகுந்தன் சிரித்து கொண்டு வெளியேற, நரேன் குடோனுக்குள் நடந்தான்
அதே நேரம்,
தன் வீட்டு திண்ணையில் எல்லாவற்றையும் பறிக் கொடுத்தவள் போல் முற்றத்தையே வெறித்து கொண்டு அமர்ந்திருந்தாள் ஓவியா. முன்னால் கவர்ந்திழுத்து கொண்டிருக்கும் எந்த மலரும் இன்று அவளை கவர்ந்திருக்கவில்லை போதும். பட்டாம்பூச்சியின் முத்தமிடும் நளினத்தில் சிலிர்த்து விரிந்து நின்ற மலர் எதையும் அவள் பார்க்கவும் இல்லை. அவற்றின் கவர்ச்சி அவளை வசீகரிக்கவும் இல்லை. ஆனாலும், தோட்டத்தை தான் அவள் கண்கள் முறைத்து கொண்டிருந்தது. மனம் இங்கு இல்லை என்பது போல அமர்ந்திருந்தாள்.
அவள் சிந்தனையிலும் விழிநீரிலும் காதலோடு அவள் முன் நின்ற முகுந்தனே நின்றான். என்ன முயன்றும் அவனை அவளிலிருந்து அப்புறப்படுத்தவே முடியவில்லை அவளால். என்ன கொடுமையான வேதனை இது. மனம் முழுதும் ரணவேதனையாக இருந்தது. கண்கள் இரண்டும் குளம் கட்டி கீழே இறங்கட்டுமா என அனுமதி கேட்டு விழியோரத்தில் நின்றது.
கண்களை இறுக மூடி தன் வேதனையை விழுங்கி விட பார்க்கிறாள். ஆனால் அது போவேனா என்று அடம்பிடித்து அவள் தொண்டை குழிக்குள் சிக்கி அவளை திணறடித்து கொண்டிருந்தது.
கிளம்பி போ என முகுந்தன் கோபத்தில் கர்சித்த நொடியே திரும்ப திரும்ப முளைத்து அவளை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது.
அவன் கோபமும் அவனின் பாராமுகமும் அவளை உயிரோடு வதைத்துக் கொண்டிருந்தது. கண்களில் நீரோடு அவன் சொன்ன வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் நினைத்தவள் அனலில் விழுந்த புழு போல துடித்தாள்.
போய் தொலை என்ற கடைசி வார்த்தைக்கு பின் அவனில் இருந்து நகர்ந்து, எப்படி வெளி வந்து ரயில் ஏறி கேரளா வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அந்த அளவு உடைந்து இருந்தாள். எப்படியும் பிரிவு தான் நிகழும் எனில் எதற்காக அவன் காதலை தனக்கு தர வேண்டும் என உலகில் உள்ள அத்தனை ஆண்டவரையும் மனதால் சபித்தாள்.
அவன் மனதில் நான் இல்லை.
என்பதோடு என்னை பிரித்து அனுப்பி இருக்க கூடாதா? அவன் காதலை காட்டியா என்னை பிரித்தெரிய வேண்டும். கடவுளே வலிக்கிறதே. அவனை விட்டு மொத்தமாக போகிறோம் என்ற எண்ணமே என் ஈரகுலையை அறுத்து எறிகிறதே.
ஒவியா வாய் விட்டு கதற முடியாமல், வாய் பொத்தி குலுங்கினாள். அவள் அழுகை நீண்டு கொண்டே போனது. வீட்டில் யாரும் இல்லாததால் அவளை அரவணைக்கும் கரமும் இல்லாமல் போனது. இவள் வருவது தெரியாது என்பதால் அரிசந்திரன் கூட தன் நண்பனை பார்க்க சென்றிருந்தார். யாரும் இல்லா அந்த வீட்டில் பொங்கி பொங்கி அழுது கொண்டிருந்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த திண்ணையிலே சரிந்து அப்படியே உறங்கியும் போனாள்.
மாலையில் வீடு வந்து சேர்ந்த எழிலரசி, மகளின் கோலம் கண்டு ஒடி வந்து அவள் அருகில் குனிந்து, அவளை உலுக்க, தூக்கம் கலைந்து எழுந்தவளுக்கு அப்போது தான் தெரிந்தது. தான் தன்னை மறந்து வெளியிலேயே தூங்கி விட்டோம் என்று.
“என்னடி இது கோலம். ஏன் இப்படி வெளியில வந் படுத்திருக்கிறா? உள்ளால போய் படு.”
என்றதும் எதுவும் பேசாமல் அவசரமாக எழுந்து வீட்டினுள் புகுந்தாள். முகத்தில் மலர்ச்சியை மொத்தமாக தொலைத்து, கொஞ்சம் கூட ஜீவனே இல்லாமல் போகும் மகளை கேள்வியோடு பார்த்தாள் எழிலரசி.
“என்னாச்சு இவளுக்கு. ஏன் இப்படி இருக்கிறா?”
யோசித்தவள் அவளோடே உள் நுழைய, தன் பின்னாலேயே தொடர்ந்து வரும் தாயை பார்த்தவள்,
“நல்லா தூக்கம் வருது. நான் தூங்க போறேன். அப்புறம் பேசலாம்.”
என அறை கதவை சாத்தி விட, எழிலரசி சிறிது நேரம் அப்படியே அதிலேயே நின்றாள். பின் திரும்பி கிச்சனுக்கு வந்தாள். ஆனாலும் மனது குழம்பி தவித்துக் கொண்டே இருந்தது. அந்த தவிப்பே கணவர் வீட்டிற்குள் நுழைந்ததும் அவரிடம் புலம்ப வைத்தது. மனைவி சொன்ன அனைத்தையும் நிதானமாக கேட்டவர்,
“விடு. ஒரு ஆபத்தும் வராம திரும்பி வந்திருக்காளே அதை நினைச்சி சந்தோஷப்படு. அவள் வந்து சேர்கிற வரை என் உசுரு என் கூட்டுல இல்ல தெரியுமா?.”
வேதனையோடு சொன்ன கணவரின் கூற்று சரிதான் என்பது போல,
“அதுவும் சரி தான்.”
என எழிலரசி சமையல் கட்டுக்குள் மறுபடியும் புகுந்து கொண்டாள். அரிசந்திரன் வெளியே வந்தார். ஹாலை தாண்டி இருந்த அறையை பார்த்தார். அது இன்னும் திறக்கப்படாமல் இருந்தது.
யோசனையோடு கட்டிலில் அமர்ந்தார். பல மணி நேரம் கழித்தும் ஓவியா அறை திறக்கப்படாமலே இருக்க, அரிசந்திரனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. மெல்ல எழுந்து மகள் அறைக்கு வந்தார். சற்று தயங்கியே, பின் குரல் கொடுத்தார். கொஞ்ச நேரம் உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. அரிசந்திரனுக்கு கலக்கம் மூழ,
படார்… படார்… என கதவை பலம் கொண்ட மட்டும் அடித்தார். உள்ளிருந்து எந்த குரலும் வெளிவரவில்லை. அரிசந்திரனுக்கு பயம் நெஞ்சை கவ்வ,
ஓவியா… கதவை திற… ஒவியா…
என அலறியே விட, கிச்சனில் வேலையாக இந்த எழிலரசியும் பதற்றத்தோடு வெளியே வந்தாள்.
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel