வணக்கம் வாசகர்களே!
முகுந்தனின் செயலால் தடுமாறும் ஓவியா?
தன் காதலை சொல்வளா? இல்லை மறுபடியும் மனதை மறைத்து நடிப்பாளா?
திருமணத்திற்கு முதல் நாள் காலை.
ஊரே ஓவியாவின் வீட்டின் முன்தான் கூடி நின்றது. பதினாறு ஸ்பீக்கர் வைத்து சினிமா பாடல்கள் செவியை பிளந்து கொண்டிருந்தது. வாழை மர தோரணங்களும், ஜிகினா பேப்பரின் அலங்காரமும் அந்த குடிசை வீட்டையே ஒரு தேவலோகத்து குடிசைப் போல் ஆக்கி விட்டிருந்தது. வீட்டின் முன் பகுதி அத்தனையும் மலர் மாலைகளாலும், சாமந்தி பூ தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, பந்தலை சுற்றி மல்லிகை பூ அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
மணமக்கள் அமரும் பந்தலில் சுற்றி றோஸ் கலர் சில்க் துணியில் தோரணங்களும் அதற்கு இடையில் வெள்ளை நிற அலங்கார ஜிகினா பேப்பரும் கொடுத்து ஒரு வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது எல்லாம் சக்கரவர்த்தி முன் மார்தட்டி பேசிய இளைஞர் அணி தலைவரால் உருவானது.
இதற்கு தாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பது போல் அந்த தெருவை சுற்றியே மின் அலங்காரங்களில் ஜொலிக்க வைத்து விட்டார் பஞ்சாயத்து தலைவர்.
பந்தலை தொடர்ந்து வாசல் பக்கம் சிகப்பு வாழை குலையும் அதை தொடர்ந்து மக்கள் வரும் இடம் எங்கும் தோரணங்களும், ஜிகினா பேப்பர் அலங்காரமும் என
அந்த திருமண வீடு ஜகஜோதியாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.
ஊர் பெரியவர்கள் எல்லாரும் காலையிலே வந்து கல்யாண வேலைகளில் கலந்து கிடக்க, மோனிகாவின் தந்தையும் அவர்களோடு கலந்து விட, வேறு வழியில்லாமல் சக்கரவர்த்தியும் இளைஞர்களை வேலை வாங்க ஆரம்பித்து விட்டார். என்னவோ வந்திறங்கிய போது அவரில் இருந்த மனநிலைக்கும் இப்போதைய மனநிலைக்கும் ரொம்ப வித்தியாசம் இருந்தது. இரண்டு நாள் கிராமத்து வாழ்க்கை முறை, கிராமத்தானின் பேச்சு என ஒரு வட்டத்திற்குள் வந்ததால் காலில் சக்கரம் கட்டி சுற்றிய மெட்ராஸ் வாழ்வில் இருந்து மூச்சு விட்டது போன்றதொரு உணர்வு.
சிறு வயதில் கிராமத்து வீட்டில் தன் குடும்பத்தோடு கலந்து கிடந்தது போன்றதொரு உணர்வு. அந்த உணர்வே இந்த முறையும் அவருள் மாற்றத்தை விதைத்து விட்டிருக்க, ஊர் பெரியவர்களோடு தன்னையும் இணைத்து கொண்டு விட்டார் சக்கரவர்த்தி. சூழல், தான் நினைத்தது போல் தான் இருக்கிறது மாறவில்லை என்ற மப்பாக கூட இருக்கலாம்.
பரபரப்பாக வெளி வேலைகளை ஆண்கள் பார்த்து கொண்டிருக்க, குமரி பெண்களும் வாண்டு குழந்தைகளும் பின்பகுதியில் ஒடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
வீட்டு பெண்கள் வந்தவர்களுக்கு உண்ண குடிக்க என பார்த்து பார்த்து செய்ய, இளம்பெண்கள் மாலை பங்ஷனுக்கு தேவையான வேலைகளில் இருந்தனர். வீடே மனித நடமாட்டத்தில் கலகலத்து போய் இருக்க, அந்த கலகலப்பு சத்தத்தை மீறி,
“நான்… வந்துட்டேன்… மிஸ்டர் கந்து குட்டி வந்துட்டேன்…”
குரல் கொடுத்தவாறு கையில் ஒரு பெரிய வெங்கல குடத்தோடு உள்ளே நுழைந்தான் கோபாலு.
“இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்…”
உள்ளே நுழையும் போதே குடுகுடுப்பை காரன் போல கத்தி கொண்டு வந்தவனை பார்த்து,
“என்ன கந்து. விடிஞ்சதும் ஓடி வந்துட்டா. அந்த சொட்டை தலையன் சோறு போடாம விரட்டிட்டானா என்ன? அதான் வயிறு நிறைய கொட்டிக்க பாட்டு சத்தம் கேட்டதும் உள்ளால நுழைஞ்சிட்டியோ? நாளைக்கு தான் எங்க அக்காவோட மேரேஜ் பங்ஷன். கொட்டிக்கணும்னா நாளைக்கு வா…”
வைஷ்ணவி அவனை கிண்டலோடு வாரி எடுக்க,
“நான் என்ன சோத்துக்கு வந்தேனா நினைச்சா. என் தோஸ்த்தோட திருமணத்துக்கு முதல் நாளே வந்து, கூட இருந்து சப்போட் பண்ண நினைச்சா. நீ என்னை கலாய்க்கிறா? அந்த சோடாபுட்டி வேறு நேற்றே லீவு கேட்டதுக்கு தரமாட்டேனு சொல்லிட்டான். நான் விடணுமே… மூன்று தோசையை கரிய வச்சி, சாப்பிட முடியாம செய்து முதலாளியை கோபப்படுத்திட்டு வந்திருக்கேனாக்கும்.”
என ஏதோ சாதித்து விட்ட பெருமையில் அவன் காளரை பிடித்து தூக்கி விட்டவாறு,
“ஆமா என் தோஸ்த் எங்க…”
என்றவனை சந்தோஷத்தோடு பார்த்த எழிலரசி,
“ஓவியா உள்ளால இருக்கா…”
“முதல்ல நான் அவளுட்ட போய் ஒரு அட்டெனன்ஸ் போட்டுட்டு வந்திடுறேன்.”
ஹாலில் இருந்த மொத்த கூட்டத்தையும் விலக்கி விட்டு ஓவியாவின் அறைக்குள் ஒடினான் கோபாலு.
உள் நுழையும் போதே,
“இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.”
என்ற வாழ்த்து மொழியோடு செல்ல…
“படவா வந்துட்டியா?”
திலகா தான் முதலில் குரல் கொடுத்தாள். அதன் பின்பே அவன் முகம் காட்டியவன்.
“இந்த கோபாலு வந்துட்டேன். வரிசையா சொல்லுங்க. ஒவ்வொரு வேலையா முடிக்கிறேன். நேற்று வந்து செய்றதா சொன்ன அம்புட்டு வேலையும் கூட இன்று செய்து கொடுத்திடுறேன்.”
அரசனிடம் அடிபணிந்து நிற்கும் சேவகன் போல அவன் நிற்க,
“இதுல உட்காருடா. உனக்கு ஒரு வேலையும் இங்கு இல்ல. அதான் அடிமைங்க ரெண்டு சிக்கியிருக்கே. அதுங்க எல்லாத்தையும் முடிச்சிருக்கும்.”
“அடிமைகளா? என் வேலையை திருடி செய்த அடிமைகளை நான் சும்மா விட போறது இல்லை. அக்காவுக்கான கடமை மொத்தத்தையும் இந்த தம்பி முடிக்க காத்திருக்கும் போது இடையில் என் உரிமையை பறிக்க வந்த அந்த அப்பாவி… சாரி… சாரி… அட பாவி யார் திலகா?”
அவன் கேட்ட தோரணையில் சிரித்த திலகா.
“எல்லாம் எங்க முதலாளிங்க தான்.”
என்றதும் அவளை அதிர்ந்து பார்த்தவன்,
“ யாரு? முகுந்தன் சாரா?”
சட்டென கோபாலின் குரல் மாற, அவன் மாற்றமே அவன் அடுத்து பேச போகும் பேச்சை சொல்லி விட,
“கோபாலு உன்னை வைஷ்ணவி தேடினா? ஏதோ கொஞ்சம் பேன்ஸி பொருட்கள் வாங்கணுமாம். டவுண் வரை கூட்டிட்டு போகணுமாம்.”
அவள் அவன் பேச்சை கத்தரித்து வெளியில் அனுப்ப நினைப்பது தெரியாமல்,
“நான் வரும் போதே அந்த புள்ளையை பார்த்துட்டு தானே உள்ளே வந்தேன். அது என்னிடம் எதுவும் சொல்லலயே..”
என்றதும் ஒரு நொடி தடுமாறியவள்,
“அவள் மறந்திருப்பா. இப்போ போய் கேளு. அவா சொல்லுவா.”
பதட்டத்தோடு சொன்னவளை ஆழமாக பார்த்தவன், சட்டென அவளை இடித்து கொண்டு ஒரு துள்ளலோடு அமர்ந்தவாறு,
“எதுக்கு இப்போ என்னை கழற்றி விட பாக்குறா? சொல்லு சொல்லு…”
“ஏய்… எதுக்குடா நான் உன்னை கழற்றி விட பார்க்கணும். நீ என் தம்பி. முழு பங்ஷனும் முடிகிற வரை என்னோட இருக்க வேண்டியது என்னோட தம்பி பொறுப்பு. உன்னை விரட்ட பார்ப்போனா? நிஜமா எனக்கும் வைஷ்சுக்கும் சில திங்க்ஸ் தேவைப்படுது. அதான் வாங்கிட்டு வர சொல்லலாமேனு.”
அவள் இழுத்து கொண்டு நிறுத்த.
“இதோ… இதோ… இப்போதே கிளம்புறேன்.”
என்றவன் அங்கிருந்து அவசரமாக வெளியேற, ஒவியா அப்போது தான் பிடித்திருந்த மூச்சை வெளியே விட்டாள்.
சட்டென நினைவு வந்தவள் போல, வெளியே ஓடி வந்து கோபாலை இடை மறித்து,
“மவனே… மனசு தாங்காம கோவில்ல வச்சி உனட்ட புலம்புனதை வெளியில சொன்னா… சொருகிடுவேன்.”
கத்தி போல கையை வைத்து அவள் மிரட்ட,
“பத்திரகாளி. நான் யார்ட்டயும் சொல்லல. அதான் மாமா மாறி போயிட்டாரே. அப்படியும் அது பற்றி நான் ஏன் பேச போறேன். நீ கிளம்பு. காத்து வரட்டும்,”
சொன்ன கோபாலோ அவளை முறைத்து கொண்டு நகர, ‘கடவுளே… கடவுளே… இவன் எதையும் உழறிட கூடாது.’ வேண்டி கொண்டே உள்ளே போனாள்.
“வைஷ்ணவி எங்கிருக்கிறாள்.” என விசாரித்து, “பின் புறம் இருந்து பூ தொடுக்கிறாள்.” என அறிந்ததும் கோபாலு,
பின் பகுதிக்கு வந்தான்.
கூட்டமாக இருந்து ஐந்து இளம் பெண்கள் பூ தொடுக்க, அவர்கள் நடுவில் போடப்பட்டிருந்த ஒரு சின்ன மர ஸ்டூலின் மேல் இருந்த சாக்கு பையை கீழே எடுத்து வைத்து விட்டு அதில் துள்ளலோடு அமர்ந்தான்.
“இப்போ சொல்லுங்க. யாருக்கு என்ன எல்லாம் வேணும்ணு சொல்லுங்க.”
அவன் அவசரமாக தன் சட்டை பாக்கெட்டில் இருந்து பேப்பரையும் பேனாவையும் எடுக்க,
“மிஸ்டர் கந்து குட்டி. எது பற்றி பேசுறீங்க. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.”
என்ற வைஷ்ணவியை முறைத்தவன், சட்டென திரும்பி கவியை பார்த்தவாறு,
“அதாம்மா உங்க அக்காளுட்ட பேன்ஸி வாங்கணும்ணு சொன்னீங்களே. என்ன வேணும்ணு சொன்னா இந்த கந்து குட்டி கோபாலு ஒடி போய் வாங்கிட்டு வந்திடுவேன்.”
“நீ ஓடவும் வேணாம். ஒளியவும் வேணாம். கொஞ்சம் வெயிட் பண்ணு. நானே ரெடியாகி வரேன்.”
என வைஷ்சு எழும்ப , சட்டை காளரை தூக்கி விட்டு கொண்டே ஸ்டைலாக அந்த கூட்டத்தில் இருந்து வெளியே வந்தான் கோபாலு. தூரமாய் நின்ற முகுந்தன் அவன் கண்ணில் விழ,
“இது யாரு? பார்த்தா பகட்டா தெரியுறாரு. இவர் ஏன் இந்த வேலை எல்லாம் செய்றாரு.”
மேவாயை தேய்த்து கொண்டு வந்தவன், கொஞ்சம் நீங்கி நின்றே நோட்டமிட,
“ஒ… திலகா சொன்ன அடிமைகளா? ஆமா இவர் எதுக்கு இங்க வந்து இந்த வேலை செய்றாரு.”
அவனை நெருங்க சென்ற இவனை பிடித்து நிறுத்திய எழிலரசி.
“கோபாலு. இதையும் அந்த தம்பிட்ட கொண்டு கொடுத்திடுப்பா. இதையும் சேர்த்து உரிச்சி போடட்டும். தேங்காய் குறையாம வேணும்ணு சமையல்காரன் கந்தன் முனங்கிட்டு போனான். இதையும் சேர்த்து உரிச்சி அந்த தம்பிட்ட சாக்குல கட்ட சொல்லிடு.”
“நானா? அவர்ட்ட போயா?”
“ஏண்டா தயங்குறா?”
“அது யாருணு தெரிஞ்சி தான் இந்த வேலையை அவர்ட்ட செய்ய சொல்லுறீங்களாம்மா.”
“எல்லாம் தெரிஞ்சி தான் சொல்றோம். நீ… நான் சொன்னதை செய்.”
“தேங்காயை நான் உரிச்சி கொடுக்கிறேன். அவரை அவர் அப்பா கூட போய் உட்கார சொல்லுங்க. அவர் இறங்கி வந்திருக்கிறார் என்கிறதுக்காக ஒரு கம்பெனி முதலாளியை கூட்டிட்டு வந்து தேங்காய் உரிக்க சொல்லுவீங்களா என்ன?
சொல்லியவாறு அவள் கையில் இருந்த தேங்காயை பறிக்க, எழிலரசி செய்வது அறியாது திகைத்து நின்றாள்.
“இவன் என்ன சொல்லுறான்.”
கோபாலின் பேச்சு அவளுள் ஜீரணமாகவே இல்லை. ஒரு வழியாக ஜீரணமான போது அவள் குலையே நடுங்கியது. தூரமாய் கோபால் போய் பேசிக் கொண்டிருந்த முகுந்தனை உடலே நடுங்க பார்த்தாள்.
“இது… இது… அந்த பெரிய மனுஷன் பெத்தெடுத்த புள்ளையா?”
உண்மை தெரிந்து அவள் அதிர்ந்து நின்ற நேரம்,
முகுந்தனின் அருகில் வந்தான் கோபாலு.
“நீங்க எதுக்கு சார், இங்க வந்து இந்த வேலையை பாக்குறீங்க. நீங்க போய் முன்னால உங்க அப்பா கூட உட்காருங்க. இனி நான் பாத்துகிறேன்.”
உரித்த தேங்காயை ஒரு பக்கமும் மட்டையை மறு பக்கமும் வீசி எறிந்தவன்.
“ஏன்? இதை நாங்க செய்திட மாட்டோமோ? நீ வேணா போய் குமரி பொண்ணுகளுட்ட கும்மாளம் இடு. இதை நான் பாத்துக்கிறேன்.”
“நீங்க எல்லாம் போய் தேங்கா உரிச்சிட்டு, விடுங்க சார்…”
என உரிமையோடு பிடித்து இழுத்தவன், பின் தேங்காயை அவனே உரிக்க ஆரம்பிக்க,
“ஆக… உனக்கு என்னை பற்றி தெரிஞ்சிருக்கு.”
“தெரியாம என்ன? எல்லாம் தெரியும். ஒவியா அக்காவோட முதலாளி தானே நீங்க. உங்க பெயர் முகுந்தன் தானே.”
“ம்… பெயர் வரை கரெக்டா சொல்லுறா? அப்படினா என்ன பற்றி யாரோ உனட்ட சொல்லியிருக்காங்க.”
“யாரோ என்ன? ஓவியா அக்கா தான் சொல்லுச்சு.”
ஓவியா என்றதும் ஆர்வமானவன்,
“உன் அக்கா அப்படி என்ன சொல்லியிருக்க போறா? என்னை கெட்டவன்னு சொல்லியிருப்பா. அப்படி தானே.”
“என்ன சார். இப்படியெல்லாம் பேசுறீங்க. ஓவியா அக்காவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.”
சொல்லியவன் சிரித்து கொண்டே தேங்காய் உரிக்கும் கம்பியில் தேங்காயை ஒங்கி குத்த…
“ரியலி…”
என்றான் அடக்கப்பட்ட சிரிப்போடு,
“ஏன் சார் அது உங்களுக்கு தெரியாதா? இடிபாடுக்கு நடுவுல அது உங்களை எப்படி எல்லாம் பாத்திருக்கு. அப்படி பட்ட புள்ளைட்ட ஒத்த வார்த்தை சொல்லாம கிளம்பி போக உங்களுக்கு எப்படி சார் மனசு வந்துச்சு. இரண்டு மாசம். கோவில் மண்டபத்துல நந்தியோட காதுல புலம்பி தள்ளிடுச்சி தெரியுமா?. நந்திதேவரோட காதுல ரத்தம் வந்திடுச்சினா பாத்துக்கோங்க.”
சொல்லி சிரித்தவனோட கிண்டலை ரசித்தவன், ஓவியா பற்றி இன்னும் அறிய ஆர்வம் உண்டாக,
“அதுக்கு பிராயசித்தமா உங்க அக்காவுக்கு வேலை கொடுத்தேனே. அப்புறம் நந்திதேவனை பார்க்க உங்க அக்கா வரலியா?”
“ம்… வந்தாங்க. ஒரு எட்டு மாசத்துக்கு அப்புறமா அதே கோவில்ல அதே நந்தி சிலைட்ட மறுபடியும் அழுது அழுது எதையோ பேசுச்சு. ஆனா என்ன பேசுதுணு தெரியல. அப்புறமா நான் ரொம்ப வற்புறுத்தி கேட்டேன்.”
“அப்போ தான் உங்களை அழ வச்சிட்டதாகவும் உங்களுக்கு பிடிக்காத எதையோ செஞ்சி உங்களை கஷ்டப்படுத்திட்டதாகவும் சொல்லி அழுதுச்சு. எனக்கு எதுவும் புரியல. ஆனா முகுந்த் சார் என்னை மன்னிப்பாருல்லடா… அப்படினு திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருந்துச்சு. அது மனசு குழந்தை மனசு சார். அது என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிச்சிடுங்க.”
என்ற போது தூரமாய் நின்று வைஷ்சு அழைக்க, முகுந்தனிடம் சொல்லி விட்டு கிளம்பினான் கோபால்.
அவன் சென்ற பிறகும் அதே யோசனையிலே நின்று கொண்டிருந்தான் முகுந்தன்.
“ஆக… அங்கு என்னை அழ வச்சிட்டு வந்து இங்கே அவளும் அழுதிருக்கா. அப்படினா நான் நினைச்சது சரி. அவளோட மனசுல நான் இருக்கேன். அப்படியும் ஏன் ஒத்துக்க மாட்டேங்குறா?”
அன்று முழுதும், அதன் பின் என்ன வேலை செய்தாலும் அதே ஓடியது…
நேரம் 4 மணியை நெருங்கி கொண்டிருந்த நேரம் சக்கரவர்த்தி செல் குரல் கொடுக்க, மாலை விருந்து தொடங்க வேண்டி இருந்ததால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் விலகி வந்த சக்கரவர்த்தி
எடுத்து காதுக்கு கொடுத்தார். எதிர் முனை சொன்ன செய்தியில் கண்கள் அதிர்வில் விரிந்தது.
“சொல்லுறது நிஜமாடா?”
சொன்னவர் அப்படியே அமைதியாகி உட்கார்ந்து விட, தீனதயாளன் யோசனையோடு அவர் அருகில் வந்தார். வந்த செய்தி ரொம்ப மோசமான செய்தி என்பதை சக்கரவர்த்தியின் முகம் பார்த்தே தயாளன் தெரிந்து கொள்ள,
“என்னாச்சு சம்மந்தி. எதுவும் கெட்ட விசயமா?”
என கேட்ட தயாளனை வெட்கம் கலந்த பார்வை பார்த்தவர்
“தப்பு பண்ணிட்டேன் தயாளன். ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.”
என நொந்து போய் பேசுபவரை புரியாமல் பார்த்து கொண்டிருந்தார் தயாளன்.
அதே நேரம்,
இரவு பங்ஷனுக்காக மணமகள் அலங்காரம் ஆரம்பமானது. மெருன் கலர் பட்டு சாரியில் வெளிர்மஞ்சள் கலர் பாடர் வைத்த ஒரு பட்டு சாரியை பக்கத்து வீட்டு பெண்மணிகளின் உதவியோடு கட்டிக் கொண்டிருந்தாள் ஓவியா. நேரம் நெருங்க நெருங்க மனசு அதிவேகமாக அடிக்கத் தொடங்கி இருந்தது. அரை மணி நேரத்தில் அவளுக்கு முழு அலங்காரம் செய்து அவளை கட்டிலில் உட்கார வைத்து விட்டு அனைவரும் சென்று விட்டார்கள்.
ஆனால் வெளியில் முகுந்தன் முன் இப்படி போகவே கஷ்டமாக இருந்தது அவளுக்கு. அவளும் இந்த இரண்டு நாளில் பல நேரம் அவன் அருகில் போய் கெஞ்சி பார்த்தாள். கதறிப் பார்த்தாள். ஆனால் அவன் போக மறுத்து விட்டான்.
“எழும்புடி பூ வச்சி விடுறோம்.”
என இளம்பெண்கள் பூவோடு வர, எழுந்து நின்றாள் ஓவியா. மகளின் கோலத்தை கண்ணுக்குள் நிரப்பியவாறு வாசலிலே நின்றிருந்தாள் எழிலரசி.
“கடவுளே ஒரு குழப்பமும் வராம இந்த திருமணம் நல்ல படியா நடக்கணும். என் பொண்ணு வாழ்க்கையை அழிச்சிடாத. அவளோட கனவை கலைச்சிடாத”
கண்ணீர் மல்க நின்ற தாயை புரியாமல் பார்த்தாள். தாயின் கோலம் ஏதோ கலவரத்தை விதைக்க, சட்டென ஓவியாவின் கண்கள் தங்கைகள் இருவரையும் தான் தேடியது. கூட்டத்தில் அவர்கள் இருவரும் இல்லை என்றதும் மனது பதட்டமானது. தூரமாய் நின்ற பெண்னை அழைத்து,
“கவி நான் வைஷ்சுவை பார்க்கணும். கொஞ்சம் கூட்டிட்டு வாயேன்.”
என்றதும் அந்த பெண்ணும் கூட்டத்தில் நகர்ந்து வெளியேறினாள். அவள் வரும் வரை இவள் மனது ஒரு நிலையில் இல்லை. “எப்படி மறந்தேன். இரண்டு மணி நேரமாய் அவர்களை எப்படி மறந்தேன்.”
பதற்றம் நெஞ்சில் அதிகமாக, தவிப்போடு இருந்தவளிடம் கவியும் வந்து,
“வைஷ்சுவை எங்க தேடியும் காணலக்கா…”
என சொல்ல பதறி விட்டாள்.
சக்கரவர்த்தியின் வார்த்தை திரும்ப திரும்ப நியாபகத்தில் வந்தது.
“ஏய்…. ராஜேந்திரா அவளோட வீட்டுலயும் இரண்டு பொண்ணுங்க இருக்குலடா. கவனமா பாத்துக்க சொல்லு. அப்புறம் ஒரு நாள் காணாம போயிடும்.”
“வைஷ்சு… வைஷ்சு…”
அவள் மனம் அரற்ற ஆரம்பித்தது.
எதுவோ சரியில்லை என மனசு சொல்ல, பதற்றத்தோடு வெளி வந்தாள். என்ன செய்வது? யாரிடம் சொல்வது எதுவும் தெரியவில்லை. முகுந்தன் இங்கு வந்த போதே பயப்பட்டாள். இப்படி எதுவும் நடக்கும் என்று. அதிலும் முகுந்தன் தந்தையை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறான் என்று நளன் வழியாக தெரிய வந்த போது இன்னுமே பயப்பட்டாள். முகுந்தன் ஏதாவது செய்ய போய், தான் சக்கரவர்த்தியின் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்று பயந்தாள். அதனால் தான் அவனை கிளம்புமாறு கையெடுத்து கும்பிட்டாள்.
ஆனால் அந்த வளர்ந்த மனிதன் கேட்டானா? தந்தையின் சுயரூபம் தெரியாமல், அவனும் அல்லவா இவளிடம் விளையாடி விட்டான். இப்போது அவன் காதல் அவள் தங்கையை மீட்டு கொடுக்குமா?
“ ஐயோ கடவுளே என் தங்கைக்கு எதுவும் ஆகி விட கூடாது.”
அவளின் மனம் பதட்டப்பட ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக தன்னிலை மறக்க ஆரம்பித்தாள். யாரிடமும் சொல்ல தோன்றாமல் வீடு முழுவதும் வளைய வந்தவளுக்கு தங்கையை காணாததால் உண்டான கொதிப்பு ஆத்திரதையும் ஆவேசத்தையும் தர, வெறி வந்தவள் போல சக்கரவர்த்தி இருந்த முன்பகுதியை நோக்கி வந்தாள்.
முன்னால் கம்பீரமாய் இதுவரை இருந்த சக்கரவர்த்தியையும் காணவில்லை. தயாளனையும் காணவில்லை பதட்டம் அதிகமானது. சுற்றி பார்வையை செலுத்தினாள் முகுந்தனையும் காணவில்லை.
செய்வதறியாது திகைத்தவள் முன்னால் முதியவர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்த நளன் விழுந்தான். அவனை கண்டதும் ஏதோ ஒரு பிடிப்பு கிடைத்தது போல அதிவேகமாக அவன் அருகில் வந்த போது, தூரமாய் நின்று சக்ரவர்த்தி தீனதயாளனோடு பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவரை அக்கணம் பார்த்தவள் உதடோ ஆவேசத்தில் துடிக்க, சீற்றத்தோடு அவர் அருகில் வந்தவள்,
“என் தங்கச்சி எங்க? என் தங்கச்சி எங்க?”
ஆவேசத்தோடு அவள் கத்த,
திருதிருவென விழித்தார் சக்கரவர்த்தி,
“உண்மையை சொல்லிடுங்க. நீங்க தான்… நீங்க தான். என் தங்கச்சியை என்னவோ பண்ணிட்டீங்க. உண்மையை சொல்லிடுங்க. இல்ல உங்களை நான் சும்மா விட மாட்டேன்.”
ஆவேசம் வந்தவள் போல் தன் முன் நின்றவளை பார்த்து சக்கரவர்த்தி அரண்டு தான் போனார். கூடவே சம்மந்தி முன் இவள் இப்படி பேசுகிறாளே என்று ஆத்திரமும் வந்தது. கூடவே இந்த பெண்ணுக்கு என்ன மூளை பிசகிடுச்சா என்ற கோபமும் வந்தது. ஆனாலும் மறுபதில் சொல்லாமல் அமைதியாய் நிற்க…
அவளுக்கு ஆவேசம் அதிகம் ஆனது.
“ ஏன்ய்யா… நான் உனக்கு என்ன பாவம் செய்தேன். ஏன்ய்யா என் வாழ்க்கையில வந்து வந்து விளையாடுறா? உன் மகனை அந்த இடிபாடுக்குள்ள சந்திச்சது விதி செய்த சதிய்யா. அப்போ சத்தியமா அவன் பணக்கார சக்கரவர்த்தியோட ஒரே மகன்னு எனக்கு தெரியாது. அது மட்டும் தெரிஞ்சிருந்தா அவன் பாதுகாப்புல வாழ்ந்தப்போ என் மனசை பறிக் கொடுத்திருக்க மாட்டேன். அவனோட கரிசனை, அன்பு, அவன் என்னை பாதுகாத்த விதம் எல்லாம் சேர்ந்து அவனை நேசிக்க வைத்தது உண்மை.
ஆனா எப்போ என் சக்திக்கு எட்டாத உயரத்துல அவன் இருக்கானு தெரிஞ்சிதோ அப்பவே என் மனசுக்குள்ள அதை போட்டு புதைச்சிட்டு தான் அங்க வந்தேன். ஆனா விதி அவன் மனசுலயும் நான் இருக்கேணு அவன் வாயாலயே சொல்ல வச்சிது. பல நாளா கேட்க தவமிருந்த வார்த்தையை உங்க மகன் வாயால கேட்டும், உங்க பேச்சை கேட்டு தானேய்யா என் மனசை மறைச்சிட்டு அங்க இருந்து ஒடி வந்தேன்.”
“அப்படியும் விட்டீரா? உங்க மகன் என்னை நோக்கி வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்புக்கு போன் பண்ணி என்னை மிரட்டி என் குடும்பத்தை காட்டி பணிய வைக்க தானே செஞ்சீங்க. நானும் என் குடும்பத்துக்காக நெஞ்சு நிறைஞ்சி இருந்தவனை தூரமா வச்சிட்டு பிடிக்காதவன் கூட வாழ ரெடியாகிட்டேன் இல்ல. அப்படியும் அப்படியும் ஏன்ய்யா இப்படி செய்தா. நான் தான் உன் மகன் பக்கத்துல நெருங்கலியே. நாளை விடிஞ்சா வேற ஒரு வாழ்க்கைக்குள்ள போயிடுவேனே. அப்படியும் அப்படியும் என் தங்கச்சியை எதுக்கு தூக்குனா. சொல்லு. நீ சொல்லாம விடமாட்டேன்.”
ஆவேசம் வந்தவள் போல சக்கரவர்த்தியின் சட்டையை பிடித்து விட,
தூரமாய் நடப்பதை பார்த்து கொண்டிருந்த நளன் ஒடி வந்து ஓவியாவை பிடித்து விலக்கினான். அவள் ஆவேசமாக அவனிடம் வந்து பின் வேறுபக்கம் நோக்கி நகர்ந்த போதே சந்தேகத்தில் அவளை தொடர்ந்தே வந்திருந்தான். ஓவியா சக்கரவர்த்தியிடம் வரவும் தான் சற்று தயங்கி நின்றான்.
ஒவியா சொன்ன அனைத்தையும் கேட்டு உறைந்து போய் தான் நின்றான். சக்கரவர்த்தி ஓவியாவை மகன் வாழ்வில் இருந்து பிரிக்க ராஜேந்திரனிடம் பொறுப்பை கொடுத்து அவன் அதை அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டான் என்று தான் முகுந்தன் சொன்னான். அதிலும் அவன் பெண் பார்க்க சம்மதித்ததும் தந்தையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் சக்கரவர்த்தி பின்னால் இவளை இந்த அளவு ஒவ்வொரு நாளும் புழு போல துடிக்க வைத்திருப்பார் என்று நினைத்திருக்கவே மாட்டான். ஓவியாவின் வாய்மொழியை கேட்க கேட்க ஆத்திரம் தான் வந்தது. ஆனாலும் சட்டையை பிடித்ததும் ஒடி வந்து அவளை அவரிடம் இருந்து பிரித்து எடுத்தான்.
“விடுங்க நளன். ஏழைகள்ணா இவர் என்னணு நினைச்சாரு. எப்பவும் அடங்கி போக முடியாது நளன். அடங்கி போக முடியாது. என் குடும்பத்தை டச் பண்ணாத வரை தான் பொறுமையா இருக்க முடியும். அதுவே பண்ணிட்டா அப்புறம் என்ன நடந்தா என்ன?”
“அன்று குடோன்ல்ல தீ விபத்தை உண்டு பண்ணுனதே என்னை கொல்லதான்னு எனக்கு தெரியும். ஆனாலும் இதுவரை நான் முகுந்தன்ட்ட சொல்லல. மெட்ராஸை விட்டு காலையிலே ஒடியிருக்கணும்ணு மிரட்டுனாரு. இல்ல மானத்தோட வீடு திரும்ப மாட்டானு கர்ச்சித்தாரு. அப்ப கூட பொறுமையா அமைதியா அவர் மகனை விட்டுட்டு வந்தேன். அவரோட மகன் என்னோட சம்மதம் கேட்காமலே அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. மகன் முன்னால வச்சி பங்ஷனுக்கு பதமா அழைச்சிட்டு, பின்னால என் குடும்பத்தை எவ்வளவு தர குறைவா பேசுனார் தெரியுமா? எல்லாம் பொறுத்துட்டு ஊருக்கு வந்தேன். அப்படியும் விட்டாரா? அவர் மகன் என்ன சொன்னாரோ தெரியல…
“உனக்குணு ஒருத்தனை நிச்சயம் பண்ணிட்டாங்கல. அவனோட படுத்தோமா புள்ளை குட்டி பெத்தோமானு இருக்கணும். மீறி ஏதாவது வேலை பார்த்தாணு அறிஞ்சேன். அப்புறம் நீ திரும்பி வரும் போது உன் குடும்பத்துல ஒருத்தரும் உசுரோட இருக்க மாட்டாங்கணு சொன்னாரு.”
“நேற்று முந்தினம் நீங்க இங்க வந்து இறங்குனீங்களே அன்று, நீங்க கூட எனட்ட வந்து இவரும் வந்திருக்கார்ணு சொன்னீங்களே… அப்ப கூட நான் அலறி அடிச்சிட்டு வெளியில வந்த காரணம் பயம் தான். இவர் வந்து என் குடும்பத்துக்கு எதுவும் ஆகிடுமோ என்கிற பயம் தான். அப்படி நடுங்கி வந்த எனட்ட இந்த பெரிய மனுஷர் என்ன சொன்னார் தெரியுமா?”
“இப்படி சொல் பேச்சு கேட்டு ஒழுங்கா இருந்தா மாப்பிள்ளை வீட்டுக்கு ஒழுங்கா போவா? இல்ல உங்க தங்கச்சிகளை மானம் இழந்து தான் பார்ப்பாணு. சொன்னது போல செய்துட்டார். என் தங்கச்சியை இவர் எதுவோ செய்துட்டார்.”
ஓவியா தலையில் அடித்து கொண்டு கதற, நளனுக்கும் தயாளனுக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஓவியா சொல்வது பொய் இல்லையோ என நினைக்கும் அளவு சக்கரவர்த்தியின் அமைதி சிந்திக்க வைத்து விட்டது. ஆனாலும் இந்த பெண்ணின் திருமணத்தை முன்னின்று நடத்த வந்திருப்பதாக பெருமை பீத்தி கொண்டிருப்பவர் இதை எல்லாம் செய்திருப்பாரா என நம்ப முடியாமலும் இருந்தது. அதிலும் கொஞ்ச நேரத்துக்கு முன் தவறு செய்து விட்டேன் என இந்த பெண்ணுக்காக அழுதது எல்லாம் போலியா என தயாளன் மனது நினைத்து கொண்டது.
“விடமாட்டேன். ஒருத்தரையும் உயிரோடு விட மாட்டேன். என் தங்கச்சிகளுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் ஒருத்தரையும் உயிரோடு விட மாட்டேன்.” எச்சரித்து விட்டு புயல் போல திரும்பியவளை நோக்கி,
சந்தோஷத்தில் ஒடி வந்தனர் வைஷ்சும், காயத்ரியும், தங்கைகள் இருவரையும் அந்த இடத்தில் கண்டதும் சந்தோஷம் மிகுதியால் ஒடிப் போய் கட்டி அணைத்து கொண்டாள் ஓவியா.
இப்போதும் அவள் உடல் ஆடிக் கொண்டே இருந்தது.
“உங்களுக்கு எதுவும் இல்லையே… உங்களுக்கு எதுவும் ஆகலியே…”
தங்கைகளின் உடல் முழுதும் தடவி பார்த்ததில் அவள் எவ்வளவு பயந்து போயிருப்பாள் என்று தெரிந்தது. சொன்னதை திரும்ப திரும்ப பிதற்றி கொண்டிருந்தவளை பார்க்க பாவமாக இருந்தது. நளன் அருகில் வந்தான்.
“எங்கம்மா போனீங்க ரெண்டு பேரும்…”
“என் கூட டவுனுக்கு வந்தாங்க. பர்ஸஸ்க்கு பெரிய லிஸ்டே வச்சிருந்தாங்க. முதல்ல களியக்காவிளைக்கு தான் கூட்டிட்டு போனேன். வைஷ்சு மார்த்தாண்டம் போவோம்ணு சொன்னா. அங்க போயும் ஒரே கடையில திருப்தி ஆகாம ஒராயிரம் கடை ஏறி இறங்குனா எப்படி? போன எனக்கு தான் வியர்த்து போச்சு.”
அவன் இல்லாத வியர்வையை நெற்றியில் இருந்து எடுத்து ஊற்ற, ஒவியா தங்கைகளை முறைத்தாள்.
“இல்லக்கா. டிரஸ்க்கு மேட்சா கிடைக்கல… அதான்…”
“சரி… ஓவியா விடு. உள்ளால போ. அங்க இப்போ எல்லாரும் பொண்ணை காணலணு தேடிட்டிருப்பாங்க.”
என்றதும் தான் தன் தவறு உணர்ந்தவள், மெல்ல நடந்து வந்து சக்கரவர்த்தி முன் நின்று,
“சா… சாரி சார். நான்… நான்… கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். தங்கச்சிகளை காணலணு சொன்னதும். நீங்க அவங்களை காட்டியே மிரட்டுனதும் என் மூளையை பிசகிடுச்சி. சாரி. தப்பு தான். என்னை மன்னிச்சிடுங்க. மதிப்பில்லாம வேற பேசிட்டேன். சாரி…”
அவள் இவ்வளவு சொல்லியும் அவர் எதுவுமே பேசவில்லை. அவள் குற்ற பத்திரிகை வாசிக்கும் போதும் எதுவும் சொல்லவில்லை. மன்னிப்பு கேட்ட பிறகும் எதுவும் சொல்லவில்லை. நளன் தான் அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தான்.
அவள் சென்று பத்து நிமிடத்திலே முகுந்தன் அவர் அருகில் வந்தான். அந்த இடத்தில் அவனை கண்டதும் சக்கரவர்த்தியின் உள்ளத்தில் கலக்கம் உண்டானது உண்மை. நளன் போய் எல்லா உண்மையும் சொல்லி விட்டான் போலும். அது தான் அவனும் தன் பங்கிற்கு அவரை குத்தி குதற வந்திருக்கிறான் என்று தான் நினைத்தான். ஆனால் வந்தவனோ…
“வாங்கப்பா… ஊருக்கு கிளம்பலாம்.”
என்றான்.
அவன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை கேட்டதும் துள்ளி எழுந்து விட்டார் சக்கரவர்த்தி.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel