வணக்கம் வாசகர்களே!
ஓவியா முன்பே பெண் பார்க்க கிளம்புகிறான் முகுந்தன்ஓவியாவின் திருமணத்திற்கு வந்து வேலை செய்யும் முகுந்தன். தன் முன்னால் நடமாடும் முகுந்தனை பார்த்து மனதுள் குமுறும் ஓவியா. இப்போவாவது தன் காதலை வெளிப்படுத்தினாளா ஒவியா?
“சார்…”
அதிர்ந்து அழைத்தவள் அவசரமாக அவன் அருகில் வந்து, பின், நின்று நிதானமாக… சுற்றும் முற்றும் பார்த்தாள். நல்லவேளை அந்த இடத்தில் யாரும் இல்லை. தூரமாய் நின்ற கோசலையின் மீது மட்டும் பார்வையை வைத்தவாறு, படபடப்போடு,
“என்ன சார் பண்ணிட்டிருக்கீங்க…”
என்றாள் ஓவியா. நடந்து கொண்டிருந்தவன் மெல்ல நின்று திரும்பி, அவள் உச்சம் தலை முதல் உள்ளம் கால்வரை ஒரு முறை பார்த்து விட்டு,
“பாத்தா தெரியல…”
என்றான் நக்கலாக…
“நல்லா தெரியுது. அதான் ஏன் பண்ணுறீங்கணு கேட்கிறேன்.”
அவளும் பல்லை கடித்து அடக்கப்பட்ட குரலோடு கேட்டாள்.
“இது என்னம்மா கேள்வி. என் பொண்டாட்டிக்கு நாளை மறுநாள் கல்யாண பங்ஷன். புருஷன்னு கூட பார்க்காம பத்திரிகை தந்து அழைச்சிருக்காங்க. அப்படிப்பட்டவங்களை ஏமாற்ற முடியுமா? அதான் வந்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்றேன். பாரு அண்டாவை எல்லாம் தூக்குறேன். முடிஞ்சா கொஞ்சம் கரிசனை காட்டலாம்…”
பொருட்களை காட்டி அவன் கண் சிமிட்டி சொல்ல,
“பிளீஸ் சார் விளையாடாதுங்க…”
அவளும் அடக்கப்பட்ட குரலில் கெஞ்ச,
“என்னை பார்த்தா விளையாடுறது போலவா இருக்கு. பாரு வியர்க்க விறுவிறுக்க வேலை செய்றேன். இப்படி என் வாழ்க்கையில செய்தது இல்ல தெரியுமா? கம்பீரமா சுத்திட்டிருந்த சிங்கத்தை இப்படி காலை சுத்துற பசுவாக்கிட்டியேம்மா…”
கொஞ்சம் சோகமாக மூக்கை சுருக்கி உதட்டில் புன்னகையை மறைத்து சொன்னவனை அடக்கப்பட்ட கோபத்தோடு பார்த்தவள்,
“இப்பவும் எதுக்கு செய்யுறீங்க. அதுக்கு ஆள் இருக்காங்க. அவங்க செய்வாங்க. நீங்க பேசாம கிளம்புங்க. உங்க அப்பாவுக்கு மட்டும் நீங்க இங்க வந்திருக்கிறது தெரிஞ்சிது. அப்புறம் வேற வினையே வேணாம்.”
என்றவளை புருவ சுழிப்போடு பார்த்தவன்,
“நீ… நீ என் அப்பாவை பார்த்து பயப்படுறியா? அதுதான் காதலை சொல்ல தயங்குறியா? அப்படினா அவரை மறந்துட்டு முகுந்தன் ஐ. லவ். யூனு ஒரு முறை சொல்லு. நான் அவர் தலைமையிலே இந்த கல்யாணத்தை நடத்துறேன். என்ன சொல்லுறா?”
மறுபடியும் கண்ணடித்து பொங்கும் சிரிப்போடு சொல்ல…
“ம்… அது உங்களால முடியாது.”
“முடிச்சி காட்டுறேன்ம்மா. நீ மட்டும் கண்மூடி முகுந்தன் நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்லி பாரு. உன் முன்னால கொண்டு வந்து என் அப்பாவை நிறுத்துறேன்.”
அவன் கைவிரித்து, அப்படியே அவள் முன் பணிந்து சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தாலும், இவனின் சேட்டையில் தன் குடும்பம் பாதிக்கப்பட்டு விடுமோ என பயந்தவள்.
“விளையாடாதுங்க சார். எதுல எல்லாம் விளையாடுறதுனே இல்லயா உங்களுக்கு. பேசாம கிளம்பி போயிடுங்க… பிளீஸ்…”
அவள் கெஞ்சிதலோடு நிற்க,
“நீ உன் மனசை சொல்லுறது வரை இந்த கல்யாணத்துல உன் முன்னால வந்துட்டே தான் இருப்பேன். இப்படி வேலையை இழுத்து போட்டு தான் செய்வேன். உன்னால என்னை வெளியேற்ற முடியாது.”
“அங்கு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டு, இங்கு இன்னும் இரண்டு நாளுல இன்னொருத்தன் பொண்டாட்டியாக போகும் எனட்ட வந்து பேசுற பேச்சா இது.”
சீறினாள் அவள்.
“அப்பா… பொசுக்கிடாதப்பா.”
என அவள் பார்வையை கையால் மறைத்தவன்,
“இதுல என்னோட தப்பு என்னம்மா இருக்கு. எல்லாம் உன் பிடிவாதத்தால வந்தது. நான் அன்றே கேட்டப்ப உன் காதலை கொடுத்திருந்தா. நான் ஏன் பொண்ணு பார்க்க போறேன். இல்ல நிச்சயம் பண்ண போறேன். எல்லாம் நீ தான் செய்ய வச்சா. இப்ப கூட நான் கேட்க கேட்க கொடுக்காம நீ தான் அடம்பிடிச்சி இந்த கல்யாணத்தை நடத்துறா? நான் இல்ல…”
“தெரியுதுல கிளம்ப வேண்டியது தானே.”
“கிளம்ப வேண்டியது தான். அதுக்கு முன்னால என் கண்ணால நீ இன்னொருத்தன் தாலியை கழுத்துல வாங்கணும். அதுவரை இந்த பாழா போன மனசு உன்னை நம்புது. அதுக்கு நான் என்ன செய்ய, அவள் மனசுல நீ தான் இருக்காணு இப்பவும் அடிச்சி சொல்லுது. வேணா காது வச்சி கேளு.”
சட்டென அவள் எதிர்பாரா நேரம் அவள் தலையை தன் மார்பு நோக்கி அவன் பிடித்து அழுத்த, தடுமாறி விலகியவள்,
“என் மனசுல ஒண்ணும் அப்படி எந்த எண்ணமும் இல்லை…”
அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் நடுக்கத்தோடு சொன்னவளை ஒரு நொடி ஆழமாக பார்த்தவன்,
“அது உண்மைனா நிரூபி…”
“எப்படி?”
“என் முன்னால மகேந்திரனோட தாலியை கழுத்துல வாங்கி,”
“அதை நிரூபிக்க தான் போறேன். ஆனா அதை நீங்க பார்க்க கூடாது. பேசாம கிளம்புங்க…”
“ஏன்?… நான் பார்க்கணும். நான் பார்த்தே ஆகணும். பச்ச குழந்தை போல தன் மடியில போட்டு அந்த இடிபாடுக்குள்ள என்னை கவனிச்சிட்டியே அந்த ஓவியா மனசுல நான் எந்த அளவு இருந்திருக்கேணு நான் தெரிஞ்சிக்கணும். கிடைச்ச அத்தனை பழத்தையும் நீ சாப்பிடாம எனக்கு தந்து என் உயிரை காப்பாத்த போராடுனியே அந்த ஓவியா மனசுல நான் எந்த இடத்துல இருக்கேன்னு நான் தெரிஞ்சிக்கணும். அதை தெரிஞ்சிட்டு அப்புறம் கிளம்பி போறேன். நீங்க தான் அப்படி எந்த தாக்கத்துக்கும் உட்படலணு சொல்லுறீங்களே. அப்புறம் ஏன் மேடம் இப்படி படபடப்பா வந்து பேசிட்டு நிக்குறீங்க. கிளம்புங்க. கிளம்பி போய் உங்க வருங்கால புருஷனை நினைச்சி கனவு காணுங்க.”
“உங்களை…”
அடிக்க ஒங்கிய கையை பெரும்பாடுபட்டு அடக்கியவள் வந்த கோபத்தை அடக்கி கொண்டு நின்ற போது,
“முகுந்த்…”
என குரல் கொடுத்து கொண்டு யாரோ வரும் ஒசை கேட்க,
“முடிவா என்ன சொல்லுறீங்க…”
படபடப்பாக கேட்டாள் ஓவியா.
“நீ இல்லாம நான் போக மாட்டேன்.”
அவனும் அழுத்தமாக சொன்ன நேரம்,
“முகுந்த்…”
குரல் இப்போது அருகில் கேட்க,
முறைத்து பார்த்தவள், இதற்கு மேல் இவனிடம் பேசி எதுவும் மாறாது என உணர்ந்து தளர்ந்து போய் உள்நோக்கி விரைந்தாள். ஆனாலும் மனது முகுந்தன் நின்ற இடத்திலே நின்று விட, மெல்ல திரும்பி வந்து சுவரின் மறைவில் நின்று அவனை பார்த்தாள். அவன் கொஞ்சம் கூட தளராதவன் போல, அழைத்து கொண்டு வந்தவனுடன் அண்டாவை தூக்கி கொண்டு நடந்தான்.
சட்டென கண்கள் கரித்து கொண்டு வந்தன. ஒரு வித விம்மலோடு அறைக்கு வந்து கட்டிலில் பொத்தென விழுந்தாள்.
“என்னடி… போன வேகத்தை பார்த்தா சாரையும் நளனையும் ஊர் எல்லை வரை போய் விரட்டி அடிச்சிட்டு தான் வருவாணு பார்த்தேன். ஆனா நீ என்னடானா போன வேகத்துலயே திரும்ப வந்துட்டா.”
“ம்… அந்த குரங்கு கிளம்ப மாட்டேணு சொல்லிடுச்சி. அது எப்போ நம்ம பேச்சை எல்லாம் கேட்டு நடந்திருக்கு. இது போகிற போக்கை பார்த்தா இங்கு பூகம்பம் ஒண்ணு வெடிக்காம போகாதுணு தோணுது.”
சலித்து போய் அமர்ந்தவளை சிரிப்போடு பார்த்தவள்,
“ஆனாலும் உனக்கும் அவருக்குமான மோதல் சூப்பர்டி…”
கண்ணடித்து அவள் சொல்ல,
“உனக்கு இப்போ உதை விழப் போகுது. நான் இங்க எந்த நொடி என்ன நடந்திடுமோனு பதட்டத்துல இருக்கேன். நீ அந்த குரங்கோட சேட்டையை ரசிக்கவா செய்யுறா?
என அடிக்க கை ஓங்கியவள் கையை பிடித்து அதன் பின்புறம் முத்தமிட்டவள்,
“அது தான் அவர் உனக்காக இவ்வளவு இறங்கி வந்திருக்கார்ல. அவரோட காதலை கொஞ்சம் பரிசீலனை பண்ணலாமே ஓவியா.”
“மண்ணாங்கட்டி. அந்த மனுஷனுக்கு தான் விபரம் இல்லாம தொந்தரவு பண்ணுறார்ணா நீ வேற ஏண்டி இப்படி பேசுறா? இரண்டு நாளுல இன்னொருத்தனோட கல்யாணத்தை வச்சிட்டு இது என்னடி பேச்சு.”
“ஏன் ஓவியா நிஜமா உனக்கு அந்த மகேந்திரனை புடிச்சிருக்கா. அவனை கட்டிக்கிறதுல விரும்பமா?”
“நீயும் என்னடி அவர் போலவே கேட்குறா?”
“இல்லடி. உனக்கு முகுந்த் சாரை புடிக்கலியா? அவரோட காதலை ஏத்துக்கணும்னு தோணலியா? அவரை பார்க்க பாவமா இல்லையா?”
என்றதும் சட்டென முகம் வாட அமர்ந்தவளை நெருங்கி போய் அமர்ந்தவள்,
“சொல்லுடி. நிஜமா உனக்கு அவரை புடிக்கலியா?
எனக்கு தெரியும். ஆரம்பத்துல உனக்குள்ள ஒரு ஈர்ப்பு இருந்துச்சுணு . அந்த ஈர்ப்போட அவர் முன்னால போக தயங்கி தான் அந்த வேலையையே ரிஜெக்ட் பண்ண நினைச்சா. அப்படி உன் மனசுக்குள்ள புகுந்த முதல் காதலை நீ மொத்தமா மறந்துட்டியா? அதை மறந்துட்டு தான் இந்த மகேந்திரனை கட்டிக்க நினைக்கிறியா? உண்மையை சொல்லுடி. அப்படி மட்டும் உன் மனசுல முகுந்தன் சார் இல்லணு நீ சொல்லிட்டா. நானே அவரை கிளம்பி போக சொல்றேன்.”
என்றவளை நிமிர்ந்து பார்த்தவள், அவள் கண்கள் கக்கிய ஆர்வத்தை பார்த்து, மனதின் வலியை வார்த்தையாக்க விரும்பாமல், கூடவே தோழியிடம் பொய் சொல்ல தோன்றாமல்,
“இப்போ அது எதுக்கு? எல்லாம் என் விருப்பத்தோட தான் இந்த மேரேஜ் நடக்குது. உன் பிரண்ட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புனா… அவருட்ட பேசு. அவரை எப்படியாவது இங்கிருந்து கிளம்பி போக சொல்லு. அவர் அப்பா பார்த்த பெண்ணை கட்டிட்டு சந்தோஷமா வாழ சொல்லு.”
கண்ணில் நீர் மல்க உணர்வு பெருக்கோடு சொன்ன தோழியை புரியாமல் பார்த்தாள்.
“நீ… நீ நிஜமா தான் சொல்லுறியா ஒவியா?”
என்றவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்த ஓவியா ‘ஆம்’ என்பது போல் தலையசைக்க,
“நான் யாரை கட்டணும். யார் கூட வாழணும்னு இவங்க சொல்ல வேணாம். நான் வேணாம்ணு தான் முடிவுப் பண்ணிட்டாங்கல. கலகலப்பா கல்யாணத்துக்கு ரெடியாக சொல்லுங்க. அவங்க மனசை சொல்லாம இங்கே என்னால எதுவும் தப்பா நடக்காது. ஆனா என் வீட்டு பங்ஷன்ல்ல அவங்க கலந்துகிட்டது போல நானும் இங்க அவங்க முன்னால தான் நிற்பேன். அவங்க மனசுல தான் நான் இல்ல தானே. அப்புறம் ஏன் என்னை விரட்ட பாக்குறாங்க. முயற்சி பண்ண வேணாம். நான் எங்கேயும் போக மாட்டேனு சொல்லுங்க…”
சொல்லிய வேகத்திலே அவன் வெளியேறி விட, திலகா ஓவியாவை பார்த்தாள். அவளின் குனிந்த தலை நிமிரவே இல்லை. அழுகிறாள் என்பது தெரிந்தது. ஆனாலும் இருவருக்கும் இடையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“ஏய்… அழாதடி. அவர் தான் தெளிவா பேசுகிறார் இல்லயா? அவரால எந்த பிரச்சினையும் வராதுணு. அப்புறமும் ஏன் வருத்தப்படுறா? ஜாலியா இரு. நின்று மொத்தமா உன் சந்தோஷத்தை பார்த்துட்டு கிளம்பட்டும்.”
என்றதும் வெடித்து விட்டாள் ஓவியா.
“காதலிக்கிறவங்களை இன்னொருத்தர் கூட நெருக்கமா பாக்குறது எவ்வளவு கொடுமையான வலினு எனக்கு தெரியும். அந்த வலியை என்னால அவருக்கு கொடுக்க முடியாது திலகா. அவர் வேணா அவர் வருங்கால மனைவியோட என் முன்னாலயே கூத்தடிக்கலாம். ஆனா என்னால அவர் முன்னால் அப்படி என்ன? இப்படியான நிகழ்வுல கூட நிற்க முடியல… என் முகுந்தன் அந்த வலியை அனுபவிக்க கூடாது. அதனால தானே இவ்வளவு கெஞ்சுதலா அவர் முன்னால போய் நிக்குறேன்.”
என்றவளை விழி விரிய பார்த்தவள், வாயில் கைவைத்து விட, அவளை விழி நிறைய நீரோடு பார்த்தவள்,
“ஆமா… அவரை நான் நேசிக்கிறேன். உயிருக்குயிரா நேசிக்கிறேன். ஏன் உயிரை விட மேலா நேசிக்கிறேன். ஆனா அவரை என்னால கட்டிக்க முடியாது. அதற்காக அவர் முன்னால கட்டிக்கவும் முடியாது.”
பல்லை கடித்து வலியை அடக்கியவாறு சொன்ன ஓவியாவை புருவ முடிச்சோடு பார்த்தவள்.
“என்னடி சொல்லுறா? இவ்வளவு அவர் மேல நேசம் வச்சிருக்கிறவா ஏண்டி அவர் முன்னால அதை சொல்லல.”
“என்னால சொல்ல முடியாது திலகா. இப்போ இல்ல எப்பவுமே சொல்ல முடியாது.”
“அதான் ஏன்னு கேட்கிறேன்?”
“அதான் முடியாதுணு சொல்றேன் இல்லயா? நீ என்னோட தோழியா இருந்தா தயவு செய்து என் முன்னால இருந்து அவரை போக வை. பிளீஸ்…”
என்றவள் அதிவேகமாய் அங்கிருந்து வெளியேறி விட, இப்போது அதிர்ந்து போய் இருந்ததோ திலகா தான்.
வெளியேறியவள் நேரே தங்கைகளின் அறைக்கு தான் வந்தாள். இருவரும் நாளைக்கு நடக்க இருக்கும் பங்ஷனுக்கு உடுத்துவதற்கான உடையில் ஆரி ஒர்க் டிசைன் செய்து கொண்டிருந்தனர்.
ஓவியாவை கண்டதும் ஒடி அருகில் வந்த காயத்ரி…
“அக்கா டிசைன் எப்படி இருக்கு.”
தான் டிசைன் செய்த பிளவுஸை அவள் தூக்கி காட்ட, மயில் தோகை விரித்தாடும் நடனத்தை அப்படியே ஜாக்கெட்டின் பின்னால் டிசைன் செய்திருந்த அவளின் மதி நுட்பத்தை வியந்து பார்த்தவள்,
“சூப்பரா இருக்கும்மா…”
என்றாள் முகம் முழுதும் மலர்ந்தவாறு,
“அக்கா உன் பிளவுஸ்சும் ஒர்க் முடிச்சிட்டேன். பாக்குறியா?”
“இல்லடா. நீ செய்தா நல்லா தான் இருக்கும். ஆமா அக்கா சொன்னது நியாபகத்துல இருக்குதுல…”
மனம் கேட்காமல் மறுபடியும் கேட்டாள்.
“வெளியில எங்கேயும் தனியா போக கூடாதுணு தானே. நல்லா நியாபகம் இருக்கு. ஆமா நீ ஏன்க்கா அப்படி சொல்லுறா? இது நம்ம ஊர் தானே. இதுவரை எல்லா இடத்துக்கும் தனியா தானே போயிட்டு வரோம். இப்போ மட்டும் ஏன் போக கூடாதுனு சொல்லுறா?”
“அது… அது. ஆங். ஒரு பாதுகாப்புக்கு தான். இரண்டு பேரும் தங்கத்துல செயின் எல்லாம் போட்டிருக்கீங்க. ஊர்ல்ல வேலை வெட்டி இல்லாம சுத்துற காலி பசங்க நிறைய பேர் இருக்காங்க. தங்கத்துக்கு ஆசைப்பட்டு உங்களை எதுவும் பண்ணிட கூடாதுல அதான்.”
“அதுக்கு போயா பயப்படுறா? எவனாவது என் பக்கத்துல வந்தா தெரியும்.”
சின்னவள் மலர்ச்சியோடு தன் செயினை பிடித்து வைத்து கொண்டு சொல்ல, ஒவியா மனநிறைவோடு வெளியேறினாள். வெளியேறி வரும் மகளை பார்த்த எழிலரசி,
மகள் கையில் கொண்டு வந்து ஒரு பாக்ஸை கொடுக்க,
“என்னம்மா…”
“ஒரு ஆரமும் நெக்லெஸ்சும் தோடும் வாங்குனோம் ஒவியாம்மா. மாப்பிள்ளை வீட்டுல பெரும் தன்மையா எதுவும் வேணாம்ணு சொன்னாலும் நாங்க எங்க பொண்ணுக்கு போட வேண்டியதை போடணும்ல தங்கம். அதான் அப்பாவும் பெரியப்பாவும் போய் எடுத்துட்டு வந்திருக்காங்க. அறையில போய் போட்டு பாரு.”
சொல்லி விட்டு தாய் கிச்சனுக்கு நடக்க, பிரித்து பார்க்கும் மனநிலை கூட இல்லாதவளாய் அறைக்குள் புகுந்து கட்டிலில் போட்டாள் ஓவியா.
விரக்தியோடு வந்தமர்ந்தவளை விசித்திரமாய் பார்த்தாள் திலகா. எதுவும் பேசவில்லை. அவளையே பார்த்தாள். ஊடுருவி பார்த்தாள். கண்ணை அப்புறப்படுத்தாமல் பார்த்தாள்.
தோழியின் ஊடுருவும் பார்வையில் தடுமாறியவள், தன் தடுமாற்றத்தை மறைத்தவளாக,
“என்னடி. என் முகத்துல அப்படி என்ன இருக்குதுணு பார்க்குறா?”
“இல்ல. என் அப்பாவி ஓவியா இந்த முகத்துல எங்க இருக்காணு பாக்குறேன்.”
“ஏன் இந்த முகத்தை பார்த்தா உன் ஓவியாவா தெரியலியோ…”
“ இது என் ஓவியாவா இருந்திருந்தா இவ்வளவு பெரிய விசயத்தை என்னிடமிருந்து மறைச்சிருக்க மாட்டா.”
“ஏய் மறைக்கணும்ணு மறைக்கலடி. நடக்காத எதையும் பேசி என்னவாக போகிறதுணு பேசல.”
நடக்காதுணு நீயே எப்படி முடிவு பண்ணுனா? அதான் முகுந்தன் சாரே உன்னை தானே நேசிக்கிறாங்க. அப்படியும் ஏன் நடக்காதுணு சொல்லுறா?
அது காலம் கடந்த ஞானம் திலகா. அது இப்போ வந்ததால யாருக்கும் எந்த பலனும் இல்லை.
ஏய்… மகேந்திரன் குடும்பத்தை நினைச்சி பயப்படுறியா? இல்ல சக்கரவர்த்தி குடும்பத்தை நினைச்சி பயப்படுறியா?
நான் என் குடும்பத்தை நினைச்சி பயப்படுறேன் திலகா. என்னோட குடும்பத்தை நினைச்சி மட்டும் தான் பயப்படுறேன். எனக்கு என் கீழ இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க. என்னால அவங்க வாழ்க்கையில எந்த துன்பமும் வந்திட கூடாது.
அவங்களுக்கு என்னடி துன்பம் வந்திட போகுது.
உனக்கு தெரியாது திலகா. நீ பாக்குற மனுஷங்க எல்லாம் நீ நினைக்கிற மனசுள்ள மனுஷங்க இல்ல. அதை நாம தெரிஞ்சிக்கும் போது நம்மை போல தன்மானம் உள்ளவங்க எல்லாம் இப்படி தான் முடிவெடுத்தாகணும். நான் முடிவு பண்ணிட்டேன். இதுல மாற்றமே இல்ல. என் கல்யாணம் அந்த மகேந்திரனோடு தான். பேசாம உன் பாஸை கிளம்பி போக சொல்லு.
இப்போதும் தீர்க்கமாக சொல்லி விட்டு தாய் கொடுத்து அனுப்பி பாக்ஸை திறந்து அதில் ஜொலித்து கொண்டிருந்த ஆரத்தையும் நெக்லெஸையும் எடுத்து பார்த்தாள்.
அதே நேரம்,
வெளியில் வந்து அமர்ந்திருந்தவர்கள் முன் ஒரு கூட்டமே கூடி விட்டிருந்தது. ஆள் ஆளுக்கு சுவாரஸியமாய் பேசி கொண்டிருக்க, அந்த இறுகி போயிருந்தா சோபாவில் வெகு நேரம் இருக்க முடியாமல் நெளிந்த மோனிகா தந்தை பக்கம் மெல்லமாய் திரும்பி,
“என்னப்பா இது…”
என காதில் கிசுகிசுக்க, சூழலை கண்களால் சுற்றி பார்த்து அவளின் முகம் சுழிப்பை பார்த்தவர், சிரித்து கொண்டே,
“ கிராமம்னா இப்படி தாம்மா இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்க. எல்லாம் மாப்பிள்ளைக்காக தானே… அவங்களுக்கு வேண்டப்பட்ட குடும்பம் போல, இல்லனா மாப்பிள்ளை நம் குடும்பத்தை வர சொல்லுவாரா? நீ வேணா மாப்பிள்ளையோட பேசிக்கொண்டிறேன். நேரம் போகிறது தெரியாது.”
இந்த வீட்டுக்குள்ளாலயா? நான் போகலப்பா…
முகம் சுழித்து சொன்னவளை பார்த்து மென்சிரிப்போடு அவர் விலகி கொள்ள,
படர்ந்து நின்ற உடுப்பு துணி அந்த தரையில் பட்டு அழுக்காகி விட கூடாது என்று தூக்கி பிடித்தவாறு, ஒருவித அருவருப்போடு அமர்ந்திருந்தாள் மோனிகா. அவள் மட்டும் அல்ல. அவளை சூழ்ந்திருந்த அனைவருமே அதே நிலையில் தான் இருந்தனர். ஆனால் வெளிபடுத்த முடியாமல் முகம் சுழித்து கொண்டு அமர்ந்திருந்தனர். பிரபா, நீலவேணி சொல்லவே வேண்டாம். வந்த நொடியில் இருந்து முணுமுணுக்க ஆரம்பித்திருந்தனர். ஆனால் அஞ்சனா மட்டும் அந்த வீட்டின் முன் போடப்பட்டிருந்த அலங்காரத்தில் தன் கருவிழியை பதித்தவாறு மலர்ந்த முகத்தோடு தாயின் மடியில் இருந்தாள்.
சக்கரவர்த்தி கொதிப்பின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு மகன் இங்கு சம்மந்தி குடும்பத்தையும் அழைத்து வந்து இப்படி அடிமை வேலை பார்ப்பது எரிச்சலை தந்தது. ஆனால் காட்டிக் கொள்ள முடியாமல் நெளிந்தவாறு அமர்ந்திருந்தார். அதே நேரம் அவர் செல் குரல் கொடுக்க,
அதை தூக்கி கொண்டு தனிமையான இடம் தேடி சென்றார் சக்கரவர்த்தி, சர்க்கரவர்த்தி எழுந்து போய் பத்து நிமிடத்தில் அந்த வீட்டில் இருந்து வெளிவந்த முகுந்தனை கண்டதும் துள்ளலோடு அவன் அருகில் வந்த மோனிகா, அவன் ஒற்றை கையை பிடித்து அணைத்து கொண்டு,
“போர் அடிக்குது முகுந்த். நாம எங்காவது வெளியில போயிட்டு வருவோமா?”
என்றவளை மெளனத்தோடு ஒரு முறை பார்த்தவன்,
“டிரைவர்ட்ட சொல்லவா? நீ வேணா போயிட்டு வாறியா? எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கு மோனிகா.”
சொன்னவாறு தன் கையை கட்டியாக பிடித்திருந்த அவள் கையை மெல்ல எடுத்து விட,
“விளையாடவா செய்யுறீங்க. நான் எப்படி தனியா?”
அவள் சிணுங்கினாள்.
“வேணா பிரபாவையும் கூட கூட்டிட்டு போ.”
“என்ன முகுந்த். நான் உங்க கூட வர விரும்புனா. நீங்க யாரோடோ கோர்த்து விட பாக்குறீங்க.”
இப்போதும் அவள் சிணுங்குதலோடே பேச,
“இல்ல மோனிகா. ஓவியா அப்பா பாவம். உடம்புக்கு முடியாதவர். அவரால பெரிசா வேலை செய்ய முடியாதுணு தெரிஞ்சி தான் மூணு நாள் முன்னாடியே வந்தேன். நாம சுத்த இல்ல… வேணா வா… டெக்கரேஷன் ஆட்கள் கொஞ்ச பேர் வந்திருக்காங்க. அவங்க கூட சேர்ந்து நாமளும் பந்தலை அலங்கரிப்போம்.”
என்றதும் உற்சாகமாக அவனுடன் இருக்கும் ஆசையில் துள்ளலோடு கிளம்பினாள் மோனிகா.
அதே நேரம்,
ஓவியாவும் திலகாவும் இருந்த அறைக்குள் நளன் நுழைந்தான்.
திலகாவின் மடியில் புதைந்து கதறி அழுத ஓவியாவை பார்த்து திகைத்தவன்,
“என்னாச்சு…”
என பதட்டத்தோடு அருகில் வர, நளனின் குரல் கேட்டு எழுந்தவள், அவசரம் அவசரமாக கண்ணை துடைத்தவாறு திலகாவை பார்த்து,
“ பிளீஸ் சொல்லிடாதே”
என்பது போல முகபாவனை செய்ய, அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்தான் நளன்.
“என்னாச்சு இரண்டு பேரும்.ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…”
இருவரையும் ஆராய்ச்சியாக அவன் பார்க்க, சூழ்நிலையை கடக்க விரும்பிய திலகா…
“சார்… எங்க…”
“அவங்க அப்பாவை பார்க்க போயிருக்கான்.”
என்றதும் அதிர்ந்து எழுந்த ஓவியா,
“என்ன சொல்லுறீங்க… அப்படினா சார் மெட்ராஸ்க்கு கிளம்பிட்டாங்களா?”
என முகத்தை சற்று மாற்றி ஆர்வத்தோடு கேட்க,
அவளின் ஓவர் ஆர்வத்தை ஒரு நொடி பார்த்தவன்,
“அவங்க அப்பாவை பார்க்க அவன் ஏன் மெட்ராஸ்க்கு போகணும். வரும் போதே அவன் குடும்பம் மொத்தத்தையும் கூட்டிட்டு தானே வந்தான்.”
என்றதும் பதறி போய் எழுந்தவள்,
“நீ… நீங்க என்ன சொல்லுறீங்க. சக்கரவர்த்தி சார் இங்கு எங்க விட்டுலயா?”
மொத்தமாய் அதிர்ந்து கேட்டவளையும் திலகாவையும் ஒரு முறை குழப்பத்தோடு பார்த்தவன்.
“அதுக்கு ஏன் இப்படி அதிர்ச்சியாகுறீங்க. நாங்க ரெண்டு பேர் வரும் போதே அவங்களோட சேர்ந்து தான் வந்தோம். கூடவே முகுந்தனுக்காக பாத்திருந்த மேனிகா குடும்பமும் வந்திருக்கு.”
நளன் அடுத்தடுத்து குண்டை தூக்கி போட, நம்ப முடியா ஆத்திரத்தில் எழுந்து ஒடி வெளியே வந்தாள் ஒவியா . அவள் முகத்தில் அளவுக்கு அதிகமான பதட்டமும் பதைபதைப்பும் இருக்க கண்டதும் திலகாவை குழப்பமாக பார்த்தவன், பின் ஒவியா ஒடிய திசையில் அவனும் ஓடி வந்தான்.
ஒடி வந்தவள் இடையிலே அதிர்ந்து போய் சிலையாக நின்று விட, அவளின் பார்வை சென்ற இடத்தை பார்த்தவன் ஆச்சரியகுறியோடு மறுபடியும் அவளை திரும்பி பார்த்தான்.
நம்ப முடியா அதிர்வில் ஓவியா முகம் இருக்க… அவள் அதிர்ந்து பார்த்த இடத்தில் முகுந்தனும் மோனிகாவும் நின்றிருந்தனர்.
அவன் வலது கரத்தை கட்டியாக பிடித்து கொண்டு உரிமையுள்ளவள் போல் முகம் மலர நின்ற அவளை கண்டதும் ஒடி வந்த கால்கள் சோர்ந்து, இப்போது நடை தளர்ந்து, மனம் கலங்கி, மொத்தமாய் உடைந்து போனவளாய, அவர்களிடமிருந்த பார்வையை மெல்லமாய் திருப்பி கொண்டு வலியின் உச்சத்தில் வெளியில் வந்தவள் பார்வையில் சக்கரவர்த்தி தான் விழுந்தார்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel