வணக்கம் வாசகர்களே!
தன் லட்சிய பயணம் நோக்கி முன்னேறும் பல்லவி. தொழில் அதிபராக முன்னேறும் சங்கிலி. இவர்கள் வாழ்வில் அடுத்து நடந்தது என்ன?
சங்கலியின் வளர்ச்சி அசுரதனமாய் போய் கொண்டிருக்கும் போது பல்லவி ஆராய்ச்சி நிறுவனத்தில் தன்னை நிலைநிறுத்தியாக வேண்டிய போராட்டத்தில் இருந்தாள். நாகர்கோவிலில் தன் ஒரு வருட பயிற்சியை முடித்த கையோடு விக்கியோடு கிளம்பி மும்பை வந்து விட்டாள். மும்பையில் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேரும் முன் ஒரு வாரம் விக்கியின் வீட்டில் தங்க வேண்டியதாக போனது. அந்த ஒரு வாரத்தில் விக்கியின் குடும்பம் அவளை நன்றாக கவனித்து கொண்டது.
அவர்கள் குடும்பத்தில் அவளையும் ஒருத்தி போல் தான் பாவித்து கொண்டனர். தன் பணியையே மறந்து அவன் அப்பா அந்த ஒரு வாரமும் அவர்களோடவே இருந்தார். பார்க் பீச்… என எல்லா இடத்திலும் சுற்றினர். அப்படி போகும் இடம் எல்லாம் விக்கிக்கும் அவன் குடும்பத்திற்கும் இருந்த மதிப்பும் மரியாதையும் பல்லவியை மெய் சிலிர்க்க தான் வைத்தது. அதிலும் அவளையும் அந்த குடும்பத்தில் ஒருத்தியாக பாவித்தது இன்னும் மகிழ்வை தந்தது. அதிலும் விக்கி அந்த ஒரு வாரத்தில் மும்பையையே சுற்றி காட்டி விட்டான். அதிலும் அவன் வசிக்கும் பகுதி என்பதால் போகும் இடம் எல்லாம் உறவுகளிடம் அவளை அறிமுகப்படுத்தவும் தவறவில்லை. அந்த ஒரு வாரமும் எல்லாம் மறந்து விக்கி உலகத்துக்குள் பல்லவி வளைய வந்தாலும் ஒரு வாரம் முடிந்து ஆராய்ச்சி நிறுவனத்துள் நுழைந்த பின் அவள் சிந்தனை வேறு பக்கம் செல்லவே இல்லை. காரணம் இரண்டு முறை தோல்வியை சந்தித்த புராஜெக்ட் எப்படியும் தன்னை நிருபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் பல்லவி.
தனக்கு 20 லட்சத்தையும் பேரும் புகழையும் பெற்று தரும் என அவள் நினைத்து செய்த ஆராய்ச்சி ஆறு மாதத்திற்கு பின் பெயிலியரில் போய் முடிய… ஊரிலிருந்து மும்பை வந்த நாள் முதலாய் ஆராய்ச்சி நிறுவனத்துக்குள்ளேயே .தன்னை முடக்கி கொண்டாள் பல்லவி.வெளியில் வருவதே இல்லாமல் போனது
டாக்டர் படிச்சிட்டிருக்கும் போதே செங்காந்தர்வ செடியில் இருந்து புற்று நோயை குணப்படுத்த கூடிய அரிய வகை வெள்ளி நேனோ துகள்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருந்த பல்லவி சக மாணவ மாணவியர் துணையோடு அதை வெற்றிகரமாக செய்யவும் செய்தாள். அதில் ஏற்பட்ட கோளாறின் சிறு தவற்றில் அது பெயிலியராக முடிய..அந்த நொடியே தீர்மானித்து கொண்டாள். படிப்பு முடிகிறதற்குள் அந்த அரிய வகை நேனோ துகள்களை உற்பத்தி செய்தே ஆக வேண்டும் என்று. அவளின் பல நாள் முயற்சி பல பல தோல்விகளை சந்திக்க, கடைசியில் டாக்டர் பட்டம் பெற்றும் அது முடிவுறா கண்டுபிடிப்பாகவே இருந்தது.
அதற்கு அவளிடம் இருந்த தொழில் நுட்ப கோளாறும் ஒரு காரணம். அதனால் தான் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன் கண்டுபிடிப்பை விளக்க,அவளுக்கு உதவ அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்தது. அதனால் தான் கிராமத்தில் இருந்து மும்பை வந்த ஒரு மாதத்திலே தன் வேலையை தொடங்கி விட்டாள். அங்கு போல் இல்லை. இங்கு அவளுக்கு நிறைய ஆட்களின் உதவி கிடைத்தது. அதிலும் இது சம்மந்தமான ஆராய்ச்சியில் இருந்த சிலரின் தொடர்பும் கிடைத்தது. அதனால் இந்த முறை அவளின் கண்டுபிடிப்பு பெயிலியர் ஆகாது என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகமாக இருந்தது.
இந்த ஆராய்ச்சி மட்டும் சக்சஸ் ஆனால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிறைய பேரோட உயிரை காப்பாற்ற முடியும். அதுவும் இவளின் கண்டுபிடிப்பான நேனோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்லுக்குள் மட்டும் சென்று தன் வேலை காட்டி அதை அழிக்க கூடிய வல்லமையை பெற்றது குறிப்பிடதக்கது. புற்று நோய் பாதிக்காத எந்த செல்லுக்குள்ளும் இந்த துகள்கள் செல்வதில்லை.
செங்காந்தர்வ பூவிலிருந்து அதில் இருக்கும் ஆல்கலாய்ட் என்ற வேதி பொருளை பிரித்தெடுத்து தயாரிக்கபட கூடிய இந்த வெள்ளி நேனோ துகள்கள் புற்று நோய் பாதித்த செல்லுக்குள் ஊடுருவி சென்று அந்த நோய் பாதித்த செல்லை முற்றிலும் அழித்து, மனித உயிரை காப்பாற்றி விடுகிறது., இந்த ஆராய்ச்சியில் தான் தன் ஆறு வருட வாழ்வை பல்லவி தொலைத்திருந்தாள். கடைசியில் ஒரு வருடத்தில் முடித்து வெளியே வந்தாள். தன்னுடைய கண்டுபிடிப்பை ஆராய்ச்சிக்கு அனுப்பி விட்டு வெளிவந்த பல்லவியை உடனே வந்து பிக்கப் பண்ணிக் கொண்டான் விக்கி. வெளியில் தனக்காக காத்து நின்றவனை கண்டதுமே முகம் மலர ஒடி வந்தவள் அவனை கட்டி கொள்ள…
“இது எப்படியும் சக்ஸஸ் ஆகிடும் விக்கி. ரெம்ப நம்பிக்கையா இருக்கு. இதுல பிரபஸர் சாலமோனுக்கும் ரெம்ப நம்பிக்கை இருக்கு.”
“கண்டிப்பா சக்ஸஸ் ஆகும் பல்லவி. ஒரு வருட உன்னோட உழைப்பு எப்படி தப்பா போகும். இந்த முறை நீ எதிர்பார்த்த ரெசல்ட் தான் வரபோகுது. இனி அதை மொத்தமா மறந்துட்டு வெளிவுலகத்துக்கு வா… உனக்காக வீட்டுல எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருக்காங்க.”
“எனக்காகவா?”
“ஆமா அப்புறம் ஒரு வருடம் யார் பார்க்க வந்தாலும் பார்க்காம உள்ளால அடைஞ்சிகிட்டால… அதான் இன்று.நீ ஆராய்ச்சியை முடிச்சிட்டு வராணு சொன்னதும் ஒரு சின்ன பார்ட்டியோட எல்லாரும் வெல்கம் பண்ண தயாராயிருக்காங்க….”
“எதுக்கு விக்கி… இதெல்லாம்…”
“சாதாரண சாதனையா பண்ணிட்டு வரா… ஏழைகள் கூட புற்றுநோயால இறக்க கூடாது. அவங்க உயிர் கூட காப்பாற்றப்படணம்ணு இவ்வளவு மெனகெட்டு உன் குட்டி மூளையை பயன்படுத்தி குறைந்த விலையில மார்க்கெட்டுக்கு வர கூடிய மருந்தை கண்டுபிடிச்சிட்டு வரா . அப்படி சும்மா விட முடியுமா? “
“ரெசல்ட் வந்திடட்டுமே விக்கி. அதுக்குள்ள என்ன கொண்டாட்டம்.”
“ரிசல்ட் எல்லாம் நல்லதா தான் வரும். உலகமே அந்த ரெசல்ட் கண்டிப்பா சக்சஸ்ணு தான் நம்பிக்கையோட காத்திருக்கு. நீ என்ன நம்பிக்கை இல்லாதது போல பேசுறா?…”
“அப்படி இல்லடா. இரண்டு முறை… ஆறு மாசத்துல அது தன் நிலையை இழந்துடுச்சே. இந்த முறை அப்படி எதுவும் ஆகிட கூடாதேணு பதட்டமாக தான் இருக்கு.”
“பதட்டப்படவே வேணாம் பல்லவி. இது கண்டிப்பா சக்சஸ் ஆகி உனக்கு பெயரையும் புகழையும் நிச்சயம் கொண்டு வந்து சேர்க்கும்.”
“ரெம்ப தேங்க்ஸ்டா …”
என்றவள் அவனை கட்டி கொள்ள… அவன் கொண்டு வந்த வண்டிக்கு அவளை அழைத்து செல்ல…. அடுத்த நிமிடம் அந்த வண்டிக்குள் ஏறிய பல்லவியை சுமந்து கொண்டு அந்த வண்டி விக்கியின் மும்பை பங்களாவை நோக்கி போய் கொண்டிருந்தது.
“அப்புறம் …”
பல்லவி சொல்ல …
“அப்புறம் என்ன?…”
“ஊர்ல்ல ஏதாவது விசேஷம்…. ஆமா நீ இப்ப என்ன பண்ணிட்டிருக்கா.
“உனக்கு ஒரு சப்பிரைஸ் இருக்கு பல்லவி.”
“எனக்கா?…”
“ம் …ம்… நாளைக்கு உன்னை அங்க தான் கூட்டிட்டு போக போறேன். அதுவரை நீ வெயிட் பண்ணி தான் ஆகணும்.”
“டேய்…டேய்… சப்பிரைஸ் எல்லாம் தாங்காதுடா. என்னணு சொல்லிடுடேன்.”
“இல்ல உன்னை அங்க கூட்டிட்டு போறது தான் சரியா இருக்கும்.”
“அப்படிணா இப்போ போலாம்.”
“இல்ல. அது நாளைக்கு தான் சரியா இருக்கும். அதுல வேற வீட்டுல அம்மா அப்பா பார்ட்டியோட வெயிட் பண்ணிட்டிருப்பாங்க. இப்போ பார்ட்டியை என்ஜாய் பண்ணிட்டு நைட் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு காலையில பிரஸா கிளம்பலாம் ஒ.கே வா”
“சரி…நம்ம பிரண்ட்ஸ் பற்றி சொல்லு.”
“ம்… புனிதாளை நீ நாளைக்கு பாக்கலாம். நாம போற இடத்துல தான் அவளும் இருப்பா. சத்தியா அமெரிக்கா போயிட்டான் . சுமதிக்கு மேரேஜ் முடிஞ்சிடுச்சி. அவா ஹைதராபாத்துல புருஷனோட இருக்கா…”
விக்கி ஒவ்வொருவரையும் பற்றி சொல்லி கொண்டே போக பல்லவி ஆர்வமாக கேட்டு கொண்டே வந்தாள். திடீர் என உந்தப்பட்டவளாக… .
“ஏண்டா… நம்ம கூட உள்ள எல்லாரும் மேரேஜ் பண்ணி சக்ஸஸ்புள்ளா குடும்ப வாழ்க்கைக்குள்ள போயிட்டாங்கணு சொல்லுறா … நீ யாரையும் புடிக்கலியா?…”
பல்லவி சிரித்து கொண்டே கேட்க…
“புடிச்சிட்டேன். இன்னும் ஒரே மாசத்துல மேரேஜ் தான். இது வரை ஒடுனது போல இனி அவளால ஒடி ஒளிய முடியாது. அப்படி ஒடப்பார்த்தா ஒரு மஞ்ச கயிற்றை கட்டி அடக்கிட வேண்டியது தான். அந்த முடிவுல தான் இருக்கேன்.”
ஒரகண்ணால் அவளை பார்த்தவாறே சொல்ல.
“அதை செய்…”
“ஆமா நீ யாரையும் பிடிக்கலியா பல்லவி…
“புடிக்காம என்ன?. நல்ல ஒரு ஆளா புடிச்சிட்டேன்..”
“புடிச்சிட்டியா..”
“ஆமா புடிச்சிட தான் போறேன். இனி விட்டா சரியாகாது.. நீ சொன்னது போல தான் அது என் கழுத்துல மஞ்ச கயிற்றை, கட்டலணா நான் கட்டிறதா முடிவு பண்ணிட்டேன்.”
அதே போல் ஒர கண்ணால் அவனை பார்த்தவாறு அவளும் சொல்ல…விக்கி பக்கென்று சிரித்து விட்டான் . கூடவே பல்லவியும்..
இப்படியே நக்கலும் நையாண்டியுமாய் வந்த இருவரும் அவர்கள் வீட்டிற்கு வந்து சேர… விக்கி வண்டியை நிறுத்தி விட்டு டோரை திறந்து வெளிவர…
அதே நேரம் வெளியே வந்த பல்லவியின் கையை பிடித்து கொண்டு மிகமிக சந்தோஷமாக உற்சாகமாக உள்ளே வந்தான். அவர்கள் இருவரையும் கண்ட அவன் பெற்றோர் அருகில் ஒடி வர…. கை குலுக்கி வாழ்த்து சொன்ன ஐஜியையும் கட்டி தழுவிய அவன் தாயையும் நெகிழ்வோடு பார்த்தவள். தனக்காக அவர்கள் அரேஞ்ச் பண்ணிய பார்ட்டியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். அன்றைய மாலை பொழுது முழுவதும் டான்ஸ் பார்ட்டி என செல்ல மிக மிக சந்தோஷத்தோடு இருந்தாள் பல்லவி.
இரவு சாப்பாட்டிற்கு பின் அங்கே தங்கி கொள்ள விக்கியின் தாய் எல்லா ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்தாள். இரவு அவள் தூங்கிய பின் விக்கி அறைக்கு வந்த அவன் பெற்றோர்
“என்னடா மேரேஜ்க்கு சம்மதம் வாங்கிட்டியா?.”
“இப்ப தானே வந்திருக்கா… நாளைக்கு கண்டிப்பா பேசிடுறேன்ம்மா…”
“என்னடா நீ… மூணு மணி டிராவல் அவளோட தனியா பண்ணியிருக்கா. அப்ப பேசலியா…”
“பேசலணு இல்ல. பேசினேன். ஆனா நேரடியா கேட்க முடியல. நாளைக்கு நம்ம ஹாஸ்பிட்டல் திறப்பு விழாவுக்கு கூட்டிட்டு போகும் போது நிச்சயம் பேசிடுறேன். ”
“சீக்கிரம்டா. தாத்தா பாட்டி எப்ப பேரனுக்கு, மேரேஜ் வைக்க போறாணு கேட்டுட்டே இருக்காங்க. நான் படிப்பு முடிஞ்சதுமே வச்சிடணம்ணு தான் நினைச்சேன். ஆனா நீ பல்லவியோட ஆசை ,லட்சியம் என என்னவெல்லாமோ சொல்லி ஒரு வருஷத்தை ஒட வச்சிட்டா. இனியும் தாங்காது. நானைக்கே பதில் சொல்லு…”
“சரிம்மா· நாளைக்கு எப்படியும் பேசிடுறேன்.”
என பெற்றவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்தாள் விக்கி…
அதே நேரம் அவன் செல் குரல் கொடுக்க எடுத்தவன் சத்யா என்றதும் முக மலர அதை ஆண் செய்தவன்.
“சொல்லுடா…” என்றான்.
“என்ன சொல்ல நீ தான் சொல்லணும். எப்படியும் பல்லவி வந்திருப்பா. அவளை நீ போய் தான் கூட்டிட்டும் வந்திருப்பா. ஏதாவது சந்தோஷப்படுறது போல நடந்துச்சா?…. நீ சொல்லிட்டியா?…”
“இல்லடா…”
“என்ன சொல்லலியா?…”
“ம்கூம்…”
” ஏண்டா இப்படி இருக்கா, அவா மனசுல நீ தான் இருக்கா. அது எங்களுக்கே தெரியுது. உனக்கு தெரியலியா?…”
“தெரியாம எங்க எல்லாம் தெரியுது. பல்லவி லைப்ல இருக்கிற ஒரே ஆண் நான் தாணும் தெரியும். நான் கேட்டா மறுத்தே பேச மாட்டாணும் தெரியும். என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் அவளுக்கு பிடிக்கும்ணும் தெரியும். ஆனா சிரியஸா அவளுட்ட பேச வரல. நான் விளையாட்டா பேசினா அவளும் விளையாட்டா சொல்லிட்டு போயிடுறா?”
“இப்படியே எத்தனை நாளுக்கு இருக்க போறா?…”
“இதுக்க மேல இருக்க முடியாது. பேசி தான் ஆகணும். அதான் நாளைக்கு ஹாஸ்பிட்டல் திறப்பு விழாவுக்கு அழைத்து செல்லும் போது பேசிடணம்ணு நினைச்சிருக்கேன்.”
“மிஸ் பண்ணிடாத பேசிடு. அப்புறம் சீக்கிரமா பத்திரிகையை அனுப்பிவை. நானும் இந்தியா வந்து சேர்றேன்.”
“கண்டிப்பாடா.”
“டேய்… பல்லவி தன்னோட காதலை சொல்லிட்டா… எனக்கும் நம்ம பிரண்ட்ஸ்க்கும் பெரிய பார்ட்டியே வைக்கணும்.”
“அது இல்லாமலா?”
” சரிடா அப்போ வைக்கிறேன். நாளைக்கு நல்ல நியூஸா சொல்லு.”
என்றவன் செல்லை அணைத்த நொடியிலிருந்து மறுநாள் பல்லவி இடம் பேச வேண்டிய வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்க்கத் தொடங்கினான்.
அதே நேரம்,
மெத்தையில் புரண்டு கொண்டிருந்த பல்லவியின் மனதோ சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தது. தன் வாழ்வில் விக்கி தனக்கு கிடைத்தது ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்தது போல் தான் இருந்தது. கழிந்த ஆறு வருடமாக அவள் வாழ்க்கை பயணத்தில் மிக முக்கியமானவனாக இருக்கிறான் விக்கி. கிராமப்புறத்தில் இருந்து நகர்புற வாழ்க்கைக்குள் நுழைந்தபோது இந்த சமுதாயத்தில் அவள்பெற்ற சவால்கள் ஏராளம். அதிலும் தனியாக மாட்டிக் கொண்ட மானை யாரும் அமைதியாக வாழ விடுவதில்லை.அதிலும் பட்டிக்காட்டு பெண்ணாய் நவ நாகரிக உலகில் நுழையும் ஒரு பெண்ணை உடன்படிக்கும் மாணவர்களே கேலியும் கிண்டலும் செய்ய தவறுவதில்லை.
அப்படி மாட்டிக்கொண்ட போது தூணாய் நின்று காத்து நின்றவன் இவன் தான். அதிலும் அவளுக்கு தாயாய் தகப்பனாய் அவன் குடும்பம் மாறி போனதும் பல்லவி உருகி தான் போனாள். ஆரம்பத்திலிருந்து இன்று வரை அவளுக்காக அந்த குடும்பம் செய்த அனைத்தும் நினைவலையில் தழும்பியது.
பல்லவி தாயில்லா குறையை மறந்து போக செய்தது அந்த குடும்பம் தான். இன்று அவர்கள் வீட்டுப் பெண்ணாக பாவித்து பார்ட்டி, கொண்டாட்டம் என அசத்தி விட ,இரவு பல மணி நேரம் அவர்களை பற்றி தான் நினைத்துக் கொண்டே இருந்தாள் பல்லவி.
மறுநாள் காலையிலே விக்கி அவளை ரெடியாகச் சொல்ல எந்த மறுப்பும் இன்றி புறப்பட்டு வெளிவந்தவளை அழைத்துக்கொண்டு விக்கி முதல் வண்டியில் பயணமாக, பின்னால் அவன் தாயின் தந்தையும் அடுத்த வண்டியில் கிளம்பிப் போயினர்.
அரை மணி நேரத்தில் அந்த “விக்னேஸ்வரன் மருத்துவமனை” என தாங்கி நின்ற அந்த கட்டிடத்தின் முன் வண்டியை கொண்டு நிறுத்தியதுமே பல்லவியின் கண்கள் வியப்பில் விரிந்தது. சட்டென விக்கி பக்கம் திரும்பி,
இது நிஜமா? என்பது போல் ஆச்சரியமாக பார்க்க ஆமா என்பது போல் அவனும் சிரிக்க…
“எப்படிடா ஒரே வருஷத்துல…”
“எல்லாம் நீ ஆராய்ச்சி முடிந்ததும் திறந்தே ஆகணும் என்கிற தவிப்புல.”
“சான்சே இல்லடா. சூப்பரா இருக்கு. ஹாஸ்பிடல் முகப்பு டிசைன் சூப்பரா இருக்கு.”
“சரிஉள்ளால போகலாம்.”
“உனக்காகவே திறப்பு விழா நடத்தாமல் காவல் இருக்கு கட்டிடம்.”
“இன்றைக்கா திறப்பு விழா ?”
விழி உயர்த்தி கேட்க,
“பார்த்தா தெரியலையா உனக்காக தான் வெயிட்டிங்.”
“ஏண்டா இப்படி பண்றா?நான் எதுக்கு?”
“எதுக்குன்னா என் வாழ்க்கையில ஸ்பெஷல் ஆளே நீதான். நீ இல்லாம எப்படி?”
“அம்மா அப்பா எதுவும் சொல்லலையா?”
“அவங்கதான் பல்லவி இல்லாம திறக்க கூடாதுன்னு சொன்னதே. நீ ஆராய்ச்சி முடிச்சுட்டு வருகிறது வர காத்திருக்க சொல்லி நீ வர கூடிய இந்த நாள் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு பண்ண வச்சதும் அவங்க தான்.”
“ஏண்டா ஏண்டா இப்படி?”
“நீ எங்களுக்கு அவ்வளவு முக்கியம். உனக்கு நாங்க அப்படி இல்லையா பல்லவி?”
என்றதும் கண் கலங்கிய பல்லவி
“எனக்கு நீயும் உன் குடும்பமும் அதுக்கு மேலடா”,
“அதுக்கும் மேலணா?”
விக்கி சிரித்துக் கொண்டு கேட்க,
“எனக்கு எல்லாமே நீதான்டா. நீ இல்லன்னா நிச்சயம் வாழ்க்கையை நான் அனுபவிச்சு வாழ்ந்து இருக்கவே மாட்டேன். உன்னோடு இருக்கிற ஒவ்வொரு நொடியும் நான் ரொம்ப நிறைவா சந்தோஷமா இருக்கேன்.”
“நெஜமா ?”
“ஏன் உனக்கு தெரியாதா?”
“தெரியும்.அதனாலதான் உன்னை என் பக்கத்துல வச்சுக்க முடிவு பண்ணிட்டேன்.”
“அப்படியில்லாம நீ விரட்டினாலும் நான் போக மாட்டேன்.”
பல்லவியின் சொல்லிச் சிரிக்க,
அதே நேரம்…
வந்து இறங்கிய விக்கியின் தாயையும், தந்தையும் பார்த்ததும் இருவரும் அவர்கள் அருகில் போக,அடுத்த நொடியே அங்கே ஆரவாரம் தொற்றிக் கொண்டது. அன்றைய நாள் மிக சந்தோசமாகவே உணர்ந்தாள் பல்லவி.
ஹாஸ்பிட்டல் திறப்பு விழாவுக்கு பெரிய பெரிய வி ஐ பி கள் வருகை தந்திருந்தாலும், தன் தந்தையை வைத்து தான் திறந்தான் விக்கி. அவனின் இந்த செயல் பல்லவியை ரொம்பவே சந்தோஷப்படுத்தியது. அதிலும் அந்த ஹாஸ்பிட்டலில் தனக்காக ஒரு கேபின் இருக்க கண்டதும்… அதில் டாக்டர் பல்லவி என பொறிக்கப்பட்டிருந்ததை கண்டதும் அவள் கண்கள் கலங்கிவிட்டன.
நெகிழ்ந்து போனவளை தன்னோடு அணைத்து கொண்டாள் அவன் தாய் புவனா. மனம் நெகிழ்ந்து போயிருந்தாள் பல்லவி. அவள் அணைப்புக்குள் இவள் சுருண்டு கொள்ள…
“இனி இதுதான் உன் இடம். நீ என்னவெல்லாம் பண்ண ஆசைப்பட்டாயோ அது எல்லாத்தையும் இந்த சேர்ல உக்கார்ந்து பண்ணு.”
விக்கி அவள் அருகில் வந்து சொல்ல…
“நீ என்னை ரொம்ப பெருமைபடுத்திட்டாடா விக்கி. இப்படி ஒரு ஹாஸ்பிட்டல, அதுவும் அதுக்கு ஹெட்டா உக்காருவேணு நான் கனவுல கூட நினைக்கல. எனிவே ரொம்ப தேங்க்ஸ்.”
என அவள் கண் கலங்க…
முதல் நாளே பல்லவி தன் பணியை செய்ய தொடங்கிவிட்டாள். அன்றைய நாள் அவள் உணர்வின் பிடியில் மூழ்கி இருந்ததால் விக்கி வேறு எதுவும் பற்றி பேசவில்லை.
இதே நிலையிலே ஒரு வாரம் சென்று விட, அடுத்த நாள் விக்கியின் அருகில் வந்த பல்லவி.
“விக்கி ஒருமுறை கிராமத்துக்கு போயிட்டு வருவோமா? அங்க உள்ள எல்லாரையும் பார்க்க ஆசையா இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல எனக்கு ஆராய்ச்சி முடிவு வந்துடும். அதன் பிறகு உடனே அங்க போகணும்னு நினைச்சாலும் போக முடியாது. அதனால இப்பவே ஒரு தரம்…”
எனச் சொன்னதும்
“நம்ம ஆசையைச் சொல்லவும்… அவங்க அத்தை மாமா கிட்ட பேசவும் வசதியா இருக்கும்.”
என எண்ணிய விக்கி உடனே சம்மதிக்க.
மறுநாளே இருவரும் விமானத்தில் திருவனந்தபுரம் வந்து விட, அங்கிருந்து வண்டி பிடித்து மாமாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
சொல்லாமல் கொள்ளாமல் திடுமென வந்து சேர்ந்திருக்கும் இருவரையும் பார்த்ததும் பாண்டியும் கமலமும் திணறி தான் போயினர். ஆனாலும் சந்தோசம் இருவருக்கும் தலைக்கால் புரியவில்லை.
வரவேற்பும் விருந்து உபசர்ன்னையும் தடபுடலாக தான் நடந்தது.
“எத்தனை நாள்மா மாமாவோட தங்குவா ?”
“ஒரு மாசம் இங்கதான் மாமா. ஆராய்ச்சி முடிவு தெரிஞ்சதுக்கு அப்புறம் கிளம்பிட வேண்டியதுதான். அப்புறம் அங்க நிறைய வேலை இருக்கும்.”
“ஒரு மாசம் நிக்கிறால அது போதும்.”
“ஆமா ஐஸ், செழியன், ரவி எல்லாம் எப்படி இருக்காங்க.”
“நல்லா இருக்காங்க. சரி கண்ணா சாப்பிட்ட மயக்கம், பயண களைப்பு இரண்டும் இருக்கும். ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க.”
“இல்ல மாமா கோயிலுக்கு போகணும். சாமிக்கு நன்றி சொல்லணும். அப்புறம்தான் எதுவும் .” “அப்படின்னா சரி கண்ணா. போயிட்டு வாருங்க.”
என்றதும் பல்லவியோடு விக்கியும் ரொம்ப சந்தோஷத்தோடு சிவன் கோவிலை நோக்கி நடந்தனர். வழிநெடுக்கிலும் விசாரிப்புகள் நடக்க, பார்த்த எல்லாரிடமும் பேசிக்கொண்டே முன்னோக்கி நடந்தாள். அடுத்த மிட்டாய் கடை வந்து விட, ஓடி வந்த பாட்டி இரண்டு சூப்புமிட்டாயோட அவளை நெருங்க, மிட்டாயை வாங்கியவள் பாட்டியை கட்டிக்கொள்ள, பாட்டி அவள் நெற்றியில் முத்தம் வைத்து அனுப்பினாள்.
பழையபடி மிட்டாயை சூப்பியவாறே விக்கியோடு பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தாள். பல்லவியின் மனம் சட்டென சஞ்சலப்பட்டது. சைக்கிள் கடை சட்டென நினைவுக்கு வர, அவளையும் மீறி அவள் கண்கள் அந்த பக்கம் சென்றது.
அதிர்வில் அவள் விழிகள் விரிந்து போனது. பல வருடமாக அந்த இடத்தில் இருந்த சைக்கிள் கடை மொத்தமாக காணாமல் போயிருந்தது.
மொத்தமாய் அதிர்ந்து போய் இருந்த பல்லவியை உலுக்கினான் விக்கி.
“என்ன ?…”
“இதுல!… இதுல!… இருந்த சைக்கிள் கடை.”
என்றதும் தான் அவனுக்கு ஞாபகம் வர…
“ஆமா எங்க போச்சு.”
குழப்பமாக இருவரும் சுத்தி சுத்தி பார்க்க
தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது.
விசாரிக்க அவன் வரவை பார்த்து காத்து நின்றவள், அவன் அருகில் வந்ததும் அவனிடம் விசாரிக்க, அவன் சொன்ன பதிலை கேட்டு பலமாக அதிர்ந்தாள்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel

