வணக்கம் வாசகர்களே!
பாண்டியிடம் வந்து உண்மையை அறிந்து கொள்ளும் பல்லவி. அடுத்து அவள் எடுக்கும் முடிவு தான் என்ன?
“என்ன பல்லவி இரண்டு மூணு நாளா என்னவோ போல இருக்கா, நேற்று அம்மா பேசிய போதும் சரியா பேசலியாம், ஏணு நைட் எனக்கு அடிச்சி கேட்கிறாங்க. நானும் பல நேரம் கேட்டாச்சு. எதுவும் சொல்ல மாட்டேங்குறா. ஆனா நீ ,நீயா இல்ல. அதுமட்டும் தெரியுது.”
“இல்ல விக்கி… சும்மா தான் இருக்கேன். ஹாஸ்பிட்டலுல இந்த வாரம் ஓவர் வேலை. ஒரு வேளை அதுனால தான் அப்படி இருக்குதுணு தோணுது. ”
“எப்பவும் ஹாஸ்பிட்டல், இல்ல… வீடுணு வாழ்க்கை இயந்திரதனமா இருக்கு. அதனால தான் நீ இப்படி ஆகிட்டாணு நினைக்கிறேன். நாம் நாளைக்கு வெளியில போயிட்டு வருவோமா?”
“சரி விக்கி, எனக்கும் மாறுதலா எங்காவது போகணம்ணு தான் தோணுது.”
“எங்க போலாம்.”
“எங்க வேணாலும் சரி. ஆனா லாங் டிரைவ் பண்ணுறது போல ஒரு இடம் தேர்வு பண்ணு.”
“சரி. வண்டி நம்ம சங்கிலிட்ட கேட்போமா?”
சங்கிலி பெயரை சொன்னதும் சட்டென நிமிர்ந்தவள்.
“வேணாம். அவனோட வண்டி வேணாம். டாக்டர் மோகனுட்ட வேணா கேட்டு பாரேன். கொடுப்பாரு.”
“ஓ.கே. நான் கேட்கிறேன்.”
என சொன்னவன் அங்கிருந்து எழுந்து உள் செல்ல, ஒரு மணி நேரமாய் இருந்த அந்த இடத்தில் இருந்து பல்லவி எழுந்து கொண்ட,
அதே நேரம்…
சரியாக அவர்கள் வீட்டின் முன் பைக் ஒன்று வந்து நின்று காண் அடிக்க… அதுவும் விடாமல் அந்த ஒலி ஒலித்து கொண்டே இருக்க…
அந்த வீட்டில் தங்கியிருந்த அத்தனை மாணவர்களும் குழப்பமாகவே வெளி வர…
ரவி வண்டியை விட்டு இறங்காமலே கையால் மறுபடியும் மறுபடியும் கியரை முறுக்கி முறுக்கி சத்தத்தை அதிகப்படுத்த… இப்போது பல்லவி மிக வேகமாக வெளியே வந்தாள். வெளியில் ரவியையும் சங்கிலியையும் பார்த்தவள்.
“அன்று போட்ட வெடி ஒரு வாரம் கழிச்சா வெடிக்குது. ஆக நான் சொன்ன எல்லாத்தையுமே ரவிட்ட ஒப்படைச்சிட்டான். நண்பனுக்காக இவன் சண்டை போட்டுட்டு போக வந்திருக்கிறான்.”
உதட்டை சுழித்தவாறு தன் இரு கையையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு சங்கிலியை தெனாவட்டாக பார்த்தாள்.
அவளை ஒருமுறை பார்த்த சங்கிலி.
“வேணாம்டா. போயிடலாம்.”
என கெஞ்ச ஆரம்பிக்க…
“நீ ஏண்டா பயப்படுறா?. உன்னை நா கூசாம பேசி அனுப்புன அவளுக்கு பதில் சொல்லிட்டு கிளம்பிடுவோம். இறங்கு…”
“இல்லடா. வேணாம்டா. எல்லாரும் இருக்காங்க. பல்லவிக்கு கஷ்டமா போயிடும்.”
“அவளுக்கு கஷ்டமா போயிடும்னு நீ பாக்குறா இல்லியா. இப்படி வார்த்தையை விடுறோமே அவனுக்கு வலிக்கும்ணு அவா நினைச்சாளா?”
“அவா நினைக்கலனா என்னடா நாம அவளை அப்படி அசிங்கப்படுத்த கூடாதுடா.”
“இதுக்க மேல நல்லவனா இருந்து எதுக்குடா… அவளே முகத்துக்கு நேரே இம்புட்டு தெனாவட்டா பேசும் போது அவளுக்கு எவ்வளவோ செஞ்ச நீ பேசுறதுல என்னடா தப்பு. அவா உன்னை அசிங்கப்படுத்தலாமாடா. அதுவும் உன்னை போய்…”
அவன் வெகுண்டெழ… ஒடி வந்த பல்லவி.
“அசிங்கப்படுத்துனேனா?… உண்மையை சொன்னா உன் பிரண்ட்டுக்கு கோபம் வருதா…”
“எது உண்மை. இல்ல எது உண்மைணு கேட்கிறேன்.”
ஆத்திரத்தில் ரவி கத்த… அவனுக்கு சற்றும் குறைந்தவள் இல்லை என்பது போல் அவளும்…
” ம்… ஊருக்குள்ள மூணு வண்டி விட போறேனு மார் தட்டி பேசிட்டு திரிஞ்சான் தானே…”
“ஆமா…”
“அந்த வண்டி எங்க போச்சுணு கேட்டேன். முடியாததை எல்லாம் எதுக்கு சொல்லிட்டு திரிகிறானு கேட்டேன். நான் கேட்டதுல என்ன தப்பு. பத்து பைசா செலவு பண்ணாம ஊர்ல்ல கஞ்சன்னு பெயர் எடுத்து ஊர்ல்ல ஒருத்தனுக்கும் உதவாம சேர்த்துட்டு திரிஞ்சானே இன்னும் ஒரு வண்டி எடுக்க கூட சம்பாதிக்க முடியலியாணு கேட்டேன். இப்ப என்ன உண்மையை தானே கேட்டேன். சொல்ல சொல்லு. ஏன் இன்னும் வண்டி வாங்கல. பணம் தெகையலியா? தொகையலணா அதையும் சொல்ல சொல்லு. இப்படி வீராப்பா வந்து மல்லுகட்டிட்டு நிக்குறதுக்கு இனி எவ்வளவு தேவைபடும்னு சொல்ல சொல்லு. நான் கொடுக்கிறேன். “
பல்லவி ராங்கியாக சொல்ல…கொதித்து போன ரவி சட்டென வண்டியில் இருந்து இறங்கி…
“அவனுக்கு நீ பிச்சை போடுறியா? அவன் போட்ட பிச்சையில வெள்ளை உடுப்பை அணிஞ்சிட்டு இப்ப நீ அவனுக்கு பிச்சை போடுறியா?”
ஆத்திரத்தில் ரவி வார்த்தையை விட்டு விட …
“வார்த்தையை விடாத ரவி…”
“அப்படி தான் சொல்லுவேன். உண்மையை சொன்னா உனக்கு கசக்குதோ…”
“உண்மையா? எது உண்மை. அப்படினா அவனால தான் நான் டாக்டர் ஆனேனு சொல்ல வரியா…”
“இல்லணு வேற நீ நினைக்கிறியா?….”
“என்னடா பேசுறா?… நான் கஷ்டப்பட்டு படிச்சி அறுநூறுக்கு அறுநூறு மார்க் எடுத்து… என் படிப்பையும் மார்க்கையும் பாத்து பல நல்ல உள்ளங்களோட உதவியால இன்று இந்த இடத்துல நிக்குறேன். நீ என்ன இவனாலனு சொல்லுறா?…. ஆரம்பத்துல ஏழாம் வகுப்புக்கு மாமா கொண்டு சேர்த்த போது நோட் புக் வாங்கி கொடுத்தாணு சொல்லு. நான் ஏத்துக்கிறேன். அப்புறம் சாப்பாடு தராம அத்தை கொடுமைபடுத்துன போது ஒரு நாள் முழுசும் அவன் சாப்பாட்டுல சாப்பிட்டேனு சொல்லு அதையும் ஏத்துக்கிறேன்.”
“அப்புறம் மாடு இழுத்துட்டு போய் நான் பரிதவிச்சி நின்னப்போ ஒடி வந்து காப்பாத்துனானு சொல்லு .நான் ஏத்துகிறேன். அத்தை சூடு போட்ட போது மருந்து வாங்கி கொடுத்தாணு சொல்லு அதை கூட நான் ஏத்துக்கிறேன். ஆனா அவனால தான் நான் இந்த இடத்துல நிக்குறேணு மட்டும் சொல்லாத. அதை மட்டும் என்னால ஏத்துக்க முடியாது.”
சொல்லும் போதே பல்லவி கண்கள் கட்டி கொள்ள…
ஒடி ரவி அருகில் வந்த சங்கிலி.
“ரவி!. நீ ஒவரா போறா. பல்லவி அழுறா?… அவளை அழ வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன். நீ கிளம்பு.”
“இதுதாண்டா. இதுதான் நீ. ஆனா அவளுக்கு அது தெரியுதா? தெரியலடா… நீ அவளுக்காக எம்புட்டு பெரிய தியாகத்தை செய்திருக்காணு அவளுக்கு தெரிய வேணும்டா.”
ரவி அவன் சட்டையை பிடித்து உலுக்கியவாறு சொல்ல…
எல்லாரும் மொத்தமாய் அதிர்ந்து போய் அவர்கள் இருவரையும் பார்த்தனர்.
பல்லவியோ மொத்தமாய் அதிர்ந்து போனவளாய்… மெல்ல நடந்து வந்து ரவியின் கையில் இருந்த சங்கிலியின் சட்டையை பிரித்து எடுத்து அவனை ஒதுக்கி விட்டவள். ரவியை நேருக்கு நேர் பார்த்து…
“சொல்லு. சொல்லுடா… அப்படி இவன் எனக்காக என்ன செய்தான். சொல்லுடா.”
பல்லவி பெண் சிங்கமாய் சீற…
“எது செய்யலணு கேளு. எல்லாம். எல்லாம் அவன் தான் உனக்கு செய்தான். நீ இந்த ஊர்ல்ல வந்து அனாதையா இறங்கின அந்த நாளுல இருந்து இன்று இந்த நாள் வரை உனக்கு எல்லாமுமே இவன் தான் செய்றான்.”
” ………………”
“நீ அப்பா செய்ததா?… ஏன் அம்மா செய்ததா?… ஊர்காரங்க செய்ததா?… ஏன் மினிஸ்டர் செய்ததா நினைச்சிட்டிருக்கிற எல்லாமே இவன் தான் செய்தான். நம்பிக்கை இல்லனா இதை பாரு.”
ரவி அந்த பாஸ்புக்கை எடுத்து நீட்ட , அதை திறந்து பார்த்தவள் விழிவிரிய நின்ற போது…
“ஒரு நாலு வருஷத்துக்கு முன்னால டாக்டர் சீற் கிடைச்சும் பீஸ் கட்ட முடியாம உன் டாக்டர் கனவு உடைஞ்சி நின்னுதே. நீ கூட அப்பாட்ட சாதாரண காலேஜ்க்கு விடுங்க மாமா. எனக்காக நீங்க சிரமப்படுறதை பார்க்க கஷ்டமாயிருக்குணு அழுதியே. அன்று அந்த நாளை பாரு. அந்த பாஸ்புக்குல இருந்து பன்னிரெண்டு லட்சம் விட்றா ஆகியிருக்கும்.”
ரவி சொன்னதும் நம்ப முடியாமல் அதை திறந்து பார்க்க… ரவி சொல்லும் அனைத்தும் உண்மை என்பது போல அது அவள் கண்ணுக்கு காட்சி தர…
“நீ கொண்டு போனியே… அந்த பணம், ஏது பணம்ணு இப்ப தெரியுமே. இந்த கஞ்சன் யாருக்கும் கொடுக்காம குருவி சேக்கிறது போல கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த பணம். தன் லட்சிய வீட்டை வைத்தே ஆகணம்ணு, ஒரு பணம் அழியாம கூட்டி வச்சிருந்த பணம்….”
ரவி சொல்ல… சொல்ல… எதுவோ உடைவது போல சங்கிலியை இயலாமையோடு நிமிர்ந்து பார்த்தாள். அவளின் விழி தாங்கி நின்ற வலியை காண சகியாது சங்கிலி பாவமாக தலை குனிய…
பாஸ்புத்தகத்தையும் , ரவியையும் மாறி மாறி பார்த்தவள் முட்டி கொண்டு வந்த கண்ணீரை அடக்க தெரியாமல் வழி விட்டவாறு கன்னத்தில் பாய விட…
“அழுறியா?…அழு. அவனால மட்டுமல்ல. என்னால கூட உன் கண்ணுல கண்ணீரை பார்க்க முடியாது. அதனால தான் நீ சின்ன வயசுல அடிப்படை தேவையை கேட்டும் கிடைக்காம கலங்கி நின்ன போதும், பசிக்கு கூட உணவு போடாம என் அம்மா கொடுமைப்படுத்தும் போதும், நான் தான் போய் சங்கிலிட்ட சொல்லுவேன். சங்கிலி தான் எல்லாம் வாங்கி கொடுப்பான். அதை நான் தான் செழியனுட்ட கொடுத்து உனட்ட கொடுக்க சொல்லுவேன். “
“அப்படி உனக்காக பாத்து பாத்து செய்தவனை செருப்பை கழற்றி அடிச்சது போல அடிச்சிட்டியே புள்ள. அவனால எப்படி தாங்க முடியும் சொல்லு. அவன் சாப்பிட்டு ஒரு வாரம் ஆச்சு தெரியுமா? அவன் சரியா தூங்கியும் ஒரு வாரமாச்சு. அதான் இதுக்க மேல நீ அவனை காயப்டுத்த கூடாதுணு தான் அவன் சொல்ல சொல்ல கேட்காம இழுத்துட்டு வந்தேன்.”
“அன்று இவன் மட்டும் தன்னோட ஆசை, கனவு ,லட்சியத்தை அழிக்கலனா இன்று நீ நிச்சயமா இந்த வெள்ளை கோட்டை மாட்டிட்டு ஊர்ல்ல மதிப்பா வாழ்ந்திருக்க மாட்டா.. ஊருல ஒருத்தருக்கு ஒத்த காசு கொடுக்க மாட்டானுப் பேர் எடுத்தவன் உனக்காக மொத்தமா கொடுத்தான். அதுவும் அவனோட சின்ன வயசு ஆசையை மொத்தமா அழிச்சிட்டு. அவனை போய்… அவனை போய் நீ இப்படி பேசிட்டியே புள்ள… அதை தாங்கிக்க முடியல புள்ள…”
சொல்லியவாறு ரவி குலுங்க…
அதிர்வில் உறைந்து நின்றது பல்லவி மட்டும் அல்ல. அவளின் தோழர் தோழிகளும் தான். சாதாரண மீன்காரன் தானே என என்னவெல்லாம் கிண்டல் செய்து அவனிடம் விளையாடி விட்டோம். அவன் உடையில் தெரிந்த அழுக்கை பார்த்து அவனை மதிப்பிட்டு விட்டோமே. அழகான உடையில் பவனி வரும் நம்மிடம் கூட இல்லாத ஒரு அழகான மனம் அவனிடம் இருக்கிறதே…
சுற்றி நின்ற அத்தனை பேர் உள்ளத்திலும் இதுதான் ஓடியது. ஆனால் பல்லவி இப்போதும் நம்ப முடியாமல் ரவி கொடுத்த பாஸ் புக்கையே முறைத்து கொண்டு நின்றாள். அவளின் கோலத்தை பார்த்த பின் ரவிக்கும் ஒரு மாதிரியாக போய் விட்டது.
“போதுமா?…. இதுக்கு தானே வந்தா. ஆவேசப்பட்டு மொத்தமா கொட்டி தொலைச்சி அவளை அழ வச்சிட்டால. உன் மனசு ஆறிடுச்சா. கிளம்பு. எல்லாத்தையும் செஞ்சிட்டு சொல்லியும் காட்டி அவா படிக்கிற புள்ளைங்க முன்னாலயே தலை குனிஞ்சி நிக்க வச்சிட்டால. போதும் தானே…”
விரக்தியில் சொன்ன சங்கிலியை பரிதாபமாக பார்த்த ரவி…
“முடியலடா. நீ வருந்தும்படி பேசினதை என்னால தாங்கிக்க முடியல.”
“இப்ப வலிக்கலியா? அந்த பொண்ணை அழ வச்சிட்டு நிக்குறியே இப்ப வலிக்கலியா?… ஏன் உனக்கு வலிக்கலியா. எப்பவும் அது நம்ம வூட்டு புள்ள அதுட்ட யாரும் வாலாட்ட கூடாதுணு முறுக்கிட்டு நிப்பா. இப்ப நீ என்ன பண்ணி வச்சிருக்கா. உன் ஆத்திரத்தாலயும் அவசரத்தாலயும் நம்ம வூட்டு புள்ளையை ,அது படிக்கிற பசங்க முன்னால அவமானப் படுத்தி தலை குனிஞ்சி நிக்க வச்சிருக்கா. இப்ப சந்தோஷம் தானே. கிளம்பு.”
என அவனை கிளப்பி கொண்டு மிகுந்த வலியோடு சங்கிலி அங்கிருந்து கிளம்பி போக அவன் போய் பல மணி நேரம் கழிந்த பிறகும் அந்த பாஸ்புத்தகத்தையே வைத்த கண் எடுக்காமல் அப்படியே சித்த பிரமை பிடித்தவள் போல் பார்த்து கொண்டே நின்றிருந்தாள் பல்லவி.
விக்கி ரொம்ப போராட்டத்திற்கு பின்பு தான் அவளை உள்ளேயே அழைத்து சென்றான். அவனும் அவளுடன் படித்த அனைவரும் ஏதேதோ பேசி பேசி அவள் மனதை சமாதானப்படுத்த தான் பார்த்தனர். ஆனால் நான் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறுதல் ஆவேனா என்பது போல வலித்து நின்றது.
ரவி சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப செவிப்பறையில் ஒலித்து கொண்டே இருந்தது. அதனூடே சங்கிலி சின்ன வயதில் எல்லாரிடமும் பெருமையாக சொல்லும் தன் ஆசை கனவுகளை பற்றிய எண்ணம் அடிக்கடி வந்தது.
அவனுக்கு சொந்தமா வீடு வைக்கணம்ணு ஆசை பல்லவி. பயபுள்ள அதுக்காக தான் கண்ட கண்ட வேலையை பாத்து துட்டா சேர்த்து வச்சிருக்கு. நிலம் வாங்கி வீடு வைக்கிற அளவு சேர்த்திடுச்சிணு சொல்லிக்கிறாங்க. சேர்ந்திருக்கும் ஒத்த ஒத்த பைசாவா கூட்டி இப்ப லட்சத்துல போட்டிருக்கிறதா பெயரு…”
“வீடு கட்டி உங்க எல்லாருக்கும் புதுமனை புதுவிழா அழைப்பிதழ்ணு கார்டு கொண்டு வந்து கொடுக்கலனா நான் சங்கிலி இல்லணு சொல்லி அவன் கழுத்து சங்கிலியை ஆட்டுவான் பாரு. சங்கிலி மாஸ் தான்.”
தன் மனதுள் சங்கிலியை வர வைக்கும் போராட்டத்தில் அந்த இளம் வயதில் கமலம் சொன்னது தான் இது எல்லாம்.
இது மட்டுமல்ல சின்ன வயதில் படுக்க ஒவ்வொரு திண்ணையில் போய் சுருண்ட போது தண்ணீர் ஊற்றி எழுப்பி விட்ட மனித வர்க்கத்தின் முன் வீடு வைத்தே காட்டுவேன் என வீர வசனம் பேசி திரிந்ததை அவளும் கேட்டிருக்கிறாள்.
பக்கத்து வீட்டு பாட்டியிடம்
“நான் பங்ஷன் வைக்கிறப்ப முதல் பத்திரிகையே உனக்கு தான் கிழவி. என்ன சொன்னா வக்கத்தப் பையன்னா? . பாரு இந்த வக்கத்த பையன் உன்னை விட உன் மகன் போட்டிருக்கிற வீட்டை விட பெரிசா வச்சி காட்டுறேனா இல்லயாணு பாரு.”
இப்படி பல வீர வசனங்களை பல்லவியே கேட்டிருக்கிறாள். அப்படி அவன் ரத்தத்தோடும் உணர்வோடும் கலந்து போன ஆசையை அழித்தா என் ஆசையை நிறைவேற்றினான். தாங்க முடியவில்லை.
அன்றைய இரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை. விக்கி பக்கத்தில் இருந்து எது எதுவோ பேசி பார்த்தான். ஆனால் அவனால் மனதை சமாதானபடுத்தவே முடியவில்லை. சங்கிலி தனக்காக எதுவெல்லாமோ செய்திருக்கிறான் என தெரியும் தான். ஆனால் இந்த அளவு செய்திருக்கிறான் என்பதை அவளால் ஜீரணிக்க முடியவே இல்லை.
விக்கிக்காக சமாதானம் ஆனது போல் காட்டி கொண்டு படுக்க செல்வது போல் எழும்பி அறைக்கு வந்து அவள் கட்டிலில் படுத்தும் தூங்குவது போல் நடிக்க முடிந்ததே தவிர… தூக்கம் ஏனோ அவளுக்கு வரவேயில்லை. நொடிக்கு முன்னூறு முறை சங்கிலியின் உருவும் ரவியின் வார்த்தையுமே மறுபடியும் மறுபடியும் வந்து சாட்டையால் அடித்து கொண்டே இருந்தது.
அதனால் காலையில் சூரியன் பூமியை ஆக்கிரமித்த அடுத்த நொடியே அவசரம் அவசரமாக கிளம்பினாள் பல்லவி.
அவளின் அவசரத்தை பார்த்தே அருகில் வந்த சுமதி…
“இவ்வளவு காலையில எங்க கிளம்புறா பல்லவி .”
“வீடுவரை போயிட்டு நேரா ஹாஸ்பிட்டல் வந்திடுறேன். நீங்க கிளம்புங்க…”
“தனியாவா போறா?…”
“ஆட்டோவை வரச் சொல்லியிருக்கேன். ஆட்டோவுல போயிட்டு அதே ஆட்டோவுலயே திரும்ப ஹாஸ்பிட்டல் வந்திடுவேன். ”
” சரி. பாத்து போயிட்டு வா.”
“ம்…. விக்கி எழும்புனா விசயத்தை சொல்லிடு. அவனோட சர்ட் ஒண்ணு என் கபோடுல இருக்கு. அதை அவனுட்ட எடுத்து கொடுத்திடு. இன்று அவன் அதை தான் போடுவான்.”
” சரி… நீ கிளம்பு…”
என்றதும் அவசரமாக வெளிவந்த நொடி ஆட்டோ வந்து ரெடியாகி நிற்க… அவசரமாக அவள் ஏறி கொண்டதும் ஆட்டோ புறப்பட்டது. நேரே பசுமை கொஞ்சும் அந்த மலையடிவாரம் வழியாகவே வந்தது. அந்த பசுமை கொஞ்சும் அந்த இடத்தை பார்த்ததுமே எதுவும் தெரியாமல் குழந்தைதனமாய் முதல் நாள் மிரட்சியோடு இந்த இடத்தை பார்த்த நியாபகமும், பயத்தில் ஒடுங்கி போய் நின்ற போது அவள் மன பயத்தை போக்க பாண்டி பேசியவற்றையும், நினைத்து கொண்டே ஆட்டோவின் இருந்தாள்.
ஆட்டோ தாமரை குளத்தை தாண்டிவிட்டது. அடுத்து சிவன் கோவில். அடுத்து… அடுத்து… சைக்கிள் கடை . எண்ணும் போதே அந்த கடையும் வந்து விட, அவளை அறியாமல் அவள் கண்கள் அந்த பக்கம் திரும்ப, கடை இன்னும் திறக்கப்படவில்லை. கண்களை ஆர்வமாக மேய விட்டவள் ஒரு திட்டில் தன் சாரம் ஒன்றை விரித்து சுருண்டிருந்த சங்கிலியை கண்டதும் கண்கள் பனித்தன.
வேறு பக்கம் திரும்பி கலங்கிய கண்ணீர் கீழே விழுந்து விடாமல் இருக்க போராடியவள் உதடு விம்மலை அடக்கி கொண்டு மனதை இரும்பாக்கி கொண்டு… வந்து கொண்டிருந்தாள்.
வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கிய பல்லவியை கண்டதும் யோசனையோடு வெளி வந்த கமலம்.
“என்னடியம்மா… இந்த காலை நேரத்துல வந்திருக்கா. எதுவும் பிரச்சினை இல்லயே.. “
அத்தை அக்கறையாக கேட்க…
“இல்லத்த மாமாட்ட பேசணும். அதான் மாமா வேலைக்கு கிளம்பும் முன்னால பார்க்க வேண்டும் என்கிறதுக்காக வந்தேன்.”
“வா… உள்ளால வா…”
பல்லவியை அழைத்து கொண்டு கமலம் உள்ளே செல்ல பின்புறமிருந்து முகத்தை கழுவி துடைத்தவாறு உள்ளே வந்த பாண்டி …
“என்ன கண்ணா காலையிலேயே…”
பாண்டி குழப்பமாக அவளை பார்த்தவாறு கேட்க.
“மாமா உங்களுட்ட ஒரு விசயம் பற்றி பேசணும்.”
“சொல்லு கண்ணா…”
“என் பாட்டி சொத்து ஒண்ணு கோர்ட்டுல விதியாகி எனக்கு வந்திருக்குணு சொன்னீங்களே…”
“ஆமா…”
“அந்த சொத்தை நம்மளால விற்க முடியுமா மாமா?”
“முடியும். அது உன் சொத்து. நீ என்ன நினைக்கிறியோ அதை பண்ணலாம்.”
“சரி. வித்தா நிறைய பணம் கிடைக்குமா மாமா…”
“இப்ப பணத்துக்கு அப்படி என்ன அவசரம் பல்லவி. எதுக்கு இப்போ அந்த சொத்தை விற்க நினைக்குறா?”
“இதுவரை ஒருத்தனுக்கு கடன்பட்டிருக்கிற விசயம் தெரியாம இருந்துச்சு. இன்று தான் தெரிஞ்சிகிட்டேன். அவனோட கடனை வட்டியோட அடைச்சாகணும்.”
“கடனா? சொத்து வித்து கடனை அடைக்கிற அளவு நீ யார்ட்ட கடன்பட்டிருக்கா…”
என்றதுமே பொசுக்கென்று கண்ணீர் உருண்டோட பதறி போன பாண்டி.
“என்னடா பிரச்சினை…”
” நீங்க கூட மறைச்சிட்டீங்களே மாமா…”
சொல்லும் போதே அவன் குரல் உடைய…
“மறச்சிட்டேனா?… நானா?…. நான் எதை மறைச்சேன்.”
“என்ன படிக்க வைத்த பணம் சங்கிலி கொடுத்ததா மாமா…
சட்டென பல்லவி கேட்டு விட…
“இது எப்படி இவளுக்கு தெரிஞ்சிது. கலங்கி போய் அவளை நிமிர்ந்து அவர் பார்க்க… தாளமாட்டாமல் பல்லவியின் கண்களில் இருந்தும் சட்டென இரு துளி கண்ணீர் உருண்டோட … எதுவோ நடந்திருக்கிறது. அதை அவளே சொல்லட்டும்.
என பாண்டி அமைதியாக…
” சொல்லுங்க மாமா…”
“யார் சொன்னா?….”
” யார் சொன்னா என்ன?… உண்மையா இல்லையா?”
பல்லவி சரியாக அவர் கண்ணை பார்த்து கேட்க…
“உண்மை தான்.”
என பாண்டி சொன்னதுமே சட்டென ஒரு வலி நெஞ்சை அடைக்க … வந்த கண்ணீரை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழத் தொடங்க… பாண்டி செய்வதறியாது திகைத்து நின்றாள்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel