வணக்கம் வாசகர்களே!
கட்டிய கணவனே இலக்கியாவுக்கு அந்நியனாய் தெரியும் மர்மம் என்ன?
“என்ன அண்ணி… இலக்கியா எப்படியிருக்கா?”
“அவா நார்மலா தான் இருக்கா. நீங்க தான் உங்களையும் குழப்பி என்னையும் குழப்புறீங்கள்.”
நார்மலா இருந்தா சந்தோஷம் தான்.
என ராஜம் திரும்ப,
“பதட்டப்படாதீங்க அண்ணி. நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. அவா நல்லாயிருப்பா. நீங்களும் அண்ணனும் விரும்புற அளவு ரொம்ப சந்தோசமா அந்த வீட்டில் இருப்பா.”
“இப்படி உள்ளால வந்து பதுங்கிட்டா வருகிறவங்கள யார் கவனிக்கிறது.”
என்றவாறு முத்துகிருஷ்ணன் உள்ளே வர,
“அண்ணி அவரை ஏதாவது சாப்பிட்டு போக சொல்லுங்க.”
“இன்னும் உங்களுக்கு அண்ணன் மேல கோபம் போகலியா.?”
“என் பொண்ணு சந்தோசமா இருக்கிற வரை தான் இவரும் இப்படி இருப்பாரு. அவ கண்ணுல கண்ணீரை பார்த்தேன் நான் பத்திரகாளி ஆகிடுவேன்.”
என ஆவேசமாக சொல்லி விட்டு ராஜாம் கிளம்ப,
ராஜேஸ்வரி அண்ணை பார்த்தாள்.
“என்னண்ணா இது.”
“இவளுங்க பேச்சையெல்லாம் கேட்டுட்டு இருந்தா தலையில் துண்டை போட்டு தான் இருக்கணும். நல்ல நேரத்துல இவளுங்கள பற்றிப் பேசி என் மூடை கெடுக்காத தங்கச்சி. நீ எனக்கு ஒரு கப் காப்பி எடு. எனக்கு அதுபோதும்.”
என்றவர் ராஜேஸ்வரி நீட்டிய காப்பியை வாங்கி குடித்துவிட்டு மண்டபத்தின் முன் பகுதிக்கு வந்தார்.
நண்பர்கள் கலகலப்புக்குள் இருந்தாலும் ராகவ் தனி உலகில் தன் வருங்கால மனைவியோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவனை பிடித்து உலுக்கினான் வசந்த்.
“என்னடா…பொண்ணு அழகுணு சொன்னதும் இப்பவே கனவுக் காண ஆரம்பிச்சிட்டியா?”
“பின்ன என்னடா. இந்த உம்முணா மூஞ்சிக்கு எல்லாம் இப்படி ஒரு பொண்ணு கிடைச்சா. இப்படித்தான் முகூர்த்தத்துக்க முன்னாலேயே சுவிட்சர்லாந்து காஷ்மீர்ணு மனசு ஓடி தான் போகும்.”
குரு கிண்டலடிக்க,
“சீ… போங்கடா.”
என ராகவ் முறுவலித்தான். இதுவரை பார்க்காத இலக்கியாவை முதன்முதலாக தன் அருகில் பார்க்கப்போகும் நொடிக்காக காத்திருந்தான்.
“இப்படி ஒரு பொண்டாட்டி தேவதையா கிடச்சா. தப்பில்ல. இருந்துட்டு என்ன… நின்னுட்டு கூட கனவு காணலாம். ஆனா இப்படியே கனவு கண்டுட்டு உள்ளாலயே இருந்தா, மாப்பிள்ளைக்கு பொண்ணை புடிக்கல போல அவர் அறையை விட்டு வெளி வரலணு கல்யாணத்தை நிறுத்த போறாங்க.”
“மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கணு…
ஐயர் குரல் கொடுத்ததும்
“நீ கல்லு மாதிரி இப்படியே உட்கார்ந்திருந்தா அப்படித்தான் நடக்கும்.”
ராஜன் கண்சிமிட்டி கூற,
திடுக்கிட்டு பரபரப்போடு எழுந்தான். அதே நேரம் உள்ளே வந்த அவன் அப்பா முருகானந்தமும் தாய் வேதவள்ளியும் மகன் அருகில் வந்து பூமாலையை அவன் கழுத்தில் அணிவித்தனர். தன் பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டவன் எழுந்து அவர்களை அணைத்துக் கொள்ள,
அனைவரும் முகமலர்ச்சியோடு மணமேடையை நோக்கி சென்றனர். நாதஸ்வர இசையால் அவ்விடம் ரம்மியமாக மாறி இருந்தது. மணமேடையில் முன்னால் இருந்த அத்தனை பேரின் கண்களும் ஒரே நேரம் மணமகனிடம் தாவ ராகவ் மிக கம்பீரமாய் வந்து மண மேடையில் அமர்ந்தான்
அங்கு ஆரவாரம் தொற்றிக் கொண்டது. ஐயர் மணமகனை அமர்த்தி மந்திரங்களை உச்சரிக்க ராகவ் அவர் சொல்வதை கவனமாகக் கேட்டு திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் இலக்கியா தேவதையாக வந்து கொண்டிருந்தாள். ராகவ் அவளை மிகவும் ஆர்வமாக பார்த்தான். வசந்த சொன்னதும் அவன் கற்பனை செய்ததை விட மிக அழகாக தெரிந்தாள் அவன் கண்ணுக்கு. போட்டோவில் பார்த்ததை விட மிக மிக அழகாக இருப்பது போல தெரிய பார்த்த கண்ணும் உதடும் விரியத் தொடங்கியது.
பக்கத்தில் அவள் நெருங்கி வர வர, ராகவ் உள்ளம் படபடவென அடித்துக் கொண்டது. இலக்கியா தலை நிமிராமலே அவன் அருகில் வந்து அமர்ந்தாள். எல்லார் பார்வையையும் ஒதுக்கி விட்டு தன்னருகில் புது பூவாய் மலர்ந்திருக்கும் தன்னவளை பார்க்கத் துடித்த மனதை அடக்க ரொம்பவே கஷ்டப்பட்டான் ராகவ்.
ஐயர் மந்திரங்கள் ஓதிக்கொண்டே தட்டில் வைத்து நீட்டியை தாலியை வாங்கிக் கொண்ட மலர் அத்தனை பேரிடமும் ஆசீர்வாதம் வாங்க கீழே இறங்கியதும் உறவுகள் எல்லாம் அருகில் வந்தனர். விஸ்வா அனைவருக்கும் உதிரிப் பூக்களை கொடுக்க,
கூட்டம் ஆர்வத்தோடு மணமேடை அருகில் வந்தது. ராஜம் கண்கலங்க மகளை பார்த்து நின்றாள். முத்துகிருஷ்ணன் பக்கத்தில் வந்த அதே நேரம் மலர் தாலியை ஐயரிடம் நீட்டினாள்.
தாலியை வாங்கிக் கொண்ட ஐயர் ராகவிடம் அதை நீட்ட, ராகவ் மிகுந்த சந்தோஷத்தோடும் ஆர்வத்தோடும் இலக்கியாவின் கழுத்தில் தாலியை கட்டினான். அனைத்து உறவுகளும் மிகுந்த மகிழ்ச்சியோடு அர்ச்சனைகளை தூவ இலக்கியா என்ற தனி ஒருத்தி ராகவோட கூட்டில் இணைந்து கொண்டாள்.
அதன் பின் நடக்கும் அத்தனை சம்பிரதாயங்களும் ஒவ்வொன்றாக நடந்தேறியது. போட்டோ கிராப்பர்களின் ஸ்டில்லுக்கு ராகவ் விதம் விதமாக போஸ் கொடுத்தான். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மணப்பெண்ணை அவள் கணவரோடு வழியனுப்ப எல்லோரும் வண்டியின் பக்கத்தில் குழுமியிருந்தனர். மகள் தாயின் நெஞ்சில் புதைந்து விம்மிக் கொண்டிருந்தாள். அவள் கண்ணீரை பார்க்க முடியாமல் விஸ்வா எங்கோ வெறித்திருக்க,
முத்துகிருஷ்ணன் ரொம்ப திடமானவராக காட்டிக் கொண்டு,
புது வாழ்க்கையை தொடங்க போறா. அதுக்கு இப்படியா அழுதுட்டு கிளம்புறது. எங்க போயிட போறோம். நாளைக்கு காலையிலேயே உன்னை தேடிட்டு அங்க வர போறோம். அதுக்கு எதுக்கு இந்த அழுகை என மகளை சமாதானம் செய்தவர் விழியும் கலங்கி தவித்தது.
“அண்ணா…”
என அழைத்துக் கொண்டு இலக்கியா விஸ்வாவின் அருகில் வர,
பொங்கி வந்த அழுகையை நிறுத்த முடியாமல் கதறிவிட்டான் விஸ்வா. அப்புறம் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு,
“போயிட்டு வாம்மா. மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்திடுவாரு.”
என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளையின் அருகில் வந்த விஸ்வா தங்கையின் கையை பிடித்து ராகவ்வோட கையில் கொடுத்து,
“எங்க வீட்டு குலவிளக்கு. உங்க கையில கொடுக்கிறேன். அவா கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வராம நீங்கதான் பார்த்துக்கணும் மச்சான்.”
“கவலைப்படாதுங்க. இனி இலக்கியா என்னோட சொத்து. அவளை தேவதை மாதிரி பார்த்துக்கிறேன்.”
என்றான் ஓரக்கண்ணால் மனைவியை பார்த்தவாறு,
இலக்கியா அவனைப் பார்க்காமல் பாவமாக தன் குடும்பத்தையே பார்த்து நின்றாள். அனைவர் கண்களிலும் நீர் கோர்த்துக்கொள்ள ராகவோட பெற்றோர்கள் தான் சூழ்நிலையை மாற்றி இலக்கியாவை வண்டியில் ஏறச் செய்தனர். கூடவே எழிலை ராஜேஸ்வரி ஏறிக்கொள்ள சொன்னாள். எழிலும் ஏறிக் கொண்ட பின் வண்டி கிளம்ப ஆரம்பித்தது. வண்டி கண்ணை விட்டு மறையும் வரை இலக்கியாவின் குடும்பம் அப்படியே அசையாமல் பல மணி நேரம் அங்கேயே சிலை போல நின்றது.
வண்டியை விட்டு ராகவ் இறங்கியதும்,
தன் மனைவி இறங்க உதவினான். மாலை சகிதமாக நின்ற மணமக்களை வரவேற்க ஆரத்தி தட்டோடு வெளிவந்த மலர், இருவரையும் சேர்த்து நிற்கச்சொல்லி ஆரத்தி எடுக்க மொத்த குடும்பமும் குதூகலமாக உள்ளே சென்றது.
உள்ளே வந்த மருமகளை அழைத்துக் கொண்டு பூஜை அறைக்குள் சென்ற வேதவள்ளி மருமகளை குத்துவிளக்கை ஏற்ற செய்தாள். தெய்வங்களுக்கு எல்லாம் தீபாரதனை செய்த பின் இறைவனை தொழுது விட்டு மூவரும் வெளியே வந்தன.
“இலக்கியா நீ ரொம்ப முக்கியமான ஒரு ஆளை பார்க்கணும். நீ என்னோட வா.”
என்றவன் முன்னோக்கி நகர, இலக்கியா எதுவும் பேசாமல் அவன் பின்னே நடந்தாள். வீட்டின் வடக்கு மூலையில் இருந்த ஒரு அறைக்குள் அவன் செல்ல இலக்கியாவும் தயங்கித் தயங்கி உள்ளே அடியெடுத்து வைத்தாள்.
இவர்களின் வரவை புரிந்துகொண்டு கண்மூடிப்படுத்திருந்த அப்பெண்மணி மிக கஷ்டப்பட்டு எழுந்து கொள்ள,
“எதுக்கும்மா… உட்காருங்க.”
ராகவ் சொல்லச்சொல்ல காதில் வாங்கிக் கொள்ளாத அப்பெண்மணி அவன் பின்னால் பவ்யமாக வந்து நின்ற புதுப் பெண்ணை பார்த்தாள்.
ஒரே நொடி முகம் மலர இலக்கியாவின் அருகில் சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.
“இந்த ஒரு வேலையும் தான் உன் அம்மா சரியா பண்ணியிருக்காடா ராகவ். உன் பொண்டாட்டி ரொம்ப சூப்பரா இருக்காடா.”
என ராகவ்வை பார்த்து அப்பெண்மணி சொல்ல,
அது யார் என்று புரியாமல் நின்ற இலக்கியாவை பார்த்து ராகவ் தான் சொன்னான்.
“இவங்க என்னோட பெரியம்மா. எங்க அம்மாவோட அக்கா. எங்க வீட்ல ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க. சின்ன குழந்தையில் இருந்து என்னை வளர்த்தவங்க இவங்கதான். நான் இப்போ இவ்வளவு உயரமான இடத்தில் இருக்கிறதும் இவங்களால தான்.”
ராகவ் பெருமையாக சொல்ல,
இலக்கியா நிமிர்ந்து அவளைப் பார்த்தாள்.
ஒரு 50-55 வயதிருக்கும். பல இடங்களில் முடி நரைத்திருந்தாலும் இன்னும் இளமையாகத் தான் தெரிந்தது முகம்.இப்படி முக்கியமானவர் எனப் பேசும் இவர்கள் ஏன் திருமணத்திற்கு வரவில்லை. கேள்விகள் எழுந்தாலும் எதுவும் பேசாமல் அப்படியே நிற்க,
ராகவ் அவளைப் பார்த்து,
“பெரியம்மாவுக்கு இரண்டு வாரத்துக்க முன்னால தான் ஹார்ட்ல ஆப்ரேஷன் நடந்துச்சு. டாக்டரோட அறிவுறுத்தலால தான் என்னோட மேரேஜ்ல்ல அவங்களால கலந்துக்க முடியல. ஆனா ரொம்ப ஆசைப்பட்டாங்க. அவ்வளவு தூரம் டிராவல் பண்ண முடியாதுல. அதான் கூட்டிட்டு வரல. அதனால என்ன…இன்று நம்ம வீட்டில நடக்கிற பங்ஷனுல கலந்துக்க வச்சி பெரியம்மாவ சந்தோசப்படுத்திடலாம்.”
என்றவன் சந்தோஷம் மிகுதியால் அந்த பெரியவளின் கழுத்தை கட்டிக்கொண்டான்.
அவன் செயலை பார்த்ததுமே அவன் அவர்கள் மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது இலக்கியாவுக்கு தெரிந்தது.
“என்னடா பெரியம்மாட்ட பேசிட்டே இருந்திராத. இரண்டு பேரும் அவங்க காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிடுங்க.”
என வெளியிலிருந்து தாயின் குரல் வர.
இருவரும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். அதன் பின் வெளியே வந்த இருவரையும் மலர் எதிர்கொள்ள,
“அடுத்ததா நீ இந்த வீட்டுல தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பெரிய மனுஷி இவா தான். எங்க வீட்டோட குட்டி பிசாசு. பெயர் மலர். எங்க அப்பாவோட தம்பி பொண்ணு. அவங்க வீட்டுக்கு மட்டுமல்ல என்னோட மொத்த குடும்பத்துக்கே செல்ல பொண்ணு. இப்ப தான் பத்தாவது படிக்கிறா. ஆனா பேச ஆரம்பிச்சா பெரிய மனுஷி தோத்துடுவா போ.”
என ராகவ் மலரை பார்த்து சொன்னதும்,
“போங்கண்ணா… எப்பவும் என்னை வம்புக்கு இழுக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு. புதுசா வந்தவங்களுட்டயும் என்னை இப்படியா அறிமுகப்படுத்துவா. நீங்க வாங்க அண்ணி. என்னை பற்றியும் அவனைப் பற்றியும் நானே சொல்றேன்.”
என மலர் அவளை இழுத்துச் செல்ல,
ராகவ் தனக்காக வெளியில் காத்து நின்ற ஊர்க்காரர்களிடம் வந்தான்.
இலக்கியாவை இழுத்து சென்ற மலர் மாடியில் ராகவ் அறைக்கு அவளை அழைத்துச் சென்றாள். அங்கே எழிலும் இருந்தாள்.
“நீ வேற என்னை தனியா விட்டுட்டு மாமா கூட போயிட்டியா. இந்த வீட்டுல எங்க இருக்கிறதுணு கூடத் தெரியல. அதான் இவளோட துணையாலே இங்கே வந்து இருந்துகிட்டேன்.”
என்றாள் எழில்.
பக்கத்திலிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு அறையை நோட்டமிட்டாள். ஒரே அறைதான். ஆனால் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே கிடந்த மரபர்னிச்சர்களின் அழகே மனதை கொள்ளை கொண்டு விடும் போல் அவ்வளவு அம்சமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே வந்தவுடனே ராகவோட ரசனை இலக்கியத்திற்கு புரிந்தது. அதிலும் அறையிலிருந்து பால்கனிக்கு செல்லும் வாசலில் கொடுத்திருந்த வேலைப்பாடு கண்களை கவர்ந்திழுத்தது. நடுவில் கட்டிலும் சுற்றி மலர்களின் அலங்காரமும் சுவற்றில் பிளைவுட்டின் வர்ணஜாலமும் அந்த அறையை மிக எடுப்பாக காட்டியது.
இலக்கியாவின் கண்கள் வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே ஏதோ சிந்தனையிலிருக்க, ராகவ் சொன்னது போல மலர் வாயை மூடாமல் பேசிக்கொண்டேயிருந்தாள். எழில் தான் அவள் அரட்டையில் கலந்து கொண்டு சிரித்துக் கொண்டு நின்றாள். இலக்கியா மெதுவாக எழும்பி பால்கனிக்கு வந்தாள். அங்கே தொங்கிக்கொண்டிருந்த நார்த்தொட்டிலில் அமர்ந்தாள். அங்கிருந்து பார்க்கும்போது நீலவானமும் அதன் அடியில் கடல் அன்னையும் தெரிய, இயற்கை எழில் கொஞ்சும் அவ்விடம் அவளை வசீகரித்தது.
மெதுவாக கண் மூடிக்கொண்டாள். தன் வாழ்வில் என்ன நடக்கிறது. நான் இதை ஏற்றுக் கொண்டேனா? ஏன் என் அடிமனது இன்னும் அமைதியாகவே இருக்கிறது. எண்ணங்களில் பல பல சிந்தனைகள் வந்து போக, குழப்பமான மனநிலையோடு கண்மூடியவளை நோக்கி வந்தாள் வேதவள்ளி.
“ரொம்ப களைப்பா இருக்குணா பத்து நிமிஷம் படுத்து எழும்பு. எழும்பினதும் நைட் பங்ஷனுக்கு ரெடியாகணும்மா. ஐந்து மணிக்கே நம்ம வீட்டுல பங்ஷன் ஸ்டாட் ஆகிடும். பெரிய பெரிய வி.ஐ.பிங்க எல்லாம் வருகிறதால ஃபுள் செக்கிருட்டி இருக்கும். அதான் ரொம்ப நேரமே தொடங்க வேண்டி இருக்கு.”
என்றாள் மாமியார்.
“ம்…ம்.”
என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்ள வேதவள்ளி எழிலையும் மலரையும் கீழே அழைத்து சென்றாள். அவர்கள் சென்றதும் அறைக்குள் வந்தவள் புது இடத்தின் தடுமாற்றத்தால் நின்ற போது உள்ளே நுழைந்தான் ராகவ்.
மிரண்ட விழியோடு அவனைப் பார்க்க,
“எதுக்கு இப்ப பதட்டப்படுறா. நான் சும்மா தான் வந்தேன். புது இடம்ல அதான் எது எங்கயிருக்குணு சொல்லிட்டு போக தான் வந்தேன்.”
என்றவன் டவ்வல், சோப் என எல்லாவற்றையும் எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு,
“உனக்கு தேவையான அத்தனை பொருளும் அந்த பிரோல இருக்கு. நேற்று அம்மா தான் வாங்கி வச்சாங்க. இந்தா…”
என அவன் ஒரு சாவிக்கொத்தை நீட்ட, தயக்கத்தோடு வாங்க கை நீட்டியவள் கையில் அழுத்தமாக அதை வைத்து இருத்தியவன் மென் சிரிப்போடு அவ்விடத்தை விட்டு அகன்றான்.
அவன் சென்றும் 10 நிமிடம் அப்படியே நின்றவள் முதல் வேலையாக அறை கதவை பூட்டிக்கொண்டு செயல்பட்டாள். அதன்பின் வந்த நிமிடங்கள் எல்லாம் அசுர வேகத்தில் செல்ல, இரவு 7 மணிக்கு அவளின் பிறந்த வீட்டிலிருந்து உறவினர்கள் புடை சூழ தன் குடும்பம் வந்து இறங்கியதும், இலக்கியாவின் முகத்தில் இதுவரை தொலைந்திருந்த மகிழ்ச்சி வந்து அமர்ந்து கொண்டது.
அதிலும் வந்திருந்த இளம் பெண்களின் கேலியும் கிண்டலும் ராகவின் தோழர்களில் நையாண்டியும் சேர்ந்து அந்த மாலை நேர பங்ஷனை மிக அழகாக மாற்றியது.
பங்க்ஷன் எல்லாம் முடிந்து இலக்கியாவை அழைத்த ராஜேஸ்வரி,தோண்டி தோண்டி எது எதுவோ கேட்க, குழப்பமான இலக்கியா.
“ஒண்ணுமில்லடா தங்கம். எதுனாலும் நீ அத்தைட்ட சொல்லலாம்.”
என்றதும் எதைச் சொல்ல, சொல்லுறபடி இங்கே எதுவும் நடக்கல. என்றாள் புரியாமல்…
அப்படியும் எதை எதையோ அவள் கேட்க ஒப்பனையாக ஏதோ சொன்னாள் இலக்கியா. அப்படி இவள் சொன்னதில் எதைப் புரிந்து கொண்டாளோ மலர்ந்த முகத்தோடு அவள் அம்மா அருகில் போய் காதில் எதையோ கிசுகிசுத்தாள்.
அதன்பின் இலக்கியாவை குளிக்க வைத்து புதுத்துணி அணிவித்து அவளை அலங்கரித்து மாடியில் ராகவோட அறைக்கு அழைத்துச் சென்றாள் ராஜேஸ்வரி.
“பக்குவமா நடந்துக்க இலக்கியா…”
என்றவள் அவசரமாக வெளியேற, அப்போது தான் இலக்கியாவின் உள்ளம் பரபரக்க தொடங்கியது. இதுவரை எந்த அலங்காரமும் இல்லாம இருந்த அந்தக் கட்டில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க இலக்கியாவினுள் எதுவோ மேலெழ தொடங்கியது. கட்டிலின் அலங்காரமும் மேஜையின் மேல் பழங்களின் அணிவகுப்பும் எதையோ முன்னறிவிக்க,
இலக்கியாவின் உள்ளம் ஒரு நொடி அதிர்ச்சியானது
“இன்று…இன்று…நமக்கு…”
அடுத்து வந்த உண்மை அவளை உறைய வைக்க, மனதின் திடுக்கிடல்களும் படபடப்பும் அவளை நிலை கொள்ளாமல் தவிக்க செய்த நேரம்…
பட்டு வேஷ்டி சட்டையில் புத்தம் புதிதாக அந்த அறைக்குள் நுழைந்தான் ராகவ். அவனைக் அக்கோலத்தில் கண்டதும் சட்டென மெத்தையிலிருந்து எழுந்து கட்டிலின் கால் பக்கம் போய் ஒதுங்கிக் கொண்டாள் இலக்கியா.
“என்ன இது… என் மனது எதற்காக இவ்வளவு பயப்படுகிறது. என் கழுத்தில் தாலி கட்டியவர் தானே உள்ளே வருகிறார். ஆனால் அந்நியன் ஒருவன் என் அறையில் அத்துமீறி நுழைவது போல என் மனம் ஏன் படபடக்குது. என் அடிமனது என்னை ஏன் பயமுறுத்துகிறது. துளிக்கூட அளவு கூட அவர் மேல் விருப்பம் ஏன் வரமாட்டேங்குது.“
வெட்கமோ… தயக்கமோ… இல்லாமல் என் மனம் வெறுமையாய் ஏன் அவஸ்தைப்படுகிறது.
ஒரு நொடி துணுக்குற்ற நெஞ்சோடு ஆசையும், தவிப்புமாக மலர்ந்த முகத்தோடு தன்னை நோக்கி வரும் கணவரை பார்த்து நின்றாள் இலக்கியா.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel