வணக்கம் வாசகர்களே!
முகுந்தனுடனே மெட்ராஸ் வரும் ஓவியா. ஒரு வார இணைவில் தன் மனதை திறப்பானா? முகுந்தன்.
உள் நுழைந்த ஓவியாவை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாய் பிளந்த திலகா ஒடி வந்து தோழியை கட்டி கொள்ள, இப்போது ஓவியாவோ அவளை தாண்டி உள்ளே சென்றாள்.
ஒரு நொடி போகும் அவளை பார்த்தவள். தன் வீல் செயரை திருப்பி ஓடவிட்டவாறு அவள் அருகில் வர, இப்போது ஓவியாவோ கொண்டு வந்த பேக்கை மெத்தையில் போட்டு விட்டு அதன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“என்னடி பிரச்சினை உனக்கு. ஏன் இப்போ பேசாம மூஞ்சியை தூக்கி வச்சிட்டிருக்கா? ஒரு வாரமா நானும் விடாம போன் அடிக்கிறேன். என் போனை கூட எடுத்து பேச முடியாத அளவு பிஸியோ. ஆமா இப்போ இங்க எதுக்கு வந்திருக்கா?”
அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட அவளை கூர்ந்து பார்த்த ஓவியா, ஒரு நொடி நிதானித்து,
“ஏன் நான் வர கூடாதா? அப்பாவுக்கு முடியல போய் பார்த்துட்டு வாணு அனுப்பி வச்சா. அதான் போய் பார்த்துட்டு வந்துட்டேன்.”
“பார்த்துட்டு வந்துட்டியா? அப்போ மேரேஜ்.”
“யாருக்கு?”
“உனக்கு தான்.”
“ஆக… எல்லாம் தெரிஞ்சி தான் அனுப்பி வச்சிருக்கா.”
என்றதும், அவளை குற்ற உணர்வில் பார்த்தவள்,
“ உண்மையை சொன்னா நீ போயிருப்பியா?”
“மாட்டேன்.”
“அதான் பொய் சொன்னேன்.”
“பொய் சொல்லி அனுப்பிட்டா. எல்லாம் நடந்திடுமா?”
“அம்மா. நிச்சயம் பண்ணிட்டதா சொன்னாங்க.”
“ஒ… விசயம் உடனுக்குடன் வந்திடும் போல…”
“ஏய்… உன் விசயம் எனக்கு தெரியாம எப்படி? இப்ப என்ன நல்ல விசயம் தானே நடத்திருக்கு. அதுக்கு எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கா. கொஞ்சம் சிரியேன். ஆமா சொல்லு சொல்லு. மாப்பிள்ளை எப்படி?”
“ஏன் இதை அந்த எழிலரசி சொல்லலியா?”
“சொன்னாங்க. ஆனாலும் உன் வாயால கேட்கிறது போல இருக்காதுல.”
“ஆமா அவனை பற்றி என் வாயால கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியது தான்.”
“என்னடி? அவரை அவன்னு ஒருமையில கூப்பிடுற அளவு நெருங்கிட்டியா?”
என்றதும் கடுப்பானவள்
“நெருங்கிட்டாலும்…”
என பெருமி கொண்டே தன் கறுத்து போன முகத்தை காட்டாமல் எழுந்து ஜன்னல் பக்கம் போக,
“அவரை நான் பார்க்கணும்.”
முகம் மலர சொன்னவள் வேகமாக அவள் அருகில் வந்து அவள் கையில் இருந்த போனை புடுங்க, அதிர்ந்த ஓவியா திரும்பி அவள் கையில் இருந்து செல்போனை பறித்து எடுக்க போராடினாள்.
“நான் பார்க்க கூடாதா? உன் ஆளை நான் பார்க்க கூடாதா?”
போக்கு காட்டியவள், பார்க்காம விட மாட்டேன்.
என மறுகையால் எடுத்து முதுகுக்கு பின் மறைக்க, ஓவியா பதட்டத்தோடு அவள் பின்புறம் ஒடி வந்தாள்.
“தந்திடு திலகா. பிளீஸ் தந்திடு.”
“யேய்… ஒரு முறை பார்த்துட்டு கொடுக்கிறேன்டி.”
“இல்ல. எல்லாம் கல்யாணத்தப்போ பாத்துக்கலாம்.”
என செல்லை புடுங்கி எடுத்து விட,
“என்ன கிஸ்ஸிங் சீன் எதுவும் பதிவு பண்ணிட்டியா என்ன?”
கிசுகிசுப்பாய் கேட்டவளை செல்ல அடி வைத்தவள்,
“போடி… போடி இவளே…”
என நெளிய,
“அட… என் தங்கத்துக்கு வெட்கத்தை பாரு.”
திலகாவும் விடாமல் கிண்டல் செய்ய, சிரித்து மழுப்பியவள்.
“எனக்கு பசிக்குது. ஏதாவது சாப்பிட இருக்கா? இல்ல பேசி பேசியே என் வயிற்றை நிரப்பிடலாம் என்கிற எண்ணமா?”
“இருடி. சாப்பிட எடுத்துட்டு வாரேன்.”
என திலகா உள் நுழைந்து கொள்ள, அவசரம் அவசரமாக செல்லை எடுத்தவள். அதில் இதுவரை மறைத்து வைத்து பார்த்து பார்த்து ரசித்து வந்த முகுந்தனின் புகைப்படத்தை டெலிட் செய்தாள்.
“இனி இந்த படம் நம்ம செல்லுல இருக்கிறது தப்பு. நல்லவேளை திலகா பார்க்கல. பார்த்தா கேள்வி கேட்டே சாகடிச்சிருப்பா.”
மனதுக்குள் சொல்லியவாறு செல்லை மெத்தையில் தூக்கி எறிந்த போது, அந்த அறையில் சாதத்தோடு உள் நுழைந்தாள் திலகா.
“ஆமா நான் வந்ததும் கேட்ட கேள்விக்கு விடை தரலியே…”
“என்ன கேட்டா?”
“கல்யாண பொண்ணு. மாப்பிள்ளையோட கடலை போட்டோமா? இல்ல கண்ட கண்ட இடமா சுத்துனோமானு இல்லாம மறுபடியும் எதுக்கு இங்க வந்தா.”
“நான் எங்க இங்க வந்தேன். உன் ஆளும் உன் பாஸ்சும் தான் கேரளா வரை தேடி வந்து என்னை அழைச்சிட்டு வந்திருக்காங்க.”
“ என்ன சொல்லுறா? உன்னை அழைக்க கேரளா வரை வந்தாங்களா?”
“ம்…”
“அப்படினா அந்த பிசாசு அங்கேயா வந்துச்சு.” திலகா மனதுக்குள் சொன்னவளாய் ஓவியாவை ஆர்வமாக பார்க்க,
“என்னுடைய இடத்துல புது ஸ்டாப்ஸ் போடுறது வரை வேலை பார்த்துட்டு புது ஸ்டாப்ஸ்க்கு ஒர்க்கை கத்து கொடுத்திட்டு கிளம்பி போகணுமாம். அப்படி ஒரு ரூல்ஸ் கம்பெனி சைடு இருக்குதாம்.”
என்றதும் வியப்பு மேலிட அவளை பார்த்தவள்,
“ஏன் ஓவியா அப்படி ஒரு ரூல்ஸ் நம்ம கம்பெனியில இருக்குதா?”
என கேட்க,
“தெரியல. ஆனா இருக்கிறதா சொல்லி தான் உன்னோட சின்ன முதலாளி மறுபடியும் கூட்டிட்டு வந்திருக்காரு.”
“அதுக்கு எதுக்குடி நீ. எனட்ட சொல்லி இருந்தா நானே கத்து கொடுத்திருப்பேனா? இந்த காரணத்துக்கா மறுபடியும் கூப்பிட்டாங்க இந்த பாஸ்.”
“தெரியல. ஆனா எழிலரசிட்ட அந்த காரணத்தை தான் சொன்னாரு. கூடவே சில பல பிளாக்மெயில் எல்லாம் செய்து எழிலரசியையே பயப்பட வச்சி தான் அழைச்சிட்டு வந்தாரு.”
“எதுக்கு?”
“தெரியலியே.”
“என்னவோ பாஸ் உன் விசயத்துல கொஞ்சம் ஓவரா பண்ணுறது போல தான் தெரியுது. நீ மூணே நாளுல திரும்பி வருவேன்னு சொல்லிட்டு வராம போனதுக்கும் அந்த குதி குதிச்சாரு. கடைசியா நானும் நளனும் தான் பேசி சரிப்படுத்தினோம்.”
“ஒரு வேளை அந்த பொய்க்கு பணிஷ்மென்டா இருக்கும். அவருக்கு தான் பொய் பேசுறது புடிக்காதே. அடமென்டான ஆளுட்ட மாட்டுனா இதான் நிலமை.”
“அவருக்கு தான் புத்தி அப்படி போச்சுனா. இந்த மானங்கெட்ட நளனுக்கு அறிவு எங்க போச்சு.”
“நீ எதுக்கு அவரை திட்டுறா? பாஸ் சொல்லுறதுக்கு உதவியாளன் தலையாட்டி தானே ஆகணும்.”
“ஆட்டட்டும் ஆட்டட்டும்… நல்லா ஆட்டட்டும். ஒரு நாள் தலையை திருகி காக்காவுக்கு போட்டு விடுறேன்.”
“ ம்… பார்ப்போம் அப்படி என்ன வேலையை எனக்குணு வச்சியிருக்காருணு. நாளைக்கு ஆபீஸ் போனா தெரிஞ்சிட போகுது. அதுக்கு எதுக்கு மண்டையை போட்டு குழப்பணும். முதல்ல கொண்டா. கொலை பசியா இருக்கு. ஒரு மரக்கட்டையோட பயணம் பண்ணுனேன். ஒரு சிங்கிள் டீ கூட வாங்கி கொடுக்காம கூட்டிட்டு வந்திடுச்சி. பாவம் நளன் இதோட எல்லாம் முழு நேரமும் எப்படி இருக்குதோ.”
சொன்னவள் அவசரம் அவசரமாக உண்ண,
“என்னடி பல நாள் பட்டினி இருந்தவா போல இந்த முக்கு முக்குறா?”
“அப்புறம் பொய் சொல்லி அனுப்பி வச்சி நீ கோபப்படுத்துனா ? அங்க எவனையோ கூட்டிட்டு வந்து மாப்பிள்ளைணு சொல்லி சாகடிக்கிறாங்க. இந்த இடையில சாப்பாடு இறங்குமா? அந்த நெடுமரம் கெட்டது செஞ்சாலும் நமக்கு சாதகமாதாப்பா எல்லாம் செய்து.”
சொன்னவள் விடுதலை அடைந்த உணர்வில் முகம் எல்லாம் மலர சொன்னதும் திலகாவும் சிரித்து கொண்டாள்.
“எப்படி பார்த்தாலும் உங்க ரெண்டு பேரோட சண்டை அழகாதாண்டி இருக்கு.”
கண் சிமிட்டி சொன்னவளை செல்லமாக முறைத்தவள் கையில் இருந்த பிடிச்சோற்றை அவள் வாயில் வைத்து அடைத்து.
“சும்மா இருக்கிறதால தானே பேசுறா? அடைச்சிட்டா வாயை வச்சிட்டு சும்மா இருப்பால…”
சொன்னவளிடம்,
“எவ்வளவு நாளாச்சுல. நீ ஊட்டி விட்டு,”
இந்தா கொடு என மறுபடியும் அவள் வாய் பிளக்க, ஓவியா மனம் நிறைந்தவளாக ஊட்ட தொடங்கினாள்.
அதே நேரம்,
கையில் பாட்டிலோடு நளன் வீட்டு மொட்டை மாடியில் அவன் முன் முழு போதையோடு இருந்தான் முகுந்தன்.
“டேய்… போதும்டா.”
என முகுந்தன் கையில் இருந்த பீர்பாட்டிலை நளன் புடுங்க போக,
“விடுடா. நான் குடிக்கணும்.”
குழறலாக வந்தது வார்த்தை,
“உன்னால பேச கூட முடியல. இதுக்க மேல குடிச்சா உடம்பு தாங்காதுடா.
“தாங்கும். இது எல்லாம் எம்மாத்திரம்டா. நான் விரும்புனவா இன்னொருத்தனோட நிச்சயம் பண்ணிட்டு வந்து நிக்குறா. அதையே தாங்கிட்ட இந்த உடம்பு இதை தாங்கிக்காதா. என் முன்னாலயே கூச்சமே இல்லாம பேசுறா? எனக்கு வந்த ஆத்துரத்துக்கு அங்கேயே பளார் பளார்னு அறைஞ்சிடுவோமானு தோணுச்சு.”
“அப்படினா அறைஞ்சிட்டு வந்திருக்க வேண்டியது தானேடா. சனியனை கூடவே கூட்டிட்டு சுத்துறது போல அவங்களை கூடவே கூட்டிட்டு வந்திருக்கா. எதுக்கு இப்போ பொய் சொல்லி மெட்ராஸ்க்கு கூட்டிட்டு வந்தா.”
“எல்லாம் காரணமா தான். அவா விட்டுட்டு போயிட்டா நாமளும் விட்டு விட முடியுமா? அப்படி எல்லாம் விட முடியாது. அவா எப்படிடா என்னை விட்டு போக முடிவெடுக்கலாம்.”
“ஐயோ… அப்பா. என்னடா இது. மறுபடியும் முதல்ல இருந்தா. தாங்காதுடா சாமி. கேட்டு கேட்டு என் காதுல ரெத்தம் வந்திடுச்சி. இப்படியே பேசிட்டிருந்தா சுத்தமா என் காது பஞ்சர் ஆகிடும். அப்புறம் என் திலகா வந்து ஆசையா கொஞ்சும் போது இப்படி உன்னை போல பேந்த பேந்தயா தான் முழிக்கணும். நீ பேசாம படு. மீதியை நாளைக்கு பேசலாம்.”
என சொல்லும் முன்பே முழு போதையில் தன்னை மீறி தரையில் படர்ந்திருந்தான் முகுந்தன்.
மறுநாள் காலை,
இருவரும் தங்கள் அலுவலகம் நுழைந்த போதே, ஆபீஸ் சுறுசுறுப்பாக இருப்பதை தெரிந்து கொண்டனர்.
“நளன். அப்பா வந்திருக்காங்கணு நினைக்கிறேன்.”
“ம்… பார்த்தாலே தெரியுது.”
“இப்ப என்னடா பண்ணுறது?”
“என்னை கேட்டா. நேற்று எவ்வளவு சொன்னேன். ஒரு முறையாவது நீ போனை அட்டன் பண்ணி பேசியிருக்கணும். இல்ல என்னையாவது பேச விட்டிருக்கணும். இரண்டும் செய்யாம இப்போ வந்து என்ன பண்ணுறதுணு கேட்டா நான் என்ன சொல்லுவேன். உள்ளால போவோம். என்ன அர்ச்சனை கிடைச்சாலும் போய் வாங்கிக்குவோம். சின்ன தப்பையா செய்திருக்கா. அப்பாவை பொண்ணு வீட்டுகாரங்க முன்னால அசிங்கமா நிற்க வச்சிருக்கா. அப்புறம் அவர் என்ன நல்லவிதமா நடப்பார்னு எதிர்பார்க்க முடியுமா என்ன?”
“டேய்… புலம்பாத. அப்பாட்ட என்ன சொல்லி சமாளிக்கலாம்ணு ஐடியா கொடு?”
“ஐடியாவா? உங்க அப்பாட்ட சொல்லவா? நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா. நீயாச்சு. உங்க அப்பாவாச்சு…”
என நழுவ பார்த்தவனை பிடித்து இழுத்து கொண்டே உள்ளே வந்தான். நிஜமாகவே கொதித்து கொண்டு தான் நின்றிருந்தார் சக்கரவர்த்தி. ஆனால் அந்த கொதிப்பை இவர்களிடம் காட்டவில்லை. மற்ற எல்லாரிடமும் காட்டினார். பியூன் முதற்கொண்டு மேனேஜர் வரை அத்தனை பேரும் அவரின் கோப ஆக்கினையில் பொசுங்கி போய் முகம் கறுத்து தான் வெளியேறிக் கொண்டிருந்தனர். தூரமா நின்று பார்த்த போதே தெளிவாக தெரிந்தது. பயந்தவாறு தான் தந்தையை நெருங்கி வந்தான். நெருங்கி வந்தும் அவரில் எந்த மாற்றமும் இல்லை. பணியாளர்களிடமே கடுகடுத்து கொண்டிருந்தார். இவனை திரும்பி பார்க்கவும் இல்லை. அப்போது மட்டும் இல்லை. அடுத்து வந்த மூணு மணி நேரமும் அதுவே தொடர்ந்தது.
பின், போகிறேன் என்று கூட சொல்லாமல் கிளம்பி போய் விட்டார். தந்தையின் இந்த அவதாரம் வலித்தாலும் என்னவோ எதுவும் முகத்துக்கு நேரே கேட்டு சங்கடப்படுத்தாமல் கிளம்பியது ஒருவித நிம்மதியை தர, மெல்ல தன் சீற்றில் போய் அமர்ந்தான். அவனை வினோதமாக பார்த்த நளன்,
“என்னடா புயல் அடிச்சி ஓய்ஞ்சது போல இருக்கு. நீ எதுவுமே நடக்காதது போல போய் உட்காருறா.”
“ புயல் நம்ம மேல மோதாம கரையை கடந்ததேணு நினைச்சி சந்தோஷப்படு. இப்போ நம்ம வேலையை பார்ப்போம்.”
“ நம்ம வேலையா?”
நளன் புரியாமல் கேட்க,
“அதாண்டா. ஓவியாவை சொன்னேன். அவா ஆபீஸ் வந்திருக்காளானு போய் பாரு.”
“அதானே பார்த்தேன். இங்க எதுவும் நடக்கட்டும். யார் தலையும் உருளட்டும். நமக்கு நம்ம வேலை தானே முக்கியம்.”
என்றவன்,
“என்ன சின்ன முதலாளி. அவங்க வந்திருப்பாங்கணு நினைக்கிறீங்களா?”
என கிண்டலோடு கேட்க,
“வராம … அவா தான் பணியை இன்னொருத்தருக்கு சொல்லி கொடுக்கணுமே. கண்டிப்பா வந்திருப்பா.”
“அதுக்கு தான் நீங்க இன்னும் ஆள் பார்க்கலியே மொதலாளி… இல்லாத ஸ்டாப்ஸ்க்கு அவங்க எப்படி சொல்லி கொடுக்க முடியும்.”
“என்ன கிண்டலா? அது எனக்கு தெரியாதா? முதல்ல அவா வந்திருக்காளானு போய் பாருடா.”
என்றதும் அவனை முறைத்து கொண்டு வெளியேறினான் நளன்.
அதே நேரம்,
கோபத்தின் உச்சத்தில் வெளி வந்தவர் வாசலில் நின்ற சுந்தரத்தை பார்க்க…
அவன் கண்களால் யாரையோ காட்ட, திரும்பியவர் முகம் கோபத்தில் சிவந்தது. அவர் அனல் கக்கும் பார்வையை மட்டும் அந்த நொடி ஓவியா பார்த்திருந்தால் பொசுங்கி, இல்லாமல் போயிருப்பாள்.
ஆனால் பின்னால் தன்னை பார்த்து நல்ல பாம்பு ஒன்று சீறுவது தெரியாமல், சுந்தரியிடம் சிரித்துக் பேசி கொண்டு நின்றாள் ஓவியா.
அத்தியாயம் தொடரும்…
அத்தியாயம் தொடரும்… Best Romantic Novel