வணக்கம் வாசகர்களே!
ரவியிடம் முதல் முறை தன் மனதை திறக்கும் பல்லவி
பல்லவி கண்ணீர் மல்க பேசியதையே நம்ப முடியாமல் பார்த்த ரவி அதிர்ந்து போய் நின்றிருக்க,
“என் பேச்சு உங்களை எவ்வளவு வலிக்க வச்சிதோ, அந்த அளவு என்னையும் வலிக்க வச்சிதுணு உங்களுக்கு தெரியாது.”
“என்ன புள்ள சொல்லுறா?”
“சங்கிலியை நான் ஊருக்குள்ள வந்த மூணாவது நாள் தான் பார்த்தேன். ஒரு கோவில்ல எங்க முதல் சந்திப்பு நடந்துச்சு. அந்த முதல் சந்திப்பே அவனை எனக்கு ரவுடியா தான் காட்டிச்சி. அதன் பிறகு என் மனநிலையில நிறைய மாற்றம் ஏற்படுற மாதிரி அவன் செயல் இருந்துச்சு.”
“அப்பவே நான் அவனை கவனிக்க ஆரம்பிச்சிட்டேன். அதுல நான் தெரிஞ்சிகிட்டது ஒண்ணே ஒண்ணு தான். அவனை உசுப்பேத்துனா அவன் செய்ய முடியாதுணு நினைக்கிறதை கூட சாதிச்சி காட்டிடுவான்னு. அதுல முதல் எடுத்துகாட்டே வீடு வாசல் உனக்கு காலத்துக்கும் அமையாதுணு ஒரு கிழவி சொன்ன ஒரே வார்த்தையை கட்டியா புடிச்சிட்டு உழைச்சி உழைச்சி சேக்குறான்னு அறிஞ்சேன். அது கூட நிலம் வாங்கி வீடு வைக்கிற அளவு சேர்ந்திடுச்சினு தெரிஞ்சிது. அப்புறமும் ஏன் இவன் இப்படி இருக்காணு கோபம் வந்துச்சு. சும்மா பேசினா காதுல வாங்கவே மாட்டானு தெரியும். அதான் அவனை உசுப்பேத்த வேண்டி அப்படி எல்லாம் பேசினேன்.”
” ………………..”
“ஆனா அப்படி நான் பேசும் போது அந்த பணத்துல தான் நானே உயர்ந்து நிக்குறேனு தெரியாது ரவி. தெரியாம தான் பேசினேன். ஆனா தெரிஞ்சதும் உடைஞ்சி போயிட்டேன். அவன் ஆசைக்கும் இலட்சியத்துக்கும் கனவுக்கும் குறுக்கே நிக்கிறது நானா? தாங்க முடியல. இதை தான் என்னால தாங்க முடியல. என் ஆசையை நிறைவேற்றுனவன் ஆசை முடிஞ்சிட கூடாது. சங்கிலி தோத்திட கூடாது. அவன் முடங்கிட கூடாதுணு தான் என் சொத்தை வித்து பணமாக்கி கொண்டு அவன் முன்னால வந்தேன். எதுவும் பேசாம கொடுத்திருக்கலாம். ஆனா அப்படி கொடுத்தா நிச்சயம் என் கையில இருந்து பணத்தை வாங்கியிருக்க மாட்டான்.”
“…………….”
“அது எனக்கு தெரிஞ்சதால தான் அன்று அப்படி பேசினேன். எனக்கு தெரியும். என் பேச்சு அவனை உசுப்பேற்றும்னு. அப்படியும் உசுப்பேத்தாம சுணங்கி போயிட கூடாதுணு தான் வண்டியில வச்சி கூட அப்படி உனட்ட பேசினேன்.”
“…………..”
“எனக்கு தெரியும். நீ போதும்.. நீ ஒருத்தனும் போதும். நான் ஒரே ஒரு முறை கொடுத்த வலியை மறுபடியும் மறுபடியும் அவனுக்கு நியாபகப்படுத்தி அதை அவனுக்கு சொல்லி சொல்லி அவனை உசுப்பேத்தி நான் எதிர்பார்த்த இடத்துக்கு கொண்டு வந்திடுவாணு நம்புனேன். என் நம்பிக்கை பொய்யா போகல. என் நம்பிக்கையை நீ உண்மையாக்கிட்டதை தான் நான் இன்று என் கண்ணாலயே பார்த்தேனே.”
” ……………….”
“சத்தியமா என் பேச்சு சங்கிலியை இந்த அளவு உயர்ந்த இடத்துல இவ்வளவு குறுகிய காலத்துலயே கொண்டு வந்து சேர்க்கும்னு நான் நினைக்கல. இது அவனோட திறமை தான். இப்ப நம்புறேன். இப்போ முழுசா நம்புறேன். அவன் இன்னும் பெரிய ஆளா வருவான். இந்த ஊர் மட்டுமல்ல. இந்த கன்னியாகுமரி மாவட்டமே புகழுற அளவு உயர்வாண்ணு எனக்கு நம்பிக்கை இருக்கு. இது போதும். இதுக்காக தான் நான் பேசினேன். என் பேச்சு அவனை இவ்வளவு தூரம் உயர்த்தியிருக்குணு நினைக்கும் போது எனக்கு பெருமையா தான் இருக்கு. போதும் இது போதும். இது மட்டும் போதும்.”
கண்ணீர் மல்க நெஞ்சில் நெகிழ்வோடு முகத்தில் ஆனந்தத்தோடும் அவள் சொல்ல சொல்ல ரவியின் உள்ளம் முதல் முறையாக மகிழ்ச்சி கொண்டது. அதே மகிழ்வோடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“உண்மை தான். உண்மையே தான். உன் வார்த்தை. உன் வார்த்தை தான் அவனை உறங்க விடாமல் உசுப்பேற்றி இந்த அளவு ஓட வச்சது. அந்தம் ஒட்டம் தான் அவனை இந்த அளவு உயர வச்சது. உண்மையில் சங்கிலியை மிளிர வச்சதே உன் வார்த்தை தான். அதை செயல்படுத்தியதும் நீ நினைத்தது போல இந்த ரவியே தான். என்னால உன் வார்த்தையை ஜீரணிக்க முடியல. நீ அவனை அப்படி பேசியிருக்க கூடாதுணு நினைச்சேன். அதனால அடிக்கடி உன் வார்த்தையை சொல்லியே அவனை உசுப்பேத்தினேன். கடைசியில் நீ நினைத்தது போல எல்லாமே சரியா நடந்துச்சு.”
ரவியும் சொல்லி விட்டு நெகிழ்வோடு அவளை பார்க்க…
“அவனோட வலியோட ஆழம் எனக்கு மட்டும் தான் தெரியும். அவனோட ஆசையின் மகத்துவம் என்னால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும். அவனோட ஏக்கம், தவிப்பு எல்லாமே , எல்லாமே என் ஒருத்தியால மட்டும் தான் புரிஞ்சிக்கவே முடியும். அவனோட உணர்வை கூட என் ஒருத்தியால மட்டும் தான் மீட்டி எடுக்க முடியும். அதுக்கு தான். இது எல்லாம் செய்தேன். அவனை மீட்டியும் எடுத்துட்டேன். அவன் வாழ்க்கையை மாற்றியும் அமைச்சிட்டேன். போதும் இதுவே போதும்.”
உணர்வு பொங்க சொல்லி முடித்த பல்லவியை நெகிழ்வோடு பார்க்கான்.உணர்ச்சி மிகுதியால்…
“ரொம்ப தேங்க்ஸ் பல்லவி.”
என்றான்.
“எதுக்குடா?. எப்போதும் திட்ட தான் செய்வா. இப்போ என்னாச்சு.”
“ம்… உன்னை எப்பவுமே திட்டியிருக்க தான் செய்திருக்கேன். ஆனா நீ எல்லாமே அவன் நல்லதுக்கு தான் செய்திருக்காணு நினைக்கும் போது ரொம்ப கூச்சமா இருக்கு.”
“எப்படிடா அவனுக்கு என்னால கெடுதல் செய்ய முடியும். இந்த ஊர்ல்ல நான் வந்து இறங்கி முழுசா ஒரு நாள் சாப்பிடவே இல்ல தெரியுமா? என் முதல் சாப்பாடே அவன் காசுல தான் கிடைச்சிது. அப்படி அவன் காசுல சாப்பிட்டுட்டு அவனுக்கு நல்லது பண்ணாம போறது சரியா? முடங்கி போயிருந்த என் படிப்புக்கு முதல் புள்ளையார் சுழி போட்டவனும் அவன் தான். அவனோட வாழ்வு நல்லவிதமா அமையணம்ணு என்னை விட யார் நினைப்பா…”
“எப்ப எல்லாம் உறவுகளுக்காக ஏங்கி நின்னேனோ அப்ப எல்லாம் எனக்கு உறவா வந்தவன் அவன் தான். அவனுக்கு நான் நல்லது பண்ண நினைக்க மாட்டேனா? எனக்கும் மனசு இருக்குடா. அவன் செய்த எதுவும் எனக்கு தெரியாதுனா நினைச்சா. எனக்கு எல்லாம் தெரியும். டாக்டர் படிக்க பீஸ் கட்டுனதை தவிர, ஏன்?…. என் அத்தை மனசு மாறி என்னை திட்டாம பாத்துகிட்டது வரை எல்லாம் அவனாலதாணு எனக்கு தெரியும்.”
” ………………”
“அப்படிபட்டவன் நல்லாயிருக்க வேணும்னு நான் ஆசைப்பட மாட்டேனா?. ஆசைபட்டேன். ரொம்ப ஆசைப்பட்டேன். அவன் தகுதியை டோட்டலா மாத்தியாக வேணும்னு ஆசைப்பட்டேன். அவன் சின்ன வயசு ஆசை, இலட்சியம் , கனவு எல்லாமே அவனுக்கு கிடைக்க வேணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைத்ததை விடஅதிகமாவே செய்துட்டான். நிறைவா இருக்கு. போய் சொல்லு. நான் சொன்ன எல்லாத்தையும் போய் சொல்லு.”
என சிரித்து கொண்டே சொன்னவள் அடுத்த ரெண்டு நிமிடத்தில் அவளிடமிருந்து விடை பெற்று சென்றாள். அவள் போய் பல மணி நேரம் ஆன பிறகும் அதிர்வில் இருந்து ரவியால் மீளவே முடியவில்லை. நேரே சங்கிலியின் ஆபிஸ் வந்தவன். சங்கிலி தனிமையாய் வந்து மாட்டிய போது, பல்லவி பேசிய அனைத்தையும் சொல்லி முடிக்க, சங்கிலி முகத்திலோ எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க கண்டதும் குழப்பமாக அவனை பார்க்க,
“சரிடா போய் வேலையை பாரு…”
என எதுவும் நடக்காது போல சங்கிலி சொல்லி விட்டு கடக்க முயல… மொத்தமாய் அதிர்ந்து போய் அவனை பார்த்தான்..
“ஷாக்கை கொறைடா. ஷாக்கை கொறைடா . எனக்கு அந்த புள்ளை நல்லது செய்ததாகவே இருக்கட்டும். இதோட ஒதுங்குனது ஒதுங்குனதாகவே இருக்கட்டும். இதுக்க மேல நெருங்கி போகாம இருக்கிறது நமக்கு தான் நல்லது.”
“டேய்…”
ரவி அதிர்வோடு அவனை பார்க்க…
“விடுடா. பாதை மாறி போன பிறகு பழையதை பேசி என்னவாக போகுது.”
” என்னடா சொல்லுறா?. அப்படினா நீ அந்த புள்ளையை பார்க்க போறதே இல்லையா?”
“பாக்குறதா. அவளோட நிழல் பக்கம் கூட ஒதுங்க கூடாதுனு இருக்கேன். இனி ஒரு முறை அவளை பற்றி எனட்ட எதுவும் நீ பேச கூடாது. நீ மாமன் மகன். முறை பொண்ணை போய் பார்க்க ஆசைபட்டா போய் பாத்துக்க. ஆனா எந்த காரணம் கொண்டும் இதுக்க மேல என்னை பற்றி நீ அவளுட்ட பேசவே கூடாது.”
“என்னடா பல்லவி மேல கோபம் இன்னும் போகலியா?”
“அந்த புள்ளை மேல நமக்கென்ன கோபம். நம்ம பாதை மொத்தமா மாறியாச்சு. நாம அதை விட்டு ஒதுங்குனது ஒதுங்குனதாவே இருக்கட்டும். மறுபடியும் அதோட முன்னால போய் நிற்க வேணாம். இதோட எல்லாத்தையும் முடிச்சிடலாம்னு நினைக்கிறேன்.”
“முடியுமாடா?”
“ஏன் முடியாது. கண்டிப்பா முடியும். முடிஞ்சி தான் ஆகணும். இதுக்க மேல நீ இனி அவளை பற்றி எனட்ட வந்து பேச கூடாது. அது போல என்னை பற்றி அவளுட்டயும் பேச கூடாது. இது ஒண்ணையும் நீ ஒழுங்கா செய்தா எல்லாம் சரியா நடக்கும்.”
“அப்படினா நான் தான் தப்பு இல்ல…”
“ஆமா?… இப்ப எதுக்கு அவளை பற்றி எனட்ட வந்து பேசுறா . விட்டுட்டு போயாச்சுல. அப்புறமும் எதுக்கு பேசணும்.”
” அதான் காரணத்தை சொல்லிட்டேனே…”
“பெரிய பொல்லாத காரணம். யாருக்கு வேணும்.காரணம். இதுக்கு மேல அந்த புள்ளைக்கும் எனக்கும் ஒரு சின்ன உறவு கூட இருக்க கூடாதுணு நினைக்கிறேன். அது உன் முறை பொண்ணு. உன் வீட்டுக்கு வரும். அடிக்கடி வரும். கண்டிப்பா நீ வரும் நேரம் எனட்ட சொல்லிடு. நான் ஊர் பக்கம் தலைவச்சி கூட படுக்க மாட்டேன். இதுக்க மேல அவள் முகத்துல விழிக்க கூட நான் தயாராயில்ல.”
சொல்லி கொண்டு சங்கிலி சட்டென எழுந்து கொள்ள… ரவி எதுவும் புரியாமல் தடுமாறி நின்றாள்.
ஆனால் அடுத்து வந்த ஒரு வாரமும் சங்கிலி சொன்னது போல ஊர்பக்கம் சொல்லவே இல்லை. பல்லவியும் அவர்களுக்கு போன் செய்யவோ அல்லது வேறு வழியாய் தொடர்பு கொள்ளவோ இல்லை.
” ………………….”
ஆனால் விக்கியோடு எல்லா இடங்களுக்கும் சுற்றினாள். அதிலும் தான் வேலை செய்த ஹாஸ்பிட்டலுக்கு விக்கியோடு சென்ற போது அவர்கள் இருவரையும் வரவேற்று,
“எப்போ கல்யாண சாப்பாடு போட போறீங்க…”
என்றதும் நாணி கோணி நின்ற பல்லவியை ஒரக் கண்ணால் பார்த்தவாறே விக்கி,
“கூடிய சீக்கிரம் டாக்டர்.”
என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தவள்.
“எதுக்குடா அவசரப்படுறா?… இப்ப தானே ஹாஸ்பிட்டல் ஒப்பன் பண்ணியிருக்கா. கொஞ்ச நாள் போகட்டும். அப்புறமா அந்த கட்டுக்குள்ள எல்லாம் போகலாம்.”
என்றதும்,
“இதுக்க மேல நாள் கடத்துறது நல்லது இல்ல பல்லவி.”
என சொன்ன விக்கியை தொடர்ந்து அருகில் நின்ற டாக்டர்.
“ஆமாம்மா. நடக்க வேண்டியது அந்தந்த நேரம் நடந்திடனும். முதல்ல மேரேஜை முடிச்சிட்டு அப்புறம் ஒர்க்கை கண்டினியூ பண்ணுங்க.”
என்றதும்.
“ஒ.கே டாக்டர்.”
என சொன்னவளின் முகம் நொடி பொழுதில் பூவாய் மலர,… அந்த பூமுகம் சுமந்து நின்ற நாணத்தை ரசித்தவனாக மெல்ல குனிந்து அவள் காது மடல் அருகில்
“என்ன?… ரெடியாகிட்டாப் போல.”..
என சொன்னதும். அவனிலிருந்து சிலிர்த்து விலகியவள்.
“சீ!… போடா…”
என அங்கிருந்து விலகி ஒட , பேசிக் கொண்டு நின்ற டாக்டரிடம் விடைப் பெற்று அவள் போகும் திசையை நோக்கி நடந்தான் விக்கி.
பல்லவி மூன்றாவது மாடியில் நின்று கொண்டு வெளிவுலகை ரசித்தவளாக நின்றிருந்தாள். அவளின் பின்புறமாக வந்தவன்.
இதுவரை பார்த்திராத புதுவிதமான பல்லவியை பார்த்து விட்ட சந்தோஷத்தில் நெருங்க, சட்டென திரும்பிய பல்லவி.
” என்னமோட கொஞ்ச நாளா என் மனசுக்குள்ளாலயும் எதுவோ ஒடுது. அது என்ன மாதிரியான ஃபீல்ணு சொல்ல தெரியல. ஆனா அது என்னை பல இரவுகள் ஆட்டிப் படைக்குது. அதை உனட்ட சொல்லிட வேணும்னு பல முறை முயற்சி செய்திருக்கேன். ஆனா இதுவரை பேச முடிஞ்சது இல்லை.”
“………….”
” அப்ப எல்லாம் ஆராய்ச்சி முடிஞ்சதுக்கு அப்புறமா சொல்லிக்கலாம்ணு நினைப்பேன். ஆனா இப்போ கொஞ்ச நாளா முடிவு தெரிஞ்சப்போ சொல்லிக்கலாம்னு மெளனமா இருந்தேன்.”
பல்லவி தன் காதலை சொல்ல போறா என்ற தவிப்போடு பல்லவியை அவன் பார்க்க, அவளும் ஏதோ ஒரு உணர்வுக்குள் ஆட்பட்டவள் போல நின்றிருக்க, அவளை தாபத்தோடு பார்த்தவன் அவள் வாயில் இருந்து வரும் மொழிக்காக தவம் இருக்க,
பல்லவியோ,
“வாழ்க்கையில் நான் அடைய நினைச்ச உயரத்தை அடைகிறது வரை இது போல எண்ணங்களுக்கு மனசுல இடம் கொடுக்க கூடாதுணு மனசை ரொம்ப கட்டுக் கோப்பா வச்சிருந்தேன். ஒவ்வொரு முறை என் மனசு நெகிழும் போதும் என் இலட்சிய வாழ்க்கையை நினைச்சே அதை இறுக செய்திருக்கேன். அப்படி என் மனசை இந்த ஆராய்ச்சி முடிஞ்சி வெளியில வந்த பிறகு இறுக்க முடியல விக்கி . இப்போ கொஞ்ச நாளா மனசு வெறுமையா எதையோ தேட ஆரம்பிக்கிறதை என்னால உணர முடியுது.”
“அந்த தேடல் இப்போ எல்லாம் எனக்குள்ள பலவிதமான உணர்வை கொண்டு வருது. நிஜமா அந்த உணர்வு நல்லா தான் இருக்குது. எனக்கு புடிச்சிருக்கவும் செய்து. புதுமையாவும் இருக்கு. ஆனா என் செவிப்பறையில என் சக்ஸஸ் செய்தி வந்த பிறகு தான் வேற வாழ்க்கைக்குள்ள போகிறது பற்றி பேசுவேன். அதுவரை எல்லாரும் காத்திருந்து தான் ஆகணும்.”
“இருக்கோம். இன்னும் எத்தனை நாள் மனசை இறுக்கி பிடிச்சிட்டு நாட்களை கடத்துறானு நானும் பார்க்கிறேன்.”
“வெற்றி செய்தி வந்ததும் என் மனசு சுமந்து நிக்குற நல்ல செய்தியை உங்க எல்லார்ட்டயும் சொல்லிடுறேன். குறிப்பா உனட்ட கண்டிப்பா சொல்றேன். போதுமா?”
என்றவள் கண் சிமிட்டி கொண்டு அங்கிருந்து நகர,
முகம் முழுதும் வெட்க புன்னகையோடு போன அவளை பார்த்தவனாக நின்றிருந்தான் விக்கி. அன்றைய பொழுது ஹாஸ்பிட்டலிலும் அவளின் தோழிகள் வீடுமாக சென்று விட, மறு நாள் இருவரும் ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு கிளம்பி கொண்டிருந்தனர். ஊரில் விருந்தினர் படையெடுப்பு அதிகம் இருந்தது. வருடம்தோறும் அப்படி தான். ஊரில் பல கோவில் இருந்தாலும் எந்த கோவில் விழாவுக்கும் வராத ஜன பெருக்கம் சிவன் கோவிலுக்கு மட்டும் இருக்கும்.
பாண்டியின் மொத்த குடும்பமும் விக்கி உட்பட எல்லாருமே கோவிலுக்கு செல்ல ரெடியாகி கொண்டே இருந்தனர். பத்து நிமிடத்திலே குடும்பத்தோடு கோவிலுக்குள் நுழைந்து விட்டார் பாண்டி. அந்த இடமே விழா கோலம் பூண்டிருக்க, ஆடம்பரத்தின் உச்சத்தில் இருந்தது . ஐஸ்வரியா , பல்லவி, செழியன் எல்லாருமே அந்த குதூகலத்தில் கலந்து விட்டார்கள்.
ஒரு புறம் கடைவீதியும் மறுபுறம் ராட்டினங்களுமாக இருக்க , ஒவ்வொரு இடத்தையும் வேடிக்கை பார்த்தவாறே சிரித்து பேசி கலகலப்பாக வந்தவர்கள் கண்களில் ரவி விழுந்தான். முதலில் அவனை பார்த்தது என்னவோ ஐஸ்வர்யா தான்.
“அக்கா…”
அடிகுரலில் அவளை அழைக்க…
” ம்…ம்..” என்றவள் அவளை பார்க்காமலே இருக்க…
“ரவி வந்திருக்கான்.”
என்றதும் சட்டென திரும்பிய பல்லவி.
“எங்க?”
என நாலாபக்கமும் கண்களை மோத விட,
ஐஸ்வரியா சுட்டி காட்டிய பக்கம் பார்வையை செலுத்தியவள் தூரத்தில் ரவி நிற்க கண்டதும், அவனை சுற்றி சுற்றி பார்வையை சுழல விட்டவாறு,
“அவன் வரலியா?”
மனம் கேட்டு முடிக்கும் முன் அவள் மனம் துவண்டு போக, சட்டென இரு துளி கண்ணீர் அவளையும் மீறி வெளிப்பட்டது ரவியை பார்த்ததும்.
ஆனால் ரவியை பார்த்தும் தன் கண் கலங்கியது ஏன் என்றும் அவளுக்கு தெரியவில்லை. உடன் சங்கிலியை ஏன் மனது எதிர்பார்த்தது என்றும் புரியவில்லை.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel

