வணக்கம் வாசகர்களே!
திருமணத்திற்கு ரெடியாகும் ஓவியா ? இன்னும் 3 – மணி நேரத்தில் திருமணம்
முகம் எல்லாம் இறுக்கத்தோடு கண்கள் சிவப்பேற திருமண வீட்டை விட்டு வெளியேறி வந்தவனை உறுத்து பார்த்தார் சக்கரவர்த்தி. என்னமோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் கேட்டால் முறுக்கி கொள்வான் என்பதும் தெரியும்.
அதனாலேயே வராத போனை கையில் எடுத்து காதுக்கு கொடுத்து,
“சுந்தரா? எல்லாம் நமக்கு வாய்ப்பா அமையுதுடா. திருமண வீட்டுல ஒவ்வொரு டிக்கெட்டா காலி ஆகுது. இனி நாம நினைச்சப்படி செய்யலாம். மகேந்திரனுக்கு இங்கு ஒரு தடையும் இருக்க போறது இல்லை. அவன் சந்தோஷமா வந்து அந்த பொண்ணு கழுத்துல தாலியை கட்டி கூட்டிட்டு போலாம்ணு சொல்லு. இப்போ தாண்டா மனசுக்கு நிறைவா இருக்கு.”
சற்று குரல் உயர்த்தியே போனில் பேசுவது போல் திரும்பி நின்று அவர் பேச, அவரை தாண்டி வாகனத்தை எடுக்க சென்ற முகுந்தனின் கால்கள் சட்டென நின்றது.
நைசாக திரும்பி பார்த்து அதை உறுதி செய்தவர், மெல்ல நகர்ந்து பேச்சை இழுத்துக் கொண்டே போனார்.
வண்டியை எடுத்து கொண்டு திரும்பி வரும் போது மடக்கி விட வேண்டும் என்று காத்திருந்த நளன் அவன் வராதிருக்க கண்டு குழப்பமாக வாகனங்கள் பார்க் செய்த இடத்திற்கு வந்தான். ஒரு மரத்தடியில் முகுந்தன் இருப்பது தெரிந்தது.
“ஏய்… என்னடா இதுல உட்கார்ந்துட்டா.”
“இந்த சக்கரவர்த்தியை ஜெயிக்க விட கூடாதுடா. நீ நரேனை தேடி போவியா…”
“சொல்லுடா கண்டிப்பா செய்றேன்.”
“ம்… நீ கிளம்பு. அப்புறம் நம்ம கம்பெனி ஸ்டாப்ஸ்க்கு போன் செய்து கேபினுக்குள் மேஜையில இதுக்கு முன்னால நரேன், மகேந்திரன் பற்றி தந்த சில டாக்குமென்ட் இருந்துச்சு. அதை எடுத்துட்டு வர சொல்லு.”
“ஏய்… இப்போ தான் நியாபகம் வருது. ஒரு முறை சுந்தரி கூட மகேந்திரனை தப்பானவன்னு சொன்னதா திலகா சொன்னா? அவளுட்ட போனா கூட நமக்கு ஏதாவது துப்பு கிடைக்கும்.”
“சரி. நமக்கு நம்பிக்கையான ஆளுட்ட பேசி அவங்களையும் கூட்டிட்டு வர சொல்லு.”
“ம்…”
“கவனம் நளன். போன் எப்பவும் கையிலயே இருக்கட்டும்.”
“சரி மச்சான். மனசை விட்டு விடாதே. நான் நமக்கு சாதகமா எதையாவது புடிச்சிட்டு வாரேன்.”
என்றவாறு நகர்ந்து விட, முகுந்தனும் மனதுக்குள் எதுவோ ஒரு கணக்கு போட்டவாறு வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அதே நேரம்,
கண்ணில் கட்டுபடுத்த முடியாமல் பாய்ந்து வழிந்த கண்ணீர் துளிகளை அழுந்த துடைத்து, தன் வலி திலகாவுக்கு தெரிந்து விட கூடாது என்று தண்ணீர் விட்டு முகத்தை அடித்து கழுவி விட்டு அறைக்கு வந்தாள் ஒவியா.
திலகா தூங்கி இருக்கவில்லை.
“என்னடி தூங்கலியா?”
“தூங்க விடுறது போலவா செய்றா? அடுத்து என்ன நடக்குமோனு பயப்பட வைக்குறா? இதுல எக்கிட்டு தூக்கம்.”
“பதட்டப்படாத. எல்லாம் நான் சொன்னது போலவே தான் நடக்கும். உன் பாஸ் கிளம்பிட்டாரு.”
“நிஜமா?”
“ம்… கோபத்தை பாக்கணும். சட்டுபுட்டுணு நளனுட்ட கத்திட்டு கிளம்பிட்டாரு. அதுலயும் மகேந்திரனை ஒப்பிட்டு பேசிட்டேன் இல்ல… மச்சான் எகிறிட்டாரு. எப்பா… என்ன கோபம்… என்ன ஆத்திரம்.”
அவள் சொல்லி கொண்டே சிரிப்போடு அவள் அருகில் வந்து படுக்க, அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள் திலகா.
“ஏன் புள்ள அப்படி பாக்குறா?”
“எப்போ இப்படி நடிக்க எல்லாம் பழகுனா ஓவியா. ஒரு வருஷத்துக்கு முன்னால உன் முகம் பார்த்தே உன் மனசை சொல்லிடுவேன். ஆனா இந்த ஒரு வருஷத்துல உன்கிட்ட தான் எம்புட்டு மாற்றம்.”
“காதல் வந்திடுச்சில. மாற்றம் இருக்க தான் செய்யும். அது இல்லனா காதலுக்கு என்ன மரியாதை இருக்கு.”
சொல்லி சிரித்தவள் அவளை அணைத்தது போல தூங்க ரெடியாக, திலகாவும் கண் மூடி கொண்டாள். ஆனால் அன்றைய இரவு இருவரின் கண்களுமே உறங்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அதே நேரம்
சக்கரவர்த்தியின் கையில் இருந்த செல் அலறியது. எடுத்து காதுக்கு கொடுத்தவர்,
“சொல்லு…”
“என்னங்க நீங்க. நாங்க எல்லாரும் ஊருக்கு கிளம்பி ரெடியா இருக்கோம். நீங்க எங்க போனீங்க. முகுந்தனும் வந்துட்டான்.”
“முகுந்தன் அங்கேயா வந்திருக்கான்.”
“ஆமா… அவன் தான் ஒத்த கால்ல நிக்குறான். சம்மந்தி குடும்பமும் அவசரப்படுத்துறாங்க.”
“இந்த ராத்திரி எங்க போறீங்க. பேசாம தூங்குங்க. எல்லாம் காலையில போய்க்கலாம்.”
“என்னங்க நீங்க இப்படி பேசுறீங்க.”
“சொன்னதை செய்…”
என்றவர் சட்டென போனை வைத்து விட, அவளையே ஆர்வமாக பார்த்து கொண்டு நின்ற அத்தனை பேரையும் பரிதாபமாக பார்த்தாள் நீலவேணி,
“என்ன சொன்னார் உங்க புருஷன்.”
முகுந்தன் தான் கேட்டான்.
“எல்லாம் காலையில கிளம்பலாம்ணு சொல்றார்டா…”
“எதுக்காம். அந்த குடும்பம் குழியில விழுறதை பாத்துட்டு தான் கிளம்புவாரோ…”
கடுமையாக வந்த அவனின் வார்த்தைக்கு அங்கு நின்ற ஒருவரிடமும் பதில் இல்லை. ஆனால் அவர் சொல்லாமல் இங்கிருந்து யாரும் கிளம்புவது இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.
அதே நேரம்.
மகேந்திரனின் வீட்டினுள் பரபரப்பாக உள் நுழைந்தான் கஜேந்திரன். கஜேந்திரன் அவனின் சித்தப்பா மகன். சித்தப்பா மகன் என்பதை விட அவனின் அத்தனை தலைமறைவு காரியத்திற்கும் தலையானவன்.
அவனை கண்டதும் அவசரமாக மாடி இறங்கி வந்தவன்,
“எதுவும் பிரச்சினை இல்லையே. அந்த நரேன் பத்திரமா நம்ம கஸ்டடியில தானே இருக்கான்.”
“இல்ல மகி. அவன் தப்பிச்சிட்டான்.”
என்றவன் கன்னத்தில் பளார் என ஒரு அடி விழ, வந்தவன் கண்கள் கலங்கி விட்டன.
“எப்படிடா தப்பிக்க விட்டீங்க. போச்சு. எல்லாம் போச்சு.
அவன் வானுக்கும் பூமிக்கும் குதித்த, அந்த
அதிகாலை 3.40 மணிக்கு,
சக்கரவர்த்திக்கு அந்த கால் வந்தது. அவசரமாக எடுத்து காதுக்கு கொடுத்தார்.
“சுந்தரம் தான்.”
“என்னடா ஆச்சு…”
பதட்டத்தோடு தான் கேட்டார்.
“புடிச்சிட்டோம் ஐயா. ஆனா அவன் கையில எந்த எவிடென்டும் இல்ல.”
“என்னடா சொல்லுறா? அது இல்லாம எப்படி?”
“நாங்க அங்க தான் கூட்டிட்டு வரோம். நீங்களே நேர்ல்ல விசாரிங்க. நிச்சயம் உங்களுட்ட உண்மையை சொல்வான்னு நம்புறோம்.”
சொன்னது போல அடுத்த அரை மணி நேரத்தில் நரேனை அழைத்து கொண்டு சுந்தரம் வந்து விட்டான்.
“எங்க இருந்துடா புடிச்சீங்க…”
“நீங்க சொன்னது போல மகேந்திரனோட பண்ணை வீட்டுல இருந்து தான்ய்யா…”
“நினைச்சேன். நல்ல காரியம் செஞ்சீங்க. இனி இவனை எனட்ட விட்டுட்டு நான் உங்களுக்கு கொடுத்த வேலையை சரியா செய்ய பாருங்க. காலையில மீட் பண்ணலாம்.”
என்றவன் நரேனை பிடித்து இழுத்து கொண்டு செல்ல, சுந்தரமும், அசோகனும் திரும்பி நடந்தனர்.
அதே நேரம்,
தூக்கம் வராமல் புரண்ட ஓவியா, தலையை தூக்கி திலகாவை பார்த்தாள். அவள் நல்ல தூக்கத்தில் இருப்பது தெரிந்தது. மெல்ல எழுந்தாள். பிரோவை திறந்தாள் முகுந்தனின் அந்த கிளிந்த சட்டையையும் அவன் டாலரையும் எடுத்து கொண்டு பின் பகுதிக்கு வந்தாள். ஒன்றிரண்டு பேர் மட்டும் பெஞ்சில் தூங்கி கொண்டிருந்தனர். சத்தம் வராமல் அவர்களை கடந்து சென்றவள். அந்த மாமரம் பக்கத்தில் வந்ததும் அதன் மேல் ஏறி அமர்ந்தாள். இப்படி இரவில் இவ்விடத்திற்கு ஒரு நாளும் வந்தது இல்லை. ஆனால் பகலில் அவளுக்கு அதிக நேர அமைதியையும் மகிழ்வை கொடுத்த இடம் இந்த மாமரம். அதுவாவது இன்று பொங்கி பிரவாகம் எடுக்கும் மனகுமுறலை அடக்குமா என்ற யோசனையோடு தான் இந்த இடத்திற்கு வந்தாள்.
ஆனால் அந்த தனிமை. அவளுக்கு ஆறுதல் கொடுப்பதற்கு பதில் அழுகையை தான் கொடுத்தது. மனதுக்கு அமைதியை கொடுப்பதற்கு பதில் புயலை தான் கிளப்பியது. எவ்வளவோ ஆற்ற முயன்றும் ஆற்ற முடியாமல் வலி கண்ணீரை வடியவிட்டு விட்டது. அந்த வலியோடு இருளின் நடுவில் அவனும் அவளும் மாட்டி கொண்ட நொடியில் இருந்து, கடைசியாக அவள் முன் கண்ணீர் மல்க தன் மனதை முகுந்தன சொன்ன நொடி வரை அவளுள் படமாக விரிந்தது.
காதலையும் அவனே தந்தான்…
கண்ணீரையும் அவனே தந்தான்…
மகிழ்வையும் அவனே தந்தான்…
இகழ்வையும் அவனே தந்தான்…
உள்ளத்தை உருக்கி…
உணர்வை கசக்கி…
உண்மை நேசத்தை புரிய வைத்தான்.
உயிராய் அவனை நினைக்க வைத்தான்.
உள்ளம் முழுதும் நிரம்பி
ஊமையாய் இன்று அழவும் வைக்கிறான்.
இனி அவன் நினைவே என் சுவாசமாய்…
அவன் பெயரே என் வாசமுமாகி போய்விடும்.
இந்த உடலில் உயிர் இருக்கும் வரை…
முகுந்தன் என் நினைவில் இருப்பான்.
என் காதலின் வயது ஒன்றே. இன்றோடு அதன் அத்தியாயங்கள் முடிவு பெறுகிறது. தொடர்ந்து வர இனி என்னில் எதுவுமில்லை. என் வசந்தம்… என் சந்தோஷம். எல்லாம் என்னை விட்டு போய் விட்டன. இன்றோடு முடிவு பெற்று விட்டது.
சட்டென கண்ணீர் குளம் கட்டி பாய, அதை அணை கட்டி நிறுத்தும் திராணியின்றி மாமர கிளையில் தலைசாய்த்து கண்ணீர் வடித்தாள் ஓவியா.
அதே நேரம்,
லேசான உறக்கத்தில் இருந்த திலகாவுக்கு எதுவோ சத்தம் வருவது கேட்க, மெல்ல கண் திறந்தாள். ஆனாலும் மனது தூக்கத்தில் இருந்து எழும்பாமல் அடம்பிடித்தது. மறுபடியும் அந்த குரல் கேட்டது.
“என்ன சத்தம் இது…”
கண்களை கசக்கி பார்த்தாள். இரவு வெளிச்சத்தில் அறை நிசப்தமாக இருந்தது. திரும்பி பார்த்தாள் ஓவியா இல்லை. “ஒருவேளை இவள் தான் கதவை திறந்து கொண்டு வெளியே போயிருப்பாளோ…”
“ஆமா நாம எப்போ தூங்குனோம். இவா இந்த நேரம் எங்க போனா? பாத்ரூம் போயிருப்பா…”
அவளுக்கு அவளே கேள்வியும் கேட்டு அவளே பதிலையும் சொல்லி விட்டு மறுபடியும் கண்களை மூடி விட, மறுபடியும் தூக்கம் வராமல் சித்திரவதை செய்தது மனது. நேற்று இரவு ஓவியா பேசியது நியாபகத்தில் வந்தது.
“இனி தூக்கம் வந்தது போல தான்.”
எண்ணியவள் திரும்பி படுத்த நேரம்,
அந்த இரவு லேம் வெளிச்சத்தில் பீரோ பக்கத்தில் யாரோ பதுங்கி இருப்பது போல் தெரிய ஆவேசமாக எழுந்தாள். அவள் எழுந்த வேகத்திலே சத்தம் போட்டு விட கூடாது என ஒடி வந்து அவள் வாயை பொத்த, அப்போது தான் வந்திருப்பது சக்கரவர்த்தி என்பதுமே தெரிந்தது.
பதறி போனது மனது. அவர் சொல்லாமலே அவர் வந்திருப்பது எதற்காக என்பதும் பீரோ பக்கத்தில் ஏன் பதுங்கினார் என்பதும் தெரிந்து போனது.
எவிடென்ட்டுக்காகவா?
மனது நினைக்கும் முன் வந்தவர் அதையே கேட்க, இவர் கையில் அது கிடைக்க கூடாது. என தீர்மானித்தவள்,
“எவிடென்டா… எனக்கு தெரியாது.”
அவரின் அடைக்கப்பட்ட கைக்குள் இருந்து மெல்லமாய் குரல் எட்டி பார்த்தது. அவள் சொல்லும் பொய்யை நம்பி விட்டு சொல்லும் மனிதரா அவர். அரை மணி நேர இருவரின் உடையாடலுக்கு பின் கையில் அந்த பேப்பரோடு தான் கிளம்பி போனார். அவர் போன நொடியில் இருந்து திலகாவின் முகம் இருண்டு போய் தான் கிடந்தது.
அடுத்து வந்த நொடிகள் எல்லாம் அவஸ்தையாய் அவளுக்கு கழிந்து கொண்டிருக்க, மாமரத்தின் மேல் அமர்ந்து கொண்டு தன் இனிமையான நாட்களை நினைவலையில் ஓடவிட்டவாறு இருந்த ஓவியாவின் கவனத்தை அவள் வீட்டில் உள்ள சேவல் கோழி கலைத்தது.
“நேரம் விடிய போகுது. இதுக்கு மேல இதுல இருக்கிறது சரியில்லை.”
கிளையில் இருந்து குதித்து சாடியவள்,
“கடவுளே எனக்கு இன்று தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திடு. என்ன நடந்தாலும் கலங்கிட கூடாது. யார் முன்னாலும் என் தலை தாழ்ந்திட கூடாது.”
மனதில் உறுதியேற்று கொண்டே அங்கிருந்து வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டில் கொஞ்சம் ஆரவாரம் தெரிந்தது. பலரும் எழும்பி விட்டது புரிந்தது. யார் கண்ணிலும் மாட்டாமல் அறைக்கு நுழைந்து விட வேண்டும். எண்ணியவள் மறைந்து மறைந்தே வந்து ஒரு வழியாக தன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
நுழைந்தவள் கண்களில் கட்டில் மேல் எழுந்து அமர்ந்திருந்த திலகா தான் விழுந்தாள்.
“எப்படியும் எங்க போனாணு கேள்வி கேட்டு சாகடிப்பா.” என்று தான் நினைத்தாள். ஆனால் அப்படி எதுவும் கேட்காமல் எதுவோ போல இருந்தவளை ஒருமுறை திரும்பி பார்த்தாள். இப்போதும் அவளில் அசைவு இல்லை.
“என்னடி சிலை போல இருக்கா…”
என்ற பிறகும் அவளில் பேச்சு இல்லை. குளியலறைக்கு செல்ல டவ்வலை எடுக்க சென்றவள், திலகாவின் உறைநிலையின் காரணம் புரியாமல் ஓடி அவள் அருகில் வந்து, அவளை பிடித்து உலுக்க,
தன்னிலை வந்தது போல,
“ஆங்… ஆ… அது… என்ன?”
திலகா எது எதையோ உழற ஆரம்பிக்க,
“உனக்கு என்னடி ஆச்சு…”
லேசாக சிரித்து கொண்டே கேட்டாள்.
“என்னடி உன் வாழ்க்கையோட திரைகதை ஒவ்வொரு நேரமும் உறைஞ்சி போய் உட்கார வைக்குது. அடுத்து என்ன நடக்கும். என்ன நடக்கும்ணு புலம்ப வைக்குது.”
அவள் அவசரமாக சொல்ல,
“இப்போ உனக்கு என்ன குழப்பம். நேற்று தான் இன்று நடக்க போற எல்லாத்தையும் ஃலைவா காட்டுனேன் தானே. அப்படியும் எதுக்கு இந்த உறைநிலை. இது தாப்பா. எதையும் உனட்ட சொல்லாம மறைக்கிறது.”
சொன்னவள் சிரித்து கொண்டு நகர்ந்து விட,
“இல்லடி. விதி உனக்கு வேற ஒரு திரைகதையை எழுதி இருக்கு. அது எப்படி அமைய போகுதோ என்ற பதட்டத்துல தான் உறைஞ்சி போய் உட்கார்ந்துட்டேன்.”
அவளால் மனதில் தான் சொல்ல முடிந்தது. உன் திட்டம் மொத்தத்தையும் பொடியாக்கிட்டு சக்கரவர்த்தி அந்த பேப்பரை எடுத்துட்டு போய் விட்டான் என்று சொல்லவா முடியும். சொன்னால் இங்கு நடப்பது என்ன? யோசிக்கவே முடியவில்லை திலகாவால். அதை விட எப்போ அந்த உண்மை அவளுக்கு தெரிய வருமோ என்ற பதட்டமே அவளுக்கு அதிகமாக இருந்தது.
ஓவியா குளித்து முடித்து வெளி வரும் போதும் அவள் அப்படியே இருந்தாள்.
“என்னடி… நீ குளிக்கலியா?”
“ம்… குளிக்கணும்.”
“கொண்டு விடவா?”
“இல்ல… நான் பாத்துக்கிறேன். நீ கிளம்பு. அம்மா ஒரு முறை உள்ளால வந்துட்டு போயிட்டாங்க. திரும்பி வருகிறதுக்கு முன்னால ஏதாவது ஒரு சாரியை எடுத்து கட்டு.”
“ம்… சரி.”
என்றவள் எடுத்து வைத்திருந்த பட்டு சாரியை புன்னகை மாறாமல் உடுத்த ஆரம்பித்தாள். அவள் உதட்டில் தெரிந்த மலர்ச்சியை பார்த்தவாறே கலக்கத்தோடு இருந்தாள் திலகா. அவள் சிரிப்புக்கான காரணம் அவளுக்கு தெரிந்தது. எல்லாம் தன் திட்டப்படி நடக்கும் என்ற தெளிவில் அவள் முகம் மலர்கிறது. அந்த திட்டத்தில் தானே மண்வாரிப் போட்டு விட்டு அமர்ந்திருப்பது தெரிந்தால்… அவள் முகம் எப்படி மாறும்.
யோசிக்கவே முடியவில்லை அவளால்…
ஆனால் ஓவியா அலட்டிகாமல் சாரியை உடுத்தி கொண்டாள்.
அதே நேரம்,
வெளியில் கதவை தட்டும் சத்தமும், கூடவே தாயின் குரலும் கேட்டது.
“வாரேம்மா…”
குரல் கொடுத்தவள், தன் சாரியை சரி செய்து ஒரு முறை அதை கண்ணாடியில் பார்த்து திருப்தியானவள், தோழியை திரும்பி பார்த்தது சிரித்தவாறு வந்து கதவை திறக்க, திறந்தவள் விழிகள் அதிர்வில் பெரிதாக விரிந்தது. தோழியின் அதிகபடியான முக அதிர்வை பார்த்து குழம்பியவள், “வந்திருக்கிறது யாரா இருக்கும்.”
கட்டிலில் இருந்து பார்த்தவளுக்கு விரிந்து போன ஓவியாவின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அவளின் முகத்தை விரிய வைத்தது யார் என்று தெரியவில்லை. மெல்ல எம்பி பார்த்தாள். ம்கூம். தெரியவே இல்லை. உடலை வளைத்துப் பார்த்தாள். இப்போதும் தெரியவில்லை.
அதற்கு பதிலாய் முன்னால் நிற்பவர்களுக்கு வழியை விட்டு பின்னால் நகர்ந்தாள் ஓவியா. ஓவியா பின்னால் நகர, அவள் முன்னால் நின்றவர்கள் இப்போது உள்ளே வந்தனர். கையில் பட்டு, நகை என ட்ரே முழுதும் பரப்பி இருக்க அதை கையில் ஏந்தியவாறு முகம் எல்லாம் மலர, நீல வேணி முதலில் உள்ளே வந்தாள். அவளை கண்டதுமே திலகா நம்ப முடியாமல் பார்த்தாள். அவள் விழியை இன்னும் விரிய செய்வது போல, அவரை தொட்டு பல பல அலங்காரப் பொருட்களோடும் வந்த பிரபாவையும், அவள் பக்கத்தில் மல்லிகை பூவை ஏந்தி கொண்டு வந்த மோனிகாவையும் பார்த்த திலகாவில் வாயே பெரிதாக விரிந்து கொண்டது.
“முகூர்த்த பட்டுல ஒரு மாற்றம்மா. அதான் கொடுத்துட்டு போலாம்ணு வந்தோம். அந்த கலர் உனக்கு சரியாகாதுணு மாப்பிள்ளை ஃபீல் பண்ணுறாரு. அதான் நேற்று இரவு போய் வேறு பட்டு எடுத்துட்டோம். நீ அதை கட்டி விட கூடாதுல. அதான் காலையிலே கொண்டு வந்தோம்.”
சொன்னவள் பட்டையும் கொண்டு வந்த நகையையும் ஓவியாவிடம் கொடுக்க, ஒவியா தாயை பார்த்தாள். தாய் முகம் முழுதும் மகிழ்வோடு, கண் அசைவில் வாங்கி கொள்ள சொன்னதும், மறுபடியும் நீலவேணியை தான் பார்த்தாள். அவர் இப்போதும் அதே புன்னகையோடு தான் நின்றிருந்தார். அதிர்வோடு தான் அதை வாங்கி கொண்டாள். அவள் கை நீண்டதுமே போட்டோகாரன் தன் கேமராவுக்குள் அதை பதித்து கொண்டான். அடுத்து பிரபா, மோனிகா என ஒவ்வொருத்தரும் கொண்டு வந்ததை கொடுக்க, அதை பெற்று கொண்டவளை அதன் பின் யாரும் தனியாக இருக்க விடவில்லை.
“மருதாணி போடணும்மா…”
என முதலில் நாலு பேர் சூழ்ந்து கொள்ள, அது முடித்து தாய் குடிக்க என ஒரு பழசாற்றை கொண்டு கொடுக்க, அதன் பின் உறவினர்கள் அத்தனை பேரும் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தனர்.
“நீலவேணி, பிரபா, மோனிகா யாரும் அவ்விடத்தை விட்டு நகரவில்லை.”
“என்னடி இது…”
மெல்லமாய் திலகாவின் காதை கடித்தாள் ஓவியா. அவளுக்கு அந்த கூட்டத்தில் வாய் திறந்து பேச கூட முடியவில்லை.
“எதை கேட்குறா?”
பதட்டத்தில் இருந்தவள் அதே பதட்டத்தோடு கேட்க,
“இல்ல… இவங்க எல்லாம் கிளம்பிட்டதா கோபால் சொன்னானே. அப்படியும் எப்படி?”
“அதான் முன்னால குத்து கல்லா இருக்காங்களே. அப்புறம் போயிட்டாங்கணு பேசுனா என்ன அர்த்தம்?”
அவள் எரிச்சலோடு தான் சொன்னாள். இப்போ இதுவா பிரச்சினை. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் மகேந்திரன் வரப் போகிறான். இவள் திருமணத்தை நிறுத்த அந்த பேப்பரை தேடப் போகிறாள். அது நிச்சயம் கிடைக்கப் போவது இல்லை. அப்படி என்றால் அடுத்து என்ன நடக்கும். தலையே சுற்றியது அவளுக்கு. இந்த சூழலில் இவரின் வரவு முக்கியமா என்றிருந்தது.
ஆனால் ஒவியாவுக்கு தான் எதுவோ சரியில்லையோ என்று தோன்ற ஆரம்பித்தது.
“என்ன சொன்னாலும் நான் போக மாட்டேன். உன் கழுத்துல மகேந்திரன் தாலி ஏறுகிற வரை எனக்கு டையும் இருக்கு. கடைசி நேரத்துல கூட உன் மனசு மாறலாம் இல்லயா? அதுனால நீ என்ன சொன்னாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.”
வந்த அன்று முகுந்தன் சொன்ன வார்த்தை நினைவலையில் வர, ஒருவேளை அவனும் போகலயோ . இல்லையே நளன் சொல்ல சொல்ல கேட்காம பேக்கை தூக்கிட்டு கிளம்புனானே… நானே பார்த்தேனே… அப்புறம் இவங்க எப்படி?
இவளின் குழப்பம் தெரியாமல் சாரி உடுத்த வந்த பெண்மணிகளை ஒருவித தவிப்போடு பார்த்தாள். ஆனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை விட வேறு வழி இருக்கவில்லை. முகூர்த்தப்பட்டு கட்டி முடிக்கும் வரை அவர்கள் முன் சிலையாக தான் நின்றாள். ஆனால் உள்ளம் சிதைந்து போக நின்றாள். பட்டு கட்டு முடியும் போதே ஓவியா ஓவியமானவளாக தெரிந்தாள். எந்த நகையும் அலங்காரமுமே இன்னும் அவளுக்கு போடப்படவில்லை. ஆனாலும் அவளின் முக வசீகரம் அனைவரையும் வசீகரித்து நின்றது.
“இந்த பட்டு உங்க கலருக்கு சூப்பரா இருக்குக்குக்கா… மாப்பிள்ளை ரசனை உள்ளவர் தான்.”
வந்தவர்கள் புகழ அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. அதை ரசிக்கும் மனநிலையிலா அவள் இருக்கிறார். நேற்று வரை அவள் இந்த இடம் வரை போக வேண்டி வரும் என்று நினைக்கவில்லை.
காலையிலே தாயிடம் உண்மையை சொல்லி இந்த ஆட்டத்தை கலைத்து விட வேண்டும் என்று தான் நினைத்தாள். அதனால் இப்படி அலங்காரம் எல்லாம் அணியும் நிலை தனக்கு வரும் என அவள் நினைத்து பார்த்ததே இல்லை. ஆனால் காலையில் நீலவேணி அம்மாவே வந்து உடன் இருந்து இதை எல்லாம் செய்ய வைப்பார்கள் என்று அவள் கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. எப்படியும் முகுந்தனும் அவன் குடும்பமும் கிளம்பி விட்டிருக்கும் என்று உறுதியாக நம்பினாள். அந்த நம்பிக்கையில் தான் அப்படி ஒரு முடிவு எடுத்தாள்.
ஆனால் முன்னால் வந்து நின்ற நீலவேணியை பார்த்த பின் மறுத்து பேசும் துணிவு அவளுக்கு வரவில்லை. ஆனால் மனதுக்குள் புகைச்சல் அதிகமாகி கொண்டே இருந்தது. இவர்கள் முன் எப்படி தைரியமாக அதை எல்லாம் பேசப் போகிறேன். என்று தான் தோன்றி கொண்டே இருந்தது. இவர்கள் மட்டும் தான் இங்கு நிற்கிறார்களா? இல்லை வெளியில் முகுந்தனும் நிற்கிறானா? மனதுக்குள் போராட்டம். அவளுக்கு யாரும் விடைச் சொல்லா போராட்டம்.
“மகாலெட்சுமி போல இருக்கா… என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.”
நீலவேணி தான் அருகில் வந்து சொன்னாள். தான் கொண்டு வந்த அத்தனை நகையையும் அவளே போட்டும் விட்டாள். ஒவ்வொரு நகையாக போட போட அழகு பார்த்து கொண்டாள். அவரின் செயல் மனதளவில் ஓவியாவை ரொம்பவே பாதித்தது. நடவாத திருமணத்துக்கு இவர் பார்த்து பார்த்து அழகு சேர்க்க நினைக்கிறார். இவர்கள் முன்பெல்லாம் நின்று கொண்டு தன்னால் தெனாவட்டாய் பேச முடியுமா? கண்கள் கட்டி கொண்டது. அவரை நெகிழ்வோடு பார்த்தாள்.
“என்னடி அம்மா. எதுக்கு கண் கலங்குறா? இது உனக்கான நேரம். உன்னோட நேரம். இன்று நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும்.”
கண்களில் இருந்த ஜலத்தை தட்டி விட, நடுங்கும் கையால் அவரை கையெடுத்து கும்பிட்டாள்.
“அசடு… எதுக்கு இப்போ கும்பிடுறா. ஆத்துகாரரோட கால்ல விழு. மனம் நிறைஞ்சி வாழ்த்துறேன்.”
சொன்னவர் பியூட்டிஷியன் பக்கம் திரும்பி,
“நாங்க வெளியில போறோம். அரை மணி நேரம் தான். அதுக்குள்ள ரெடி பண்ணி வெளியில கூட்டிட்டு வந்திடணும். நிறைய போட்டோஸ் எடுக்க வேண்டி இருக்கு. மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் அதிகம் வருவாங்க. எல்லாரும் கூட விட்டு போட்டோஸ், வீடியோஸ் எடுக்கணும்.”
என்றவள் ஓவியா பக்கம் திரும்பி,
“எதையாவது லைட்டா சாப்பிட்டுக்கம்மா. எப்படியும் நாலு மணி நேரமாவது நிற்க வேண்டி வரும்.”
சொன்னவள் அவள் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு செல்ல, பிரபாவும், மோனிகாவும் ஒரு புன்முறுவலை கொடுத்து விட்டு தாயுடன் வெளியேறினர். கூடவே அவர்களோடு வந்தவர்களும் வெளியேற, ஓவியா திலகாவை பார்த்தாள். அந்த பார்வை அவளிடம் ஆயிரம் கேள்வி கேட்டது. அவள் எந்த கேள்விக்கும் திலகாவிடம் எந்த பதிலும் இல்லை.
ஆனால் மனதுக்கு ஓவியாவை பார்க்க பார்க்க நிறைவாய் இருந்தது. அவள் பல நாள் அவளை பார்க்க நினைத்த மணக்கோலம். அதுவும் நீலவேணி கொண்டு கொடுத்திருந்த மயில் கலரில் வெள்ளி சரிகைப் போட்ட அந்த பட்டு சாரி அவளை தேவதையாக காட்டியது. அதிலும் சாரி முழுவதும் இழையோடிய தங்க நிற ஜரிகை அவளை சிற்பமாக வடித்திருந்தது. அவளுக்கு பூட்டப்பட்ட நகைகள், சிகை அலங்காரம் எல்லாம் அவளை வசீகரித்தது. அதற்குள் முக அலங்காரமும் முடிந்திருக்க, இது தன் தோழி ஒவியாவா என நினைக்கும் அளவு தேவதை போல் இருந்தாள் பெண்ணவள். அவள் அழகை கண்ணுக்குள் நிரப்பி மகிழ விடாத அளவு இவள் மனது அடைத்து போய் இருந்தது.
ஒவியாவில் நிலையும் அப்படி தான் இருக்கிறது என அவள் கண்களே சொன்னது. எல்லாவற்றையும் செய்ய விட்டு விட்டு அமைதியாய் இருந்தாலும் உள்ளே கலவரத்தோடு தான் இருந்தாள். ஒரு வழியாக எல்லாம் முடித்து அந்த இரு பெண்களும் கிளம்பி விட, தோழியை ஒரு நொடி பார்த்தாள். திலகாவால் பேச முடியவில்லை. அதை உணர்ந்தாளோ என்ன?
அவளில் இருந்து விலகி கண்ணாடி பக்கம் வந்தாள். பிரோவில் மாட்டப்பட்டிருந்த அவள் உயர கண்ணாடி அவளை முழுமையாக அவளுக்கு காட்டியது. தன் சுந்தர வதனத்தில் தன்னை தொலைத்தவள் இரண்டு நிமிடம் அப்படியே நின்றாள்.
“இந்த அழகு எதற்கு? உடனே கலைக்கப்பட வேண்டிய இந்த அலங்காரம் எதற்கு?”
தனக்குள்ளே கேட்டாள். ஒரு முறை பார்த்து ஆனந்தப்படு என ஆண்டவன் கொடுக்கிறானோ? இந்த ஜென்மத்தில் இந்த பாக்கியம் உனக்கு கிடைக்க போவதில்லை என்று தான் ஒரு முறை நிறைவாய் பார்த்து கொள் என்று கொடுத்திருக்கிறானோ? அவளுக்கு அவளே செல்லி கொண்டாள். தாங்க முடியவில்லை போலும். சட்டென அந்த பிரோவை திறந்தாள்.
திலகா உள்ளம் திக்… திக்… திக் என அடித்தது.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel