வணக்கம் வாசகர்களே!
பல்லவி தங்கியிருக்கும் வீட்டிற்கு மீன் கொண்டு வரும் சங்கிலி. தோழிகள் முன் வைத்து அவனை திட்டும் பல்லவி.
உள் செல்லும் பல்லவியின் பின் முதுகை வெறித்தவன்.
“டவுண் வரை அர்ஜென்டா போகணும்டா. அதான் கேட்டேன். இல்லனா நாளைக்கு கூட எடுத்திருக்கலாம்.”
“ஏன்?… ஏண்ட்டா இப்படி இருக்கா. உன் பொருளை கேட்க காரணம் எதுக்கு சொல்லுறா? நீ கேட்காமலே கொண்டு வந்து கொடுத்திருக்கணும். வாங்கின பொருளை கொண்டு கொடுக்கணும்ணு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.”
“விடுடா… விடு.”
“என்ன விடு. எப்படிடா இப்படி ஆனா? அப்ப எல்லாம் உன் பொருள்ல்ல ஒண்ணை அடுத்தவங்க தொட விட மாட்டா. இப்ப என்னடா இப்படி ஆகிட்டா?.”
“ம்… தெரியல.. அவளுக்குணா மட்டும் என்னால அப்படி இருக்க முடிகிறதில்ல. வேற எவனும் வரட்டும் பார்ப்போம். நான் கொடுப்பேனா?”
“இல்லடா சங்கிலி. இனி நீ அவளுட்டயும் அப்படி தான் இருக்கணும். சங்கிலியோட ஸ்டைலை எவளுக்காகவும் மாத்திக்க கூடாது. எப்ப உன் கழுத்துல கிடந்த சங்கிலியை தொலைச்சியோ அப்பவே என்னோட பழைய சங்கிலியும் மிஸ்ஸானது போல தெரியுது.”
என்றதும் சட்டென அந்த வீட்டை திரும்பி பார்த்தவன்.
“அது அவளுட்ட தாண்டா இருக்கு. அதனாலவோ என்னவோ என் மனசும் அவளை சுற்றியே அலையுது. என்னால மீட்டெடுக்க முடியல.”
உள்ளுக்குள் சொல்லி சிரித்தவன் உதடு மெல்ல விரிய…
“எப்ப சங்கிலி பற்றி கேட்டாலும் இப்படி தான் சிரிக்கிறா . கூடிய சீக்கிரத்துல சங்கிலிக்கு ஸ்பெஷலான மாற்று சங்கிலியை தயார் பண்ணிட வேண்டியது தான். அதை பழையபடி கழுத்துல போட்டா தான் என் சங்கிலியோட பழைய கம்பீரமும் வரும். கெத்தும் வரும்.. அதை நீ ஸ்டைலா ஆட்டிட்டு நடப்பா பாரு.. அதை நான் மறுபடியும் பார்க்கணும்.”
ரவி ஆர்வமாக சொல்ல…
“நடக்கலாம்… நடக்கலாம். இப்ப சொல்லு. உனக்கு எதுவும் வேலை இருக்கா?”
“இல்ல… ஏன்?”
“டவுண் வரை போயிட்டு வருவோமா?”
“ம்… போலாம்.”
என்றதும்
“சரி ஏறி உட்காரு. கொஞ்சம் காசு இருக்கு.. அதை கொண்டு போய் மிஷின்ஸ்ல போட்டுட்டு வடசேரி சந்தைக்கு போய் பரமசிவன் கடையில கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். அதையும் வாங்கிட்டு வந்திடுவோம்.”
“ம்… சரி. ஆமா சங்கிலி எப்பவும் திங்க்ஸ் வாங்க தண்டபாணி அண்ணாச்சி தானே போவாங்க. இன்று என்ன நீ போறா?”
“இப்ப எல்லாம் அவருக்கு அடிக்கடி முடியாம ஆகுது ரவி. அதான் ரொம்ப எங்கேயும் நான் அலைய விடுறது இல்லை. என்ன இருந்தாலும் எனக்கு அப்பாவுக்கு அப்பாவா… அம்மாவுக்கு அம்மாவா இருந்தவர் ஆச்சே.”
“கண்டிப்பாடா. நீ அவரை நல்லா பாத்துக்கணும். போன மாசம் அவரோட பொண்ணு வந்து மெட்ராஸ்க்கு கூப்பிட்ட பிறகும் மனுஷர் போகல. என்னை சங்கிலி பாத்துப்பாணு சொல்லிட்டாரு.”
“ஜெகன் சொன்னான்டா. அதுக்காக இல்ல. எனக்கு அவரை விட்டா வேற யார் இருக்கா. அதனால அவருக்கு இனி முழு ஓய்வு கொடுத்துட்டு மொத்த வேலையையும் நாம பாத்துக்கலாம்ணு முடிவு எடுத்திருக்கிறேன். அதுக்காக தான் இந்த பைக்கை கூட வாங்கினேன்.”
“நல்லதுடா. எதுவும் செய்யணும்ணா சொல்லு. நானும் சும்மா தானே இருக்கேன். உனக்காக செய்றேன்.”
“கண்டிப்பா . முதல்ல வண்டியில ஏறு. நேரமாகுது.”
என்றதும் ரவி பின்னால் ஏறி அமர சங்கிலி வண்டியின் ஸ்பீடை அதிகரிக்க தொடங்கினான்.
அதே நேரம்,
வீட்டினுள் வந்த பல்லவி யாரிடமும் எதுவும் பேசாமல் பின் பகுதிக்கு வந்தாள். ரவியின் வார்த்தை அவள் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. சும்மா போன விக்கிட்ட அவனே கொண்டு சாவியை கொடுத்துட்டு இப்ப ரவியை மூட்டி விட்டு எதுக்கு பேச வைக்கணும்.
அன்று மீன் கொண்டு வந்து தரும் போதும் ரவியோட பேச்சு சரியாவே இல்லை. முன்பு பெரிசா பேச மாட்டான் தான். ஆனா இப்போ மருந்துக்கு கூட பேசலயே. அப்படி யார்ட்ட பேசினாலும் ஏன் எடுத்தெரிஞ்சிப் பேசுறான். ஆமா?…. காலேஜ் முடிச்சிருக்கான். என்ன வேலை பாக்குறான். வேலைக்கு போறானா? இல்ல சங்கிலியோட சுத்திட்டு திரிகிறானா?
பல்லவி ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி தவித்து கொண்டிருந்த போது பின்னால் வந்து அவளை அணைத்த ஐஸ்வரியா…
“என்னக்கா. தனியா வந்து நிக்குறீங்க…”
பின்னால் ஐஸ்வரியாவின் குரல் கேட்க சட்டென தன் முக வலியை மாற்றி கொண்டு சிரித்தவள்.
“இல்லடா. சும்மா தான் நிக்குறேன். நீ படிக்க புத்தகத்தை எடுத்து வச்சிட்டிருந்தா முடிச்சிட்டியா?”
“இல்லக்கா. புஸ்தகத்தை திறந்தாலே தூக்கம் தூக்கமா வருது. ஆமாக்கா. எப்படி படிச்சாலும் என் மரமண்டையில ஏற மாட்டேங்குதே. இதே பாடத்தை படிச்சி நீங்க எப்படிக்கா அறுநூறுக்கு அறுநூறும் வாங்குனீங்க.”
ஐஸ்வரியா ஆச்சரியமாக பார்க்க, அவளை தன்னோடு பிடித்து அணைத்து கொண்டு அந்த நார் கட்டிலில் இருத்திக் கொண்டவள்
“வெறி… வெறி ஐஸ்சு. படிச்சே ஆகணும் என்கிற வெறி. இந்த வலியான வாழ்வுல இருந்து விடுதலை கிடைக்கணும்ணா நாம ஜெயிச்சே ஆகணும் என்கிற வெறி. இந்த அடிமட்டத்துல இருந்து மேல ஏறி வரணும்னா ஒரு மார்க் கூட குறையாம எடுத்தே ஆகணும் என்கிற தாபம். இது தான் தூங்க விடாம என்னை படிக்க வச்சிது.”
“எங்க அம்மா உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சிலக்கா…”
“அது இப்போ எதுக்குடா. அவங்க தானே இப்ப நல்லாவும் பாத்துகிறாங்க.”
“நீங்க அம்மாவை மேடையில பெருமையா பேசுனீங்களே அப்பவே அம்மா உடைஞ்சிட்டாங்க. நைட் அப்பாட்ட சொல்லி சொல்லி நல்லா அழுதாங்க. அப்புறம தான் உங்களை பாசமா பார்க்க ஆரம்பிச்சாங்க.”
“அன்று அந்த மேடை கிடைக்கலனா என்னால பேசியிருக்க முடியுமா? அப்படி பேசலனா என் வாழ்க்கை மாறி இருக்குமா? உன் அம்மா மனசை இந்த ஜென்மத்துல மாத்தி இருக்க முடியுமா? இப்பவும் அதே அவஸ்தைக்குள்ள அடைப்பட்ட புள்ளி மானா தான் கிடந்திருப்பேன். அந்த அடிமை வாழ்வை மாற்றியே ஆகணும் என்கிற வெறி தான் என்னை உயர்த்தி பிடிச்சிது.”
“பாத்தியா என் உயரம் என் வாழ்க்கையையே மாத்திடுச்சி. ஒரு மகா பெரியவர் ஒருத்தர் சொல்லுவாரு. பிறக்கும் போது ஒருத்தன் ஏழையா பிறக்கிறது அவனோட தப்பில்ல. இறக்கும் போதும் ஏழையா இறந்தா நிச்சயம் அது அவனோட தப்புதாணு. அதை தான் நான் கட்டியா பிடிச்சிகிட்டேன். நீயும் இதையே வேதவாக்கா நினைச்சி உழைச்சா நிச்சயம் உயரலாம். அக்காவை விட மேலா உயரத்துக்கு போகலாம். ஆனா உழைக்கணும். உயர்ந்தே ஆகணும் என்ற வெறி கொண்டு கடுமையா முயற்சி செய்யணும். அப்படி மட்டும் செய்துட்டா நிச்சயம். நீ எதிர்பார்க்கா உயரத்துல வாழ்க்கை உன்னை கொண்டு போய் உட்கார வைக்கும்.”
“ஆனா அதுக்கு இடையில நிறைய வலிகளையும் வேதனைகளையும் கஷ்டங்களையும் நீ சுமக்க வேண்டும். அதை எல்லாம் வலியா பாக்காம வைரபடியா நினைச்சா நிச்சயமா உன்னாலயும் சாதிக்க முடியும். முயற்சி பண்ணு. எப்பவும் உன் உயரம் கூட உன் கையில தான் இருக்கு. ஆமா நீ என்னவாக ஆசைபடுறா?”
“தெரியலக்கா. ஆனா இப்போ பன்னிரெண்டாம் வகுப்புல நிறைய மார்க் எடுக்கணும் என்கிறது தான் என் ஒரே ஆசை. செழியன் அண்ணனை போல பெயிலாகிடாம படிச்சி பாஸாகிடணும்.. அவனை போல பெயிலாகி அடுத்து என்னணு தெரியாம நானும் என் வாழ்க்கையை இழந்திட கூடாது.”
என்றதும் சட்டென ரவி நினைவு பல்லவியை தொற்றிக் கொள்ள…
“ஆமா ரவி இப்போ என்ன பண்ணுறான்.”
“அவன் காலேஜ் முடிச்சதும் படிப்பை அப்பா நிறுத்திட்டாங்க. இப்ப சங்கிலி அண்ணன் கூட சேர்ந்து ஏதோ சின்ன சின்ன வேலைக்கு போகுது.”
“சின்ன சின்ன வேலைனா?”
“கலெக்ஷனுக்கு போறது. சில மோட்டார் சைக்கிளுக்கு ரிப்பேர் பார்க்கிறதுணு.”
“ஏன் படிப்பை பாதியில நிறுத்துச்சி. மேல்படிப்புக்கு போகலியா?”
“அதுக்கு படிக்க விருப்பம் இல்ல அக்கா. ஊர்ல்ல ஒரு டிப்பாட்மென்ட் ஸ்டோர் வைக்கணும்ணு ஆசை. அப்பாட்ட துட்டு கேட்டுச்சு. அப்பா அம்புட்டு பணத்துக்கு நான் எங்க போவேணு சொல்லுச்சு. அதோட அந்த பேச்சுக்கு முற்று புள்ளி விழுந்து போச்சு.”
“………………”
“இப்ப எல்லாம் மூத்த அண்ணா பெரிசா வீட்டுல தங்குறதே இல்ல. எப்பவும் சங்கிலி அண்ணன் கூட தான் சுத்துது.”
“அதான் அவனை எதுவும் செய்தா இவனுக்கு அம்புட்டு கோபம் வருதா?”
மனதுக்குள் எண்ணியவன்.
“அண்ணன் அப்பாட்ட எவ்வளவு ரூபாய் கேட்டுச்சு.”
“ஐந்து லட்சம் அக்கா…”
“அவ்வளவு பணம் தேவைப்படுதா?”
“ஆமாக்கா. அண்ணன் போல நான் போயிட கூடாது. நல்லா படிச்சி உங்களை போல பெரிய வேலைக்கு போகணும்.”
“சரியா சொன்னா ஐஸ்சு. இப்ப நல்ல மார்க் எடுக்கிறதுல கவனம் செலுத்து. உனக்கான பாதையை அதுவே காட்டும்.”
“சரிக்கா. மனசு தெளிவா இருக்கு. தூக்கம் கூட போயிடுச்சி. நான் படிக்க போகட்டுமா?”
“செய்டா. படிக்க மனசு இருக்கிறப்ப படிச்சிடு. அப்படி படிச்சா அது அப்படியே மனசுல தங்கிடும். ஏழைகளுக்கு எதிர்காலமே கல்வி தாம்மா. அதை மட்டும் கட்டியா பிடிச்சிகிட்டா. நம்ப வாழ்க்கையும் மாறிடும்.”
“சரிக்கா… அப்போ நான் போறேன்.”
என்றவள் அவளிடம் விடைபெற்று செல்ல பல்லவி எழுந்து அந்த வேப்பமரத்தின் பக்கத்தில் வந்தாள். நேரம் இருட்ட தொடங்கியது. பக்கத்தில் இருந்த கோழி கூட்டில் கோழிகள் அடைய ஆரம்பித்திருக்க… சிலிர்த்து நின்ற சிலிப்பான் கோழி முன் வந்து நின்றவள் அதை பிடித்து அதன் இறகை தடவியவாறு…
“ரவியும் உன்னை போல தாண்டி சிலிர்த்துட்டு நிக்குறான். சங்கிலியை எதுவும் செய்தா என் மாமன் மகனுக்கு எம்புட்டு கோபம் வருது. மூக்கு கூட சிவந்து விடைச்சி போச்சு. அதுல வேற வெளியில நான் போனதும் இதுவரை எதுவும் பேசாதவன் போல பொடி கண்ணு போட்டு என்னை பாத்துட்டு போறான். சாருக்கு டிப்பாட்மென்ட் ஸ்டோர் வைக்க ஆசையா? கண்டிப்பா நிறைவேற்றி வைக்கணும். அப்பவே அப்படி தான் தூரம் நின்னு பாக்குறது. பக்கத்துல வந்தா தலையை கவிழ்ந்துட்டு ஒடி ஒளியுறது.”
நினைக்கும் போதே அவள் உதடு மலர…
சட்டென சங்கிலி நியாபகம் வந்தது.
“இவனுக்கு வண்டி வேணும்னா இவன் வந்து கேட்க மாட்டானா? ஆளையா அனுப்பி வைப்பான். அதுவும் போட்டு கொடுத்து அனுப்புறான். பாத்துக்கிறேன்.”
மனதில் கர்வி கொண்டவள் சிரித்து கொண்டே திரும்ப தூரத்தில் பாண்டி வருவது தெரிந்தது.
“மாமா இப்போ என்னை தேடி எதுக்கு வராங்க?…”எண்ணும் போதே அவர் நெருங்கி இருக்க…
“என்னம்மா தனியா வந்துட்டா?”
என்றவாறே அருகில் வந்தவரை ஏறிட்டு பார்த்த பல்லவி.
“இல்ல மாமா… ஏனோ கொஞ்சம் தனியா இருக்க மனசு தோணுச்சு. அதான்.”
“சரி உட்காரு. கொஞ்சம் பேசணும்.”
சொன்னவர் அந்த றார் கட்டிலில் அமர அவளும் அமர்ந்தாள்.
“என்ன மாமா…”
“இல்லடா கண்ணா. இப்ப தான் படிப்பு முடிஞ்சிடுச்சே. அடுத்து என்ன பண்ணுறதா நினைச்சிருக்கா?.”
“புரியல…”
“இல்லடா. உன் அத்தை உனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைச்சி கொடுக்கணும்னு விரும்புறா ?”
என்றதும் வெட்கத்தில் நெளிந்த பல்லவி சற்று தயக்கத்தோடே தலை குனிய…
“எதுனாலும் நீ மாமாட்ட பேசலாம் தங்கம்.. உன் பேச்சுக்கு மறுப்பேச்சு இந்த மாமா பேசப் போறதில்ல. என் கடமையை ஒழுங்கா செஞ்சிட்டேனு நினைக்கிறேன். இனி ஒரு பொறுப்பான ஆட்கள் கையில் புடிச்சி கொடுத்துட்டேனா நான் நிம்மதியாகிடுவேன்.”
“அதுக்கு… அதுக்கு இப்ப என்ன மாமா அவசரம்.”
“அவசரம் இல்லடா. ஆனா காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும் இல்ல கண்ணா.”
“அது நடக்க வேண்டிய நேரம் நடக்கட்டும் மாமா. இப்ப எனக்கு நிறைய வேலை, நிறைய பொறுப்பு இருக்கு. அது எல்லாம் முடிகிற வரை மேரேஜ் பற்றி நினைக்கவே போறதில்லை.”
“பொறுப்பா?… நீ எதை சொல்லுறா?”
” என்னை தன் சொந்த பொண்ணு போல பார்த்து வளர்த்து ஆளாக்கிய என் மாமா அத்தையை ஒரு நல்ல வீட்டுல உட்கார வைக்கணும். அவர் மகன் பொறுப்பில்லாம ஏதோ வேலை செய்து பிழைச்சிட்டிருக்கான். அவனுக்கு அவன் ஆசைப்பட்டப்படி ஒரு டிப்பாட்மென்ட் ஸ்டோர் வச்சி கொடுக்கணும். செழியனுக்கு நல்ல கம்பெனி ஒண்ணுல வேலை வாங்கி கொடுக்கணும். ஐஸ்சுவை நல்லா படிக்க வச்சி அவளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை கொடுக்கணும். எனக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கு. இதை எல்லாம் செய்யவிடாம அனுப்ப பாக்குறீங்க.”
சொல்லி விட்டு பல்லவி சிரிக்க… அவளை கண்ணீர் மல்க பார்த்தவர்.
“என் பல்லவி மாறல. மாறவே இல்ல. அப்படியே தான் இருக்கா. நான் தான் மாறிட்டாளோணு தப்பா புரிஞ்சிகிட்டேன். ஆனாலும் வேணாம் கண்ணா. நீ சொன்னதே போதும். அவங்க வாழ்க்கையை நான் எப்படியாவது சரி பண்ண பாக்குறேன். முடிஞ்ச அளவு சரி பண்ணுறேன். அப்புறம் விதி வழி நடக்கட்டும்.”
“என்ன பேசுறீங்க நீங்க. அவங்களுக்கு நான் இருக்கும் போது எதுக்கு விதி மேல பழியை போட்டு தப்பிச்சிக்கணும். நான் எல்லாம் பாத்துப்பேன் மாமா. என்னை நீங்க பாத்துகிட்டது போல நான் அவங்களை பாத்துப்பேன்.”
“நம்பிக்கை இருக்கு கண்ணா. நல்லாவே நம்பிக்கை இருக்கு. என் தங்கம் எங்களுக்காக எதுவும் செய்வாணு நம்பிக்கை இருக்கு. வந்ததும் மெட்ராஸ் உன்னை பாழாக்கிடுச்சோனு நினைச்சேன். இல்ல படிப்பு என் புள்ளையை பக்குவப்படுத்தி தான் அனுப்பி இருக்கு.”
“என்ன மாமா …ஓவரா ஜாலியா இருக்காளேனு தப்பு கணக்கு போட்டுகிட்டீங்களாக்கும்..”
“அது இல்லம்மா…”
“அப்படி இல்லனா விக்கி விட மாட்டான் மாமா. இங்க இருந்து மெட்ராஸ் போன புதுசுல எப்படி இருந்திருப்பேணு உங்களுக்கு தெரியும் தானே. அப்படி இருந்த என்னை விடாம பேசி பேசி என்னையும் பேச வச்சது விக்கி தான் மாமா. அவன் இருக்கிற இடத்தில யாராலுமே அமைதியா இருக்க முடியாது. மீறி இருந்தா அவனுக்கு பிடிக்காது. அதனால மட்டும் தான் அவனுட்ட மட்டும் விளையாட்டுதனமா மாறிடுறேன்.”
அதுவும் தேவைதாம்மா. வாழ்க்கையில இப்படி நையாண்டியும் ஜாலியும் சிரிப்பும் கூட வேணும். உனக்கு கடவுள் பறிச்ச எல்லாத்தையும் திரும்ப கொடுத்துட்டாருனு தான் நினைக்கிறேன்.”
“ஆமா மாமா. நான் இப்போ ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்.
“இந்த சந்தோஷம் உன்கிட்ட எப்பவும் இருக்கணும் கண்ணு.”
“இருக்கும் மாமா. விக்கி பக்கத்துல இருக்கிற வரை நான் எப்பவும் சிரிச்சிட்டே தான் இருப்பேன்.”
“ஆமா. அதை பார்த்தே தெரிஞ்சிக்கிட்டேன். நீ அவரை எப்பவும் பக்கத்துலயே வச்சிக்கம்மா.”
“அப்புறம் விதி. இந்த வருஷம் முழுசும் அவனோடவே தங்கி தான் ஆகணும். அதோட விட மாட்டேன் என்கிறது போல அது முடிஞ்சி நான் ஆராய்ச்சி படிப்புக்கு மும்பை போகும் போதும் அவனும் கூடவே தான் வருவேன்னு சொல்லிட்டிருக்கான். நான் விட்டாலும் அவன் என்னை விட மாட்டான் போலிருக்கு மாமா.”
” நல்லது நடந்தா சந்தோஷம் தான். அப்புறம் உனக்கு ஒரு குட் நியூஸ்.”
“என்ன மாமா…”
“உன் பாட்டியோட சொத்து ஒண்ணுக்கு கேஸ் நடந்துட்டிருந்துச்சில. அது உனக்கு தான் சேர வேணும்ணு தீர்ப்பு வந்திருக்கு. கொஞ்சம் முன்னால தான் வக்கீல் போன் பண்ணி சொன்னாரு. உனக்கு நல்லநேரம் ஸ்டாட் ஆகியாச்சுனு நினைக்கிறேன். அதான் எல்லாமே நல்லதா நடக்குது.”
“சரிடா. தனிமையா இருக்கணும்னு வந்தா. நான் வந்து உன்னை டிஸ்டப் பண்ணிட்டேன். நீ கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு வா கண்ணா. நான் உள்ளால போறேன்.”
என்றவாறு பாண்டி எழுந்து கொள்ள…
“பல்லவி முகம் முழுவதும் பிரகாசமாக எழுந்து நின்றாள். இப்போது இருள் பூமியை இறுக அணைத்திருந்தது. ஆனால் பல்லவி முகம் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. வாழ்வில் இப்போது தான் எல்லாம் சரியாக நடப்பது போல் தோன்றியது. அவள் நினைத்தது போல ஊரில் நின்ற இரண்டு நாளும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். அதிலும் கமலம் அவளையும் விக்கியையும் நன்றாகவே கவனித்து கொண்டாள்.
பகல் முழுவதும் விக்கியோடு ஊர் சுற்றுவது, மாலையானால் செழியனோடும் ஐஸ்வரியாவோடும் விளையாடுவதும் இரவு கோவிலுக்கு குடும்பத்தோடு செல்வதுமாக ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்தவள் மூன்றாம் நாள் காலையிலேயே விக்கியோடு நாகர்கோவில் வந்து விட்டாள். கூடவே பாண்டியும் வந்திருந்தார்.
அவளுக்கு தேவையான அத்தனை பொருளையும் வாங்கி கொடுத்ததுமில்லாமல் அன்றைய நாள் சாப்பாட்டை கூட ஆடர் செய்து கொடுத்து விட்டே தான் சென்றார். பாண்டி சென்று ஒரு மணி நேரத்திலே அவளுடன் தங்கி கொள்ளும் பிரண்ட்ஸ் அனைவரும் வந்து சேர, அன்றைய பொழுது அரட்டையோடவே சென்றது.
அதிலும் வந்திருந்த தோழிகள் அத்தனை பேரும் விக்கியைய வாரி எடுத்து விட்டனர்.
“என்னடா மாமியார் வீட்டுல செம சாப்பாடோ…”
சுரேஷ் கேட்க.
“மெதுவா பேசுங்கடா. அவா காதுல விழுந்துச்சு. கழுவி கழுவி ஊத்துவா.”
“அப்படினா நீ… நீ இன்னும் உன் மனசை சொல்லலியா?”
“ம்… எங்கடா. புளிமூட்டைட்ட சொல்லலாம்ணு பக்கத்துல போனா… அவா பார்க்கிற ஒரு பார்வையில சொல்ல போகிற வார்த்தை மட்டும் வெளி வராம தொண்டை குழிக்குள்ளே சிக்கிடுதுடா.”
“இப்படியே இரு. பல்லவி ஒரு நாள் பறந்து போக போறா…”
” அப்படி போயிட கூடாதுணு தானே சுத்தி சுத்தி வரேன். அவ்வளவு சீக்கிரத்துல பறக்க விட்டுடுவேனா?”
“இப்படியே எத்தனை நாளுக்கு வாலை புடிச்சிட்டு நடக்கிறதா உத்தேசம்.”
வாணி சிரிப்பினூடே கேட்க…
” காலத்துக்கும் தான். இதுக்கு மேல விடுவானா நினைக்கிறா .”
வடிவேலு பாணியில் கவின் இழுத்து கொண்டு சொல்ல… எல்லாருமே வாங் விட்டு சிரித்தனர்.
“என்ன?… சிரிப்பு கொஞ்சம் ஓவரா இருக்கு.”
சொன்னவாறு காபியோட பல்லவி வந்து அவர்களோட அமர…
“ஆமா பல்லவி. இந்த மொக்கை பீஸை ஊர்ல்ல கொண்டு போய் என்ன செய்தா?”
“அவனை ஏண்டி மொக்கை பீஸ்ணு சொல்லுறா? நீயும் என் கூட வந்திருக்கணும். ஊர்ல்ல எத்தனை பொண்ணுங்க ஜொள்ளு விட்டாளுங்கணு பாத்திருக்கலாம்.”
“ரியலி…”
புனிதா நம்ப முடியாமல் ஒடி வந்து கேட்க,
“ஏன்? உனக்கும் ஏதாவது ஆள் செற் பண்ணணும்ணா இப்பவே சொல்லிடு. கிராமத்தானா? உனக்கு ஏத்தவனா பார்த்து முடிச்சிடுவோம .”
சொல்லி விக்கி சிரிக்க…
” என்ன?… எனக்கு தோதா அங்க ஆள் இருக்கானா?.”
“இருக்கான் ஒருத்தன் இருக்கான். கன்னங்கரேல்னு ஒரு மூஞ்சி. அதுக்கு சரியா கரி படிஞ்ச வேலை. மொத்தமா அவனும் அவன் டிரஸ்ல படிஞ்ச அழுக்கும் ஒரே மாதிரி தான் இருந்துச்சி. சரியா உன் அழுக்கு முகத்துக்கு பொருத்தமா இருப்பான். பெயரு சங்கிலி.”
விக்கி அப்படி சொன்னதும் சட்டென நிமிர்ந்த பல்லவி.
“இப்ப அவனை பற்றி எதுக்கு பேசுறா?”
“ம்… இவளுக்கு பொருத்தமா இருப்பான் இல்ல பல்லவி.”
“கறுப்பா இருந்தா என்ன? களையா இருக்கானாணு சொல்லு.”
“வருவான். மீன் கொண்டு இங்கேயே வருவான். உனக்காகவே வரச் சொல்லியிருக்கேன். பாத்துக்க. எப்படியாவது கரெக்ட் பண்ணிடுடி. ஒரு வருஷம் மீன் செலவு மிச்சமாகும்.”
விக்கி கண்ணடித்து சொல்ல புனிதாவோ முகத்தை சுழித்து கொண்டு,
“மீன்காரனா?”
என கேட்க…
“மீன்காரன்னா என்ன? தினமும் மீன் கிடைக்கும்ல…”
வளன் முந்தி கொண்டு வர…
. “அப்படினா நீ கட்டிக்கடா…”
“பொண்ணா இருந்தா. ஒரு வருஷத்துக்காவது ரூட் விட்டிருப்பேன். பையனா போயிட்டானே.”
என ஏக்கமாக சொன்ன வளனை முறைத்த பல்லவி.
” நீங்க எல்லாம் டாக்டர் மாதிரியா பேசுறீங்க. என்ன? டாக்டருக்கு பயிற்சி எடுக்க வந்தீங்களா? ஆளுக்கு ஒரு ஆளை கரெக்ட் பண்ண வந்தீங்களா?.”
“ஐயோ பழம் வந்துட்டாம்மா. இனி கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்கிறது தான் நமக்கு நல்லது.”
சொல்லியவாறு வாணி அவசரமாக வாயை பொத்த கூட்டம் சிரிப்பொலியில் நிறைந்தது.
“அடங்குங்கடி – அவன் முரட்டு ஆளு. பொம்பளை புள்ளணு கூட பார்க்க மாட்டான். கன்னத்துல ஒண்ணு வச்சிடுவான். அப்புறம் எனட்ட எதுவும் சொல்ல கூடாது. ஊர்ல்ல வம்பு பண்ணுன எவனையும் அவன் இதுவரை விட்டது இல்லை. வாயை கிழிச்சி கூட அனுப்பி இருக்கான். மூக்கை உடைச்சி ரத்தம் சிந்த சிந்த அனுப்பி இருக்கான். அவனுட்ட வச்சிகிட்டீங்க அப்புறம் வம்பு உங்களுக்கு தான்.”
பல்லவி சங்கிலிக்காக பேசிய அதே நேரம் வெளியில் சங்கிலியின் குரல் கேட்டது.
பல்லவிக்கு பக்கென்று அடித்து கொண்டது. சட்டென அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கண்டு கொண்ட விக்கி,
“யார் பல்லவி?”
“சங்கிலி…”
“சங்கிலியா?”
“ம்… மீன் கொண்டு வந்திருக்காணு நினைக்கிறேன்.”
“இன்றைக்கேவா?”
“நான் சொல்லல. வேலை கொடுத்தா சின்சியரா செய்வான்னு.. சரி போய் வாங்கு.”
“இல்ல. நீ போய் வாங்கிட்டு வா…”
“புனிதா நீ போறியா? உன் ஆள் தான் வந்திருக்காராம்.”
விக்கி திரும்பி நமட்டு சிரிப்போடு புனிதாவிடம் சொல்ல…
கன்னம் ரெண்டையும் இரு கையாலும் பொத்தியவள்.
“நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா. இப்ப தான் ரொம்ப மெனகெட்டு கன்னத்தை அழகாக்கி வச்சிருக்கேன். என் வாயும் சும்மா இருக்காது. ஏதாவது பேச போய் என் கன்னம் ரெண்டையும் பழுக்க வச்சிட்டானா…”
புனிதா பாவமாக கண்களை உருட்ட…
மறுபடியும் சங்கிலியின் குரல் வெளியிலிருந்து கேட்க… விக்கியை தள்ளி கொண்டு வெளியே விட்டவள். சைடு டோர் வழியே எட்டி பார்க்க…
அங்கே சங்கிலியும் ரவியும் மீன் கவரோடு நின்றுக் கொண்டிருந்தனர்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel