வணக்கம் வாசகர்களே!
கேரளா வந்து விட்ட ஓவியா மனதுக்குள்ளே ஒடுங்க அப்படி மெட்ராஸில் என்ன தான் நடந்தது? முகுந்தனை ஒதுக்கியதால் வந்த வலியா? அல்லது உண்மையை தெரிந்து கொண்டதால் தெரிந்த வலியா?
கணவர் போட்ட கூச்சலில் பதற்றத்தோடு கிச்சனில் இருந்து ஹாலுக்கு விரைந்து வந்த எழிலரசி கணவர் மகளின் அறை முன் கூச்சலிட்டவாறு நிற்கவும், மகள் எந்த சத்தமும் கொடுக்காமல் இருப்பதையும் கண்டு பதற்றமாகி ஒடி அருகில் வந்த நேரம்,
ஓவியா இருந்த அறையின் கதவு லேசாக திறந்தது. அந்த திறப்பினூடே அவளின் முகம் பார்த்த பிறகே இருவரின் உசுரே திரும்ப வந்தது. முகத்தில் நிம்மதியை படரவிட்டவாறு மகளின் அருகில் ஒடி வந்தனர்.
ஆனாலும் அழுது அழுது சிவந்து போயிருந்த அவள் முகத்தை கண்டதும் அரிசந்திரன் பதட்டத்தின் உச்சத்திற்கு போனவர் போல்,
“என்னடா நடந்துச்சு. எதுக்குடா இம்புட்டு அழுறா? அப்பாட்ட சொல்லுடா? எதுனாலும் நான் சரிபடுத்துறேன்.”
கலங்கிய கண்களோடு துடிப்போடு சொன்ன தந்தையை பார்த்ததும் ஒடி வந்து அவரை கட்டி அணைத்து கொண்டு கதறி அழுதாள் ஓவியா. மகளின் அழுகையை பொறுக்க முடியாத எழிலரசி, அப்படி என்ன நடந்திருக்கும், தவிப்போடு மகளை பார்த்த நேரம், அரிசந்திரனோ இன்னும் பதட்டமாகி,
“என்னடா ஆச்சு. ஏண்டா அழுறா? அப்பாட்ட சொல்லுடா”
இப்போது கூட ஒவியாவால் பேச முடியவில்லை. அவள் தொண்டை அழுகையில் அடைத்தது. ஒவியாவின் நிலை பார்த்து இருவருமே கலவரப்பட,
“எழிலு… போய் தண்ணி எடுத்துட்டு வா.”
என்றதும் அவள் விரைந்து செல்ல, தோளில் கிடந்த மகளை அணைத்தவாறு தன் கட்டிலுக்கு வந்தவர் அவளை அதில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டார். இப்போதும் ஒவியாவின் தலை அவர் தோள்வளைவிலே இருந்தது.
எழிலரசி நீர் கொண்டு வர, அதை வாங்கி மகளை குடிக்க வைத்தவர், அவள் கொஞ்சம் நார்மலான பின்,
”என்னம்மா நடந்துச்சி… சொல்லுடா… எதுக்கு இப்படி அழுறா?”
கண்ணில் நீர் ததும்ப கேட்ட தந்தையை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவள்,
“ஏன்ப்பா… ஏன்ப்பா சக்கரவர்த்தி சார் வீடு தேடி வந்து மிரட்டுனதை என்கிட்ட நீங்க சொல்லல… அவருக்கு பயந்து தான் பொய் சொல்லி ஊருக்கு அழைச்சோம்னு ஏன்ப்பா எனட்ட சொல்லல… அவர் மகனை இதுக்கு மேல நான் நெருங்கிட கூடாதுணு தான் அவசரம் அவசரமா வரன் பார்த்து பேசி முடிச்சோம்னு ஏன்ப்பா எனட்ட சொல்லல… இதை எல்லாத்தையும் மறைச்சி என்னை அனுப்பி வச்சி தப்பு பண்ணிட்டீங்களேப்பா…
என்ற மனதிலிருக்கும் பாரத்தை சொல்ல முடியாமல் குலுங்கினாள் பெண்ணவள். அவளால் எப்படி இதை எல்லாம் தந்தையிடம் சொல்ல முடியும்.
இது எப்படி உனக்கு தெரியும் என கேட்டுவிட்டால், இப்போது அவர் அந்த குடோனில் தன்னிடம் காட்டிய கொடூர முகத்தை சொல்ல வேண்டுமே, அவர் உங்களிடம் சொன்னது போல என் உயிரை எடுக்கும் முடிவுக்கே சென்று திலகாவால் தான் காப்பாற்றப்பட்டதை சொல்ல வேண்டுமே. இதற்கு மேல் அங்கு இருந்தால் உங்களை இழந்து விடுவேன் என்று பயந்து தான் மனதின் காதலை மறைத்து வைத்து முகுந்தனிடம் வேறு முகம் காட்டி விட்டு வந்ததை சொல்ல வேண்டுமே. இதை எல்லாம் சொன்னால் இவர்கள் தாங்கி கொள்வார்களா? இல்லை. தந்தை தாங்கி கொள்ளவே மாட்டார். பேசாமல் இதை முழுங்கி விடுவது தான் நல்லது. என்று நினைத்தவள்,
தந்தையை வலியோடு பார்த்தாள்.மகளின் நிலையால் ரொம்பவே கலவரமானவர் பதட்டதோடு அவளை பார்க்க, தந்தைக்கு எதுவும் ஆகிவிட கூடாதே என்று மெல்லமாய் மெல்லமாய் தன்னை நார்மல் ஆக்கி கொண்டு, உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்திற்கு மாறி,
“இன்னும் இரண்டு வாரத்துல உங்களை பிரிகிறதை நினைச்சாலே அழுகை அழுகையா வருதுப்பா… என்னால தாங்க முடியல”
என மறுபடியும் அழுகைக்கு அவள் மாற,
இப்போது தான் எழிலுக்கும் அரிசந்திரனுக்கும் உசுரே வந்தது. தங்களிடம் வந்து அந்த பெரிய மனிதன் பிளாக்மெயில் செய்தது போல மகளிடமும் நடந்து கொண்டாரோ என பயந்த இருவர் விழியும் ஒரே நொடியில் ஒளிப் பெற்றன.
“இதுக்காக இம்புட்டு அழுதா? நாங்க ஒரு நொடி பயந்தே போயிட்டோம்.”
என்றவர் மகளை ஆறுதல் படுத்த ஆரம்பிக்க, எழிலரசி அவள் தலையை தட்டியவாறு உள்ளறைக்கு விரைந்தாள்.
அதே நேரம்
ஓவியாவின் செல்குரல் கொடுத்தது.
“எடும்மா… யாரு?”
என அரிசந்திரன் கேட்க,
அவன் பெயரை சொல்ல விரும்பாமல் செல்லை தந்தையிடம் கொடுத்தாள்.
“ஏய்…மாப்பிள்ளை. பேசுடா. அவர் என்ன நினைப்பாரு.”
ஆதங்கத்தோடு அவர் மகளை பார்க்க,
“இல்லப்பா… நீங்க பேசுங்க.”
என அவள் போனை அரிசந்திரன் கையில் கொடுத்து விட்டு சென்று விட, அரிசந்திரன் தயக்கத்தோடு போனை ஆண் செய்து காதுக்கு கொடுத்தவாறே வெளியேறினார்.
அதே நேரம்,
நரேன் கொண்டு வந்து நீட்டிய ஃபைல்ஸை பிரித்து பார்த்து கொண்டிருந்த முகுந்தன் முகம் மாறத் தொடங்கியது. ஒவியா தன்னை விட்டு மொத்தமாக போய் விட்டாள் என நினைத்தவனுக்கு நரேன் கொண்டு வந்து நீட்டிய ஃபைல்ஸ் சொன்ன விசயம் கிளர்ச்சியை தர, சட்டென இருந்த இடத்தில் இருந்து எழுந்தான்.
“விசயம் நிஜம் தானே நரேன்.”
‘ஆமாம்’ என்பது போல் நரேனும் தலையசைக்க, வெறி கொண்ட வேங்கை போல சீறியவன்.
“எழும்பு நரேன். கிளம்பலாம். நானும் உன்னோட வரேன். எனக்கும் அவனை ஒரு முறை பார்க்கணும். எவ்வளவு பக்காவா பிளான் பண்ணியிருக்கானுங்க. விட கூடாது. போலாம் கிளம்பு.
என்றதும் இருவரும் வெளியேற, அவர்கள் சென்ற ஹோட்டலில் சக்கரவர்த்தியும் அசோகனும் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்தனர். தந்தையை ஒரக்கண்ணால் பார்த்தவாறே தான் அவரை கடந்து போனான் முகுந்தன். அந்த ஐந்து ஸ்டார் ஹோட்டலில் மூன்றாவது மாடியில் எண்பதாவது அறையில் அவன் இருந்தான்.
அந்த அறை வாசலில் நின்ற நரேன் காதை கூர்மையாக்கி கதவின் அருகில் கொண்டு சென்ற அதே நேரம்,
“நான் மறக்கணும்… நான் அவரை மறக்கணும்… பிளீஸ் நான் அவரை மறக்கணும்…”
முப்பத்தெட்டாவது முறையாக நந்தி சிலையின் காதில் முணுமுணுத்து கொண்டிருந்தாள் ஓவியா. குறைந்தது நூறு முறையாவது அவர் காதில் ஒதி விட வேண்டும் என்று நினைத்து தான் நந்தியின் காதில் சொல்ல தொடங்கினாள். ஆனால் அதை சொல்லும் ஒவ்வொரு முறையும் கூட அவனையே நினைத்து கொண்டிருப்பதை உணராமல் சொல்லி கொண்டே இருந்தாள்.
காலை முதல் மாலை ஆகியும் அவள் மனதில் இருந்த வலி கொஞ்சம் கூட நகராமல் இருக்க கண்டதும் அரிசந்திரன் தான் அவளை வற்புறுத்தி கோவிலுக்கு அனுப்பி வைத்தார். இப்படியே இருந்தால் முகுந்தன் பைத்தியம் பிடித்து விடும் என்றே தான் அவளும் கோயிலுக்கு காயத்ரியோடு வந்திருந்தாள்.
இவள் நந்தி சிலையை விட்டு நகராமல் நிற்க, காயத்ரி உள்ளே ஒடி விட்டாள். கண்ணீர் மல்க தன் காது அருகில் பல முறை கருணை மனு கொடுத்தவள் மேல் நந்திதேவரே இரக்கம் கொண்டாரோ என்னவோ, அவள் கையில் இருந்த செல் குரல் கொடுத்தது. அவசரமாக எடுத்தாள்.
“சே… இவனா?”
என்றவள் முகம் சுருங்க அதை ஆப் செய்தாள்.
“இவனுக்கு வேற வேலையே இல்லையா?. காலையில இருந்து இதோட எத்தனை முறை அடிச்சிட்டான். எடுக்கலனா விட மாட்டானா? ஆப் பண்ணி தொலைக்கலாம்ணா மனசு கேட்க மாட்டேங்குது. வேற யாராவது அடிச்சா எப்படி தெரிஞ்சிக்கிறது.”
ஆமா?அப்படி இவளோட மனசு யாரை தேடுது. நந்திதேவரே அவளை கலக்கமாக பாத்திருக்க வேண்டும்.
“நாம தான் எதிர்பார்க்கிறோம் அந்த சனியன் போன் அடிச்சி பேசும்ணு . ஆனா அது நான் வந்த விசயத்தையே தெரிந்து கொண்டதோ என்னவோ. அது சரி நளனோட அருகாமை கிடைச்சா அது உலகத்தையே மறந்திடும். இந்த இடையில நம்ம நியாபகம் இருக்குமா என்ன?”
ஒ… பிரண்டை தேடுறாளா? பிரண்ட் மேல அம்புட்டு பாசமா?
என நினைக்கும் முன்,
“சனியன் போன் அடிச்சா அங்குள்ள நிலவரம் தெரிஞ்சிக்கலாம்ணு நினைச்சா. அது அடிச்சி தொலைக்க மாட்டேங்குது, இதோட போனை எதிர் பார்த்து எவன் எவனோட காலையோ அட்டன் பண்ண வேண்டி இருக்கு.
குறைப்பட்டவள் திலகாவை திட்டி தீர்த்தாள். அவள் மனம் திலகா பற்றி அறிய ஆசைப்படவில்லை. அவள் வழி முகுந்தன் நிலையை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறது.
அட ராமா?
இப்போ தான் என் காதுல விடாம, அவனை மறக்கணும்னு கேட்டா? இப்போ பாரு வருகிற போன் ஒலி எல்லாம் அவனோட செய்தியை சுமந்து வந்து விடாதாணு ஏங்கி நிக்குறா? என்ன வினோதமான மனது.
இவளின் உள்ளம் தெரியாமலோ என்னவோ திலகா இவளுக்கு அடிக்கவே இல்லை. அதற்கு காரணம் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பியது தான். அவள் அங்கு முறுக்கி கொண்டிருக்க, இவள் இங்கு கோபத்தில் இருக்க, அவர்களை விட்டு இரு நாள் முழுதாய் முடிந்து போயிருந்தது.
அன்று தான் நளனை ஹாஸ்பிட்டலில் இருந்து அழைத்து கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தாள் திலகா. பல நாளுக்கு பின் அறைக்குள் நுழைந்ததும் ஒவியாவின் எண்ணமே வந்தது.
“கிளம்பி போய் ஒரு வாரம் முழுதாய் முடிந்தும் ஒரு போன் பண்ணி எப்படி இருக்காணு ஒரு வார்த்தை கேட்டாளா? எப்படி கேட்பா? இப்போ அவளோட சிந்தனையிலே நான் இருக்க மாட்டேன். இருடி. எப்பவாவது என் நியாபகம் வரும் இல்லையா? அப்போ வா. அன்று இருக்கு உனக்கு.”
மனது கர்வி கொண்ட நேரம் சரியாக, ஹாலிங்பெல் அடித்தது.
“இந்த நேரம் யாரா இருக்கும்.”
எண்ணியவள் வேகமாக வந்து கதவை திறந்தாள். வெளியில் நின்றவளை பார்த்து அதிசயித்தவாறு,
“ஓவியா…”
வியப்பு மேலிட தன் உருட்டு வண்டியை அவள் திருப்பிய போது தான் பின்னால் மகேந்திரன் வருவதுமே அவளுக்கும் தெரிந்தது. மாப்பிள்ளையோடு வரும் அவளை கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்றவள்.
“வாங்க… வாங்க… உட்காருங்க. என்னடி சப்பிரைஸா வந்திருக்கா.”
என்ற தோழியை மலர்ந்த முகத்தோடு பார்த்த ஓவியா.
“திருமண பத்திரிகை கொடுக்க வந்தேன். இவர் தான் எல்லாருக்கும் கொடுத்தே ஆகணும்னு கூட்டிட்டு வந்தார்.”
என மகேந்திரனை காட்ட,
“ம்… அவருக்கு தெரிஞ்சிருக்கு பழகுனவங்களை மறக்க கூடாதுனு. உனக்கு தெரியலியே… சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிட்டா. எனட்ட கூட ஒரு வார்த்தை உனக்கு சொல்ல தோணல்ல. உனட்ட பேசவே கூடாதுணு தான் நினைச்சேன். மாப்பிள்ளை சார் வந்ததால தப்பிச்சா.”
“அதான் இப்போ வந்துட்டேன்ல்ல.”
என்றவளை முறைத்தவள்,
“அதுனால தப்பிச்சா மவளே. சரி இரு. குடிக்க ஏதாவது கொண்டு வரேன்.”
என்றவளை தடுத்து நிறுத்தி,
“நான் எடுத்துட்டு வரேன்.”
என உள்ளே சென்ற ஓவியா அடுத்த நொடி இரு கப்பில் ஜுஸோடு வர,
“அப்புறம்…”
என்றாள் திலகா.
“குடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தான். ஆபிஸ்க்கு பத்திரிகை வச்சிட்டு. இவரோட சொந்தம் கொஞ்சம் மெட்ராஸ்ல இருக்குதாம். அவங்களுக்கும் பத்திரிகை கொடுத்துட்டு கிளம்பிட வேண்டியது தான். நீ அடுத்த வாரமே கிளம்பி வந்திடு.”
“இல்லடி. நளனை இந்த சூழல்ல விட்டுட்டு.”
“ஒ.கே… இரண்டு நாள் முன்னாடியாவது வந்திடு.”
“டண்.”
என்றவள் அவர்கள் குடித்து முடித்த கப்பை வாங்க, இருவரும் கிளம்பினர்.
அவர்களோடு சேர்ந்து திலகாவும் அலுவலகம் வந்தாள்.
அலுவலகம் நுழைந்ததுமே ஒவியா தடுமாற ஆரம்பித்தாள். வீடு வரை கூட நார்மலாக இருப்பவள் போல் காட்டி கொண்ட அவளால் இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த நொடியில் இருந்து நார்மலாக இருக்க முடியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் தடுமாறினாள். அவளின் தடுமாற்றம் திலகாவுக்கு வினோதமாக தெரிந்தது. அதிலும் முகுந்தன் சார் முன் அவள் பத்திரிகையை நீட்டும் போது அவள் முகம் அடைந்த மாறுதலை பார்த்ததும் அவளுள் எதுவோ நெருடத் தொடங்கியது. ஒவியாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள்.
“அம்மா அப்பாவோட சேர்ந்து நீங்க நிச்சயம் என் கல்யாணத்துக்கு வரணும்.”
இத்தனை வார்த்தைகளையும் அவர் முன் சொல்லும் முன் வியர்வையில் அவள் உடலே குளித்து விட்டது. முகுந்தன் முகம் சொல்லவே வேணாம். அவளை ஊடுருவி பார்த்தவாறே நின்றது.
“அப்போ நாங்க கிளம்புறோம்.”
மகேந்திரன் தான் அந்த நொடிக்கு விடுதலை கொடுத்தான்.
“அப்பா தப்பிச்சோம் என்பது போல அவள் அரக்க பறக்க ஒடி வெளியேறுவதை பார்த்து உள்ளுக்குள் குழம்பி தவித்தாள் திலகா. பொம்மை போல வெளிவந்தவள் நேரே பாத்ரூமுக்குள் போய் ஒளிந்து கொள்ள, திலகாவுக்கு என்னவோ புரிவது போல் இருந்தது. ஒவியா வெளிவரும் நொடிக்காக காத்திருந்தாள். அவளும் அதிக நேரம் எடுத்து கொண்டே வெளி வந்தாள். அவளின் முகத்தின் வீக்கமே அழுதிருக்கிறாள் என்று சொன்னது. ஆனாலும் அதை வெளிகாட்டாமல் சிரித்து கொண்டே மகேந்திரனுடன் அவர் உறவுகாரர்கள் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டாள். அவள் சென்ற பின், யோசனையோடு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் திலகா.
நளன் சொல்லும் போது கூட ஓவியாவில் இப்படி ஒரு ஆசை இருக்கும் என நினைக்கவில்லை. ஆரம்பத்தில் கேரளாவில் வைத்து பேசும் போது ஒரு ஈர்ப்பு இருந்ததை அவளுமே வெளிப்படுத்தி இருந்தாள். அப்படி வெளிப்படுத்தியவளே அது எட்டாத காய் என்று ஒதுங்கவும் செய்தாள். அப்புறம் இங்கு வந்த புதிதில் கூட அவரை காட்டான், நெடுமரம் என வசைப்பாட தான் செய்தாள். இவள் வந்து கலாய்த்த போது கூட அவர் அப்படி இல்லை. இப்படி பேசி மானத்தை வாங்கி விடாதே என்றாள். அப்படிப்பட்டவளில் இந்த தடுமாற்றம் எதற்கு?
திலகாவின் உள்ளம் கேள்வியால் நிறைந்த நேரம்,
அசுர வேகத்தில் அந்த அலுவலகம் நுழைந்தான் நரேன் . நேரே முகுந்தன் அறைக்கு தான் வந்தான்.
“உட்காருங்க நரேன்.”
முகுந்தன் முன்னால் இருந்த செயரை காட்ட,
“இல்ல சார். விசயம் கொஞ்சம் பெரிசு. உங்க சந்தேகம் சரி தான். குடோன் தீ பிடிச்சி எரிஞ்சது விபத்து இல்லை. திட்டமிட்ட சதி.”
“என்ன சொல்லுறீங்க நரேன்.”
“ஆளை பிடிச்சிட்டேன். இப்போ குடோன்ல்ல தான் கட்டி வச்சிருக்கேன். நீங்க கொஞ்சம் வந்தா நல்லாயிருக்கும்.”
என்றதுமே மறுபதில் பேசாமல் அவனை அழைத்து கொண்டு குடோனுக்கு வந்தான் முகுந்தன். அன்று அந்த ஹோட்டலில் பார்த்தவன் கொடுத்த வாய்மொழி வழியாக தான் இவனை பிடித்திருந்தான் நரேன். குடோன் வந்தவனுக்கு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ராஜேந்திரனை கண்டதும் முதலில் அதிர்வு தான்.
“ஆனாலும் இவன் செய்ய கூடிய ஆள் தான் என்று தோன்றியது.”
இவன் அடிக்கும் முன்பே அவனும் ஒப்பு கொண்டான். “நீங்கள் வேலையை விட்டு தூக்கிய ஆத்திரத்தில் செய்து விட்டேன். ஆனால் யாரையும் கொல்லும் நோக்கம் இல்லை. அந்த பெண் மாட்டி கொண்டது தான் எதிர்பாராமல் நடந்தது.” என கண்ணீர் வடித்து விட,
அதற்கு மேல் விசாரிக்காமல் முகுந்தன் வெளியேறி இருந்தான். ஆனால் மனதின் அடி ஆழத்தில் ஒரு நெருடல் இருந்தது. என்றாலும் அதற்கு மதிப்பு கொடுக்காமல் தன் அலுவலகத்துக்கு சென்று விட்டான்.
ஆனால் இந்த விசயம் சக்கரவர்த்தி காதுகளுக்கு சென்ற போது, ஆத்திரத்தில் எல்லா பொருட்களையும் போட்டு உடைக்க தொடங்கினார். மகனுக்கு சந்தேகம் வந்து விட்டது என்பதையே அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
“எப்படிடா? எப்படி? அம்புட்டு ரகசியமா செய்தது அவன் காதுவரை போச்சு. ஆமா அந்த நரேன் யாரு.”
“போலீஸ் முதலாளி.”
“என்னடா சொல்லுறீங்க…போலீஸா?”
“ஆமா முதலாளி. ஆனா இப்போ டியூட்டியில இல்ல. பெர்சனலா லீவு எடுத்திருக்காரு போல… உங்க மகன் கேட்டதால இந்த வேலைக்குள்ள வந்திருக்காரு.”
“இனி தான் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். முகுந்தனோட சந்தேகப் பார்வை உன் மேல விழுந்திடுச்சி. நீ பேசாம சிம்லா போயிடு. இல்ல உன் வழியா என்னிடம் வந்தாலும் வந்திடுவான்.”
“என்ன முதலாளி இப்படி பயப்படுறீங்க. உங்க மகன் நான் கொடுத்த வாக்குமூலத்தை நிஜம்னு நம்பிட்டாரு.”
“உனக்கு அவனை பற்றி தெரியாது. இப்போ நம்பிட்டு கிளம்பி போயிருக்கலாம். ஆனா முழுசா நம்பி ஒதுங்கிட்டானு நினைக்காத. நீ பேசாம கிளம்பிடு.”
சொன்ன அவரே டிக்கெட்டையும் புக் பண்ண, வேறு வழி இல்லாமல் ராஜேந்திரனும் கிளம்பி விட்டான்.
ஆனால் ராஜேந்திரனை நம்பியதாக வெளிவிட்டதே பெரிய கொக்கை பிடிக்க தான் என்பதை பாவம் சக்கரவர்த்தி அறிந்து கொள்ளவில்லை.
அதே நேரம்
திலகாவின் அறைக்கு தயங்கி தயங்கி உள் நுழைந்தாள் சுந்தரி. சுந்தரியை கண்டதும் ஏதோ வேலையாக வந்திருப்பதாக தான் நினைத்தாள் திலகா. ஆனால் முன் வந்து இருந்து பத்து நிமிடம் கழித்தும் பேசாமல் இருக்க கண்டதும்,
“என்ன அக்கா. இன்று என்ன மெளனவிரதமா?”
என கிண்டலோடு கேட்க, அப்படியும் அவர் முகத்தில் சிரிப்பு வராதிருக்க கண்டதும்,
“ உங்களுக்கு என்னாச்சு. கம்பெனியை தான் சனி பிடிச்சி ஆட்டுதுணு பார்த்தா நீங்க ஏன் இப்போ எதையோ பறிக் கொடுத்தது போல இருக்கீங்க.”
“திலகா. நான் ஒரு விசயம் சொன்னா கோபப்பட மாட்டீங்களே.”
“கோபமா? உங்களுட்டயா? சான்ஸே இல்ல. என் சுந்தரி அக்காளுட்ட கோபப்பட முடியுமா?”
“திலகா. ஓவியாவுக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையை பற்றி நல்லா விசாரிச்சீங்க தானே.”
“என்ன அக்கா அப்படி கேட்கிறீங்க.”
“அது… அது… அவர் என்னவோ சரியில்லாதது போல தோணுது.”
“என்னக்கா புரிஞ்சி தான் பேசுறீங்களா? அவர் ஓவியாவோட வருங்கால கணவர்.”
“அதனால தான் உனட்ட பேசவே வந்தேன். இவன் குணம் தெரியாம மாட்டிக்கிட்டாங்களோனு ஒரு எண்ணம்.”
“விளையாடாதுங்க அக்கா. ஆல்ரெடி கம்பெனியில ஆயிரத்தெட்டு பிரச்சினை போயிட்டிருக்கு. நீங்களும் உங்க பாட்டுக்கு ஒரு பிரச்சினையை தொடங்காதுங்க.”
“எனக்கென்ன ஆசையா திலகா. அவனை பற்றி நான் அறிஞ்ச விசயம் ரொம்ப மோசமானது. இவனால என் தோழி ஒவியா வாழ்வு நாசமாகிட கூடாதுணு தோணுச்சு. அதான் உனட்ட சொல்ல வந்தேன். தெரிஞ்சதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம் -”
சுந்தரி எழும்பி போய் விட்டாள். இப்போது திலகா பாடுதான் பெரும்பாடானது. மாலை வரை அதையே போட்டு யோசித்தாள். நளனிடம் சொல்வோமா? என்று நினைத்தவள் வேண்டாம் என ஒதுக்கி வைத்தாள். ஆனால் சுந்தரியின் கூற்று உண்மை என்பது போன்ற ஒரு சம்பவத்தை அன்றே பார்ப்பாள் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அது ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் அமைந்திருந்த நட்சத்திர விடுதி. அதன் வாயில் அருகில் கொண்டு வந்து ஆட்டோவை நிறுத்தினான் மகேந்திரனையும் ஓவியாவையும் ஏற்றி வந்த அந்த ஆட்டோ டிரைவர்.
இறங்கியவள் அந்த விடுதியை பயம் கலந்து பார்த்தாள். ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு ஒவியா அருகில் வந்தான் மகேந்திரன். அவளின் மருண்ட விழியை பார்த்தவன்,
“பயப்படாத. எல்லாம் எனக்கு தெரிஞ்ச ஹோட்டல் தான். ஒரு நாள் இங்கு ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு மற்ற எல்லாருக்கும் பத்திரிகையை கொடுத்துட்டு கிளம்பிடலாம்.”
என்றதும் அதிர்ந்து விழித்தவள்,
“ஒரு நைட் இங்கு தங்குறதா? வேணாம். நான் திலகாவோட தங்கிக்கிறேன்.”
“ஏன்? கட்டிக்க போறவன் மேல நம்பிக்கை இல்லயா?”
“உங்களை நம்பாம எப்படி? ஆனா கல்யாணத்துக்கு முன்னால இது வேணாமே.”
“எனக்கு வேணும். உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா வா. இல்ல கிளம்பி போ.”
என்றவன் அடுத்த நொடி உள் சென்று விட, பேதை பெண்ணால் என்ன முடிவு எடுக்க முடியும். குழப்பத்தோடே உள்ளே வந்தாள்.
“எனக்கு தெரியும். என் ஓவியா எனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டானு.”
சொன்னவன் கீயை வாங்கி கொண்டு அறையை நோக்கி நடக்க, மிக மிக தயங்கியவாறு அவளும் நடந்தாள். இது சரியில்லை என்று மனசு சொல்ல தான் செய்தது. ஆனால் வழியை அந்த மனசு சொல்லவில்லை. குழம்பி போய் அவனுடன் அந்த அறைக்குள் நுழைந்தவள், நரேனுடன் வந்த முகுந்தனின் பார்வையில் விழுந்தாள். ஒரு நொடி அதிர்ந்து நின்றவன்
“ஓவியா…”
என வாய் விட்டே சொல்லி விட, நரேன் புரியாமல் அவனை பார்த்தான். அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்தவன்,
“இவங்க இங்க… எப்படி?”
என அதிர்வோடு அத்திசையை பார்த்து கேட்க,
“அந்த நாசமா போனவன் கூட்டிட்டு வந்திருப்பான். இவளும் விபரம் தெரியாம வந்திருப்பா. அவனை இதுவரை விட்டு வச்சதே தப்பு. கட்டிக்க போற பொண்ணை எங்க கூட்டிட்டு வந்திருக்கான் பாரு. இந்த பொறம்போக்கு.”
சொன்னவன் இறுகி போன பிடறியை வருடிய படி, பற்களை நரநரவென கடித்தான்.
“விடுங்க முகுந்தன். எதுவும் நடக்காம பாத்துக்கலாம்.” என வேறு திசையில் நரேன் நகர,
“நீ… நீ… எப்படி இந்த ஹோட்டல்ல… இவனை நம்பி, சே…”
எண்ணும் போதே அவன் அடி வயிறு சூடாக,
அவசரமாக அவள் அருகில் வரும் முன்,
கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டது. அந்த கதவின் முன்னால அங்கும் இங்கும் அலைந்தவன் என்ன செய்ய என தடுமாற்றமாய் நின்ற போது சட்டென ஒரு யோசனை தோன்ற, தன் செல்லை எடுத்து சில நம்பரை அழுத்தி காதுக்கு கொடுத்த நேரம்,
அதிர்ந்து சாத்தப்பட்ட கதவையே பார்த்தவாறு நின்றிருந்தாள் ஓவியா. அவள் அடிமனது சரியாய் இல்லை என்பதை திரும்ப திரும்ப சொன்னது. சுற்றி சுற்றி பார்வையை சுழல விட்டாள். பயத்தோடு பார்த்த இடத்தையே அவள் பார்த்து நின்ற போது,
“உட்காரு ஓவியா. நான் பிரஸாகிட்டு வரேன்.”
என்றவன் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவசரம் அவசரமாக செல்லை எடுத்தவள் தோழி எண்ணுக்கு அழைத்தாள். மூன்று முறை முயன்றும் எதிர்முனை இவளிடம் பேசாமல் வேறு யாரோடோ பேசிக் கொண்டிருந்தது.
அடித்து அடித்து ஓய்ந்து கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்த போது வெற்று உடம்போடு இடையில் மட்டும் ஒரு டவ்வலோடு வெளிவந்தான் மகேந்திரன். ஓவியா முகம் சுணங்கி போனது. சட்டென திரும்பி கொண்டவளை பார்த்து சிரித்தவாறு நெருங்கி வந்தான் மகேந்திரன். அவன் நெருக்கத்தை அவன் காலடி சத்தமே அவளுக்கு தெரியப்படுத்த, தவித்து போய் விட்டாள். திக் திக் நொடிகளாக ஒவ்வொரு நொடியும் அவளை விட்டு அகல, இப்போது மகேந்தரனோ அவளை நெருங்கி இருந்தான். அவள் தோள்பட்டை நோக்கி அவன் குனிந்த போது, அவள் தன்னை சுருக்கி தன் விழியை அழுத்தமாய் மூடி கொண்ட போது அவள் கையில் இருந்த செல் குரல் கொடுத்தது.
சட்டென இருந்த இடத்தில் இருந்து அவள் எழுந்து கொள்ள, மகேந்திரன் முகமோ நொடி பொழுதில் மாறி போனது.
திலகாவாக தான் இருக்கும் என சட்டென மலர்ந்த முகத்தோடு எடுத்தவள், திரையில் தெரிந்த முகுந்தனின் எண்களை கண்டதும்,
“இவரா? இவர் எப்படி இந்த நேரம். நம்ம போணுல… கடவுளே இவருட்ட எப்படி என் நிலையை சொல்லுறது.”
என அவள் தடுமாறி நின்ற நேரம்.
“கொஞ்சம் வெளியில வறீங்களா ஓவியா மேடம்?…”
என கர்ச்சித்தது முகுந்தன் குரல். திடுக்கிட்டு போனவள்,
“வெளியில வரவா? அப்படினா நான் இங்கு இருப்பது அவருக்கு தெரியுமா?”
யோசிக்கும் முன்பே,
“நான் வெளியில தான் நிக்குறேன். கொஞ்சம் வெளியில வாங்க மேடம். முக்கியமா உங்களுட்ட பேசணும்.”
என்றதும் தன்னை காக்க வந்த ராமன் போல தோன்றினாலும் அவன் நார்மலாக பேசவில்லை. படு கோபமாக பேசுகிறான் என்பதை உணர்ந்ததும் பயத்தில் கால்கள் தந்தியடிக்க தொடங்கியது. அவளின் உடல் மொழியில் சந்தேகம் கொண்ட மகேந்திரன்.
“யாரு… ஏன் உன் உடம்பு இப்படி நடுங்குது.”
என கேட்க,
“சார். முகுந்தன் சார் வெளியில நிக்குறாங்களாம்.”
என்றதும் நம்பிக்கை வராதவன்.
“உன் முதலாளியா? அதுவும் இந்த ஹோட்டல்லயா? சான்ஸே இல்ல. வேற யாராவது விளையாடுறாங்க.”
“இல்ல. இது அவர் குரல் தான்.”
“அவர் எப்படி இங்க?”
“நாம வந்ததை பாத்திருக்காங்க. வெளியில கூப்பிடுறாங்க.”
என்றதும் கடுப்பான மனதை வெளிகாட்டாமல்,
“ஒ… அப்படியா?”
என அவசரமாக வந்து கதவை திறக்க இப்போது தான் மூச்சே வந்தது ஓவியாவுக்கு,
ஆனாலும் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க முடியவில்லை. கூச்சமாக இருந்தது
அவளின் தவிப்பை ஒரு நொடி பார்த்தவன்,
“ நல்ல ஆளை புடிச்சிருக்கா…”
என மனதுக்குள் திட்டியவாறு நரேனை பார்க்க, நரேனோ… கிளம்பிட்டாங்க.
என மென்குரலில் சொன்னான். அதன் பின் மகேந்திரன் பக்கம் திரும்பிய முகுந்தன்.
“எங்க ஊருக்கு மாப்பிள்ளை சார் எங்களை நம்பி வந்துட்டு. இப்படி ஹோட்டல்ல தங்குறது நல்லவா இருக்கும். வீடு தான் கடல் போல இருக்குதே. அப்படியிருக்க நீங்க ஏன் இந்த இத்து போன ஹோட்டல்ல தங்கணும். வாங்க போலாம்.”
என அழைக்க, ஒரு நொடி தயங்கிய மகேந்திரன்.
“இல்ல சார். இன்று ஒரு நைட் மட்டும் தானே. நாங்க சமாளிச்சிக்குவோம். என்ன ஒவியா ? சமாளிச்சிக்கலாம் தானே.”
மகேந்திரன் திடுதிடுமென கேட்க, பதட்டத்தில் ஆமாம் என சொல்லி விட்டு முகுந்தனின் முறைப்பில் அவள் முழிக்க,
“நல்ல ஆளை புடிச்சிருக்கா… இதுல வாய் திறந்து பேசினா சாகடிச்சிடுவேன்.”
அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் உறும ,
அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. மகேந்திரனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் இவளை ஒரு நொடி பார்த்து விட்டு,
“நாளைக்கு காலையில கிளம்பிடுவோம் சார். தேடி வந்த உறவினர் சிலர் வீட்டுல இல்லாததால தான் தங்க வேண்டியதா போச்சு. இல்ல அப்பவே கிளம்பி இருப்போம். ஒரு நைட் தானே நாங்க சமாளிச்சிக்குவோம். உங்களுக்கு எதுக்கு சிரமம்.”
என்றதும் பல்லை கடித்து கோபத்தை அடக்கியவன்,
“இதுல எங்களுக்கு என்ன சிரமம் இருக்க போகுது மாப்பிள்ளை சார். அது கூட இது நல்ல ஹோட்டல் இல்ல மாப்பிள்ளை சார். பொண்ணுங்க வந்து தங்குற சரியான வசதியும் இல்ல. ரொம்ப யோசிக்காதுங்க.”
“அதுக்கில்ல. இது நல்ல ஹோட்டல் இல்லனா நாங்க வேற ஹோட்டல் பார்த்து போயிடுறோமே…”
மகேந்திரன் எப்படியாவது அவர்களை கிளப்பி விட பார்க்க, அசர மாட்டேன் என்பது போல முகுந்தன்.
“எதுக்கு இந்த ராத்திரி நேரம் அலையுறீங்க. அதான் நாங்க எல்லாரும் இருக்கோம்னு தானே எங்களை கூப்பிட வந்தீங்க. அப்புறம் எங்க வீட்டுல தங்குறதுல எதுக்கு தயக்கம்.”
என்றதும் மகேந்திரன் ஓவியாவை பார்க்க, அவள் தர்மசங்கடமாக நெளிந்தாள். மகேந்திரன் செய்தது தவறாகவே இருக்கட்டும். அதற்காக இவள் எப்படி இவனுடன் இவன் வீட்டிற்கு போக முடியும்?
மனம் கலங்க அவனை பார்த்தாள்.
“கிளம்புங்க மாப்பிள்ளை சார்.”
அவன் மறுபடியும் வற்புறுத்த ஒவியா தான் திணறி விட்டாள். என்ன முடிவு எடுக்க என்று கூட தெரியவில்லை.
“அவளுக்கு முகுந்தன் கூட அவன் வீட்டுக்கு போகவே கூடாது என்பது தெரியும். போனால் என்ன ஆகும் என்பதும் தெரியும்.”
ஏழைகளின் உயிர் மேல் விளையாடும் அவன் தந்தையின் வீட்டிற்கு அவளால் எப்படி போக முடியும். போக வேண்டும் என்றாலே அவள் ஈர குலை நடுங்குகிறது. சக்கரவர்த்தியின் கோரமுகத்தை முகம் முகமாய் தரிசித்தவள் ஆயிற்றே. இப்போது நினைத்தாலும் நடுங்கியது.
சக்கரவர்த்தி போன்ற ஆட்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பது அவளுக்கும் தெரியும் தானே. அவர்களின் கொடுங்கோல் எண்ணங்களை தன் குடும்பம் மேல் செலுத்தினால் தன் குடும்பம் பஸ்பமாகி விடும் என்பதும் தெரியும் அல்லவா. அப்படி தன் குடும்பம் ஆகி விட கூடாது என்ற பயத்தில் தானே சொல்லாமல் கொள்ளாமல் ஓடியே போனாள்.
ஆனால் விதி விட்டதா மறுபடியும் அவளை இங்கு அழைத்து வந்து அவன் முன்பே வேடிக்கை காட்டுகிறதே. அவளும் என்ன செய்வாள்.
பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாற, இப்போது முகுந்தன் கண்களோ அவளை முறைத்தது.
“புரியாம நடக்காதுங்க சார். நான்… நான் எப்படி உங்க வீட்டுக்கு.”
நினைவே பயத்தை விதைத்தது. ஆனாலும் அதை அவன் முன் சொல்லும் தைரியமும் வரவில்லை. துடிக்கும் உதட்டோடு நின்றவளை கோபமாக பார்த்தவன்.
“என்ன மேடம். சார் கண்களால அனுமதி கேட்கிறாரு. அந்த அளவு நெருங்கிட்டீங்களா? உங்க பெர்மிஷன் கேட்டு நடக்கிற ஜென்டில்மேனா புடிச்சிட்டீங்க போல…”
என்ற குத்தலில் ஒரு நொடி நிமிர்ந்தவள், அவனின் கோபமான முகத்தை பார்த்து அதிர்ந்தவாறு,
“நீங்க வேணா சாரோட போய் தங்குங்க. என்னை திலகா வீட்டுல இறக்கி விட்டு விடுங்க.”
என்றதும் மறுபடியும் கோபமாக அவளை முறைத்தவன் சட்டென முகத்தை மாற்றி கொண்டு,
“மேடத்துக்கு எங்க வீட்டுல தனியா தங்க தயக்கம் போல, அங்கு எல்லாம் உங்களுக்கு எந்த டிஸ்டப்பும் வராம நான் பாத்துக்கிறேன் மேடம். பயப்படாம வரலாம். வேணா மாப்பிள்ளை சார் அறையிலே தங்கலாம். உங்களுக்கு ஒ.கே ணா.”
என்றதும் அருவருப்பில் நெளிந்தவள், சட்டென திரும்பி அவனை முறைத்தவாறு,
“நான் தான் வரலணு சொல்றேன்ல்ல.”
என சற்று கோபத்தோடு வெடிக்க, இப்போது திலகா உள்ளே வந்தாள். அவளுடன் வந்த சுந்தரியை பார்த்ததும்,
“நீ கிளம்பும்மா. இன்று திலகா ஓவியாவோட தங்க போறாங்க. நாளைக்கு மாப்பிள்ளை சாரையும் மேடத்தையும் வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு பத்திரமா வந்து சேருவாங்க.”
என்றதும் சுந்தரி மகேந்திரனை ஒரு முறை அழுந்த பார்த்து விட்டு வெளியேறினாள், இப்போது தான் மகேந்திரனும் அவளை பார்த்தான். இவள் … இவள்… என நினைக்கையிலே பழைய சம்பவம் ஒன்று உருண்டு வர, “அட கடவுளே இவளா?”
எண்ணியவனோ,
“இதுக்கு மேல இங்கு இருக்கிறது சரியில்ல. பேசாம கிளம்பி போய் முகுந்தனுக்கு பிடிச்சது போல நடந்திடுவோம். சின்ன சந்தேகம் வந்தாலும் இந்த மனுஷன் காரியத்தையே கெடுத்து வச்சிடுவான். அப்புறம் நம்ம அப்பன் அதான் அந்த தாடிகாரன் வயலின் இல்லாமலே துக்க கீதம் வாசிப்பான்.
என நினைத்தவன் அடுத்த நொடியே கிளம்ப ரெடியாகி விட, ஒவியா தான் தர்மசங்கடத்தில் நெளிந்தாள். இந்த ஒரு இரவை இவனுடன் கழிப்பது சிரமம் தான் என்றாலும் இந்த இரவை முகுந்தன் வீட்டில் கழிப்பது இன்னும் அபாயமரமானது என அவள் உள் மனது அவளிடம் சொல்லிற்று.
“இதுக்கு மேல உன்னை என் மகனோட பார்த்தேன். அப்புறம் உன் குடும்பத்துல நடக்கிற கெட்டதுக்கு நான் பொறுப்பில்லை.”
தன் முன் கர்ச்சித்து நின்ற சக்ரவர்த்தியின் முகம் நொடி பொழுது வந்து மறைய,
“இது சரியாகாது.”
உரக்கவே சொன்னாள். அவளின் வாயிலிருந்து வந்த வார்த்தையை கேட்டு கடுப்பானவன்,
“சரியாகாதா?”
என அடிகுரலில் கேட்க, அவன் சீற்றத்தால் நடுங்கி தான் போனாள் பெண்ணவள். அவனை பயத்தோடு பார்த்தாள்.
“இப்படி அப்பனும் மகனும் மாறி மாறி அடிச்சா நானும் என்னதான் பண்ணுவேன்.”
அவள் மனம் கூக்குரலிட, அவள் உள்ளம் படும் வேதனை புரியாமல், திலகாவும் முகுந்தனின் முறுக்கேறிய முகத்தை பார்த்ததும் சூழ்நிலையின் வீரியம் உணர்ந்து அவள் கரம் பற்றி இழுத்தாள். திலகாவின் இழுப்புக்கு ஆட்பட்டு அவளுடன் தயக்கத்தோடு வண்டியில் வந்து ஏறினாள் ஓவியா. ஆனால் மனது நடக்க போகும் விபரீதம் அறிந்து தாறுமாறாக துடிக்கத் தொடங்கியது.
அரை மணி நேர பயணம் முடிந்து,
அந்த காம்பவுண்டுக்குள் கார் நுழைந்ததுமே மலைத்து போயினர் ஓவியாவும், திலகாவும். அதை ஒருவர் மற்றவரை பார்த்து வெளியிட்ட போது, அந்த கார் மெல்லமாய் ஒருவித குலுக்கலோடு நின்றது.
“என்னடி இதுவா சாரோட வீடு…”
திலகா தான் வியந்து போன விழியை அந்த கட்டிடத்தின் முகப்பு பகுதியிலே வைத்தவாறு மென்குரலில் கேட்டாள்.
“என்னை கேட்டா. நான் உன் கூட இப்போ தான் இந்த வீட்டுக்கு வரேன்.”
“ம்… ஆமால…”
சொன்னவள் கண் சிமிட்டி வீட்டை காட்டியவாறு,
“செம வாழ்க்கை இல்ல…”
என்றாள் சற்று பொறாமையோடு,
“யாருக்கு…”
“சாருக்கு தான்…”
“சாருக்கு செம வாழ்க்கை தான்.”
என்றவள் மெல்லமாய் திரும்பி,
“நமக்கு தான் அந்தரங்கத்துல தொங்குது வாழ்க்கை. இது தெரியாம கூட்டிட்டு வந்து சாகடிக்காத. பேசாம இறங்கு.”
என்றதும் புரியாமல் அவளை நோக்கியவளை சட்டை செய்யாமல் திரும்பிய போது தான் முகுந்தன் பார்வை தன்னிலே இருப்பதை பார்த்தாள்.
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து,
அவசரமாக, திலகாவும் ஓவியாவும் ஆளுக்கு ஒரு டோரை திறந்து கொண்டு வெளியே வந்தனர். திலகாவுக்கு ஒடி வந்து உதவிய ஓவியா. அவளையும் இறக்கி வீல் வண்டியில் அமர வைத்தாள்.
“இந்த வீட்டுல எல்லாம் விளக்கேற்ற ஒரு கொடுப்பனை வேணும்ல ஒவியா.”
ஓவியாவை ஊடுருவி பார்த்து அவள் கேட்க,
“உனக்கு என்னடியாச்சு. பேசாம வர மாட்டியா?”
உள்ள தவிப்பையும் மனதில் போராட்டத்தையும் வெளியில் சொல்ல முடியாமல் அவள் தவித்த போது,
“ உள்ளால வாருங்க மாப்பிள்ளை சார்.”
மகேந்திரனை ஒரு நக்கலோடு அவன் அழைக்க, அவனின் கிண்டலை உணராத மகேந்திரனும் உள்ளே கம்பீரமாக நுழைய போனான்.
“கூலிக்கு மாரடிக்கிற கூட்டத்தை எல்லாம் என் பங்களாவுல நுழைய விட முடியுமா?”
சக்கரவர்த்தியின் வார்த்தை நெஞ்சுக்குள் நெருப்பை மூட்ட, ஓவியாவின் கால்கள் முன்னோக்கி நகர மறுத்தது.
அதை உணர்ந்தானோ என்னவோ,
“வாங்க… வாங்க மேடம்.”
என வரவேற்ற முகுந்தன். மெல்லமாய் நகர்ந்து ஓவியா பக்கம் வந்து அவளை நெருங்கி குனிந்து மென் குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
“வலது காலை எடுத்து வச்சி உள்ளால போ.”
என்றதும் பட்டென திரும்பி அவனை அதிர்ந்து பார்த்தாள் ஓவியா, பெண்ணவளின் விழியையே ஊடுருவி பார்த்தவன் சட்டென கண்ணடித்து சிரிக்க, ஒரு நொடியில் அவள் வெண்தேகம் மொத்தமும் சிலிர்த்து சிவந்து போனது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel