கிறிஸ்துவின் பிறப்பு அன்றும் இன்றும்
முன்னுரை
இதோ கன்னி கருவுற்று ஒரு ஆண் மகனை பெற்றெடுப்பர்.அக்குழந்தைக்கு இம்மானுவேல் என பெயரிடுவர் (மத் 1:22-23)
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறும் அளவு கன்னிமரியாள் தன் வாழ்வில் தூய்மையை அணிந்து, பெண்களில் பேறு பெற்றவளாய் உயர்ந்து, இறைமகனையே தன் வயிற்றில் ஏந்தி, இந்த உலகத்துக்கு இரட்சகர் யேசுவை கொணர்ந்தார். நம் பாவங்களுக்காக மண்ணகம் வந்து நம்மை சுத்தப்படுத்த போதித்த இறைமகனை ரட்சகராக கொண்டிருக்கும் மனிதகுலம் அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.
கிறிஸ்து பிறப்பு பின்னணி
யூதா நாட்டு பெத்லகேமே யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதேயில்லை. ஏனெனில் உம்மை ஆயர் என ஆள்பவர் ஒருவர் உம்மிடமிருந்தே தோன்றுவார் என்ற மறைநூலை உண்மையாக்கும் விதமாக, வானங்கள் முழங்க, வாழ்த்திசை இசைக்க, வான தூதரே காட்சியளிக்க, வானில் வால்நட்சத்திரம் மின்ன, இயேசுவின் பிறப்பு மிக மிக அதிசயமான பல நிகழ்வுக்கு நடுவில் நடந்தேறுகிறது. முதன்முதலில் இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கோ அல்லது ஆட்சியாளருக்கோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. மாறாக, சாதாரண ஆட்டு இடையர்களுக்கு அந்த நற்செய்தி வானதூதரால் தெரிவிக்கப்படுகிறது.
மாட்டு தொழுவம் புனிதமடைந்தது
கிறிஸ்துவின் பிறப்பு சாதாரண மாட்டு தொழுவத்தில் அரங்கேறியதாக விவிலியம் நமக்கு சொல்கிறது. அந்த வீதியிலே ஆயிரமாயிரம் கட்டிடங்களும், அழகான வீடுகளும் இருக்க கடவுள் தேர்ந்து கொண்ட இடமோ ஒதுக்குபுறமான மாட்டு தொழுவம் தான். ஆனால் இன்றைய கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்கள் பணத்தை கொட்டி அமைத்த குடில்களோடும், ஊரையே வளைத்து போடும் மின்விளக்குகளாலும் அலங்கார வளைவுகளாலும் அமைந்து விட வேண்டும் என நினைக்கிற நாம் இயேசுவின் பிறப்பை அர்த்தம் உள்ளதாக மாற்றி அன்றைய சமுதாயம் போல் இல்லாமல் புதிய ஒரு பாதையில் பயணிக்க இந்த நாட்கள் நம்மை தூண்டுகிறதா என சிந்தித்து பார்க்க வேண்டும்.
வரலாற்று நாயகன் யேசு.
ஒரு மனிதரின் பிறப்பு வரலாற்றையே இரண்டாக பிரிக்கிறது என்றால் அம்மனிதரின் மாட்சியை சொல்ல இது ஒன்றே எடுத்து காட்டாய் போதும் என நினைக்கிறேன். உலகில் எத்தனையோ தலைவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்கள் வாழ்ந்த வாழ்வை பின்பற்ற முயல்கிறோம். ஆனால் இந்த உலகின் வரலாற்றையே இரண்டாக பிரித்து போட்டு நான் இறைமகன் என உலகிற்கு சொன்னவர் தான் மாபரன் யேசு. 2025 வருடங்களுக்கு முன் சின்ன பிறப்பாக எளிய பிறப்பாக நடந்த இயேசுவின் பிறப்பு இன்று உலகமே மகிழ்ந்து கொண்டாடும் புனிதம் பெற்றது எதனால் என சிந்திக்க வேண்டும்.
கிறிஸ்து பிறப்பு அன்று
தன் தந்தையின் திட்டத்தை செயல்படுத்த தான் இறைமகன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். அப்படி தந்தையின் திட்டம் தான் என்ன? தான் படைத்த மனிதர்கள் வழி மாறி பாவத்தில் மூழ்கி இருக்க அவர்களை ரட்சிக்க வேண்டும் என்பது தான் இறை திட்டம். நாளுக்கு நாள் பூலோகம் பாவத்தின் கூடாரமாகி போய் விட்டது. அதை உன் ரத்தத்தால் சுத்தம் செய்து விட்டு வா என்றே தன் ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். ஆனால் அன்றைய மனிதர்கள் என்ன செய்தார்கள். அவர்களை இரட்சிக்க வந்தவரையே சிலுவையில் அறைந்தார்கள். கடவுளின் திருமகனையே குற்றம் சாட்டி சாட்டையால் அடித்து கழுமரம் ஏற்றினார்கள். ஊர் கூடி நிந்தித்தார்கள். நண்பர்களே இவர் யார் என தெரியாது என மறுதலித்தார்கள். கூட இருந்தவரே காட்டி கொடுத்து அவரை கள்வரை போல் பிடிக்க செய்தான். இப்படி அவர்களுக்காக வந்தவரை அவர்கள் அவமானப்படுத்தி நித்தித்து கடைசியில் அவர் உயிரையும் எடுத்து விடுகிறார்கள்.
கிறிஸ்துவின் பிறப்பு இன்று
அன்றைய மனிதர்களுக்கு கொஞ்சம் குறைந்தவர்கள் இல்லை என்பது போல் தான் இன்று நாமும் இருக்கிறோம். தினம் தினம் நான் கிறிஸ்துவுக்குள் அவன் என்று சொல்லி கொண்டு உண்மையில் கிறிஸ்துவுக்குள் அவனாக அல்லது அவளாக வாழ்கிறோமா? என்று சிந்தித்து பார்க்க வேண்டிய இடத்தில் தான் இன்றைய கிறிஸ்தவ சமுதாயம் இருக்கிறது.
ராமாவிலே கூக்குரல் கேட்டது
ஒரே பேரழுகையும் ஒப்பாரியுமாய் இருக்கிறது.
என்ற இறைவாக்கை உண்மையாக்கி ஆட்சி மோகத்தில் ஏரோது செய்த அட்டூழியங்களை இன்று கிறிஸ்துவுக்குள் அவனாக வாழ்ந்து கொண்டிருக்கிற அவளாக வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மில் எத்தனை பேர் செய்து கொண்டிருக்கிறோம். சொந்த உறவுகளை பணம் என்ற மாய வலையில் சிக்கி எத்தனை பேர் இழந்திருக்கிறோம். என்பதை இதுவரை சிந்தித்தது உண்டா? இறைவனை பாதுகாப்பாய் அழைத்தது போய் பணம் மட்டும் தனக்கு பாதுகாப்பாய் போதும் என எல்லாரையும் விட்டு ஒதுங்கும் மனதோடு நாம் வாழ்ந்தது இல்லையா? பெற்ற தாயை இறக்கும் தருவாயில் கூட சீடருக்கு தாயாக்கி சென்ற யேசுவை தலைவனாக கொண்டு வாழ்ந்து விட்டு அந்த தாயையே வெளியில் பிடித்து தள்ளவில்லையா நாம்? சிந்திப்போம். வாழ்வு இறைவன் நமக்கு தந்த கொடை என தெரியாமல் வாழும் காலங்களில் எத்தனை மனிதனை வதைத்து வாழ்கிறோம். இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பாவத்தில் வாழ்ந்தால் இறைமகன் கனவு என்னாவது. அவர் போதனை என்னாவது. சிந்தித்தது உண்டா? கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்தோடு முடிந்து விடும் நிகழ்வு அல்ல. அது ஒரு நற்செய்தி. நமக்கு நம்மையே புரிய வைக்கும் நற்செய்தி என்பதை இனியாவது நாம் உணர வேண்டும்.
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்கள்.
இயேசுவின் பிறப்பு தொட்டு இன்று வரை அவர் பிறந்த நாள் விழா சிறப்பாக தான் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கொண்டாட்டங்கள் மாற்றம் பெற்றாலும் அன்றைய நாள் நமக்கு நினைவுப்படுத்துவது ஒன்றே. வான வேடிக்கைகள், புது ஆடை அணிகலன்கள், அலங்கார மின்விளக்கு குடில்கள் என அமைப்பதில் மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நம்மை நாமே புதுப்பித்து கொண்டு இறைவனுக்கு உண்மையானவர்களாக நேர்மையானவர்களாக வாழ இந்நாட்கள் நம்மை நினைவூட்டுகின்றன என்பதையும் நாம் உணர வேண்டும்.
சிந்திக்க தூண்டும் கிறிஸ்து பிறப்பு
தன் ஆட்சி மோகத்துக்காக இறைமகன் பிறந்துள்ளார் என்ற நற்செய்தியே தன்னை அழிக்க வந்த நற்செய்தியாக நினைத்து கொண்டு அந்த நாட்டு பச்சிளம் குழந்தைகளை பலி கொண்ட ஏரோது போல இன்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம் என்று சிந்திப்போம்.
இறைமகனை வயிற்றில் சுமந்த அன்னைக்கு பேறு காலம் வந்த போது தங்கள் வீட்டில் இடம் கொடுக்காத அந்த கால மனிதர்கள் போல் இன்று தன் தாய்க்கே இடம் கொடுக்காமல் வாழும் மனிதர்கள் இங்கு எத்தனை பேர் இருக்கிறோம் என்பதையும் சிந்திப்போம்.
சொந்தங்களையே பணம் என்கிற திராசில் வைத்து அளக்கும் நம்மையும் இடையர் மத்தியில் ஏழை மாட்டு குடிவில் பிறந்த இறைமகன் உள்ளமும் எப்படி வேறுபடுகிறது என்பதை ஒரு முறையாவது சிந்தித்தது உண்டா?
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக. (லூக் 2-19)
உலகில் அமைதியை விரும்பினார் நம் நாயகன். ஆனால் இன்று நாம் நம் வீட்டிலோ நாட்டிலோ அதை விதைக்கிறோமா? தவறான உறவுகளாலும், பாலியல் துன்புறுத்தலாலும், தன்னல போக்காலும் கொலை கொள்ளை வன்முறையாலும் பாவமே விளைத்திருக்கும் இம்மண்ணில் கிறிஸ்துவின் பிறப்ப அர்த்தமுள்ளதாக அமைவது எப்போது? அடுத்தவர்களுக்காக வாழ்ந்து வழிகாட்டி சென்ற நம் தலைவர் யேசுவின் வழி வாழும் நாம் என்றாவது அடுத்த மனிதனின் துயரில் பங்கு கொள்ளும் மனதை பெற்றிருகிறோமா? சிந்திப்போம்.
முடிவுரை
ஆண்டுகள் பல ஓடிவிட்டன. கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சிகள் கூட மாற்றி அமைக்கப்பட்டு விட்டன. ஆனா நம் மனது மாறி இருக்கிறதா? நம்மில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? அப்படி ஒரு மாற்றம் நிகழவில்லை எனில் இந்த கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்களில் அர்த்தம் இல்லை. கும்மாளமும் குதூகலம் மட்டுமே கிறிஸ்து பிறப்பு விழாவாக மாறி போன இன்று கிறிஸ்துமஸ் தாத்தாவே பணம் வசூலிக்கும் நிலைக்கு மாற்றம் பெற்றது எப்போது? வானளாவ உயர்ந்த கிறிஸ்மஸ் மரங்களை வைத்து விட்டு உள்ளத்தை சுருக்கி கொண்டு வாழ்ந்தால் ஏசுவின் பிறப்பு அர்த்தமுள்ளதாவது எப்போது சிந்திப்போம். எனவே வெளிவேட கிறிஸ்தவ வாழ்விலிருந்து புது பிறப்பெடுப்போம். அப்படி மாற்றம் பெற்ற ஒரு கிறிஸ்து பிறப்பு விழாவாக இன்றைய 2025-ம் ஆண்டு மாற நம்மை நாமே தயார்ப்படுத்துவோம்.
முற்றும்.
Christ-pirappu-katturai-tamil


